31.5.11

தண்டனை !

அன்றைய திங்கட்கிழமையும் வழமை போலவே அலுவலகத்தில் எனது பணிநேரம் முடிந்ததன் பிற்பாடு நேராகப் பக்கத்திலிருந்த மதுபானசாலையில் கொஞ்சம் மதுபானம் அருந்திவிட்டு எனது வீடிருந்த குடியிருப்பிற்குக் காரில் வந்து சேர்ந்தேன். எனது தளத்திற்கான மின்னுயர்த்தியில் என்னுடன் பயணித்த எனது பக்கத்து வீட்டு இளம்பெண் மென்மையாகச் சிரித்து நலம் விசாரித்ததற்கான எனது பதில், மதுவாடை கலந்த ஏப்பத்துடன் வெளியானதில் அவள் முகம் சுளித்தது இன்னும் ஞாபகத்திலிருக்கிறது. எல்லா அழகிகளும் ஒன்று போல மதுவாடையை ஏற்றுக் கொள்பவர்களல்லர். அல்லது அஸ்விதாவைப் போல எல்லா உணர்ச்சிகளையும் முகத்தில் காட்டாவண்ணம் மறைக்கத் தெரிந்தவர்களுமல்லர்.


வீட்டு வாசலில் இரண்டு நாட்களாகத் தண்ணீர் ஊற்றப்படாதிருந்த போகன்வில்லாச் செடிகள் வாடியிருந்தன. வெண்ணிறப்பளிங்குத் தரையில் அதன் செம்மஞ்சள் நிறப்பூக்கள் உதிர்ந்து வீழ்ந்து குப்பையாகிக் கிடந்ததைக் கவனிக்காமல் அஸ்விதா என்ன செய்கிறாளெனக் கோபம் வந்தது. வழமையாக இதன் பராமரிப்பு எல்லாம் அவள் பொறுப்பில்தான். இதில் நீங்கள் ஆச்சரியப்பட ஏதுமில்லை. உங்கள் வீட்டிலும் பெண்கள் இது போன்ற வேலைகளைத் தாங்களே பொறுப்பெடுத்துச் செய்பவர்களாக இருப்பார்கள்.


அழைப்பு மணியை மூன்று முறை விட்டு விட்டு அடித்தேன். அது எனது வருகைக்கான சங்கேதமொழி. அஸ்விதாவிற்கு மட்டுமே தெரிந்த பாஷை. 'ஆறு மாதத்திற்கு முன்னர் உன்னழகிய சங்குக்கழுத்தில் தாலி கட்டிய உன் கட்டிளம் கணவன் வந்திருக்கிறான் ' என அவளிடம் ஓடிப்போயுரைக்குமொலி. வழமையாக ஒரு அழைப்பிலேயே ஓடி வந்து கதவைத்திறந்து ஒதுங்கி வழிவிட்டு நிற்பவள் இன்று நான்கைந்து முறை அழைப்புமணியை அழுத்தியும் திறப்பவளாக இல்லை. எனக்கு மிகவும் எரிச்சலாக வந்தது.


ஒருவேளை தூங்கிக் கொண்டிருப்பாளோ என்றும் நினைத்தேன். ஆனால் இதுவரையில் அவளை எனக்கு முன்னதாகத் தூங்கியவளாக நான் கண்டதில்லை. இறுதிச் சனிக்கிழமை காலை வரையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது எழுதியபடியே இருந்தவள். இப்பொழுதும் ஏதாவது எழுதிக்கொண்டிருப்பாளோ எனத் தோன்றிடினும் அவளுக்கு அதற்கான எந்த எழுதுகருவியையோ, காகிதத் தாள்களையோ நான் விட்டு வைக்கவில்லையே என்பதுவும் நினைவில் வந்தது.


கதவின் பக்கத்திலிருந்த ஒற்றை யன்னல் வழியே கையை நுழைத்து கதவின் உள்கொக்கியை விடுவித்துத் திறந்தேன். எனது வீட்டுக் கதவு திறக்கப்படும் போதும் , மூடப்படும் போதும் சன்னமாக ஒலியெழுப்பும். நீங்கள் கேட்டீர்களானால் அடுத்த முறை வரும் போது ஏதேனும் எண்ணெய்ப் போத்தலை எடுத்து வந்து கதவின் மூலையில் பூசிவிடுவீர்களென நினைக்கிறேன். அந்தளவுக்கு அகோரமான சப்தம் அதிலிருந்து வரும். இந்தச் சத்தத்திற்கு அவள் எங்கிருந்தாலும் வாசலுக்கு வரவேண்டுமென எதிர்பார்த்தேன். ஆனால் வரவில்லை. மிகவும் அழுத்தக்காரி என நினைத்துக் கொண்டேன்.


வீட்டின் உள்கூடத்தில் சனிக்கிழமை காலையில் நான் எரித்த காகிதங்களினதும் அவை சார்ந்தவற்றினதும் கரிக்குவியல் அப்புறப்படுத்தட்டிருந்தமை எனது கோபத்தையும் எரிச்சலையும் மட்டுப்படுத்தியதோடு , தீயின் கரங்கள் கரும்புகை ஓவியங்களாய்ப் பளிங்குத்தரையில் வரைந்திருந்த எல்லாத்தடயங்களையும் அவள் கழுவிச் சுத்தம் செய்திருந்தமை எனக்கு மகிழ்வினைத் தந்தது.


அவள் நல்லவள்தான். அமைதியானவள்தான். எனது முன்னைய காதலிகளைப் போல எனது பணத்தினைக் குறிவைத்து அது வேண்டும், இது வேண்டும் என்று நச்சரித்துக் கேட்பவளல்ல. கண்ணியமானவள். நாணம், ஒழுக்கம் நிறைந்தவளும் கூட. எனது பிரச்சினைகளெல்லாம் அவளது எழுத்துக்கள் சம்பந்தமானதாகவே இருந்தன. எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது எழுதிக் கொண்டே இருந்தாள். எழுத்தின் அத்தனை பரிமாணங்களும் அவளது விரல்களினூடே தாள்களில் கொட்டப்படவேண்டுமென்பது போல ஏதாவது எழுதிக் கொண்டே இருந்தமைதான் எனக்குப் பிடிக்கவேயில்லை.


அவளைப் பெண் பார்த்து நிச்சயிக்கும் முன்பே வீட்டில் சொல்லியிருந்தார்கள். மணப்பெண்ணுக்குப் பொழுதுபோக்கு எழுத்துத்தானென்று கட்டாயம் மணமகனிடம் சொல்லச் சொன்னாளாம். அதை இந்த மணமகன் மிகச் சாதாரணமாகத்தான் எண்ணியிருந்தேன். பணமும் சொத்துக்களும் நிறைந்தவளுக்கு எழுத்து ஒரு பொழுதுபோக்காக இருப்பதென்பது கல்யாணத்தை நிறுத்தும் அளவிற்குப் பெரிய பிரச்சினையாக நான் கருதாததால் பெரியவர்கள் பார்த்து முடிவு செய்த ஒரு சுபயோக சுபதினத்தில் அஸ்விதா என் மனைவியென்றானாள். திருமணத்திற்குப் பின் கொஞ்ச நாட்களுக்குள்ளேயே அவளது ஆறாவது விரலாகப் பேனா இருப்பது புரிந்தது.


எல்லாவற்றையும் எழுதிவந்தாள். நகரும் ஒவ்வொரு கணத்தையும் ஏன் மூச்சையும் கூடத் தன் தினக்குறிப்பேட்டில் பதிந்து வருபவளாக இருந்தாள். கடந்த மாதம் இந்தத் திகதியில், இந்த மணித்தியாலத்தின் இந்த நிமிடத்தில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்களென உங்களால் இப்பொழுது கூற முடியுமா? ஆனால் அவளிடம் கேட்டால் அவளால் முடியும்.


அதற்காக அவள் தனது நேரங்களனைத்தையும் எழுதியபடியேதான் செலவழிக்கிறாளென நீங்கள் எண்ணக்கூடாது. வழமையாக இந்த சமூகத்தில் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் வேலைகளனைத்தையும் ஒழுங்கு தவறாமல் நிறைவேற்றுவாள். ஒவ்வொருநாளும் விதம்விதமாக எனக்குப்பிடித்தமான உணவுகளாகட்டும், அலங்காரமாகட்டும், எல்லாவற்றிலும் மிகச் சிரத்தையெடுத்து அழகாகச் செய்தவள் அவள். சொல்ல மறந்துவிட்டேன். அவளது கண்கள் மிகவும் அழகியவையாக இருந்தன. அந்தக் கண்களின் மாயசக்திதான் என்னை அவள் பக்கம் ஈர்த்தனவோ என்னவோ...?


நான் சொல்லவந்ததை விட்டு எங்கெங்கோ போகிறேனென நினைக்கிறேன். இப்பொழுது என்னைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். எனக்குப் பயங்கரமாகக் கோபம் வரும். எதற்கென்றில்லை. ஒருமுறை வீதியில் ஒளிச்சமிக்ஞை அனுமதிக்காக வாகனத்தை நிறுத்திவைத்துவிட்டுக் காத்திருக்கையில் பக்கத்து வாகனச் சாரதி மிகச்சத்தமாகவும் உல்லாசமாகவும் தனது வானொலியை முடுக்கிவிட்டு இலேசாக நடனமாடிக் கொண்டிருந்ததைப் பார்க்கப்பார்க்க எனக்குக் கோபம் பொங்கிற்று. எனது பக்கத்திலிருந்த அஸ்விதாவின் அழகிய கரத்தினை சிகரெட்டால் சுட்டுத்தான் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளமுடிந்தது.


அவள் மகா பொறுமைசாலி. எனக்கு வரும் கோபத்தையெல்லாம் நான் அவளிடம்தான் காட்டவிழைந்திருக்கிறேன். கையில் கண்டதைத் தூக்கியெறிந்திருக்கிறேன். அவள் எழுதிவைத்த காகிதங்கள் கண்ணில் பட்டால் கிழித்தெறிந்திருக்கிறேன். சில சமயங்களில் அவளைச் சிகரெட்டால் சுட்டிருக்கிறேன். சரி விடுங்கள். முகஞ்சுளிக்கிறீர்கள். அதற்கு மேல் வேண்டாம்.


எனக்கும் அஸ்விதாவிற்குமான இறுதிச்சண்டை கடந்த சனிக்கிழமை காலையில் வந்தது. சண்டையென்றும் சொல்வதற்கில்லை. இருவரும் பலசாலிகளாகவும் இறுதியில் ஒருவர் வெற்றி கொள்வதும் மட்டுமே சண்டையெனப்படுமெனில் அது சண்டையே இல்லை. எனது கரம் மட்டுமே மேலோங்கும் ஒரு கோபத்தின் ஆதிக்கம் எனக் கொள்ளலாம்.சனி, ஞாயிறு வழமை போலவே எனக்கு விடுமுறை தினங்கள். சனியன்று பகல் வரையில் நன்றாகத் தூங்கியெழுவேன். அன்றைய சனியும் வழமை போலவே தூங்கிக் கொண்டிருக்கும் போது விடிகாலையில் தூக்கத்தில் எனது கைபட்டு கட்டிலுக்கருகில் வைத்திருந்த தண்ணீர்ப்பாத்திரம் நிலத்தில் விழுந்து சிதறிய அந்தச் சத்தத்தில் நான் விழித்துக் கொள்ள வேண்டியவனானேன்.


எனது தூக்கம் கலைந்ததற்கான கோபமும் எரிச்சலும் மிதந்து பொங்கிற்று. அருகில் படுத்திருக்க வேண்டிய அவளைத் தேடினால் அங்கு அவள் இருக்கவில்லை. அவள் பெயர் சொல்லி இயன்றவரை சத்தமாகப் பலமுறை அழைத்துப் பார்த்தும் பயனற்ற காரணத்தால் மூடியிருந்த என்னறைக் கதவைத் திறந்து அவளைத் தேடினேன். அவள் மாடியின் வெளிப்புற வராந்தா ஊஞ்சலில் அமர்ந்து தன் நீண்ட ஈரக் கூந்தலை உலர்த்தியவளாக ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள்.


மிதமிஞ்சிய கோபத்தோடு அவளை நெருங்கிய நான் அவளது கன்னத்தில் அறைந்ததோடு நிற்காமல் அவளது கையிலிருந்த தினக்குறிப்பேடு, மையூற்றும் பேனா, அதன் நீலக் கறை துடைக்கும் வெள்ளைத் துணி, இன்னும் அவ்வளவு காலமாக அவள் எழுதிச் சேர்த்து வைத்திருந்த அத்தனைக் காகிதங்களையும் சேகரித்து வீட்டின் உள்கூடத்தில் போட்டு எரித்தேன். அதனை எரிக்கும் வரையில் அவள் கண்ணீர் நிறைந்த கண்களோடும் , சிவந்த கன்னத்தோடும் எனது செய்கையைத் தடுக்க முனைந்தவாறு என் பின்னாலேயே சுற்றிச் சுற்றி வந்ததுவும் நான் அவளை உதறியதில் இரு முறை வீசப்பட்டுப் போய் நிலத்தில் விழுந்ததுவும் இன்னும் நினைவிலிருக்கிறது.


உங்கள் தோளில் ஒரு எறும்பு ஊர்கிறது பாருங்கள். அதனைத் தட்டிவிடுங்கள். ஆம். இந்த எறும்பைப் போலத்தான் அன்று அவளும் தூரப்போய் விழுந்தாள். கோபத்தின் வெறியில் அன்று நான் முற்றிலுமாக என்னிலை மறந்தவனாக இருந்தேன். பாருங்கள். இப்பொழுது கூட உங்களிடம் அவள் வரையும் ஓவியங்களைப் பற்றிச் சொல்லமறந்து விட்டேன். அவள் மிகவும் அழகாக ஓவியங்களும் வரைவாள். திருமணமான இரண்டாவது நாள் ஒரு மாலை வேளையில் அவள் வரைந்த ஓவியங்களை எனக்குக் காட்டினாள். அவை மிகவும் அழகானவையாகவும், வண்ணமயமான காட்சிகளாகவுமிருந்தன. ஆனால் நான் எனக்கவை பிடிக்காதவை போன்ற பாவனையோடு முகத்தினைத் திருப்பிக் கொண்டேன். அன்றிலிருந்துதான் அவள் வரைவதை விட்டிருக்க வேண்டும்.


அன்று அந்தக் காகிதக் குவியல்கள் முற்றிலுமாக எரிந்து முடிக்கும்வரை அங்கேயே நின்றிருந்தேன். நிலத்தில் விழுந்த இடத்தில் உட்கார்ந்தவாறே எரிவதைப் பார்த்துச் சோர்ந்திருந்தாள் அவள். சிவந்த கன்னத்தினூடே கண்ணீர் நிற்காமல் வழிந்தபடி இருந்தது. அது முற்றாக எரிந்து முடிந்ததும் நான் எனது தூக்கத்தைத் தொடரப் போனேன். அறைக் கதவைத் தாழ்ப்பாளிட்டுக்கொண்டு அன்று நிம்மதியாக உறங்கினேன்.


அவள் சிறிது நேரம் அழுதுகொண்டிருந்திருப்பாள். நான் எழும்பிக் குளித்து முடிக்கையில் சாப்பாட்டு மேசையின் மீது எனக்குப் பிடித்தமான உணவு காத்திருந்தது. அவள் எழுதுவதையும், அந்தக் கரிக்குவியலை அப்புறப்படுத்துவதையும் தவிர்ந்த மற்ற எல்லாக் காரியங்களையும் வழமையைப் போலவே மிகவும் அமைதியாகவும் இயல்பாகவும் நிறைவேற்றினாள். அந்தக் கரிக்குவியலை அப்புறப்படுத்த நான் சொல்லவுமில்லை. அவளாக அப்புறப்படுத்துவாளென்றே எண்ணியிருந்தேன்.


அன்றைய மதிய உணவிற்குப் பின்னரும் வழமையான ஒவ்வொரு சனிக்கிழமையைப் போன்றே எனது பெண் சினேகிதியைச் சந்திக்கச் சென்று அவளுடன் தங்கியிருந்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பும் போதும் அந்தக் கரிக்குவியல் அப்படியே இருந்தது. மிகுந்த களைப்புடனிருந்த நான், அஸ்விதா எனக்காகச் செய்திருந்த இரவுச் சமையலையும் புறக்கணித்தவனாகத் தூங்கி எழுகையில் எனது காலுறைகள் அகற்றப்பட்டிருப்பதையும் அலுவலகத்துக்கான ஆடை நேர்த்தியாக மடித்து வைக்கப்பட்டிருப்பதையும் கண்டேன். அன்று காலையில் வழமையாகக் கிளம்பும் நேரத்துக்கு முன்னதாகவே கிளம்பவேண்டியவனாக இருந்தேன். எனது கைத்தொலைபேசியை சினேகிதி வீட்டில் மறந்து விட்டுவந்திருந்தேன். அதை எடுத்துக் கொண்டு அலுவலகம் கிளம்புவதாகத் திட்டம்.


காலையில் நான் வெளியேறும் போது அகற்றப்படாமலிருந்த கரிக்குவியல் இப்பொழுது சுத்தமாக அப்புறப்படுத்தப்பட்டிருந்தமை எனக்கு மகிழ்வினைத் தந்தது. வழமையாக எனது ஒவ்வொரு அசைவிற்கும் என் முன்னே வந்து நிற்பவள் அன்று முன்னாலேயே வராதது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை வரவழைத்தது. முதன்முறையாக மெல்லிய குரலில் அவளை வீடு முழுவதும் தேடத் தொடங்கினேன். அவளுக்குப் பிடித்தமான ஊஞ்சலிலோ, சமையலறையிலோ கூட அவளிருக்கவில்லை. இந்த இடத்தில் இதனையும் நான் சொல்ல வேண்டும். என் முதல் காதலி பரிசளித்து நான் ஆசையாக வளர்த்துவந்த என் ஒற்றைக் கிளியை அஸ்விதா கூண்டை விட்டும் திறந்து பறக்கவிட்டிருந்தாள். அதனாலேயே எனக்கு அவள் மேல் மீண்டும் அளவுகடந்த கோபம் வந்தது.


மிகக் கடுமையாக வீடுமுழுதும் அவள் பெயரெதிரொலிக்கச் சத்தமெழுப்பியபடி படுக்கையறையைத் திறந்த போது அவள் அழகிய விழிகளை மூடிப் படுக்கையிலிருப்பது தெரிந்தது. நான் அவ்வளவு பலமாகச் சத்தமெழுப்பியும் எழும்பாததால் கோபம் மிதமிஞ்சி அவளை நோக்கிக் கையில் அகப்பட்ட பூச்சாடியால் வீசியடித்தேன். அது அவள் நெற்றியில் பட்டுக் கீழே விழுந்து பெருஞ்சத்தத்தோடு சிதறியது. ஆனால் அவளிடமிருந்து எந்தச் சலனமுமில்லை. எனக்கு வந்த ஆத்திரத்தில் அவளருகே போய் பலங்கொண்ட மட்டும் பிடித்துலுக்கினேன்.


அவள் மிகவும் குளிர்ந்து போனவளாக இருந்தாள். இதழோரமாக வெண்ணிற நுரை வழிந்து காய்ந்து போயிருந்தது. மூக்கினருகே விரல் வைத்துப் பார்த்தேன். இறுதியாக, அவள் இறந்து போயிருந்தது புரிந்தது. மனதின் மூலையில் அதிர்ச்சி தாக்க உடனே எனது பெண் சினேகிதிக்குத் தொலைபேசி, விபரத்தைச் சொன்னேன். சனியன் ஒழிந்துவிட்டதெனச் சொல்லி அட்டகாசமாகச் சிரித்தவள் உடனடியாக என்னைக் காவல்துறைக்கு அறிவிக்கும் படியும் இல்லாவிட்டால் பின்னால் சிக்கல் வருமென்றும் பணித்தாள். அவள் சொன்னபடியே காவல்துறைக்கு அறிவித்ததுதான் எனது தப்பாகப் போயிற்று.


அவர்கள் வந்து பல விசாரணைகள் மூலம் என்னைத் திணறடித்தனர். நான் இது தற்கொலையென உறுதிபடச் சொன்ன போதும் இறப்பிற்கான காரணம் எதையும் எழுதி வைக்காமல் இறந்துபோனதால் கொலையாக இருக்கக் கூடுமெனச் சொல்லி என்னைச் சந்தேகித்தனர். பாவி.படுபாவி.. 'வாழப்பிடிக்கவில்லை. ஆதலால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன்' என ஒரு வரியெழுதி வைத்துவிட்டுச் செத்தொழிந்திருந்தாலென்ன? மரணவிசாரணை அறிக்கைகளும், பிரேதப் பரிசோதனை அறிக்கைகளும் எனக்கெதிராகவே இருந்தன.


நான் அவளைத் தள்ளிவிட்டு விழுந்த அன்று அவளது வலது கை விரல்களிலொன்று எலும்பு முறிவிற்காளாகியிருந்திருக்கிறது. இரண்டு நாட்களாக அவள் எதுவும் சாப்பிடாமல் பட்டினியிலிருந்திருக்கிறாள். விசாரணையின் போது நான் காலையில் வீட்டிலிருந்து சென்றதாகப் பொய்யாய்ச் சொன்ன நேரத்துக்குச் சற்றுமுன்னர்தான் அவள் விஷத்தினை அருந்தியிருந்திருக்கிறாள். கதவின் தாழ்ப்பாள்க் கொக்கியில் இறுதியாப் பதிந்த கைரேகை எனதாக இருந்ததோடு , இறுதியாக பிணத்தின் தலையில் பூச்சாடியால் அடித்திருந்ததும் என்னைக் கொலைகாரனெனத் தீர்ப்பெழுதப் போதுமானதாக இருக்கிறது. எனினும் இன்னும் தீர்ப்பு வரவில்லை. அதுவரையில் விசாரணைக் கைதியாகச் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறேன்.


எனது பெண் சினேகிதி சாட்சியங்களோடு எனக்கு உதவிக்கு வருவாளென நினைத்தேன். ஆனால் அவள் இதுவரை வரவில்லை. அவள் தனது கணவனுக்குப் பயந்திருக்கக் கூடும். எனது சிறைத் தோழனே... இப்பொழுது நீங்கள் சொல்லுங்கள். என்ன குற்றத்தைச் செய்துவிட்டு நீங்கள் சிறையிலிருக்கிறீர்கள் ?


மீண்டுமொன்றை ஆரம்பத்தில் சொல்ல மறந்துவிட்டேன். அஸ்விதா ஒரு பிறவி ஊமைப் பெண்.

29.5.11

கண்ணீரின் புனிதம்

உப்பெல்லாம் கண்ணீரில்

கரைந்து விடுவதால்

உணர்வுகளும் கண்ணீரோடு

கரைந்து விடுமாவெனத்

தெரியவில்லை.


கன்னத்தில் சொட்டுகிற

கண்ணீர் சுத்தமானதா

அசுத்தம் கலந்ததாவென

அறிய இயலவில்லை.

தோண்டி விட்டார்களா

ஊற்றாய் ஊறி

வந்ததாவெனவும்

தெரியவில்லை.


ஆனால் அனுதாப

அலைகளால்

அனைவரையும்

சுனாமியாய் அபகரிக்க

இயல்கிறது சில துளி

சொட்டும் கண்ணீரால்.

நிசி

இலைகளற்று
மூளியாய் நிற்கும் மரம்
பீதியைக் கிளப்பியது
கும்மிருட்டில்
கள்வனைக் கண்டது போல்
வெற்று வெளியைப்
பார்த்து
நாய்கள் குரைத்துக்
கொண்டிருந்தன
தாகம் தணிக்க
அடுக்களைக்கு
போன என்னை
வரவேற்றது
திருட்டுப்பூனை
தூக்கம் வராத
இரவுகளில்
மொட்டை மாடியில்
வானம் பார்த்துக் கிடப்பது
வழக்கம்
படுக்கையில்
தலையணை மட்டும்
இருக்கட்டும்
மனதிற்கு சஞ்சலம் தரும்
நிகழ்வுகள் வேண்டாமென்று
வானம் போதனை செய்தது
தூக்கம் வராமல்
புரண்டு படுத்துக் கொண்டிருக்கும்
எல்லோரிடமும்
எப்படி இந்தச்
சங்கதியை சொல்வது
எனத் தெரியாமல்
பள்ளிக்கூட மாணவனைப் போல்
மலங்க மலங்க
விழித்தேன் நான்.

உனை ஈர்க்காவொரு மழையின் பாடல்

நான் மழை

ஈரலிப்பாக உனைச் சூழப் படர்கிறேன்

உன் பழங்கால ஞாபகங்களை

ஒரு கோழியின் நகங்களாய்க் கிளறுகிறேன்


எனை மறந்து

சிறுவயதுக் காகிதக் கப்பலும், வெள்ள வாசனையும்

குடை மறந்த கணங்களும், இழந்த காதலுமென

தொன்ம நினைவுகளில் மூழ்கிறாய்

ஆனாலும்

உன் முன்னால் உனைச் சூழச்

சடசடத்துப் பெய்தபடியே இருக்கிறேன்


உனைக் காண்பவர்க்கெலாம்

நீயெனைத்தான் சுவாரஸ்யமாய்க்

கவனித்தபடியிருக்கிறாயெனத் தோன்றும்

எனக்குள்ளிருக்கும் உன்

மழைக்கால நினைவுகளைத்தான்

நீ மீட்கிறாயென

எனை உணரவைக்கிறது

எனது தூய்மை மட்டும்


இன்னும் சில கணங்களில்

ஒலிச் சலனங்களை நிறுத்திக்

குட்டைகளாய்த் தேங்கி நிற்க

நான் நகர்வேன்


சேறடித்து நகரும் வாகனச்சக்கரத்தை நோக்கி

'அடச்சீ..நீயெல்லாம் ஒரு மனிதனா?'

எனக் கோபத்தில் நீ அதிர்வாய்


எனைத் தனியே ரசிக்கத் தெரியாத

நீ மட்டும் மனிதனா என்ன?

27.5.11

உப்பு

_தலைவர்,மனிதவள மேம்பாட்டுத் துறை. பளிச்செனக் கண்ணில் பட்டது. அறைக் கதவின் மீதிருந்த ப்ளாஸ்டிக் பலகை. பலகைக்கு மேலே üதற்காலிகம்ý என ஸ்கெட்ச் பேனாவில் எழுதப்பட்ட மஞ்சள் காகிதம் ஒட்டப்பட்டிருந்தது.

கதவை மெல்லத் திறந்தாள். ரூம் ஸ்ப்ரே மணந்தது. சிகரெட் வாடையடித்தது. செவ்வக அறை. கதவு அறையின் ஒரு ஓரத்திலிருந்தது. மறுமூலையில் அந்த அதிகாரி உட்கார்ந்திருந்தார்.

"நான் உள்ளே வரலாமா...?"
"வெல்கம்"
அறைக்குள் நுழைந்தான். மூலைவாட்டில் குழலூதும் கண்ணன் பொம்மையாய் நின்றுகொண்டிருந்தான்.
"நான் மதியழகன்"
"வளையாபதி......"
கரகரத்த பெரியகுரல். கைகுலுக்கினான். விரல்கள் லேசாய் வலித்தன.
சிகரெட்டிருந்த இடதுகையில் நாற்காலியைக் காட்டி உட்காரச் சொன்னார்.
தடித்த கண்ணாடிக்குள்ளிருந்து இரண்டு கோலிக்குண்டு கண்கள் தன்னை ஊடுருவுவதை உணர்ந்தான். மறுவிநாடி எதிரேயிருந்த கணினியை இயக்கினார். ஒரு நிமிடம் ஸ்கிரீனில் வருவதை நன்றாகப் பார்த்துக்கொண்டு மீண்டும் பேசத் தொடங்கினார்.
"மிஸ்டர் மதியழகன். அப்பாவைச் சந்தித்தீர்களா?.."
திகைத்தான். கணத்தில் சுதாரித்துக் கொண்டவர் "ஐ மீன் உத்தப்பா..." என்றார்.
"உத்தப்பா இன்று அலுவலக வேலையா வெளியே சென்றிருப்பதால் உங்களைச் சந்திக்கச் சொல்லி ரிசப்ஷனில் சொன்னார்கள்."
வெள்ளையுடையணிந்த ஊழியர் ஒருவர் அறைக்குள் வந்தார்.
"கோபால் உத்தப்பாவை எங்கிருந்தாலும் உடனே வரச்சொல்.."
"திருப்பதிக்கு போன் போடு சார். டி.எம்.டி. குடும்பம் பாலாஜி தரிசனத்துக்கு வந்திருக்கு. வி.ஐ.பி. தரிசனம் ஏற்பாடு செய்யப் போயிருக்கார். ஜி.எம் உத்தரவு.

2
சாரங்கன் உள்ளே வந்ததும் அறிமுகப்படுத்தியவர் ஆபீசருக்கான நியமனப் பத்திரம், இரகசியப் பத்திரம், அடையாள அட்டை இத்யாதிகளைத் தயார் செய்யச் சொல்லி உத்தரவிட்டார். அறிமுகப்படுத்தினார். üமிஸ்டர் மதியழகனை அழைத்துக் கொண்டு போங்கள்" என்றார்.
"சார் உங்களுக்கு தெரியாதா? ம்யூசிகல் சேர். உங்க ரூம்லேயே இருக்கட்டும். நான் எல்லாவற்றையும் ரெடி பண்ணிக்கிட்டு வர்ரேன்...."
வளையாபதியின் பதிலுக்குக் காத்திராமல் சாரங்கன் வெளியேறியதைக் கவனித்த மதியழகனின் கவனத்தை ஈர்த்தது கோப்பொன்று அருகாமையில் இருந்த அகன்ற ஸ்டூலில் உட்கார்ந்த சப்தம்.
"மிஸ்டர் மதியழகன், பயிற்சி முகாம் எப்படியிருந்தது..?"
"சுவாரசியமாக இருந்தது...."
"பயனுள்ளதாக இல்லையா?..."
"இனிமேல்தான் தெரியுமென்று நினைக்கிறேன்..."
தடித்த கண்ணாடிக்குள்ளிருந்த இரண்டு கோலிக்குண்டுக் கண்கள் தன்னை ஊடுருவுவதை உணர்ந்த மதியழகன் கவனமாயிருந்தான்.
"நீங்கள் அதிர்ஷ்டசாலியெனச் சொன்னார்களா?..."
"சொன்னார்கள்...."
"எதனாலென்று சொன்னார்களா....?"
"இந்தக் கம்பெனி இந்தியாவின் மிகப்பெரிய நிதிநிறுவனங்களில் ஒன்று எனச் சொன்னார்கள்.."
"மனிதவள மேம்பாட்டுத் துறையைப் பற்றி ஒரு அமர் வேறுமிருந்ததா...?
"இல்லை சார்...."
தண்ணீர் குடித்தார். தண்ணீருக்கடுத்து சிகரெட். சிகரெட்டுக்கடுத்து தொலைபேசி. "நான் பார்க்க வேண்டிய முக்கியமான பேப்பர்கள் வேறு ஏதானுமிருக்கிறதா...?"
எதிர்முனையிலிருந்து இல்லையெனப் பதில் வந்தது. தொலைபேசியில் யாரையோ விரட்டிக் கொண்டிருந்தார். "நாளை காலையில் உங்கள் சம்பந்தப்பட்ட பேப்பர்கள் அத்தனையும் என் மேஜைமீதிருக்க வேண்டும். என்னைக் கடுமையாக நடந்து கொள்ள நிர்பந்திக்காதீர்கள்."
சிகரெட் துண்டு சாம்பல் கோப்பைக்குச் சென்றது. கண்ணாடியைக் கழற்றி மேஜைமேல் வைத்தார். முழுக்கை சட்டையை முழங்கைக்கு மடித்துக் கொண்டவர் "மிஸ்டர் மதியழகன் சூடாய் ஒரு டீ சாப்பிடலாமா?" கேட்டார். தலையாட்டினான்.
தேநீர் மிகவும் கொதித்தது மதியழகனால் அருந்த முடியவில்லை. கொஞ்சமும் அசராமல் வளையாபதி டீ அருந்திக் கொண்டிருந்தார்.
"சாரங்கன் ஆடி அசைந்துவர அரைமணி நேரமாகும். எதையும் முழுமையாகச் செய்வார். ஆனால் மெதுவாகத்தான் செய்வார்...அதுவரை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்...?"
"நான் வேண்டுமென்றால் வெளியில் காத்திருக்கட்டுமா?" எனக்கேட்டான்.
தடித்த கண்ணாடிக்குள்ளிலிருந்து இரண்டு கோலிக் குண்டுக் கண்கள் அவனை ஊடுருவின.
"வேண்டாம். உங்கள் நேரத்தை வீணடிப்பீர்கள். மனிதவள மேம்பாட்டுத் துறையைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம் தருகிறேன், என்ன...?
"மகிழ்ச்சி சார்..." என்றான்.
தொலைபேசி ஒலித்தது. ரிசீவரையெடுத்து மேஜைமேல் வைத்தார். வெளியே சென்றிருந்த கோபால் உள்ளே வந்தார். வளையாபதிக்கு அருகே நின்று தலையைச் சொரிந்தார். நூறு ரூபாய் கடன் கேட்டார்.
"சம்பளம் வாங்கி சாராயம் குடி.. கடன் வாங்கி கள்ளுகுடி நீ எப்பய்யா திருந்துவே..?
நூறு ரூபாய் கை மாறிற்று.
"ஷல் வீ ஸ்டார்ட்.? மிஸ்டர் மதியழகன்.."
"யெஸ் சார்..." என்றான்.
"மிஸ்டர் மதியழகன். நீங்கள் ஒரு ஆபீசராய் இந்த நிறுவனத்தில் சேர்கிறீர்கள். ஒரு ஆபிசரிடம் நிர்வாகம் என்ன எதிர்பார்க்கிறதென்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நெம்பர் ஒன். கீழ்ப்படிதல், நெம்பர் டூ. தொழில்திறமை. நெம்பர் த்ரீ. உற்பத்தித் திறன். நெம்பர் ஃபோர் தொழில் நேர்மை. நெம்பர் ஃபைவ். நிர்வாகத் திறமை. பஞ்சதந்திரங்கள். புரிந்ததா..?
ஆங்கிலச் சரளத்தில் ஒரு கணம் பிரமித்தவாறே புரிந்ததென்றான் மதியழகன். தொலைபேசி இருப்பிடம் சேர்ந்தது.
"மனிதவள மேம்பாட்டுத் துறையின் மூன்று முக்கியமான தியரிகளை உங்களுக்குச் சொல்லப்போகிறேன். முதலாவது. டடப டங்ழ்ங்ய்ய்ண்ஹப் டழ்ங்ள்ள்ன்ழ்ங் பட்ங்ர்ழ்ஹ்..."
அப்படின்னா என்ன? ஒரு வேலையை செய்ய எட்டுப்பேர் தேவைப்படுகிறது. ஆனால் அந்த வேலையை ஐந்துபேர் செய்யவேண்டும். வேலைச்சுமை அந்த ஐந்துபேரையும் வேகமாக வேலை செய்யவைக்கிறது. ஐந்து பேர் எட்டுபேர் வேலையை செய்யும்போது ஊழியர்களின் உற்பத்தித் திறன் கூடுகிறது. நிர்வாகத்துக்கு மூன்றுபேருடைய சம்பளம் லாபமாகிறது. அந்த லாபம் கணினி வாங்க, புதுக்கிளை திறக்கச் செய்ய வேண்டிய செலவுகளுக்குப் பயன்படுகிறது. புரிந்ததா..?
üதலையாட்டினான்ý
தொலைபேசி ஒலித்தது. எதிர்முனையிலிருந்து வந்த குரல் எதற்கோ கெஞ்சியது. "முதல் கேண்டிடேட் இன்னிக்குத்தான் வந்திருக்கார். அடுத்த வாரம் அனுப்பிச்சுடறேன்..."
மறுமுனையில் தொணதொணத்தது குரல்.
"காளியப்பன். என்னை நம்புங்கள். உறுதியாக நம்புங்கள்.."
தொலைபேசியை வைத்துவிட்டுத் தொடர்ந்தார்.
"மிஸ்டர் மதியழகன். இரண்டாவது தியரி. ஊ.ஊ.ப. அதாவது ஐந்து விரல்கள் தியரி. நம் கையின் ஐந்து விரல்களும் ஒன்றாயிருக்கிறதா...?
"இல்லை சார்.."
"ஊழியர்கள் அதுபோலத்தான். குதிரை கொள்ளென்றால் வாயைத் திறக்கும். கடிவாளமென்றால் வாயை மூடிக்கொள்ளும். ஊழியர்கள் அப்படித்தான் இருப்பார்கள். ஆனால் ஒரு ஆபீசர் அனைவரிடமும் வேலை வாங்கத் தெரிந்திருக்க வேண்டும். ஒருவனைக் கொஞ்ச வேண்டும். ஒருவனை விரட்ட வேண்டும். ஒருவனுக்குத் தார்க்குச்சி போட்டுக்கொண்டே இருக்க வேண்டும்... ஒருவனுக்கு கடன் கொடுக்க வேண்டும். இப்ப நான் கோபாலுக்கு கொடுத்தேனில்லையா? அதுபோல. சுருக்கமாக ஆடறமாட்டை ஆடிக் கறக்கணும். பாடறமாட்டைப் பாடி கறக்கணும்.
அங்கிருந்த பீரோவில் உள்ளிருந்த கோப்புகளை ஒழுங்குபடுத்திருந்த கோபால் குறுக்கிட்டு "கோபால் கறவை நின் ன மாடெல்லாமிருக்குது. அதையெல்லாம் எப்படிக் கறப்பியாம்...." என்றதும் "கோபால் நீ போய் ஒரு டீ சாப்பிட்டு எங்களுக்கு ரெண்டு டீ வாங்கிட்டு வா..." என்று வெட்டினார்.
"மதியழகன் சொல்ல மறந்துட்டேன். இந்த ஊ.ஊ.ப. தியரியை உருவாக்கியவர் நம் பொதுமேலாளர். இது பற்றி ஒரு தீசிஸ் எழுதியிருக்கார். ஐ.ஐ.எம் அகமதாபாத் டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள்..."
மதியழகனுக்குச் சிரிப்பு வந்தது. சிரிப்பை மறைக்க கைக்குட்டையையெடுத்து முகம் துடைத்துக் கொண்டான்.
கோபால் டீ வாங்கிவர வெளியே சென்றதும், வளையாபதி தொடர்ந்தார்.
"ஒரு நாள் ஆடினால் கறக்கிற மாடு இன்னொரு நாள் கறக்காது. பாடினாக் கறக்கிற மாடு பாடினாக் கறக்காது. உதைக்கும்.
"அப்போது என்ன சார் செய்வது..?" மதியழகன் இடைமறித்துக் கேட்டான்.
அட்டகாசமான குரலில் சிரித்தார். பழைய கால பார்த்திபன் கனவு படத்தில் பார்த்த கபாலருத்திர பைரவனை நினைத்துக் கொண்டான். "உங்களுக்கு ஊ.ஊ.ப. புரிந்துவிட்டது. அடுத்தது கஇஎக
தியரி..."
கணினியை மீண்டும் இயக்கியவர் üதிம்மாச்சிபுரம்ý எனப் படித்தார். மதியழகனின் ஊர் அது. நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்.
"அப்படின்னா கஇஎக தியரி உங்களுக்குச் சுலபமாகப் புரியும் இந்தத் தியரியின் சொந்தக்காரர் இந்தக் கம்பெனியின் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர். மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் இந்தத் தியரி
ங.ஆ.அ. பாடபுத்தகங்களில் இடம் பெற்றிருக்கிறது. அதாவது. கண்ஸ்ரீந்ண்ய்ஞ் இர்ஜ் எழ்ஹக்ஷ்ண்ய்ஞ் இர்ஜ் சின்ட்ரோம். மேயற மாட்டை நக்கற மாடு..." நிறுத்தினார்.
"கெடுக்கும் சார்..." மதியழகன் கவனமாயிருப்பதைக் காட்டிக் கொண்டான்.
"அது எல்லாருக்கும் தெரியும். ஆனால் வேலை முடங்காமல் நடக்க வேண்டுமே. அதற்கென்ன செய்வது? அதற்கு நம் உ.ஈ, சில தீர்வுகளைச் சொல்கிறார். அதில் ஒன்று. வேலை செய்பவனுக்கு மேலும் வேலை கொடுக்க வேண்டும். வேலை செய்யாதவனுக்கு வசதிக்கேற்றாற்போல மசால்வடை ஜர்தாபீடா,பான்பராக், சிகரெட் வாங்கித் தரலாம். நிர்வாகத் திறமையென்பது வேலை செய்யாதவனிடம் வேலை வாங்குவது - அல்ல. பிரச்சினைகள் வரும். அதைவிட வேலை செய்பவனிடம் அதிக வேலை வாங்குவதுதான். உண்மையான நிர்வாகத் திறமையென்பது. நம் உ.ஈ யின் நிர்வாக உத்தி.... நம் உ.ஈ நிர்வாகத் திறமைக்குப் பேர்மமானவர் .
கோபால் டீ கொணர்ந்திருந்தார். கொதிநிலைத் தேநீர். வளையாபதி குடித்துக் கொண்டிருந்தார். சாரங்கன் நியமனக் கடிதம், அடையாள அட்டை, இரகசியக் காப்பு ஒப்பந்தம். அனைத்தையும் தயாராகக் கொண்டுவந்திருந்தார்.
மதியழகன் சிரமப்பட்டுத் தேநீரைச் சூடாகக் குடித்தான்.
ஒவ்வொரு தாளாய் சரிபார்த்துக் கையைழுத்திட்டார் வளையாபதி. எல்லாத் தாள்களையும் அவருக்குப் பின்னாலிருந்த குழலூதும் கண்ணனின் காலடியில் வைத்துக் கண்ணைமூடிக் üகிருஷ்ணார்ப்பணம்ý எனச் சொல்லி அனைத்தையும் ஒரு கவரில் போட்டு மதியழகனிடம் தந்தார்.
மதியழகன் எழுந்து நின்று பணிவுடன் வாங்கிக் கொண்டான்.
"திங்கட்கிழமை காலை கம்பெனியின் பொன்னேரி கிளையில் பணிக்குச் சேருங்கள். வாழ்த்துகள்.."
மதியழகனுடன் கை குலுக்கினார். நன்றி சொன்னான். சாரங்கனுக்கும் நன்றி சொன்னான்.
"இந்தியாவின் மிகப்பெரிய நிதிநிறுவனத்தில் அதிகாரியாய் வாழ்க்கையைத் துவங்குகிறீர்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். இன்றிலிருந்து சாப்பாட்டில் உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள். என்றார் சாரங்கன். வளையாபதி ஆமோதிக்கிறாற்போலத் தலையசைத்தான்.

22.5.11

சாய்பாபா


வெற்றிகரமாக விளங்கும் எந்தவொரு கோட்பாடும் அதன் வளர்ச்சிப்போக்கில் மூன்று நிலைகளைக் கொண்டிருப்பதாக வில்லியம் ஜேம்ஸ் கூறுவார். முதல் நிலையில் அக்கோட்பாடு அபத்தமானது என்று தாக்கப்படும். இரண்டாம் நிலையில் அது பழக்கப்பட்ட ஒன்றாகவும் உண்மை என்று ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் கருதப்படும். இறுதி நிலையில் அதன் அத்தியாவசியம் உணரப்பட்டு அதைத் தாங்களே கண்டுபிடித்தது போன்று அதன் விமர்சகர்களும் சீராட்டுவார்கள்.

சத்ய சாய்பாபாவை ஒரு கோட்பாடு என்கிற அளவில் சுருக்கிக்கொண்டு பார்க்க முடியாதெனினும் அவரும் இந்த மூன்று நிலைகளையும் கடக்க வேண்டியிருந்தது. ஷிர்டி சாய்பாபா இறந்து எட்டு வருடங்களுக்குப் பிறகு 1926இல் பிறந்த சத்யநாராயண ராஜூ தனது பதினான்காம் வயதில் தான் ஷிர்டி பாபாவின் மறு அவதாரமான சாய்பாபா என அறிவித்தபொழுது அவர் சிற்சில அதிசயங்களையும் புரிய ஆரம்பித்திருந்தார். தன் நண்பர்களுக்கு திடீரென லட்டுகள், மாம்பழங்கள் ஆகியனவற்றை வரவழைத்துக் கொடுப்பது போன்றவை மட்டுமல்லாது ஷிர்டி பாபா தன் பக்தர்களிடம் என்னவெல்லாம் சொன்னாரோ அவற்றைஎல்லாம் அவர்களிடமே நினைவூட்டி அசரவைத்தார் சாய்பாபா.

சாய்பாபாவிற்கு நாளும் கிடைத்து வந்த புகழ் அவருக்குப் பலத்த எதிரியாகியது. அவரைப் பற்றி ஒன்றும் அறிந்து கொள்ளாமலேயே அவர்மீது தாக்குதல்களைத் தொடுத்தனர் அவர் நடத்திக் காட்டிய அதியசயங்கள் பழிக்கப்பட்டன. தன்னை நாடுபவர்களின் குறைகள் அனைத்தையும், அவை எதுவாயினும் நிவர்த்திக்கும் சக்தி படைத்திருந்தார். தீராத வியாதியாகட்டும், மனக்கவலையாகட்டும், பொருள் பதவி ஆகியன அடைவதற்கு எதிர்படும் இடர்பாடுகளாகட்டும் எல்லாம் அவரை சந்தித்த விநாடியில் தொலைந்து போனதாக பக்தர்கள் நம்பினார்கள். எதிர்ப்புகள் மங்கத்தொடங்கின. பாபாவின் புகழ் இந்தியா மட்டுமின்றி உலகின் பலநாடுகளிலும் பரவத் தொடங்கிற்று. அவரது சமூகப் பணிகள் பலரையும் பயனடைய வைத்தன. ஆத்திகர்கள் நாத்திகர்கள் என்றில்லாமல் எல்லோரும் அவரை மரியாதையுடன் நேசிக்கத் தொடங்கினர். எண்பத்து ஐந்தாவது வயதில் அவர் இறந்தபொழுது அந்த நேசத்தின் பல பரிமாணங்களையும் பார்க்க முடிந்தது.

பாபா சகமனிதர்களுக்கு ஆற்றிய சேவைகளை மனதாரப் பாராட்டும் பண்பு படைத்தவர்களுள் அவரது சித்து வேலைகளை விரும்பாதவர்கள் அநேகர் உண்டு. இவர்கள்தான் பாபாவின் ஆரம்பகால பகுத்தறிவு விமர்சகர்கள். இப்பொழுது விமர்சனம் தவிர்த்த தொனியில் ஆதங்கத்துடன் பாபா அந்த சித்து வேலைகளை மட்டும் செய்யாமலிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று சொல்பவர்கள். பாபா சித்து வேலைகள் என்று சொல்லப்படும் அதிசயங்களை நிகழத்தாமல் இருந்திருந்தால் ஒருவேளை இந்த அளவிற்கு புகழ் பெற்றிருப்பாரா?

இது காலம் காலமாகத் தொடுக்கப்பட்டு வரும் வினா. யேசு கிறிஸ்து அதிசயங்கள் புரியாமல் இருந்திருந்தால் இந்த உலகமே அவரது காலடியில் வீழ்ந்து கிடக்கும் என்று ரூஸோ கருதினார். யேசுவை மாபெரும் பொருளாதார அரசியல் மேதையாகக் கண்டெடுத்த பெர்னாட்ஷாவும் இதே கருத்தை வழி மொழிந்தார். யேசுவிற்குப் புகழ் சேர்த்ததைப் போலவே பாபாவிற்கும் அதிசயங்கள் புகழைச் சேர்த்தன. பாமரர்களிலிருந்து மேதைகள்வரை அதிசயங்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.

ஒரு கிறித்துப் பெரியவரின் மறைவிற்குப் பிறகு அவரது சக்தியால் இரண்டு அதிசயங்கள் நடைபெற்றதென்றால் அவருக்குப் புனிதர் (saint) பட்டம் வழங்குகிற நடைமுறையைக் கத்தோலிக்க தலைமை பீடம் இன்றுவரை அனுசரித்து வருகிறது. மகான்களுக்குத் தங்கள் பணிகளை ஆற்ற நேர்கையில் எதிர்ப்படும் தடைகளை வேரறுக்க அதிசயம் போன்ற கூரான எஃகு வேறில்லை.
அதிசயங்கள் புரிவதில் ஒரு உலக ரிகார்டை படைத்தவர் பாபா. அனு தினமும் அதிசயங்கள் புரிந்தவர். ஒருமுறை கூட அதில் அவர் தவறிழைத்தது கிடையாது. அநேகமாக ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்றுமுறைகள் விபூதியை வரவழைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிப்பார். சட்டை மடிப்பிலிருந்து விபூதியைக் கொணர்கிறார் என்றெல்லாம் பழி சுமத்தப்பட்டார். சிலர் அதை நிரூபித்ததாகவும் மார்தட்டினர். மக்களிடம் அவையெல்லாம் சற்றும் எடுபடவில்லை. விபூதி மட்டுமின்றி தங்க டாலர், மோதிரம், வாட்ச், புடவை, என்று கைக்கு அடக்கமான பலவற்றையும் அவர் காற்றிலிருந்து வரவழைத்துக் கொடுத்தார். அவர் வரவழைக்கும் மோதிரத்தின் அளவு பெரிதாகவோ சிறிதாகவோ இல்லாமல் அணிபவரின் விரலுக்குக் கச்சிதமாகப் பொருந்தும்படி இருக்கும். தனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் வழக்கமாக அணியும் குங்குமப்பூ நிற உடை தவிர்த்து வெண்பட்டு உடை அணிந்துகொண்டு வாயிலிருந்து சிரமப்பட்டு ஒரு லிங்கத்தை கக்கியெடுப்பார்.

அவர் மாயமாய் வரவழைக்கும் பொருட்கள் எங்கிருந்து வருகின்றன? அவை எங்கு தயாரிக்கப்பட்டு எவ்வாறு அவர் கையில் எல்லோர் முன்னிலையிலும் தோன்றுகின்றன என்பனவெல்லாம் எவராலும் அறியமுடியாதவை. தங்கக் கட்டுபாடு சட்டத்தின் கீழ் பாபா மீது ஆந்திர பிரதேசத்தில் பகுத்தறிவாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். தங்கத்தை பாபா பதுக்கிவைத்திருந்ததாக அவர்மீது தொடுக்கப்பட்ட வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். திடீரெனத் தென்படும் தங்க ஆபரணம் பதுக்கிவைத்ததற்கான எவ்விதத் தடயத்தையும் தரவில்லை என்பது தீர்ப்பு. பாபா விமர்சனங்களுக்குப் பதிலளிப்பதில்லை. அவரது சக்தியைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என்று பெங்களூர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எச். நரசிம்மய்யா முயன்ற பொழுது பாபா அதை தடை செய்யக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினார். உலகின் எத்திசையிலிருந்தும வரும் பக்தர்களுக்கு அபயம் அளிக்கும் பாபா தனக்கு ஏற்படும் தொந்தரவைத் தன்னால் தீர்த்துக்கொள்ள முடியாது இந்திரா காந்திக்கு கடிதம் எழுதுகிறாரே என்று அந்த சம்பவம் நினைக்கத் தூண்டியது.

பாபாவைப் போன்று அதிசய ஆற்றல் (Para Normal) படைத்தவர்களை மேலைநாடுகளில் சோதிக்கிறார்கள். ஈஎஸ்பி, டெலிபதி ஆற்றல் உடையவர்கள் இவ்விதம் சோதனைக்குள்ளாகிறார்கள். ஆர்தர் கோஸ்லர் இது குறித்த ஆராய்ச்சிகளுக்கு எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ஓர் இருக்கையை நிறுவ தனது சொத்தின் பெரும் பகுதியை உயில் எழுதிவைத்தார். இதுவரை இவ்வாராய்ச்சிகளால் எவ்வித முடிவிற்கும் வர இயலவில்லை. ஆனால் இவை தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். இத்தகைய ஆற்றல் படைத்தவர்கள் இந்தியாவில் அதிகம் தென்படுவதால் இந்தியப் பல்கலைக்கழகங்கள் இந்த முயற்சிகளில் தவறாது ஈடுபட வேண்டும். அதிசய ஆற்றல் படைத்தவர்களை புரட்டாளர்கள் என்று பழித்தொதுக்குவது ஒரு விஞ்ஞான மூட நம்பிக்கை.

ஆனால் பாபா வெறும் அதிசய சாமியார் அல்லர். அவர் சாத்வீகமான யோகி. அன்பை போதிப்பவர். வன்முறையை விலக்கிய வாழ்வை மேற்கொள்ளத் தூண்டுபவர். இந்து மதத்தினராக இருந்தபோதிலும் பிற மதங்களை அரவணைத்தவர். மத மாற்றத்தில் அவர் நம்பிக்கை இல்லாதவர். புட்டபர்த்தியிலுள்ள பிரசாந்தி நிலையம் பெங்களூரிலுள்ள ஒயிட் பீல்ட் ஆகிய அவரது ஆசிரமங்களில் எல்லா மதத்தினரின் பண்டிகைகளும் கொண்டாடப்படும். மத நல்லிணக்கத்திற்கு அவர் சிறந்த எடுத்துக்காட்டு. எந்த மதத்தலைவரையும் அவர் விமர்சித்ததுமில்லை. அவரது ஆசிரமங்கள் சர்வதேசக் குடில்கள் போன்று தோற்றமளிக்கும். வெளிநாட்டவர்களில், அதிகமாக இத்தாலியர்களை நான் அங்கு பார்த்தேன். இத்தாலிய மொழியில் அவர்களுக்காக பாபா பற்றிய சொற்பொழிவுகளும் அங்கு நடைபெறும்.

நான் முதன்முறையாக புட்டபர்த்திக்கு முப்பது வருடங்களுக்கு முன்னர் சென்றேன். என் மனைவியின் மிக நெருங்கிய உறவினர் பிரசாந்தி நிலையத்தில் வசித்து வந்தார். அப்பழுக்கற்ற தியாக வாழ்க்கை அவருடையது. அவரது அன்பிற்கு பாத்திரமான பாபாவின் மீது நாளடைவில் எனக்கும் மிகுந்த ஈர்ப்பு உண்டாயிற்று.

அப்பொழுதெல்லாம் அவரைப் பார்ப்பது அவ்வளவு கடினமல்ல. காலை மாலை ஆகிய இருவேளைகளிலும் அவர் தரிசனம் தருவார். பிரசாந்தி நிலையம் ஒருசில குடியிருப்பு கட்டடங்கள் மட்டுமே கொண்டிருந்தது. பூர்ண சந்திரஹால் என்று ஒரெயொரு கூடம்.

மலிவுவிலைக் கேண்டீன். வியாழக்கிழமைகளில் பேக்கரியில் பிட்ஸா கூடக் கிடைக்கும். அதற்கு மட்டும் முன்னதாகவே டோக்கன் வாங்கியிருக்க வேண்டும். புட்டபர்த்தியில் அப்பொழுதே மருத்துவ, கல்வி நிறுவனங்கள் எழும்பியிருந்தன. அவை யாவும் இலவசம். ஊரை ஒட்டி சித்ராவதி ஆறு ஒரு சிறு கால்வாயாக ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் அங்கு வேறொரு கட்டடம் இருந்தது. அப்பொழுது இந்தியாவின் பெரும் நகரங்களில்- சென்னை அவற்றில் ஒன்றாக இல்லை-- மட்டுமே இருந்த பிர்லாவின் பிளானடேரியம் அக்குக்கிராமத்தில் இருந்தது, பாபாவின் செல்வாக்கினால்.

பாபாவைப் பற்றி ஒரு அவதூறு கிளம்பி ஓய்ந்திருந்தது. அவருடன் நெருங்கிப் பழகியதாகத் தன்னை அறிவித்துக் கொணட டால் ப்ரூக் என்னும் மேற்கத்தியர் பாபாவை ஓரினச் சேர்க்கையாளர் என்று தனது புத்தகத்தில் எழுதியிருந்தார். இதுபோன்ற அம்பலங்கள் சந்நியாசிகளைத் தொலைத்துவிடும். சந்நியாசிகள் தங்களைப் பற்றித்தரும் உறுதி மொழிகளே இவற்றுக்கு மூலகாரணங்கள். சந்நியாசிகள் பிரம்மச்சரிய விரதம் பூணாவிடில் ஒன்றும்குடி முழுகிப் போகாது. நமது பாரம்பரியத்தில் ரிஷிகள் பத்தினிகளுடன் வாழ்ந்தவர்கள்தாம். சந்நியாசிகளே தங்கள் பாலுணர்வு விருப்புகளைத் தெரிவித்துவிட்டால் பரபரப்புகளுக்கு அங்கே இடமிராது. ஓஷோ ரஜனீஷ் இதைத்தான் செய்தார். தவிரவும் பாலுணர்வைத் தவிர்ப்பது மட்டும்தான் துறவா? பொதுவாழ்விற்கு வருபவர்கள் தங்களுக்குரிய தர்மத்தை எவ்விதம் ஒழுகுகிறார்கள் என்பதைத்தான் கண்காணிக்க வேண்டும். பாவ மன்னிப்பை காசுக்கு விற்றபொழுது மார்டின் லூதர் அதைக் கண்டித்து வெளியேறி புதிய மதத்தை தோற்றுவித்தார். அதுதான் அறிவார்ந்த எதிர்ப்பு. தனிமனிதனின் அந்தரங்கங்களைப் பகிரங்கப்படுத்துவது பண்பாடற்ற செயல். நல்லவேளையாகப் பாபாவின் ஓரினச் சேர்க்கைப் பற்றிய வம்பளப்பு விரைவாக முடிவினை எட்டியது.

பாபா தன்னை வழிபட்டவர்கள்மீது எந்தச் சுமையையும் திணிக்கவில்லை. அவரது அலுவலர்களுக்கு வெள்ளைச் சீருடை தரப்பட்டதைத் தவிர வேறு பிரத்யேகமான கட்டுப்பாடுகள் எதுவுமில்லை. புகைபிடித்தல், மதுஅருந்துதல், அசைவம் உண்ணுதல் ஆகியவை அவரது ஆசிரமங்களில் விலக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் பொதுவாகவே எல்லா ஆசிரமங்களிலும் அமல்படுத்தப்பட்டிருக்கும் நடைமுறைகள்தான்.

பாபா பளிச்சென்று தோன்றுவார். கௌபீனத்திலிருந்து அரைகுறை ஆடைகள் வரையிலான உடுப்புகளைத் தங்களுக்கு தேர்ந்தெடுக்கும் சாமியார்களிடமிருந்து அவர் மிகவும் வேறுபட்டவர். கழுத்திலிருந்து பாதம்வரை உடல்முழுவதையும் மறைக்கும் மடிப்பு கலையாத அங்கி. நன்கு சவரம் செய்யப்பட்ட முகம். ஒளிவட்டம் போன்ற அழகான எண்ணெய் பிசுக்கற்ற கறுத்தசிகை. நடை, அசைவுகள் எல்லாவற்றிலும் மென்மை. சிவசக்தி அவதாரம் என்று தன்னை அறிவித்துக் கொண்டதற்கு ஏற்றார்போல் வசீகரமான திருநங்கையாக அவர் இளமைக்கால புகைப்படங்களில் தோன்றுவார். பாபா நம் கண்முன் தோன்றிவிட்டால் அவரையே இமைகொட்டாது பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்கிற ஆவல் ஏற்படும். சாய் பக்தர்கள் பலர் அவர் தூர சென்றுவிட்டால்கூட பைனாகுலர் வழியாக அவரைத் தொடர்வார்கள். மடோனாவே நிர்வாணமாக பாபாவுக்குப் பக்கத்தில் வந்து நின்றால்கூட மடோனாவை பொருட்படுத்தாமல் பாபாவையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். அப்படியொரு காந்தசக்தி அவருக்கு.

கோபம் வராது. ஒரு முறைதான் அவர் கோபமாக இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். புட்டபர்த்தியில் ஒரு சமயம் நூற்றுக்கு மேற்பட்ட ஜோடிகளுக்கு இலவசத் திருமணங்கள் நடந்தபொழுது ஏற்பட்ட இரைச்சல் தாளாமல் மந்திர் என்றழைக்கப்படும். தனது குடியிருப்பிலிருந்து வெளிவந்து தனது அலுவலர்களைக் கடிந்துகொண்டார். எல்லாற்றிலும் ஒழுங்கை வேண்டுபவர். அதுதான் அவரது பலம். பாபாவின் சமூகப் பணிகளை-- அவற்றில் பெரும் சிகரங்களாக விளங்குவன அனந்தபூர், மேடக், சென்னை ஆகிய இடங்களுக்கு குடிதண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்தது.-- சுலபமாக பட்டியலிட்டுவிட முடியாது. இவற்றையெல்லாம் அவரால் செய்ய முடிந்ததற்கு அவருக்கு செல்வந்தர்களான அடியார்கள் அளித்த தாராளமான நன்கொடைகள் மட்டுமல்ல. பாபாவின் நிர்வாகத் திறமைதான் எல்லாவற்றையும்விட முக்கியமானது. தனது அனைத்து நிறுவனங்களையும் அவரே நேரிடையாக நிர்வாகம் செய்தார். பொதுவாக சாமியார்கள் நிர்வாகத்தில் கோட்டைவிடுவார்கள். மற்றவர்களை அளவிற்கதிகமாக சார்ந்திருப்பார்கள். தங்களைக் கவனித்துக்கொள்ளக்கூட அவர்களால் முடியாது போய்விடும். இதனால் பலவிதமான துன்பங்களுக்கும் ஆளாவார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சரை அவரது உதவியாளர் பாடாய்படுத்தி வைத்தார். பாபாவிடம் அதெல்லாம் நடக்காது. உடல்நலம் குன்றிப்போன கடைசி நாட்களில் எப்படியோ, அவர் நன்றாக இருந்தவரை, சிறுவயது முதலே தனது சேவைகளாக வளர்ந்த சகோதரரின் மகன் ரத்னாகர் தவிர வேறு உறவினர்கள் எவரையும் அண்டவிட்டதில்லை.

முதியவர்கள் மீது மிகுந்த அன்பு காட்டியவர் பாபா. மிகச்சிறந்த முதியோர் இல்லங்கள் அவரது ஆசிரமங்கள். அங்கு நிரந்தமாகக் குடியிருப்பவர்கள் அனைவரும் முதியவர்கள். பாபாவின் மீது அவர்களைப்போல் நம்பிக்கையும் பக்தியும் வைத்திருப்பவர்கள் வேறு எவருமில்லை. அவரின்றி அவர்களுக்கு அணுகூட அசையாது. அவர்களை பைத்தியங்கள் என்று வாஞ்சையுடன் பாபா சில வேளைகளில் அழைப்பார் என்று ஒரு ஆசிரம வாசி சொல்லக் கேட்டிருக்கிறேன். தங்களது உறவினர் வீட்டிற்கு செல்ல வேண்டுமெனறால் கூட முதலில் அவரது அனுமதியைத்தான் கோருவார்கள். பாபாவிடம் ஒரு குணாதிசயம் உண்டு. அவர் பல சமயங்களில் புதிர் தன்மையோடு நடந்து கொள்வார். ஏன் என்று அவர்கள் புரிந்து கொள்ள முடியாமல் அவர்களுக்கு அனுமதி மறுப்பார். ‘உங்களுக்கு அனுகூலமாக இருந்தால் செய்யுங்கள்’ என்று மட்டும் கூறினால் அவருக்கு அதில் விருப்பமில்லை என்று பொருள். பின்னர் என்ன அவர்கள் ஓர் அடி கூட ஆசிரமத்தைவிட்டு வெளியே வைக்க மாட்டார்கள். அதேபோல் எவ்வித முன்னறிவிப்புமின்றி பாபா பிரசாந்தி நிலையத்திலிருந்து ஒயிட் பீல்டுக்கு கிளம்பி விடுவார். அவரருகிலேயே சதாகாலமும் இருக்க வேண்டும் என அவாவும் அவரது அடியார்களும் உடனேயே அவருக்குப் பின்னால் அடுத்த சில நிமிடங்களில் புறப்பட்டுவிடுவார்கள். புட்டபர்த்தி. பெங்களூர், கொடைக்கானல் ஆகியவை அவர் செல்லுமிடங்கள். சென்னை சேமியர்ஸ் சாலையிலுள்ள சுந்தரம் இல்லத்திற்கு ஆண்டிற்கொருமுறை வந்து கொண்டிருந்தவர் திடீரென அதையும் நிறுத்திவிட்டார். உகாண்டா தவிர வேறு வெளிநாடு எதுவும் சென்றதில்லை.
சாய்பாபா யார்? மனிதரா? அவதாரமா?

தன்னைக் கடவுள் என்று அவர் அடிக்கடி கூறியதில்லை. அதிசயங்கள் நிகழ்த்துவதையும் அவர் பின்னாட்களில் வெகுவாகக் குறைத்துக் கொண்டார். பிறப்பிலும் இறப்பிலும் இன்ன பிறவற்றிலும் அவர் மனிதராகத்தான் வாழ்ந்து மறைந்தார். இதற்கிடையே அவர் அவதாரம் என்பது சர்ச்சைக்குரிய ஒன்றாக உள்ளது. கடவுளின் அவதாரம், தூதர் என்றெல்லாம் ஒருவர் தன்னைப் பற்றிக்கூறும் பொழுது அவர் மனிதர்கள் காலம் காலமாக எழுப்பும் கேள்விகளுக்கு என்ன பதில்களைத் தருகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். கடவுளின் அவதாரங்கள் ஏன் எப்பொழுதும் மனிதர்களின் ஒழுக்கங்களைப் பற்றியே பேசுகிறார்கள்? என்றும் விடை காணவியலாத பிறப்பு இறப்பு குறித்த ஆச்சர்யங்கள் மட்டுமின்றி பிரபஞ்சத்தைப்பற்றிய மனிதர்களின் சந்தேகங்களை ஏன் அவர்கள் தீர்த்து வைப்பதில்லை? அவர்கள் புவிக்கு மட்டுந்தான் காப்பாளர்களா? உலகம் உருண்டை, அது சூரியனை சுற்றுகிறது என்பதிலிருந்து தொடங்கி மனிதனின் அறிவார்ந்த ஏக்கங்களுக்கு செவிசாய்ப்பவை மனிதனின் விஞ்ஞான செயல்பாடுகள்தான்.

விஞ்ஞானப் புதிர்களைத் தீர்த்து வைக்காவிடினும் அப்துல் கலாம் கூறியதைப்போல் மக்களிடையே கல்விக்கான விழிப்புணர்வை ஊட்டியதில் பாபாவிற்கு சிறப்பான பங்குண்டு. பாபா செய்த பல நற்பணிகளை நியாயமாக அரசாங்கம் செய்திருக்க வேண்டும். ஊழல் மலிந்த நமது அரசாங்கம் அவற்றை செய்யத் தவறியது. தனிமனிதனாக அவற்றை செய்து காட்டினார் பாபா. பாபாவின் அன்பும் கருணையும் கோடிக்கணக்கான மக்களின் மனதில் அமைதியையும் மகிழ்ச்சியையும் உருவாக்கியுள்ளன.

20.5.11

முகங்கள்

சில முகங்கள் வெகு சீக்கிரமாகவே முதுமை
அடைகின்றன. ஏமாற்றங்கள் அவற்றில்
எழுதி ஒட்டியிருக்கும்.
குழந்தைகளின் பிடிவாதத்தினால் தாடைகள் இறுகியிருக்கும்
குடும்பத்தில் பல சாவுகளினால் மூக்கு எப்பொழுதும்
விம்மிய நிலையிலிருக்கும்
ஒவ்வொரு முகமும் கர்ப்பப்பையினுள்ளே நீண்டநேரம்
தீர்மானித்திருக்கும் - லௌகீக விஷயங்கள் தன்னை எப்படி
பாதிக்கும் என்பதை - பிரச்சினைகள் வரும்போது குப்புறப்
படுப்பதா கண்காணாத ஊருக்கு ஓடிவிடுவதா என்பதை.
சில முகங்கள் விட்டுக் கொடுக்கின்றன
வேறு சிலவோ விடைத்து நிற்கின்றன
சில முகங்கள் பிரகாசமாய் தெளிவாய் தெரிகின்றன
வாழ்க்கையின் விடை தேடி அவற்றை நாம் ஆராய்கிறோம்
முப்பத்தோரு வயதான முத்துப்பல்லழகி நிர்மலா சொன்னாள்
üஎன் அப்பா பெயர் ராமச்சந்திரன்.நாங்கள் குழந்தைகள்
கூட்டாக ராமோ, ராமா, ராமென என்று அவர் காதுபடி
ராம சப்தம் சொல்வோம்.ý
அவள் கண்களின் உற்சாகம் உங்களையும் பற்றிக்கொள்ளும்
ரெடிமணியில் முப்பதாயிரம் இழந்த ராகவன் சொன்னான்.
üஉலகம் தர்ம நியாயத்திற்குக் கட்டுப்பட்டது. இந்த நம்பிக்கை
இல்லாமல் வாழ்வதில் அர்த்தம் இல்லை.
நம்மில் சிலருக்கோ வசவுகள். வேதனைகள் உள்தங்கி
விடுகின்றன. கால்கள் தடுமாறி வழி தவறுகின்றன
பசியும், குளிரும் பலரை பாதிக்கிறது
முகங்கள் மாறுகின்றன. அதில் ஒன்றும் தவறில்லை
காலை எழுந்ததும் கண்ணாடியில் உற்று கவனியுங்கள்
நீங்கள் யார் என்பது உங்களுக்குப் புரியக்கூடும்.

15.5.11

மையம்

நிர்மாலியப்படாத பூக்கள்
தெய்வத்தின் திருமேனியை
அலங்கரிக்கும்
பால் வற்றிப் போன
தாயின் முலை சப்பும்
குழந்தை
பள்ளிக் கூட வாசலில்
வியாபாரியின் கைபட்டவுடன்
புதுப்புது வடிவெடுக்கும்
பஞ்சுமிட்டாய்
ஏனோ சிறுவர்களை
ஈர்க்கும்
வாழை இலை அசைவைப்
பார்த்து
பயந்து போன சிநேகிதன்
ஜுர வேகத்தில்
உளறிக்கொண்டிருந்தான்
பேயைப் பார்த்ததாக
சிட்டுக் குருவியின் சீண்டல்களைப்
பார்த்து செவ்வந்தியின் மனம்
சிறகடிக்கும்
அந்தி நேரம்
கணவனின் வருகைக்காக
முகம் கழுவி பவுடர் பூசி
வாசலில் காத்திருக்கும்
தோப்புக்காரன்
தேங்காய் தலையில் விழுந்து
கபாலம் சிதறி
இறந்து போனான்
உச் கொட்டிய கூட்டம்
தேங்காய் சிரட்டை கூட
ஈயமாட்டாரு
போறப்ப என்னத்த
எடுத்துகிட்டு போனாரு
என்றது.

அறியாப் பிறவி

நான் கோபக்காரன்

கொலைகாரன்

காட்டுச் சிங்கமென்று

எனது கவிதை

நாயகனுக்குத் தெரியாது.


அப்பாவியாய்

அபகரிக்க வல்லவனாய்

எண்ணி என்னை

அன்றாடம் அலைக்கழிக்கும்

சூன்யக்காரனான

அவனறிய மாட்டான்

நான் அவனை

அவ்வப்போது எழுத்தால்

கண்டந்துண்டமாய்

வெட்டிப் பிளப்பதை.


பாவம் அவன்

என் கவிதைகளைப்

படிப்பதில்லை.

கவிதைகளும்

அவனுக்குப் பிடிப்பதில்லை.

12.5.11

சில க.நா.சு கவிதைகள்

நல்லவர்களும் வீரர்களும்


கடவுளுக்கு கண்ணூண்டு. அவனுக்கு
வீரர்களையும் நல்லவர்களையும் ரொம்ப
ரொம்பப் பிடிக்கும். உண்மையில்
வீரர்களையும்.சமாதான காலத்தில்
நல்லவர்களையும் அதிகமாக
இப்பாழான உலகத்தில் உலவ
விடாமல் சீக்கிரமே கடவுள்
தன்னிடம் அழைத்துக் கொண்டு
விடுகிறான். கடவுளுக்கு உண்மையில்
கண்ணுன்டு. நல்லவர்களையும்
வீரர்களையும் அவனுக்குத் தெரியும்
என்று நிச்சயமாக நம்பலாம் !

11.5.11

எதையாவது சொல்லட்டுமா - 42

வெயில் கடுமையாக இருப்பதால், நான் எதையாவது சொல்லட்டுமா பகுதியில் எதையும் சொல்லாமல் விட்டுவிட்டேன். பல கற்பனைகளை செய்து வைத்திருந்தேன். பெருந்தேவி, நேசன் கவிதைத் தொகுதிகளைப் பற்றி எழுதுவது. பின் பிரமிள் கட்டுரையைத் தொடர்வது என்றெல்லாம் நினைத்திருந்தேன். கவிதையைப் பற்றிய என் கட்டுரையைத் தொடரலாம் என்றெல்லாம் நினைத்திருந்தேன். வெயில் என் எண்ணத்தைச் சிதற அடித்துவிட்டது. என் இயலாமையை வெயில் மீது கொட்டுகிறேன் என்றுகூட தோன்றுகிறது.

நாம் எந்தக் காரியத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்போது, அதை நிறுத்துவது எப்படி என்றும் யோசிக்க வேண்டும். எப்போதும் எதையாவது படிப்பதை நிறுத்திவிட்டு, பேசாமல் இருந்தால் என்ன என்றுகூட தோன்றுகிறது. நம்முடைய பிரச்சினை நாம் எதையும் நிறுத்தமுடியாமல் அவதிப் படுகிறோம். வாழ்க்கை இப்படியே போய்க் கொண்டிருக்காது. எதையும் தொடர்வதை நிறுத்திப் பார்த்து என்ன நடக்கிறது என்று ஆராய வேண்டும். ஒரு பத்திரிகையைப் புரட்டிப் பார்த்தேன். ஒவ்வொரு இதழிலும் அவர் ஏகப்பட்ட கவிதைகளை எழுதிக்கொண்டே போகிறார். அதைப் பார்த்தபோது, இவர் ஏன் நிறுத்தாமல் தொடர்ந்து எழுதிக்கொண்டே போகிறார் என்று தோன்றியது. எழுதிக் கொண்டே போகும்போது எழுதவதை நிறுத்த வேண்டும். படித்துக்கொண்டே போகும்போது படிப்பதை நிறுத்த வேண்டும். யாரும் அதைச் செய்வதில்லை. டிவியில் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் மாதிரி எல்லோருடைய வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருக்கிறது.

********

கணையாழி ஸ்தாபகர் கஸ்தூரி ரங்கன் அவர்கள் மரணம் அடைந்த செய்தி sms ல் வந்தபோது, வருத்தமாக இருந்தது. கணையாழில் என் குறுநாவல் ஒன்று வரும் தருணத்தில் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவர் அலுவலகத்தில் போய்ப் பார்த்தேன். தனியாக இருந்தார். பழைய கணையாழி இதழ்கள் சிதறிக் கிடந்தன. ஒரு தட்டச்சுப் பொறி முன் அமர்ந்து எதையோ டைப் அடித்துக்கொண்டிருந்தார். என் குறுநாவலைக் குறித்து பக்கங்களைக் குறைக்கச் சொன்னார். அவர் சொன்னபடி செய்தேன். கணையாழி சம்பந்தப்பட்ட அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா மூவரையும் பார்த்திருக்கிறேன். கஸ்தூரி ரங்கன் அதிகமாகப் பேச மாட்டார். கணையாழி கொண்டுவருவதில் உள்ள அவருடைய தீவிரத்தை அறிவேன்.

ஒருமுறை விருட்சம் வெளியீடாக வந்துள்ள ஒரு கவிதைத் தொகுப்புக்கு அவரைத் தலைமை ஏற்கும்படி கேட்டுக்கொண்டேன். வந்திருந்து சிறப்பாக உரையாற்றினார். ஆனால் என்ன எல்லாவற்றையும் பதிவு செய்யும் பக்குவம் என்னிடமில்லை. அதனால் தெளிவாக என்னால் எதையும் குறிப்பிடமுடியவில்லை. தனி மனிதராக கணையாழி இதழைத் தொடர்ந்து நடத்தியது அசுர சாதனை. இன்று எழுதிக்கொண்டிருக்கும் பெரும்பாலான படைப்பாளிகளுக்கு கணையாழி வழி காட்டியாக இருந்தது. ஒரு காலத்தில் நான் இரண்டு சிறுகதைகளை எழுதி ஒன்றை ஆனந்தவிகடனுக்கும், இன்னொன்றை கணையாழிக்கும் அனுப்பினேன். கணையாழில் என் கதை உடனே வந்துவிட்டது. ஆனந்தவிகடன் ஒரு ஆண்டு கழித்து கதையைத் திருப்பி அனுப்பியது.

ஒரு கட்டத்திற்குப் பின் யாராலும் எதையும் தொடர முடியாது. கணையாழியை அவரால் தொடர முடியவில்லை. வேறு ஒரு நிறுவனத்திடம் கொடுத்துவிட்டார். அந்த கணையாழி வந்தாலும், கஸ்தூரி ரங்கன் கொண்டு வந்த எளிமையான கணையாழி இல்லை. மசாலா போட்ட அது வேறு ரகம்.

எளிமையான தோற்றம் கொண்ட கஸ்தூரி ரங்கனை மறக்க முடியாது. அவரை இழந்து நிற்கும் குடும்பத்திற்கு என் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

5.5.11

சில க.நா.சு கவிதைகள்

போ

எட்கார் ஆலன் போவின் கதைகளைப் படிக்கும்போது
மிகவும் உஷாராகத்தான் படிக்க வேண்டியதாக இருக்கிறது.
ஏதாவது ஒரு வார்த்தையின் இடத்தையும் அர்த்தத்தையும்
கவனிக்காமல் விட்டு விட்டால், அவன் என்னதான் சொல்ல
வருகிறான் என்பது தெரியாமலே போய் விடுகிறது. இத்தனைக்கும்
அவன் எழுதியதெல்லாவற்றையும் பத்திரிகைத் தேவைக்காக
அவசர அவசரமாக எழுதினான் என்றுதான் தெரிகிறது.
கவனமாகப் படிக்காவிட்டால் அவன் அர்த்தப்படுத்துவதற்கு
எதிர் மறையாக வேறு விதமாக அர்த்தப்படுத்திக்கொள்ள
ஏதுவாகியிருக்கிறது. லிஜீயா என்கிற கதையில் அவன்
தனது இரண்டாவது மனைவியைக் கொன்றானா; ஆகாயத்
திலிருந்து கொட்டிய விஷத்துளிகள் மனப்பிராந்தியா
உண்மையின் எதிரொலியா பிரதிபலிப்பா என்று
கண்டுகொள்ள முடியாமல் திணறிப் போவோம்.
தன் கூடப்பிறந்தவனைக் கொன்றானா? யாரையோ
நட்புடன் உயிரோடு புதைத்து சாக விட்டுவிட்டு
தான் செய்த தவறுக்குத் தண்டனை வேண்டி
நின்றானா?-கவனித்துப் படித்தால்தான் தெரியும்
வேறு விதமாகவும் பதினாறு விதங்களாகவும்
அர்த்தப்படுத்திக்கொள்ள அவன் உபநிஷத்துக்கள்
எழுதினானா? வெறும் கதைகள்தான் எழுதினானா?
போவின் எழுத்துக் கலையின் பூர்ணத் தன்மை
உனக்குப் புரிகிறபோது இலக்கியத்தின் அமைதியும்
அமைதியின்மையும் பலித்து விட்டதுபோல
ஒரு நினைப்பு ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.