Skip to main content

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...34


அழகியசிங்கர் 




ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சியின் போது ராமகிருஷ்ணனைச் சந்திக்காமல் இருக்க மாட்டேன்.  உண்மையில் அங்குதான் அவரைச் சந்திக்கும் வழக்கம் உள்ளவன்.   அப்படிச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் என்னன்ன புத்தகங்கள் வாங்கலாம் என்று சொல்லிக்கொண்டிருப்பார்.
ஒருமுறை பெரிய விக்கிரமாதித்தியன் கதையை வாங்கும்படி சொன்னார்.  இன்னொரு முறை பம்மல் சம்பந்த முதலியாரின் படைப்புகளின் முழு செட்டு கிடைக்கிறது வாங்குங்கள் என்றார்.  இப்படி எத்தனையோ புத்தகங்களை வாங்கும்படி கூறிக்கொண்டிருப்பார்.  
எனக்குத் தெரிந்து வேறு சில எழுத்தாளர்கள் என்ன புத்தகங்கள் படிக்கிறார்கள் என்பதை வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள்.
அமெரிக்கன் லைப்ரரிக்கு பிரமிளுடன் போகும்போது அவர் என்னன்ன புத்தகங்கள் படிக்க வேண்டுமென்று எடுத்துக்கொடுப்பார்.  ஒரு முறை ஒரு புத்தகத்தை எடுத்து, 'இது நம்ம ஊர் ஜெயகாந்தன் மாதிரி எழுதுவார்.  படிக்க வேண்டாம்,' என்று சொன்னது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.
இன்னொரு இலக்கிய நண்பர், 'எம் வி வெங்கட்ராமின்  காதுகள் என்ற நாவலையும், கோபிகிருஷ்ணனின் உள்ளேயிருந்து ஒரு குரல் என்ற நாவலையும் படிக்காதீர்கள்' என்று அறிவுரை கூறினார்.  ஏன் என்று கேட்டேன்.  'அது தீவிரவாதப் புத்தகம், தேவையில்லாத மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்,'  என்றார். 
அதை எடுத்துப் படிக்கும்போது அவர் சொன்னது உண்மையாக இருக்குமென்று தோன்றியது.  ஆனால் இப்போது யோசித்துப் பார்த்தால், புத்தகம் படிப்பது எந்தவிதத்திலும் யார் மனதையும் கெடுக்காது.  ஆனால் வாசிப்பவனுக்கு நம்ப முடியாத பலத்தைக் கொடுக்கும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.  
நான் ஒவ்வொரு முறையும் புத்தகக் காட்சியில் புத்தகங்கள் வாங்காமல் இருக்க மாட்டேன்.   சிலசமயம் புத்தகங்களை வாங்கியபின் அதிகமாக வாங்கிவிட்டோமோ என்று கலக்கத்துடன் இருப்பேன். 
இந்த முறை ஆசையுடன் முதலில் நான் வாங்கிய புத்தகம் üகறையான்ý என்ற நாவல்.  சீர்ஷேந்து முகோபாத்யாய எழுதியது  நேஷனல் புக் டிரஸ்ட் கொண்டு வந்த புத்தகம்.  1978ல் இப் புத்தகம் வந்தபோது நான் வாஙகியிருக்கிறேன். நான் வாங்கியப் புத்தகம் ரொம்பவும் மோசமாகி வீணாகிப் போய்விட்டது.   ஒவ்வொரு முறையும் நேஷனல் புக் டிரஸ்ட் அலுவலகத்திற்குப் போகும்போது இந்தப் புத்தகம் இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டிருப்பேன்.  இதோ இந்த முறை நேஷனல் புக் டிரஸ்ட் என் ஆசையை நிறைவேற்றி விட்டது.  இந்த முறை புத்தகக் காட்சியில் நான் வாங்கிய முதல் புத்தகம் இது.  
 

Comments