கடைசிப் பகுதி
எனக்கும் அவருக்கும் இடையே இருந்த பன்னிரெண்டு வருட உறவு வினோத தருணங்களாலும் அவ்வப்போது விபரீத தருணங்களாலும் அடுக்கப்பட்டடிருந்தது. அவையெல்லாம் எனக்கு உரமாகி விட்டிருந்தன. ஆத்மாநாமை அவை உலுக்கிப் போட்டிருந்தன. அவருக்கு ஒரு பெண்ணிடம் அறிமுகமான குறுகிய காலத்திலேயே மெல்லிய நட்பை அரும்ப வைத்திருந்தது. நட்பு உறவாகவும் மலர வித்திட்டுக்கொண்டிருந்தது. ஆனால் திருமணம் என்ற அவசர குறிக்கீடு ஆத்மாநாமையும் மீறி அப்பெண்ணை நோக்கி எய்யப்பட்டதில் அத்தனையும் கலைந்து போனது. அழகிய மலர்வனம்போல் உருவாகிக் கொண்டிருந்த சதுக்கம் ஒரே நாளில் காலிமனையாகி விட்டது. நிஜமாக வாழ்க்கையில் அந்தக் கணம் தன்னந்தனியாக நின்றார் - ஆத்மாநாம். ஒரு நிமிஷம் அவளை அவரால் பார்க்க முடியவில்லை. ஒரு விநாடி அவளின் குரலை தொலைபேசியிலும் கேட்க முடியவில்லை. அவள் அவளுடையகுடும்பத்தாரால் முழுவதுமாக மறைக்கப்பட்டு விட்டாள்..அந்த அத்தியாயம் மர்ம புதிராக முற்றுப் பெறாமலே முற்றுப் பெற்றுவிட்டது.
மனச்சிதைவின் முதல் தாக்குதலுக்கு நான்கு மாதங்களுக்கு முன் ஆத்மாநாமும் நானும் மெரீனா கடற்கரையை நோக்கி நடந்துகொண்டிருந்தோம். பக்கிங்காம் கால்வாயின் பாலத்தைத் தாண்டி வலதுபுற நடைபாதையில் சென்று கொண்டிருந்தோம். தூரத்தில் கடற்கரைச் சாலையில் இருந்து திரும்பி அவள் அவளுடைய பெற்றோர்களுடனும் தங்கைகளோடும் வந்தாள். நாங்கள் அவர்களைப் பார்த்துவிட்டோம். அவர்களும் எங்களைப் பார்த்து விட்டார்கள். ஆத்மாநாமின் உடல் உயர்ந்து விறைத்தது. சட்டென என் கையைப் பிடித்துக்கொண்டார். அவர்களுடைய தோற்றத்திலும் நிசப்தம். இறுக்கம். நாங்கள் அவர்களையும் அவர்கள் எங்களையும் எதிர்கொண்டு கடந்தோம். ஆத்மாநாம் மௌனமாகவே நடந்து கொண்டிருந்தார். கடற்கரைச் சாலையின் புல்வெளியில் நாங்கள் அமர்ந்தோம். சில நிமிடங்கள் கழித்து ஆத்மாநாம் சொன்னார்: "நீங்க வேனா பாருங்க..அவ வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்படப் போறா.." ஆனால் எதிர் வந்த வாழ்க்கையில் கஷ்டப்பட்டு குலைந்து போனது யார்?
ஆத்மாநாம் இறந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் நான் மயிலாப்பூர் சென்றிருந்தேன்..அது டிசம்பர் மாத அவரின் அன்புக்கு உரியவளின் வீணைக் கச்சேரி. பகல் இரண்டு மணிக்கு ஒரு சபாவில் நடக்கப் போவதற்கான அறிவிப்பு அந்த சுவரொட்டி...ஆத்மாநாமுடன் நட்பு மலர்ந்து கொண்டிருந்த நாட்களிலேயே அவள் தீவிர வீணைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவள்..மானிட புலன்களுக்கு அப்பாற்பட்ட சக்தியின் கணிதங்கள்தான் வாழ்க்கையை சுவாரஸ்யப் படுத்தவும் செய்கின்றன. சில நேரங்களில் அதிர்ந்து ஸ்தம்பிக்கவும் வைத்து விடுகின்றன..ஆத்மாநாமின் மனம் ஸ்தம்பிப்பதற்கும் மேலான குழைவிற்கு உள்ளானதுதான் துர்பாக்கியம். இன்னொரு சிறு சம்பவம் கூட இருக்கிறது. உதாரணமாகச் சொல்ல... ஒருநாள் காலை ஆறரை மணி இருக்கும். அதிகாலை ஐந்தரை மணிக்கு என்னுடைய அன்றாட வழக்கப்படி மெரீனா கடற்கரைக்குப் போய் ராணி மேரி கல்லூரிக்கு எதிரான புல்வெளியில் உட்கார்ந்துவிட்டு அறைக்குத் திரும்பலாம் என்ற எண்ணத்தில் நான் நடைபாதையில் வேகமாக நடந்துகொண்டிருந்தேன். ஒரு சதவிகிதஎதிர்பார்ப்பு கூட இல்லாமல் அதே நடைபாதையின் தூரத்தில் ஆத்மாநாம் வந்துகொண்டிருந்தார். அவருடன் அவரின் அண்ணாவும் மற்றொருவரும் வேறு வந்தார்கள். சின்ன கேள்விக்குறியுடனேயேஎன் நடை தொடர்ந்தது. ஆத்மாநாமின் முகத்தோற்றத்தில் வித்தியாசம் ஏதோ இருந்தது. இரண்டொரு விநாடிகளில் தெரிந்து விட்டது. அவருடைய மீசை மழிக்கப்பட்டிருந்தது. ஆத்மாநாமின் அண்ணா கையில் சில பொருட்கள் இருந்தன. ஒரு புள்ளியில் நாங்கள் சந்தித்தோம். வறண்ட வெற்று வார்த்தைகளில் ஆத்மாநாம் சொன்னார்: "என்னோட பாதர் இறந்திட்டார்.. ஸாரி - உங்களுக்குசொல்லலை..அவரோட அஸ்தியை கரைக்கிறதுக்காக போறோம்..நெக்ஸ்ட் வீக் உங்களை வந்து பார்க்கிறேன்.."
நான் எதுவும் சொல்லாமல் நகர்ந்து வழிவிட்டு நின்றுகொண்டேன். அவர்கள் தொடர்ந்து நடந்தார்கள். பார்த்தபடியே நின்றேன். தென்திசை பார்த்தபடி ஆத்மாநாம் தளர்ந்த நடையில் சென்று கொண்டிருந்தார். அந்தத் தளர்ச்சி கடைசிவரை அவரிடமிருந்து நீங்கவில்லை. வேலை பணியென்று பார்த்து எங்கேயும் அவரால் உட்கார முடியவில்லை. உள்ளூர மணவாழ்க்கைக்கு ஆசைப்பட்டார். அது அமைவதற்கும் வழி இல்லாமல் இருந்தது.
ஒரு சமயம் 'ஹிண்டு' ஆங்கில நாளிதழில் மணமகள் தேவை விளம்பரம் பகுதியில் விளம்பரம் கொடுக்க ஆசைப்பட்டார். இரண்டு மூன்று நாட்கள் யோசனை செய்து பார்த்து விளம்பரத்திற்கான வாசகங்களை எழுதிக்கொண்டு வந்தார். நானும் அவரும் ஹிண்டு ஆபிஸ் போனோம். அதற்கான பிரிவில் போய் ஆத்மாநாம் விளம்பரத்திற்காக எழுதியிருந்த வாசகங்களைக் கொடுத்தார்.
திரும்பத் திரும்ப வரிகளைப் படித்துப் பார்த்த நாளிதழின் அலுவலர் ஆத்மாநாம் எழுதியிருந்த குறிப்பிட்ட இரண்டு சொற்களை எடுத்துவிட்டு வேறு விதத்தில் எழுதித் தரச் சொன்னார். ஆத்மாநாம் காரணத்தைக் கேட்டார். அந்த இரண்டு வார்த்தைகள் தவறாக வாசிப்போரை நடத்தி விடலாம். அது தங்களுக்கு ஏற்புடையது அல்ல என்றார் அந்த அலுவலர். ஆத்மாநாம் அந்த வாதத்தை ஏற்கவில்லை. தன்னுடைய அணுகலின் அர்த்தத்தை விளக்கமாகச் சொன்னார். அந்த அலுவலர் உள்ளேபோய் ஆத்மாநாமின் வாசகங்களை வேறு யாரிடமோ காட்டிப் பேசிவிட்டு வந்து குறிப்பிட்ட அந்த வார்த்தைகளுடன் விளம்பரத்தைத் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதென்று சொல்லிவிட்டார். ஆத்மாநாம் அவருடைய வாசகங்களை மாற்றிக்கொள்ள முன்வரவில்லை - எழுந்து வந்து விட்டோம். கோபத்தில் ஆத்மாநாம் முகம் சிவந்து போனார். நீண்ட நேரத்திற்கு என் அறையில் மௌனமாக சிகரெட்புகைத்துக்கொண்டிருந்தார்.
இந்த விஷயத்தை நான் என்னுடைய இன்னொரு நண்பரான அம்பலவாணனிடம் வருத்தத்துடன் சொல்லிக்கொண்டிருந்தேன். அவருக்கும் ஆத்மாநாமிடம் பரிச்சயம் உண்டு. அம்பலவாணன் ஃபுட் கார்ப்பரேஷனில் பணியில் இருந்தார். யூனியன் போன்ற அமைப்புகளில் தீவிர பங்குள்ளவர். எல்லா நாளிதழ்களிலும் அவருக்குத் தொடர்பு இருந்தது. ஹிண்டு 'ராம்' போன்றவர்களிடமும் அம்பலவாணனுக்கு அறிமுகம் உண்டு. பத்திரிகை அலுவலகத்திற்கு ஆத்மாநாமை அம்பலவாணன் அழைத்துப் போனார். அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஹிண்டுவில் ஆத்மாநாமின் மணமகள் தேவை விளம்பரம் வெளி வந்தது. ஆனால் அவர்கள் ஆட்சேபணை தெரிவித்த வார்த்தைகளுக்கு மாற்று வார்த்தைகளுடன் - ஆத்மாநாமின் சம்மதத்தோடு..
விளம்பரத்திற்கு விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கே பதில்கள் வந்தன. வந்தவைகளும் ஆத்மாநாமிற்கு திருப்தியாக இல்லை. பதில் கொடுத்த இரண்டொருவரை ஆத்மாநாம் சந்திக்கவும் செய்தார். ஆனால் விளைவுகள் எதுவும் இல்லை. இத்தனைக்கும் இந்த விஷயங்களை ஆத்மாநாம் அவரின் குடும்பத்தாருக்குத் தெரியாமல் வேறு செய்தார். இதெல்லாம் 1981-ல் நடந்தது..எல்லாமே இப்படியா இப்படியாக நீர்குமிழியாய் ஒன்றுமில்லாமலே போயிற்று. அதனால் ஆத்மாநாம் என்ற மென்மையான நண்பன் திரும்ப திரும்ப மனச்சிகைவின் தாக்குதல்களுக்கும் தீவிர சிகிச்சைகளுக்கும் ஆளாக நேர்ந்தது சமாதானப்படுத்திக் கொள்ளவே முடியாத கொடிய அவலம்தான். மனநல மருத்துவம் ஆத்மாநாம் காலடியில் தோற்று மண்டியிட்டு விட்டது. ஆத்மாநாமை அது மீட்கவில்லை.
ஆத்மாநாமை அது மீட்கவில்லை..ஆத்மாநாமும் உள்ளூர தோற்றுப்போனார். போராடும் வலிமை இல்லை. வலிமை அற்ற நாட்களில் ஆத்மாநாம் அவருடைய அப்பாவின் மரணத்தைச் சந்திக்க வேண்டி வந்தது. அவரின் மூத்த சகோரர் வேலையின் காரணமாக பெங்களூர் சென்றார். பாதுகாப்பின்மை ஆத்மாநாமின் மனதை நெரித்தது. பாதை தெரியவில்லை. முழுவதுமாக அந்தகாரம் சூழ ஆத்மாநாம் வாழ்க்கையிடம் விடை பெற்றார்.
1983 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் சந்தித்தபோது என்னிடம் சொன்னார் : "நாம ரெண்டு பேரும் ஒருநாள் சிங்கபெருமாள் கோயில் போயிட்டு வரலாம்.." நான் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன். கோயில்களுக்குப் போகிற ஈடுபாடுகள் குறிப்பிடும்படியாக அவரிடம் நான் அறிந்தவரை இருந்ததில்லை. "என்ன திடீர்னு?" என்றேன். "யாரோ என்னை அந்தக் கோயிலுக்குப் போகச் சொல்லி இருக்காங்களாம்..எங்க அம்மா சொன்னாங்க..எனக்கும் கடவுளோட அவதாரங்கள்ள நரசிம்மர் அவதாரம்தான் பிடிக்கும்..அதனாலேயும் போயிட்டு வரலாம்னு நெனைச்சேன்.." "ஓயெஸ், போலாம் ஒருநாள்.." என்றேன். ஆனால் போகவில்லை. தேதி, நாள், விருதுநகர் பயணம் என மாற்றி மாற்றி எதுவோ குறுக்கிட்டு எதுவோ கூடி வரவில்லை. சிங்கபெருமாள் கோயிலுக்கு ஆத்மாநாமை அழைத்துச் செல்ல முடியாமலேயே ஆகிவிட்டது.
சென்ற வருஷம் மே மாதம் ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தியன்று நான் என் மனைவி என் மைத்துனர் குடும்பம் எல்லோருமாக ஸ்ரீ பெரும்புதூர் கோயிலுக்குப் போயிருந்தோம். விசேஷ பூஜைகள் நடந்தன. தீபாராதனைக்காக உடையவர் ராமானுஜர் சந்நதியில் காத்திருந்தோம். தீபாராதனை முடிந்து விநியோகம். வெண்பொங்கலையும் தயிர் சாதத்தையும் பெற்றுக்கொண்டபோது இருபத்தி மூன்று வருஷத்திற்கு முன்பு நரசிம்மர் அவதாரம் பிடிக்கும் என்று ஆத்மாநாம் சொன்ன வார்த்தைகள் என் ஞாபகத்தில் நிழலாடின. அன்று நடுநிசியில் தூக்கம் வராமல் படுக்கையில் விழித்திருந்தபோது சிங்கத்தின் கர்ஜனை என் செவி அருகில் முழங்கியது.
பின் குறிப்பு : 1984 ஆம் வருடம் ஆத்மாநாம் வாழ்க்கை முற்றுப்பெறாமல் இன்றும் தொடர்ந்திருந்தால் நவீன தமிழ் கவிஞர்களான பிரமிள், கலாப்ரியா, ஞானக்கூத்தன் போன்றோரின் வரிசைக் குறிப்பில் ஆத்மாநாமும் முக்கிய இடத்தை பெற்றிருப்பார். அதற்கான அடிநாதங்களையும் வீச்சையும் அவருடைய கவிதைகள் உள்ளடக்கியிருந்ததின் அடையாளங்கள் சாதாரணமானவை இல்லை. நட்பான புளியமரம் பற்றி அவர் எழுதியதை ஒரு சிறு உதாரணமாக சுட்டிக் காட்டலாம். ஆத்மாநாமின் கவிதை பரவெளி வெறும் வார்த்தை இலக்கியப் புலமையில் இயக்கப்பட்ட மொழிவாரியம் இல்லை. அதனால்தான் 1979-ன் இறுதியில் மனச்சிதைவுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொதிநிலையிலும் அவரின் கவிதா பரவெளி ஊசிமுனையும் சேதப்படாமல் சமுத்திரமாய்நிறைவு தவறாமல் அப்படியே விரிந்து கிடந்தது. மருத்துவமனைச்சிகிச்சையினூடேயும் ஆத்மாநாமின் பேனா கவிதைகளை எழுதிற்று. இதில் மனதை கனக்க வைக்கும் துக்கம் அந்த மகா கவிஞனின் கை அவனுடைய வாழ்க்கையை எழுதிக்கொள்ள முடியாமல் அவனின் மரணத்தை எழுதிக்கொண்டதுதான்...
பின் குறிப்பு : 1984 ஆம் வருடம் ஆத்மாநாம் வாழ்க்கை முற்றுப்பெறாமல் இன்றும் தொடர்ந்திருந்தால் நவீன தமிழ் கவிஞர்களான பிரமிள், கலாப்ரியா, ஞானக்கூத்தன் போன்றோரின் வரிசைக் குறிப்பில் ஆத்மாநாமும் முக்கிய இடத்தை பெற்றிருப்பார். அதற்கான அடிநாதங்களையும் வீச்சையும் அவருடைய கவிதைகள் உள்ளடக்கியிருந்ததின் அடையாளங்கள் சாதாரணமானவை இல்லை. நட்பான புளியமரம் பற்றி அவர் எழுதியதை ஒரு சிறு உதாரணமாக சுட்டிக் காட்டலாம். ஆத்மாநாமின் கவிதை பரவெளி வெறும் வார்த்தை இலக்கியப் புலமையில் இயக்கப்பட்ட மொழிவாரியம் இல்லை. அதனால்தான் 1979-ன் இறுதியில் மனச்சிதைவுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொதிநிலையிலும் அவரின் கவிதா பரவெளி ஊசிமுனையும் சேதப்படாமல் சமுத்திரமாய்நிறைவு தவறாமல் அப்படியே விரிந்து கிடந்தது. மருத்துவமனைச்சிகிச்சையினூடேயும் ஆத்மாநாமின் பேனா கவிதைகளை எழுதிற்று. இதில் மனதை கனக்க வைக்கும் துக்கம் அந்த மகா கவிஞனின் கை அவனுடைய வாழ்க்கையை எழுதிக்கொள்ள முடியாமல் அவனின் மரணத்தை எழுதிக்கொண்டதுதான்...
(ஆத்மாநாம் பற்றி ஸ்டெல்லா புரூஸ் எழுதிய இக் கட்டுரை முடிவுற்றது. ஆத்மாநாம் பற்றி இன்னும் சில விபரங்கள் வரும் நாட்களில் தொடரும்)
Comments
"தற்கொலை, வன்முறை, விபத்து போன்றவற்றால் மரணத்திற்குள்ளாகிற ஆன்மா சில கொடிய தளங்களில் அல்லல்பட்டு அலைந்தாக நேரிடும். அவை தாங்க முடியாத குரூரமானவை. " என்று எழுதிய ப்ருஸ், தானே தற்கொலை செய்துகொண்டது இன்னொரு பெரிய சோகம். இந்தப் பிரபஞ்சம் விவரிக்கமுடியா மர்மங்களால் ஆனது. ஆழ்மனமும் அப்படியே என்று தோன்றுகிறது.
அனுஜன்யா
மிக நெகிழ்ச்சியான கட்டுரை. மன குவிமையத்தை சிதறடிக்கும் ஸ்டெல்லா பூரூஸின் ஆத்மநாமை பற்றிய அனுபவங்கள் நிலைக்கொள்ளசெய்கிறது. பிரபஞ்ச வெளியில் மிதக்கும் எழுதப்படாத ஆத்மநாமின் கவிதை வரிகள் நோக்கி மனம் செல்கிறது. எழுதப்பட்ட வரிகள் ஆத்மநாம் என்ற ஆளுமை பிரும்மாண்ட (நரசிம்ம)அவதாரமாக என் முன் இருக்கிறார்.
வாசு