31.5.09

இரண்டு கவிதைகள்
1. முகம்விபத்தில் அடிபட்டவனைத் தூக்கிச் செல்லும்

அவசர ஊர்தி கடந்துபோனது

வெட்டப்பட்ட வாழைமரமெனத் தொங்கிய

உடல்முழுதும் ரத்தக்கோலம்

அவன் உயிர்பிழைத்துவிட வேண்டுமென

மனமுருக வேண்டிக்கொண்டேன்

என் பயணம் முழுதும்

நிழலென மிதந்துகொண்டிருந்தது

அவன் சிதைந்த முகம்

அவன் காதலி அவன் அலுவலகம்

அவனை நம்பியிருக்கும் தம்பிதங்கைகள்

எல்லாரைப் பற்றியும் நினைவு வந்தது

அவன் உயிர்

மிகமுக்கியமானது என்று சொல்லிக்கொண்டேன்

ஆறுதலாக ஒரு சொல் மிதக்க

அஞ்சவைத்து மிதந்தது மற்றொரு சொல்

பத்தாண்டுகளுக்கு முன்பாக

விபத்தில் அடிபட்டு இறந்துபோன

நண்பனின் முகம் நினைவில் படர்ந்தது

அரள விதையை அரைத்துக் குடித்து

தற்கொலை செய்துகொண்ட

பள்ளித் தோழியின் முகமும் அசைந்தெழந்தது

அகால மரணமடைந்தவர்கள் ஒவ்வொருவராக

ஆழ்மனத்திலிருந்து எழுந்து வந்தார்கள்

துயரம் படர்ந்த முகங்களுடன்

என்னைச் சுற்றி சூழ்ந்து கொண்டார்கள்

எல்லாரும் ஒரே நேரத்தில் பேசினார்கள்

எல்லாரும் ஒரே நேரத்தில் கேள்வி கேட்டார்கள்

எல்லாரும் ஒரே நேரத்தில் கண்ணீர்விட்டு அழுதார்கள்

ஐயோ போதுமே என்று

காதுகளை மூடி நிமிர்ந்தபோது

உதடுகள் அசையாமல் உற்றுப் பார்த்த

விபத்தில் சிதைந்த முகம்கண்டு உறைந்தேன்2. வாசலில் விழுந்த பறவை


தற்செயலாக

வாசலில் விழுந்த ஒரு பறவை

காலூன்றி நிற்க முற்சித்தது

தடுமாறித் தடுமாறி விழுகிறது

இடைவிடாமல்

சிறகுகளை அடித்துக்கொள்கிறது

ஐயோ எனத் தாவி

அள்ளியெடுத்து

நீவித்தந்த விரல்உதறி

நழுவி நழுவி விழுகிறது

அதன் வேதனையோ காணப் பொறுக்கவில்லை

நொண்டி நொண்டி

நடந்து செல்வதிலும்

பறப்பதிலும்தான்

அதன் கவனம் குவிந்திருக்கிறது

எப்படிப் பெறுவதோ அதன் நம்பிக்கையை

விடையறியா வலியில் துவள்கிறது மனம்

சில கணங்களுக்கு முன் பார்த்தேன்

பாடி முடித்த ஆனந்தத்தில்

தாழ்வான மரக்கிளையில்

துள்ளித்துள்ளி நடந்துகொண்டிருந்தது

அதன் சிறகின் மஞ்சள் அழகால்

மாலைப்பொழுதே வசீகரமானது

அதன் சின்னச்சின்ன நடை

அழகான ஒரு சித்திரம்


எங்கிருந்தோ பறந்துவந்த கூழாங்கல்

எதிர்பாராமல் அதை வீழ்த்திவிட்டது

எவ்வளவோ தடுமாற்றம்

எவ்வளவோ வேதனை

எப்படியோ எழுந்து பறந்தோடிவிட்டது

புத்தக விமர்சனம் - 3
அழியா கைக்கிளைம.தவசி அவர்களின் கதைகளைப் படிக்கும்போது ஏற்கனவே கொண்டிருக்கிற தீர்மானங்கள் உறுதிப்படுகின்றன. ஒரு படைப்பைப் பொறுத்தவரை அது வெறும் அறிவுரையோ படைப்பாளியின் மேதமையை வெளிப்படுத்துகிற கருத்துக்களாகவோ இருக்காது என்பது அறிந்த விசயம். வியப்பு, ஏக்கம், நப்பாசை என்று இப்படியான விதங்களால் சாதாரண மனிதன் பெற்றதை போலவே படைப்பாளியிடமிருந்தும் அவை வெளிப்படும். சாதாரண மனிதனுக்கு பயம் என்பது எப்படி வெளிப்பட்டது? வெளிப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டு விட்ட பின்னர், அதை எவ்வாறு எழுத்தில் கொண்டு வர வேண்டும்? சரி, எழுத்தில் கொண்டு வருவது இருக்கட்டும் - முதலில் பேச்சில் எவ்வாறு வெளிப்படுகிறது? ஒரு புதிய முறையில் சொல்கிற விதம்....ஒரு படைப்பு இரண்டிற்கும் அதிக வேறுபாடு இல்லை.கிட்டத்தட்ட எழுத்து வடிவில் நமக்குக் கிடைக்கப்பெற்றது இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுதான். இது இலக்கியவாதிகள் சொல்வதல்ல - ஆய்வாளர்கள். காற்றிலிருந்து மூக்கால் இழுக்கப்பட்டு வெளியானது - ஆதியிலே இருந்தது வார்த்தை - இப்படிச் சொல்லப்பட்டது எல்லாமும் இந்தக் கணக்குத்தான். கல் தோன்றி மண் தோன்றா காலத்து மொழி இலக்கியமும் அப்படித்தான். விவசாய நாகரீகம் தோன்றி பல நூற்றாண்டுகள் கழித்து வெளிப்படுத்தப்பட்டவை வேற எப்படி இருக்க முடியும்? அவற்றில் பயம் எப்படி சொல்லப்பட்டுள்ளது? எவ்வாறு உருவப்படுத்தப்பட்டிருக்கும்?
மிகவும் அற்புதமானவை இந்த விசயங்கள். அன்று தோன்றிய எண்ணம் - அதாவது இந்த பயம் - அறிவீனம் என்று யாராலும் சொல்லப்படவில்லை. எல்லா நாட்டிலும் எல்லா மொழியிலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்ட விசயம். பயம் என்பதை பேய் என்ற முதலில் காட்டிவிட்டு அதற்கு அலங்காரம் செய்ய ஆரம்பித்த போது காட்டேரி, மோகினி என்பதெல்லாம் தோன்றிவிட்டது. அதை எப்படி தடுக்க முடியும்? இது தோன்றிய ஒன்று - சிந்தித்த விளைவால் கிடைத்தது அல்ல (பேய்களில் பிரம்மரராட்சஸ் என்பருது வேதம் படித்து காலமான வைதிகன் என்பது வேறு விசயம். பேய் உலகிலும் மனு தர்மம் உண்டு போலும்.)தவசியின் கதைகளில் இது இயல்பாக செயல்பட்டிருக்கிறது. பழங்குடி மக்களிடையே இம்மாதிரி உணர்வை இயற்கையாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். வேறு எந்த வகையிலும் இம்மாதிரி படைப்புகள் வகைப்படுத்த முடியாதவை. சிவப்பிந்தியரிடையே இதற்கு சமமான கதை அம்சங்கள், ஆப்பிரிக்க நாட்டின் எழுத்தே இல்லாது பேச்சு மட்டும் உள்ள மொழிகளிலும் உண்டு.'மனித சரித்திரத்தில் மனிதன் தன்னை மிருகம், புயல், மழை, பூகம்பம், ஆழிப்பேரலை இவற்றிலிருந்து தன்னை காத்துக்கொள்ள போரிட்டதை விட, சகோதார மனிதரிடமிருந்து காத்துக்கொள்ள போரிட்டதுதான் அதிகம்,' என்று ஒரு தடவை நண்பர் சா. கந்தசாமி எழுதியிருந்தார்.
மிருகம் - பல்வேறு இயற்கை எதிர்ப்புகள் ஆகியவற்றை விட சக மனிதனுக்குத்தான் அதிகம் பயப்பட்டு இருக்கிறான் என்பது உண்மை. இந்த சக மனிதன் சம்பந்தப்பட்டதுதான் பேயும். இது உலகம் முழுவதிலும் - சங்க காலம், மத்திய காலம், ஷேக்ஸ்பியர் என்றெல்லாம் பாகுபாடு இல்லாது விரவி நிற்கிறது. அம்மாதிரிப்பட்ட ஒரு நிலை, அவனை அறியாமல் உருவாகி இருக்கலாம். இங்கே இந்த மண்ணில் அத அளவிற்கு அதிகமாகவே இருக்கிறது என்று சொல்லவ வேண்டும். இதன் முக்கிய காரணம் வ0வசாய நாகரீகம் உலகில் முதலில் ஏற்பட்ட பரதேசங்கிளல் இ.ந்த இடம் முதன்மையானது. ஆய்வாளர்கள் தந்த விசயம் இதுவும்.நாய், பூனை, புலி போன்றவை பேயை கண்டு பயப்பட்டு ஓடவது பற்றி சொல்ல முடியாது. ஒருவேளை மனிதனை பார்த்து பயப்பட்டிருக்க முடியும். குரங்குகள் விசயம் வேறு. அவை சிறிதளவில் மனிதகுணம் கொண்டருக்கலாம்.நாகரீகம் என்றால் இருக்கிற ஒன்ற நாசமடைந்து விட கூடும். விவசாயம் தோன்றினால் பஞ்சமும் தோன்றும். அந்த நாகாக கால கட்டடத்திற்கு முன்புள்ள பஞ்சம் எல்லாராலும் அனுபவிக்கப்பட்ட ஒன்றாக இருந்திருக்கும். நிலவுடைமை சம்பந்தப்பட்ட விசயம்.
கிராமத்ரதில் பஞ்சம் என்றால் நல்லதாங்காள் கதை தோன்றும். மாராப்பு இல்லாத கிழவிக்கு அதைவிட சிறந்த குறியீட கிடையாது. கிணறு - அது இன்னொன்று. கிழவிக்கு குமரியின் கதைகள்தான் முக்கியம். சவ்வுமுட்டாய் கலரில் தாவணி உடுத்திய முத்துமா஡யை 'என்னைப் பெத்தவளே' என்று விளித்து கதை கேட்கிறாள். பச்சை குழந்தையை கூட 'என்னப் பெத்த ராசா' என்றழைத்து கொஞ்சுவது இந்த இடத்திற்கே உரிய அழகு. தான்பெற்ற குழந்தையை 'என்னப் பொத்தாரே' என்றழைப்பது ஒருவேளை தனக்கு தாய் என்ற பட்டத்தைப் பெற்று தந்தவளே என்பதாக இருக்கும். குழந்தையை இப்படி அழைப்பது வேறு எங்காவது - மேல் நாடுகளில் - ஐரோப்பிய இலக்கியங்களில் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆய்வாளர்கள் சொல்ல வேண்டும்.குமரிகள் பட்ட அவலம் சொல்லத் தரமன்று. மானங்காக்க அவர்கள் உயிர் தர வேண்டும். கிணற்றில் விழுவதுபோல தஞ்சையில் குறிப்பிட்ட காலத்தில் பெற்றோரால் உயிருடன் புதைக்கப்பட்ட விசயம் நீல பத்மநாபனின் தலைமுறைகள் நாவலில் வருகிறது. எங்காவது நடந்து கொண்டு இருக்கிற விசயம்தான்.
இம்மாதிரி கொடுமைகளை சித்தரிப்பது - மிகவும் சாதாரணமாக சொல்வதுபோல் இந்த பெரிய விசயத்தை கையாண்டு இருப்பது முன்பு சோமசர்மா, கறைபட்ட இலை, பூரணி போன்ற லா.ச.ரா கதைகள், சமீபத்தில் கவிஞரி சமயவேல் எழுதிய கதைகள் ஆகியவை இங்கே ஏறிப்பிடலாம்.
மாவட்ட தமிழ்தான் தமிழை இன்னும் உயிரோடு இருக்க செய்து வருகிறது - மானங்காத்து வருகிறது. அதன் மூலம் அழகு, கொடுமை இரண்டுமே தரப்படுகிறது.கொடுமைகளை கிராமத்து கிழவி மென்று விழுங்கிக் கொண்டிருக்கிறாள். அவை தோற்றம் பெறுவது அவள் மூலம்தான். இலக்கியவாதி அல்ல அந்த கிழவி. ஆனால் அவளிடமிருந்துதான் படைப்பாக - கவிதையாக அது கிளம்புகிறது.ம.தவசியின் கவிதைகளைப் படித்தபோது இவர்அ கதைகள் எழுதினால் எப்படி இருக்கும் என்ற நினைத்தேன். இரண்டு கதை தொகுதிகளையும் படித்தபோது முதலில் வந்த கதை தொகுதியான 'பனை விருட்சி' மேலான கற்பனை வளம் கொண்டுள்ளது என்று சொல்ல வேண்டும். அதிலும் கதையின் ஊடே கவிதைகளையும் சேர்த்திருப்பது ஒரு புதிய முயற்சி. அந்த கவிதைகளையும் சேர்த்தால் அல்லாமல கதை முற்றுபெறாது என்று அவர் நினைத்திருந்தால் அது சரியான எண்ணம்தான். கதையில் கவிதை வரலாமா என்று யாராவது கேட்டால் கதை தோன்றியபோது - கவிதை தோன்றிய போது - கடவுள் தோன்றிய போது, அவையெல்லாம் எப்படி இருந்தன என்று பதிலுக்குக் கேட்கலாம்.மேலே குறிப்பிட்ட கதை 'அழியா கைக்கிளை' என்ற தலைப்பில் 'பனை விருட்சி' கதை தொகுதியில் வந்துள்ளது. அழியா கைக்கிளை என்று பெயர் சூட்டிய காரணம் தெரியவில்லை. கைக்கிளைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஆனால் பெயரில் என்ன இருக்கிறது - கதையில் தானே எல்லாம். தவசி அவர்கள் இப்படிப்பட்ட நடையை கொண்டிருக்கும் கதைகளை தொடர்வது அவசியம்.


(பனை விருட்சி - ம தவசி - சிறுகதைகள் - வெளியீடு : அனன்யா, 8/37 பி ஏ ஒய் நகர், குழந்தை இயேசு கோவில் அருகில்,புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர் 613 005)29.5.09

புத்தக விமர்சனம் 2


ஆஸ்பத்திரி - நாவல் - ஆசிரியர் : சுதேசமித்திரன் - உயிர்மை பதிப்பகம் - சென்னை 18 - பக்கம் - 136 - விலை ரூ.௮0சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட ஆசிரியர் சுதேசமித்திரன் என்ற புனைபெயரில் எழுதி வருகிறார். நாற்பது வயதிற்குள் கவிதை, சிறுகதை, நாவல் எழுதியுள்ளார். சுதேசமித்திரன் என்ற பெயர் பழைய செய்தித்தாளையும், எழுத்தாளர் அசோகமித்திரனையும் நினைவுப் படுத்தினால் ஆசிரியர் பொறுப்பல்ல.


பக்கம் 59 - இங்கே ஒரு இடைச்செருகல் அவசியமாகிறது. இந்த நாவல் ஏழைகளையோ, அரசாங்க ஆஸ்பத்திரிகளையோ அவலங்களையோ பற்றிப் பேசுவதில்லை என்று எப்போதாவது ஏதாவதொரு மூலையிலிரூந்து சர்ச்சை கிளம்பக்கூடும்.இந்தக் காலத்தில் மட்டுமல்ல. எந்தக் காலத்திலும் ஏழைகள் எந்த நாவல்களையும் வாசிப்பதேயில்லை. ஏனென்றால் அவர்களிடம் அவற்றை வாங்குவதற்கு பணம் இல்லை. இந்தக் காலத்தில் மட்டுமல்ல எந்தக் காலத்திலும் பணக்காரர்களும் இந்த மாதிரி எந்தக் காலத்திலும் பணக்காரர்களும் இந்த மாதிரியான நாவல்களை வாசிப்பதே இல்லை. ஏனென்றால் அதற்கு அவர்களிடம் நேரமில்லை. இதே ரீதியில் இரண்டு பக்கங்கள் வாசகனை முன்னுறுத்தி பிரவசனம் செய்கிறார் ஆசிரியர். இந்த உத்தி மிகப் பிழைய உத்தி. TRISHTRAM SHANDY எழுதிய Lawrence Sterne, பிரெஞ்சு நாவலாசிரியர் Demise Dierot இவர்கள் எல்லாம் இருநூறு ஆண்டுகள் முன்னமே கடைப்பிடித்த உத்தி.பக்கம் 126. அன்றைக்கு ஐசியூவுக்கு முன்னால் பெரிய வாத்திமக்கூட்டமாக இருந்தது. இருபதாம் நூற்றாண்டு துவக்கத்தில் ஸீ வை குருஸ்வாமி சர்மா எழுதிய பிரேம கலாவதீயம் என்ற நாவலில்தான் ஸ்மார்த்தர்களின் உட்பிரிவுகள் கேலி செய்யப்பட்டிருக்கும். பிறகு வந்த லா.ச.ரா, தி.ஜா போன்ற பிராமண எழுத்தாளர்களின் பாஷை மட்டும் பிராமண மொழியாக இருக்குமே தவிர வாத்திம வடம் பிரிவுகள் பேசப்படவில்லை.கதையில் வருகிற சிவன் விஷ்ணு போன்ற பெயர்கள் நகுலனின் கேசவ மாதவனை நினைவூட்டுகின்றன. ஆஸ்பத்திரி பிணி, மூப்பு, சாவு உள்ளடக்கியது என்ற போதும் அங்கும் காமக்கிளர்ச்சி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்கிறார் ஆசிரியர் (பக்கம் 57).சுந்தர ராமசாமியைப் போல மொழியை செதுக்கி, திருகி, சாதூர்யமாக சமத்காரமாக கதையை நடத்திச் செய்கிறார் ஆசிரியர்.அத்தியாயம் 16-ல் இடம் பெறும் கண்ணபிரான் ஒரு விசித்திரமான குணாதிசயம். பெரிய தொழிலதிபர். சபரிமலை போகிறார். மலையிலிருந்து கீழிறங்கியதும் ஆடு மாடு கோழி மீன் மதுவகைகளும் சாப்பிடுகிறார். இந்த அத்தியாயத்தின் தலைப்பு பணக்காரர்கள் சபரிமலைக்குப் போகும் பாங்கினை விளக்குக.நாஞ்சில் நாடனால் பரிந்துரைக்கப்பட்ட இந்த நாவல் தமிழ் வாசகர்கள் படிக்க வேண்டியது.

28.5.09

புத்தக விமர்சனம் -1
அந்தரங்கம் - ஆசிரியர் செல்வராஜ் ஜெகதீசன் - பக்கம் 112 - விலை ரூ.60 - வெளியீடு - அகரம், தஞ்சாவூர்


கவிஞர்கள் கல்யாண்ஜிக்கும், விக்ரமாதித்தியனுக்கும் இந்த நூலை சமர்ப்பித்துள்ளார் ஆசிரியர். கவிஞர் விக்கிரமாதித்யனின் முப்பது பக்க முன்னுரை தமிழ் புதுகவிதை வரலாற்றை கரைத்துப் புகட்டுகிறது நமக்கு.
பாரதிதாசனின் கவிதை கூறல் முழுக்க முழுக்க மரபின்பாற்பட்டதே தவிர, புதிதானதுமில்லை. மிகுந்த பெயரும் புகழும் பெற்ற அவருடைய கொடை என்ற ஒன்று யோசித்தால் வெறுமேதான் இருக்க வேண்டி வரும். புதுக்கவிதை என்பதே பார்ப்பனர்களின் கொடைதான்.


கவிதை சோறு போடாது. கவிஞர்கள் கண்டு கொள்ளப்பட மாட்டார்கள். முப்பதாண்டுக் காலமாவது ஒருவன் கவிதை எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு கவிதை ஊற்றுக்கண். அவ்வளவு காலம் தூர்ந்து போகாதிருக்க வேண்டும். இப்படியெல்லாம் இருந்தாலும் தமிழ்ச் சமூகம் அங்கீகரித்துவிடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.


விக்கிரமாதித்தனின் வரிகள் ஒவ்வொன்றும் அட்சர லட்சம் பெறும். நவீன தமிழ்கவிதையின் EZRAPOUND ஆன விக்கிரமாதித்யன் என்ற நம்பிராஜனால்தான் இந்த வரிகளை 2009-ல் எழுத முடியும். இந்த முன்னுரைக்காகவே இந்தப் புத்தகத்தை ஒவ்வொரு கவிஞனும் வாங்கிப் படிக்க வேண்டும்.


கவிதை என்பது என்ன? என்ற கேள்விக்கு வார்த்தை விளையாட்டு என்று கவிஞர் பிரமிள் பதில் அளித்ததாக விக்ரமாதித்யன் கூறுகிறார். அப்படிப்பட்ட வார்த்தை விளையாட்டுகளை செல்வராஜ் ஜெகதீசன் நிறையாவே நிகழ்த்திக் காட்டியுள்ளார்.


ஒன்றன்றி.... என்ற கவிதை


ஒன்றில்லை


ஒன்றுமில்லை


ஒன்றன்றி


ஒன்றுமே இல்லை


மற்றொரு கவிதைஇன்றென்ன


கிழித்துவிட்டோம்.


நாளை மீது


நம்பிக்கை வைக்க.இவையெல்லாம் சொற்சிலம்பம்தான். ஜெர்மனியில் Concrete Poetry என்ற ஒரு இயக்கம் 1960 களில் செயல்பட்டது. அது வார்த்தை விளையாட்டை இயக்கமாகவே நடத்திக் காட்டியது. Concrete கட்டிடங்கள் போல வார்த்தைகள் அடுக்கப்படும்.நல்ல கருத்துக்களை முன்வைக்கும் கவிதைகளை விக்கிரமாதித்யன் பாராட்டுகிறார். ஆனால் எழுத்தில் நல்ல எழுத்து மோசமான எழுத்துகள் உண்டு. நல்ல எழுத்தை கெட்ட எழுத்து கிடையாது என்பார் ஆஸ்கர் வைல்ட்.
எத்தனை நாட்கள் என்ற கவிதைசோற்றுக்கலையும் வாழ்க்கையில்


சொல்லிக்கொள்ளத்தான்


எத்தனை நாட்கள் என்று முடிகிறது.சலிப்பு அனுபவத்தின் பாற்பட்டது என்பதால் நம்மிடம் தாக்கத்தை உண்டாக்குகிறது. பிரியமான என் வேட்டைக்காரன் என்ற தலைப்பிட்ட கவிதையில் பன்னிரண்டு வரிகளில் பன்னிரண்டு பெண்கள் வருகிறார்கள். அவர்கள் அனைவரும் கல்யாணம் பண்ணிக்கொண்டு ஒன்றிரண்டு பிள்ளைகளுடன் ஒளிமயமாய் குடும்பம் நடத்துகிறார்கள். நமது நாயகியோ நாற்பதைக் கடந்து பெண்மானாக வலம் வருகிறாள். பிரியமான வேட்டைக்காரன் தன்னைக் கொண்டு செல்வான் என்ற நம்பிக்கையுடன்.


விக்கிரமாதித்யன் தன் முன்னுரையில் குறிப்பிடும் பெருந்தேவி, குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, சுகிர்தராணி முதலிய பெண்ணிய கவிஞர்கள் இந்த வரிகளை எப்படி எதிர்கொள்வார்கள்?


சாஸ்வதம் என்ற கவிதையில் கலைகள் கால விரயம் என்று கூறும் ஆசிரியர், அடுத்த கவிதையான 'கவன ஈர்ப்பு' என்ற கவிதையில்,
மற்றவர் கவனத்தை ஈர்ப்பதுதான் முக்கியம்
என்வரைக்கும் எழுதிக் கொண்டிருக்கிறேன் கவிதைகளை என்கிறார்.
சுயம் என்ற கவிதையில்,
உண்மையில் எனக்கு நான் யார்?
என்ற கேள்வியுடன் கவிதையை முடிக்கிறார். அஹம் பிரம்மாஸ்மி என்கிறது ஆதி சங்கரரின் அத்வைதம். நான் கடவுள் என்கிறார் திரைப்பட இயக்குநர் பாலா.
பக்கம் 91-ல் கவியெழுதி பிழைத்தல் கடினம் என்கிறார். இந்த கவிதைகள் படிக்க சுலபமாகத்தானிருக்கின்றன. ஆனால் வார்த்தைகளின் ஊடான மெளனம்தான் கவிதை என்ற பிரெஞ்சு கவிஞர் Paul Valery ஐ செல்வராஜ் ஜெகதீசன் அவசியம் படிக்க வேண்டும்.27.5.09

சந்திக்கள் சக்திக்கு வணக்கம். உலகத்தில் ஒரு பெரிய நிலப்பரப்பு. மிகுந்த மக்கள் தொகை. மொழிகளலாலும், மதங்களாலும், வேறுபட்டு, பலவகையான குடிநிலங்கள், பச்சை, மருதம், நீல கடற்கரைகள், பழுத்த மலைகள், இவற்றில் வாழும் படித்த, படிக்காத மக்கள், எத்தனை எத்தனை வகைகள். எத்தனை எத்தனை திறங்கள், யாவரும், ஒருவர். இந்தியர். நீண்ட தேர்தலாக இருப்பினும், இந்த 100 கோடி மக்களில் வாக்குகளை, இந்தியாவின் நீண்டகன்ற நிலபரப்பில் ஒரு பட்டி தொட்டி கூட விடுபடாது மிகமிக அமைதியான முறையில் நடத்தி வெற்றி கண்டது மக்களாட்சி - எத்துணை வலிமையானது என்று உலகிற்கும், நமக்குமே உணர்த்தியது. பதிநான்காம் முறையான மகத்தான சாதனை. வளர்ச்சித் திட்டங்களின் தொடர்ச்சிக்கும், பொருளாதார தளர்ச்சி நிலையிலிருந்து மீட்சிக்கும் தங்கள் ஒப்புதலை அரசிற்கு மக்கள் அளித்திருக்கிறார்கள். சாதி என்றொரு தீயசக்தியின் பாதிப்பு சற்று குறைந்திருக்கின்றது என்ற மகிழ்ச்சி, பூதாகாரமாக வளர்ந்திருக்கும் பணக்கையூட்டு சிறிது கவலையை அதிகமாக்கியுள்ளது. இந்தப் பிரச்சினைக்கும் வருங்காலத்தில் மக்கள் சக்தியே தீர்வுகாண வேண்டும். இந்தத் தேர்தலில் ஆட்சியை கோரியவர்களிடம், முழுமையான ஆட்சியை, சாவிக்கொத்தையே கொடுத்துவிட்டனர் மக்கள், அவர்களின் ஒரே கட்டளை ''செய்து காட்டு'' என்பதே.


***********


வ்வொரு ஆண்டிலும் 'மே' மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையும் உலக முழுவதிலும் 'அன்னையர் தின'மாகக் கொண்டாடப்படுகின்றது. இதுபோன்ற 'தினங்கள்' பொதுவாக வணிகர்களால் 'விற்பனை' தினங்களாக மாற்றப்பட்டு மக்களை, 'இதைவாங்கு' 'அதைவாங்கு' மூளையடித் திருநாட்களாக மாறிவிடும்.இந்த ஆண்டு 'அன்னையர் தினத்'தன்று ''டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளிவந்த விளம்பரமொன்று, இந்தியாவின் சாதனை செய்யும் இளம் வீரர்கள், இசை வித்தகர் ஏ ஆர் ரஹ்மான், கிரிக்கெட்டின் டெண்டூல்கர், உலக சதுரங்க மாவீரர் ஆனந்த்., இர்ஃபான் சகோதரர்கள், திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர்களின் புகைப்படங்களுடன் எழுதப்பட்டிருந்த வாசகம்தான் ஒரு எளிய ஆயினும் ஆழமான கவிதையாக உருவாகியிருந்தது. இதோ அது


ஒளிவெள்ளத்திற்கு முன்னால்


வெறியேறுவதற்கு முன்னால்


கைதட்டல்களுக்கு முன்னால்


மாயங்களுக்கு முன்னால்


கையெழுத்து வேட்டைக்கு முன்னால்


கொழிக்கும் செல்வத்திற்கு முன்னால்


பாரட்டுதல்களுக்கு முன்னால்


தலைப்புச் செய்திகளுக்கு முன்னால்


யாவற்றிற்கும் முன்னால் அம்மா இருந்தாள்.


*******************விளம்பரத்துறை ஒரு அருமையான கொதிகலன். ''மாற்றி சிந்தி''ப்பவர்களுக்கு ஒரு விறுவிறுப்பான களம். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிரிக்கெட் போட்டிகளை சின்னத்திரையில் ஒளிபரப்பும்போது, கூட வெளியாகும் விளம்பரங்களில், இதுவரை பெருமிடத்தைப் பிடித்துக்கொண்டிருந்த கிரிக்கெட் வீரர்கள் திரைப்பட நடிகைகள் யாவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னணியில் இருப்பது 'வோடோ .போன்' விளம்பரங்களில் தோன்றும் ''ச்ஜீ..ச்ஜீ..''க்கள்தான். கேலிச்சித்திரங்கள், கார்ட்டூன்களை இயக்கி 'அனிமேஷன்' என்ற உத்தியை ''மாற்றி யோசித்து'' மனிதர்களையே கார்டூன்களாக மாற்றி, திரைப்படமாக ஒளிப்பதிவு செய்யும் 22 ப்ரேம்களை, 20 ப்ரேம்களாக சற்று மெதுவாக ஓடவிட்டு, படமெடுத்து ஒரு அனிமேஷன் படம்போல் செய்து நிகழ்வுகளையும் கற்பனை வளம் நிரம்பிய காட்சி அமைப்புகளாக மாற்றியிருக்கிறார்கள், தயாரிப்பாளரும், இயக்குனர்களுமான, 'நிர்வாணா' விளம்பர நிறுவனம். பல ''ச்ஜீ..ச்ஜீ..'' விளம்பரங்கள் மக்களின் கவனத்தையும் கவர்ந்து, அவ் விளம்பரங்களை காண்பதற்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி விட்டன. படுத்துத் தூங்கும் முதலையை உசுப்பி விளையாடும் ஒருவனை அந்த முதலை விழுங்கிவிடும் அந்த விளம்பரம் பலரால் நினைவு கூரப்பட்டது.அஞ்சலி


கவிஞர் சி மணி அண்மையில் இயற்கை எய்தினார். ஆங்கிலத்தை தனது முதுகலைப் படிப்பாகத் தொடர்ந்து, ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றிய சி மணியின் கவிதைச் சிந்தனையை, டி எஸ் எலியட்டும், ஆடனும், தங்களது கவிதைகளால் ஈர்த்தது வியப்பில்லை. அமரர் சி சு செல்லப்பாவின் 'எழுத்து' வில் கவிதை எழுதத் தொடங்கி, பின், தானே 'நடை' என்ற சிற்றிதழைப் பதிப்பித்து வெளியிட்டார். மனிதர், எளியவர், யாருடனும் உடனே சரளமாகப் பழகிவிடாத சிறிது கூச்ச சுபாவம். பழகிவிட்டால் கூட மற்றவர்களின் அந்தரங்களில் அதிரடியாகப் புகுந்துவிடாத ஒருவகை 'கனவான்' மனப்பான்மை.சேலத்தில் வசித்த அவர் மாலை வேளைகளல் கடைத் தெருவிலிருந்த நண்பரின் துணிக்கடைக்கு, தவறாத வருவார், வந்து ஒரு காப்பி0 அருந்திவிட்டு, ஓரிரு சிகெரெட் புகைத்து விட்டு விடைபெறுவார். சேரம் செல்லும்போது, மாரியம்மன் கோவிலுக்கு அருகே இருந்த துணிக்கடைக்கு, நானும் போவேன்; தொழில் முறையிலும், நட்புமுறையிலும். அந்தத் துணிக்கடைக்காரர், இன்னும் என் நெஞ்சில் நண்பராகவேஉள்ளவர். அவர்தான் என்னிடம் சி மணி 'நடை' நடத்தியபோது தன் சொந்தப் பணத்தை பெருமளவு தோழர்களாகக் கருதியவர்களினால் ஏமற்றப்பட்டு இழந்தார் என்றும், பண இழப்பைவிட தோழமையின் இழப்பு, அவரை மிகவும் வாட்டியதாக கூறினார். கவிதை எழுதுவது போலவே, சி மணி மிகவும் அழகாக தையல் கலையையும் பயின்றிருந்தாராம்.
26.5.09

ஐந்து கவிதைகள்இன்று முத‌ல்


வழிதப்பிய குறுஞ்செய்தியொன்று

ஒலித்தது.

வேணுகோபால் இறந்துவிட்டான்

உடனே கிளம்பி வா.


உண்மையில் வேணுகோபால்

என்று எனக்கு யாரும் இல்லை.

இன்று முத‌ல்

அந்தக் கவலையும் தீர்ந்தது.முத‌ல் நிலவு


இறுக மூடிக்கிடக்கும்

அந்தக் குழந்தையின்

கைகளை யாரோ

விடுவிக்கிறார்கள்.


அந்தக் குழந்தை

தன்னோடு கொண்டு வந்த

நட்சத்திரங்கள், நிலவுகள்

உ…ரு…ண்…டோடுகின்றன.


கனவில்

கடவுள் கோபிக்கிறார்.

குழந்தை சிரிக்கிறது.


இரண்டாம் முறையும்

நட்சத்திரங்கள், நிலவுகளை

தருகிறார்.

அது ஒருபோதும்

முதல் நிலவு

முதல் நட்சத்திரங்கள்

போல் இருந்ததில்லை.யாரும் சொல்லாத கவிதை

இதுவரை யாரும் சொல்லாத

கவிதையை

எடுத்துக்கொண்டு

திரும்பினேன்.


அ‌ங்கே

நீ இல்லை.

நான் இல்லை.

யாரும் இல்லை.

எதுவும் இல்லை.

எதுவுமற்ற அதுவும் இல்லை.


நீட்சி


முன்பொருநாள்

எவனோ ஒருவன்

தன் சதைகளை அரிந்து

கழுகுக்கு போட்டானாம்.

அவனது நீட்சியென்று

அடுக்குமாடி குடியிருப்பின்

என் ஜான்னலூரம்

காத்துக்கிடக்கின்றன

அதே புறாக்கள்.


***********

பாரியின் காலத்திலிருந்து

கிளம்பி வந்த

கொடியென்று

இருசக்கரவாகனம் மீது

படர்ந்தெழுந்திருந்தது.

எடுக்கவா தொடுக்கவா

என்றது

என்னைப் பார்த்து.

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......15


ஏழு ஜென்ம வதைப்படுத்தி


எம்.ரிஷான் ஷெரீப்


உன் மௌனத்தில் வலியுணர்த்தி
எதுவும் பேசாமல்
நின்று நின்று பார்த்தபடியே
மெல்ல நகர்கிறாய் நீ
காயப்பட்டவுன்னிதயத்துக்கு
ஆறுதலாகவொரு துளிக்கண்ணீரோ
ஒரு கண அரவணைப்போ
தரவியலாத் துயரத்தோடு நான்
எந்த நம்பிக்கையிலுன் சிறு ஜீவனை
எனதூர்தியின்
நான்கு சக்கரநிழலுக்குள்
நீ வந்து உறங்கவைத்தாய்
நசுங்கிச் சிதைந்தவுன் வாரிசின்
சடலத்தைக் காணநேர்ந்த பிற்பாடும்
எந்தவொரு அனல்பார்வையோ,
சாபமிடலோ,வைராக்கியமோ இன்றி
ஒதுங்கிப் பார்த்திருக்கிறாய்
ஆறறிவாய் நீ
கணங்களைச் சப்பிவிழுங்கும்
பணியின் அவசரநிமித்தம்
ஒரு நிமிடமொதுக்கி
வண்டியின் கீழ்ப் பார்க்கமறந்து
ஏழேழு ஜென்மத்துக்குமான
வேதனையில் சிக்கித் தவிக்கும்
ஐந்தறிவாய் நான்

21.5.09

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......14
வித்தியாசமான மியாவ்


சுந்தர ராமசாமி

எனக்குத் தெரிந்த பூனை ஒன்று


நேற்று இறந்தது.


சவ அடக்கத்துக்கு


நாங்கள் போயிருந்தோம்.


என் நண்பனின் மனைவி


அழத் தொடங்கியபோது


என் மனைவியும் அழுதாள்.


குழந்தைகள் அழுதன.


சில வார்த்தைகள் பேசும்படி


என் நண்பன் என்னைக் கேட்டுக்கொண்டான்.


நான் பேசத் தொடங்கினேன்:


இந்தப் பூனையின் மியாவ் மியாவ்


வேறு பூனைகளின் மியாவ் மியாவிலிருந்து


வித்தியாசமானது மேலும்...

ஒரே நாளில்“முறுக்கு மாமி வீட்டுக்குப் போகட்டுமா அம்மா?” என்று கேட்டான் கிரி.
ஸ்டவ்வையே வெறித்துப் பார்த்தவாறு அம்மா சமையலறையில் உட்கார்ந்திருந்தாள். அங்கே ஒரே மண்ணெண்ணை வாசனை.
“என்னமோ பண்ணு” என்று அவன் பக்கம் திரும்பாமலே சொன்னாள்.
கிரி குஷியாக வெளியே வந்தான். ஞாயிற்றுக்கிழமை. ஐந்தாம் வகுப்பு பரிட்சை முடிந்து விடுமுறை விட்டாயிற்று. முறுக்கு மாமி வீட்டில் லாரன்ஸ் அண்ணன் இருந்தால் ஊர் சுற்றப் போகலாம். அப்போதுதான் மழை பெய்து நின்றிருந்தது. வீட்டு வாசலில் சாத்தி வைத்திருந்த கற்பனை புல்லட் வண்டியை காலால் உதைத்தான். “டட்டடட்” என்று வாயால் சத்தம் எழுப்பி இரண்டு கைகளையும் ஹாண்டில் பாரைப் பிடித்துக்கொள்வதுபோல் முன் நீட்டி ஓடினான். ஏகப்பட்ட மழைக் குட்டைகள் இருந்த தெருவில் அவன் கவனத்துடன் புல்லட்டை வளைத்து வளைத்து ஓட்டவேண்டி வந்தது. தெரு ஓரமாய் சாக்கடைப் பள்ளத்தில் மழைநீர் ஓடும் சத்தம் கேட்டது. அந்தத் தண்ணீரில் நீளமான வேட்டியின் இரு நுனிகளையும் பிடித்து மீன்பிடி விளையாடிக் கொண்டிருந்த எதிர்வீட்டுக் குமாரும் மகேஷும் இவனைப் பார்த்து கத்தியதைப் பொருட்படுத்தாமல் ஓடினான்.தெருமுக்கில் வாசன் குருக்கள் அப்போதுதான் பிள்ளையார் கோவில் சன்னதிக்குள் நுழைந்துக் கொண்டிருந்தார். சட்டென்று ப்ரேக் அடித்து கோவில் முன்னால் நின்றான். “மாமா நான் இன்னிக்கு குளிச்சாச்சு!” என்றான் ஆவலுடன்.“குளிச்சா என்ன! விழுப்புப் படாம இருக்கணுமே” என்றார்.
“ப்ளீஸ் மாமா. குளிச்ச உடனே எது மேலையும் படாமல் புதுத்துணி போட்டுண்டு நேரே இங்கத்தான் வர்ரேன்.”
வாசன் அவனை மேலும் கீழும் பார்த்தார்.
“பொய் மட்டும் சொன்னியோ அப்புறம் என்ன ஆகும்னு எனக்குத் தெரியாது!” என்றார் கண்டிப்புடன். அவருடைய ஒரு கையில் நீர் நிரம்பிய செம்புக் குடம் இருந்தது. இன்னொரு கையில் குடலையில் பூக்கள். செம்பருத்தி, நந்தியாவட்டை.
‘இல்லை மாமா. மடியா வந்திருக்கேன்”


அவர் பதில்பேசாது சன்னதிக்குள் போனார். குறுகுறுப்புடன் பின் தொடர்ந்தான் கிரி. சன்னதியின் இருட்டாக இருந்து பிள்ளையார் எங்கே என்று தேடவேண்டி வந்தது. குளித்தபின் துடைத்துக்கொண்ட துண்டு விழுப்பா மடியா என்ற சந்தேகத்தை அவரிடம் கேட்கவேண்டாம் என்று தீர்மானித்துக்கொண்டான். பிள்ளையார் அவனுடைய விருப்பத்திற்குரியக் கடவுள் அல்லவா. ஒன்றிரண்டு பிழைகள் இருந்தால் பொறுத்துக்கொள்ள மாட்டாரா என்ன! என்னதான் இருந்தாலும் அவனுக்கு அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது.அவன் கூட சன்னதிக்குள் வந்துவிட்டதைப் பார்த்து திகைப்பதுபோல நடித்தார் வாசன். அவன் மளுக்கென்று எழுந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு நின்றான்.“சரி கையை அலம்பிண்டு சுவாமி மேலேயிருந்து பழையப் பூவையெல்லாம் எடுத்துப் போடு” என்றார்.பிள்ளையாரைத் தொடும்போது கிரியின் கை நடுங்கிற்று. தன்னைக் கிள்ளிக்கொண்டு வலிக்கிறதா என்று பார்த்தான். நிஜமாகவே கிள்ளிய இடம் வலித்தது. தலையைத் திருப்பி சன்னதிக்கு வெளியில் ஒரு கணம் பார்த்தான். வெயில் வெள்ளையாய் கண் கூசியது. இதை மட்டும் பார்த்தால் குமார், மகேஷ், பாஸ்கர் எல்லோரும் வயிறெரிந்துப் போவார்கள். டேய் டேய் என்னையும் சேர்த்துக்கோ என்று கெஞ்சுவார்கள்.பிள்ளையாரைத் தொட்ட விரல் ஷாக் அடித்தாற் போல இருந்தது. எத்தனை குளுமை. கிரியின் உடம்புக்குள் ஒரு புது சக்தி பாய்ந்தாற் போல இருந்தது. இனி அவனால் லாரன்ஸ் அண்ணனைப் போல பெரிய பெரிய உடற்பயிற்சிகளை எளிதாக செய்ய முடியும். குச்சிக் கத்தி சண்டையில் விவேக்கை எளிதாக வென்று விட முடியும்.வாசன் குருக்கள் ஒல்லியாக இருந்தாலும் பிள்ளையாரைத் தினம் தொட்டுத் தொட்டு எத்தனை சக்தியை பெற்றிருப்பார்? யாராலும் அவரை சண்டையில் வென்று விட முடியாது.எண்ணெய் மினுக்குடன் இருக்கும் பிள்ளையாருக்கு வாசன் குருக்களைப் போல அபிஷேகம் செய்யவேண்டும் என்று அவரிடம் கெஞ்சிக் கெஞ்சி கடைசியில் இன்று சித்தித்துவிட்டது. வாசன் குருக்கள் சொல்லும் காரியங்களை மிகுந்த கவனத்துடன் செய்தான். முதலில் பிள்ளையாருக்கு பால் குளியல். பிறகு தயிர். அப்புறம் எலுமிச்சை சாறு. கடைசியாக சந்தனக் காப்பு. வாசன் குருக்கள் அவனையே எல்லாமும் செய்யவிட்டார். அபிஷேகத் திரவியங்களை பிள்ளையார் உடம்பிலிருந்து வழித்தெடுப்பது கூட. பிள்ளையாரையுடைய தொப்பையிலும் தும்பிக்கையிலும் காலடியில் கிடக்கும் சுண்டெலி மீதும் கை பட்ட போது கிரிக்கு சிரிப்பு சிரிப்பாய் வந்தது. எல்லாம் குழம்பாக வழிந்து சன்னதிப் பீடத்தில் சேர்ந்து ஓடும்போது மூச்சை அடைக்கும் வாசனை வந்தது. தலையெல்லாம் கிறுகிறுத்தது. பூக்களை சார்த்தி விடடு கற்பூரம் காண்பித்த வாசன் குருக்கள் கிரியின் நெற்றியில் விபூதி இட்டுவிட்டார். இனிமேல் அவருக்கு வேலை ஒன்றுமில்லை. வரும் ஜனங்களுக்காகக் காத்திருக்கவேண்டும். இந்தப் புறநகர்ப் பகுதியில் காலையில் வருபவர்கள் அலுவலகம் போகும் அவசரத்தில் தூரத்திலிருந்தே ஒரு கும்பிடும் மனதுக்குள்ளேயே தோப்புக்கரணமும் போட்டுவிட்டு போய்விடுவார்கள். ஞாயிற்றுக் கிழமையென்றால் சாப்பாடுக்கடை முடித்த பிறகு தான் பெண்கள் வருவார்கள். அவர்களும் பக்கத்திலிருக்கும் துர்க்கை சன்னதிக்குதான் முக்கியத்துவம் தருவார்கள்.“உனக்கு பள்ளிக்கூடம் இல்லியா?” என்று கேட்டார் வாசன் குருக்கள்.
“பரீட்சை முடிஞ்சு லீவு விட்டாச்சே மாமா,” என்றான் கிரி.
“சரி கழுதையை அவிழ்த்து விட்டாச்சா,” என்று சிரித்தார்.
“உன்னோட அடுத்தக் காரியம் என்ன?”
“முறுக்கு மாமி வீட்டுக்குப் போறேன்”
“யாரு முறுக்கு மாமி?”
“டெய்சின்னு இருக்காங்களே ஆண்டாள் தெருவில். அவங்கத்தான் இப்போ முறுக்கு செஞ்சு விக்கறாங்க!”
“அடக் கடவுளே! அவளையா முறுக்கு மாமின்னு சொல்லற” வாசன் குருக்கள் தலையில் அடித்துக்கொண்டார்.
“சரி அங்கே ஒரு பையன் இருக்கானே.. அவன் பேர் என்ன?”
“லாரன்ஸ் அண்ணா!”
“அவனுக்குப் பைத்தியம் பிடிச்சிருக்காமே..?”கிரி விழித்தான். என்ன லாரன்ஸ் அண்ணனுக்கு பைத்தியமா?“அட.. நேத்திக்கு நடுத்தெருல ட்ரெஸ் எல்லாத்தையும் அவித்துப் போட்டுண்டு போனான்னு சொல்றாளே!”முந்தைய தினம் கூட லாரன்ஸ் அண்ணனுடன் விளையாடிக்கொண்டிருந்தானே. நேற்று ஒரு நாள்தான் கிரி அங்கே போகவில்லை.“நம்பளவான்னா துர்க்கை சன்னதில வைச்சு வேப்பிலை அடிப்பா. அவாள்ளாம் சர்ச்சுக்குத் தானே போவா”டெய்ஸி ஆண்ட்டி வீட்டு வாசலில் கிரி நின்றான். யாரையும் வெளியில் காணோம். வீட்டுக்கு முன்னால் எப்போதும் பயல்கள் கூடியிருப்பார்கள். இருந்தாலும் லாரன்ஸ் அண்ணனுக்கு கிரி மீது தனிப் பிரியம்தான். கிரியை மட்டும்தானே சர்ச்சுக்கெல்லாம் கூட்டிப் போயிருக்கிறான். முன் திண்ணையில் காரம்போர்டு ஆட்டம் நடக்கும். சில சமயம் செஸ். முன்வாசலுக்கும் காம்பவுண்டு கேட்டுக்கு இடையில் வண்டி விடும் இடத்தில் குறுக்குவாட்டில் கிரிக்கெட் கூட. டென்னிஸ் பந்துடன். லாரன்ஸ் அண்ணன் கமெண்டரி எல்லாம் சொல்லுவான். அவன் சொல்லும் தமிழ் கமெண்டரி வேடிக்கையாக இருக்கும். மட்டையாடி முட்டை போட்டார் என்றெல்லாம் சொல்லுவான். கபகபவென எல்லோரும் சிரிப்பார்கள். லாரன்ஸ் அண்ணன் வீட்டில் தான் முதன்முதலாக கேஸட் ப்ளேயரை கிரி பார்த்திருந்தான். பிலிப்ஸ் பெட்டி அது. நீளம் அதிகமாகவும் அகலம் குறைவாகவும் இருக்கும் அதில் கேட்ட “வாடி என் கப்பக் கிழங்கே பாட்டு”


எத்தனை வேடிக்கையாயிருந்தது! கிரி வீட்டில் வெறும் ட்ரான்ஸிஸ்டர் ரேடியோதான். மர்ப்பி பிராண்ட். கொஞ்ச நாளைக்கு முன்னால் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று அப்பா அதையும் எடுத்துக் கொண்டு போய்விட்டார்.வீட்டுக் கதவு சாத்தியிருந்தது. கதவைத் தள்ளித் திறந்தான். உள்ளேயிருந்து எப்போதும் வரும் முறுக்கு வாசனை இப்போதும் வருவது ஆறுதலாக இருந்தது. டெய்ஸி ஆண்ட்டி முறுக்கு பண்ணி விற்கத் துவங்கியதெல்லாம் கொஞ்ச நாட்களாகத்தான்.பாலித்தீன் பையில் அடைத்த முறுக்குகளை போட்டு பலசரக்குக் கடைகளுக்கு ஆண்ட்டி எடுத்துபோகும் கூடை கூட நேர்த்தியாக இருக்கும்.
கிரிக்கு இலவசமாக ஓன்று இரண்டு முறுக்குகளை, உடைந்துப்போன சில்லுகளைத் தருவாள். முறுக்கு நன்றாக நாக்கில் கரையும் வண்ணம் இருக்கும். அம்மாவிடமும் கிரி வாங்கச் சொல்லிக் கேட்டிருக்கிறான். அம்மாவோ பாட்டிக்காக மடி என்று வாங்கமாட்டேன் என்கிறாள். கிரியைக் கூட அவர்கள் வீட்டுக்கு அடிக்கடிப் போகாதே என்று திட்டுகிறாள்.லாரன்ஸுடைய அப்பாவைக் கொஞ்ச நாட்களாகவே காணவில்லை. டெய்ஸி ஆண்ட்டி முறுக்கு விற்பது அதனால்தான் என்று பின் வீட்டு ராஜம் மாமி போகிற போக்கில் ஒரு நாள் அம்மாவிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தாள். லாரன்ஸ் அண்ணனிடம் அதையெல்லாம் கேட்க கிரிக்கு பயமாகத்தான் இருந்தது.டெய்ஸி ஆண்ட்டியை வீட்டுக்குள் காணோம். பின்பக்கம் தோட்ட்த்தில் இருக்கலாம். துணி உலர்த்திக்கொண்டிருப்பாள். நேரே லாரன்ஸ் அண்ணனைத் தேடிக்கொண்டு போனான் கிரி. டெய்ஸி ஆண்ட்டி வீட்டை அழகாக வைத்துக்கொண்டிருந்தாள். ஹாலில் பிரதானமாக இருக்கும் ஏசு ஒரு ஆட்டுக்குட்டியை அணைத்துக் கொண்டிருக்கும் படம் கிரிக்கு மிகவும் பிடிக்கும். அதற்கடியில் மெழுகுவர்த்திப் வடிவத்தில் சிறிய எலக்ட்ரிக் லைட் ஒன்று எப்போதும் எரிந்துக்கொண்டிருக்கும். மூலையில் மீன் தொட்டிக்குள் நீந்தும் தங்கக் கீற்றுகளாக மீன்கள்.ஹாலையொட்டியிருக்கும் அறையில் சுவற்றில் சாய்ந்தவாறு இரும்புக் கட்டிலில் உட்கார்ந்திருந்தான் லாரன்ஸ் அண்ணன். கிரி வருவதையெல்லாம் பார்க்காதது போலவே நேர்க்கோட்டில் எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான். வெளியே ஒருவன் எதையோ உரக்க விற்றுக்கொண்டு போகும் சத்தம் மட்டும் கேட்டது.லாரன்ஸ் அண்ணனின் தலை சுவரில் சாய்ந்திருந்தது. முகம் கருமையடித்து இருந்தது. எந்த அசைவுமின்றி இருந்தான். அண்ணா என்று கூப்பிடலாமா என்று தயங்கி நின்றான் கிரி.குருக்கள் அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றாரே. பைத்தியமென்றால் சினிமாவில் காட்டும் பைத்தியம் போலவா? லாரன்ஸ் அண்ணனைப் பார்த்தால் அப்படியெல்லாம் இருக்கவில்லையே. ஒரு சிலையாக மாற்றிவிட்டாற்ப் போலத் தானே உட்கார்ந்திருக்கிறான்!
லாரன்ஸ் அண்ணனை நேற்று மட்டும் தான் கிரி பார்க்கவில்லை. முந்தா நாள் கூட கிரியை லாரன்ஸ் அண்ணன் வழக்கம் போல சாயந்திரமாக சர்ச்சுக்குக் கூட்டிப் போயிருந்தான். அவனுடன் சர்ச்சுக்குப் போவது கிரி வீட்டில் யாருக்கும் தெரியாது. பாட்டிக்கு மட்டும் தெரிந்தால் கிரியை வீட்டிலேயே சேர்க்க மாட்டாள். கிரிக்கு சர்ச் நிறைய பிடித்திருந்தது. அங்கே நடந்த ஒரு கல்யாணத்தைப் பார்க்க நேரிட்டது. அந்தப் பாதிரியார் தான் எவ்வளவு கம்பீரமாக இருந்தார்! பார்க்கப் பார்க்க அவனுக்கும் அது போல நீண்ட அங்கியணிந்து நிற்க வேண்டும் என்று ஆசை வந்துவிட்டதே. பெஞ்சில் உட்கார்ந்துத் தொழும் பெண்கள் கண்னத்தில் நீர் வழிந்தது. அவர்கள் எல்லோருமே அற்புதமான ஆடைகளை அணிந்திருந்தார்கள். மிக அழகாக இருந்தார்கள். லாரன்ஸ் அண்ணன் கூட நேர்த்தியாக உடையணிந்துதானே போவான்.சில நாட்கள் லாரன்ஸ் அண்ணனும் அவனும் மட்டும் தனியாக சர்ச்சுக்குப் போவார்கள். உயர்ந்த கூரைக்கடியில் வெளிச்சம் விழும் கலர் கண்ணாடி சன்னல் பக்கத்தில் நின்று தன்னை பாதிரியாராக கற்பனை செய்தபடி லாரன்ஸ் அண்ணன் தொழுவதைப் பார்த்துக்கொண்டிருப்பான். அவனுக்கும் அது மாதிரி செய்ய வேண்டும் என்று விருப்பம் தான். ஆனால் பயமாக இருந்தது. லாரன்ஸ் அண்ணன் எங்கே கிண்டல் செய்வானோ என்ற வெட்கம்.
லாரன்ஸ் அண்ணன் சர்ச்சுக்கு எதிரே உள்ள பூங்காவில் மேல் சட்டையை அவிழ்த்துவிட்டு உடற்பயிற்ச்சிக்கென போட்டிருக்கும் இரும்புக் கம்பிகளில் இரு கைகளை ஊன்றி ஊசலாடி மேலும் கீழும் ஏறி இறங்குவான். அவனுடைய தோள்களில் உருளும் தசைநார்களைப் பார்க்கப் பிரமிப்பாகவே இருக்கும். கிரியால் அந்தக் கம்பி ஒன்றில் குரங்குபோல ஊசலாட மட்டும் முடியும். லாரன்ஸ் அண்ணன் கிரியின் சேஷ்டைகளைப் பார்த்துச் சிரிக்கும்போது கரிய முகத்தில் வெள்ளைப் பல்வரிசை பளிச்சென்று மின்னும்.அப்புறம் குலாரன்ஸ் அண்ணனின் நண்பர்கள் அங்கே வந்து உடற்பயிற்சி செய்வார்கள். சாயங்காலம் பொழுது சாயும்போது எல்லோரும் கும்பலாக பக்கத்தில் டீக்கடைக்குப் போய் டீயும் முட்டை போண்டாவும் சாப்பிடுவார்கள். முட்டை சாப்பிடமாட்டியா என்று கிண்டலடிப்பான் லாரன்ஸ் அண்ணன். கிரி முறுக்கோ கடலைமிட்டாயும் தின்பான். கிறிஸ்த்துவப் பொண்ணு உன்னைத் தள்ளிக்கிட்டுப் போப்போறா அப்ப நீ சிக்கனும் மட்டனும் தான் சாப்பிடணும் என்று லாரன்ஸின் நண்பர்கள் கிரியை கேலி செய்வார்கள். கிரிக்கு உள்ளூர பெருமையாகக்கூட இருக்கும். டெய்ஸி ஆண்ட்டியும் சில சமயம் கிரியை கேலி பண்ணுவாள் நீ பெரியவனாகி யாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போற என்று.லாரன்ஸ் அண்ணன் கொஞ்ச நாள் வேலைப் பார்த்துவந்தான். கார் டிரைவர் வேலை. என்ன காரணமோ திடீரென்று வேலையை விட்டுவிட்டான். டெய்ஸி ஆண்ட்டி அப்போதெல்லாம் கடுகடுவென்று இருந்தாள். லாரன்ஸ் அண்ணனும் அவளைப் பார்த்துக் கத்தியிருக்கிறான். கிரி முன்னாலேயே. டெய்ஸி ஆண்ட்டி கர்த்தரே என்று கையில் ஜப மணிகளை உருட்டித் தொழத் தொடங்கிவிடுவாள்.டெய்ஸி ஆண்ட்டி தான் ஈரக் கையுடன் பின்னாலிருந்து வந்தாள். அவள் முகத்தைப் பார்க்க வருத்தமாகத் தான் இருந்தது. கிரி கிட்டே வந்து குனிந்து கிசுகிசுப்பாகக் கூறினாள்.
”போய் பேசு..!”
லாரன்ஸ் அண்ணனோ கொஞ்சமும் அசைவில்லாமல்தான் இருந்தான்.
டெய்ஸி ஆண்ட்டியிடம் எவ்வளவோ கேட்கவிருந்தது கிரிக்கு. நாக்கு ஒட்டிக்கொண்டு அப்படியே நின்றான். அவன் கண்களில் இருந்த திகைப்பைப் பார்த்து டெய்ஸி ஆண்ட்டி பெருமூச்சுவிட்டாள்.லாரன்ஸிடம் போய் “ராஜா, கிரி வந்திருக்கான் பாருப்பா..” என்றாள். அவள் அழுகிறாளோ என்று சந்தேகமாக இருந்தது கிரிக்கு.லாரன்ஸ் திரும்பி இருவரையும் பார்த்தான். ஆனால் அவன் முகத்தைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது.வாசலில் இருந்து ‘கிரி’ என்று அம்மாவின் குரல் கேட்டது. கிரி வாசலுக்கு ஓடி வந்தான். அம்மாதான் வந்திருந்தாள். அடிக்குரலில் “வாடா முதல்ல” என்று அவனை இழுத்தாள். கிரி பேசாமல் அவள் கூட போனான்.பிள்ளையார் கோவில் அருகே அம்மாவைக் கேட்டான்.“லாரன்ஸ் அண்ணனுக்கு என்னம்மா ஆயிடுத்து?”அம்மா துர்க்கை சன்னதியில் குங்குமம் இட்டுக்கொண்டாள். பதில் பேசாது கையைக் கூப்பிக்கொண்டாள். கண்கள் மூடிய அம்மாவின் முகத்தைப் பார்க்கக் கூட அவனுக்குக் கஷ்டமாக இருந்தது.
@@@
கிரி பாயில் புரண்டு புரண்டு படுத்தான். அவன் முதுகுக்கடியில் எதோ உறுத்துவது போலிருந்தது. கழுத்துக்கடியில் வியர்த்தது.பக்கத்தில் சுருண்டிருந்த ராஜூ தூக்கத்தில் திடிரென தூக்கத்திலேயே என்னவோ உளறினான். எண்ணை சீக்குப் பிடித்திருந்த தலையணையைப் பார்க்கவே வெறுப்பாக இருந்தது. ராஜு எப்போதும் கிரியை சுற்றி சுற்றி வருகிறான். பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போது புத்தகப்பையை தூக்கி வரமாட்டேன் என்று பாதி வழியில் தரையில் போட்டுவிட்டு அழுவான். கிரிதான் அதையும் தூக்கிவரவேண்டும். அம்மா சதா இறுக்கமாகவே இருக்கிறாள். அப்பாவிற்கு எப்பொழுதும் தலைவலி வந்துவிடுகிறது. பெரியவர்கள் தாங்களும் கஷ்டப்பட்டுக் கொண்டு குழந்தைகளையும் கஷ்டப்படுத்துவது ஏன் என்று கிரிக்கு புரியவில்லை. தங்கள் கஷ்டங்களையே அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்கிறார்கள்.. அப்பா ஒற்றை வெற்றிலையை நெற்றியில் ஓட்டிக்கொண்டு இருட்டறையில் ஈசிச்சேரில் படுத்துக்கொள்வார். அம்மா சமையலறையில் சாதப் பாத்திரங்களை உருட்டுவாள் பாத்திரங்கள் ஒவ்வொன்றாக குறைந்துக்கொண்டே வருவது அவளுக்கு மிகவும் துன்பத்தை அளிக்கிறது. ஒவ்வொரு வாரமும் மிகுந்த சண்டைக்குப் பிறகு ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு போகிறார் அப்பா. திரும்பி வரும்பொழுது வெறும் கையுடனும் வசையுடனும் தான் வருகிறார்.கூடத்திலிருந்த கடிகாரம் பதினொன்றைக் காட்டியது. அப்பா இன்னமும் வரவில்லை. அம்மா இன்னமும் வாசலில்தான் நின்றுக்கொண்டிருக்கிறாள். வெறும் நிழலாக தெரிந்தாள். ஞாயிற்றுக்கிழமையில் அப்பா இவ்வளவு நேரம் எங்கே இருப்பார் என்று புரியவில்லை. அவன் பார்க்காத பொழுது எல்லோரும் என்ன செய்கிறார்கள்? அம்மா சமையலறையில் என்ன செய்கிறாள் எப்போதும்? இப்போது லாரன்ஸ் அண்ணன் என்ன செய்துகொண்டிருப்பான்? வெற்றுப் பார்வையுடன் கட்டிலில் கிடப்பானோ?எவ்வளவு நேரம்தான் அம்மா வெளியில் காத்துக்கொண்டிருப்பாள்? இரவு முழுவதுமா? ஒருவேளை அப்பா வராதுபோனால்? அங்கேயே நின்றுகொண்டிருப்பாளா? கிரி வெளியே போனான். அம்மா அவனைப் பார்த்தாள். ஒன்றும் கேட்கவில்லை. அவன் ராஜுவைப் போல சிறியவனாக இருந்தால்அழுகையுடன் அவளைப் போய் அணைத்துக்கொள்ள முடியும். இன்னும் பெரியவனாக இருந்தால் அவனால் அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியும்.'அம்மா..' என்றான்.
'உம்..'
'அம்மா' என்று மீண்டும் கூப்பிட்டான்.
'இந்த மனுஷன் எப்போ வருவார்னு தெரிலை. எங்கே போய் தொலைஞ்சாரோ!' அம்மா பொதுவாக அலுத்துக்கொண்டாள். கிரியின் முகத்தை பார்க்காமல். அப்பா வந்தால் அம்மா அவரை எந்த கேள்வியும் கேட்க மாட்டாள்.கிரியும் அவள் பக்கத்தில் நின்று அவள் பார்க்கும் திசையில் சிறிது நேரம் பார்த்தான். அவன் முழங்காலில் கொசு ஒன்று கடித்தது. தெருவில் தூரத்தில் மின்விளக்கு அவ்வப்போது அணைந்து அணைந்து எரிந்தது.
'கண்ணா.. நீ போய் ஸ்டேஷன் வரை பார்த்துவிட்டு வரியா.. நானே போவேன் ஆனா ராஜு எழுந்து அழுதானா?..'கிரி பதில் சொல்லாது நின்று தெருவையே பார்த்தான். தினம் ராத்திரி தள்ளு வண்டியில் வறுக்கும் வேர்க்கடலையை விற்றுப் போகும் ஆளும் அவர்கள் தெருவை எப்பொழுதோ கடந்து போய்விட்டான்.'சரி அம்மா' என்று கிளம்பினான்.


'ஜாக்கிரதையா போ. டார்ச்சு தரட்டுமா?'அம்மா கேட்டதற்கு பதில் சொல்லாது போனான்.

சிறிது தூரம் போன பிறகு தான் காலில் செருப்பில்லை என்பது ஞாபகம் வந்தது. அம்மாவும் அதைக் கவனித்திருக்கவில்லை. காலில் கற்களும் வேறு எதோவும் குத்தத் துவங்கின. பின்னால் திரும்பி பார்த்தான். அம்மா மங்கலாகத் தெரிந்தாள். இடது பக்கம் நடந்தான். வாடகை சைக்கிள் கடை மூடியிருந்தது. வாசலில் பெஞ்சில் கடை முதலாளி ஆறுமுகம் படுத்து தூங்கிக்கொண்டிருந்தான். டீக்கடையில் பாய்லரை அலம்பிக்கொண்டிருந்தான் ஒரு சிறுவன். கடைவாசலில் இருந்து வழிந்தோடும் நீர்அரிக்கன் விளக்கொளியில் ரிப்பன் போல பளபளத்தது. அந்தப் பையன் எப்போது தூங்குவான்? அந்தப் பையனின் அம்மாவும் அவன் வருவதற்காக காத்திருப்பாளா?தெருவைக் கடந்ததும் மைதானம் வந்தது. மைதானத்தின் பக்கத்தை ஒட்டிப்போகும் தெரு வழியாக செல்லுவது சுற்றுவழி. மைதானத்தை வெட்டி குறுக்காகப் போனால் ஆட்டுத்தொட்டியும் ஆட்டுத்தொட்டியின் பக்கத்தில் சர்ச்சும் வரும். அதைத் தாண்டினால் ரயிலடியைத் தொடும் பஜாருக்குள் நுழைந்துவிடலாம்.இந்த மைதானம் வழிதானே லாரன்ஸ் அண்ணன் கிரியை சர்ச்சுக்குக் கூட்டிப் போவான். எத்தனை முறை அவனுடன் போயாகிவிட்டது. இனி லாரன்ஸ் அண்ணனால் சர்ச்சுக்கு எல்லாம் போக முடியுமா? அந்தக் கட்டிலிலே கட்டிப்போட்டது போலக் கிடக்கிறானே!மைதானம் இருட்டு வெளியாக கிடந்தது. தன்னிச்சையாக மைதானத்தில் நுழைந்து நடந்தான். இங்கேதான் எல்லோரும் கிரிக்கெட், பாட்மிண்டன் விளையாடுவார்கள். எதுவோ காலடியில் நழுவியது. பாம்பா..பூரானா. கிரி சட்டென நடுங்கி ஓடினான். ஓட ஓட மைதானத்தின் இருள் கூடிக்கொண்டே வந்தது. எங்கோ ஒரு நாய் ஊளையிட்டது. ஆளற்ற மைதானம் இரவில் எத்தனை பயத்தை உருவாக்குகிறது. கிரிக்கு போகும் திசை குறித்து சந்தேகம் வந்தது. அவன் தொலைந்துப் போனால் அம்மா இரண்டு பேருக்காகவும் வீட்டில் காத்திருக்க வேண்டும்.அம்மா இவன் மீது நம்பிக்கை வைத்து அனுப்பியிருக்கிறாள். ரெயிலடி காலியாகத் தான் கிடக்கும். பதினொரு மணிக்கு மேல் எந்த ரயில் வரப்போகிறது? அம்மாவிடம் அவனால் எப்படி சொல்ல முடியும்?இன்று இரவு அவர் வரவில்லையென்றால் அவர்கள் மூன்று பேரும் தாத்தா வீட்டுக்கு போகவேண்டியதுதான். விடுமுறை நாட்களில் பாண்டிச்சேரிக்குப் போய் தாத்தா வீட்டில் இருந்தபொழுதெல்லாம் எத்தனை சந்தோஷமாக பொழுது கழிந்திருக்கிறது. ஆனால் அப்பா வந்தாலும் வராவிட்டாலும் அம்மா நிம்மதியற்றுத் தான் இருப்பாள். ராஜுவின் அழுகையும் குறையாது. பாதத்தில் ஈரமாய் எதுவோ ஒட்டி அறுவெறுப்பாயிருந்தது. அதைக் கையால் தொட்டுப் என்னவென்றுப் பார்க்கக் கூசி காலை தரையில் அழுத்தித் தேய்த்து நடந்தான். இப்போது புழுதி ஓட்டிக்கொண்டது.ஆட்டுத்தொட்டியைக் கடந்தவுடன் சர்ச் பக்கத்தில் முளைத்தது. அவன் இதுவரை தனியாக உள்ளே போனதில்லை. எப்போதும் கூடவே லாரன்ஸ் அண்ணன் இருந்திருக்கிறான். லாரன்ஸ் மண்டியிட்டுத் தொழுவதை எத்தனை முறை பார்த்திருக்கிறான்.சர்ச் கதவு ஒரு தள்ளலில் முனகித் திறந்தது. உள்ளே மூலையிலிருந்து வெளிச்சம் துளிப்போல இருந்தது. எப்போதும் அணையாத மெழுகுவர்த்தியிலிருந்துதான் அந்த வெளிச்சம் வந்தது. மெழுகுவர்த்தியின் துடிக்கும் ஒளியால் நீளமான நிழல்கள் அலைந்தன. உள்ளே இருப்பதை அவன் பார்க்கவேண்டுமா? அவனுக்குத் தெரியாதா? மனதுக்குள் சர்ச்சின் ஒவ்வொரு மூலையும் அவனுக்குத் தெளிவாக தெரிகிறதே! உயரமான கூரைக்குக் கீழே மேடை மீது மேரி மாதாவும் குழந்தை ஏசுவும் சிலையாக. பக்கத்து சுவரில் சிலுவையும் ஏசுவும் ஓவியமாய். கோடியில் பெரிய மீன் தொட்டி போல கண்ணாடி பெட்டிக்குள் படுத்திருக்கும் ஏசுவின் பொம்மை.ஏசுவின் முகத்திலும் மேரி மாதாவின் முகத்திலும் ஏன் இத்தனை வருத்தக் களை என்று முதன்முறையாக யோசித்தான். சர்ச்சுக்குள் மண்டியிட்டுத் தொழும் லாரன்ஸ் அண்ணனின் முகத்திலும் அதே துயரக் களைதானே! டெய்ஸி ஆண்ட்டி முகத்தில் கூட. ஏன் இருட்டில் நின்ற அம்மாவின் முகத்திலும் அதுதான் இருந்திருக்க வேண்டும்.இன்று காலை பிள்ளையாரைப் பாலால் குளிப்பாட்டும் பொழுது சன்னதியில் வந்த வாசனை மீண்டும் வருவது போல் இருந்தது. ஏசுவிற்கும் அபிஷேகம் எல்லாம் செய்வார்களா என்ன? பிள்ளையார் மேல் வழிந்த பால் ஊடாக அவருடைய கருத்த உருவம் பளபளவென மின்னியிருந்தது. பிள்ளையாரின் உடலைத் தொடும்போது கை சில்லென்று இருந்தது. பிள்ளையாரைப் பார்க்கும்போதெல்லாம் உள்ளுக்குள் தோன்றும் முறுவல் ஆனந்தம் எல்லாவற்றுக்கும் நேர் எதிராய் ஏசுவையும் மேரியையும் பார்க்கப் பார்க்க உள்ளுக்குள் குமுறல் ஏன் எழுகிறது?லாரன்ஸ் அண்ணனின் கண்களும் இன்று காலை ஏசுவின் கண்களைப் போல இப்படித்தானே எங்கேயோ நிலைத்திருந்தன. கிரி ஒருக்களித்துத் திறந்தக் கதவை சட்டென மூடினான். அடிவயிற்றில் புதிதாகத் துடிக்க ஆரம்பித்த பயத்துடன் படிகளில் சரசரவென இறங்கி இருட்டுக்குள் ஓடினான்.


16.5.09

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள் 13 ......சுகுமாரன்பூனை...

மனிதர்கள் தவிர

மற்ற பிராணிகளுடன்

பழக்கமில்லை எனக்கு
எனினும்


உள்ளங்கைச் சூடுபோல

மாறாத வெதுவெதுப்புள்ள

பூனைகளின் சகவாசம்

சமீப காலமாய்ப் பழக்கமாச்சு

மயிலிறகை அடை வைத்த பருவத்தில்

கால் குலுக்கக் கை நீட்டி

விரல் கிழித்த பூனையால்

'மியாவ்' என்று நீண்ட நாள் பயந்தேன்

இதயத்தின் தசையில் மனிதக் கீறல்கள்

வடுவாக மிஞ்சிய இப்போது

பூனைப்பயம் பொய்த்துப் போச்சு

வீடு மாற்றியபோது புரிந்தது -

நன்றியின் சொரூபம்

நாய்களல்ல

பூனைகள்

நாய்கள்

மாநிதரைச் சார்ந்தவை

சுதந்திரமற்றவை

எப்போதோ

சிரட்டையில் ஊற்றிய பாலின் நினைவை

இன்னும் உறிஞ்சியபடி

காலி வீட்டில் பூனைக்குரல் குடியிருந்தது

பூனைகள்

வீடுகளைச் சார்ந்தவை

சுதந்திரமானவை


நாய்களின் பார்வையில் அடிமையின் குழைவு

பூனையின் பார்வையில் நட்பின் கர்வம்

உலர்ந்த துணியில் தெறித்த

சொட்டு நீர் ஓசையுடன் நடக்கும்

பூனைகளுடன் இப்போது

பகையில்லை எனக்கு

உடல் சுத்தம்

சூழ்நிலைப் பராமரிப்பு

ரசனையுள்ள திருட்டு

காதல்காலக் கதறல்

பொது இடங்களில் நாசூக்கு - என்று

பூனைகளைப் புகழக் காரணங்கள் பலப்பல

எனினும்

என்னைக் கவரக்

காரணங்கள் இரண்டு

ஒன்று:

எனக்குத்

கடவுளுக்கும்

வாகனமாய்ப் பூனை இல்லை

இரண்டு:

பூனை கண் மூடினால்

இருண்டுவிடும் உலகம்

நானும்

கண்மூடுகிறேன்

"மியாவ்"

o

15.5.09

மீண்டும் வாசிக்கிறேன் 2


மலையோ மனிதன் வார்த்த.........

எஸ்.வைத்தியநாதன்

மலையோ

மனிதன்

வார்த்த

கட்டிடமோ -

எங்கும்

நிறைந்து

இருக்கும்

வெளி.

உயர -

அழகும்கூட -

எங்கும்

விரிந்தேன் -

வெளியோடு

சேர.

சேர்ந்தேன் -

எங்கும்

நிறைந்தேன்.

மலையோ

வார்த்த

கட்டிடமோ -

எங்கும்

நிறைந்து

இருக்கும்

வெளி.

வாக்காளர் பட்டியலில் என் பெயரும் இல்லை, கமலஹாசன் பெயரும் இல்லை...


நான் இந்த முறை ஓட்டுப் போடலாமென்றிருந்தேன். யாருக்கு என்பதிலும் தீர்மானமாக இருந்தேன். என் பெயர் பட்டியலில் இல்லை என்பது இன்று 4 மணிக்குத்தான் தெரிந்தது. என் குடும்பத்தில் அப்பாவிற்கு (87 வயது), மனைவிக்கு, என் புதல்வனுக்கு, மாமியாருக்கு என்று எல்லோருக்கும் ஓட்டுப்போட பெயர்கள் வாக்காளர் பட்டியில் இருந்தன. ஆனால் என் பெயர் மாத்திரம் இல்லை. ஆனால் வாக்காளர் அடையாள அட்டை இருந்தது. இதற்கு முன் பல முறைகள் நான் ஓட்டுப் போட்டிருக்கிறேன். காலையில் தினத்தந்தி பேப்பரைப் படித்தப்பின்தான் தெரிந்தது கமலஹாசன் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பது. எனக்கு இது ரொம்ப ஆச்சரியத்தைத் தந்தது. நான் சாதாரண நபர். ஆனால் கமலஹாசன் உலகம் புகழும் நடிகர். ஆனால் அவர் தன்னை சாதாரணன், பாமரன் என்று குறிப்பிட்டுள்ளார். ஓட்டு போடுவதற்காக ஐதாரபாத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒருநாள் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு வந்திருக்கிறார். இதனால் அவருக்கு 10 லட்ச ரூபாய் நஷ்டம்.

கமலஹாசனும் என் வயதை ஒத்தவர்தான். ஆனால் சிறந்த நடிகர். நடித்தே புகழ் பெற்றவர். அவருக்கு பிறந்தநாள் கொண்டாட என்றெல்லாம் ரசிகர் மன்றம் உண்டு. அவர் பெயர் எப்படி வாக்காளர் பட்டியலில் இல்லாமல் போய்விட்டது. தேர்தல் ஊழியர்கள் எதற்காக அவரைத் தேடி வீட்டிற்கு வர வேண்டும். கமலஹாசன் பெயர் பத்திரிகைகளில் வந்துகொண்டிருக்கிறது. அவர் படங்கள் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்டவரை வீட்டில் இருக்கின்றாரா என்று ஏன் தேர்தல் ஊழியர்கள் போய்ப் பார்க்க வேண்டும்.

உண்மையில் கமலஹாசன் போன்ற ஒரு நடிகரை வீட்டில் போய்ப் பார்ப்பது என்பது சுலபமான விஷயமுமில்லை. அவர் யாரைப் பார்க்க வேண்டுமென்று நினைக்கிறாரோ அவர்கள் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் சுலபமாக அவரைப் போய் பார்த்துவிட முடியாது. என் இலக்கிய நண்பர் ஒருவர் கமலஹாசனைப் பார்க்க போய்விட்டு, பார்க்க முடியாமல் வெறுத்துப் போய்விட்டார். என்னிடம் இதைச் சொல்லி குமைந்தபோது, 'நீங்கள் ஏன் அவரைப் போய்ப் பார்க்கப் போகிறீர்?' என்றேன். அவரைப் போய்ப் பார்த்து அவர் மூலம் சினிமாவிற்குள் பாட்டு எழுத நுழைந்து விடலாமென்று அவர் நினைத்திருப்பார். இப்படித்தான் கவிதை எழுதும் என் நண்பர்கள் பலர் அவஸ்தைப் படுவதை எண்ணி வருத்தமாக இருக்கிறது. எல்லோருக்கும் எல்லா வெற்றியும் கிடைத்துவிடாது. கவிதை எழுதுவதில் வெற்றி, சினிமா பாடல்கள் எழுதுவதில் வெற்றி என்றெல்லாம் கிடைத்து விடாது.

தேர்தல் ஊழியர்கள் கமலஹாசனை அவர் வீடு தேடி வந்து, கமலஹாசனைப் பார்க்காமல் போனதால் வாக்காளர் பட்டியலில் பெயரை எடுத்திருப்பார்கள்.

என் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. அதற்குக் காரணம் நான் காலையில் 7.30 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால் திரும்பவும் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வர இரவு 8 மணி ஆகிவிடும். என்னை தேர்தல் ஊழியர்கள் பார்க்க வாய்ப்பே இல்லை. மேலும் நான் முன்பு இருந்த வீட்டிலிருந்து வேறு வீட்டிற்குக் குடிப்போய்விட்டதால், முன்பு இருந்த வீட்டில் உள்ளவர்கள், 'நான் இல்லை' என்று சொல்லியிருப்பார்கள். உண்மையில் தேர்தல் ஊழியர்கள் பாடு திண்டாட்டம். எப்படி என் குடும்பத்தில் மற்றவர்கள் பெயர்கள் தப்பித்தது என்பது தெரியவில்லை. என் அப்பா பெயர் நிச்சயம் இடம் பெற்றிருக்கும் ஏன்எனில் அவர் வீட்டில்தான் சதாசர்வகாலமும் இருக்கக் கூடியவர். வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் தப்பித்து சேர்ந்தது என் மனைவியின் பெயரும், புதல்வனின் பெயரும்தான்.

சரி, ஓட்டுப் போடவில்லை என்பதில் வருத்தமா? அதெல்லாம் ஒன்றுமில்லை. கமலஹாசன் மாதிரி நான் ஒருநாளைக்கு 10 லட்சம் இழக்கவில்லை. உண்மையில் எனக்கு சந்தோஷம் தரக்கூடிய நாள் இந்தத் தேர்தல் தினம்தான். தேர்தல் தினத்தன்று அலுவலகம் விடுமுறை விட்டதால், அப்பாடா என்றிருந்தது. ஞாயிற்றுக்கிழமையைத் தவிர extra லீவ். வீட்டில் எல்லோரிடனும் ஒருநாள் முழுவதும் இருந்தேன். காலை 7.30 மணியிலிருந்து அவசரம் அவசரமாக அலுவலகம் ஓடவில்லை. நிம்மதியாக இருந்தேன். காலையில் நிதானமாக எழுந்து சலூன் போய் தலை முடித் திருத்தி, கம்ப்யூட்டரில் (கணினி என்று சொல்ல தோன்றவில்லை) அமர்ந்து 160 பக்கம் நவீன விருட்சம் தயாரித்துக்கொண்டிருந்தேன். காலையில் ஒரு போன் வந்தது. என் எழுத்தாள நண்பர். 'என் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை' என்றார். 'என் பெயரும் இல்லை,' என்றேன். மாலையில் சேலத்திலிருந்து இன்னொரு இலக்கிய நண்பரிடமிருந்து போன் வந்தது. 'என் குடும்பப் பெயர்களே வாக்காளப் பட்டியலில் இல்லை,' என்றார். 'மகிழ்ச்சி' என்றேன்.

11.5.09

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......


12

பூனைகள்

அழகியசிங்கர்

மியாவ்வென்று ஸ்நேகமாய்க் கத்தாமல்
குட்டிகளைப் பெற்றுக்கொண்ட பூனையொன்று

என் வீட்டில் அதிகம் உபயோகப்படுத்த முடியாத அறையொன்றில்

போய்க் குடியிருக்க அனுமதி கேட்கத் தவற

குட்டிகளோ தாய்ப் பூனையுடன்

சாமர்த்தியமாய்ச் சேர்ந்தடித்தன லூட்டி

ஆளைக் கண்டால் பதுங்கும் பாவனை

போனால் போகிறதென்று

ஓட்டைக்கொட்டாங் குச்சியில் பாலை வைத்தால்

நம்மெதிரில் குடிக்க வராமல்

பதுங்கிப் பதுங்கி

ஆளில்லா நேரமாய்த் தொட்டு

கவிழ்க்கும் அவசரமாய்

முகமெல்லாம் பால் துடிக்கும்

இரவில் பூனைகளின் புணர்ச்சியின் சத்தம்

குழந்தையின் அழுகையாய்க் காதிலறையும்

கேட்டுத் தூக்கி வாரிப்போடும் தேகம்

என்றோ ஒருநாள் நடந்தது

குட்டிகளுடன் தாய்ப் பூனை வெளியேற்றம்

வெள்ளை நிறத்தில் பூனையொன்று

இன்னொரு நாள் வரக்கண்டேன்

படுக்கை அறையில் சம்சாரக் கட்டிலில்

பகல் பொழுதொன்றில்

சொகுசாய்ப் புரளும் காட்சியைக் கண்டு

பதறிப்போனேன்.


பார்ப்பதற்குப் பிடிக்காத

குண்டுப் பூனையொன்று

மாமிசம் விரும்பாத என் வீட்டில்

மீன்களைக் கடித்துத் துப்ப

அண்டை வீட்டாரின்

தேவை இல்லாத மனவிரிசல்களுடன்

நாற்றம் குடலைப் புடுங்கியது.

அட்டகாசம் பண்ணும் பூனைகளே

போய் வாருங்களென்று மிரட்ட

எடுத்தேன் கையில் கிடைத்ததை

அவை பல தெருக்கள்

தாண்டி ஓடட்டுமென்று

10.5.09

பின்னற்தூக்கு
சிறுகதைஒரு தற்கொலைச் செய்தியோடு அன்றைய காலை விடியவேண்டியதாகியிருந்ததற்கும் வீட்டுப் பின்கட்டில் காகமொன்று அதன் தொண்டைத் தண்ணீர் வற்ற இரைந்து இரைந்து கத்தியதற்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது. அம்மா அதுவும் அபசகுனத்தின் அறிகுறியென, செய்தி கொண்டு வந்த செல்வியிடம் சொல்லிப் பெருமூச்சு விட்டாள்.செல்விக்கு நீண்ட பின்னல். முழங்கால் வரை நீண்ட பின்னல். எப்பொழுதும் பின்னிவிட்டு அதன் நுனியில் கறுப்பு றப்பர்பேண்டால் முடிச்சுப்போட்டு விட்டிருப்பாள். மருத்துவத்தாதிப் பயிற்சிக்கென வந்திருந்த பெண்கள் தங்கியிருந்த விடுதியில் ஒரு பெண் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அந்த மழைக்காலக் காலைப்பொழுதில் அவள் செய்திகொண்டு வந்தபொழுது அப்பின்னலும் முடிச்சும் தூக்குக் கயிறு போலத்தான் தோன்றியது.எந்தப் பெண் எனத் தெரியவில்லை. வெளியூர்ப் பெண். ஆனாலும் இந்த வீதியில் பழக்கப்பட்ட ஒரு பெண்ணாகவே இருப்பாள். அருகிலிருந்த நகரத்தின் மையத்திலிருந்த மருத்துவத் தாதிகள் பயிற்சி நிலையத்தில் பயிலச் சேர்பவர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த விடுதியில் இறுதி ஆண்டுகளில் தங்கிப் பயிலவேண்டுமென்பது ஒரு விதிமுறை. அந்த விதிக்கமையவோ, அல்லது தங்கிப்படிக்க வேறு வசதியான இடம் அந்த நகரத்தில் அமையாததாலோ பல ஊர்களிலிருந்தும் வந்திருந்த எல்லா இறுதியாண்டு மாணவிகளும் அங்குவந்து தங்கியிருந்தனர்.அம்மாவுக்கு எல்லாப் பெண்களையும் பரிச்சயம். வீட்டின் முன்னால் அம்மா ஒரு சிறிய பெட்டிக்கடை வைத்திருந்தாள். சின்ன ஷாம்பூ பக்கெட், சவர்க்காரம், கடித உறைகள், கூந்தல் பின்கள், ஊக்குகள் எனப் பெண்கள் வந்து வாங்கிப் போவார்கள். சில சமயங்களில் அவர்கள் விடுதியின் வயதான காவல்காரனுக்கு வெற்றிலையும் சுண்ணாம்பும் கூட வாங்கிப் போவார்கள். அம்மாவுடனான இந்தச் சிறிய வியாபாரங்களின் பொழுது அவர்கள் சிந்தும் புன்னகைகள் இடையில் ஒரு பாலம் போலப் பரவி அம்மாவுக்கு அவர்களுடனான பரிச்சயத்தை இலகுவாக ஏற்படுத்திவிட்டிருந்தது.மருத்துவத்தாதிகள் என்றால் அவர்களுக்கே உரிய வெள்ளைச் சீருடையையும் , தொப்பியையும் கற்பனை பண்ணக் கூடாது. இவர்கள் எல்லாவற்றையும் பயின்று பின் வேலை பார்க்கச் செல்லும்பொழுதே அவற்றை அணிபவர்களாக இருக்கக் கூடும். இப்பொழுதைக்கு வெள்ளைச் சேலைதான் அவர்கள் சீருடை. வீதியில் காலை ஏழு மணிக்கே அவர்கள் சோடி சோடியாய் பஸ் நிலையம் நோக்கி நடப்பதைப் பார்க்க வெள்ளைக் கொக்குகளின் அணிவகுப்பைப் போல அழகாக இருக்கும்.செல்வி இப்பொழுது எழுந்துகொண்டாள். செய்தியை இன்னொருவரிடம் எத்திவைத்த திருப்தியோடு ஏதோ வர்ணிக்கமுடியாத சோகமொன்றும் அவள் முகத்தில் படிந்திருந்ததைப் பார்க்கமுடிந்தது. அவள் எழுந்துகொண்டதோடு அம்மாவும் எழுந்துகொண்டாள். செல்வி கொண்டுவந்த பாலைப் பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்துக் காய்ச்சத் தொடங்கினாள். செல்விதான் அந்த விடுதிக்கும் பால் விற்பவள். முக்கால்வாசிப் பால் சுமந்த பெரிய பாத்திரத்தைத் தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டு அடுத்தவீட்டுக்கு நகர்ந்தாள். அங்கேயும் அந்தத் தற்கொலைச் செய்தியை முதலில் இவள்தான் சொல்லவேண்டியிருக்கும். இல்லாவிடில் அந்த வீட்டிலிருந்து விடுதிப்பக்கம் யாரேனும் போய் வந்திருந்தால் அவர்களுக்கு முன்னமே தெரிந்திருக்கும்.அம்மாவுக்குத்தான் ஒரே யோசனையாக இருந்தது. எந்தப்பெண்ணாக இருக்கும் ? நேற்று மாலையில் மழைக்கு ஒரு மஞ்சள் பூப்போட்ட குடையை எடுத்து வந்து பேனையும், பிஸ்கட்டும், வாழைப்பழமும் வாங்கிப் போனதே ஒரு சிவந்த ஒல்லிப்பெண். அதுவாக இருக்குமோ ? சாக நினைத்த பெண் பிஸ்கெட்டெல்லாம் வாங்கிச் சாப்பிட்டுவிட்டுச் சாகுமா என்ன ? அதுவும் முழுதாக எழுதித் தீராதவரைக்கும் வாழ நினைக்காத பெண் கொஞ்சம் கூடுதல் விலைகொடுத்து அழகான பேனை வாங்கிப் போக மாட்டாளே ? அதுவும் நட்ட நடுஇரவில் அறைத் தோழியருக்கு எந்த அரவமும் ஏற்படா வண்ணம் எழுந்து விடுதியின் முன் சாலைக்கு வந்து தன்னை முழுதும் நிர்வாணமாக்கி, தனது வெள்ளைச் சேலையில் தூக்குப் போட்டுச் சாக ஒரு பெண்ணுக்கு எந்தளவுக்கு தைரியம் இருக்கவேண்டும் ? அந்தச் சிவந்தபெண் அந்தளவுக்கு தைரியமானவளா என்ன ?நிச்சயமாக அந்தப் பெண்ணாக இருக்கமாட்டாள் எனத் தோன்றியது. அவ்வாறெனில் இறந்த பெண் யார்? செத்தவள் இறுதியாக வந்து என்ன வாங்கிப் போனாள் ? அம்மா கடைக்கு வந்த பெண்களின் ஒவ்வொரு முகமாகத் தன் நினைவுக்குக் கொண்டுவர முயன்று தோற்றாள். நேற்றுவந்த பெண்ணின் மஞ்சள் கலரில் அழகான பூப்போட்ட குடை ஞாபகத்திலிருந்த காரணம் அதே மாதிரியான குடை அம்மாவிடமும் இருந்ததுதான். அந்தக் குடையை யாருக்கோ இரவல் கொடுத்துப் பின் வாங்க மறந்துவிட்டதாகத் தோன்றிய கணம் பொங்கிய பாலை இறக்கிவைத்துவிட்டு எழுந்துபோய் அலமாரியின் மேலே பார்த்தாள். குடை அதன் பாட்டில் இருந்தது. ஆனால் எப்பொழுதோ, எதுபோன்றோ குடை அல்லது வெயில் சுமந்துபோன பெண்ணொருத்தி இன்று உயிருடன் இல்லை. நிச்சயமாக இந்தக் கடையில் சின்னச் சின்னதாகக் குவிந்திருக்கும் பொருட்களில் ஏதோ ஒரு பொருளை வாங்கிப் போனவளாகத்தானே இருப்பாள். அப்பொழுது சிந்திய புன்னகையும், சிதறவிட்ட மூச்சுக்காற்றுகளும் இந்த பெட்டிக் கடையின் மூலைகளைத் தேடி ஓடியிருந்திருக்குமே ?வாசல் வீதியினூடாகப் போலிஸ் வண்டி விடுதியை நோக்கிப் போவது தெரிந்தது. இனி விசாரணை தொடங்கக்கூடும். அவளது பிணம் அறுக்கப்பட்டுப் பரிசோதனைகள் நடக்கும். தற்கொலைக்கான காரணம் பலவிதங்களில் அலசப்படும். அந்தப் பெண் குறித்தான ஒழுக்கமும், அந்தரங்கமும் கூடப் பரிசீலிக்கப்படும். இனி வண்டி,வண்டியாக அவளது உறவினர்கள் வந்து கதறலோடு விடுதியை நிறைக்கக்கூடும். காலை நேரங்களில் வீதியில் அணிவகுக்கும் கொக்குச் சோடிகளில் ஒன்று குறையும்.அம்மா தன் கடையை அன்று மட்டும் மூடப்போவதாக உத்தேசித்துக் கொண்டாள். இன்றைய துக்கத்தில் எப்படியேனும் பங்குகொள்ள வேண்டும்போல இருந்தது அவளுக்கு.தானாகச் சாவதை விடவும் அகால மரணங்கள் என்பவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவைதான். ஒவ்வொரு நாளும் சிரிக்க நினைப்பதைப் போல, அழ நினைப்பதைப் போல, பசியை நினைப்பதைப் போல, குளியலை நினைப்பதைப் போல மரணத்தை தினமும் நினைப்பவர்கள் இல்லை. ஒருவரைச் சார்ந்தே வாழப்பழகியவர்கள் அல்லது அவரோடு நெருக்கமாகப் பழகியவர்கள் அல்லது தெரிந்தவர்கள் அவரது அகாலமரணத்தின் போது பெரிதும் பாதிக்கப்படுவார்கள். பின்னொருநாளில் யாரிடமோ ஏமாந்து செல்வியும் தற்கொலை செய்துகொண்ட பொழுது அவளிடம் பாலை இழப்பதற்காகக் காத்திருந்த அவளது பிரியத்திற்குரிய மாடுகளும், அவள் கொண்டுவரும் பாலைப் பெறுவதற்காகக் காத்திருந்த அம்மாவும் மீண்டும் சோகத்தில் மூழ்கினர். அம்மா தனது துயரத்தை வெளிக்காட்ட அன்றும் முன்போலக் கடையைப் பூட்டினாள்.தனது தாவணியில் தூக்குப்போட்டுச் செல்வியின் தலை துவண்டு தொங்கிக் கொண்டிருந்த பொழுது அவளது நீண்ட பின்னல் அவளது முழங்காலை முன்புறமாகத் தொட்டபடி தனியாகத் தொங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுதும் அப்பின்னலும் கறுப்பு றப்பர்பேண்ட் முடிச்சும் தூக்குக் கயிர் போலத்தான் தோன்றியது.

நட்சத்திரங்கள் - தொகுதி 1
எப்பொழுதும் இருக்கும் யுத்தம்

கண்ணீரும் நினைவுகளும்

கோபத்தின் மறுபிறவிஉன்னிடம் பேசுவதற்கு

வார்த்தைகளை சேமித்துக் கொண்டிருக்கிறேன்

உன்னிடம் மட்டும் பேசுவதற்கு


பொய்யின் தூய்மை

தோல்வியுற்ற மனம்

நிலவின் வசியம்


உலகையே அழித்த துப்பாக்கி

மிச்சம் இருக்கின்றது

இன்னும் ஒரு தோட்டா


பிரியும் பொழுது

நினைவுப் பரிசு கேட்ட என் தோழியே

அப்படியெனில் நம் நினைவுகள் ... ?புளிய மரத்திற்கு அடியில்

சித்தார்த்தன்

சிகரெட்பிடிக்கிறான்

தேவதையின் நிழலுடன்

ஒரு குரல்

என்னை நோக்கி வருகிறது

நான் இறந்துவிட்டேன்


எங்கே என் மனைவி

மின்னலுக்கு ஒரு கவிதை

டிக்கு ஒரு கவிதை

மழைக்கு ஒரு கவிதை

புழுதி பார்த்தோம்

எழுதிப் பார்த்தோம்

இன்னும் எழுதுவோம்

எழுதிக் கொண்டே இருப்போம்

8.5.09

எஸ். வைதீஸ்வரனும் மெளனி கதைகளும்....
நேற்று என்று நினைக்கிறேன். இல்லை இல்லை முந்தாநாள் இரவு (06.04.2009) வைதீஸ்வரனிடமிருந்து ஒரு போன் மெளனி கதைகள் புத்தகம் கேட்டு. வைதீஸ்வரன் என்னிடம் புத்தகம் கேட்டு எப்போதும் போன் செய்ததில்லை. அதுவும் மெளனி புத்தகம் ஏன் கேட்கிறார் என்ற ஆச்சரியம் எனக்கு. என்னைப் போன்ற பல படைப்பாளிகளுக்கு மெளனி, புதுமைப்பித்தன், அசோகமித்திரன் போன்ற படைப்பாளிகள் கைடு மாதிரி. வைதீஸ்வரன் இல்லாமல் வேறு யாராவது அந்தப் புத்தகத்தை கேட்டிருந்தால், இல்லை என்று சொல்லியிருப்பேன். கேட்டது வைதீஸ்வரன் என்பதால் என் புத்தக அலமாரியில் போய்த் தேடினேன். மெளனி புத்தகம் கிடைத்ததோடல்லாமல் வேறு ஒருபுத்தகம் ஒன்றை புரட்டிப் பார்க்கும்போது இரு கடிதங்கள் கீழே விழுந்தன. எடுத்துப் புரட்டிப் பார்த்தால் சுந்தர ராமசாமி எழுதிய கடிதங்கள். எனக்கு ஆச்சரியம். அக்டோபர் மாதம் 2001ஆம் ஆண்டு எழுதிய அக் கடிதத்தை ஏன் விருட்சத்தில் பிரசுரம் செய்யவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எந்தக் கடிதம் எழுதினாலும் சுந்தர ராமசாமி பதில் எழுதி விடுவார். அழகாக டைப் செய்து கீழே சுரா என்று கையெழுத்திடுவார். விருட்சம் வெளியீடாக நான் சில புத்தகங்களை அவருக்கு அனுப்பி இருந்தேன். அதற்குத்தான் அவர் பதில் எழுதியிருந்தார். தொடர்ந்து அவருக்கு நான் பதில் எழுத, எனக்கு அவர் இன்னொரு கடிதமும் எழுதியிருந்தார்.திரும்பவும் அக் கடிதங்களைப் படித்த எனக்கு உடனே விருட்சம் இதழில்வெளியிட வேண்டுமென்ற பரபரப்பு கூடியது. அதற்குமுன் பிளாகில் அக் கடிதங்களைப் பிரசுரம் செய்யலாமென்று தோன்றியதால் இங்கு அவற்றைப் பிரசுரம் செய்கிறேன்.முதல் கடிதம் 20.10.2001


அன்புள்ள அழகியசிங்கர் அவர்களுக்கு,


உங்கள் 04.10.2001 கடிதமும் நீங்கள் அனுப்பியிருந்த நான்கு கவிதைத் தொகுதிகளும் கிடைத்தன.பா.வெங்கடேசன் தொகுப்பை அவர் அனுப்பி வைத்திருக்கிறார். அதைத்தான் இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். அத்தொகுப்பைப்பற்றி ஒரு மதிப்புரை எழுதலாம் என்ற எண்ணம் இருக்கிறது.நீங்கள் அனுப்பிய தொகுப்புகளைப் படித்துவிட்டு என் அபிப்பிராயத்தைத் தெரிவிக்கிறேன். திட்டம் போட்டு வேலை செய்ய முடியவில்லை. தேதியில் முடித்துத் தரவேண்டிய வேலைக்கு முன்னுரிமை போய்விடுகிறது.இப்போது நீங்கள் அனுப்பித் தந்திருக்கும் தொகுப்புகளை நான் இலவசமாகப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. உங்கள் வெளியீடுகளுக்கு நான் உரிய விலை தந்து வாங்குவதே நியாயமானது. அனுப்பித் தரவேண்டிய தொகையை கணக்கிட்டு எழுதுங்கள். தபால் செலவையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
எதிர்காலத்தில் நீங்கள் காலச்சுவடு மதிப்புரைக்கு அனுப்பும் புத்தகங்களை தனியாக எனக்கு அனுப்ப வேண்டியதில்லை.விருட்சத்தில் நீங்கள் வெளியிடும் அசோகமித்திரனின் வரைபடத்தை என்னால் சகிக்க முடியவில்லை. சமீபத்தில் அவர் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த நிமிஷத்தில் வேண்டுமென்றால் அவர் முகம் உங்கள் வரைபடம்போல் இருந்திருக்கலாம். இப்போது நல்ல குணம் பெற்றுவிட்டார். நீங்கள் விரும்பினால் நான் ஒரு வரைபடத்தை வரைந்து அனுப்புகிறேன். நீங்கள் வெளியிடுவதைவிட அது நன்றாக இருக்கும்.என் அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்,சுரா


பின் குறிப்பு : உங்கள் 16.10.2001 கடிதம் இப்போது கிடைத்தது. நீங்கள் புத்தக விலையைத் தெரிவித்ததும் அதனுடன் சந்தா நாற்பது ரூபாய் சேர்த்து அனுப்பிவிடுகிறேன்.(சுரா அசோகமித்திரன் வரைபடத்தைப் பற்றி குறிப்பிடுகிறார். ஓவியர் விஸ்வம் வரைந்த ஓவியம் அது. எனக்குப் பிடித்த அசோகமித்தரன் படம் அது. எப்போதும் விருட்சத்தில் அவருடைய அந்த ஓவியத்தையே வெளியிடுவேன். அசோகமித்திரனுக்கும் அந்த ஓவியம் பிடிக்கும் - அழகியசிங்கர்)இரண்டாவது கடிதம் 15.11.2001

அன்புள்ள அழகியசிங்கர்,


வணக்கம். உங்கள் 06.11.2001 கடிதம் கிடைத்தது. வேலை நெருக்கடியால் உடனடியாகப் பதில்போட இயலவில்லை. மன்னியுங்கள்.அசோகமித்திரன் வரைபடத்தைப்** பற்றி நான் எழுதியிருந்த விமர்சனத்திற்கு அழுத்தம் தருவதற்காகவே 'நான் வரைந்தால்கூட இதைவிட நன்றாக இருக்கும்' என்ற அர்த்தத்தில் எழுதினேன். நான் எழுதிய முறை யதார்த்தமாக நீங்கள் எடுத்துக்கொள்ளும்படி இருந்ததோ என்னவோ.யோகா* வகுப்புக்கு வந்தவர்களுக்க என் பெயர் தெரியாமல் இருப்பதில் என்ன அதிசயம்? என் பக்கத்து வீட்டு டாக்டருக்குத் தெரியாதே! நேற்று தொலைபேசியில் அழைத்து தினமணி தீபாவளி மலரில் கமலஹாசன் சுந்தர ராமசாமி என்று ஒரு பெயரைக் குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டில் இன்னொரு சுந்தர ராமசாமி யார் என்று கேட்டார். கமலஹாசன் என் பெயரைச் சொல்லியிருக்க முடியாது என்பதில்தான் அவருக்கு என்ன தீர்மானம்! இதற்குத்தான் பெரிய பத்திரிகைகளில் எழுதவேண்டுமென்று புத்திசாலிகள் சொல்கிறார்கள். உண்மைதானே அவர்கள் சொல்வது?இன்று ரூ.155 திரு என் சுப்பிரமணியன் பெயருக்கு அனுப்பி வைக்க இருக்கிறேன்.என் அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்,சுரா*வெள்ளியங்கிரி நடைப்பெற்ற ஈசா யோகா வகுப்பில் கலந்துகொண்ட நாகர்கோவிலைச் சேர்ந்த சிலரிடம் சுந்தர ராமசாமியைப் பற்றி விஜாரித்தேன். அவர்கள் யாருக்கும் அவருடைய பெயர் தெரியவில்லை. சுந்தர ராமசாமியிடம் ஏன் உங்கள் பெயர் தெரியவில்லை என்று எழுதிக் கேட்டிருந்தேன். அதற்கான பதில்தான் மேலே வந்துள்ளது.


** சுந்தர ராமசாமி பிடிக்கவில்லை என்று கூறிய அசோகமித்திரன் வரைபடத்தை திரும்பவும் இங்கு பிரசுரம் செய்துள்ளேன்.

6.5.09

புத்தக விமர்சனங்கள்

நவீன விருட்சம் ஆரம்பித்த (1988ஆம் ஆண்டு) ஆண்டிலிருந்து அதில் புத்தக விமர்சனங்கள் பல எழுதியுள்ளேன். நினைத்துப் பார்த்தால் இப்போது என்னால் அதுமாதிரி புத்தக விமர்சனங்கள் எழுத முடியவில்லை. இருந்தும் நான் எழுதிய புத்தக விமர்சனங்களைத் தொகுத்து உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.

த பழமலயின் 'சனங்களின் கதை'


த பழமலயின் 'சனங்களின் கதை' என்கிற கவிதைத் தொகுதியில் இரண்டு விஷயங்களை முக்கியமாக கவனிக்கலாம்.


மிக எளிமையான வார்த்தைகள் மூலம் ஊரையும் சுற்றத்தையும் வெளிப்படுத்துவது.


உள்ளது உள்ளபடியே கூறுவது.


எடுத்தவுடன் எதிர்படும் 'அம்மா' என்கிற கவிதையில் 'முற்றத்துப் பவழமல்லி நீ மறந்தும் நினைத்தும் அழும் என்கிறபோது, மிகைப்படுத்தப்பட்ட உணர்வு நிலையில் கவிதை வெளிப்பட்டிருப்பதுபோல் தோன்றினாலும், கூடவே நயம் செறிந்த வார்த்தைகளையும் எந்தவித பகட்டுமின்றி வெளிப்படுத்துகிறது.


அப்பா என்கிற கவிதை

'கடாவை வெட்டுகையில் கண்ணீரும் வடிப்பார்? கருப்பனார் சாமிக்குப் பன்றியும் வளர்ப்பார்? படைக்காமல் உண்பது 'பழையது' மட்டும்

என்கிற தொடக்க வரிகளுடன் அபாரமாக ஆரம்பமாகிறது. இக் கவிதையில் அறிமுகமாகும் ந. தங்கவேல் படையாச்சி எந்தவித ஒளிவு மறைவுமில்லாமல், அவருடைய தற்பெருமையுடன் சேர்த்தே அறிமுகப் படுத்தப்படுகிறார்.

'அப்பாவின் கொடுவாள்' என்கிற கவிதையில் கொடுவாள் இறுதியில்
ஒனக்கு எனக்குன்னு ஒடம் பிரிக்கிற ஒன்னு இருக்கு அத எதுத்துத்தான் நீ என்ன எடுக்கணும்'என்று புத்தி புகட்டுவது புதுமாதிரியாகத் தோன்றுகிறது.

'உழுதவன் கணக்கில்' துண்டை தொலைத்துவிட்டு எதையோ சுற்றிக்கொண்டு, பள்ளிக்கு ஓடுவதிலிருந்து ஆரம்பிக்கிற கவதை ஒரு கசப்பான அனுபவத்தை அங்கதத் தொனியுடன் விளக்குகிறது.

'முருங்கை மரம்' என்கிற கவிதையில் உறவு முறைகளில் நமக்கிருக்கும் நம்பிக்கையை ஆழப்படுத்துகிறார்.

'இனி எனக்குக் கொல்லை வெளிக்குறுக்கு வழிகள் திருகு கள்ளிகளின் செவிகளில் என்வரவு சொல்லும் ஓணான்கள்


என்கிற வரிகள் மூலம் 'த பழமலை 'புத்தரை மறந்த ஊர்' கவிதையில் ஒரு ஊரை நயத்துடன் அறிமுகப்படுத்துகிறார். ஊரிலுள்ள ஏரிக்கரைப் பிள்ளையார் நாத்திகனையும் நலம் விசாரிப்பார்.


..................................... இடாத முத்தத்திற்கு எப்படியெல்லாம் வருணனை


'தப்புக் கணக்கு' என்கிற கவிதையில், சிறுவயது முதற்கொண்டு உறவுகொண்ட ஒரு பெண்ணின் நினைவுகள், அவளுக்குத் திருமணம் ஆகி, இடுப்புக் குழந்தையுடன் பார்க்க வந்தும் ஞாபகத்திலிருந்து அகலாமலிருப்பதைக் குறிப்பிடுகிறார்.

'சனங்களின் கதை' என்கிற இந்தத் தொகுதியில் உள்ள பல கவிதைகள் படிக்கிற உணர்வை ஏற்படுத்துகின்றன என்பதைக் குறிப்பிட்டுச் சொல்வது அவசியமாகப் படுகிறது.

மீண்டும் வாசிக்கிறேன் 1
நிமல விஸ்வநாதனின் மூன்று கவிதைகள்


1. நட்பு


நானுன்னை வெறுக்கவில்லை


நானுன்னோடு சண்டை போட


விரும்புகிறேன் - நன்றாக கவனி நண்பா,


விரும்புகிறேன் உன்னோடு சண்டை போட.


எனினும் இதிலிருந்து இன்னொன்றும்


நீ சுலபமாய் புரிந்து கொள்ளலாம் -


நான் சண்டை போடாத எல்லோரையும்


நான் விரும்புகிறேன் என்றர்த்தமில்லை.


2. நிலை


மத்தியானம் தூங்கினால் மாலையில் என் மனம் குற்றமுணரும்


தெரிந்தும் வேலைதேடும் நான் எப்படியோ


இன்று மத்தியானம் தூங்கிவிட்டிருக்கிறேன்....


திடீரென காறிக் கமறிய காகங்களின் ஒப்பாரி.


கிழித்தெறிந்து விட்டது அதையும் இப்போது...


கனவுக்கு வேலி கட்டிய கைசலிப்பில்


மளாரென எழுந்திருக்க முடியவில்லை என்னால்


வாசலுக்கு வருகிறேன் தெரிகிறது -


இன்றேனோ கருணை காட்டாத மின் கம்பிகள் -


விழுந்து கிடக்குமொரு கறுப்பைச் சுற்றும்


கறுப்பு நிறங்களின் தாறுமாறில்


பல்லிளிக்கும் மேலை வானின் வெள்ளைச் சூரியன்.


அங்கே நிற்கின்ற நிலையில்


எனக் கொன்றும் புரிகிறது -


நடுத் தெருவில் அப்போது தான்


புணர்ந்திறங்குகிற ஆண் கழுதையின்


கண்ணில் கசியும் சோகம்.3. விடுதலை


மாசு மறுவின்றி வெம்பரப்பாய் விரிந்து கிடக்கும்


மத்தியான வெளியில்


படபடத்துப் போகும்


வசீகரமாயொரு வண்ணத்துப் பூச்சி.


திடீரெனப் பாய்ந்தறையும் காற்று, கூடவே


திடீரெனத் துடிக்கும் ஒரு எண்ணம் -


வண்ணத்துப் பூச்சியைப் பிடித்து 'விட'லாம்.


ஆனால் ஏனோ நல்ல வேளை


காற்று போய் எங்கோ மீண்டும்


பழையபடி பதுங்குவதற்குள்


வண்ணத்துப் பூச்சி பிடிக்கும் எண்ணத்தை நான்


காற்றில் விட்டு விட்டேன்.........................(ழ அக்டோபர் 1980 / 11வது இதழ்)

5.5.09

அபார்ட்மெண்ட் பித்ருக்கள்சற்று முன்தான்
சொத்தென்று விழுந்தது
மின்சாரம் தாக்கி


அடிக்கடி பார்க்கும் சாவுதான்

இரண்டு நாளுக்குப் பிறகு

மீண்டும் ஒரு பெரிய காக்கை


இறந்துக் கொண்டிருக்கிறது

அலகு திறப்பதும் மூடுவதுமாக

இறுதி கணங்களின் துடிப்பு


குச்சி கால்களிலும் இறக்கைகளும்

குறுக்கும் நெடுக்குமாய்

படபடத்துப் பறந்தபடி

அபார்ட்மெண்ட் டிரான்ஸ்பார்மர் மேல்

சக காக்கைகள் ஓலமிட்டு

பார்த்துக்கொண்டிருக்கிறது


ஒரு காக்கை காக்கையாக சாவதை

இவர்களுடன்

ஏழு மாடி ஜன்னல்களிலும்


பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

பித்ருக்களின் உறவினர்களும்

காக்கை காக்கையாக

சாவதை

2.5.09

இரங்கல்கள்
வைதீஸ்வரனின் தாயார் இறந்த தினத்தன்று அவர் வீட்டுக்குச் சென்றபோது நிறைய ஐம்பதாண்டு கால நண்பர்களைச் சந்திக்க நேர்ந்தது. எஸ் வி சகஸ்ரநாமம் என்பவர் போன்றோரின் விடாமுயற்சியில்தான் எம்.கே தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரின் சிறை மீட்புக்கு வெற்றி கிடைத்தது. அப்போது இந்தியா சுதந்திரம் அடையவில்லை. கடைசி சரணாலயம் இங்கிலாந்திலுள்ள பிரிவி கவுன்சில் என்பது. வி.எல் எதிராஜ் என்பவர்தான் அதற்குரிய வக்கீல். ஏராளமான செலவு. எஸ் எஸ் வாசனிடமிருந்து கைப்பட ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை சிறை மீட்பு நிதிக்காகப் பெற்றார் என்று கூறுவார்கள். என்.எஸ்.கிருஷ்ணன் சிறையில் இருந்தபோது அவருடைய நாடகக் குழு செயலிழந்து போகக்கூடாது என்று எஸ் வி சகஸ்ராமம் அக் குழு நாடகங்களைத் தினசரி அரங்கேற்ற வழி செய்தார். அப்படி நடிக்கப் பட்டதுதான் 'மனோகரா' நாடகம். அதில் மனோகரனாக நடித்தது. கே. ஆர் ராமசாமி. நாடகத்தில் வரும் 'செயின்' சீன் மிகவும் புகழ் பெற்றது. இது திரைப்படத்திலும் வரும். மேடையில் பொருந்தி போவது, திரைப்படத்தில் அபத்தமாகத் தோன்றும். அதில் இந்த 'செயின்' சீனும் ஒன்று. சிறைப் பிடித்து வரும் காவலாளிகள் கைதியின் பேருரைக்கு வசதியாக சங்கிலியோடு முன்னும் பின்னுமாக நகர்வார்கள். எஸ் வி சகஸ்ராமின் 'பைத்தியக்காரன்' நாடகமும் என்.எஸ். கிருஷ்ணன் சார்பில் நடத்தப்பட்டது. மேடையில் வெற்றிகரமாக இருந்த இந்த நாடகம் திரைப்படமாக அதிகம் சோபிக்கவில்லை.
ஆனால் எஸ் வி சகஸ்ராமம் யாருக்கும் நிழல் தரும் ஆலமரமாக வாழ்ந்தார். அவர் வீடு ஒரு சத்திரமாக இருந்தது. அவருடைய சகோதரர்கள், உறவினர்கள் நன்கு படித்த, பண்பாளர்களாக இருந்தார்கள். அவருடைய ஒரு சகோதரியின் மகன் என்.வி.ராஜாமணி என்னும் ராமநரசு. இன்னொரு சகோதரி மகன் வைதீஸ்வரன். ராமநரசு ஏன் ஜெமினி ஸ்டுடியோவைப் பணிபுரிய தேர்ந்தெடுத்தார்? அவர் கணக்கில் எம்.ஏ பட்டம் பெற்றவர். அப்போதே ஏதாவது கல்லூரியில் எளிதாகச் சேர்ந்திருக்கலாம். ஆனால் எனக்காகவென்று ஜெமினி தேர்ந்தெடுத்தார் என்று தோன்றுகிறது. அந்த நாளில் நான் யாருக்காக நண்பனானால் என்னை அப்படியே அவர்கள் குடும்பத்திலேயே சேர்த்துக் கொண்டு விடுவார்கள். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு 21 வயது முடிந்திருக்கவில்லை. என்னுடன் ராமநரசுவின் தந்தையும் இதர உறவினர்களும் உலக விவகாரங்களை விவாதிப்பார்கள். நானும் இன்னொரு நண்பரும் எஸ் வி சகஸ்ராமத்துக்கும் ஒரு புனைபெயர் வைத்திருந்தோம். 'மெளனி'. அவர் வீட்டில் எல்லோரும் ஏதேதோ பேசி, விவாதித்துக் கொண்டிருக்க, அவர் மட்டும் வாயே திறக்காது இருப்பார். அவருடைய தூண்டுதலில்தான் புதிய நாடகாசிரியர்கள் தோன்றினார்கள். அவர் மூன்றுமாத நாடகப் பள்ளி ஒன்று நடத்தினார். அதில் உருவானவர்தான் கோமல் சுவாமிநாதன். அவர் எழுதிய, தயாரித்த நாடகங்கள் எல்லாம் காலப்போக்கில் மறைந்து போய்விட்டன. ஆனால் அவருடைய வாழ்க்கையின் இறுதி நாட்களில் நடத்திய 'சுபமங்களா' பத்திரிகை இன்னும் பலருக்கு ஆதரிசமாக இருக்கிறது. அவரும் எனக்கு நண்பராகத்தான் இருந்தார். 'நாம் முதலிலிருந்தே முற்போக்குத்தான். நாம் எதற்காகக் கட்சி கட்டும் கட்சிகளுடன் உறவு கொள்ள வேண்டும்,' என்று என் வாதம். ஆனால் கோமலுக்கு அது வேண்டியிருந்தது.
ராஜாமணி, சகஸ்ரநாமம் இருந்த தாண்டவராயன் தெரு வீட்டில்தான் வைதீஸ்வரன் சில நாட்கள் இருந்தார். அவர் சில ஆண்டுகள் திருவல்லிக்கேணி திருவெட்டீசுவரன் பேட்டையில் இருந்தார். அவர் வீட்டருகில்தான் சி சு செல்லப்பாவோடு அமரத்துவம் அடைந்த 19 பிள்ளையார் கோயில் தெரு. கநாசுவும் பல ஆண்டுகள் 48 வாலாஜா சாலையில் இருந்தார். ஆனால் வீடு விஷயத்தில் பிரசுர விஷயத்திலும் செல்லப்பா அடைந்த வெற்றிகளை அவர் அடையமுடியவில்லை.
வைதீஸ்வரன் மூலம் நான் பரிச்சயம் பெற்ற உலகம் மிகவும் அகன்றது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எல்லாம் 21, 22 வயதுக்கு முன்பு. வைதீஸ்வரன் போலவே ஆர. கே ராமச்சந்திரன் மூவரும் அந்தக் குடும்பப் பரிவாரங்களே எனக்கு அறிமுகம் ஆனார்கள். அவர்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்றே தேவையில்லை. அங்கே இருப்பவர்களோடு பேசிக்கொண்டே இருப்பேன். சாப்பிடச் சொல்வார்கள். சாப்பிடுவேன். ஐந்தாறு முறை நேரமாகிவிட்டது, தூங்கி விட்டுக் காலையில் போ என்பார்கள். அப்படியே எந்த முன்னேற்பாடும் இல்லாமல்தான் அவர்கள் வீட்டிலேயே நிம்மதியாகத் தூங்கி விட்டுக் காலையில் வீட்டுக்குப் போவேன். என் தாயாருக்கும் இதெல்லாம் பழக்கப்பட்டு விட்டது. அப்போது தேடுவது, விசாரிப்பது என்றால் நேரே ஒருவர் போகவேண்டும்.
இதெல்லாம் வைதீஸ்வரன் வீட்டுத் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளச் சென்றபோது நினைக்கத் தோன்றியது. அவர்கள் குடும்பத்தில் அநேகமாக அனைவருக்கும் சதுர வடிவ முகம். அவர்கள் அறிமுகம்தான் என்னை எழுதத் தூண்டியது என்றால் அது தவறாகாது.
என்னுடைய முதல் இரு சிறுகதைத் தொகுப்புகளுக்கும் ஞானக்கூத்தனும், வைதீஸ்வரனும்தான் முன்னுரை எழுதினார்கள். அதன் பிறகுதான் நான் முன்னுரைகள் எழுத வற்புறுத்தப்பட்டு இப்போது நான் முன்னுரைகளே படிப்பதில்லை. நல்ல வாசகர்கள் முன்னுரைக்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள்.
இவ்வளவு நீண்ட வரலாறுக்குச் சாட்சியாக நான் இருந்து கொண்டிருக்கிறேன். இரு மாதங்கள் முன்பு கூட என்னுடைய 50 ஆண்டு நண்பர் மெலட்டூர் விசுவநாதன் நொடிப்போதில் காலமானார். வைதீஸ்வரனின் தாயார் போல அவரும் மருத்துவமனை செல்லாமல் வீட்டிலேயே மெளனமடைந்தார். 'கொடுத்து வைத்தவர்கள்' என்று சொல்வதற்குச் சில அடையாளங்கள் உண்டு. அதில் ஒன்று மரணம். அது பகலில், வீட்டில் நடக்க வேண்டும். உற்றார் உறவினர் இருக்கும்போது நிகழ வேண்டும். மிக முக்கியமாக, நினைவுடன் உயிரை விட வேண்டும். தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு. மஞ்ச்சி மனுஷீக்கு மரணமே சாட்சி. நல்லவனுக்கு அவன் மரணம் அடையாளம்.
வைதீஸ்வரன் ஒரு குறும்புப் பார்வையுடன் 'இந்த உடம்பை வைத்துக்கொண்டு இரங்கல் கூட்டங்களுக்குப் போகிறீர்கள்,' என்றார். அவர் குறிப்பிட்ட கூட்டம் கிருத்திகா - சுகந்தி சுப்பிரமணியத்துக்காக நடத்தப்பட்ட கூட்டம். அன்று பேசிய 'சிட்டி'யின் மகன் திரு வேணுகோபால் கிருத்திகாவின் இரு நாவல்களைப் படித்திருந்தார். நான் மூன்று படித்திருந்தேன். அந்தக் கூட்டத்திற்கு வந்த கூட்டம், பார்வையாளர்கள் எனக்கு ஆச்சரியமளித்தது. கூட்டத்திற்குச் சென்று வீடு திரும்பியவுடன் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. சகஸ்ரநாமம் எழுத்தாளர்களை நாடகம் எழுதச் சொன்னார். வேண்டாம். இரங்கல் கூட்டங்கள் நடத்துங்கள் என்று கூறியிருந்தால் போதுமானது.

(தயாராகிக் கொண்டிருக்கிற நவீன விருட்சம் 84வது இதழில் வெளியாகும்)
1.5.09

ஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..


சிறுகதை


ஷார்ஜாவின் அதிகாலை 04:30 மணி; முதலில் டைம்பீஸில் அலாரம் அடித்தது. சுரேந்திரன் எழும்பவில்லை. ஏற்கெனவே முழிப்பு வந்து இன்னும் ஏன் அலாரம் அடிக்கவில்லை என்ற கேள்வியுடன் புரண்டு கொண்டிருந்த பியூலாராணி தான் அலாரத்தை நிறுத்தினாள். மீண்டும் 4:40க்கு கைத்தொலை பேசியில் அலாரம் அடித்தது. அப்போதும் அவன் விழிக்க வில்லை.
இம்முறையும் பியூலா தான் எழுந்து அலாரத்தை அணைத்தாள். சரியாக அணைத்திருக் கிறோமா என்று விளக்கைப் போட்டு சரிபார்த்துக் கொண்டாள். ஏனென்றால் கைத்தொலைபேசியில் அலாரம் சரியாக அணைக்கப்படாவிட்டால் ஒவ்வொரு பத்து நிமிஷத்திற்கொரு முறை அலறித் தொலைக்கும். அசந்து தூங்குபவனைப் பார்க்க கொஞ்சம் பொறாமையாக இருந்தது. தூக்கம் எத்தனை பெரிய வரம்! அவளுக்குத் தான் எவ்வளவு முயன்றும் அந்த வரம் வசப்படுவதே இல்லை. அவள் ஆழ்ந்து தூங்கி அனேக நாட்களாகி விட்டது.
மசூதியிலிருந்து அதிகாலைத் தொழுகைக்கான 'பாங்கு' ஒலிக்கத் தொடங்கிய போது இலேசாய் புரண்டு படுத்தான். இனிமேல் இவனை உறங்க விட்டால் காலதாமதமாகி கம்பெனி வண்டி இவனை விட்டு விட்டுப் போய் விடும் என்பதால் தூங்குபவனைத் தட்டி எழுப்பினாள். "ப்ளீஸ் பியூலா; இன்னொரு அஞ்சு நிமிஷம் மட்டும் தூங்க விடு....." என்று கெஞ்சினான் கண்களைத் திறக்காமலேயே. "இப்பவே ரொம்ப நேர மாயிருச்சு; உங்க டிரைவர் உங்கள விட்டுட்டுத்தான் போகப் போறான்....." என்றபடி அவசரப் படுத்தினாள்.
ஷார்ஜாவிலிருந்து துபாயில் இவன் வேலைக்குப் போக வேண்டிய இடம் 20கி.மீ. தூரத்துக்குள் தான் இருக்கும். அங்கங்கே அகாலமாய் குறுக்கிடும் ரவுண்டபட்களைத் தவிர்த்து விட்டால் நேரான, அகல மான, நேர்த்தியான சாலைகள் தான்; எத்தனை மெதுவாய் ஓட்டினாலும் 15 - 20 நிமிட பயண தூரம் தான். ஆனாலும் காலை 7 மணி டூட்டிக்கு இவனுக்கு 5:30 மணிக் கெல்லாம் வண்டி வந்து விடும். அதில் கொஞ்சம் தாமதமானாலும் ஷார்ஜா - துபாய் சாலையில் வாகன நெரிசல் தொடங்கி, உரிய நேரத்திற்கு வேலைக்குப் போக முடியாது.
அடிக்கடி அவன் பியூலாவிடம் சொல்வதுண்டு. "உங்கப்பா நம்ம கல்யாணத்திற்கு மாப்பிள்ளை ஊர்வலம் வைக்காத குறைக்கு இந்த ஊர்ல அப்பப்ப என்னை ஊர்வலம் மாதிரித்தான் கூட்டிட்டுப் போறானுங்க...."
துபாயில் வேலை பார்க்கும் நிறையப் பேர், அங்கு ஏறிக் கொண்டிருக்கும் வீட்டு வாடகையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஷார்ஜாவிற்கு தங்கள் ஜாகையை மாற்றிக் கொண்டு விட்டதாலும், இங்கு கார் வாங்குவது மிகவும் கட்டுபடி ஆகக்கூடிய செலவு - ஒரு வருஷ வீட்டு வாடகைக்கு ஆகுற காசில் புத்தம் புதிய கார் வாங்கி விடலாம்; அதுவும் வங்கிக் கடனில் மிகச் சுலபமாக வாங்கி, கம்பெனிகள் தருகிற டிரான்ஸ் போர்ட் அலவன்ஸிலேயே மாதத் தவணையும் பெட்ரோல் செலவும் போக கொஞ்சம் மிச்சமும் ஆகும் - என்பதாலும் ஷார்ஜா- துபாய் சாலையில் டிராபிக் ஜாம் எப்போதும் தலையைத் தின்னும் பிரச்னை தான்.
எல்லோரும் ஷார்ஜாவில் வந்து குவிவதால் இங்கும் வீட்டு வாடகை ராக்கெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கிறது. அதனால் இப்போதெல்லாம் ஷார்ஜாவிற்குப் பக்கத்திலுள்ள அஜ்மானுக்குக் குடியேறத் தொடங்கி இருக்கிறார்கள். அஜ்மான் - சென்னைக்குப் பக்கத்திலிருக்கும் பாண்டிச்சேரி மாதிரி; சாராயம் சல்லிசாய்க் கிடைக்கும் இடம். ஷார்ஜாவில் தடை செய்யப் பட்டிருக்கும் மது அஜ்மானில் ஆறாய் ஓடு மென்பது ஒரு விசேஷம். அஜ்மானுக்கப்புறம் போனால் கடலில் தான் விழவேண்டி இருக்கும்.
ஆரம்பத்தில் பியூலாவும் சுரேந்திரனும் கூட துபாயில் தான் தங்கி இருந்தார்கள். மூன்று படுக்கை அறைகள் கொண்ட ஒரு அபார்ட்மெண்ட்டில் ஷேரிங் முறையில், ஒரு படுக்கை அறையை இவர்கள் பகிர்ந்து கொள்ள, இன்னொரு படுக்கை அறையில் ஒரு மலையாளத் தம்பதி அவர்களின் இரண்டு வயதுப் பெண் குழந்தையுடனும், மூன்றாவது படுக்கை அறையில் இரண்டு பிலிப்பினோ ஆண்களும் தங்கி இருந்தார்கள். இங்கெல்லாம் ஷேரிங் குடியிருப்புகள் சகஜம் தானென்றாலும் நிறைய சகிப்புத் தன்மையும் மற்றவர்களைப் பற்றி அலட்டிக் கொள்ளாத மனநிலையும் வேண்டும்.
ஒவ்வொரு படுக்கை அறைக்கும் தனித்தனி கழிவறைகள் இருந்ததால் அதன் சுத்தம் அத்தனை கவலைப் படும்படி இல்லை. ஆனால் எல்லோருக்கும் பொதுவான வரவேற்பறை மற்றும் சமையலறைப் பராமரிப்புத் தான் பியூலாவால் கொஞ்சமும் சகித்துக் கொள்ள முடியாததாய் இருந்தது. அதுவும் சமையலறைக்குள் போனாலே அவளுக்கு குமட்டிக் கொண்டு வரும். "தனி வீடு பார்த்துப் போயிடலாங்க....." என்ற அவளின் நச்சரிப்புக்கு ஆற்றமாட்டாமல், அவள் சமையலறைப் பக்கமே அதிகம் போகாதபடிக்கு சுரேந்திரன் ஹோட்டலிலிருந்து உணவை வரவழைத்து கொடுத்து விடுவான்.
ஒரு இரண்டு மாதங்கள் ஓடி இருக்கும். பிலிப்பினோ ஆண்கள் தங்களுடன் வசிக்க ஒரு பெண்ணைக் கொண்டு வந்தார்கள். "இந்த கண்றாவிகளை எல்லாம் பார்த்துக்கிட்டு என்னால இருக்க முடியாது. ஒண்ணு தனி வீடு பாருங்க; இல்லையின்னா என்னை ஊருக்கு அனுப்பி வச்சுருங்க....." பியூலா சுரேந்திரனுடன் சண்டைக்குப் போனாள். "பியூலா ஒரு விஷயம் நீ புரிஞ்சுக்கணும்; துபாயில தனி வீடு பார்த்தா என்னோட மொத்த சம்பளமும் வீட்டு வாடகைக்கே சரியாப் போயிரும்; அதால தான் இந்த ஏற்பாடு. அப்புறம் அவங்க வாழ்க்கையில எது சரி? எது தப்புன்னு நாம யாரு தீர்மானிக்குறது! நம்ம புராணங்கள்லேயே அஞ்சு பேரோட மனைவியா வாழ்ந்த பாஞ்சாலிய, நம்ம நாட்டுல இப்பவும் தெய்வமா வணங்குறதில்லையா?
"அதோட அவங்களோட வாழ்க்கை, ஒழுக்கம் பற்றி எல்லாம் நாம ஏன் அலட்டிக் கணும்.....அவங்களுக்கு இது சாதாரணமா இருக்கலாம். அவங்களும் நம்மைப் போலவே பொழைக்க வந்துருக்கிறாங்க. அவங்க வருமானத்துக்கு தனியறைங்கிறது கட்டுபடியாகாத கனவா இருக்கலாம்... அவங்களுக்குள்ள செக்ஸ¤வல் ரிலேஷன் இருந்தாகனுமின்னு கட்டாயம் கூட இல்ல! அப்படியே இருந்தாலும் அதனால நமக்கென்ன போச்சு...." என்று ஏதேதோ சமாதானம் சொல்லி பியூலாவை அந்த அறையிலேயே தொடர்ந்து தங்க சம்மதிக்க வைத்தான்.
அந்த மூன்று பேருக்குமான உறவுகள் பற்றிய நிறைய கற்பனைகளுடனும் கதையாடல்களுடனும் நாட்கள் கொஞ்சம் சுவாரஸ்யமாகவே நகர்ந்தது. சில நாட்களில் பிலிப்பினோக்கள் மூன்று பேருமே ஒரே அறையில் உறங்கினார்கள். சில நாட்களில் ஒரு ஆண் வரவேற்பறையிலும் மற்ற இருவரும் படுக்கை அறையிலுமாகப் படுத்துக் கொண்டார்கள். வரவேற்பறையில் படுக்கிற ஆண் அவ்வப்போது மாறினான் என்பது இதில் விஷேசம்.
அவர்களுக்குள்ளான உறவுகள் சீர்கெடுவதை வரவேற்பரை வாக்குவாதங்களிலிருந்து - அவர்களின் பேச்சு மொழி புரியாவிட்டாலும் - கொஞ்சம் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்தது. ஆண்கள் இருவரும் கடுமையாய் சண்டைபோட அந்தப் பெண் எந்தச் சலனமுமில்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். ஒரு வெள்ளிக்கிழமை விடுமுறை தினத்தின் அதிகாலை அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பவர்களை போலீஸ் வந்து எழுப்பி அந்த பிலிப்பினோக்களில் ஒரு ஆண் தூக்கு மாட்டி தற்கொலை செய்ததைச் சொன்னபோது சிலீரென்றிரிந்தது.
மிச்சமிருக்கிற இரண்டு பேரையும் போலீஸ் கைது பண்ணிக் கொண்டு போக, கடைசி வரை அந்த மரணம் இவர்களுக்கு புதிராகவே இருந்து விட்டது. அவர்களுக்குள் இருந்த எந்த சிக்கல் ஒருத்தனை தற்கொலை வரைக் கொண்டு போனது என்கிற உண்மை இவர்களுக்குத் தெரியவே இல்லை. அந்தப் பெண்ணை இருவருமே காதலித்ததாகவும் அவளை யார் மனைவியாக்கிக் கொள்வது என்கிற தீராத பிரச்னையில் தான் அந்த தற்கொலையோ கொலையோ நடந்திருக்கு மென்பது மாதிரி நிறைய யூகங்களே அந்த பிராந்தியம் முழுவதும் உலவிற்று. அதற்கப்புறம் பியூலாவும் சுரேந்திரனும் ஷார்ஜாவில் தனிவீடு பார்த்து குடிபோய் விட்டார்கள்.
பியூலாராணியின் தொடர்ந்த உலுப்பலில் எழும்பி உட்கார்ந்து கஷ்டப்பட்டு இமைகளைப் பிரித்தான் சுரேந்திரன். ஒவ்வொரு நாள் காலையிலும் இப்படி அதிகாலை எழும்பி வேலைக்காக ஓட வேண்டி இருப்பதை நினைக்கும் போதும் அவனுக்கு இந்தியாவிற்கே திரும்பிப் போய் விட வேண்டு மென்று வெறி கிளம்பும். கொஞ்ச நேரம் தான். அப்புறம் எதிர்காலத் தேவைகளும் கடன் அட்டைகளும் கழுத்தில் கத்தி வைக்க நிதர்சனத்திற்குத் திரும்பி மறு பேச்சின்றி பாத்ரூமிற்கு எழுந்து போவது அவனுக்கு வாடிக்கை.
"இராத்திரி நேரத்தோட தூங்காம லேப் டாப்ல பாட்டும் விளையாட்டுமாய் பொழுதைப் போக்கி லேட்டாப் படுக்கப் போக வேண்டியது; அப்புறம் காலையில கண் விழிக்க கஷ்டப்பட்டு வாழ்க்கையை வெறுத்து வேதாந்தம் பேச வேண்டியது; தேவையா இது?" பியூலாவின் விமர்சனத்தை சட்டை செய்யாமல் குளியலறைக்கு எழுந்து போனான் அவன்.
"என்ன பியூலா இது? நேத்து நீ குளிச்சுட்டுத் தண்ணி புடுச்சு வைக்கலியா! நான் இப்ப எப்படிக் குளிக்கிறது?" குளியலறையிலிருந்து அவன் குரல் கொடுத்த பின்பு தான் அவளுக்கு நேற்று சாயங்காலம் குளித்து முடித்து விட்டு தண்ணீர் பிடித்து வைக்கத் தவறியது ஞாபகத்திற்கு வந்தது. இந்த ஊரில் கோடை காலத்தில் பெரிய பிரச்னை எப்போதுமே தண்ணீர் பிடித்ததும் உடனே குளித்துவிட முடியாது. பைப்பிலிருந்து வெளியாகும் நீர் சருமம் கருகும் கொதிநிலையில் இருக்கும். தண்ணீர் பிடித்து ஆறேழு மணி நேரமாவது ஆற வைத்த பின்புதான் குளிக்க முடியும். எதைத் தொட்டாலும் சுடும். ஏ.சி. இல்லாமல் ஒரு நிமிஷம் கூட வீட்டிலிருக்க முடியாது. இரவு பதினோரு மணிக்கு வெளியில் போனாலும் வெக்கை முகத்தில் அறையும். வேர்த்து ஒழுகும்.
அவசர அவசரமாய் ஃபிரிட்ஜிலிருந்து ஐஸ் கட்டிகளை அள்ளிக் கொண்டு போய் பக்கெட் தண்ணீரில் போட்டு அவை கரைந்ததும் அவனைக் குளிக்கச் சொன்னாள். ஷார்ஜாவிலும் துபாயிலும் பேச்சிலர்களாக அறைக்கு எட்டுப்பேர், பத்துப் பேர் என்று அடைந்து கிடப்பவர்களும், லேபர் கேம்ப்புகளில் தங்கியிருப்பவர்களும் எப்படிக் குளிப்பார்கள்? இப்படி பக்கெட்டுகளில் தண்ணீர் பிடித்து ஆறவைத்து குளிக்க வசதிப்படுமா அவர்களுக்கு? இந்த கொதி தண்ணீரீல் குளித்து விட்டுத் தானே வேலைகளுக்கு ஓடவேண்டும் என்று நினைத்தபோது நெஞ்சின் ஓரத்தில் அவர்களுக்காக ஒரு சிறு பரிதாபம் சுரந்தது.
பகலில் பொதுவாய் தெருவில் அதிகம் நடமாட்டமிருக்காது. ஆனால் இராத்திரியில் பனிரெண்டு ஒரு மணிக்குக் கூட ஆட்கள் சர்வசாதாரணமாக அலைந்து கொண்டிருப்பதை பியூலா அவளுக்குத் தூக்கம் வராத இரவுகளில் ஜன்னலின் வழியே பார்த்து வியந்திருக்கிறாள். இது தூங்காதவர்களின் நகரம் என்று நினைத்துக் கொள்வாள். அரபு நாடுகள் அனைத்தும் ஆண்களின் தேசமாயிருந்தது. எங்கு பார்த்தாலும் ஆண்கள்: ஆண் கள்; ஆண்கள் தான் நீக்கிமற நிறைந்திருக்கிறார்கள். அபூர்வமாய்த்தான் பெண்கள் தென்படுவார்கள். அதுவும் வியாழக்கிழமை சாயங்காலங்களிலும், விடுமுறை தினங்களிலும் கடைவீதிகளுக்குப் போனால் விலக இடமிருக்காது. புற்றிலிருந்து புறப்பட்டு வருகிற மழை ஈசல்கள் மாதிரி ஒவ்வொரு சந்திலிருந்தும் ஆண்கள் வந்துகொண்டே இருப்பார்கள். ஷார்ஜாவின் ரோலா ஸ்கொயர் முழுவதும் ஆண்களின் தலையாக நிரம்பி இந்த தேசமே மிகப்பெரிய சேவல் பண்ணையாய் தோற்றங் கொள்ளும் அவளுக்கு.
அரபு நாடுகளில் திருட்டுப் பயமென்பதே துளியும் இருக்காது என்று சொல்லக் கேட்டிருக்கிறாள். அதை உறுதிப் படுத்துவது போல் இங்குள்ள வீடுகளின் கண்ணாடி ஜன்னல்களுக்கு இரும்பு கிராதிகள் வைக்கப்படாததைப் பார்த்து இங்கு வந்த புதிதில் பியூலா பெரிதும் ஆச்சர்யப்பட்டிருக்கிறாள். ஆனால் அப்படியெல்லாம் ஒரேயடியாக சந்தோஷப்படவும் முடியாது என்று சமகால நிகழ்வுகள் சொல்கின்றன். வீடுகளில் நடக்கும் சின்னச் சின்ன திருட்டுக்கள் பற்றி இப்போதெல்லாம் அடிக்கடி கேள்விப் படுகிறாள் அவள். துபாயில் சமீபத்தில் பூட்டியிருந்த ஒரு நகைக் கடையை காரால் மோதி உடைத்து உள்ளே புகுந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரங்களை கொள்ளைக்காரர்கள் அள்ளிப் போனதை தினசரிகளில் வாசித்து திகிலடைந்திருக்கிறாள்.
திருட்டு மட்டுமல்லாது பிச்சை எடுப்பதும் இங்கு சகஜமாகியிருக்கிறது. அவள் ஷார்ஜாவிற்கு வந்த புதிதில் பிச்சை எடுப்பவர்கள் யாரையும் பார்த்ததே இல்லை. ஆனால் இப்போதெல்லாம் கடை வீதிகளிலும் ஸப்-வேக்களிலும் குழந்தைகளும் முழுக்க கறுப்பு அங்கி அணிந்த பெண்களும் கையை நீட்டி பிச்சை கேட்பதை நிறையவே பார்க்கிறாள்.
ஒரு வழியாய் சுரேந்திரன் புறப்படத் தயாரானபோது அவனுடைய கைத்தொலைபேசிக்கு கம்பெனி டிரைவரிடமிருந்து மிஸ்ஸ¤டு கால் வந்துவிட்டது. போனில் பேசியபடி வேகமாய்ப் புறப்பட்டுப் போனான். அவ்வளவு தான். இப்போது கிளம்பிப் போகிறவன், இனி இரவு எட்டு எட்டரைக்கு மேல் தான் வீடு திரும்புவான். அதுவரைக்கும் அவளும் அவளின் தனிமையும் மட்டுமே! இந்த அறையே அவளுக்குச் சிறையாகத் தோன்றும். இரவே மூன்று வேளைக்குமான உணவையும் தயாரித்து முடித்து விடுவதால் பகலில் சமையல் வேலை கூட இருக்காது. துபாயில் இருக்கும் வரை இந்தப் பிரச்னை இல்லை. உடன் தங்கியிருந்த மலையாளப் பெண்ணிடம் அரட்டை அடிப்பதிலும் அவளின் குழந்தையுடன் விளையாடுவதிலும் நேரம் போவதே தெரியாது.
ஷார்ஜாவிற்கு வந்தபின்பு தான் தொலைக்காட்சி ஒன்றே ஒரே பொழுது போக்காய் மனசுக்குக் கொஞ்சமும் பிடிக்காத மலட்டு நிகழ்ச்சிகளையும், கட்சிச் சாயம் பூசிய செய்திகளையும், மில்லிமீட்டர் மில்லிமீட்டராய் நகரும் சீரியல்களையும் பார்த்துப் பார்த்து ஒரு கட்டத்தில் அதற்கே அடிமையாகிப் போனதை உணர்ந்தாள். ஒரு பதினைந்து இருபது நாட்களைப் போல் தமிழ்ச் சேனல் எதுவும் இவர்கள் வீட்டுத் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகாதபோது பொழுதைக் கழிக்க திணறிப் போனாள்.
தமிழின் முக்கியத் தொலைக்காட்சி சேனல்கள் எல்லாம் தங்களின் ஒளிபரப்பு அலைவரிசைகளிலும் திசைகளிலும் சிற்சில மாற்றங்கள் செய்தபோது இவர்களின் அடுக்குமாடிக் குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த டிஷ் ஆண்ட்டனாக்கள் அதற்குத் தகுந்தாற் போல் டியூன் பண்ணப் படாததால் இவர்கள் வீட்டுத் தொலைக்காட்சியில் தமிழ்ச் சேனல்கள் எதுவுமே ஒளிபரப்பாகவில்லை. அந்த நாட்களில் சுரேந்திரனுடன் தினசரி சண்டைதான். அவனும் குடியிருப்பு அலுவலகத்தில் எவ்வளவோ முறையிட்டும் புகார் பண்ணியும் - கொஞ்சம் செலவு பிடிக்குமென்பதாலும், குடியிருப்பில் தமிழ்க் குடும்பங்கள் அதிகம் வசிக்காததாலும் - அவர்கள் எந்த முயற்சியும் செய்யாமல் சால்ஜாப்புகள் மட்டும் சொல்லி தட்டிக் கழித்ததில் நிறைய நாட்கள் ஓடிவிட்டன.
பியூலாவிற்கு பைத்தியம் பிடித்தது போலாகி விட்டது. புருஷனுடன் பேசுவதை சுத்தமாய் நிறுத்தி விட்டாள். அவன் மாற்று ஏற்பாடாக தமிழ்ப் பத்திரிக்கைகள் சிலதும் வாங்கிப் போட்டான். அவையும் அவளின் மீந்த பொழுதுகளைக் கடத்த போதுமானதாக இல்லை. அப்புறம் தான் பொழுதைப் போக்குவதற்கு பியூலா நல்ல வழிமுறை ஒன்றைக் கண்டுபிடித்தாள். அவன் புறப்பட்டுப் போனதும் ஜன்னலுக்குப் பக்கத்தில் ஒரு சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து வீதியில் நடப்பதை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.அற்புதமாய் பொழுது போனது. ஒவ்வொரு நிமிஷமும் வீதி புத்தம் புதிதாய் பல சுவாரஸ்யங்களை நிகழ்த்தியபடி நீண்டு கிடக்கிறது என்பது அவளுக்குப் புரிந்தது.
அவள் தங்கி இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு மிகவும் பரபரப்பான நாற்சந்திப்பின் ஒரு மூலையில் அமைந்திருக்கிறது. அடுக்குமாடிக் குடியிருப்புக்கு எதிர்த்தாற் போல் ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டல். டை யும் கோட்டும் அணிந்த பெரிய பெரிய கனவான்கள் - பெரும்பாலும் அமெரிக்கா, ஆஸ்திரிலியா, ஐரோப்பா நாடுகளிலிருந்து - வந்து கொண்டும் போய்க் கொண்டும் எப்போதும் பரபரப்பாய் இருக்கும். ஹோட்டலுக்கருகில் இந்தியாவின் கிளை நிறுவனம் ஒன்றின் பிர மாண்டமான புத்தம் புதிய நகைக்கடை அமைக்கப்பட்டு அந்த இடத்திற்கே அழகும் பொலிவுமாய் ஒளியூட்டிக் கொண்டிருக்கிறது.
அபார்ட்மெண்ட்டை ஒட்டிய விசாலமான பிளாட்பாரத்தில் லேபர்கள் குவிந்து கிடப்பார்கள். அவர்களின் காலை நேரமென்பது அதிகாலை மூன்றரை நான்கு மணிக்கெல்லாம் தொடங்கி விடும். அதுவும் அவர்களில் 'கல்லிவெல்லி' ஆட்கள் என்றொரு பிரிவினர் இருக்கிறார்கள். இந்த தேசத்தில் வேலை செய்ய முறையான விசா இல்லாதவர்கள், விசா காலம் முடிந்து போனவர்கள், ஏஜெண்ட் களால் வேலை என்று விசிட் விசாவில் அழைத்து வரப்பட்டு அப்புறம் ஏமாற்றப்பட்டவர்கள், முறையான கம்பெனி விசாவில் வேலைக்கு வந்தும் ஒழுங்காய் சம்பளம் தரப்படாததாலோ, அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டோ அல்லது வேறு பிரச்னைகளாலோ அங்கிருந்து வெளியேறி காணாமல் போயி அப்புறம் 'இந்த' கூட்டத்தில் கலந்தவர்கள் எல்லோரையும் 'கல்லிவெல்லி' ஆட்கள் என்றுதான் அழைப்பார்கள்.
தினசரி போலீசுக்குப் பயந்தபடி, நிரந்தர வேலை ஏதுமின்றி கிடைக்கிற வேலைகளைச் செய்து வயிற்றைக் கழுவி, ஒன்றிரண்டு மிச்சம் பண்ணி ஊருக்கும் அனுப்பிவைத்து...என்று அவர்களின் தினப்பாடு மிகமிகத் திண்டாட்டமானது. காலை நேரத்தில் பியூலாராணி தங்கியிருக்கும் வீட்டின் முதல்மாடி ஜன்னலிலிருந்து பார்த்தால் அப்படிப் பட்ட ஆட்கள் நிறைய அலைந்து கொண்டிருப்பது தெரியும். சாப்பாட்டுப் பொட்டலத்தைக் கையிலும், கண்களில் ஏக்கத்தையும் சுமந்தபடி தரகர்களுக்குப் பின்னாலும், வந்து நிற்கும் வாகனங்களுக்குப் பின்னாலும் ஓடிஓடிப் போய் வேலை கேட்டுக் கொண்டிருப்பார்கள். காலை பதினோறு பனிரெண்டு மணி வரை அலைந்தும் வேலை கிடைக்காத வேதனையோடு சிலர் திரும்பிப் போவதையும் அவள் பார்த்திருக்கிறாள்.
விசாலமான பிளாட்பாரத்தை ஒட்டி வரிசையாய் சிறுசிறு கடைகளும், சூப்பர் மார்க்கெட்டும், கம்யூட்டர் உதிரி பாகங்கள் விற்கிற கடையும், மருத்துவ கிளினிக்குகளும் அமைந்திருக்கின்றன. அதுவும் எதை எடுத்தாலும் ஒரு திர்ஹாம் அல்லது இரண்டு திர்ஹாம் மட்டுமே விலையுள்ள பொருட்கள் விற்கும் கடையில் எப்போதும் கூட்டம் அப்பிக் கொண்டிருக்கும்.
சூப்பர் மார்க்கெட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் பெரிய பெரிய குப்பைத் தொட்டிகளிலிருந்து சிலர் பேப்பர், அட்டைகள், குளிர்பான போத்தல்கள், பால்கவர், பிளாஸ்டிக் பொருட்கள் என்று மற்றவர்கள் பயன்படுத்தித் தூக்கி எறிந்தவைகளை பொறுக்கி சேகரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சர்யப் பட்டிருக்கிறாள். அதைவிட ஓடி ஓடி சம்பாதிக்கும் இவர்கள் காலையில் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை கண்ணுற நேர்ந்தபோது அப்படியே உறைந்து போனாள். எல்லோரும் ஆளுக்கொரு புரோட்டாவை வாங்கி அதை டீயில் முக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். புரோட்டாவை டீயில் முக்கிக் கூடவா சாப்பிட முடியும்? அதிர்ச்சியிலிருந்து மீள அனேக நாட்களானது அவளுக்கு. ஏழ்மையும் வறுமையும் எல்லா தேசங்களுக்கும் பொது போலிருக்கிறது.
அடுக்குமாடிக் குடியிருப்பின் இன்னொரு பக்கம் ஒரு மேம்பாலமும் அதை அடுத்து ஒரு அழகான மசூதியும் இருக்கின்றன. மசூதியில் வெள்ளிக் கிழமை நண்பகல் தொழுகை பார்க்க கோலாகோலமாய் இருக்கும். யாரும் முறைப்படுத்தாமலேயே ஒவ்வொருவரும் வரிசை வரிசையாய் தாங்கள் கையோடு கொண்டு வந்திருக்கும் பாயை விரித்து அமர்ந்து, தொழுகை தொடங்கியதும் எல்லோரும் ஒரே சமயத்தில் எழுவதும் குனிவதும் மடங்கி அமர்வதும் நெற்றிப் பொட்டு தரையில் பட விழுந்து வணங்கி எழுவதுமாய்......பார்க்கவே பரவசமாய் இருக்கும். மசூதி நிறைந்து அதன் சுற்றுவெளிகளும் நிரம்பி அதுவும் போதாமல் சாலைகளை ஒட்டிய பிளாட்பார்ம்களையும் ஆக்ரமித்து, அந்த நேரம், இடம் எல்லாம் ஆசீர்வதிக்கப் பட்டதாய்த் தோன்றும்.
கண்களைக் கொஞ்சம் எட்ட ஓட்டினால் அங்கங்கே நிறைய கட்டிடங்கள் கட்டும் பணி நடந்து கொண்டிருப்பது தெரியும். பார்த்திருக்க வளர்ந்து ஆளாகி விடும் பெண் பிள்ளைகள் மாதிரி எத்தனை வேகமாய் கட்டிடங்கள் வளர்கின்றன? தீப்பெட்டிகளை அடுக்கி வைப்பது போல் படபடவென்று மாடிகளை அடுக்கிக் கொண்டே போவதைப் பார்க்க பார்க்க இவளுக்கு ஆச்சர்யமாய் இருக்கும். ஊரிலெல்லாம் தளம் கான்கிரீட் போடுவதென்றால் சாரம் கட்டி, அதில் ஆட்கள் வரிசையாய் நின்றபடி, சட்டி சட்டியாய் கான்கிரீட் கலவையை மேலே அனுப்பி காலையிலிருந்து இரவு வரை போடுவதைப் பார்த்திருக்கிறாள்.
ஆனால் இங்கேயானால் இராட்சஷ மிஷின்களைக் கொண்டு வந்து - அதன் உயரமான ஒருமுனை யானையின் தும்பிக்கை மாதிரியே இருக்கிறது; நீரள்ளி ஆசீர் வதிக்கும் கோயில் யானை மாதிரி கண்மூடி கண் திறப்பதற்குள் அது, ட்ரக்குகளில் வரும் கான்கிரீட் கலவையை உறிஞ்சி மேல் தளத்தில் துப்பி விட - சில மணி நேரங்களிலேயே தளவேலை முடிந்து அடுத்த வேலைக்கு நகர்ந்து விடுகிறார்கள். கட்டிடம் கட்டும் பணியில் தான் எத்தனை விதமான இயந்திரங்கள் அலைந்து கொண்டிருக்கின்றன நாள்தோறும்.
சாலையில் ஓடும் வாகனங்களைக் கவனிப்பது அவளின் அடுத்த சுவாரஸ்யம்! எத்தனை எத்தனை விதவிதமான அழகழகான வாகனங்கள்! ஒருநாள் வெள்ளை வெளேரென்று பனிக்கரடி மாதிரி பளபளவென்று நீ...ள...மா...ன...காரொன்றைப் பார்த்தாள். அரபு ஷேக்குகள் பெரும்பாலும் அவர்களைப் போலவே ஓங்கு தாங்கென்றிருக்கும் பெரிய அளவிலான வாகனங்களிலேயே பயணிக்கிறார்கள். காரணம் பெரும்பாலும் அரபு ஷேக்குகளின் குடும்பம் பெரிதாக இருக்கும். பூங்காக்களிலும் ஷாப்பிங் செண்டர்களிலும் ஒவ்வொரு அரபி ஆணுக்குப் பின்னாலும் சம வயதுள்ள மூன்று நான்கு பெண்களும் துறுதுறுவென்ற குழந்தைகளும் போவதை அவளே பார்த்திருக்கிறாள்.அரபிக்களின் உடை பார்க்க அழகாய் இருக்கும்.
ஆண்கள் கழுத்து முதல் பாதம் வரைக்குமான தொளதொளவென்ற பளீரென்ற வெள்ளையில் அங்கி அணிந்து, தலையில் சிவப்புப் பூக்கள் போட்ட துண்டை விரித்து அதன் மேல் கறுப்பு வண்ணத்தில் இரண்டடுக்கு பிரிமனை மாதிரியான வட்ட வடிவ பின்னலும் அதிலிருந்து தொங்கும் அழகான குஞ்சங்களுமாய் காட்சி அளிப்பார்கள். அரபிக்களின் அந்த உடை சுரேந்திரனுக்கும் ரொம்பப் பிடிக்கும். துபாய் பெஸ்டிவல் சமயத்தில் நடந்த பொருட்காட்சியில் அரபி உடை அணிந்து போட்டோ எல்லாம் எடுத்து வைத்திருக்கிறான். பெண்களும் கறுப்பு அங்கியும் தலையில் கண்கள் மட்டும் வெளித் தெரியும் படியான கறுப்பு பர்தாவும் அணிந்திருப்பார்கள்.
அவ்வப்போது ஆம்புலன்சுகள் அலறலோடு ஓடும் போது அவளுக்கு பதட்டமாய் இருக்கும். இந்த ஊரில் விபத்துக்களும் நோயாளிகளும் அதிகம் என்றும் மருத்துவம் ரொம்பக் காஸ்ட்லி என்றும் அப்படியும் அத்தனை சிறப்பான சிகிச்சை கிடைக்காது என்றும் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறாள். சுரேந்திரன் அடிக்கடி சொல்வதுண்டு - அவன் வேலை பார்க்கும் இடத்தில் யாருக்காவது சிறு நோயென்றாலும் உடனே ஊருக்குத்தான் கிளம்பி விடுவார்கள் என்றும் ஆஸ்பத்திரிக்கு அதுவும் அரசு மருத்துவமனைகளுக்குப் போகச் சொன்னாலே அலறி விடுகிறார்கள் என்றும்.
அடுத்து அவள் சாலையில் அதிகம் சந்திப்பது தீயனைப்பு வண்டிகளை. இந்த ஊரில் அடிக்கடி எங்காவது எப்படி என்று தெரியாமலே தீப்பற்றிக் கொள்கிறது. பியூலாவே பலதடவைகள் அவள் வீட்டு ஜன்னலிலிருந்து அடுக்குமாடிக் கட்டிடங்களில் கரும்புகை சூழ மஞ்சளும் சிவப்பும் கலந்த ஜுவாலையுடன் தீ கொழுந்து விட்டெரிவதைப் பார்த்து பதறி, கொஞ்ச நேரத்திலேயே ஆம்புலன்ஸ¤ம் தீ அணைப்பு வண்டியும் விரைவதைப் பார்த்து ஆறுதலடைந்திருக்கிறாள்.
பத்து நாட்களுக்கு முன்னால் தான், அவள் தங்கியிருக்கும் கட்டிடத்திலிருந்து பதினைந்து கட்டிடங்கள் தள்ளி இருக்கும் ஒரு கட்டிடத்தில் ஒரு மோசமான தீ விபத்து நடந்து, அந்த குடியிருப்பின் மொட்டை மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட வீடு நடுஇரவில் தீப்பற்றிக் கொண்டதில் ஒரு புருஷனும் மனைவியும் அவர்களின் இரண்டு சிறுவயதுக் குழந்தைகளும் கருகிப் போயினர்.
இவளும் போய் அந்தக் கோரக் காட்சியைப் பார்த்து வந்தாள். அன்றைக்கு முழுவதும் பொட்டுத் தூக்கமில்லை. எத்தனை கனவுகளோடு பிழைக்க வந்திருப்பார்கள்? இப்படி கரிக்கட்டை யாய் திரும்பிப் போனால் அதைப் பார்த்து அவர்களின் குடும்பம் என்ன பாடுபடும்? நினைக்க நினைக்க வாழ்வின் நிச்சயமின்மை முகத்திலறைய "நாம இப்பவே இந்திவாவுக்குத் திரும்பப் போயிடலாங்க....." என்று பியூலா புலம்பத் தொடங்கி விட்டாள்.அவளை சமாதானப் படுத்தி இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்குள் சுரேந்திரனுக்கு போதும் போது மென்றாகிவிட்டது.
மேம்பாலத்திற்கு அடியில் அதன் நிழலில் சிலர் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார்கள் எப்போதும். அவர்களில் ஒருத்தனை அவள் அடிக்கடி அங்கு பார்ப்பாள்.அவனுக்கு முப்பது முப்பத்திரெண்டு வயதிருக்கும்.மிக நேர்த்தியாக உடை அணிந்திருப்பான். மற்றவர்கள் மாதிரி அவன் நிழலுக்கு ஒதுங்கிப் போபவனாகத் தெரிவதில்லை.
நண்பகல் தொழுகை முடிந்த நேரத்திலிருந்து சாயங்காலம் நான்கு அல்லது ஐந்து மணி வரை அங்கேயே தான் உட்கார்ந்திருப்பான். எதுவும் செய்யாமல் ஒரே இடத்தில் தொடர்ந்து மணிக்கணக்கில் எப்படி அவனால் உட்கார்ந்திருக்க முடிகிறது என்று அவளுக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஒரு வேளை அவளைப் போலவே அவனும் பொழுது போகாமல் தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறானோ என்று நினைத்துக் கொள்வாள்..
அவனைப் பற்றிய நிறைய கேள்விகளுக்கு அவளுக்கு விடை தெரியவில்லை. அவன் யார்? எங்கு வேலை பார்க்கிறான்? வேலைவெட்டி எதுவுமில்லையா அவனுக்கு? வேலைக்காக அழைத்து வரப்பட்டு ஏமாற்றப்பட்டு விட்டவனா? சொந்த நாட்டிற்கும் திரும்பிப் போக முடியாமல் இங்கும் போக்கிடமில்லாமல் அலைகிறவனா?கிடைத்த வேலையைச் செய்கிற கல்லிவெல்லி ஆசாமியா? இங்கெல்லாம் கோடைக் காலங்களில் சில அலுவலகங்களும் வணிக நிறுவனங்களும் நண் பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை இயங்குவதில்லை. அந்த மாதிரி ஓரிடத்தில் வேலை செய்பவனாக இருக்குமோ? ஆனால் இவனை அந்த நேரம் கடந்தும் சில தினங்களில் பார்த்திருக்கிறாளே! மேலும் அப்படிப்பட்டவகள் தாங்கள் தங்கி இருக்கும் அறைகளுக்குப் போய்த் தானே ஓய்வெடுப்பார்கள்! இவனுக்கு அப்படி ஒரு அறையே இல்லாமல் ஒருவேளை காரில் வசிப்பவனோ?
யு.ஏ.இ.யில் சில பேச்சிலர்கள் தங்களின் காரையே வசிப்பிடமாகக் கொண்டு அதிலேயே தங்கி, உண்டு, உறங்கி வாழ்கிறார்கள் என்று பத்திரிக்கைகளில் படித்து அதிர்ந்து போயிருக்கிறாள். டார்மென்ட்றி மாதிரி வசதியுள்ள இடங்களில் குளித்து, மற்ற கடன்களை முடித்துக் கொண்டு பகல் நேரங்களிலெல்லாம் காரிலேயே சுற்றிக் கொண்டிருந்து விட்டு இரவு ஏதாவது இலவச பார்க்கிங்கில் காரை நிறுத்தி காருக்குள்ளேயே உறங்கி விடுவார்களாம்.
இந்தியாவில் இதேபோல வெகு நேரம் காருக்குள் இருந்த சிலர் ஏ.சி.யிலிருந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைடால் செயலிழந்து மூச்சுத் திணறி இறந்து போன செய்தியை அறிந்ததும் இங்கு காரில் வாழ்பவர்கள் முக்கியமாக அந்த மேம்பால இளைஞன் தான் ஞாபகத் திற்கு வந்தான். கோடைகாலத்தில் இங்கு இரவிலும் வெக்கை இருக்கும். ஏ.சி. இல்லாமல் தூங்கவே முடியாது. அவர்கள் கார்பன் மோனாக்சைடிலிருந்து எப்படி சமாளிக்கிறார்கள்? கடவுளே! சில பேருக்கு ஏன் இத்தனை மோசமான வாழ்வனுபவம்!
`தினசரி பார்க்கிற மேம்பால நிழல் இளைஞனைக் கடந்த சில தினங்களாக அந்த இடத்தில் பார்க்க முடியவில்லை. எங்கு போனான் என்றும் தெரியவில்லை. பொதுவாய் கல்லிவெல்லி ஆட்கள் ஊருக்குப் போவதென்று முடிவெடுத்தால் விமானப் பயணத்திற்கான பணம் சேர்ந்ததும் போலிசில் சரணடைந்து விடுவார்களாம். போலீஸ் அவர்களை ஓரிரு மாதங்கள் சிறையில் வைத்திருந்து விட்டு அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்து விடுமாம்.
இவனும் அப்படி கிளம்பிப் போயிருப்பானோ? தினசரி அவனைப் பார்த்துப் பார்த்து கண்கள் பழகி விட்டதால் அவன் மேல் ஒரு இனம் புரியாத பாசம் ஏற்பட்டு விட்டது. அவன் இல்லாமல் அந்த இடம் வெறுமையாய் வெறிச் சோடிக் கிடப்பது போலிருந்தது. அவன் எங்கு போனான் என்பதற்கான விடை சில தினங்களுக்கு முந்தைய செய்தித்தாளில் அவளுக்குக் கிடைத்தது.
ஆங்கிலச் செய்தித் தாளெல்லாம் அவள் வாசிப்பதில்லை. சாயங்காலம் சப்பாத்திக்கு மாவு உருட்டிப் போடுவதற்காக பழைய பேப்பரை எடுத்து விரித்தபோது அதிலிருந்த ஒரு செய்தி வசீகரிக்க அதை வாசித்தவள் அப்படியே அதிர்ந்து போய் விட்டாள். செய்தி இது தான்:
துபாயிலிருக்கிற ஒரு இடுகாட்டில் பிணங்களை அடக்கம் செய்வதற்கு முன்னால் 'அதுகளை'ப் போட்டுக் கழுவுவதற்காக ஒரு அறை இருக்கிறதாம். அன்றைக்கு இராத்திரி அந்தப் பக்கமாய் ரோந்து சுற்றிய போலீஸ்காரனுக்கு அந்த பிணவறையில் ஏதோ நடமாட்டமிருப்பதாய் சந்தேகம் வர, உள்ளே போய் கையிலிருந்த சிகரெட் லைட்டரை எரியவிட்டுப் பார்த்திருக்கிறான். பிணங்களைப் போட்டுக் கழுவும் பிளாட்பாரத்தின் மேல் நிர்வாணமாக ஓர் ஆணும் பெண்ணும் ஆலிங்கனம் செய்து கொண்டிருந்தார்களாம். அவர்களிருவரும் கைது செய்யப் பட்டிருந்தார்கள்.அவர்களை அங்கு அனுமதித்த பிணவறைக் காவலாளி தப்பித்து ஓடிவிட்டானாம். கைதானவர்களின் போட்டோக்களும் போட்டிருந்தார்கள்.
அந்த ஆணும் பெண்ணும் தங்கள் அந்தரங்கம் கேவலப் படுத்தப்பட்ட அதிர்ச்சியில் குமுறி அழுதபடி யிருந்தார்கள். அதிலிருந்த ஆணின் முகம் பியூலாவிற்கு பரிச்சயமானதாயிருக்க கொஞ்சம் உற்றுக் கவனித்தவள் உறைந்து போனாள். அது மேம்பாலத்து நிழலில் ஓய்வெடுக்கும் இளைஞன்.

(தயாராகிக் கொண்டிருக்கிற நவீன விருட்சம் 84வது இதழில் வெளியாகும் சிறுகதை)