Skip to main content

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...35



அழகியசிங்கர் 





நான் வாங்கிக்கொண்டு வந்த புத்தகங்களை ஒரு மர ஷெல்பில் அடுக்கி வைத்துவிட்டேன்.  அது போதவில்லை.  இன்னும் சில புத்தகங்களையும் அடுக்கி வைக்கவேண்டும்.  புத்தகங்களை முறைத்துப் பார்த்தேன்.  பதிலுக்குப் புத்தகங்கள் என்னை முறைந்தன. யோசித்துப் பார்த்தேன்.  ஏன் இவ்வளவு புத்தகங்கள் வாங்கினோம் என்று.  இது ஒரு விதத்தில் சரி, ஆனால் இன்னொரு விதத்தில் சரி இல்லை என்று தோன்றியது.
காலச்சுவடு பதிப்பகம் கொண்டு வந்த ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற புத்தகத்தை வாங்கினேன்.  போன ஆண்டு புத்தகக் காட்சியின் போது கல்யாண்ஜியின் முழுத் தொகுதி வாங்கினேன்.   அதே போல் உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட தேவதச்சனின் ஒரு மர்ம நபர், வைதீஸ்வரின் மனக்குருவி, பிரமிள் கவிதைகள், சுகந்தி சுப்ரமணியனின் படைப்புகள் என்று முழுத் தொகுதிகளாக சேகரித்து வைத்துள்ளேன்.  படிக்கும்போது கவிதைகள் அலாதியாகத் தென்படுகின்றன.  அதனால்தான் 300 கவிதைகள் கொண்ட என் கவிதைகளையும் அழகியசிங்கர் கவிதைகள்  என்ற பெயரில் புத்தகமாகக் கொண்டு வந்து விட்டேன். நிம்மதி.
ஞானக்கூத்தன் கவிதைகள் தொகுப்பில், கவிதை எழுத என்ற பெயரில் ஒரு கவிதை எழுதி உள்ளார்.  அதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
கவிதை எழுத
மேஜைமேல் தாள்களை வைத்து
பேனாவை ஓட்டினேன்
ஒரு கல் விழுந்தது
எழுதத் தொடர்ந்தேன்
ஒரு கல் விழுந்தது
விடாமல் எழுதினேன்
விடாமல் கற்கள் விழுந்தன. பின்பு
கற்களை எண்ணினேன்.  எல்லாம்
வாசம் குறையா மல்லிகை ஆயின. தோழா.

வழவழப்பான தாளில் உயர்ந்த அட்டையில் ஞானக்கூத்தன் கவிதைகள் தொகுதி மின்னுகின்றன.
இங்கே குறிப்பிடும் புத்தகங்களை முழுவதும் படித்துவிட்டுத்தான் சொல்கிறேன் என்று யாரும் தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.  இப்போது புத்தகங்களைப் பற்றி கூறுகிறேன்.  பின்னால் புத்தகங்களைப் படித்து முடித்தவுடன் இன்னும் கூறுவேன். 824 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை : ரூ.895.
உ வே சாமிநாதையர் கடிதக் கருவூலம் என்ற புத்தகம்.  தொகுத்தவர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள்.  ஒரு கூட்டத்தில் சலபதி இந்தத் தொகுதியைப் பற்றி குறிப்பிட்டபோது உடனே வாங்க வேண்டுமென்று நினைத்தேன்.  இந்தப் புத்தகக் காட்சியின் போது அதை வாங்க முடிந்தது.  தொகுதி 1 என்ற பெயரில் இந்தப் புத்தகம் வெளி வந்துள்ளது.  1877ஆம் ஆண்டிலிருந்து 1900 வரை உள்ள கடிதங்களின் தொகுதி இது.  இந்தப் புத்தகத்தின் பின் பகுதியில் கடிதம் எழுதியவர்களில் கையெழுத்துப் பிரதிகளையும் காணலாம்.   உ வே சாவிற்கு மற்றவர்கள் எழுதிய கடிதங்கள்தான் தொகுக்கப்பட்டுள்ளனவே தவிர உ வே சா என்ன எழுதியிருப்பார் என்பது தெரியவில்லை.  இந்தப் புத்தகம் ஒரு முக்கியமான புத்தகமாக எனக்குத் தோன்றுகிறது. கெட்டி அட்டைப் போட்ட 600 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை  ரூ.600தான்.  
இன்னும் கொஞ்சப் புத்தகங்களைப் பற்றியும் சொல்ல விரும்புகிறேன்.

Comments