Skip to main content

சந்திக்கள் சக்திக்கு வணக்கம். உலகத்தில் ஒரு பெரிய நிலப்பரப்பு. மிகுந்த மக்கள் தொகை. மொழிகளலாலும், மதங்களாலும், வேறுபட்டு, பலவகையான குடிநிலங்கள், பச்சை, மருதம், நீல கடற்கரைகள், பழுத்த மலைகள், இவற்றில் வாழும் படித்த, படிக்காத மக்கள், எத்தனை எத்தனை வகைகள். எத்தனை எத்தனை திறங்கள், யாவரும், ஒருவர். இந்தியர். நீண்ட தேர்தலாக இருப்பினும், இந்த 100 கோடி மக்களில் வாக்குகளை, இந்தியாவின் நீண்டகன்ற நிலபரப்பில் ஒரு பட்டி தொட்டி கூட விடுபடாது மிகமிக அமைதியான முறையில் நடத்தி வெற்றி கண்டது மக்களாட்சி - எத்துணை வலிமையானது என்று உலகிற்கும், நமக்குமே உணர்த்தியது. பதிநான்காம் முறையான மகத்தான சாதனை. வளர்ச்சித் திட்டங்களின் தொடர்ச்சிக்கும், பொருளாதார தளர்ச்சி நிலையிலிருந்து மீட்சிக்கும் தங்கள் ஒப்புதலை அரசிற்கு மக்கள் அளித்திருக்கிறார்கள். சாதி என்றொரு தீயசக்தியின் பாதிப்பு சற்று குறைந்திருக்கின்றது என்ற மகிழ்ச்சி, பூதாகாரமாக வளர்ந்திருக்கும் பணக்கையூட்டு சிறிது கவலையை அதிகமாக்கியுள்ளது. இந்தப் பிரச்சினைக்கும் வருங்காலத்தில் மக்கள் சக்தியே தீர்வுகாண வேண்டும். இந்தத் தேர்தலில் ஆட்சியை கோரியவர்களிடம், முழுமையான ஆட்சியை, சாவிக்கொத்தையே கொடுத்துவிட்டனர் மக்கள், அவர்களின் ஒரே கட்டளை ''செய்து காட்டு'' என்பதே.


***********


வ்வொரு ஆண்டிலும் 'மே' மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையும் உலக முழுவதிலும் 'அன்னையர் தின'மாகக் கொண்டாடப்படுகின்றது. இதுபோன்ற 'தினங்கள்' பொதுவாக வணிகர்களால் 'விற்பனை' தினங்களாக மாற்றப்பட்டு மக்களை, 'இதைவாங்கு' 'அதைவாங்கு' மூளையடித் திருநாட்களாக மாறிவிடும்.இந்த ஆண்டு 'அன்னையர் தினத்'தன்று ''டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளிவந்த விளம்பரமொன்று, இந்தியாவின் சாதனை செய்யும் இளம் வீரர்கள், இசை வித்தகர் ஏ ஆர் ரஹ்மான், கிரிக்கெட்டின் டெண்டூல்கர், உலக சதுரங்க மாவீரர் ஆனந்த்., இர்ஃபான் சகோதரர்கள், திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர்களின் புகைப்படங்களுடன் எழுதப்பட்டிருந்த வாசகம்தான் ஒரு எளிய ஆயினும் ஆழமான கவிதையாக உருவாகியிருந்தது. இதோ அது


ஒளிவெள்ளத்திற்கு முன்னால்


வெறியேறுவதற்கு முன்னால்


கைதட்டல்களுக்கு முன்னால்


மாயங்களுக்கு முன்னால்


கையெழுத்து வேட்டைக்கு முன்னால்


கொழிக்கும் செல்வத்திற்கு முன்னால்


பாரட்டுதல்களுக்கு முன்னால்


தலைப்புச் செய்திகளுக்கு முன்னால்


யாவற்றிற்கும் முன்னால் அம்மா இருந்தாள்.


*******************விளம்பரத்துறை ஒரு அருமையான கொதிகலன். ''மாற்றி சிந்தி''ப்பவர்களுக்கு ஒரு விறுவிறுப்பான களம். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிரிக்கெட் போட்டிகளை சின்னத்திரையில் ஒளிபரப்பும்போது, கூட வெளியாகும் விளம்பரங்களில், இதுவரை பெருமிடத்தைப் பிடித்துக்கொண்டிருந்த கிரிக்கெட் வீரர்கள் திரைப்பட நடிகைகள் யாவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னணியில் இருப்பது 'வோடோ .போன்' விளம்பரங்களில் தோன்றும் ''ச்ஜீ..ச்ஜீ..''க்கள்தான். கேலிச்சித்திரங்கள், கார்ட்டூன்களை இயக்கி 'அனிமேஷன்' என்ற உத்தியை ''மாற்றி யோசித்து'' மனிதர்களையே கார்டூன்களாக மாற்றி, திரைப்படமாக ஒளிப்பதிவு செய்யும் 22 ப்ரேம்களை, 20 ப்ரேம்களாக சற்று மெதுவாக ஓடவிட்டு, படமெடுத்து ஒரு அனிமேஷன் படம்போல் செய்து நிகழ்வுகளையும் கற்பனை வளம் நிரம்பிய காட்சி அமைப்புகளாக மாற்றியிருக்கிறார்கள், தயாரிப்பாளரும், இயக்குனர்களுமான, 'நிர்வாணா' விளம்பர நிறுவனம். பல ''ச்ஜீ..ச்ஜீ..'' விளம்பரங்கள் மக்களின் கவனத்தையும் கவர்ந்து, அவ் விளம்பரங்களை காண்பதற்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி விட்டன. படுத்துத் தூங்கும் முதலையை உசுப்பி விளையாடும் ஒருவனை அந்த முதலை விழுங்கிவிடும் அந்த விளம்பரம் பலரால் நினைவு கூரப்பட்டது.அஞ்சலி


கவிஞர் சி மணி அண்மையில் இயற்கை எய்தினார். ஆங்கிலத்தை தனது முதுகலைப் படிப்பாகத் தொடர்ந்து, ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றிய சி மணியின் கவிதைச் சிந்தனையை, டி எஸ் எலியட்டும், ஆடனும், தங்களது கவிதைகளால் ஈர்த்தது வியப்பில்லை. அமரர் சி சு செல்லப்பாவின் 'எழுத்து' வில் கவிதை எழுதத் தொடங்கி, பின், தானே 'நடை' என்ற சிற்றிதழைப் பதிப்பித்து வெளியிட்டார். மனிதர், எளியவர், யாருடனும் உடனே சரளமாகப் பழகிவிடாத சிறிது கூச்ச சுபாவம். பழகிவிட்டால் கூட மற்றவர்களின் அந்தரங்களில் அதிரடியாகப் புகுந்துவிடாத ஒருவகை 'கனவான்' மனப்பான்மை.சேலத்தில் வசித்த அவர் மாலை வேளைகளல் கடைத் தெருவிலிருந்த நண்பரின் துணிக்கடைக்கு, தவறாத வருவார், வந்து ஒரு காப்பி0 அருந்திவிட்டு, ஓரிரு சிகெரெட் புகைத்து விட்டு விடைபெறுவார். சேரம் செல்லும்போது, மாரியம்மன் கோவிலுக்கு அருகே இருந்த துணிக்கடைக்கு, நானும் போவேன்; தொழில் முறையிலும், நட்புமுறையிலும். அந்தத் துணிக்கடைக்காரர், இன்னும் என் நெஞ்சில் நண்பராகவேஉள்ளவர். அவர்தான் என்னிடம் சி மணி 'நடை' நடத்தியபோது தன் சொந்தப் பணத்தை பெருமளவு தோழர்களாகக் கருதியவர்களினால் ஏமற்றப்பட்டு இழந்தார் என்றும், பண இழப்பைவிட தோழமையின் இழப்பு, அவரை மிகவும் வாட்டியதாக கூறினார். கவிதை எழுதுவது போலவே, சி மணி மிகவும் அழகாக தையல் கலையையும் பயின்றிருந்தாராம்.
Comments