31.1.16

பாஜிராவ் மஸ்தானி

பிரபு மயிலாடுதுறை


சில ஆண்டுகளுக்கு முன்னால், மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு பேருந்தில் பகல் நேரத்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.  அது செல்ஃபோன் பிரபலமாகிக் கொண்டிருந்த காலம்.  நான் பேருந்தின் கடைசி வரிசைக்கு முன்னால் இருந்த இடதுபக்க இருக்கையில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தேன்.  புதுச்சேரி பேருந்து நிலையத்தில் ஓர் இளைஞன்  ஏறினான்.  கடைசி வரிசையின் நடுவில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.  அவனது தோற்றம், கைப்பை, காலணிகள் மற்றும் அவன் கையிலிருந்த புத்தகங்கள் இவற்றைக்கொண்டு அவன் பொறியியல் மாணவனாக இருக்கக் கூடும் என கணித்தேன்.  பேருந்து கிழக்கு கடற்கரை சாலையில் சென்ற போது இரண்டு கல்லூரி மாணவிகள் புதுச்சேரி பொறியியல் கல்லூரி அருகே ஏறினர்.  கடைசி வரிசையில் மட்டுமே இடம் இருந்தது.  அம்மாணவனுக்கு அருகே அமர்ந்து கொண்டனர்.  ஒரே வகுப்பில் படிப்பவர்களாக இருக்கக் கூடும்!   புதுச்சேரியிலிருந்து சென்னை வரை உரையாடிய வண்ணம் இருந்தனர்.  ஒரு பெண் அவ்வப்போது தூங்கி எழுந்து உரையாடலில் இணைத்து கொண்டாள்.  அவள் உரையாடும் போது இன்னொரு பெண் தூங்கினாள்.  மோட்டலில் வண்டி நின்ற போது அம்மாணவன் தான் இறங்கிச் சென்று குடிநீர், பிஸ்கட் மற்றும் நொறுக்குத் தீனி வாங்கி வந்து தந்தான். அவர்களுக்கான பயணச்சீட்டையும் அவன் தான் எடுத்தான்.

அவர்கள் பல விஷயங்களைப் பேசினர்.  மேத்தமேடிக்ஸ் – 4 என்ற தாளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.  ஃபோரியர் சீரிஸ்,  ஆய்லர் தேற்றம் என்ற வார்த்தைகள் காதில் விழுந்தன.  எழுபது ஐந்து மதிப்பெண்களுக்கு எழுதிய தேர்வில் அறுபத்து ஐந்து மதிப்பெண்கள் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அப்பெண் இருந்தாள்.  கிடைக்காத பத்து மதிப்பெண்ணுக்காக 
வருந்தினாள்.  தோழிகள் தான் குழப்பி விட்டனர் என அங்கலாய்த்தாள்.  “இட் இஸ் ஆள் இன் எ கேம்” என்றாள். அது அவளுக்கு உவப்பான வாக்கியம் போலும்! அடிக்கடி அதனைபிரயோகித்தாள்.  அவர்கள் பேருந்தில் உரையாட ஒரு பாணியை பின்பற்றுவதை நான் பேருந்தில் ஏறியதுமே கவனித்தேன்.

பேருந்தில் ஏறியதுமே அவர்கள் உரையாடத் துவங்கவில்லை.  முன்னிருக்கையில் இருப்பவர்கள் ஓய்வு நிலைக்கு செல்லும் வரை பேசாமல் இருந்தனர்.  அப்பெண்கள் வந்து அமர்ந்ததும் அந்த இளைஞன் அவனே நடத்துனரிடம் சென்று பயணச்சீட்டு வாங்கி வந்தான் என்பதை நடத்துனர் அப்பெண்களிடம் சீட்டு வழங்க அவர்கள் இடத்துக்கு வராததிலிருந்து யூகித்துக் கொண்டேன்.  என்ஜின் சத்தத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்பவே அவர்கள்  உரையாடலின் ஸ்தாயி இருந்தது. என்ஜின் சத்தம் அதிகமாக இருக்கும் போதே உரையாடினர்.  நிறுத்தங்களில் வண்டியை நிறுத்த ஓட்டுனர் வாகனத்தை மெதுவாக இயக்கினால் பேச்சு நின்று விடும்.  பேருந்தில் பயணித்த பயணிகள் எவருக்குமே அவர்களைப் பற்றிய கவனம் இல்லை அல்லது எவர் கவனத்தையும் கவராத ஒரு தகவமைப்பை அவர்கள் உருவாக்கியிருந்தனர். இரண்டு பெண்களில் ஒரு பெண் மிகவும் புத்திசாலி என்பது அவளது பேச்சில் தெரிந்தது. அவ்விளைஞனும் அவளுக்கு சமமான அறிவு கொண்டிருந்தான்.  இன்னொரு பெண்ணும் அவர்களை ஒத்த திறனுடன் இருந்தாள்.

 பரீட்சைத் தாள்கள், கல்லூரித் தோழிகள், சென்னைத் தோழிகள், விடுமுறைத் திட்டங்கள், எதிர்காலத்தில் எழுத வேண்டிய போட்டித் தேர்வுகள், பெற்றோர்கள் என நானாவித விஷயங்களைப் பற்றியும் அப்பெண் உற்சாகத்துடன் பேசினாள்.  நடந்த – அவள் எதிர்பாராத – விஷயங்களைப் பற்றி பேசும்போது ‘இட் இஸ் ஆல் இன் எ கேம்’ என்றாள். 

 இட் இஸ் ஆல் இன் எ கேம்.  ஆம், நாம் விரும்புவதும் வாழ்வில் நடக்கும்.  நாம் எதிர்பாராததும் வாழ்வில் நடக்கும்.  அனைத்தும் சாத்தியமே.வாழ்வை முழுமையாக அணுகுவதும் புகாரின்றி ஏற்பதுமே அழகான, நேர்மையான வழிமுறை. 

அவர்களது பேச்சு ஓம் சாந்தி ஓம் என்ற திரைப்படம் பற்றி திரும்பியது.  அப்படம் அன்றைய தினத்துக்கு ஓரிரு நாட்கள் முன்பே வெளியாகியிருந்தது என்பதை அவர்கள் பேச்சிலிருந்து புரிந்து கொண்டேன்.  ‘சான்ஸே இல்ல சான்ஸே இல்ல’ என்று அப்பெண் சொன்னாள்.  அவ்வியப்பு வாக்கியத்தை நான் அன்றுதான் முதல் முறையாகக் கேட்டேன்.  பின்னரே அது சென்னை கல்லூரி மாணவர்களிடம் பிரபலமாக இருந்த வாக்கியம் என அறிந்தேன்.  ‘இட் இஸ் ஆல் இன் எ கேம்’ என்ற சொற்றொடரும்  ‘ஓம் சாந்தி ஓம்’ என்ற பெயரும் என் மனதில் பதிவானது.  

சென்னை கிண்டியில் அவர்கள் மூவருமே இறங்கிச் சென்றனர். நான் அவர்களைப் பற்றி யோசித்தவாறு அசோகத்தூண் நிறுத்தத்தில் இறங்கினேன். அன்றைய தினம் போன்ற அழகான நாட்கள் அவர்களுக்கு கல்லூரிக் காலங்களுக்குப் பின் நீடிக்குமா என யோசித்தேன்.  துடிப்பு, உவகை மற்றும் உத்வேகம் ஆகியவை இளவயதில் தானாக வாய்க்கிறது.  இளமை கடந்ததும் நாமே அவற்றை உருவாக்கிக் கொள்ள வேண்டியுள்ளது.  

சில நாட்களில், எனது நண்பனின் திருமணத்துக்கு கோயம்புத்தூர் சென்றேன். நகரில் நுழைந்ததுமே ஓம் சாந்தி ஓம் திரைபடத்தின் சுவரொட்டிகள் வரவேற்றன.  எந்த திரையரங்கில் படம் ஓடுகிறது என பார்த்து வைத்துக் கொண்டேன்.  கனகதாரா திரையரங்கம்.  திருமண அரங்கில் ஒரு உள்ளூர்வாசியிடம் அவ்வரங்கு எங்குள்ளது எந்த பாதையில் செல்ல வேண்டும் என விசாரித்துக் கொண்டேன் காலையில் திருமணம் முடிந்ததும் மணமகனின் இல்லத்திற்கு வந்துவிட்டோம்.  மதியம் திருமணத்துக்கு வந்துருந்த ஒரு மயிலாடுதுறை வாசியை கூட்டிக்கொண்டு கனகதாரா திரையங்கம் சென்றேன்.  

ஓம் சாந்தி ஓம் சிறந்த இந்தித் திரைப்படங்களில் ஒன்று.  நாம் காணும் திரைபடத்தினுள் ஒரு திரைப்படம் உருவாவதன் கதை இருக்கும்.  கதைக்குள் கதை என்ற உத்தியைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட திரைக்கதை. ஃபராகானின் இயக்கத்தின் ஆகச் சிறப்பான  படமும், மிக சிறந்த இந்தி திரைப்படங்களில் ஒன்றாக உள்ளதும் ஓம் சாந்தி ஓம்.  படத்தின் துவக்கத்திலிருந்துஅப்படத்தின் கதாநாயகி திரையை ஆக்கிரமித்திருந்தார். அவரது பெயரை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.  இந்தி சினிமாவையும் அதன் வணிக பாணிகளையும் கிண்டல் செய்து எடுக்கப்பட்ட இந்தி சினிமாவான ஓம் சாந்தி ஓம் ஒரு நிறைவான அனுபவத்தை அளித்தது.  படம் முடிந்து டைட்டில் கார்டில் கதாநாயகி நடிகை அறிமுகம் : தீபிகா படுகோனே – என குறிப்பிடப்பட்டடிருந்தார்.  இவ்வளவு சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியவருக்கு இதுதான் முதல் படம் என்பது அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.  தீபிகா இன்னும் பல ஆண்டுகள் சிறந்த நட்சத்திரமாய் நீடிப்பார் என நினைத்தேன்.  அவ்வாறே நிகழ்ந்தது.  ஓம் சாந்தி ஓம் திரைப்படத்திற்கு பின்னர் தீபிகா நடித்த ஹேப்பி நியூ இயர், சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களை பார்த்தேன்.  

சமீபத்தில் பாஜிராவ் மஸ்தானி திரைப்படம் பார்த்தேன்.  இன்று தீபிகா திரையுலகின் ஒரு முன்னணி நட்சத்திரம்.  யாருடைய திருமணத்திற்கு சென்றேனோ, அந்நண்பனுக்கு இப்போது ஹர்ஷவர்தன் என்ற ஆறு வயது மகன் இருக்கிறான்.  ஹர்ஷாவுக்கு தீபிகா நடித்த கோச்சடையான் படத்தில் வரும் எங்கே போகுதோ  வானம் அங்கே போகிறோம் நாமும் என்ற பாடல் பிடித்த பாடல்.  அப்பாடலில் உன் வாளால் ஒரு சூரியனை உண்டாக்கு என்ற வரி வரும்.  

ஹர்ஷா என்னிடம் ஒரு சூரியனை உண்டாக்கி என்ன செய்வது என்று கேட்டான்.  பின்னர் அவனே மாலையில் அஸ்தமிக்க விடாமல் செய்தால் இன்னும் கொஞ்ச நேரம் விளையாட முடியும் என்று பதிலும் சொன்னான்.  

பாஜிராவ் மஸ்தானியில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா மூவருமே பாஜிராவாகவும் மஸ்தானியாகவும் காசியாகவும் மாறியுள்ளனர்.  படம் முழுதும் உணர்ச்சி அலையலையாய் எழுந்து பிரவாகம் எடுக்கிறது.  ஒரு தளபதியின் உடல் மொழியும் தோரணைகளும் ரன்வீருக்கு சிறப்பாக அமைத்துள்ளது.  ஒரு மாவீரனின் நேசத்துக்குரியவள் எப்படி இருப்பாள்,  எப்படி யோசிப்பாள், எப்படி செயல் புரிவாள் என்பதை இயக்குனர் 

உணர்ச்சிவேகம் குறையாமல் எடுத்துள்ளார்.  பேஷ்வாவிடம் உதவி கேட்டு வரும்  காட்சியிலேயே பாஜிராவ் மஸ்தானியையும் மஸ்தானி பாஜிராவையும் மனதால் ஏற்கும் காட்சி திரைப்படத்தின் காட்சியமைப்பில் – இயக்கத்தில் – நடிகர்களின் நடிப்பில் – ஒரு நுண் கணத்தில் வெளிப்பட்டுள்ளது.  பாஜிராவ் குடும்பதினரின் அவமதிப்புகளை பொருட்படுத்தாது சாதுர்யமாக பதில் கூறுவது  ஒரு ராஜகுமாரியின் கதாபாத்திரத்துக்கு அழகு சேர்க்கிறது.  ஒரு பெண்ணின் 

நேசத்துக்காக தனது பதவி, அதிகாரம், குடும்பம் அனைத்தையும் இழப்பதுற்கு பாஜிராவ் தயாராவதற்கு இன்னொரு கோணமும் உண்டு : ஒரு பெண்ணின் நேசத்தை உணர முடியாத அவை எந்த மதிப்பும் அற்றவை.  உலகில் மதங்கள் அன்பை போதிக்கின்றன.  அனால் அன்பே இறைமை என படம் முடிகிறது.  தீபிகாவின் திரைத் தடத்தில் பாஜிராவ் மஸ்தானி ஒரு மாஸ்டர் 

மஸ்தானி சாவுக்கு அஞ்சாதவள் என்பதே பாஜிராவை நேசம் கொள்ள செய்கிறது.  சாவுக்கு அஞ்சாதவளால் விரும்பப்படுபவராக பாஜிராவ் இருக்கிறார்.  புத்தேல் கண்டைக் காப்பாற்ற பாஜிராவிடம் உதவி கேட்டு வரும்போது அவரை காண்கிறாள்.  சாவுக்கு சில கணங்களுக்கு முன்னாள் தன் குழந்தையிடம் யாரைப் போன்ற வீரனாவாய் என்று கேட்கிறாள்.  

குழந்தை, தந்தை பேஷ்வா பாஜிராவைப் போல என்று சொல்கிறான்.  ஒரு வீரனை நேசித்து ஒரு வீரனுக்குத் தாயாகி ஒரு வீராங்கனையாக வாழும் மஸ்தானி பாஜிராவையும் தாண்டி செல்கிறாள். 

திரைப்படத்தின் கலையில் இயக்குனர் ஒரு காட்சியை கற்பனையில் உருவாக்குகிறார்.  கலை இயக்குனர் அக்காட்சி நிகழும் வெளியை புறஉலகில் உருவாக்குகிறார்.  நடிகர்கள் இயக்குனரின் கற்பனையை உள்வாங்கி நடிப்புக்கலையை வெளிப்படுத்துகின்றனர்.  

ஒளிப்பதிவாளர் அதனை சினிமாவின் சட்டகத்துக்குள் கொண்டு வருகிறார்.  திரைக்கு முன்னும் பின்னும் பங்களிக்கும் நூற்றுக்கணக்கான கலைஞர்களும் தொழில்நுட்ப உதவியாளர்களும்தங்கள் பங்களிப்பை வழங்குகின்றனர்.  இவை அனைத்தும் ஒருங்கிணையும் ஒரு புள்ளி 

பார்வையாளனுக்கு கடத்தப்படும்போது கலாபூர்வமாக சினிமா முழுமையடைகிறது.  பாஜிராவ்  மஸ்தானி படம் முழுதும் இது நிகழ்ந்துள்ளதாக நான் எண்ணுவது உண்மையா அல்லது பிரமையா என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது. 

பாஜிராவ் மஸ்தானி திரைப்படக் குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் 
தெரிவித்துக் கொள்கிறேன்.

30.1.16

அங்கும் இங்கும்........

அழகியசிங்கர்பத்மஸ்ரீ விருதை தவிர்ப்பதாக ஜெயமோகன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.  இதைக் காரணமாக வைத்துக்கொண்டு சிலர் ஜெயமோகனை தாக்கியும் இன்னும் சிலர் அவரை வாழ்த்தியும் வலைதளத்தில் தங்கள் கருத்துகளை எழுதி உள்ளார்கள்.  இந்தப் பரிசை ஏற்பதால் அவருக்கு என்ன அவமதிப்புகளும், புறகணிப்புகளும் உருவாகும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.  

இதனால் ஜெயமோகனுக்கு எதிர்காலத்தில் யாரும் பரிசு தர யோஜனை செய்வார்கள்.  ஒரு பரிசு என்பது ஒருசிலரின் முயற்சியால்தான் கிடைக்கிறது.  இதை யாரும் பெறுவதற்கு பெரிய சிபாரிசு செய்யக் கூடாது.  அது தானாகவே கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் விட்டுவிட வேண்டும. ஜெயமோகனுக்கு இந்த விருது தானாகவே கிடைத்துள்ளது.  அதற்கு ஏன் வேண்டாம் என்று அவர் மறுக்கிறார் என்பது புரியவில்லை.  ஜெயமோகனுக்கு இந்த விருதை இந்த அரசு கொடுக்கவில்லை என்றால் வேற யார் பின்னால் அவருக்குக் கொடுப்பார்கள் என்பது கேள்விக்குறியே?

'இந்து மெய்யியல்மேல் எனக்கிருக்கும் அழுத்தமான நம்பிக்கையை முன்வைத்தே எழுதி வருகிறேன்,' என்று குறிப்பிடுகிறார்.  அப்படியிருக்கும்போது இந்த விருதை வாங்க ஏன் தயங்க வேண்டும்.  ஜெயமோகன் எது எழுதினாலும் அவரைத் தாக்க சிலரும், அவரை கொண்டாட சிலரும் இருந்துகொண்டே இருப்பார்கள்.  மனதில் படுவதை வெளிப்படுத்துவார்.  எழுத்தாளர் அகிலன் பெயரில் நடந்த நாவல் போட்டியில் தேர்வு செய்யப்பட்டு ஜெயமோகனின் ரப்பர் நாவலுக்குப் பரிசு கிடைத்தது. புத்தகத்தை நாவலுக்குப் பரிசு தரும் அமைப்பே அடித்து, அந்த நாவலுக்கான பரிசையும் கொடுத்தது.  ஜெயமோகன் பேசும்போது அகிலனை நாவலாசிரியராக தான் ஏற்கவில்லை என்று குறிப்பிட்டார்.  அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட எனக்கு அவர் பேசியதைக் கேட்டு திகைப்பாக இருந்தது.

அவ்வாறு பேசியதால் என்ன ஆயிற்று என்றால் ஒவ்வொரு ஆண்டும் அகிலன் பெயரில் நடக்க வேண்டிய நாவல் போட்டி அந்த வருடத்துடன்  விடை பெற்று கொண்டது.  புதியதாக நாவல் எழுதுபவருடைய நாவலையும் பிரசுரம் செய்வதோடு, பரிசும் கொடுப்பதும் அத்துடன் நின்று விடடது.  இது புதியதாக எழுதுபவர்களுக்கு நஷ்டம்.   ஜெயமோகன் எதுவும் சொல்லாவிட்டால் ஒன்றும் நடந்திருக்காது.  

பரிசு அல்லது விருது பெறுவதற்கு தமிழ் நாட்டில் இன்னும் பல எழுத்தாளர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.  நமக்கு இந்த வாய்ப்பு கிடைக்காதா என்று ஏக்கத்துடன் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.   இதில் ஒரு விருதை வேண்டாமென்று மறுப்பவர்களுக்கு இனிமேல் க்யூவில் நிற்க வேண்டுமென்றால் கடைசியில்தான் போய் நிற்க வேண்டி வரும்.  இந்தக் க்யூவில் கடைசி ஆளாக நானும் நின்று கொண்டிருக்கிறேன்.

                                                                                     ********

இன்னும் சில தினங்களில் விருட்சம் இதழின் 99வது இதழை அச்சுக்குக் கொண்டு வந்து விடுவேன்.  போன இதழ் தயாரிக்கும்போது இதழ் செலவு கொஞ்சம் அதிகமாகி விட்டது.  இது குறித்து அச்சகத்தாருடன் பேச வேண்டும். மொத்தமாக ஒரு இதழை அச்சடிக்க இவ்வளவு கொடுத்து விடுங்கள் என்கிறார்கள்.  இதில் காகிதத்தின் விலை என்ன? பைன்டிங் விலை என்ன? ஒரு பாரம் அடிக்க எவ்வளவு ஆகும் என்பதெல்லாம் சொல்வதில்லை. திரும்பவும் நான் பழையபடி ஆரம்பிக்க வேண்டுமென்று நினைக்கிறேன். பேப்பர் விற்பவரிடம் சென்று பேப்பர் வாங்க வேண்டும்.  பைன்டரிடம் சென்று ஒரு பாரம் மடிக்க எவ்வளவு என்று பேரம் பேச வேண்டும். இப்போதெல்லாம் நெகடிவ் கிடையாது.  அதனால் பாரம் தயார் செய்ய எவ்வளவு என்று கேட்க வேண்டும்.  

ஆனால் ஒரு இதழ் விருட்சம் கொண்டு வர போதும் போதுமென்று ஆகிவிடும்.   எழுதுபவர்களே கிடையாது. இப் பத்திரிகையில் எழுதினால் யாருக்கும் சன்மானம் கிடையாது.  எழுதுபவர்களுக்கு எந்த நிச்சயமும் இல்லை.  பத்திரிகை எப்போது வரும் என்று சொல்ல முடியாது. நான் ஒருவனே நினைத்தால் எல்லாப் பக்கங்களையும் எழுதி விடலாம்.  ஆனால் அது தர்மம் இல்லை.  படிப்பவர்களை இப்படியெல்லாம் கஷ்டப் படுத்த விரும்பவில்லை. இப்படித்தான் 99 இதழ்கள் வந்து விட்டன.  100வது இதழ் ஏப்ரல் மாதம் வர உள்ளது.
                                                                               *****

இந்தப் பத்திக்கு நான் வைத்தத் தலைப்பைப் பற்றி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்.  முதலில் ஒரு சொல் கேளீரோ என்ற தலைப்பை வைத்தேன். அதை யாரோ பயன்படுத்துவதாக தோன்ற, வேண்டாம் என்று முடிவு எடுத்தேன். அடுத்தது அக்கம் பக்கம் என்ற பெயரை யோசித்தேன். அது கசடதபறா வில் நா கி பயன்படுத்திய தலைப்பு,  அங்கும் இங்கும்தான் பொருத்தமாக இருக்கும் என்று வைத்துள்ளேன்.
                                                                              (இன்னும் வரும்)

28.1.16

மறந்து போன பக்கங்கள்....அழகியசிங்கர்
தி சோ வேணுகோபாலன் கோடை வயல் என்கிற தன் கவிதைத் தொகுதியை ந பிச்சமூர்த்திக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். அப்போது அவர் எழுதிய வரிகள் :
'என் கவிதையின்
புதுக்குரலுக்கு
பிரசவம் பார்த்த
மருத்துவர்
திரு ந. பிச்சமூர்த்தி
அவர்களின்
அடிக்கமலங்களுக்கு'

ஒரு கவிதையைப் படிக்கும்போது ஒருமுறைக்கு இரண்டு முறை படிக்க வேண்டும்.  அப்படிப் படிக்கும்போது கவிதை படிப்பவர் நோக்கி கவிதை மெதுவாக நகர்ந்து வரும்.  வெள்ளம் பற்றி எழுதிய தி சோ வேணுகோபாலன் üவெள்ளம் சிவமதமா?ý என்கிறார்.  வெள்ளத்தைப் பற்றி சொல்ல வருகிறார் என்று நினைத்தாலும், சிவமதமா என்று ஏன் சொல்கிறார். இதற்குக் காரணம் எதாவது யாருக்காவது தெரியுமா?
கடைசியில் கவிதையை முடிக்கும்போது வெள்ளம் சிவமதமா? இல்லை சிவன்மதமா? என்று முடிக்கிறார்.  இரண்டு வார்த்தைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? புரியவில்லை.

 வெள்ளம்

வழியாடிக்
கரைசாடி
விம்மிப் புடைத்துறுமி
வருகின்ற
வெள்ளம் சிவமதமா?
இல்லை வெறுந்துயரா?

தாளம் தவறியதா?
கோளின் கதிபிசகா?

தாளம் தவறியதால்
கோளில் கதிபிசகால்
மேலே பனிமுடியில்
காலும் நொடித்ததனால்
கட்டுச் சடைபிரிய
கங்கை விடுதலையாய்
கொட்டி முழக்கிடுமோர்
கோரச் சிரிப்பொலியா?

வெள்ளம் சிவமதமா?
இல்லை வெறும்துயரா?

குடிசை பொடியாக்கிக்
குழைத்து நிறம்சிவந்த
வெள்ளம் சினன்நடமா?
இல்லை பயங்கரமா?

மீன் துள்ளுமேனி:
மாட்டுச் சுமையுண்டு
சுற்றிச் சடலங்கள்
சூழ்ந்து வருகின்ற
வெள்ளம் சிவமதமா?
இல்லை சிவன்மதமா?27.1.16

புத்தக விமர்சனம் 15

அழகியசிங்கர்சாகித்திய அகாதெமி விருது பெற்ற வங்க நாவல் அனுபவங்கள்.  இந்த நாவலை எழுதியவர் திவ்யேந்து பாலித்.  தமிழில் மொழி பெயர்த்தவர் புவனா நடராஜன்.  
திருமதி புவனா நடராஜன், 2009ம் ஆண்டில் மொழிபெயர்ப்புக்கான 'சாகித்திய அகாதெமி விருது' பெற்றவர்.  நல்லி திசை எட்டும் விருதையும் 2007ம் ஆண்டு பெற்றுள்ளார்.  22 மொழி பெயர்ப்பு நூல்களுக்கு ஆசிரியர் அவர்.  
திவ்யேநது பாலித்தின் நாவலான அனுபவ் என்ற நாவல்தான் அனுபவங்கள் என்று தமிழில் மொழி பெயர்த்துள்ளார்கள். பொதுவாக மொழிபெயர்ப்பில் உள்ள ஒரு படைப்பைப் படிக்கும்போது, அதன் மூல மொழியின் உணர்வை நிச்சயமாகப் பெற முடியாது.  ஆனாலும் மூல மொழியில் உள்ள ஒரு படைப்பை ஓரளவாவது நம்மால் உணர முடியும்.  இந்த நாவலைப் படிக்கும்போது இது ஒரு வங்க நாவல் என்ற ஒன்றை  தமிழில்தான்  படிக்கிறோம் என்று தோன்றியது.  
வங்க மொழியில் ஒரு நாவல் எப்படி எழுதப் படுகிறது என்பதை அறிய ஆவலாக இருந்தேன்.  வித்தியாசமாக எழுதப்பட்ட நாவல்.  220 பக்கங்கள் கொண்ட  நாவல் மிக எளிதாக எழுதப்பட்டுள்ளது. ஆத்ரேயி என்ற பெண்ணின் ஒத்தக் குரலாக  நாவல் எழுதப்பட்டுள்ளது.  முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை ஆத்ரேயிதான் தன் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டு போகிறாள்.   திறமையாக ஆசிரியர் விவரித்துக் கொண்டு போகிறார்.  கொஞ்சங்கூட அலுப்பில்லாமல்.   
லண்டனில் வசிக்கும் ராகுல் பானர்ஜி என்பவனை ஆத்ரேயி திருமணம் செய்து கொள்கிறாள்.  14 ஆண்டுகளாக லண்டனில் இன்னொரு பெண்ணுடன் மனைவி போன்ற ஒரு தொடர்பு அவனுக்கு உண்டு.  அத்துடன் இந்தியா வந்து ஆத்ரேயியைத் திருமணம் செய்து கொண்டு விடுகிறான்.   இரண்டு ஆண்டுகளில் அவனுடைய தொடர்பு தெரிந்து அவனிடமிருநது விவாகரத்துப் பெற்று திரும்பவும் கல்கத்தாவிற்கு தன் பிறந்த வீட்டிற்கு வந்து விடுகிறாள்.  
பிறந்த வீட்டில் அவளை எல்லோரும் அனுதாபத்துடன் அணுகுகிறார்கள்.  ஆனால் முன்புபோல் அவளால் அவர்களுடன் பழக முடியவில்லை.   தன்னால் அங்கு சுதந்திரமாக காலத்தை கழிக்க முடியாது என்று நினைக்கிறாள்.  
கதை இப்படி ஆரம்பமாகிறது.  ஆத்ரேயி ஒழுக்கக் கேடான கணவனை விட்டு விவாகரத்துப் பெற்று வந்துவிடுகிறாள்.  பிறந்த வீட்டிற்கு வந்தாலும் தன்மானததோடு தனித்து வாழ நினைக்கிறாள்.  அதனால் எதாவது ஒரு வேலையில் சேர நினைக்கிறாள்.  ஸிமார்ஸியில் அவள் மார்க்கெட்டிங் சர்வே வேலையில் அவளை பணியில் அமர்த்துகிறார்கள்.  இந்தியாவில் உள்ள வேசிகளைப் பற்றி சர்வே எடுத்து அவர்கள் வாழ்க்கை முறைகளைப் பற்றி கணக்கிடுவதுதான் அவளுடைய பணி.  ஆரம்பத்தில் இதைப் பற்றி ஆத்ரேயி கேள்விபடும்போது அதிர்ச்சி அடைகிறாள்.  எந்தப் பணியில் இருக்கிறோம் என்று யாராவது கேட்டால் அவளுக்குப் பதில் சொல்வது சங்கடமாக இருக்கும்.
உத்பல் என்பவனோடு அவளுக்கு மனம் ஒன்றி போகிறது.  ஆனால் வெளிப்படையாக தன் எண்ணத்தை உத்பலிடம் அவள் சொல்வதில்லை.  உத்பல் கான்சர் நோயினால் பாதிக்கப்பட்டு இறக்கும்  தறுவாயில் இருக்கும் தேவிகா என்ற பெண்ணின் மீது நாட்டம் கொள்கிறான். அவளுடைய பெண்ணான தேவியை வளர்க்க முடிவெடுக்கிறான்.
அவள் அலுவலகத்தில் டாலி ùஸன்னுக்கும் ஆத்ரேயிக்கும் போட்டி ஏற்படுகிறது.  இவர்களுடைய மேலதிகாரியான கல்பதரு டாலி ஸன்னுடன் நெருங்கி பழகுவதிலிருந்து விலகி ஆத்ரேயிடம் நெருங்கி பழகும் சூழ்நிலை உண்டாகிறது. இதைப் புரிந்து கொண்ட டாலி ஸன் அவளுடன் பழகும்போது கடுமையாக நடந்து கொள்கிறாள். இந்த இக் கட்டான சூழ்நிலையிலிருந்து ஆத்ரேயி அதிலிருந்து விலகி விடுவது என்று தீர்மானிக்கிறாள்.  
இந்த வேலை அவளுக்கு சுதந்திரத்தைக் கொடுத்தாலும், விலகுவதுதான் சரியான தீர்ப்பு என்று நினைக்கிறாள்.  கல்பதரு தாஸ்குப்தாவின் காரியதரிசியினிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து விட்டு வேறு எதுவும் பேசாமல் யாரையும் சந்திக்காமல் வெளியே வந்து விடுகிறாள்.  
ஒரு வித மௌனம் ஆத்ரேயைப் பிடித்துக் கொள்கிறது.  இனி எங்கே போவாள்? யாரிடம் போவாள்? அடுத்த கணம் அவள் கால்கள் முன்னேறி நடந்தன.  அவள் மட்டும் இந்த உலகத்தில் தனியாக இல்லை என்று அவள் நினைத்தாள்?
ஒரு பெண்ணின் தனிப்பட்ட உணர்வுகளைக் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது.  அவள் நினைத்தால் அவள் எப்படி வேணடுமானாலும் வாழலாம்.  ஆனால் அதில் அவளுக்கு விருப்பமில்லை.  எதையும் தொந்தரவு செய்து பெற அவள் முயற்சி செய்யவில்லை.
இந்த நாவலில் இந்தியாவில் வேசி தொழில் செய்பவர்களின் பல அனுபவங்கள் செக்ஸ் ஒர்க்கர்ஸின் வாழ்க்கை முறைகளைப் பற்றிய ரிப்போர்ட் பேட்டிகள் பலவும் வெளிப்படுகின்றன.  பம்பாய் மாநகரத்தின் சிவப்பு விளக்குப் பகுதியில் இருந்த பதினான்கே வயதான ஒரு அழகான பெண்ணைப் பற்றிய குறிப்புகளும் வெளிப்படுத்துகின்றன.  தொண்டு நிறுவனம் எப்படி அந்தப் பெண்ணை அதிலிருந்து விடுவித்துக் காப்பாற்றுகிறது என்றெல்லாம் சொல்லப் படுகிறது.  
படிக்க சுவாரசியமாக இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.  சாகித்திய அகாதெமி விருது பெற்ற வங்க நாவல் இது.


அனுபவங்கள் - மூலம் தீவ்யேந்து பாலித் - தமிழாக்கம் : புவனா நடராஜன் - நாவல் - வெளியீடு : சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443 அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18 விலை : ரூ.100 - பக்கங்கள் : 220  
 

25.1.16

மறந்து போன பக்கங்கள்...2


அழகியசிங்கர்


தி சோ வேணுகோபாலனின் கோடை வயல் தொகுப்பில் உள்ள இரண்டாவது கவிதை இது.  இத் தொகுதியில் மொத்தம் 29 கவிதைகள் உள்ளன.  ஒவ்வொரு கவிதையாகக் கொண்டு வர எண்ணத்தில் உள்ளேன். படித்து உங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டுகிறேன்.

நான் கவியானேன்

முகக் கண்ணாடியில்
முனைந்து பார்த்தேன்.
கண்களில் கவனமாய்
கவிஞனைத் தேடினேன்.
புருவ மத்தியில்
புலப்படவில்லை
சிந்தனைக் கொக்கி
சுருங்கிடும் நெற்றியில்
கோடுகட் கிடையில்
தேடினேன்:  கண்டிலன்.
நாசியின் நீளம்
சிந்தனைக் கறிகுறி
என்றனர்: அளந்தேன்.
அளவிலும் தோல்வியே!
என்ன தெரிந்தது?
நானும் மக்களின்
தொகுதியில் ஒருவனாய்
பேதம் தவிர்த்துக்
கலந்து நிற்பதே!

கவிதை பின் எப்படிக்
கனன்றுயிர்க் கின்றது?
காகிதம் எடுத்து
வேண்டுமென் றெழுத
விரும்பினாலும் வராத
வித்தையை எங்ஙனம்
விளைவித்தேன் நான்?
என்னுளே ஏதோ
குமுறிச் சிரித்தது:

பித்தோ ? வெறியோ?
எழுத்திலே வேகம்
ஏறித் துடித்தது:
நான் எதற்கெழுதினேன்?
என்செயல் இதிலே
எதுவும் இல்லை.
ஏனெனில் எனக்கே
புரிந்திட வில்லை!
ஒருக்கால் மாந்தர்
ஒவ்வொருவருமிக்
கர்ப்ப வேதனை
கொண்டவர் தாமோ?
ஏதோ சொல்ல
எழுதுகோல் எடுத்திங்கு
எழுதிய பின்னர்
ஏமாறிப் போய்
புரியாப் புதிராய்
உலவிட விட்டுக்
காகிதம் கிறுக்கிக்
'கவி-யானேனே!'

24.1.16

மறதி என்கிற பிசாசு....

அழகியசிங்கர்நேற்று காலையில் எழுந்தவுடன் கீழே போய் தண்ணீர் போட வேண்டும் என்று மாடிப்படிக்கட்டுகளில் இறங்கினேன்.  சின்ன கேட் திறந்திருந்தது. யாரோ சின்ன கேட்டைத் திறந்து வைத்து விட்டுப் போய்விட்டார்கள் என்று நினைத்தபடி படிக்கட்டுகளைத் தாண்டியபடி வந்தேன்.  கீழ் படியைத் தாண்டிவிட்டேன் என்று நினைத்து காலை வைத்தேன். தடாரென்று கீழே விழுந்தேன்.  முட்டியில் சிராய்ப்பு.  ஒரு நிமிடம் விழுந்த வாக்கில் இருந்தேன். அபபோதுதான் ஏன் இப்படி மறந்து போய் காலை வைத்தேன் என்று யோசிக்க ஆரமபித்தேன்.  

மறதி மன்னன் என்று யாருக்காவது பட்டம் கொடுக்க நினைத்தால் எனக்குக் கொடுக்கலாம்.  அவ்வளவு மறதிக்காரன்.  காலம் காலமாக இந்த மறதியுடன் போராடிக் கொண்டிருக்கிறேன்.   எங்கள் அலுவலகத்தில் டௌட் வெங்கட்ராமன் என்ற ஒருவர் உண்டு. பலரும் அவரை டௌட் வெங்கட்ராமன் என்று சொல்லும்போது ஏன் அப்படி குறிப்பிடுகிறார்கள் என்று சொன்னவர்களைக் கேட்டேன்.

''அலுவலகக் கதவுகளை எல்லாம் பூட்டிவிட்டு வெளியில் வந்து விடுவார்.  அவருக்கு திடீரென்று சந்தேகம் வந்துவிடும்.  உடனே கதவு அருகே போய்விட்டு பூட்டை இழுத்துப் பார்ப்பார்," என்றார்கள்.

மனதிற்குள் நான் சிரித்துக்கொண்டேன்.  அவருடைய வாரிசு நானாகத்தான் இருப்பேன் என்று சொல்லிக்கொண்டேன். நான் எப்படி பள்ளிக்கூடத்தில் கல்லூரிகளில் பாடங்களைப் படித்துப் பாஸ் செய்தேன் என்று யோசிப்பேன்.  சுத்தமாக என் மனதில் ஒன்று கூட நிற்காது.  மூளையில் எதுவும் பளிச்சிடாது.  திருப்பூர் கிருஷ்ணன் அன்று நளன் சரிதத்தை இரண்டு மணிநேரம் மேல்  பிரசங்கம் செய்துகொண்டே போனார்.  அங்கங்கே நளன் சரிதப் பாடல்களை மனப்பாடமாக சொல்லிக்கொண்டே போனார்.  அவர் திறமையைக் கண்டு நான் வியந்தேன்.  என்னால் அதுமாதிரி ஒன்றும் செய்ய முடியாது.  ஆனால் என்னால் பார்த்து எழுதிதான் படிக்க முடியும். 

பல விஷயங்களை நான் இப்படித்தான் மறந்திருக்கிறேன்.  இளமை காலததில் நடநத நிகழ்ச்சியை வீட்டில் யாராவது ஞாபகப்படுத்தினால் என்னால் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்க முடியாது.  எனக்கே சொன்னவர மீது ஆச்சரியமாக இருக்கும்.  அலுவலகததில் பணிபுரிநதாலும அலுவலகப் போன் எண் ஞாபகத்திற்கு வராது.  ஆனால் இலக்கிய நண்பர் கட்டுரையில் எழுதியதைப போல கல்யாண தேதி ஞாபகத்திலிருந்து மறந்து விடாது.  எந்த இடத்தில் திருமணம் நடந்தது என்று கூட சொல்ல முடியும்.  என் பெண் எப்போது பிறந்தாள், பையன் எப்போது பிறந்தான் என்பதையெல்லாம சொல்ல முடியும்.  சமீபத்தில் பிறந்த பேத்தியின் தேதியை எளிதாக ஞாபகத்தில் வைத்திருக்க முடியும். ஏன் எனில் இந்த ஆண்டு முதல்தேதிதான் பிறந்திருக்கிறாள்.

ஒருமுறை வல்லிக்கண்ணன் நான் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசினார்.  மூச்சு விடாமல் அவர் படித்த அத்தனை தமிழ் நாவல்களைப் பற்றி முன் கதைச் சுருக்கம் மாதிரி சொல்லிக்கொண்டே போனார். நான் ஆச்சரியப்பட்டுவிட்டேன்.  பல ஆண்டுகளாக அவர் படித்தப் புத்தகங்ளை அப்படி சொல்லிக்கொண்டே போனார். ஆனால் என்னால் அதுமாதிரி முடியாது. நான் ஒரு புத்தகத்தைப் படித்தால்அதைப் பற்றி உடனடியாக எழுதி விட வேண்டும். எப்போதாவது அந்தக் குறிப்புகள் திரும்பவும் படிக்கும் போது நான் என்ன படித்தேன் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முயற்சி செய்யமுடியும்.  ஒரு முறை உ வே சாமிநாதய்யர் எழுதிய என் சரிதம் புத்தகத்தைப் படித்துக்கொண்டே வந்தேன்.  அதை ஒரே நாளில் படிக்கவில்லை.  சிறிது சிறிதாக பலநாட்களாகப் படித்துக்கொண்டு வந்தேன். என் கூட முன்பு வாக் பண்ண வந்த நண்பர் ஒருவர் அந்தப் புத்தகத்திலிருந்து எதாவது ஒரு கேள்வி கேட்பார்.  நான் படித்தப் பக்கங்களில்தான் அந்த கேள்வி இருக்கும்.  எனக்கு ஞாபகத்தில் இருக்காது.  அவர் கிண்டல் செய்வார்.  அதனால்தான் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம் படிக்கும்போது நான் இன்னும் ஒருமுறை புரட்டிக் கொண்டு படிக்கவேண்டும்.

எனக்குத் தெரிந்து அசோகமித்திரன் நன்றாக ஞாபகம் வைத்துக் கொணடிருபபார்.  ஜெயமோகனைப் பற்றி ஒரு நண்பர் சொன்னார்.  அவர் எதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வார் என்று.  ஒருவரைப் பார்த்தார் என்றால் அவர் பார்த்த சமயத்தில் என்ன பேசினார் என்பதை ஞாபகத்திலிருந்து சொல்வார் என்று.  ஜெயமோகனைப் பார்த்தால் அது உண்மையா என்று கேட்கவேண்டும். 

நான் எத்தனையோ கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன்.  கூட்டத்தின் சாரம்சத்தை உடனே பதிவு செய்யவில்லை என்றால், கூட்டம் என்னை விட்டுப் போய்விடும்.  காஞ்சிபுரத்தில் வே நாராயணன் என்ற நண்பர் இருந்தார்.  அவர் பல இலக்கியக் கூட்டங்களை நடத்தினார்.  கூட்டம் நடந்து முடிந்தவுடன் அந்தக் கூட்டத்தில் யார் யார் என்ன பேசினார் என்பதை மட்டுமல்ல, கூட்டத்தில் கலந்து கொண்டவர் பேசியதையும் ஒப்பிப்பார்.  

இன்னொரு நண்பர் இருக்கிறார் அவர் ஒரு சிறுகதை படித்தாலும், ஒரு கவிதை படித்தாலும் அப்படியே திருப்பிச் சொல்லும் ஆற்றல் பெற்றவர்.  அவரை நன்கு தெரிந்த என் உறவினர் என்னிடம் சொல்வார்: üஅவருக்கு காமெரா ப்ரெயின்,ý என்று.  சுவாமி விவேகானந்தரைப் பற்றி ஒரு கதை உண்டு.  அது உண்மையா பொய்யா என்பது தெரியாது.  ஒரு புத்தகத்தை விவேகானந்தர் புரட்டிப் பார்ப்பாராம். பின் அப்படியே அந்தப் புத்தகத்திலிருந்து எந்தப் பகுதியில் எது கேட்டாலும் பதில் சொல்வாராம்.  எப்படி?

நான் 300 கவிதைகள் எழுதியிருக்கிறேன்.  இரண்டு புத்தகங்களாகக் கொண்டு வந்திருக்கிறேன்.  ஆனால் பேப்பரில் எழுதிக்கொண்டிருக்கும்போது என் கவிதை எனக்குத் தெரியும்.  பின் மனப்பாடமாக அந்தக் கவிதை எனக்கு வராது.  மேலும் இன்னும் ஒரு முறை அந்தக் கவிதையைத் திருப்பி எழுதினால் வேறு வேறு வரிகள் வந்து விழும்.  அல்லது எழுத முடியாமல் போய்விடும்.  என் கவிதையைப் படித்த யாராவது ஒருவர் (அப்படி யாரும் படித்து விட மாட்டார்கள் என்பதில் நிச்சயம் நம்பிக்கை உண்டு) என் கவிதையைத் திருப்பி சொன்னால் எனக்கே என்னை நம்ப முடியாமல் இருக்கும்.

இருந்தாலும் ஞாபக மறதியைப் பற்றி எளிதாக ஞாபகம் வைத்துக் கொள்ளும்படி நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.

இன்றுவரை 

ஏதோ ஒன்று 
ஏதோ ஒன்று
ஏதோ ஒன்று 
ஏதோ ஒன்று 
ஏதோ ஒன்று 
ஏதோ ஒன்று 
ஏதோ ஒன்று 
ஏதோ ஒன்று 
ஏதோ ஒன்று 
ஏதோ ஒன்று 
சொல்லாமலே.........

இந்தக் கவிதையில் ஒரு குடும்ப ரகசியத்தை யாரோ ஒருவர் யாருக்கோ சொல்கிறார்.  சொன்னவர் ரகசியத்தை யாரிடமும் சொல்லாதீர்கள் என்று எச்சரித்துச் சொல்கிறார்.  கேட்டவர் சரி சரி என்கிறார்.  பின் பல ஆண்டுகள் கழித்து யோசிக்கும்போது ரகசியத்தைச் சொல்லாதீர்கள் என்று சொன்னதுதான் கேடட்டவருக்கு ஞாபகத்தில் இருக்கிறது.  ரகசியம் ஞாபகத்தில் இல்லை.

ஆனால் எனக்கு சில விஷயங்களை மறப்பதில்லை.  ஆர்யா கவுடர் ரோடில் பிள்ளையார் கோயில் பக்கத்தில் ஒரு பேப்பர் கடை இருக்கும்,  அந்தக் கடையில் எல்லாப் பத்திரிகைகளும் கிடைக்கும்.  குமுதம், ஆனந்தவிகடன் மாத்திரமில்லை.  கணையாழி, காட்சிப்பிழை, காலச்சுவடு, உயிர்மை போன்ற பத்திரிகைகளும் இருக்கும்.  அங்கே என் விருட்சம் இதழ்களும் இருக்கட்டும் என்று சில பிரதிகள் விற்பதற்குக் கொடுத்தேன்.

  மேலும் நான் வெளியிட்ட புத்தகங்களையும் ஒரு பிரதி விதம் விற்கக் கொடுத்தேன். ஏன்என்றால் கிழக்குப் பதிப்பகப் புத்தகங்கள் அங்கே கண்களில் பளிச்சிட்டன.  ஆனால் என் விருட்சம் பத்திரிகை மூன்று மாதத்திற்கு ஒரு முறைதான் என்று பெயர், 4 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது 5 மாதங்களுக்கு ஒரு முறை சிலசமயம் 6 மாதங்களுக்கு ஒரு முறை என்றெல்லாம் வரத் தொடங்கி விடும்.  இப்போது 99வது இதழ் வர வேண்டும். 

அந்தக்கடைக்காரரைப் பார்த்து அடுத்த இதழ் கொண்டு வரும்போது கடையில் கொடுக்கும்போது, கண்ணிலே படாத அந்தக் கடை உரிமையாளரை தப்பித் தவறி பார்த்தால் எவ்வளவு கேவலமாகப் பார்ப்பான் என்று யாராலும் வர்ணித்து விட முடியாது.  அவன் முகத்தில் நான் விற்ற என் விருட்சம் இதழிற்கு பணம் கேட்பேன் என்ற அச்சம் இருந்துகொண்டே இருக்கும்.  அவன் கடையில் நிறையா பூனைகள் இருக்கும்.  பூனைகளைக் கொஞ்சிக்கொண்டே இருப்பான்.  ஆனால் நிமிர்ந்து என்னிடம் எதுவும் பேச மாட்டான்.  'பிறகு கணக்குப் பார்த்து தருகிறேன்.. உங்கள் பத்திரிகையைத் தேட வேண்டும்.' என்று  சொல்வதற்குள் அவன் அப்படி பிகு பண்ணிக்கொள்வான்.  அதை நம்பி நீங்கள் போய்விடுவீர்கள்.   பின் அவனிடமிருந்து நீங்கள் பணமே வாங்க முடியாது.  சரி அந்தத் தொகை பெரியா தொகையா. ரூ30 கூட கிடையாது. புத்தகங்களைச் சேர்த்தால் இன்னும் நூறோ இருநூறோ தேறும்.  அவனைப் பார்ப்பதே கஷ்டம்.  நான் வரும்போது அவன் கடையில் பணிபுரியும் பணியாளர்கள்தான் இருப்பார்கள். அவர்களிடம் கேட்டால் அவரிடம் கேளுங்கள் என்பார்கள்.  அவரிடம்தான் கேட்கவும் முடியவில்லை, பார்க்கவும் முடியவில்லையே என்றால் எனக்குத் தெரியாது என்று அழகான பதிலை சொல்லி விடுவார்கள். 
      ஒருமுறை அந்தப் பணியாளரிடம் நான் சண்டையே போட்டேன். பெரிய சீன் ஆகிவிட்டது.  அங்கு பத்திரிகை வாங்க வந்தவர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள். அங்கிருந்து வந்தபிறகுதான் யோசனை செய்தேன்.  ஏன் இதுமாதிரி செய்தோம் என்று. மனமே அமைதியாய் இரு என்று சொல்லிக் கொண்டேன். பின் அந்தக் கடைக்கே போகவில்லை.  அந்தக் கடையில் புத்தகப் பரிவர்த்தனை செய்யவில்லை.  

ஆனால் ஒவ்வொரு முறையும் நான் அந்தக் கடையைத் தாண்டும்போது எரிச்சலுடன் போவேன். ஆனால் அந்த எரிச்சலும் என்னை விட்டுப் போக ஞாபகமறதிதான் உதவ வேண்டும். 

 

22.1.16

துரத்தும் கட்அவுட்டுகள்...


அழகியசிங்கர் இன்று தை வெள்ளிக்கிழமை.  மனைவி காலையில் வெற்றிலைப் பாக்கு வாங்கிக் கொண்டு வரச் சொன்னாள்.  ஏன் நேற்றே சொல்லவில்லை என்று கோபித்துக்கொண்டேன்.  பூஜை செய்வதற்கு வெற்றிலை வேண்டுமென்ற எண்ணம் காலையில்தான் அவளிடம் உதித்தது.  எங்கள் தெரு முனையில் உள்ள கடையில் வெற்றிலை கிடைத்துவிடும். சட்டையை மாட்டிக்கொண்டு செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பினேன்.  நான் போட்டிருக்கும் செருப்பை கொண்டு ரொம்ப தூரம் நடப்பது எனக்கு சிரமமாக இருக்கும்.  எப்படியோ  முனைக் கடைக்குச் சென்றேன்.  வெற்றிலை என்று கேட்டேன்.  கடைக்காரர் இல்லை என்று கை விரித்துவிட்டார்.  பின் எங்கே கிடைக்கும் என்று கேட்டேன்.  இந்தத் தெருவில் முனையில் ஒரு கடை இருக்கிறது.  அங்கே போங்கள் என்றார்.  நானும் வேண்டா வெறுப்பாக நடந்தேன்.

அதிசயமாய் மழை தூற ஆரம்பித்தது.  ஐய்யயோ என்று மனம்பதைத்தது.  இந்த வெள்ளம் வந்த நாளிலிருந்து துணி காயப் போடுவதபோல் மாடியில் புத்தகக் கட்டை காயப் போட்டுக் கொண்டிருக்கிறேன்.  அதில் என் கவிதைப் புததகக் கட்டு, வினோதமான பறவை என்ற பெயர்.  அதெல்லாம் வெள்ளத்தில் நனைந்து விட்டது.  வேற வழியில்லை, உடனே வெற்றிலைப் பாக்கு வாங்கிக்கொண்டு ஓட்டமாய் ஓடி மாடியில் காய வைத்திருக்கும் புத்தகங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று தோன்றியது.  அந்த முனைக் கடையிலும் வெற்றிலை இல்லை என்று பதில் கிடைத்தது.

இப்போது எனக்கு திகைப்பு.  என்ன செய்வது என்று.  ஒரே வழி. எதிரில் உள்ள கோடம்பாக்கம் ரோடில் உள்ள மார்க்கெட்டில் நிச்சயம் வெற்றிலை கிடைக்கும்.  ஆனால் நடக்க வேண்டும்.  எவ்வளவு தூரம் நடக்க வேண்டுமென்று தெரியவில்லை.  தூறல் பெய்து கொண்டிருந்தது.  ஒரு பிளாட்பாரத்திலிருந்து குறுக்கே போக நினைத்தேன்.  போக முடியவில்லை. 
காரணம்.  பல கட்டைகள் போவதற்குத் தடையாக இருந்தன.  என்ன காரணமாக இருக்குமென்று மெயின் ரோடிலிருந்து அண்ணாந்து பார்த்தேன்.  பெரிய கட் அவுட்.  

இனி அவ்வளவுதான் கட் அவுட் முகத்தில்தான் முழிக்க வேண்டும். தேர்தல் நெருங்குகிறது என்று தோன்றியது.  பொதுவாக நான் கட் அவுட்டை மதிப்பதில்லை.  கட் அவுட்டின் உருவத்தையும், அதில் தென்படும் வாசகங்களையும் நான் பார்ப்பதில்லை.  ஆனால் சுவற்றில் ஒட்டப்படும் போஸ்டர்களைப் படிப்பேன்.  பெரும்பாலான போஸ்டர்களில் அமரர் ஆனவர்களின் படங்களுடன் துக்கத்தைத் தெரிவித்திருப்பார்கள். 

இப்போதெல்லாம் கட்அவுட் கல்யாண மண்டப வாசல்களில் கூட வைத்து விடுகிறார்கள்.  மணமகன், மணமகள் ஒன்றாக இணைந்து நின்று போஸ் கொடுத்திருப்பார்கள்.  மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன் அந்த மண்டபத்திற்குத்தான் சரியாக வந்திருக்கிறோம் என்று தோன்றும். 

 மணமகனும் மணமகளும் அந்த கட்அவுட்டில்தான் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.  அதன் பின் அவர்களிடம் அதுமாதிரியான சிரிப்பு தென்படாது என்று எனக்குத் தோன்றும்.

அதன் பின் புத்தகக் காட்சியில்.  எழுத்தாளர்களின் எத்தனை கட்அவுட்கள். புத்தகங்களுடன் அவர்கள் இருப்பதுபோல்.  நான் அதுமாதிரி கட்அவுட்டுகளைப் பார்க்கும்போது தாண்டி ஓடி வந்துவிடுவேன்.  எப்படியும் அந்த எழுத்தாளர்களை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கும்போது என் கடையில் சிலசமயம் நின்று கொண்டிருப்பார்கள். 

ஆனால் அரசியல் கட்சிகள் வைக்கும் கட்அவுட்டுகளை யாரும் மிஞ்ச முடியாது.  14ஆம் தேதி அப்படித்தான் மியூசிக் அக்கதெமி வழியாக வண்டியில் போய்க் கொண்டிருந்தேன்.  ஒரு கட் அவுட்.  துக்ளக் கூட்டம் அன்று மாலை நடைபெறுவதாக.  பெரிய விளம்பரம் இல்லாமல் கூட்டம் நடத்தும் இடத்தில் மட்டும் வைக்கப்பட்டிருந்தது.  எனக்கு ஆச்சரியம்.  சோ பேசப் போவதாக அறிவிப்பு.  நான் அந்தக் கூட்டத்திற்குப் போக வேண்டுமென்று தீர்மானித்தேன். முன்பெல்லாம் சோ கூட்டத்திற்குப் போயிருக்கிறேன்.  ஹால் நிரம்பி வழியும்.  ஒரே சிரிப்பலைகள் கேட்ட வண்ணம் இருக்கும்.  சில ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு அந்தக் கூட்டத்தின் மீது ஈடுபாடு இல்லாமல் போய்விட்டது.  மேலும் நான் வங்கியில் பணி புரிந்து கொண்டிருந்தேன். எனக்கு எந்தக் கூட்டமும் போக முடியாது.  ரிட்டையர்டு ஆன பிறகு கூட்டம்தான் பிரதானம் என்று ஆகிவிட்டது.  சினிமாவுக்குப் போவது, கூட்டத்திற்குப் போவது, நண்பர்களைப் பார்ப்பது என்று பொழுது போக ஆரம்பித்துள்ளது.  முன்பெல்லாம் ஆபிஸில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது ஒரு கூட்டம் போய்விட்டு வந்தவுடன், அடுத்தநாள் அபீஸ் போகவேண்டுமென்றால் ஒரு திகில் உணர்ச்சி கூடி விடும்.  ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. கூட்டமும் ஜாலியாக இருக்கிறது.  அங்கு பேசுவதைக் கேட்பதும் ஜாலியாக இருக்கிறது.  கொஞ்சம் லேட்டாக வீட்டிற்கு வந்தாலும், அடுத்தநாள்தான் இருக்கிறதே ரெஸ்ட் எடுத்துக்க, என்ன வெட்டிக் கிழிக்கப் போகிறோம் என்று தோன்றும். வாழ்க ரிட்டையர்டு வாழ்க்கை. 

14ஆம் தேதி அப்படித்தான்.  ஒரே கூட்டம்.  வெளியே பெரிய டீவி வைத்திருந்தார்கள். அங்கே பலர் கூடியிருந்தார்கள்.  ஆனால் நான் உள்ளே சென்று ஹாலில் உள்ள மாடிப்படிக்கட்டில் போய் உட்கார்ந்தேன். பல அரசியல் தலைவர்கள் பேசினார்கள்.  திமுக சார்பிலும், இடது சாரி சார்பிலும், மதிமுக சார்பிலும் யாரும் வரவில்லை.  வழக்கத்திற்கு மாறாக சோ அமர்ந்து பேசினார்.  எப்போதும் அவர் பேசும்போது நின்றுகொண்டே பேசுவார். எல்லா அரசியல் தலைவர்களும் சாமர்த்தியமாகப் பேசினார்கள். இந்த முறை யாருக்கு ஓட்டுப் போடுவது என்பதில் பெரிய குழப்பம் வாக்களர்களுக்கு இருக்கத்தான் இருக்கப்போகிறது. கவர்னர் ஆட்சி வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.

அடுத்தநாள் ராயப்பேட்டை ஹை ரோடில் வந்து கொண்டிருந்தபோது பெரிய பெரிய கட்அவுட்டுகள்.  சிரித்த முகத்துடன் ஒரு அரசியல் கட்சியின் தலைவர்.  நான் வண்டியை வேகமாக ஓட்ட ஓட்ட கட் அவுட்டுகள் என்னைத் துரத்துவதுபோல் தோன்றியது.   வேண்டாம் வேண்டாம் நான் இதுமாதிரி தப்பு செய்ய மாட்டேன்.  இந்தப் பக்கமே வர மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே ஓடினேன்.

20.1.16

மறந்து போன பக்கங்கள்....

அழகியசிங்கர்


தி சோ வேணுகோபாலன் என்ற கவிஞரின் கோடை வயல் என்ற கவிதைத்தொகுதி எழுத்து பிரசுரமாக 1965ஆம் ஆண்டு பிரசுரமானது.  7.11.1929ல் பிறந்த வேணுகோபாலன் பற்றிய செய்தி எதுவும் தெரியவில்லை.  இப்படி காணாமல் போன படைப்பாளிகள் தமிழில் அதிகம்.  இவற்றை மறந்து போன பக்கங்கள் என்ற பெயரில் கொண்டு வர உத்தேசம்.  அவ்வப்போது கொஞ்சங் கொஞ்சமாக இவருடைய கவிதைகளைக் கொண்டு வர உள்ளேன். இதேபோல் இன்னும் பலரையும் கொண்டு வர உள்ளேன். 1959ல் எழுத்துவில் கவிதை எழுத ஆரம்பித்தார்.  கோடை வயல் என்ற தொகுப்பிற்கு வைதீஸ்வரன் என்ற கவிஞர் அட்டைப் படம் தந்துள்ளார்.


சின்னஞ் சிறிய திரி.
எண்ணெய் முழுகியது.
சூடு நெருப்பாச்சு.
காணும் ஒளியாச்சு.
கண்ணில் பிடிபடலாம்.
கையில் பிடிபடுமா?
தத்துவமா? தெரியாது.
போகட்டும்.

சின்னஞ்சிறு விட்டில்.
சன்னச் சிறகாலே
புயலைச் சூல்கொண்ட
காற்றைக் கிழித்தது.
எப்படி? தெரியாது.
போகட்டும்.

ஒளிமோகம் கொண்டது
களிகொண்ட விட்டில்.
காற்றைச் சிறகின்மேல்
ஏற்றிச் சுழன்றது.
வட்டம் குறுகியது
சொட்டாமல்த் திரிநுனியில்
நிற்கும் ஒளித்திவலை,
'மெய்' தீண்டும் காட்சி,
'சொய்' என்னும் விசும்பல்
ஒளியின் குரலா?
ஊனின் ஓலமா?
எரியாமல் திரியில்
கருகியது சிறகு.

என்னடா இதிலும்
தததுவ மயக்கா?
தெரியாது
போகட்டும்.
மீண்டும்  ஒரு வீட்டில..
தூண்டாத் திரியின் மேல்
பாய்ந்து விழுந்தது.
'சொய' என்னும் விசும்பல்
தேய்ந்து கருகியது.
'மை' யாச்சு சிறகு.
வெட்டவெளிவட்டம்
முட்டிச் சிதறிவிழும்
சுடர்த்தலை அழுத்திக்
கபந்தனாய் விட்டதா?
ஒளியெங்கே?
இருளில்
'மை'ச் சிறகில் கூடி
வட்டம் பெரிதாக்கிக்
கருகியது ஒளியும்.
இருள்கூட ஒளியா?
கண்ணில் பிடிபடலாம்.
கையில் பிடிபடுமா?
வெற்றியா? தோல்வியா?
அதுவும் யாருக்கு?
ஐயையோ இதிலும்
தத்துவப்  பொருளா?
தெரியாது
போகட்டும்.

தத்துவத் திரையை
ஒதுக்கிப் பார்த்தேன்
புரிந்தது கொஞ்சம்.
கொஞ்சமும் புரிந்ததா?
தெரியாது
போகட்டும்.

எழுத்தாளன் எங்கே?
கேட்கப் போனேன்.
நடப்பூர் தாண்டி
நினைவூர் கடந்தபின்
கற்பனைத் தோப்பிலே
கள்ளுக் கடையில்
கவிஞனைக் கண்டேன்.
போதைக் கிறக்கம்
எழுதிய கவிதை
எங்கே கிடைத்தது?
கேள்வி குழைந்தது.
பதில் ஒரு குமறல்.

இருட்குகை ஒன்றில்
இலககியப் பொருளில்
சோதனை நடந்ததாம்.
தட்டித் தடவினான்.
சிந்தனைக் கையில்
வந்ததை எடுத்து
வீசினான் வெளியில்.
இருளில் குமைந்த
பொருளை ஒளியில்
கண்டவன் திகைத்தான்
தத்துவம் எங்கே?
பொருளும் மெய்யா?
பயனும் உண்டா?
..........................

எனக்குத் தெரியவே
தெரியாது
கவிஞன் மதுவின்
அவதியில் இருப்பதால்
தெரியாது.18.1.16

புத்தக விமர்சனம் 14


அழகியசிங்கர்
சமீபத்தில் நினைவோடை என்ற பெயரில் சுந்தர ராமசாமி அவர்களுடைய புத்தகம் படித்தேன்.  இந்தப் பெயரில் க நா சு வைப் பற்றி அவர் எழுதிய புத்தகத்தைத்தான் படித்து முடித்தேன்.  சுந்தர ராமசாமி பேசியதை அரவிந்தன் அவர்கள் பதிவு செய்து அதை ஒரு அற்புதமான புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார்.  இந்தப் புத்தகம் படிக்கும்போது நேரிடையாகவே சுந்தரராமசாமி க நா சுவைப் பற்றி சொல்வதுபோல் இருக்கிறது. 2003ஆம் ஆண்டு வெளிவந்த புததகம் இது.

இந்தப் புத்தகத்தில் இன்னொரு ஆச்சரியம்.  அரவிந்தன் ரொம்ப கேள்விகளைக் கேட்டு சுந்தர ராமசாமியை தொந்தரவு செய்யவில்லை. உண்மையில் சு ரா தான் க நா சுவைப் பற்றி தனக்குத் தோன்றியதையெல்லாம் பேசிக் கொண்டே போகிறார். 100 பக்கங்களுக்கு மேல் இந்தப் புத்தகம் போய்க் கொண்டிருக்கிறது.

இந்தத் தலைப்பில் பல புத்தகங்கள் வந்த சமயத்தில் நான் சிலரைப் பற்றி சுரா எழுதியதைப் படித்திருக்கிறேன்.  இன்னும் இரண்டு புத்தகங்களான பிரமிள் பற்றி சுரா எழுதியது, கிருஷ்ணன் நம்பியைப் பற்றி அவர் சொல்ல சொல்ல எழுதிய புத்தகங்களை முன்பே  படித்திருக்கிறேன்.  இப் புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் எனக்கு அந்தப் புத்தகங்களையும் திரும்பவும் எடுத்துப் படிக்க வேண்டுமென்று தோன்றுகிறது. 

எதிலும் மிக உணர்ச்சி இல்லாமலே சு ரா அவர்கள் அவருடைன் பழகிய எழுத்தாள நண்பர்களைப் பற்றி எழுதியிருக்கிறார். இந்தப் பதிவில் பதிவின் நம்பகத்தன்மையை சுரா சொல்வதன் மூலம் உறுதிப் படுத்தி உள்ளார்.

இந்தப் புத்தகம் மூலம் க நா சு வைப் பற்றி தெரியாதவர்கள் அறிந்து கொள்ள முயற்சி செய்யும்போது சில விஷயங்கள் ஆச்சரியமாகவே இருக்கும். க நா சுவைப் பற்றி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று படிப்பவர்கள் நம்புவார்கள்.  உண்மையும்அ அதுதான்.

ஒரு நாள் என்ற க நா சு நாவல் மூலம் சுராவிற்கு க நா சு எப்படி அறிமுகம் ஆகிறார் என்பதைச் சொல்லிக் கொண்டே போகிறார்.   க நா சு வை மட்டும் இப் புததகம் மூலம் சொல்ல வரவில்லை.  புதுமைப் பித்தன் பற்றியும், மௌனியைப் பற்றியும் சொல்கிறார்.  இன்னும் பலரைப் பற்றியும் அவர் சொல்லிக் கொண்டே போகிறார். பேச்சு வாக்கில் இதையெல்லாம் சொல்வதுபோல் தெளிவாக சொல்லிக் கொண்டே போகிறார்.

வெள்ளமடம் என்ற இடத்தில் ஒரு பள்ளிக்கூட திறப்பு விழாவிற்கு சுந்தர ராமசாமி அவருடைய மாமாவுடன் போகிறார்.  அப்போது அவர் பார்த்த புதுமைப் பித்தனை இப்படி வர்ணிக்கிறார்.

''எங்களது வரிசையில் ஒருவர் உட்கார்ந்து கொண்டிருந்தார்.  அவரது உடல் அசைவுகளும் சிரிக்கிற விதங்களுமெல்லாம் கவனிக்கும்படியாக இருந்தன.  இதைத் தவிர அவரைப் பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை.  ரகுநாதனுடைய 'வாழ்க்கை வரலாறு' படித்தபோது பு.பி பற்றி ஒரு இடத்தில் வர்ணித்திருப்பார்.  அது அந்தக் கூட்டத்தில் நான் பார்த்த உருவத்தோடு ரொம்பவும் பொருந்தி வருவதாக இருந்தது."

சு ரா அவர்கள் புதுமைப்பித்தனைப் பார்த்ததைப் பற்றி உறுதிப் படுத்த கமலா விருத்தாசலத்திடம் கேட்கிறார்.  வெள்ளை மடததிற்கு பு பி வந்தாரா என்பததான் கேள்வி.  ஆனால் அவர் கேள்வியை யாரும் உறுதிப் படுத்தவில்லை.

ஏன் சு ரா  புதுமைப் பித்தனைப் பற்றி இப்படி விஜாரிக்கிறார் என்றால் அவர் பார்க்க விரும்பிய எழுத்தாளர்களில் ஒருவர் புதுமைப்பித்தன், இன்னொருவர் க நா சு. 

இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது க நா சுவை சந்தித்த நிகழ்ச்சியையே இவ்வளவு சுவாரசியமாக சு ரா விவரிப்பார் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.  திருவனந்தபுரத்தில் தங்கியிருந்த க நா சுவைப் பார்க்க சு ராவும் நம்பியும் செய்கிற முயற்சியை ஒரு கதைபோல் விவரித்துக் கொண்டு போகிறார்.

பின் அவர்கள் இருவரும் சேர்ந்து க நா சு வை ஒரு பள்ளிக்கூடத்தில் பேச ஏற்பாடு செய்கிறார்.  அந்தப் பள்ளிக்கூடத்தில் இருப்பவர்களுக்கு க நா சுவைப்பற்றி தெரிந்திருக்க வில்லை.  ஆனால் கே என் எஸ் என்ற பெயர் தெரிந்திருக்கிறது.  க நா சு ஆங்கிலத்திலும்ட எழுதுவதால் இந்தப் பெயர் தெரிந்திருக்கிறது.  க நா சு திறமையாகப் பேசுவார் என்று எதிர்பார்த்த சு ராவுக்கும் நம்பிக்கும் பெரிய ஏமாற்றம். அந்தக் கூட்டத்தில் க நா சு சரியாகவே பேசவில்லை.

இந்தப் புத்தகத்தில் க நா சு தான் புதுக்கவிதை என்ற பதச் சேர்க்கையை முதன் முதலாக உருவாக்கியவர் என்று குறிப்பிடுகிறார் சுரா.  

க நா சு வைப் பற்றி பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.  க நா சு எந்த ஊருக்குச் சென்றாலும் ஒரு இடத்தில் தங்கி விட்டால் அந்த ஊரைச் சுற்றிப் பார்க்க விரும்ப மாட்டார்.  நாகர் கோவிலில் 15 நாட்கள் வந்து தங்குவதாக சொல்லிவிட்டு ஒரு மாதத்திற்கு மேல் தங்கி விட்டுச் சென்றிருக்கிறார்.  க நா சு அவர் குடும்பத்தைப் பற்றி எந்தத் தகவலையும் யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை என்று குறிப்பிடுகிறார் சுரா.  

ஒரு இடத்தில் க நா சு வைப் பற்றி சுரா இப்படி குறிப்பிடுகிறார்:

"அவரிடம் ஒரு சின்னப் பெட்டி மட்டுமே இருந்தது.  வேறெதுவும் கிடையாது. அவரிடம இருக்கும் ஆடைகளும் குறைவு.  அதைத் தூக்கிக்கொண்டு போய்விடுவார்.  அந்தப் பெட்டியை அறையிலேயே வைத்துவிடடு போங்கள் என்று நாங்கள் சொல்ல முடியாது.  அவர் திரும்பி வராமலேயே போய் விடுவார்.  போய்விட்டால் என்றால் அவரிடமிருந்து ஒரு கடுதாசிகூட வராது.  அவருடைய சுபாவம் அப்படி."

இதைச் சொல்லும்போது சுரா கநாசுவைப் பற்றி எந்தப் புகாரும் செய்யவில்லை.  
இந்தப் புத்தகத்தில் சுந்தர ராமசாமி க நா சு படைப்புகளைப் பற்றி கூறும் சில கருத்துக்களுடன் நான் முரண்படுகிறேன்.  

கநாசு ஒரு முக்கியமான இலக்கிய விமர்சகர் என்று சொல்லமுடியாவிட்டாலும் கூட ஒரு மாற்றத்தை உருவாக்கிய இலக்கிய விமர்சகர் என்கிறார்.  இந்தக் கருத்துடன் நான் உடன் படவில்லை.  வேறு ஒருவர் எழுதிய புத்தகத்தைப் பற்றி அபிப்பிராயம் சொல்லக் கூட இன்றைய தமிழ்ச் சூழ்நிலையில் யாரும் இருப்பதில்லை.  கநாசுவோ தமிழ் புத்தகங்களையே படிக்காத காலத்தில்  தமிழில் எழுதிய பல எழுத்தாளர்களை அறிமுகப் படுத்தி உள்ளார்.  சுந்தர ராமசாமியின் எழுத்தைக் கூட அவர் சிலாகித்து எழுதி உள்ளார்.

தமிழ்ச் சூழலைப் பார்க்கும்போது இரண்டு மூன்று நல்ல நாவல்களை நன்றாகவே எழுதி இருக்கிறார் என்கிறார் சு ரா.  சிறந்த நாவலை அவரால் உருவாக்க முடிந்திருக்கவில்லை என்றும் குறிபபிடுகிறார்.  இந்தக் கருத்துடனும் நான் உடன்படவில்லை.  இரண்டு மூன்று நாவல்கள் மட்டுமல்ல பல நாவல்களை அவர் எழுதியிருக்கிறார்.  உலக தரத்திற்கு சொல்லும்படியாகவும் அவர் நாவல்கள் இன்றும் இருக்கின்றன.  

கநாசுவின் சிறுகதைகள் எனக்கு அவ்வளவு உயர்வாகத் தெரியவில்லை என்று சு ரா குறிப்பிடுகிறார்.  இந்தக் கருத்துடனும் நான் சுராவிடமிருந்து முரண் படுகிறேன். க நா சுவின் ஆடரங்கு என்ற  
சிறுகதைத் தொகுதியே        சிறப்பானது.  பல தரமான சிறுகதைகளை அவர் எழுதியிருக்கிறார்.  

க நா சு மொழிபெயர்ப்புகளை சரளமாக எழுதி உள்ளதாக சுரா அவர்கள் குறிப்பிடுகிறார்.  ஒரு மொழிபெயர்ப்பு என்பது எழுதப் படுகிற மொழியில் எல்லோரும் வாசித்துப் பழகும்படி எழுதப்பட வேண்டும்.  அந்த முயற்சியை க நா சு எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் செய்திருககிறார் என்று தோன்றுகிறது.

இறுதியில் க.நாசுவின் பங்களிப்பாக சுரா கருதுவது புதுக்கவிதைக்கு அவர் ஆற்றியது.  இதன் மூலம் தமிழில் பல முயற்சிகளில் ஈடுபட்ட க நா சுவை புதுக்கவிதையுடன் முடித்து விட்டார்.அப்படிச் சொல்வது சற்று வருத்தமாகத்தான் உள்ளது.  

க நா சுவைப் பற்றி தன்னுடைய அபிப்பிராயங்களை சு ரா சொன்னாலும், க நா சு மீது அளவு கடந்த மரியாதை வைத்திருந்தார்.
கநாசு மறைவைக் குறித்து அவர் இப்படி எழுதுகிறார்:
"அவரது மறைவு எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகத்தான் இருந்தது.  என்னால் தாங்கிக்கொள்ள முடிந்திருக்கவில்லை. அவரைப் போன்ற ஒரு பெரிய மனிதரைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்ததைப் பெரிய விஷயமாகத்தான் மதிக்கிறேன்."

இதைப் படிக்கும்போது மேன்மையான ஒருவரைப் பற்றி மேன்மையானவர் எழுதியதாகத்தான் தோன்றியது.  

சுந்தர ராமசாமி - நினைவோடை - க நா சு -தொகுப்பு : அரவிந்தன் - பக்கம்  110 - முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2003 - விலை ரூ.50 - வெளியீடு : ôலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் பி லிட், 669 கே பி சாலை, நாகர்கோவில் 629001 - தொலைபேசி எண் : 04652-278525

15.1.16

என் பூனைகள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கிதமிழாக்கம்:   ராமலக்ஷ்மிறிவேன். நான் அறிவேன்.
வரையறுக்கப்பட்ட அவைகளை,
அவற்றின் வேறுபட்ட தேவைகளை 
மற்றும்  கவலைகளை.

ஆயினும் அவற்றைக் கவனித்து
அவற்றிடமிருந்து கற்றுக் கொள்கிறேன்.
சிறிதளவே அவை தெரிந்து வைத்திருப்பது
எனக்குப் பிடிக்கிறது, 
அவை அறிந்தவை மிக ஆழமானவை.

அவை முறையிடும் 
ஆனால் கவலைப் படுவதில்லை.
ஆச்சரியமூட்டும் மிடுக்குடன்
அவை நடை போடும்.
நேரடியான எளிமையுடன்
அவை உறங்கி விடுவது
மனிதர்களால் புரிந்து
கொள்ளவே முடியாத ஒன்று.

அவற்றின் கண்கள்
நம் கண்களை விட
மிக அழகானவை.
தயக்கமோ 
உறுத்தலோ இன்றி
ஒரு நாளில்
இருபது மணி நேரத்திற்கு
உறங்கக் கூடியவை.

எப்போதெல்லாம்
சோர்வாக உணருகிறேனோ
அப்போதெல்லாம் நான் செய்ய வேண்டியது
என் பூனைகளைக் கவனிப்பதுதான்.
என் தைரியம் திரும்பி வந்து விடுகிறது.

இந்தப் பிராணிகளை
ஆராய்ச்சி செய்கிறேன்.

அவை என்னுடைய
ஆசான்கள்.

*

14.1.16

13வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரசித்தப் படங்கள்


அழகியசிங்கர்ஒரு வழியாக 13வது சர்வதேச திரைப்பட விழா  13.01.2015 அன்று  முடிவடைந்துள்ளது.  6ஆம் தேதியிலிருந்து 13ம் தேதி வரை 12 படங்கள் பார்த்துவிட்டேன். உட்லன்ட் தியேட்டரில் ஐந்து படங்களும், உடலன்ட் சிம்போனியில் 3 படமும், ஆர்கேவியில் 3 படங்களும், ஐநக்ஸில் 1 படமும் பார்த்து முடித்துவிட்டேன்.  ஒரு நாளில் இரண்டு படங்கள் பார்ப்பது எனக்கு இயலாது மாதிரியே தோன்றியது.  

ஒவ்வொரு தியேட்டரிலும் கூட்டம் அதிகம்.  சிலசமயம் தாமதமாக வந்தால் உட்கார இடத்தைக் கண்டுபிடிக்க சற்று சிரமமாக இருக்கும்.  படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது சிலபேர்கள் படத்தை முழுதாகப் பார்க்காமல் தியேட்டரை விட்டுப் போய்க் கொண்டிருப்பார்கள். 

ஒரே இடத்தில் உட்கார்ந்து அசையாமல் தலையைத் தூக்கி வைத்துக் கொண்டு பார்க்கிற அனுபவத்தில் எனக்கு இடுப்பு வலி வந்துவிடும்.  சிறிது நேரம் வலியுடன் படம் பார்க்க வேண்டியிருக்கும்.  எப்போதும் என்னால் நெருக்கமாக ஓரிடத்தில் ரொம்ப நேரம் உட்கார முடிந்ததில்லை.  அப்புறம் தலை. அசையாமல் வைத்திருப்பதால் எழுந்திருந்து நகரும்போது ஜாக்கிரதையாக நடக்க வேண்டி உள்ளது.  

மேலும் சினிமா பார்க்க வரும்போது ஒரு குற்ற உணர்ச்சி இருந்து கொண்டு இருக்கும்.  என் அப்பாதான் அது.  93 வயதான அவரை வீட்டில் விட்டுவிட்டு வரவேண்டும்.  அவர் சில நேரம் தானாகவே சாப்பாடை எடுத்துச் சாப்பிடுவார்.  சில நேரம் சாப்பிட மாட்டார்.  அவரைக் கூப்பிட்டு தொந்தரவு செய்ய வேண்டும்.  அதனால் தொடர்ந்து சினிமா தியேட்டரில் இரண்டு சினிமாக்களைப் பார்ப்பது சற்று சிரமமாக இருக்கும்.

13ஆம் தேதி காலையில் ஆர்க்கேவியில் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.  இதுவரை எத்தனைப் படங்கள் பார்த்தீர்கள் என்று கேட்டேன்.  45 என்றார்.  எனக்கு அதைக் கேட்க ஆச்சரியமாக இருந்தது.  அவருக்கும் என் வயது.  ஆனால் அவருக்கு உபாதைகள் என்னை விட குறைவாக இருக்கும்போல் தோன்றியது.  ஆனால் அவர் சினிமாவில் தொடர்பு உடையவர்.  எடிட்டிங் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  அவர் ஒரு தகவலை சொன்னார்.  ஏதோ ஒரு படத்தில் காமெரா வர பிரச்சினையாகிவிட்டதாம்.  உடனே செல்போனில் அந்தக் காட்சியைப் படம் எடுத்துவிட்டார்களாம்.  அந்த மாதிரி காட்சி நன்றாக வந்ததா என்று நான் கேட்டேன்.  நன்றாகவே வந்துள்ளது. பார்க்கிறவர்களுக்குத் தெரியாது என்றார்.  

உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கில் சினிமாப் படங்கள் எடுக்கிறார்கள்.  அதில் ஒரு துளிதான் சர்வதேசத் திரைப்படம் என்பது.  அந்தத் துளியில் உள்ள அத்தனைப் படங்களையும் பார்க்க முடியவில்லை.  எதாவது சந்தர்ப்பத்தில் இன்னும் சில படங்களைப் பார்க்க முடியும் என்று தோன்றுகிறது.  

நடிப்பவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள் என்று பலர் இதில் ஈடுபட்டு படத்தைக் கொண்டு வருகிறார்கள்.  ஆனால் யாருக்காக?  பார்வையாளர்களுக்காகத்தான். பார்வையாளன் தனக்கு விருப்பமான நேரத்தில் இந்தச் சினிமாக்களைப் பார்க்கிறான்.  இந்தப் பார்வையாளனை எல்லா சினிமாக்களும் கவர்ந்து விட முடியுமா?  கேள்விகுறிதான். பார்வையாளன்தான் எல்லா விதங்களிலும் சிறந்தவன்.  அவனுக்கு ஒரு படத்தை எடுப்பவரின் வலி என்ன என்று தெரியாது.  அதன் அவதி தெரியாது. அவன் சுதந்திரமானவன். விரும்பினால் அவன் ஒரு படத்தைப் பார்க்க முடியும். அல்லது வேண்டாமென்று விட்டுவிட முடியும்.  படத்தை எடுப்பவர்கள் பணத்தை அதில் போட்டு பணம் கிடைக்குமா என்று எதிர் பார்க்கிறார்கள். பலர் நடித்தாலும் பார்வையாளன்தான் சொல்ல வேண்டும்.  அந்தப் படத்தில் அந்த நடிகர் நன்றாக நடித்துள்ளார் என்று.  திரும்பவும் சொல்கிறேன்  நடிப்பவர்களை விட மிகச் சுதந்திரமானவன் பார்வையாளன்தான்.   எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் அறுபது ஆண்டு இறுதியிலிருந்து சினிமாப் படங்கைளையே பார்க்கவில்லை என்று சொன்னார்.  பெரும்பாலோருக்கு தியேட்டரில் சினிமா பார்ப்பது குறைந்து விட்டது.  குறிப்பாக வயதானவர்களுக்கு தியேட்டரில் சினிமா பார்க்க முடியவில்லை. நேற்று  ஐநாக்ஸ் என்ற தியேட்டரில் ஒரு படம் பார்த்தேன்.  தியேட்டரில் உள்ளே உட்கார முடியவில்லை.  ஒரே ஏசி.  யூரின் போக நடு படத்தில் எழுந்து போக வேண்டியிருந்தது.  படத்தில் நடிப்பவர்களைப் பற்றி யாராவது எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். 

 இல்லாவிட்டால் மறந்து விடுவார்கள்.  இதன் மூலம் சிலருக்கு புகழ் கிடைக்கும்.  அதுவும் மாயை. நடிடத்துக் கொண்டே இருக்க வேண்டும்

.  அப்போதுதான் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். நடிப்பில் சிறந்த பெரிய நகைச்சுவை நடிகர் ஒருவரை பார்த்திருக்கிறேன்.  நேரில் அவர் பேசுவதைக் கேட்கும்போது  அவர் சாதாரண அறிவு கூட இல்லாதவர் என்று தோன்றியது.  

இதுமாதிரியான படங்களைப் பார்ப்பதன் முக்கியமான விஷயம்.  இடம்.   உலகில் வெவ்வேறு இடங்களை நாம் நேரில் பார்க்க முடியாது. இது மாதிரியான படங்கள் மூலமாகத்தான் பார்க்க முடியும்.    மொழி.  அந்த மொழி நமக்குப் புரியாவிட்டாலும், அந்த பேச்சு மொழி மூலம் எதுமாதிரியான உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதைக் கணிக்க முடிகிறது.  மனிதர்கள்.  ஆண்கள் பெண்கள் குழந்தைகள்.  அவர்கள் வாழ்க்கை முறை.  சினிமா மூலம் இன்னொரு வாழ்க்கை முறையை யோசித்துப் பார்க்கலாம்.   

இதுமாதிரியான உலகச் சினிமாக்கள் தமிழில் படம் எடுப்பவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்பதை நிச்சயமாக சொல்லமுடியும்.  பல படங்களைப் பார்க்கும்போது மிகச் சாதாரண விஷயங்களைக் கூட எப்படி போரடிக்காமல் படம் எடுக்க முடிகிறது என்பதையும் இது காட்டுகிறது.  பல விதங்களில் படம் எடுக்கலாம் என்பதை யோசிக்க வைக்கிறது.  சுவாரசியமாக எந்தக் கதையும் படம் மூலம் சொல்லலாம் என்றும் தோன்றுகிறது.  டாக்ஸி என்ற ஒரு இரானியப் படத்தில் டாக்ஸி ஓட்டிக்கொண்டு போவதிலேயே ஒரு படத்தை எடுக்க முடியும் என்பதை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தேன். 

 அதுவும் போரடிக்காமல் படத்தை எடுத்துள்ளார்கள். டாக்ஸியில் இருப்பவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். 

பெரும்பாலான படங்களில் சாப்பிடுவதையே காட்டுகிறார்கள்.  எதாவது கிளப்பில், அல்லது வீட்டில்.  குடித்துக்கொண்டே இருக்கிறார்கள், அல்லது சிகரெட் பிடித்துக்கொண்டே இருக்கிறார்கள்.  அதெல்லாம் மீறி வசீகரமாகவே இந்தப் படங்கள் எடுக்கப் படுகின்றன.

11.1.16

13வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரசித்தப் படங்கள்...2


அழகியசிங்கர்திரைப்படத் துவக்க விழா அன்று காட்டிய படம் விக்டோரியா என்ற படம்.  இந்தப் படம் பார்க்க ஏகப்பட்ட கூட்டம்.  நான் சற்று தாமதமாகச் சென்றதால் முண்டி அடித்துக்கொண்டு போக வேண்டி உள்ளது.  உள்ளே விட முடியாது என்று சொல்லி விட்டார்கள். பின் ஒரு தள்ளு தள்ளி உள்ளே சென்றேன். ஏற்கனவே சுந்தர்ராஜன் அவர்களிடம் சொன்னதால் அவர் இடம் பிடித்து வைத்திருந்தார்.

மிக எளிமையாக துவக்க விழா நடந்தது.  யாரும் பெரிய வார்த்தைகளையே பேசவில்லை.  மேலும் படம் ஆரம்பிக்க வேண்டுமென்பதால் கொஞ்சமாகப் பேசினார்கள் என்று நினைக்கிறேன்.  தமிழ் வாழ்த்துடன் ஆரம்பித்தது விழா.  குத்துவிளக்கு ஏற்றினார்கள்.  விக்டோரியா படம் எடுத்தவரும் இந்த விழாவில் கலந்து கொண்டு அந்தப் படத்தைப் பற்றி சில வார்த்தைகள் சொன்னார்.

இந்த விக்டோரியா என்ற படம் பல பரிசுப் போட்டிகளில் சர்வதேச அளவில் கலந்து கொண்டுள்ளது.  பெர்லின் திரைப்பட விழாவில் வெள்ளிக்கரடி உள்ளிட்ட ஆறுவிதமான பரிசுகள் பெற்றுள்ளது. ஒளிப்பதிவாளர் சுடுர்லா பிராண்ட் கோர்விலன் தன் கேமராவில் ஒரே ஷாட்டில் படத்தை எடுத்து சாதனை பண்ணி உள்ளார்.  அதாவது ஒரு நகரம், ஒரு இரவு, ஒரு ஷாட் என்று இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பெர்லின் என்ற இடத்தில் ஒரு இரவில் எடுக்கப்பட்டுள்ளது.  இது ஆச்சரியம்தான்.  லையா கோஸ்டா என்ற நடிகை முதல் காட்சியிலிருந்து கடைசி வரை நடித்திருக்கிறார். ஒரு நடனவிடுதியில்தான் ஆரம்ப காட்சி ஆரம்பமாகிறது.  விக்டோரியா என்ற பாத்திரத்தில் நடிக்கும் அந்த நடிகை அந்த இரவில் அந்த விடுதியில் இருட்டில் பலருடன் நடனமாடிக் கொண்டிருக்கிறாள். 
இந்தக் காட்சியின் முடிவில் விக்டோரியா அந்த இடத்தை விட்டு வெளியில் வருகிறாள்.  வெளியில் நான்கு இளைஞர்கள் குடித்துவிட்டு கலாட்டா செய்தவண்ணம் இருக்கிறார்கள்.  விக்டோரியாவை அவர்கள் பார்த்தவுடன், அவளுடன் பேசுகிறார்கள்.  அவளுக்கு ஜெர்மன் மொழி தெரியாது.  அவர்களுக்கு ஜெர்மனியைத் தவிர வேற மொழி தெரியாது.  அதில் ஒருவனான சோன் அவளுடன் நெருக்கமாகப் பேச்சு கொடுக்கிறான். இது மாதிரி இந்தியா மாதிரியான ஒரு இடத்தில் நடந்தால், அதுவும் அந்தத் தனிமையான இரவு நேரத்தில், பாலியல் பலாத்காரம் தான் நடந்திருக்கும். 

படத்தை வேறுவிதமாக இந்தப் படத்தை இயக்கியவர் எடுத்திருக்க வேண்டி வரும்.  அவர்கள் நால்வரும் சின்ன சின்ன திருட்டுக்களை செய்பவர்கள். ''புதிய கார் வாங்கியிருக்கிறோம், வருகிறாயா?" என்று விக்டோரியாவை கூப்பிடுகிறார்கள்.  அதில் ஒருவன் விக்டோரியா முன் சர்கஸ் மாதிரி உடலை வளைத்து நடித்துக் காட்டுகிறான்.  மேலே என்ன பேசுவது என்று தெரியாதபோது, இன்னொரு கிளப்பில்  அவளை குடிக்க சோன் கூப்பிடுகிறான். அவளும் அவர்களுடன் சென்று கூரை மீது அமர்ந்து குடிக்கிறாள்.

திரும்பவும் சோனை விக்டோரியா அவள் பணிபுரியம் இடத்திற்கு அழைத்து வருகிறாள்.  இந்தப் படத்தில் பாதிவரை அவர்கள் நாவல்வரும் பேசிக் கொண்டே இருப்பதுதான்.  சோனும் விக்டோரியாவும் பேசிக்கொண்டிருப்பதை சிறப்பாக படம் எடுத்திருப்பார்கள்.  சோனிற்கு பியானோ வாசிக்கத் தெரியாது.  மோஸர்ட் என் உறவினன் என்பான். 

 விக்டோரியா அவனுக்கு பியோனாவை வாசித்துக் காண்பிப்பாள்.   ஒரு கட்டத்தில சோன் அவளைப் பிரிந்து செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்தப் படத்தின் அடுத்தக் கட்டம் இப்போது நடக்கிறது.  

சின்ன சின்ன திருட்டுக்களில் ஈடுபட்ட அவர்கள் ஒரு பெரிய திருட்டை நடத்தும்படியான சூழலுக்கு மாறுகிறார்கள்.  கட்டாயத்தின் பேரில் பெரிய கொள்ளைக் கூட்டத்தின் கட்டளைக்காக இதை செய்யுமபடி நேர்கிறது.  சோன் நண்பன் பாக்ஸருக்காகவும் அவன் சிறையில் இருந்தபோது நேர்ந்த நிர்பந்தம் பேரிலும் காலை நேரத்தில் ஒரு வங்கியில் கொள்ளை நடத்த ஒப்புக்கொள்கிறார்கள்.  இந்தத் திருட்டிற்கு விக்டோரியா உடந்தையாகப் பயன்படுத்தப்படுகிறாள். ஏன் எனில் அவர்கள் நால்வரில் ஒருவன் ரொம்பவும் குடித்து விட்டிருப்பான். அவள் அவர்களுக்காக கார் ஓட்டிக்கொண்டு வருகிறாள்.

பணம் கொள்ளை அடித்துக்கொண்டு அந்த இடத்தில் இருந்து அவர்கள் தப்பித்து வரும்போது எல்லாமே குழப்பமாக மாறி விடுகிறது.  அவர்கள் தப்பித்து வந்து  தங்கியிருக்கும் இடத்தில் போலீஸ் சூழ்ந்து விடுகிறது. துப்பாக்கி சூட்டில் சோன் நண்பர்கள் தப்பிக்க முடியவில்லை.  சோனும், விக்டோரியாவும் போலீûஸ ஏமாற்றி அந்த இடத்திலிருந்து தப்பித்து விடுகிறார்கள்.  போலீசுடன் நடந்த கலவரத்தில், அவன் நண்பன் பாக்ஸர் மூலம் சோன் கையில் 50000 யூரோ கிடைக்கிறது.  சோன் வயிற்றில் துப்பாக்கி சூட்டுடன் விக்டோரியாவுடன் வாடகைக் காரில் அந்த இடத்திலிருந்து தப்பித்து ஒரு ஓட்டலுக்குச் செல்கிறான்.  அங்கே அறை எடுத்துக்கொண்டு தங்குகிறார்கள்.  சோனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நினைக்கிறாள் விக்டோரியா.

அங்கே தான் உயிர் பிழைக்க முடியாது என்று நினைத்த சோன் தன் கையில் உள்ள பணத்தை எடுத்துக்கொண்டு விக்டோரியாவை போய்விடும்படி சொல்கிறான்.  விக்டோரியா ஆம்புலன்ஸிற்கு போன் செய்கிறாள்.  விக்úடிôரியாவின் கையைப் பிடித்தபடி சோன் இறந்து விடுகிறான்.  சோனின் மரணத்தைப் பார்த்து விக்டோரியா கண்கலங்குகிறாள். 
 அவள் உடல் முழுவதும் வேர்த்துக் கொட்டுகிறது.  செய்வதறியாது திகைக்கிறாள். இநத இடத்தில் லையா கோஸ்டா என்ற நடிகை மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.   வார்த்தைகளை வெளிப்படுத்தாமல் மனக்குமறலை வெளிப்படுத்துகிறார்.  பின் ஓட்டல்அறையிலிருநது பணத்தை எடுத்துக் கொண்டு  ஓட்டலை விட்டே விக்டோரியா போய்விடுகிறாள்

.  அறையில் போன் மணி அடித்துக் கொண்டிருக்கிறது.  அவள்  தெருவில் நடந்து செல்வதுடன் படம் முடிவடைகிறது.  எதிர்பாராத திருப்பத்திற்கு ஆளாகி விக்டோரியா மாட்டிக் கொள்வதுதான் இந்தக் கதை.  பரபரப்புடன் இந்தப் படம் முடிவடைகிறது.   கொஞ்சங்கூட ஆபாசமில்லாமல் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.