30.4.16

ஒரு கதை ஒரு கவிதை வாசிப்புக் கூட்டம் 4அழகியசிங்கர்சென்னையில் சனி ஞாயிறுகளில் இனி கூட்டம் நடத்துவது சிரமமாக இருக்கும் போல் தோன்றுகிறது.  கூட்டம் ஏற்பாடு செய்தாலும் யாரும் வர மாட்டார்கள் என்று தோன்றுகிறது.  நாம் அரசியல் கட்சி நடத்தினால் பணம் கொடுத்து கூட்டத்திற்கு வரச் சொல்லிவிடாலாம்.  நாம் சாதாரணத்திலும் சாதராணம்.
எனக்கு வழக்கம்போல் கூட்டத்திற்கு வந்திருந்து சிறப்பு செய்யும் ஆடிட்டர் கோவிந்தராஜன் திருவனந்தபுரம் போய்விட்டார்.  அதனால் அவர் வர முடியாது.  எப்போதும் குவிகம் என்ற இலக்கிய அமைப்பு உள்ளது.  கடந்த ஓராண்டாக இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வருகிறது.  விருட்சம் கூட்டம் பார்த்து ஆரம்பித்தார்கள்.  நம்மைப் போல் ஏதோ ஆர்வக் கோளாறு என்று நினைத்தேன்.  ஆனால் அப்படி இல்லை.  ஓராண்டாக 12 கூட்டங்கள் நடத்தி அசத்தி விட்டார்கள்.  12வது கூட்டத்தில் ஒரு நாடகத்தையே அரங்கேற்றி விட்டார்கள்.  
நமக்கு உறுதுணையாக அவர்கள் எப்போதும் இருப்பார்கள்.  ஆனால் நாளைக்கு அவர்கள் வேறு ஒரு இலககியக் கூட்டத்திற்குப் போய்த்தான் தீர்வார்கள்.
விஜய் மகேந்திரன், வேடியப்பன், வினாயக முருகன் போன்ற நண்பர்கள் நாளைக்கு நடக்கவிருக்கும் இலக்கிய நிகழ்ச்சிகளுக்குக் கலந்து கொள்ளப் போகிறார்கள்.  
அதனால் நான் நடத்தும் கூட்டத்திற்கு யாராவது வருவார்களா என்ற சந்தேகம் வந்து விட்டது.  ஆனால் நான் முடிவுக்கு வந்து விட்டேன்.  கூட்டம் நடத்துவது என்று.  சரியாக 5 மணிக்கு வெங்கட நாராயண ரோடில் இருக்கும் நடேசன் பூங்காவில் கூட்டம் இருக்கும. பூங்கா நுழையும் இடத்தில் உள்ள மேடையில் நான் அமர்ந்திருப்பேன்.  ஒரு தடியான புத்தகம் ஒன்றை வைத்துக்கொண்டு கதைகளை வாசிப்பேன்.  சத்தமாக இல்லை.  மௌனமாக.  கூட்டத்தின் தலைப்பை இப்படி மாற்றலாம் என்று நினைக்கிறேன்.
ஒரு கதை ஒரு கவிதை ஒரு மனிதன் வாசிப்புக் கூட்டமென்று.

29.4.16

நீங்களும் படிக்கலாம்....21

அபத்த உலகத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறாரா?அழகியசிங்கர்
சமீபத்தில் நான் இரண்டு சிறுகதைத் தொகுதிகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  ஒன்று இத்தாலிய எழுத்தாளர் மொரவியா எழுதிய மதர் லவ் என்ற புத்தகம்.  இன்னொன்று தமிழவனின் நடனக்காரியான 34 வயது எழுத்தாளர்.  பெண்களின் உணர்வுகளைச் சித்திரிக்கும் ஆல்பெர்ட் மொரவியா ஒரு ஆண் எழுத்தாளர்.  அவருடைய புத்தகத்தில் காணப்படும் பெண்கள் பலவித இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.  அவற்றை துல்லியமாக வடித்துக் கொடுத்திருக்கிறார் மொரவியா.  இன்னும் இந்தப் புத்தகத்தை நான் முடிக்கவில்லை. படிக்க படிக்க இன்னும் இன்னும் படிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.  சமீபத்தில் வந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புத்தகங்களில் இதுவும் ஒன்று.  இப் புத்தகத்தை மாடியில் உள்ள வெயிலில் உலர்த்தி படிக்க ஆரம்பித்தேன்.  படிக்க படிக்க இந்தப் புத்தகத்தை கண்டு கொள்ளாமல் இத்தனை நாட்கள் ஏன் விட்டோம் என்று தோன்றியது.  இப்படி கண்டுகொள்ளமல் விடுப்பட்ட நூல்கள் அதிகமாகவே என்னிடம் இருப்பதாக தோன்றுகிறது.
ஏற்கனவே நான் தமிழவனின் நாவல்கள், கட்டுரைகள், சிறுகதைகளைப் படித்திருக்கிறேன்.  அவர் கவிதைகள் எழுதி இருக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது.  தமிழில் பின் நவீனத்துவ பாணியை அறிமுகப்படுத்திய பங்கு அவருக்குண்டு.  சோதனை ரீதியாக அவர் பல நாவல்களை எழுதி இருக்கிறார். தற்போது தீராநதியில் அவர் எழுதிக் கொண்டு வருகிற கட்டுரைகள் முக்கியத்துவம் உள்ள கட்டுரைகள். 
முன்பே காவ்யா வெளியீடாக வந்த தமிழவன் கதைகள் என்ற தொகுதி 1992-ல் வெளிவந்தது.  இத் தொகுதிக்குப் பிறகு 2015ல்தான் இவருடைய இன்னொரு சிறுகதைத்தொகுதியான நடனக்காரியான 35 வயது எழுத்தாளர் என்ற பெயரில் வெளி வருகிறது.  
2015 ஆம் ஆண்டில் வெளிவந்த சிறுகதைத் தொகுதிகளில் முக்கியமான தொகுதியாக இதைக் கருதுகிறேன். காலம் மாற மாற எழுத்துக்கள் மாறிக்கொண்டிருக்கின்றன.  பெரிய பத்திரிகைகள் சிறுகதைகளை துறந்து விடுகின்றன.  அதேபோல் சிறுகதைகளும் இறுகலாக இருந்தால் படிப்பவர்களும் காணாமல் போய்விடுவார்கள்.  தமிழவன் கதைகள் என்ற இவருடைய முந்தைய தொகுப்பு இதற்கு உதாரணம்.  அதனால் புதுமாதிரியான வடிவத்தை கதை எழுதுவதற்கு எடுத்துக்கொண்டிருக்கிறார்.  132 பக்கங்கள் கொண்ட இத் தொகுதியில் மொத்தம் 22 கதைகள் உள்ளன.  நிச்சயம் படிப்பவர்களை இக் கதைகள் வசீகரிக்காமல் இருக்காது.
ஹர்ஷவர்த்தனர் அறிவு என்ற கதை இந்தத் தொகுதியில் உள்ளது.  அது மொத்தமே ஒரு பக்கத்தில் முடிந்து விடுகிறது.  பேராசிரியர் ஹர்ஷவர்த்தனர் சாமான்யரைப் போல் வேடமிட்டு  அரண்மனையை விட்டு வெளியே வருகிறார்.  அறிவைத் தேடிப் பயணம் மேற்கொள்கிறார்.  அப்படிப் பயணம் மேற்கொள்ளும்போது அவர் பலரை சந்திக்கிறார்.  அந்தச் சந்திப்பைப் பற்றிய குறிப்புதான் இக்கதை.    மேலும் இவருடைய ஒவ்வொரு கதையாக எடுத்துப் படிக்க படிக்க வாசிக்கிற அலுப்பு இந்தத் தொகுதியில் ஏற்படுவதில்லை.  பலருடைய கதைத் தொகுதியில் காணப்படுவது இந்த வாசிப்பு அலுப்பு.  அதை உடைத்திருக்கிறது இந்தத் தொகுதி.  
நம்முடைய முந்தைய தலைமுறையைச் சேர்ந்த பலருடைய கதைத் தொகுதிகளில் வாசிப்பு அலுப்பு இருப்பதில்லை.  உதாரணமாக உமைச்சியின் காதல் என்ற றாலி கதையை இப்போதும் எடுத்துப் படிக்கலாம்.  வாசிப்பு அலுப்பே இருக்காது.  ஆனால் மௌனி கதையைப் படிக்கும்போது, வாசிப்பவரை சிறைப் பிடித்து விடுகின்றது எழுத்து.  இப்போதைய சிறுபத்திரிகைகளில் பக்கம் பக்கமாக வருகிற கதைகளைக் கூட என்னால் ரசிக்க முடியவில்லை.  எப்போது கதை முடியும் என்று அவசரம் அவசரமாகப் படிக்க வேண்டி உள்ளது.  பொது ஜன வாசிப்புப் பழக்கம் உள்ளவனுக்கு வாசிப்பு அலுப்பு ஏற்படுவதில்லை.  கதைகளை நகர்த்திச் செல்வதில் ஜன ரஞ்சக கதாசிரியர்கள் திறமையானவர்கள்.  ஆனால் ஒரு குறிக்கோளுடன் கதையை ஆரம்பித்து கதையை முடிப்பார்கள். ஜாலம் இருக்கும். ஆழம் இருக்காது.  
தீவிரமான இலக்கியப் பத்திரிகையில் கதையை வாசிக்க வருபவன், கதையைப் படிக்க படிக்க அவனுக்கு தலை சுற்ற ஆரம்பித்துவிடும்.  இதை தமிழவன் உடைத்திருக்கிறார்.  ஆரம்பத்தில் அதைச் செய்ய தவறி விட்டார் என்பதை தமிழவன் கதைகள் என்ற புத்தகத்தைப் படித்தால் புரியும். அது அந்தக காலத்தில் எழுதப்பட்ட கதைகள்.  
இத் தொகுதியில் உள்ள  கதைகளின் முக்கியத் தன்மை என்ன?  விபரம். அதை உடைத்திருக்கிறார்.  விவரணையில் நம் எழுத்தாளர்கள் குறிப்பாக சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் மாட்டிக்கொள்வதுபோல் தமிழவன் மாட்டிக்கொள்ளவில்லை.  எல்லாக் கதைகளிலுமிருந்து விவரணையைக் கழட்டி விடுகிறார். சிலர் சிலரை சந்திக்கிறார்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  இப்படியே போகிறது கதைகள். விவரங்களை உடைத்தவர்களில் நம் முன்னோடி அசோகமித்திரன்.  அவருடைய கதைகள் பெரும் பத்திரிகைகக்கும் சிறுபத்திரிகைக்கும் பாலமாக அமைந்திருக்கின்றன.  1958 ஆம் ஆண்டு மழை என்ற பெயரில் அசோகமித்திரன் ஒரு கதை எழுதி இருக்கிறார்.  அதை இன்றும் வாசிக்க முடியும்.   இத் தொகுதிகளில் உள்ள தமிழவனின் கதைகளில் எந்தக் கதையை எடுத்துப் படித்தாலும் இன்னும் இன்னும் படிக்க வேண்டுமென்கிற உணர்வை ஏற்படுத்தும். 
இத் தொகுப்பின் சிறப்பென்ன?  கதா பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்குள் ஒன்று தலையிடாமல் பார்த்துக் கொள்வது..அதீத உணர்ச்சியை வெளிப்படுத்தாமல் இருப்பது, அனாவசிய விவரணையை அழிப்பது. அதேபோல் காலத்தையும் இடத்தையும் ஒழிப்பது இக் கதையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எந்தக் காலத்தில் இக் கதைகள் நடந்தன என்பதை நம்மால் படிக்கும்போது தெரிந்து கொள்ள முடியவில்லை. நடனக்காரியான 35 வயது எழுத்தாளர் என்ற கதையில் பிரகதி ரை என்ற எழுத்தாளர் 17 கதைகளை மட்டும் எழுதியிருக்கும் ஒரு எழுத்தாளரை சந்திக்கிறார்.  அவர் முன்பு ஒரு நடனக்காரியாக இருந்திருக்கிறார்.  பின் எழுத்தாளராக மாறி விட்டிருக்கிறார். மகிமா பவர் என்ற இன்னொரு எழுத்தாளரும் அவர்களுடன் இருக்கிறார். இவர்கள் மூவரும் பேசுவதுதான் கதை.  இப்படி பெரும்பாலான கதைகளில் ஒருவருடன் ஒருவர் பேசுவதாக அமைகிறது.  அப்படிப் பேசுவது கூட அசாதாரணமாக இருக்கிறது.  இதுமாதிரியான கதைகள் மூலம் தமிழவன் ஒருவித அபத்த உலகத்தை படம் பிடித்துக் காட்டுவது போல் தோன்றுகிறது.
கதைகளை எப்படியெல்லாம் எழுதலாம் என்பதற்கு இத் தொகுதி உதாரணமாகத் திகழ்கிறது.  வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம்.

நடனக்காரியான 35 வயது எழுத்தாளர் - தமிழவன் - சிறுகதைகள் - வெளியீடு : புது எழுத்து, 2/205 அண்ணா நகர், காவேரிப்பட்டினம் - 635 112, கிருஷ்ணகிரி மாவடடம் -பக்கம் : 132 - விலை : ரூ.120 - தொலை பேசி : 98426 47101


28.4.16

ஏழு வரிகளில் கதை கதையாம்...காரணமாம்.அழகியசிங்கர்இன்னும் கொஞ்ச நாட்களில் முகநூலில் ஏழு வரிகளில் கதைகளை அள்ளி நிரப்பி விடுவார்கள் எல்லோரும்.  கதை என்பது வேறு; கவிதை என்பது வேறு.  மிகக் குறைவான வரிகளில் ஒரு கதையைப் படிப்பதுபோல் ஒரு திரில் வேற எதிலும் கிடைக்கப் போவதில்லை. இதில் கொஞ்சம் யோசித்தால் போதும் ஒரு கதை எழுத வந்துவிடும்.  தொடர்ந்து எழுதுங்கள். முகநூலிலும், பிளாகிலும் பதிவு செய்கிறேன். புத்தகமாகப் போடுவதற்கும் முயற்சி செய்கிறேன்.

படிக்கட்டில் ஏறிவந்த கர்ப்பணி பெண்ணிடம் கேட்டேன்.  'ஏழு வரிகளில் ஒரு கதை சொல்லேன்,' என்று.  'எனக்குக் கதையே சொல்ல வராது,' என்றாள்.  ஆனால் வயிற்றில் உள்ள குழந்தை, 'நான் பிறந்த பிறகு கதை சொல்கிறேன்,' என்றது.


1.  என் செல்வராஜ் , சிதம்பரம்


பிரிந்து செல்லும் உயிர்


          மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். அவனுக்கு மனைவி வரமாக வந்தவள் இல்லை. அவனோடு வாழாமல் போனவள். இருந்தாலும் மனம் நினைக்கும் போது  கைப்பேசியில் அவளோடு பேசுவான். பல தடவை அது சண்டையில் முடிவதுண்டு. சமாதானம் செய்ய கடவுளா வரமுடியும்? ஒரு நாள் அவள் சொன்னாள் , " செத்துத் தொலையேன்"  என்று. அவனுக்கு தெரிந்ததெல்லாம் டாஸ்மாக் கடை மட்டுமே. வாங்கினான் மதுவை . ஒரே மூச்சில் ஒரு பாட்டிலைக் குடித்தான்.  செத்துப்போ என்று சொன்ன மனைவி ஞாபகம் வந்தது. வாழச் சொல்லி கெஞ்சும் அவன் தங்கைகள் ஞாபகம் வரவில்லை.
அவனுக்காகவே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழும் அம்மா ஞாபகம் வரவில்லை. வயலுக்கு அடிப்பதற்காக என்று சொல்லி வாங்கிய பூச்சி மருந்து அவன் வயிற்றுக்குள் போனது. வீட்டின் அருகில் வரும்போது அவன் உயிர் அவனை விட்டு  பிரிந்து சென்றது. 


2. பாஸ்கரன் ஜெயராமன்


ஆசீர்வாதம் !


ஆசையாய் வளர்த்த ஒரே பெயர்த்திக்குத் திருமணம். பாட்டிக்கு வர முடியவில்லை. கழுத்தில் தாலி ஏறியவுடன் பெற்றோருக்குக் கண்ணீர் –பாசமாக வளர்த்த பெண்ணென்றாலும் ஒருநாள் திருமணமாகிப் போக வேண்டியது தானே முறை என்றனர் விருந்தினர். சாப்பாடு முடிந்தகையோடு மணமக்கள் பாட்டியைக் காணச் சென்றனர். அருகிலிருந்த மருத்துவ மனையில், நினைவின்றி வெண்டிலேடர் சுவாசத்தில் பாட்டி – இரண்டு நாள் முன்பு ஸ்ட்ரோக் - ஆசீர்வாதம் செய்தவுடன் வெண்டிலேடரிலிருந்தும் விடுதலை !


காதல் !

”எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. திருமணம் செய்து கொள்ளலாமா?” என்றாள் லதா. “எனக்கும் உன்னைப் பிடிக்கும், ஆனால் நான் உமாவைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்” என்றான் விஷால். உமாவோ, விஷாலை எனக்குப் பிடிக்கும், ஆனால் என் திருமணம் ரவியுடன்தான் – எங்கள் இருவருக்கும் காதல்” என்றாள். விஷால் லதாவை எண்ணியபடி திரும்ப வந்தான். அதற்குள் லதா, அவளை விரும்பும் கணேஷிடம்  திருமணத்துக்குத்  தலையாட்டிவிட்டாள் ! காத்திருக்கிறான் விஷால் ! 


சிபாரிசு

அவருக்கு அரசியல் செல்வாக்கு அதிகம். பையனுக்கு எல்கேஜி அட்மிஷன் மந்திரி பிஏ மூலம் பெரிய பள்ளியில் கிடைத்தது. பையன் காலேஜ் வந்தபோது, சிபாரிசில் மந்திரியின் கல்லூரியிலேயே சீட் கிடைத்தது. பையனின் திருமணம், ஊரில் அரசியல் தொடர்புடைய பெரிய செல்வந்தரின் மகளுடன் கட்சித் தலைமை சிபாரிசில் சிறப்பாக நடந்தது. மாமனாரின் சிபாரிசில், பெரிய தொழிற்சாலையில் வேலையும் கிடைத்தது. சிபாரிசின்றிப் பிறந்த தன் குழந்தைக்கு வைத்தான் பெயர் – ’வெற்றி’ என !3.  எம் ரிஷான் ஷெரீப் 


மியாவ் மொழி


பூனைகள் மனித பாஷையில் பேசக்கூடும் என்பதாக, üஅசோகனின் வைத்தியசாலைý என்ற நாவலில்தான் படித்திருக்கிறேன்.  துளசி டீச்சரிடமும் ஒரு பூனை இருக்கிறது.  ராஜலஷ்மி என்று அதற்குப் பெயர்.  எனது பூனை பெர்சியாப் பூனை.  பஞ்சுப் பொதி போல அடர் மயிர் நிறைந்தது.  சத்தமே எழுப்பாமல் அங்குமிங்கும் ஓடித் திரியும்.  எனவே எங்கிருந்தாலும் ஓசையெழுப்பும்படி கழுத்தில் மணியொன்றைக் கட்டி வைத்திருக்கிறேன்.

பூனைகளுக்கென்றே வரும் விலையுயர்ந்த, பெட்டியிலடைக்கப்பட்ட உணவைக் கொடுத்தால் கண்ணை மூடிக் கொண்டு விழுங்கும்.  இன்று அது பேசியதுதான் ஆச்சரியமான சங்கதி. üநீ ஃபிரிட்ஜில் அடைச்சு வச்சிருக்குற மீன்கள் கடல்ல வாழ்ந்த காலத்தைவிட அதிகமா உன் ஃபிரிட்ஜ்லதான் கிடக்கு.  üமியாவ்ý என்றது.

27.4.16

ஏழு வரி கதைகளின் தொகுதி

அழகியசிங்கர் 

ஏழு வரிகளில் கதை என்றால் ஏழு வரிகளில்தான் முடிய வேண்டுமென்பதில்லை, எட்டு வரிகள், ஒன்பது வரிகள், பத்து வரிகள் என்றெல்லாம் கூட எழுதலாம்.  தயவுசெய்து எழுதுபவர்கள் என் இ மெயிலில் அனுப்பவும்.  நான் பார்த்து விட்டு அடுத்த நாளே பதிவு செய்கிறேன்.  ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். என் நோக்கம் 100 பக்கங்களில் இது மாதிரியான கதைகளை அச்சடித்துக் கொண்டு வரலாமா என்பதுதான்.  அதனால் தயவுசெய்து  navina.virutcham@gmail.com இ மெயிலில் அனுப்புங்கள்.


1.  வைதீஸ்வரன்   

 இட ஒதுக்கீடு
                      

பிளாட்பாரத்தில்  முக்கால்  மணி நேரமாக  உட்கார்ந்திருந்தோம்.  இரவு பத்து மணிக்கு புறப்படுகிற  ரயில்  அங்சு நிமிஷம் கழித்துத் தான் பிளாட்பாரத்துக்கு வந்து நின்றது.  வெளியே ஒட்டியிருந்த  பெயர் பக்கத்தை சரி பார்த்து கைப்பெட்டியுடன்  உள்ளே தள்ளாடி  முட்டி மோதி நகர்ந்து  என் ஸீட்டை ஒரு வழியாய்க் கண்டு பிடித்து விட்டேன்.  அதில்  ஏற்கனவே ஒரு  மாது  தடிக் கண்ணாடி போட்டுக் கொண்டு  உட்கார்ந்திருந்தாள்... சற்று வயதானவர்.
   “அம்மா....இது  என் ஸீட்டு   9.  ...”
அந்த மாது என்னை   ஏறிட்டுப் பார்த்த வண்ணம்  சற்றும் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.
    “ அம்மா....  இதோ பாருங்கள்...என்  டிக்கட்டு......இது  என்  ஸீட்டு.. A9 நீங்கள்  தவறாக  உட்காந்திருக்கிறீர்கள்....”
   “இது  என்  ஸீட்டு  ஸார்..  நீங்கள்  தான்  தப்பாக  சொல்லுகிறீர்கள்.  நான்  பார்த்து  விட்டுத் தான்  உட்கார்ந்திருக்கிறேன்...”  அந்த  அம்மாள் மிக நிச்சயமாக  அழுத்தமாக  சொல்லி விட்டு  சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். மேலும் என்னுடன் பேச விரும்பாதவள்  போல்.
  “இல்லை..மேடம்... இதோ பாருங்கள்  என்  ஸீட்டு நம்பர்  A 9 ..”
 “  நீங்கள்  என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்.  9  என்  ஸீட்டுத் தான்.. கம்பார்ட்மெண்ட் நம்பர்  பி2..........உங்களுடையது  வேறாக  இருக்கலாம். “
  நான்  சொன்னேன் மீண்டும்  டிக்கட்டைப் பார்த்து விட்டு..
 “இல்லை மேடம்...என்  டிக்கட்டு  இதோ... எனக்கும்  கம்பார்ட்மென்ட்  பி2 தான்.. நீங்கள்  தப்பாக  வந்து விட்டீர்கள்.””
“இல்லை  இது  என்  ஸீட்டுத் தான்  ..டி டி ஆரிடம்  போய் சொல்லுங்கள்...”
  “ இல்லை  மேடம்  நீங்கள்  தான்  தவறாக,,,,”
அந்த  மாது  உரத்த குரலில்  பேசினாள்
.. Don’t disturb me…Go away. I cannot    vacate.     This  is  my  Seat…”  ”    அவள்   ஒரு வேளை  ஓய்வு பெற்ற  கல்லூரி பிரின்ஸிபாலாக  இருக்கலாமோ!!
    நகராமல்  வழியை  அடைத்துக் கொண்டு  நான்  அந்த  மாதுவிடம்  வாதாடிக் கொண்டிருந்ததை  மேலும்  பொறுத்துக் கொள்ளா முடியாமல்  உள்ளே வர முடியாத  பயணிகள்  கத்தினார்கள்.
  “மிஸ்டர்  வழியை  விட்டுட்டு  சண்டை போடுங்க....நாங்க  உள்ளே போக  வேண்டாமா? “
   “ஸார்  என் ஸீட்டு  A9     பாருஙக...இவங்களும்  அதே நம்பர்னு  சொல்றாங்க..  பாருங்க.. “   நான்  என்  டிக்கட்டை  அவர்களிடம்  காட்டினேன்
  பயணிகளில் ஒரு  இளைஞன்.  கம்ப்யூடர்  பையனாக  இருப்பான் போலும். 
   “ஸார்... உங்க  டிக்கட்டை  கொடுங்க....”    கொடுத்தேன்....
 ”சரியா  இருக்கு....அம்மா...ஒங்க  டிக்கட்டைக் கொடுங்க...”
 தயக்கத்துடன்  சற்றுக் கோபமாக  அவள்  டிக்கட்டைக் கொடுத்தாள்
  “ அம்மா  ஒங்க  ஸிட்  நம்பர்  கம்பார்மென்ட்  நம்பர்  எல்லாம்  சரியாத் தான்...இருக்கு........”
 அந்த அம்மாள்   கோபத்தோடு  குறுக்கே பேசினாள்
“  Tell  this  bloke   I  have  the  correct   Seating…Bloody  nuisance   ”….”
அந்தப்  பையன்  அவளைக் கையமர்த்தி விட்டு  சொன்னான்..
  Wait  Madam..  நான்  சொlல்றதை  கேட்டுட்டு  பேசுங்க... .நீங்க  உக்காந்த  ஸீட்  சரியானது  கம்பார்ட்மெண்ட்   சரி.தான்.  ஆனா.  ஒக்காந்த  ரயில்  தான்  வேறெ!  இது  25630.   நீங்க  ஏற வேண்டிய  வண்டி  25360.  அதோ  அந்த  நாலாவது  பிளாட்பார்த்திலே  நிக்குது....இந்தாங்க  டிக்கட்...”
  அந்த  அம்மாளின்  முகம்  சிவந்து  பதறியது.  தலையைக் குனிந்த  வாறு  “ What  a  confusion…Oh!  Hell…”  அவள்  எழ முடியாமல்  எழுந்து தடுமாறி  நின்றாள்.
  அவள் பெட்டியையும்  பைகளையும்  அவசரமாக   சிலர் தூக்கி  வெளியே    இறக்கி  வைத்தார்கள்.
    அவளையும்  ஒருவன்  கைத்தாங்கலாக  இறக்கி  விட்டான்.
அவள் நிலைமையப்  பார்க்க  எனக்கு பரிதாபமாக  இருந்தது.  அவளைப் கண்ணாடி வழியாகப் பார்த்து  “SORRY “ என்றேன்  அவள்  என்னைப் பார்க்க விரும்பாமல்  கோபமாகத்   தலையைத் திருப்பிக் கொண்டாள். அவள்  யார் மீது  கோபப் பட வேண்டுமோ!................. 
  நாலாவது  பிளாட்பாரத்தில்  அவள்  ஏற வேண்டிய  ரயில்  ஒரு குலுக்கலுடன்    நகர்ந்து  கொண்டிருந்தது...............


2.  எம் ரிஷான் ஷெரீப் 

குறிப்புகள் 

குறிப்பேதும் எழுதி வைக்காமல் இன்று தூக்குப் போட்டுக்ச் செத்திருந்த பவித்ரம் அக்கா, சஞ்சிகையொன்றுக்குத் தபாலில் அனுப்பிவிடச் சொல்லி என்னிடம் நேற்றுத் தந்திருந்த தபாலுறையைக் கையில் வைத்திருக்கிறேன்.  அக்காவின் கணவரிடம் கொடுத்து விடலாமா?  அவரிடம் தபாலைக் கொடுக்காமல் என்னிடம் ஏன் தர வேண்டும்?  அக்கா இறுதியாக அதில் என்ன எழுதி இருக்கக்கூடும்ட?  பிரித்துப் பார்த்து, எதுவும் விளங்கவில்லையானின், சஞ்சிகைக்கே அனுப்பி விடலாம்.  பிரித்துப் பார்த்தேன்.  அதை சஞ்சிகைக்கே அனுப்பி விடலாம்.  எதற்கு வீண் வம்பு?


3.  பெருந்தேவியின் மூன்று கதைகள்

1. பக்கத்து வீடு

எப்போதும் ஒரே இரைச்சல்.  இரவு முழுக்க பொருட்களை நகர்த்தும் அல்லது உருட்டும் சத்தம்.  பகலிலோ சில நேரங்களில் திடீர் ஓலம்.  சிலசமயம் சிங்கம் வீட்டுக்குள் நுழைந்து விட்டதுபோல் அலறல் இல்லாவிட்டால் கூர்ந்து கேட்க வைக்கும் ஏறியிறங்குகிற ராட்சசக் கிசுகிசுப்பு குரல்.  சொல்லியும் கேட்பதாக இல்லை.  
அபார்ட்மெண்ட் நிர்வாகத்தில் குற்றஞ்சாட்டியாயிற்று இன்று.
உறுதியாக சொல்லிவிட்டார்கள் போலீசுக்குப் போவார்களாம் நான் காலி செய்யாவிட்டால்.

2. உள்ளர்த்தம்

வானதிக்கு எதிலும் பிடிப்பில்லை.  பெற்றோர் அவள் பிறந்தவுடனேயே எப்படியோ இறந்து விட்டார்கள்.  வளர்த்த அத்தை இவள் வளர்ந்தவுடன் எப்படியோ போய்ச் சேர்ந்துவிட்டாள்.  எப்படியோ தேற்றிக்கொண்டு காதலிக்கலாùம்றால் சுற்றுவட்டாரத்தில் ஒருவனுமில்லை.  அட. அழகாகக் கூட வேண்டாம்.  
காலம் வாணலியில் அவளை வறுத்து தன் வாயில் போட்டுக் கொள்கிறது.  இந்த உவமானத்தால் வறுத்த கடலைக்கு என் மனம் அவாவுவது நல்லதொரு வாசகருக்கு எப்படியோ தெரிந்து விடும்.

3. ஒரு ஷøவின் கதை

இங்கே ஒவ்வொரு குளிர் காலத்திலும் பனியில் சறுக்கி விழுதல் என் வாடிக்கை.  மாணவியாக இருந்த ஆறு வருடமும் சாப்பாட்டுக்கே சிங்கி அடிக்க வேண்டியிருந்தது.  அடியில் முட்கள் வைத்த ஷø வாங்க வேண்டுமென்கிற பலநாள் கனவு வேலை கிடைத்த இவ் வாரம்தான் நிறைவேறியது.  எல் எல் பீன் இணையதளத்தில் "டோஸ் டி ஷø" என்று விளம்பரம் செய்திருந்தான். சுளையாக நூத்துப் பத்து டாலர். 

இன்று காலை அணிந்த முதல்மணி நேரத்தில் என் பாதம் சுடச்சுட வெங்பாய பஜ்ஜி.  அலுவலகத்துக்குச் சென்றவுடன் முதல் வேலையாக ஷø வைக் கழட்டிப் பிய்த்துத் தின்றேன்

4.  நேதாஜிதாசன்   2  கதைகள்


1)  தீர்ப்பு சொன்ன குற்றவாளி

நீதிபதி : குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா 

குற்றவாளி: குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா

நீதிபதி : நான் என்ன செய்தேன்?

குற்றவாளி : நான் என்ன செய்தேன் ?

நீதிபதி : நீ கொலை செய்தாய் .இதனால் உனக்கு மரண தண்டனை அளிக்கிறேன்.

குற்றவாளி : நீயும் இப்போது கொலை செய்தாய். இதனால் உனக்கும் மரண தண்டனை அளிக்கிறேன்.

நீதிபதி வெளியே நின்றுகொண்டிருந்த முதலாளியை பார்த்து சிரிக்கிறார்.
ஒரு முதியவர் " மரண தண்டனை கொடுத்த சந்தோஷமா நீதியரசரே, அது எல்லோருக்கும் வரத்தான் போகிறது. " என முனகி கொண்டே நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறுகிறார்.

2)   நீ தான்

எல்லாம் முடிந்தது அவனுக்கு அவனுடைய உயிரை தவிர.அதையும் முடித்துக்கொள்ள வெள்ளை நிற கயிற்றில் கழுத்து அளவு எடுத்து முடிச்சு போட்டிருந்தான்.திடீரென கதவை தட்டும் சத்தம்.அங்கு போய் பார்த்தான் யாரும் இல்லை.மீண்டும் முடிச்சு போட்டுக்கொண்டு நாற்காலியில் ஏறி நின்றான்.மீண்டும் கதவு தட்டும் சத்தம்.இந்த முறை அவனும் இல்லை.உயிர் தொங்கி கொண்டிருந்தது.
கதவை திறக்காமலே வெளியே போக முடிந்தது.எங்கும் இருள்.

அவன்: யார் கதவை தட்டியது ?

கதவை தட்டியவன்: நீ தான்

5. சுந்தர்ராஜன் சுப்பிரமணியன் ஒரு கதை

சந்தி காலத்திலே


‘சந்தி காலத்திலே ஏண்டா இப்படி தூங்கறே? நல்லா சாப்பிட்டுத்தான் தூங்கேன். அம்மா எப்பொழுதும் அடித்துக்கொள்வாள். சாப்பாடு.- சாப்பாடு தான் எப்போதும். சின்ன வயசிலேர்ந்து அவள் அப்படித்தான். தூங்கிற அவனை எழுப்பி பாலு சோறு கொடுத்து தூங்கச் செய்வாள். காலையில் எழுந்து அவன் முதல் நாள் சாப்பிடவே இல்லை என்று சாதிப்பான்.

இன்னிக்கும் அப்படித்தான். சாயங்காலம் ஆறு மணிக்கே அடிச்சுப் போட்டாப் போல தூங்கறான் . – பெத்த அம்மாவுக்கு கொள்ளி வைத்துவிட்டு! ஆவியாய் இருக்கும் . அம்மா துடிக்கிறாள் – ‘பையன் இன்னும் சாப்பிடவே இல்லையே!’ என்று!


6.  உமா மஹேஸ்வரியின் ஒரு கதை


காலச் சக்கரம்1996_ 8வதுபடித்துக்கொண்டு இருந்த என் பெண் அன்று. சொன்னாள்.அம்மா பேரன்ட்ஸ் டீச்சர் மீட்டிங்கு அப்பாவை அனுப்பு.நீவந்து மானத்தை வாங்காதே.உன் அக்காவா என்கிறாள் டீச்சர்.நானும் கொண்டை போட்டு பெரிய பொட்டு வைத்து புடவைத்தலைப்பைப் போர்த்திய படி 
போனேன்.

2016_நேற்று அவள் சொன்னாள்.அம்மா தம்பியின் காலேஜ் நன்பர்கள் வரும் போது நரைத்த தலையோட வயசான கிழவி மாதிரி யல்லாமல் டை அடித்து சுடிதார் போட்டு ஸ்மார்டா இரு ! சரி பெண்ணே!
ஒரு தவறுக்கு வருந்துகிறேன்....

போன பதிவில் தெரியாமல் மும்பையில் உள்ள என் நண்பர் எ தியாகராஜன் எழுதிய 3 கதைகளை அசோகமித்திரன்தான் அனுப்பி உள்ளார் என்று பதிவு செய்து விட்டேன்.  அக் கதைகளை மும்பை எ தியாகராஜன் என்று வாசிக்கவும்.


26.4.16

ஏழு வரிகளில் ஒரு கதை...


அழகியசிங்கர்
ஏழு வரிகளில் கதை எழுத முடியுமா என்ற கேள்வி கேட்டு ஒன்றை நானும் எழுதி முகநூலில் வெளியிட்டேன்.  நான் மதிக்கும் எழுத்தாளர் அசோகமித்திரன் கதைகளை எழுதி அனுப்பி உள்ளார். நீங்களும் முடிந்தால் எவ்வளவு கதைகள் வேண்டுமானாலும் அனுபபலாம்.  navina.virutcham@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.  எல்லாவற்றையும் ஒரு புத்தகமாக பதிவு செய்ய உத்தேசம். இதோ அசோகமித்திரனின் கதைகள்.

1. ஒரூ காகம்

வழக்கம் போல, டெய்லி தவறாமல் வந்து  உட்டான்ஸ் எல்லாம் உடர சீனு அன்னிக்கும் நல்ல பார்ம்ல.. சுனாமி வரும்னு மிருகங்கள் பறவைகள் இதுக்கெல்லாம் முன்னமே தெரிஞ்சிடுமாம். யார் கிட்ட கதை உடராங்க.. எனக்கு சுத்தமா இந்தமாதிரி மூட நம்பிக்கைஎல்லாம் கிடையாது. அப்போது ஒரு காக்காய் அவர் தலை மீது இடித்தும் இல்லாமலும் சென்றது. பக்கத்தில் ஜாக்கிங்கில் இருந்த ஒரு மாமி சொன்னாள்- காக்காய் தலைல தொட்டுதுன்னா சனீஸ்வரன் இல்லன்னா பிரம்மஹத்தி பிடிக்குமாம், ஜாக்கிரதை . அடுத்த நாள் சீனுவைக் காணும் - சனிக் கிழைமை.. எங்கு சென்றாரோ


 2. ட்ரா ஜி்க் கதை


நடேசன் பூங்கா கதை கேட்போர் எல்லோரும் சென்று அரைமணிக்கும் மேல் ஆகி விட்டது. ஒருவர் மட்டும் சோகம் கவ்விய முகத்துடன் உட்கார்ந்திருந்தார். நான் அவரிடம் சென்று கேட்டேன் : நான் படித்த ட்ரா ஜி்க் கதை நன்றாக இருந்ததா.   அவர் சொன்னார்: இன்னொரு கதையும் படித்திருந்தீர்களானால், என்னுடைய கைமுறுக்கு அத்தனையும் விற்றுப்போயிருக்கும்

3. ஜயராமனும் லட்சுமியும்

கூட 25 லட்சம் கொடுத்து ரோட் பக்கம் இல்லாமல் பின்புறம் சமுத்ரம் வ்யு கிடைக்கும் படி பார்த்துத் தான் வாங்கினார்கள்- ஜயராமனும் லட்சுமியும். சுமார் இரண்டு கோடி ஆயிறறு. மேலே இண்டீரியர் வேறு இன்னொரு முப்பது. கிராண்ட் க்ரிஹப்ரவேசம். தடபுடல். பதினாலாவது மாடி ப்ளாட்ல இருந்த பெரிய சிடவுட்ல ஷாமியானா போட்டு, ரோட்ல போறவங்க வரவங்க எல்லாம் வாசல்ல நின்ன காரை எல்லாம் பார்த்து விட்டு யாரோ சினிமா காரங்க வந்திருக்காங்க போலன்னு போனாங்க.இப்ப சமுத்ரம் தான் பார்த்துக் கொண்டு இருக்கு தினமும் ஜெயராமன் லட்சுமி குடுமி பிடி சண்டையை ...24.4.16

ஒரு கதை ஒரு கவிதை கூட்டம் இன்று இல்லைஅழகியசிங்கர்இந்த வாரம் நடை பெற வேண்டிய ஒரு கதை ஒரு கவிதை கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளேன்.

7 வரிகளில் யாராவது கதை எழுதி அனுப்ப முடியுமா?
கதை :

நடேசன் பூங்காவில் கண்ணயர்ந்துவிட்டேன். பின் பல குரல்களின் சத்தம் கேட்டு எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தேன்.மேடையில் ஒருவர் உரத்தக் குரலில் சத்தம் செய்தபடி இருந்தார். கதை படிக்கிறாராம். சிலர் நடந்து கொண்டிருந்தார்கள். நானும் கதை சொல்லும கூட்டத்தில் கலந்து கொண்டேன் 'கதை என் முன் நடந்து கொண்டிருக்கிறது,' என்றேன்.

23.4.16

இன்று உலகப் புத்தக தினம்அழகியசிங்கர் 


இன்று புத்தக தினம்.  புத்தகம் படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறலாம். ஆனால் புத்தகம் படிக்க ஆர்வம இருந்தால் மட்டும் புத்தகம் படிக்க முடியும். பதிப்பாளர், எழுத்தாளர், வாசகர் மூவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுதான் ஒரு புத்தகம்.  ஒரு தரமான புத்தகத்தைக் கொண்டு வர ஒரு பதிப்பாளர் முன் வர வேண்டும், ஒரு தரமான எழுத்தை எழுத ஒரு எழுத்தாளர் முன் வர வேண்டும், அதை வாசிக்க ஒரு வாசகனும் தயாராக இருக்க வேண்டும்.

ஒரு புத்தகம் வாசிப்பவன் புத்தகத்தை எடுத்துப் படிக்க பலவிதத் தடைகளை கடக்க வேண்டிய நிலையில் உள்ளான்.  என் குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய் புத்தகம் படிப்பார்கள். என் தந்தை எனக்குத் தெரிந்து புத்தகமே படிக்க மாட்டார்.  அவர் தினசரி தாள்களையே இப்போதுதான் படிக்கிறார்.  ஆனால் படித்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டார். என் மனைவி, 'லட்சுமி' என்ற எழுத்தாளர் புத்தகங்களை அதிகம் விரும்பிப் படிப்பார்.  ஆனால் இப்போதெல்லாம் அவருக்கு டிவியில் பொழுது போய் விடுகிறது. 

என் சகோதரன் முன்பெல்லாம் தமிழ் புத்தகம் படிக்க ஆர்வம் காட்டுவான்.  இப்போது சுத்தமாக இல்லை.  அவன் படிப்பது வணிகம் சம்பந்தமான புத்தகம். சில டானிக் புத்தகங்களையும் படிப்பான்.  என் பெண் படிப்பது கல்கியின் பொன்னியின் செல்வன்.  அதுவும் இப்போதுதான் படிக்கத் தொடங்குகிறாள்.

ஆனால் எல்லோருக்கும் புத்தகம் படிக்க வேண்டுமென்ற பெரிய ஆர்வம் இல்லை. நான் மட்டும் என் வீட்டில் விதிவிலக்கு.  அதனால் அதிகமாக திட்டும் வாங்குபவனும் கூட.  எப்போது பார்த்தாலும் புத்தகத்தைச் சேர்த்துக் கொண்டிருப்பவன்.  

என் நண்பர் ஒருவர் புத்தகம் வாங்கிப் படிப்பவர், பல ஆண்டுகளுக்கு முன்பே புத்தகத்தைத் துறக்க ஆரம்பித்து விட்டார்.  அவர் சேகரித்தப் புத்தகங்களை அவரே சொந்த செலவு செய்து நூல் நிலையத்திற்கு அனுப்பி விட்டார்.  பெரிய வீடும் வசதியும் இருந்தும் அவரால் ஏன் புத்தகத்தைப் பாதுகாக்க விரும்பவில்லை என்பது தெரியவில்லை.  ஒரு காலத்தில் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தார். இப்போது எழுதுகிறாரா என்பது தெரியவில்லை.  இன்னும் சிலர் இருக்கிறார்கள்.  புத்தகத்திற்காக ஒரு செலவும் செய்ய மாட்டார்கள்.   இலக்கியக் கூட்டம் நடக்கும் ஆழ்வார்பேட்டையில் உள்ள டாக் சென்டருக்கு அடிக்கடி செல்வேன். 

அவர்கள் அளிக்கும் விருந்தில் சுடச்சுட கிச்சடி நன்றாக இருக்கும். எழுத்தாளர்கள் பேசுவதைக் கேட்பதற்குமுன் கிச்சடி நினைவு வந்து அங்கு ஓடி விடுவேன்.  ஆனால் கூட்டம் முழுவதும் இருந்து கேட்பேன்.  திரும்பி வீடு வரும்போது அங்குப் பேசப்படும் புத்தகத்தை வாங்காமல் இருக்க  தோன்றாது. 
ஆனால் அங்கு வாங்கும் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வருவதற்குள் யாராவது என்னிடமிருந்து படிக்க வாங்கிக்கொண்டு விடுவார்கள்.  பின் எனக்குக் கிடைக்காது.  அதனால் டாக் சென்டரில்  எந்தப் புததகமும் வாங்க மாட்டேன்.  மேலும்  புத்தகங்களை யாருக்கும் தெரியாமல்தான் வாங்குவேன்.  என் மனைவி முன்பெல்லாம் அலுவலகம் போய்க் கொண்டிருப்பார்.  அவர் போனபிறகுதான் புத்தகம் வாங்குவேன். யாருக்கும் தெரியாமல் வீட்டில் ஒரு இடத்தில் கொண்டு வந்து வைத்துவிடுவேன்.

யாராவது என்னைப் பார்க்க வருகிறார்கள் என்றால் என்னிடம் எதுவும் புத்தகம் கேட்கக்கூடாது என்று மனதிற்குள் வேண்டிக்கொள்வேன்.  

சமீபத்தில் ஒருவர் எனக்குப் போன் செய்தார்.  'ஜானகிராமன் புத்தகங்கள் வேண்டும்,' என்று கேட்டார்.  அவர் கேட்டதில் எந்தத் தவறும் இல்லை.

நான் சொன்னேன் : 'நியூ புக் லேண்ட்ஸில புத்தகம் கிடைக்கும். போய் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள்...இல்லாவிட்டால் நான் உஙகளுக்கு வாங்கித் தருகிறேன்,' என்றேன்.

என்னைப் பொறுத்தவரை பலருக்கு புத்தகத்தை வாங்கிப் படிக்கும் வழக்கம் இல்லை.  அவர்கள் தேவையான அளவிற்கு பணம் வைத்திருந்தாலும், புத்தகம் வாங்குவது கிடையாது.  ஏன்?  இரண்டு பேர்கள் சரவணா பவன் ஓட்டலில் காப்பி சாப்பிட்டால், ஒரு விருட்சம் ஆண்டுச் சந்தா அளவிற்கு பணத்தை ஓட்டல்காரர்கள் வசூல் செய்து விடுவார்கள்.  ஆனால் காப்பிதான் சாப்பிடுவார்கள் தவிர, சந்தா கட்டி பத்திரிகையை வளர்க்க உதவி செய்ய மாட்டார்கள்.  ஏன்? 

புத்தகம் ஒரு தொந்தரவான விஷயம்.  படிப்பது இன்னொரு தொந்தரவான விஷயம்.  புத்தகமே படிக்காத பல குடும்பங்களைப் பார்த்திருக்கிறேன்.  இப்படி புத்தகமே படிக்காத இரண்டு நண்பர்களை என் புத்தக ஸ்டாலை பார்த்துக்கொள்ள சொல்லி புத்தகக் கண்காட்சி போது ஏற்பாடு செய்து விட்டேன் ஒரு ஆண்டில்.  என் புத்தகங்களை விற்க அவர்கள் சொன்ன அறிவுரைகளைக் கேட்டு நடந்தால் புத்தகமே போட வேண்டாமென்று தோன்றும்.  

என்னதான் புத்தகம் எழுதினாலும் என்னதான் புத்தகம் கொண்டு வந்தாலும், வாசிப்பவர்கள் கிடைக்காவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.  

எல்லோரையும் எப்படி புத்தகம் படிக்கும்படி செய்வது?  அது நம் கையில் இல்லை.  

சில ஆண்டுகளுக்கு முன் புத்தக தினத்தை முன்னிட்டு நான் ஒரு கவிதை எழுதினேன்.  அதை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.


இன்று உலகப் புத்தக தினம்


எல்லாக் குப்பைகளையும் தூக்கி
தெருவிலுள்ள குப்பைத் தொட்டியில் போட்டாள்
என் புத்தகக் குவியலைப் பார்த்து
மலைத்து நின்றாள்
என்ன செய்வதென்று அறியாமல்

பின் ஆத்திரத்துடன்
தெருவில் வீசியெறிந்தாள்

போவோர் வருவோர் காலிடற
புத்தகங்கள் சிதறிக் கிடந்தன தெருவெல்லாம்
ஒரு புத்தகம் திறந்தபடியே இருந்தது
அதிலுள்ள வரிகள் எல்லார் கண்களிலும் பட
படித்தவர்கள் சிரித்தபடியே சென்றனர்
எல்லார் முகங்களிலும் புன்னகை
நானும் ஆவலுடன்
மாடிப்படிக்கட்டிலிலிருந்து
தடதடவென்று இறங்கி
புத்தகத்தின் வரியை
இடுப்பில் ஒழுங்காய் நிலைகொள்ளாத
வேஷ்டியைப் பிடித்தபடி படித்தேன்
'இன்று உலகப் புத்தக தினம்
இன்றாவது புத்தகம் படிக்க
அவகாசம் தேடுங்கள்'
நானும் சிரித்தபடியே
புத்தகத்தில் விட்டுச் சென்ற
வரிகளை நினைத்துக்கொண்டேன்
இடுப்பை விட்டு நழுவத் தயாராய் இருக்கும்
வேஷ்டியைப் பிடித்தபடி....           (14.06.2008)   

21.4.16

லாவண்யாவின் கடலின் மீது ஒரு கையெழுத்து


அழகியசிங்கர்எங்கள் வங்கி அலுவலகம் இருந்த தெரு முனையில்தான் பாரத வங்கி இருந்தது.  ஒரு காலத்தில் அங்கு வண்ணதாசன் பணி புரிந்திருக்கிறார். நான் அந்த வங்கிக்குப் போகும்போது அவரைப் பார்த்திருக்கிறேன்.  அவர் எங்கோ எழுந்து போவதுபோல் இருக்கையில் அமர்ந்திருப்பார். ஆனால் நான் சொல்ல வந்தது அவரைப் பற்றி அல்ல.
சேதுராமன் என்ற நண்பர்.  பாரத வங்கியில் உயர் அதிகாரியாகப் பணிபுரிந்தவர்.  அவரைப் பார்க்க விருட்சம் இதழை எடுத்துக் கொண்டு போவேன்.  வா என்று வரவேற்பார்.  பல நண்பர்களிடம் அறிமுகப் படுத்துவார். விருட்சம் இதழுக்காக சந்தாத் தொகையைக் கொடுப்பதோடல்லாமல், இன்னும் சிலரிடம் சொல்லி வாங்கிக் கொடுப்பார்.  அவர் ஒரு புத்தக நண்பர்.  எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் நண்பர்.  அவரைப் பார்க்கப் போவதே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
ஒருமுறை அவர் கவிஞர் ஒருவரை அறிமுகப் படுத்தினார்.

"சார், இவர் சத்தியநாதன்.  லாவண்யா என்ற பெயரில் கவிதைகள் எழுதுவார்," என்றார் அவர்.

வந்தது ஆபத்து விருட்சத்துக்கு என்று நினைத்துக் கொண்டேன்.  லாவண்யா என்ற பெயரில் எழுதும் சத்தியநாதன், வேடிக்கையாகப் பேசக் கூடியவர்.  அந்தக் காலத்துப் பிரஞ்ஞை இதழில் ஒரு குறிப்பிடும்படியான சிறுகதை எழுதி உள்ளார்.  அவருடன் பழக பழக விருட்சத்திற்கு ஆபத்தில்லை என்று நினைத்துக்கொண்டேன்.

விருட்சத்தில் கவிதைகள் அதிகமாக எழுதி உள்ளார்.  மடமடவென்று கவிதைகள் எழுதிக் குவித்து விடுவார்.  பின் மொழிபெயர்ப்பு செய்து சில கவிதைகளை அனுப்பி விடுவார். நானும் சளைக்காமல் அவர் எழுத்தைப் பிரசுரம் செய்வேன்.

அவருக்கு ஒரு ஆசை.  தான் எழுதுகிற கவிதைகளை எல்லாம் புத்தகமாகப் போட வேண்டுமென்ற ஆசை.  உண்மையில் அது விபரீத ஆசை. அதேசமயத்தில் கவிதை எழுதுகிற எல்லோருக்கும் நியாயமாய் ஏற்படும் ஆசைதான்.

முதல் கவிதைத் தொகுதி விருட்சம் வெளியீடாக ஒன்றை கொண்டு வந்தார். அந்தக் கவிதைத் தொகுதியின் பெயர் 'இன்னும் வரவில்லையா உன் நத்தை ரயில்'  நான் முதன் முதலாக விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்தது கவிதைத் தொகுதிதான்.  தொடர்ந்து பல கவிதைத் தொகுதிகள் கொண்டு வந்திருக்கிறேன்.  அதில் ஒரு பெரிய தப்பு செய்து விடுவேன். கவிதைத் தொகுதியை 500 பிரதிகள் அச்சடித்து விடுவேன்.  ஆரம்பத்தில் இந்தத் தப்பை செய்திருக்கிறேன்.  பெரும்பாலும் என்னிடமே என்னை விட்டு அகலாமல் இருப்பது நான் கொண்டு வரும் கவிதைப் புத்தகங்கள்தான். ஆனால் உண்மையில் அத் தொகுப்பில் உள்ள கவிதைகளைப் படித்துப் பார்த்தால், அத் தொகுதிக்கு ஒரு நியாயமற்ற தண்டனை தந்துவிட்டதாகத்தான் நினைப்பேன்.
லாவண்யாவின் முதல் தொகுதி பெயர் 'இன்னும் வரவில்லையா உன் நத்தை ரயில்,'  அதென்னவோ தலைப்பில் ஒரு தப்பு செய்து விட்டோம். நத்தை என்ற பெயரைக் கொண்டு வந்து விட்டோம்.  அப்படி கொண்டு வந்து விட்டதாலோ என்னவோ கவிதைப் புத்தகம் என்னை விட்டு அகலாமல் நத்தை மாதிரி ஒட்டிக் கொண்டு விட்டது.

லாவண்யா கொஞ்சம் உணர்ச்சிகரமான மனிதர்.  'கவிதைப் புத்தகம் எதாவது விற்றதா?ý என்று அப்பாவித்தனமாகக் கேட்பார்.

"அதைப் பற்றியெல்லாம் கவலைப் படாதீர்கள்," என்று அவரைத் தேற்றுவேன்.  
ஒவ்வொரு முறையும் புத்தகக் கண்காட்சியில் அவருடைய கவிதைத் தொகுதியை எடுத்துக்கொண்டு போவேன்.  என்னுடையதையும் இன்னும் பலருடையதும் சேர்த்துதான்.

அவர் அடிக்கடி ஒன்று சொல்வார். "இலவசமாகக் கொடுத்து விடுங்களேன்," என்று.

"அது மட்டும் செய்யக் கூடாது," என்பேன் நான்.

"முதலில் புத்தகம் விற்காவிட்டாலும் பரவாயில்லை.  ஆனால் புத்தகத்தை இலவசமாகக் கொடுத்தால் யாரும் அதைத் தொடக் கூட மாட்டார்கள்."என்பேன்.

"அப்படி என்றால் என்ன செய்வது," என்று கேட்பார்.

"கவலைப் படாதீர்கள், ஒன்றிரண்டு விற்கும். இன்னொரு விதத்தில் உங்கள் புத்தகம் உதவியாக இருக்கிறது," என்பேன்.

"எப்படி?"

"நானே கொஞ்சமாகத்தான் புத்தகமே கொண்டு வருகிறேன்.  ஏதோ கவிதைப் புத்தகங்கள் எல்லாம் நம்மை விட்டுப் போகாமல் இருக்கிறதாலே, நாம் நிறையாப் புத்தகங்கள் கொண்டு வந்ததுபோல் பிரமையை ஏற்படுத்துகிறது,"என்று சொல்வேன்.

அவர் சிரித்துக் கொள்வார்.  ஆனால் உண்மையில் திறமையாக கவிதை எழுதக் கூடியவர் லாவண்யா.  அவர் கவிதைகளில் ஒரு வித கிண்டல் தன்மை பளீரிடும்.

2009 ஆம் ஆண்டில் அவருடைய இரண்டாவது கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்துள்ளோம்.  கவிதைத் தொகுதியின் பெயர் கடலின் மீது ஒரு கையெழுத்து. முன்பெல்லாம் நான் செய்த பெரிய தப்பு 500 பிரதிகள் அச்சடிப்பது.  பின் அந்தத் தப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து 300 பிரதிகள் ஆயிற்று.  இப்போது அதுமாதிரி தப்பே செய்வதில்லை.  ஏன்எனில் 5டி பிரதிகள்தான் கவிதைத் தொகுதியே அடிக்கிறேன்.  கைக்கு அடக்கமாக எங்கே வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு போகலாம்.

லாவண்யாவை அறிமுகப் படுத்தியவர் சேதுராமன் என்ற நண்பர்தான்.  அவர் ஒரு வாசகர்.  எழுத்தாளர் அல்ல.  ஆனால் எழுத்தாளர் நண்பர்.  சுந்தர ராமசாமி மீது அவருக்கு அலாதியான பிரியம் உண்டு.

சுந்தர ராமசாமிக்கு ஒரு விழா நடந்தது (மணி விழா என்று நினைக்கிறேன்) நாகர்கோவிலில்.  சேதுராமன் குடும்பத்தோடு அதாவது மனைவி, மகள், பேரன் பேத்தி என்று நாகர்கோவிலுக்குச் சென்றிருக்கிறார்.  அந்தச் சமயத்தில் சுனாமி வந்து எல்லோரும் இறந்து விட்டார்கள்.  நானும் லாவண்யாவும் சந்திக்கும்போது சேதுராமனைப் பற்றி பேசிக் கொண்டிருப்போம்.

லாவண்யாவின் கவிதை ஒன்றை  படியுங்களேன்.
கடல்

ஒரு தாயைப்போல கடல்
எனக்கு
மீன்களை உணவாய் தந்தது
ஒரு தந்தையைப்போல் கடல்
கட்டுமரத்தில் 
பயணிக்க கற்றுத்தந்தது
ஒரு நண்பனைப் போல கடல்
கார்முகிலிருளிலும்
திசைகளறியச் செய்தது
ஒரு கயவனைப்போல கடல்
என் மனைவி மக்களை
மூசசுத்திணறக் கொன்றது.

லாவண்யாவின் üகடலின் மீது ஒரு கையெழுத்துý என்ற இக் கவிதைத் தொகுதியின் விலை ரூ.30 தான்.  உங்களுக்கு வாங்க வேண்டுமென்று தோன்றினால், ரூ30 ஐ விருட்சம் கணக்கில் அனுப்புங்கள்.  நான் புத்தகத்தை உடனே அனுப்பி வைக்கிறேன்.

ACCOUNT NUMBER No. 462584636 Name of the Account : NAVINA VIRUTCHAM, BANK : INDIAN BANK, ASHOK NAGAR BRANCH. IFSC CODE : IDIB 000A031 

20.4.16

ஒருநாள் பிரமிள் வீட்டிற்கு வந்தார்.


அழகியசிங்கர்


ஒருமுறை பீச் ரயில்வே ஸ்டேஷனலில் உள்ள மின்சார வண்டியில் கவனம் என்ற சிறுபத்திரிகையைப் படித்துக்கொண்டு வந்தேன்.  பொதுவாக எதாவது புத்தகம் அல்லது பத்திரிகை படித்துக்கொண்டு வருவது வழக்கம்.  என் பக்கத்தில் பேசுவதற்கு நண்பர்கள் கிடைத்தால் பேசிக்கொண்டே வருவேன். நான் படிக்கிற பத்திரிகை அந்த மின்சார வண்டியில் வந்து கொண்டிருக்கும் சக பயணிகளுக்கு என்னவென்று தெரியாது. கவனம் என்ற சிற்றேட்டின் முதல் இதழைப் படித்துக்கொண்டு வந்தேன்.  சில தினங்களுக்கு முன்புதான் அந்தப் பத்திரிகையை திருவல்லிக்கேணியில் உள்ள ஆர் ராஜகோபாலன் என்பவரிடமிருந்து வாங்கி வந்திருந்தேன்.
மாம்பலம் வரை என் மின்சார வண்டிப் பயணம் முடிந்து விடும். பின் அங்கிருந்து நடந்து வீட்டிற்குப் போய்விடுவேன்.  பின் அடுத்தநாள் மின்சார வண்டியில் அந்தப் பத்திரிகை அல்லது எதாவது புத்தகம் படிப்பது தொடரும். அப்படி அன்று கவனம் பத்திரிகையைப் படித்துக் கொண்டு வரும்போது எதிரில் ஒருவர் அமர்ந்து இருந்தார். என்னை உற்றுப் பார்த்துக் கொண்டு வந்தார்.  
"உங்கள் கையில் உள்ள பத்திரிகையைத் தர முடியுமா?" என்று கேட்டார்.
நான் கவனம் பத்திரிகையை அவரிடம் கொபடுத்தேன்.  அந்தப் பத்திரிகையைப் பார்த்த அவர், "ஞானக்கூத்தனை உங்களுக்குத் தெரியுமா?"
"கேள்விப்பட்டிருக்கிறேன்...ஆனால் இன்னும் பார்த்ததில்லை," என்றேன்.
"இந்தப் பத்திரிகை எங்கிருந்து வருகிறது?"
"திருவல்லிக்கேணியில்.  கணையாழியில் இந்தப் பத்திரிகைப் பற்றிய செய்தி வந்திருந்தது.  அதை அறிந்து அங்கே போய் வாங்கினேன்," என்றேன்.
"பிரமிளைப் பற்றி தெரியுமா?"
"போன வாரம் பிரஞ்ஞை என்ற சிற்றேடை எங்கள் மாம்பலத்தில் சாரதா ஸ்டோரில் வாங்கினேன்.  மாம்பலத்தில் உள்ள யாரோதான் அந்தப் பத்திரிகையை நடத்துகிறார்கள்.  அதில் வெங்கட்சாமிநாதன் என்பவர், பிரமிளுக்குப் பதில் சொல்வதுபோல் பக்கம் பக்கமாக ஏதோ கட்டுரை எழுதி இருக்கிறார்....எனக்கு ஒன்றும் புரியவில்லை.."
"பிரமிள் என்னை அடிக்கடி பார்க்க வருவார்...உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன்," என்றார்.
அவர் அதன்பின் நான் பணி புரியும் வங்கி முகவரியையும் தொலைபேசி எண்ணையும் வாங்கிக்கொண்டார்.  அவர் பெயர் ஷங்கரலிங்கம் என்பதைத் தெரிவித்துக் கொண்டார்.  அவர் கஸ்டம்ஸில் பணிபுரிவதாகவும் சொன்னார்.
சிலதினங்களில் பிரமிளுடன் ஷங்கரலிங்கம் என்னைப் பார்க்க அலுவலகத்திற்கு வந்தார்.  
அப்படித்தான் எனக்கு பிரமிள் அறிமுகம்.  அதன்பின் அடிக்கடி பிரமிளைச் சந்திப்பேன்.  என் வங்கி ஒரு சொளகரியமான இடத்தில் வீற்றிருந்தது. மின்சார வண்டியைப் பிடித்தால் எளிதாக வங்கிக்கு வந்து விடலாம். பிரமிளைத்தான் நான் அடிக்கடி சந்தித்தேன்.  ஷங்கரலிங்கத்தை நான் பிறகு பார்க்கவே இல்லை. 
பிரமிள்தான் எனக்கு டேவிட் சந்திரசேகர் என்பவரை அறிமுகப்படுத்தினார்.  அவர் பாரிஸில் உள்ள சின்டிக்கேட் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.  அவர் அடிக்கடி எங்கள் வங்கிக்கு வருவார்.  என்னைப் பார்த்துப் பேசாமல் போக மாட்டார்.  
ஒரு முறை அவரிடம், "பிரமிள் எப்படி சமாளிக்கிறார்..எங்கும் வேலைககுப் போகாமல் ஒருவர் எப்படி இருக்க முடியும்," என்று கேட்டேன்.
"என்னைப் போல் சில நண்பர்கள் உதவி செய்வார்கள்," என்றார் அவர்.
அதைக் கேட்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  சிறுபத்திரிகையே புரியவில்லை.  அதிலும் சண்டைப் போடும் சிறுபத்திரிகைகளை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை.  வெங்கட்சாமிநாதன் கட்டுரையைப் புரிந்து கொள்வதற்கு முன் பிரஞ்ஞை பத்திரிகை நின்று விட்டது. யாருக்கும் பணம் கொடுக்க முடியாத சிறு பத்திரிகையில் மட்டும் எழுதும் பிரமிளை யார் அறிவார்?
"எல்லோரும் சேர்ந்து ஒரு குரூப் மாதிரி ஆரம்பித்து மாதச் சம்பளத்தில் கொஞ்சம் கொஞ்சம் பணம் கொடுத்து பிரமிளுக்கு உதவி செய்யலாமே,"என்றேன்.
"அதெல்லாம் சாத்தியமில்லை... யாரையும் திரட்ட முடியாது..அவரவருக்கு தோன்றியதை உதவி செய்யலாம்...நான் அவர் தங்குவதற்கு இடத்திற்கான வாடகையைக் கொடுக்கிறேன்," என்றார்.
இப்படியும் ஒருவரா என்று வியந்தேன்.  எனக்கு அவர் மீது அலாதியான மரியாதை ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.  ஆனால் அவர் பிரமிளைப் பார்த்தால், பிரமிள் என்ன சொல்கிறாரோ அதைத்தான் கேட்பார்.  அவரை எதிர்த்து ஒரு வார்த்தைப் பேச மாட்டார்.
பிரமிள் கண்சிமிட்டியபடி என்னிடம் ஒரு விபரம் சொன்னார்.  "ஏன் டேவிட் உங்க வங்கிக்கு அடிக்கடி வருகிறார் என்பது தெரியுமா?" என்று கேட்டார்.
"தெரியாது," என்றேன்.
"ஒரு பெண்ணைப் பார்க்கத்தான் இங்கு வருகிறார்."
நான் டேவிட்டிடம் இதைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.
ஒருநாள் பிரமிள் என்னிடம் மேல் நோக்கிய பயணம் என்ற கவிதைத் தொகுதியைக் கொடுத்தார்.  நான் உடனே அதற்குப் பணம் கொடுத்து வாங்கினேன்.  பின் நாங்கள் இருவரும் டிபன் சாப்பிடப் போனோம்.
"யார் இந்தக் கவிதைப புத்தகம் அடித்தார்கள்," என்று பிரமிளிடம் கேட்டேன்.
"ஈரோடில் உள்ள நண்பர்தான் அடித்துக் கொடுத்தார்..எல்லாப் புத்தகங்களையும் என்னிடம் கொடுத்து விட்டார்...நான் விற்றாலும அவரிடம் பணம் கொடுக்க வேண்டாம்."
பிரமிளின் அந்தக் கவிதைத் தொகுதியை அவ்வளவு சுலபமாக விற்க முடியாது என்று எனக்குத் தோன்றியது.  
அடுத்த முறை பிரமிள் வந்தபோது கவிதைப் புத்தகத்தைப் படித்தீரா என்று கேட்டார்.
"படித்தேன்...நீளமான கவிதையான மேல் நோககிய பயணம் புரியவில்ல.  என்ன சொல்ல வருகிறீர்கள்?" என்று கேட்டேன்.
"அப்படின்னா வேற எதாவது கவிதைப் புரிந்ததா?" என்று கேட்டார்.
"வண்ணத்துப்பூச்சியும் கடலும் என்ற கவிதைதான் புரிந்தது," என்றேன்.  பிரமிளுக்கு ஆச்சரியம்.  என்னை நம்ப முடியாமல் பார்த்தார்.  அவர் எதாவது கேள்வி கேட்டால் நான் மாட்டிக்கொண்டு விடுவேன் என்று தோன்றியது. 
"டேவிட்டிற்கு நீங்க புரியறதுன்னு சொன்ன கவிதைதான் புரியவில்லை.. அந்த நீண்ட கவிதை அவருக்குப் புரிகிறது," என்றார் பிரமிள்.  
சில ஆண்டுகளுக்குப் பிறகு டேவிட் இறந்து விட்டார்.  டேவிட் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஒருநாள் பிரமிள் வீட்டிற்கு வந்தார்.  என்ன சாதாரண நாளில் வீட்டிற்கு வந்திருக்கிறாரே என்று தோன்றியது.  ஏன் எனில் எப்போதும் சனி அல்லது ஞாயிறில்தான் அவரைச் சந்திப்பது வழக்கம்.  எப்போதும் இல்லை.  பல மாதங்கள் சந்திக்காமல் கூட இருப்போம். 
வீட்டிற்கு வந்தவர், "இன்றைக்கு முக்கியமான நாள்," என்றார்.
"ஏன்?"என்று கேட்டேன்
"என் பிறந்தநாள்," என்றார் பிரமிள்.
அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து, அவர் கையைக் குலுக்கினேன்.  பின் சரவணாபவன் ஓட்டலுக்கு அழைத்துக்கொண்டு போய் டிபன் வாங்கிக் கொடுத்தேன்.
அவர் வீட்டிற்கு வந்து பிறந்தத் தினத்தைச் சொன்னது வேடிக்கையாக இருந்தது.  பொதுவாக நான் யாருடைய பிறந்தத் தினத்தையும் என் பிறந்த தினம் உள்பட ஞாபகத்தில் வைத்துக்கொள்வது கிடையாது. பெரும்பாலும் மறந்து விடும்.  ஆனால் அதன்பின் அவர் பிறந்த தினத்தன்று வீட்டிற்கு வந்ததை இன்னும் கூட ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கிறேன். 

பிரமிளுக்கு நான் புரிந்தது என்று சொன்ன கவிதை இதோ:

வண்ணத்துப்பூச்சியும் கடலும்

சமுத்திரக் கரையின் 
பூந்தோட்டத்து மலர்களிலே
தேன்குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி

வேளை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல் நோக்கிப் பறந்து
நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது.

முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது