Skip to main content

என் நண்பர் ஆத்மாநாம்

பகுதி 1

ஆத்மாநாம் என்ற மதுசூதன் வாழ்க்கையில் முதல் முறையாக நான் சந்தித்தது திருவல்லிக்கேணியின் ஒரு தெரு முனையில். 1972 - ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை. மாலை நாலரை மணி இருக்கும். நானும் நண்பர் ஷர்மாவும் ஹோட்டல் ஒன்றில் டிபன் சாப்பிட்டுவிட்டு என் அறையை நோக்கி மெதுவாக நடந்துகொண்டிருந்தோம். கடை ஒன்றில் நின்று ஷர்மா சிகரெட் வாங்கிப் பற்ற வைத்துக்கொண்டிருந்தபோது, "ஹலோ ஷர்மா," என்ற குரல் கேட்க திரும்பிப் பார்த்தோம், 20 வயது மதிக்கத்தக்க அழகிய இளைஞனாக ஆத்மாநாம் நின்று கொண்டிருந்தார். நானும், ஆத்மாநாமும் அதற்குமுன் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டதில்லை. எங்களுடைய முதல் சந்திப்பு அது. ஷர்மா எங்கள் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தார். அந்த நேரத்தில் நான் மூன்று சிறுகதைகள் மட்டுமே எழுதியிருந்தேன். ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த ஞானரதம் இதழில் பிரசுரமாயிருந்த என் ஒரு சிறுகதையை வாசித்திருப்பதாக ஆத்மாநாம் சொன்னார். நண்பர் மகா கணபதியைப் பார்ப்பதற்காக சென்றுகொண்டிருப்பதாகவும், இன்னொருமுறை திருவல்லிக்கேணி வரும்பொழுது என் அறையில் வந்து என்னைச் சந்திப்பதாகவும் சொல்லி ஆத்மாநாம் விடைபெற்றுக் கொண்டார். திருவல்லிக்கேணி பைக்கிராஃப்ட் சாலையில் எங்களின் இந்த முதல் சந்திப்பு நிகழ்ந்தது.

1984 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் நானும் ஆத்மாநாமும் மௌன்ட் ரோட் அரசாங்க நூல் நிலையக் கட்டடித்தின் மாடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலக்கிய கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். நண்பர் ராஜகோபாலனும் எங்களுடன் வந்திருந்தார். கடுமையான அடிதடியாக மாறக்கூடிய அபாயத்தை நோக்கி அந்த இலக்கிய கூட்டம் சரிந்துகொண்டிருந்ததால், அங்கிருந்து நாங்கள் மூன்று பேரும் கூட்டத்தின் மத்தியிலேயே வேகமாக வெளியேறிவிட்டோம். டீ ஷாப் ஒன்றில் டீ சாப்பிட்டவாறு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பின் மெதுவாக நடந்தோம். ஆத்மாநாம் அம்பத்ததூர் செல்ல வேண்டும். நான் தியாகராயநகர். அதனால் நாங்கள் சர்ச்பார்க் கான்வென்ட் அருகில் ஆளுக்கொரு பஸ் ஸ்டாப்நோக்கிப் பிரிந்தோம். சில தினங்களில் ஆத்மாநாம் பெங்களூர் செல்லப் போவதாகவும் எப்போது மெட்ராஸ் திரும்புவேன் என்பதைச் சொல்ல முடியாதுயென்றும் கூறி விடை பெற்றார். எங்களுடைய கடைசிச் சந்திப்பு அதுவே. 1984 ஜøலை ஆறாம் தேதி பெங்களூரில் ஆத்மாநாம் காலமான செய்தி சிறு அஞ்சல் அட்டைச் செய்தியாக விருதுநகரில் இருந்த எனக்கு அறிவிக்கப்பட்டது. பன்னிரெண்டு வருஷங்களில் நானும் ஆத்மாநாமும் நாட்குறிப்பின்படி 1200 நாட்கள் சந்தித்திருக்கிறோம். நானும் அவரும் நண்பர்களாக இருந்தோம் என்று சொல்லிக்கொள்வது வெறும் மேலோட்டமான கூற்று என்பது என் அபிப்பிராயம். நட்பு என்ற தளத்திற்கு மேலான ஆழ்ந்த வெளியில் எங்களுடைய சந்திப்பு நிகழ்ந்துகொண்டிருந்தது. அறிமுகமான சில நாட்களிலேயே அதற்கான வெளி இயல்பாக உருவாகிக்கொண்டது.

என்னை நான் தங்கியிருக்கும் லாட்ஜின் அறையில் வந்து சந்தித்துப் பேசுவதில் நாள் கிழமை நேரம் காலம் என்ற எந்தத் தடங்கல்களும் ஆத்மாநாமுக்கு இல்லாமல் இருந்தது மிகவும் குறிப்பிடும்படியானது. என்னைப் பார்ப்பதற்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் கிளம்பிச் செல்லலாம். இடையே உணவுவேளை வந்தால் என்னுடனேயே சாப்பிடலாம். ஆத்மாநாம் என்னைப் பார்க்க இரவு பதினொரு மணிக்குக்கூட மோட்டார் சைக்களில் வருவார். இரண்டுபேரும் கிளம்பி மௌண்ட்ரோட் புஹாரி ரூஃப் போவோம். டீ குடித்தவாறு அதிகம் பேச்சு இல்லாமலேயே கூட உட்கார்ந்திருப்போம். ஆத்மாநாம் ஜ்யூக் பாக்ஸில் காசு போட்டு பிடித்தமான பாட்டு எதையாவது அமைதியாக கேட்டுக்கொண்டிருப்பார். சில விஷயங்களில் நானும் ஆத்மாநாமும் நேர் எதிரான குணம் கொண்டவர்கள். நான் எதையும் திட்டமிட்டு செய்வேன். ஒரு புத்தகம் வாங்குவதென்றால்கூட நான் எந்தக் கடையில் போய் வாங்கலாம்; எந்தத் தேதியில் எந்த நேரத்தில் போய் வாங்க வேண்டும் என்பதையெல்லாம் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாகவே தீர்மானம் பண்ணி விடுவேன். ஆத்மாநாம் திடீரென்று "வாங்க போகலாம்," என்று கிளம்புவார். மௌண்ட் ரோட், பாண்டிபஜார், பாரீஸ் கார்னர்; சில நேரங்களில் புரசைவாக்கம்கூட போவார். என்ன வாங்கலாம் என்ற தீர்மானம் - வீதிகளில் நடந்து கொண்டிருக்கும்போது தோன்றும். இசைத் தட்டுகள் விற்பனை செய்கிற கடைகளுக்குள் நுழைவார். பத்துப் பதினைந்து இசைத்தட்டுக்களை போட்டுக் காட்டச் சொல்லி கேட்பார். ராக், ஜாஸ், பாப் - என்று எந்தவித இசைத்தட்டாக இருந்தாலும் வாங்குவதற்காக தேர்வு செய்வார். சிலவேளைகளில் எனக்கும் ஒரு இசைத் தட்டு பரிசாக வாங்கித் தருவார். அவர் தேர்வு செய்யும் இசைத்தட்டு கேள்வியே பட்டடிராததாகக்கூட இருக்கும். பத்துப் பன்னிரெண்டு இசைத் தட்டுக்களை போட்டுக் காட்டச் சொல்லிவிட்டு எதையும் வாங்காமல் அவர் வெளியேறி விடுவதும் உண்டு. அந்த மாதிரி ஆத்மாநாம் வெளியேறும்போது ஏமாற்றத்துக்குள்ளாகும் கடை விற்பனையாளரின் முகம் போனபோக்கை அவர் வெளியேறிச் செல்கையில் குழந்தையின் குதூகலத்துடன் சொல்லிச் சிரிப்பார். பிடிக்காத பட்சத்தில் வாங்க வேண்டும் என்பது கட்டாயமில்லையென்று வாதிடுவார். நான் எதிர்வாதம் செய்வதில்லை - ஆயினும் நான் அந்த மாதிரி ஒரு நாளும் நடந்துகொள்வதில்லை. நானும் ஆத்மாநாமும் அடிக்கடி போகிற ஒரு இடம் - கன்னிமாரா ஹோட்டலில் இருக்கும் புத்தகக் கடை ஒன்றுக்கு. ரொம்பச் சின்ன கடை அது. தேர்ந்தெடுத்த புத்தகங்களை மட்டும்மிக நேர்த்தியாக அடுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். அந்தக் கடையின் அமைப்பே ரம்மியமாக இருக்கும். அங்கேதான் நான் ஒருநாள் "ஜோன் பேஸ்" என்ற அமெரிக்க நாட்டுப்புறப் பாடகியின் சுயசரிதைப் புத்தகத்தை வாங்கினேன். ரொம்ப ரொம்பச் சின்னப் புத்தகம்தான் அது. ஆனால் அருமையான புத்தகம். இன்றும் என்னால் மறக்க முடியாத புத்தகம் அது. என்னிடமிருந்து அதை வாங்கிப்போய் படித்த ஆத்மாநாம் அவருக்காக மற்றொரு பிரதியை உடனே வாங்கி விட்டார்....ஒன்றே ஒன்று - அந்தப் புத்தகக் கடையில் மட்டும் ஆத்மாநாம் எதுவும் வாங்காமல் வெளிவருவதில்லை. எப்போதும் அந்தக் கடையில் புத்தகம் வாங்கியதும் கன்னிமாராவின் ரெஸ்டாரண்ட்டில் நானும் அவரும் காஃபி சாப்பிடுவோம். அந்த ரெஸ்டாரண்டின் காஃபியும் மறக்க முடியாதது. ஒருநாள் இரவு ஒன்பது மணியாக இருந்தது. இரவு உணவு ஆத்மாநாம் என்னுடன்தான் சாப்பிட்டிருந்தார். அதனால் அவசரமாகக் கிளம்பி வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. சாவகாசமாக நாற்காலியில் சாய்ந்தவாறு என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். சட்டென ஞாபகம் வந்தவராக, "ராம்மோஹன் - கிளம்புங்க; எனக்கு ஒரு ஷர்ட் துணி வாங்கி வேண்டியிருக்கு; மௌண்ட் ரோடுல எங்கேயாவது வாங்கலாம்.."என்றார். இருவரும் மோட்டார் சைக்கிளில் கிளம்பிப் போனோம். மணி அப்போது ஒன்பது இருபது ஆகியிருந்தது. ஒரு கடைக்குள் நுழைந்தோம். சில நிமிடங்களில் கடையை மூடுவதற்கான அடையாளங்கள் தெரிந்தன. சிப்பந்திகள் சற்று சோர்வுடன் பார்த்தார்கள். மூடப்போகிற நேரத்தில் வருகிறார்களே என்ற ஆயாசம் அவர்களுடைய முகங்களில் இருந்தது. ஆத்மாநாம் துணிகளை எடுத்துக் காட்டச் சொல்லி பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு சிப்பந்தி மட்டும் உற்சாகம் இல்லாமல் துணிகளை எடுத்து காட்டிக்கொண்டிருக்க மற்றவர்கள் அவரவர் இடங்களில் வெறுமே நின்றார்கள். எல்லோருடைய கவனமும் ஆத்மாநாம் மேலேயே இருந்தது. பொதுவாகவே எந்தப் பொருளை வாங்கப் போனாலும் பார்த்தோம் வாங்கினோம் என்ற சமாச்சாரமெல்லாம் கிடையாது ஆத்மாநாமிடம். எடுத்து எடுத்து காட்டச் சொல்லிக்கொண்டே இருப்பார். அவசரமே இருக்காது. அன்றும் அதே மாதிரிதான். நிதானமாக ஒவ்வொரு துணியாக பார்த்துக்கொண்டேயிருந்தார். மேலும் மேலும் துணிகளை எடுத்துக்காட்டும் படியும் சொல்லிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு ஒரு துணியைத் தேர்வு செய்தார். கடைப் பணியாளர் அந்தத் துணியில் ஆத்மாநாமுக்குத் தேவையான அளவை கேட்டு கிழித்தார். அவரிடம் ஆத்மாநாம் தான் எவ்வளவு பணம் தர வேண்டும்? என்று கேட்க பணியாளும் கணக்கிட்டுச் சொன்னார். ஆத்மாநாம் உடனே மணிபர்ûஸ எடுத்தார். அந்தத் துணிக்கான பில் தொகை அவரிடம் இல்லை. பணம் மிகவும் குறைவாக இருந்தது. ஷர்ட் பாக்கெட்; பேண்ட் பாக்கெட்; ப்ரீஃப் கேஸ் - எல்லாவற்றிலும் தேடினார். பணம் இல்லை. என்னிடம் இல்லை. கடைச் சிப்பந்தி பொறுமை இழந்து ஆத்மாநாமையே பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் ஆத்மாநாம் சிறிதுகூட பதட்டமடைந்துவிடவில்லை. "நோ ப்ராப்ளம்; செக் புக் இருக்கிறது. செக் குடுத்திடலாம்..." என்றார். துணியை 'பேக்' பண்ணி கையில் வைத்திருந்த பணியாள் விருட்டென்று சொன்னார்,"செக்கெல்லாம் வாங்க மாட்டோம் சார்.." "ஏன் வாங்க மாட்டிங்க...ஏமாத்தற ஆள் இல்லை நாங்க...என்ன பண்றது ..கேஷ் எல்லாம் செலவாயிடிச்சி - கவனிக்காம வந்திட்டேன்... செக் தர்றேன்..வாங்கிக்கோங்க.." "ஸாரி, சார்..செக் வாங்க மாட்டோம்.." "உங்க முதலாளிகிட்ட என்னை கூட்டிட்டுப் போங்க, அவர்கிட்ட நான் பேசறேன்.." கல்லாவில் நின்றபடி கடை முதலாளி எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்! பணியாள் முன்னே செல்ல நானும் ஆத்மாநாமும் அவரிடம் சென்றோம். கடை முதலாளியிடமும் ஆத்மாநாம் பணியாளரிடம் சொன்னதையே சொன்னார். தானே ஏற்றுமதி ஆடைகள் தயாரிக்கும் தொழிலில்தான் இருப்பதாக சொல்லி, தன்னுடைய 'விசிட்டிங் கார்டை' எடுத்துக்காட்டினார். கடை முதலாளி அதை வாங்கிப் பார்த்தார்..."ஓ கே சார் - போனா போகட்டும்...இந்தத் தடவை உங்ககிட்ட செக் வாங்கிக்கிறேன்..ஆனா - உங்க கிட்ட இல்லை; யார் கிட்டேயிருந்தும் செக் வாங்கற வழக்கம் கிடையாது எங்களுக்கு.. இன்னொரு தடவை இந்த மாதிரி செய்யாதீங்க.." என்றார் கடை முதலாளி. ஆத்மாநாம் கடை முதலாளிக்கு நன்றி சொன்னார். செக் என்ன பெயரில் தரட்டும் என்று கேட்டு எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்தார். கடை முதலாளியும் நன்றி சொல்லி செக்கை வாங்கிக்கொண்டு துணிப் பார்சலை ஆத்மாநாமிடம் கொடுத்தார். ஆத்மாநாமும் நன்றி சொல்லி வாங்கி கடை முதலாளியிடம் கை குலுக்கினார். நாங்கள் வெளியில் வந்தோம். ஆத்மாநாம் சில நிமிடங்களுக்கு இந்தச் சம்பவத்தை நினைத்து நினைத்து குதூகலமாய் சிரித்தார். செக் தருவதாக சொன்னதும் கடைப் பணியாளர்கள் எல்லோருமே எப்படி ஆற்றாமையோடு விழித்தார்கள் என்பதைக் கூறி சிரிப்பு. இந்தச் சம்பவத்தை நான் சொல்லிக் கேட்பவர்களுக்கு ஆத்மானாமின் குதூகலமும் சிரிப்பும் கொஞ்சம் விகற்பமாகவோ சிறுபிள்ளைத் தனமாகவோ தெரியலாம். ஆனால் அப்படி இல்லை உண்மையைச் சொன்னால் இதே மாதிரியான சம்பவங்களை நிறையவே சொல்லமுடியும். ஆனால் இந்த மாதிரியான சிரிப்பும் குதூகலமும் சிறுபிள்ளைத்தனமானவை கிடையாது. ஆத்மாநாமுக்கே உரித்தான கள்ளம் கபடம் இல்லாத குழந்தைத்தனமான சுபாவம் இது. அடிப்படையில் ஆத்மாநாம் கண்ணியமும் மேன்மையும் கொண்ட மனிதர். கண்டிப்பான சில நாகரீகங்களை பின்பற்றுகிறவர். மிக மென்மையான் சிறிது சங்கோஜமான நண்பர் அவர். எப்போதாவது இரவு நேரங்களில் என் அறையிலேயே தங்கிக் கொள்ளும்போது நான் தரும் புதிய வேட்டியையோ லுங்கியையோ கட்டிக்கொண்டு பனியன் அணிந்த தோற்றத்தோடு தூங்குவதற்குக்கூட அவரால் முடியாது. வெட்கப்படுவார். பேண்ட் ஷர்ட்டோடேயே தூங்குவார். காலையில்வெளி வராந்தாவில் இருக்கும் பாத்ரூமில் குளிக்கப் போகும்போதுகூட துண்டு கட்டிக்கொண்டு போகலாம். மாட்டார். பேண்ட் ஷர்ட்டோடேயே தூங்குவார். காலையில் வெளி வராந்தாவில் இருக்கும். பாத்ரூமில் குளிக்கப் போகும்போதும் கூட துண்டு கட்டிக்கொண்டு போகலாம். மாட்டார். பேண்ட் ஷர்ட்டுடன்தான் செல்வார் - இதே ஆத்மாநாம் பேண்ட்டையும் ஷர்ட்டையும் கழற்றி படிகளில் வைத்துவிட்டு உள்ளாடையுடன் ஒருநாள் கிணற்று நீரில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார். ஆத்மாநாம் 1984 ஜøலை 6ஆம் தேதி தற்கொலை செய்து உயிர் இழந்தார்.

(ஸடெல்லா புரூஸின் கட்டுரைகள் என்ற தொகுப்பு நூல் விருட்சம் வெளியீடாக வர உள்ளது. அதில் ஆத்மாநாம் பற்றி அவர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இங்கு பிரசுரம் ஆகிறது. அடுத்த பகுதி நாளை பிரசுரம் ஆகிறது)

Comments