27.10.09

எதையாவது சொல்லட்டுமா....6

போன 84வது நவீன விருட்சம் இரங்கல் செய்தியாக இருந்ததாக எல்லா நண்பர்களும் சொல்லிவிட்டார்கள். இதனால் 50 ஆண்டு கவிதைக் கொண்டாட்டமாக இல்லாமலும் போய்விட்டதாக சிலர் சொன்னார்கள். உண்மையில் இரங்கல் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. ஆனால் இதழில் கவிதைகள் சற்று அதிகம்தான். 160 பக்கம் 20 ரூபாய் என்பது ஆச்சரியமான விலை. பலர் நவீன விருட்சத்தை வாங்கிப் படித்தார்கள்.

எப்போது வரும் க்ரோம்பேட்டை ரயில் நிலையத்தில் மட்டும் 20 பிரதிகளுக்கு மேல் போன இதழ் விற்பனை ஆகி உள்ளது. இது மகிழ்ச்சியான விஷயம். ஏன் என்றால் அங்கு 5 பிரதிகள் கூட விற்பனை ஆகாது.

பலர் இதழைப் பாராட்டியும் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் சொன்னார்கள். (சிறு பத்திரிகை என்றால் கடிதம் எழுத மாட்டார்கள்).
எனக்குத் தெரியாத பல புதியவர்கள் படைப்புகளை அனுப்பிய வண்ணம் உள்ளார்கள். அவர்களுக்கு என் நன்றி.

ஒரு காலத்தில் நவீன விருட்சம் ஆரம்பிக்கும்போது படைப்புகளுக்காக எல்லோரிடமும் கேட்டுக்கொண்டே இருப்பேன். அந்த நிலை முற்றிலும் மாறி விட்டது. வலைதளத்தில் பலர் தெரியாத புதியவர்கள் படைப்புகளை கொட்டுகிறார்கள். சிலர் எழுத்துக்களை மறந்து விடுகிறேன்.

எல்லோரும் தீவிர எழுத்தை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். கவிதைகளைத் திறமையாக எழுதுகிறார்கள். கதைகளை விதம் விதமாக தருகிறார்கள். இந்தப் புதியவர்களின் வேகம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
எந்தப் படைப்பையும் எப்படி எழுத வேண்டுமென்ற கோட்பாடு என்றெல்லாம் கிடையாது. ஆனால் சரியாகப் புரிந்துகொண்டு எழுதுகிற தன்மை புதியவர்களிடம் உள்ளது.

பாரதியாரின் வசனக் கவிதைதான் புதுக்கவிதை உருவாகக் காரணம். எந்தப் படைப்பும் ஒன்றைப் பார்த்துதான் இன்னொன்று உருவாகிறது. பாரதி வசனக் கவிதை மட்டும் எழுதவில்லை என்றால், இன்றைய புதுக்கவிதை உருவாகி இருக்குமா?

க.நா.சு ஒருபடி மேலே போய் புதுக்கவிதை எளிதில் வாசிக்கும்படி உரைநடை பாணியில் எழுதி அசத்தி விட்டார்.

இதை புதியவர்கள் நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். யார் அவர்களுக்கு இதையெல்லாம் சொல்லிக் கொடுத்தது. தானாகவே தெரிந்து கொண்டார்களா? இவர்கள் படைப்புகளைப் பிரசுரிப்பது மிக முக்கியமான ஒன்று. நான் ஒவ்வொரு முறையும், வலைத்தளத்திலும், நவீன விருட்சம் இதழிலும் எப்படியாவது கொண்டு வந்து விடுகிறேன்.

நவீன விருட்சம் 85வது இதழை வரும் 3 நாட்களில் தயாரிக்க வேண்டும். முடியுமா என்று பார்க்கிறேன். யார் படைப்புகளாவது விட்டுப் போயிருந்தால் ஞாபகப்படுத்தவும்.

25.10.09

சில கவிதைகள்


தூக்கி எறியும்
பழைய செருப்புகளும்
புதிதில்
ஆசையாக வாங்கியதுதான்

*
வரும்போது
இனிதே வரவேற்று
போகும்போது
இனிதே வழியனுப்பும்
இரு பக்கங்கள்
வாய்க்கிறது..
ஊர் எல்லை
பெயர்ப்பலகைக்கே.
*
ஊருக்குப்போயிருக்கும்
மகனின்
மழலைச்சிரிப்பை
எண்ணுந்தோறும்
தனிமையில் விரக்தியாய்
சிரித்துக்கொள்கிறான்

அதற்கும் பெயர்
சிரிப்புத்தானா?
*
கைகளேந்திப் பெற்றுக்கொண்டு
திரும்பி நடக்கும்
அந்தக் கண்களை
உற்று நோக்குங்கள்
திரளும் கண்ணீர்


24.10.09

எதையாவது சொல்லட்டுமா....5நவம்பர் 2 ஆம் தேதியிலிருந்து நான் கும்பகோணம் பக்கத்தில் உள்ள எந்த ஊரில் இருப்பேன் என்பது தெரியது. எனக்குப் பிடித்த ஊரான மாயவரத்தில் இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். இந்த கம்ப்யூட்டரெல்லாம் இங்கயே வைத்துவிட்டுப் போய்விடுவேன். சில காலம் அங்கு பழகி, வேறு கம்ப்யூட்டரில் என்னை நுழைத்து திரும்பவும் எல்லாம் கொண்டு வர வேண்டும்.

இந்த முறை எனக்கு அங்கு செல்லவே பிடிக்கவில்லை.

ஏன் பிடிக்கவில்லை? என் அப்பாவிற்கு வயது 88 ஆகிறது. அவரை விட்டுப் போவது ஒவ்வாத விஷயமாக எனக்குத் தோன்றுகிறது. என் அப்பா என்னை மாதிரி ரொம்ப சாதுவான மனிதர். நல்ல மனிதர். யாருடன் சண்டைக்குப் போக மாட்டார். கொடுத்ததைச் சாப்பிடுவார். பலருக்கும் உதவி செய்யும் நோக்கம் உடையவர். 88வது வயதில் கூட வெற்றிலைப் பாக்குக் கூட போட மாட்டார்.

எனக்குப் பிடித்த ஊரான மாயூரம் கிடைத்தால், நான் என் அப்பாவை சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைப் பார்த்துவிட்டு திங்கள் மாயூரம் போவேன். ஆனால் ஆண்டவன் சித்தம் எப்படி இருக்கும் என்று தெரிவில்லை.

எனக்கும் 56 வயதாகிறது. என் மனைவி, அப்பாவை விட்டுவிட்டுத்தான் செல்லவேண்டும். மடிப்பாக்கத்தில் இருக்கும் என் பெண்ணை போனில்தான் பேசமுடியும் நினைத்தால் போய்ப் பார்க்க முடியாது.

எனக்கு சர்க்கரை நோய் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேல் இருக்கிறது. உயர் ரத்த அழுத்த நோயும் கூட சேர்ந்து இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த என்னால் முடியாமல் கூட போய்விடுகிறது. சமீபத்தில் நான் எடுத்த ரிப்போர்ட்டில் சர்க்கரை அளவு கடந்து போயிருந்தது. தனியாக இருக்கும் பட்சத்தில் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அப்பாவிற்கு சர்க்கரையும் இல்லை. உயர் ரத்த அழுத்தமும் இல்லை.

என்ன புத்தகங்கள் படிக்கப் போகிறேன்? எது மாதிரி எழுதப் போகிறேன் என்பது பற்றியெல்லாம் யோசிக்க வேண்டும். நவீன விருட்சம் எப்படியாவது கொண்டு வர வேண்டுமென்பதில் தீவிரமாக இருப்பேன்.

எப்போதும் நான் வெளியிடும் புத்தகங்கள் 100 பிரதிகள் கூட விற்பதில்லை. விற்பனையாளர்கள் பணம் தருவதில்லை. நானே ஏமாந்து இலவசமாகப் புத்தகங்களைக் கொடுத்து விடுவேன். இந்த முறையும் 4 புத்தகங்கள் கொண்டு வருகிறேன். ஒரு புத்தகம் யூ ஜி கிருஷ்ணமூர்த்தியின் 'இயல்பு நிலை' . மொழி பெயர்த்தவர் திறமையானஎன் நண்பர். இன்னொரு புத்தகம் ஞானக்கூத்தனின் கவிதைக்காக என்ற புத்தகம். கவிதைகளைப் பற்றிய நுணுக்கம் நிரம்பியகட்டுரைகள் அடங்கிய புத்தகம். மூன்றாவது புத்தகம் சில கதைகள் என்ற என் குறுநாவல்கள் தொகுதி. நான்காவது புத்தகம். பிரமிளின் விடுதலையும் கலாச்சாரமும் என்ற மொழிபெயர்ப்புப் புத்தகம்.

நவீன விருட்சம் வெளிவந்து 21 ஆண்டுகள் முடிந்து 22 ஆண்டின் துவக்கத்தில் 85வது இதழ் வெளிவருகிறது. கையைப் பிசைந்து கொண்டிருக்கிறேன். மாற்றல் ஒரு பக்கம். சக்கரை நோய் இன்னொரு பக்கம். யாராவது உதவி செய்வார்களா என்று போய்க் கேட்டால் எப்படிப் பேசுவது என்ன பேசுவது என்று கூட தெரியவில்லை. வயது கூடிக்கொண்டே போகிறது. வினயம் தெரியவில்லை. சரி அது போகட்டும் நடப்பது நடக்கட்டும். நாராயணன் செயல் என்பார் என் அப்பா. ஒரு விதத்தில் அப்படித்தான் இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

டெரகோட்டா சிற்பங்கள்


கொஞ்சம் களிமண் எடுத்துக்கொள்ளுங்கள்
கெட்டியாக பிசையவேண்டும்
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர்
நீங்கள் விரும்பும் வடிவத்தின்
அச்சில் வார்க்கவும்
அடைக்கப்பட்ட அறையில்
புத்தகங்களை எரித்து
க‌ளிமண்ணைப் போட்டுவிடுங்கள்
டாக்டர் பொம்மையோ
கணினி வல்லுனரோ
விரும்பும் சிற்பங்கள் தயாராகும்.
களிமண்ணின் விருப்பத்தை
மட்டும் கேட்காதீர்கள்.


குழந்தைகள் உலகம்


குழந்தைகள் உலகம்

தனது நுழைவாயில் கதவுகளைத் திறந்து

குதூகலத்துடன் என்னை வரவேற்றது

அங்கே

ஆனந்தமும், ஆச்சர்யங்களும்

ஒவ்வொரு மணற்துகள்களிலும்

பரவிக்கிடந்தன

காற்றலைகளில்

மழலைச் சிரிப்பொலி

தேவகானமாய் தவழ்ந்து

கொண்டிருந்தது

மோட்ச சாம்ராஜ்யம்,

தனக்குத் தேவதைகளாக

குட்டி குட்டி அரும்புகளை

தேர்ந்தெடுத்திருக்கின்றது

அங்கு ஆலயம் காணப்படவில்லை

அன்பு நிறைந்திருக்கின்றது

காலம் கூட கால்பதிக்கவில்லை

அவ்விடத்தில்

சுயம் இழந்து

நானும் ஒரு குழந்தையாகி

மண்டியிட்டு அவர்கள் முன் நிற்கின்றேன்

அந்தக் கணத்தில்

மரக்கிளையொன்று முறிந்து விழுகையில்

அதைக் கொண்டு இன்னொரு

விளையாட்டு ஆரம்பமாகிவிடுகிறது

எங்கு நோக்கினும்

முடமாக்கப்பட்ட பொம்மைகள்

உடைந்த பந்துகள்

கிழிந்த காகிதக் குப்பைகள்

சேற்றுக் கறை படிந்த சுவர்கள்

களங்கமில்லா அரும்புகள் எனக்கு

கற்றுத் தந்தது இவைகள்

வீட்டிற்குத் திரும்பியதும்

ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்த

அலமாரி பொருட்களையெல்லாம்

ஒன்றுவிடாமல் கலைத்துப்போட்டேன்,

தரையில் விசிறி எறிந்தேன்

ஏக்கத்தோடு

ஊஞசலின் மீது அமர்ந்தேன்

எனது வீட்டை அங்கீகரிக்குமா

குழந்தைகள் உலகம் - என்று

யோசனை செய்தபடி...


மரணம் ஒரு கற்பிதம்
நேற்று ஒரு கார்டு வந்தது. ..''மேட்டூரில் எனது தந்தை சம்பந்தம்
போனவாரம் சனிக்கிழமை சிவலோகப்ராப்தி அடைந்தார் ''
என்று தெரிவித்து மேலும் சில விவரங்களுடனும் கருப்புக்கறை தடவி
இப்படிக்கு சிவராமன் '' என்று கையெழுத்திட்டிருந்தது.

கார்டில் கண்ட விஷயம் வெகு நேரம் புரியாமல் இருந்தது.
யார் இந்த சம்பந்தம்... யார் இந்த சிவராமன் இவர்களுக்கும்
எனக்கும் என்ன சம்பந்தம் என்ன சொந்தம்.. இவர்கள் நண்பர்களா
சொந்தக்காரர்களா.. அல்லது பங்காளிகளா ?

வெகுநேரம் குழம்பிய பின் வயதான என் தாயார் மூலம் ஓரளவு
அவர்களின் அடையாளங்கள் எனக்கு லேசாக தெரியவந்தது.
அவர்கள் என் காலஞ்சென்ற தந்தையாரின் பங்காளிகளின்
வம்சாவளிகள்.. அவர்களை நான் பிறந்ததிலிருந்தோ பிறந்து சில
ஆண்டுகளுக்குப் பிறகோ பார்த்ததேயில்லை.

என்னைப் பொறுத்த வரையில் சம்பந்தம் நாட்டின் எத்தனையோ
மக்களைப் போல் எனக்கு சற்றும் தொடர்பில்லாமல் மேட்டூரில்
எங்கோ வாழ்ந்து கொண்டிருப்பவர். இன்று இறந்து போயிருப்பவர்...

இந்த யதார்த்தத்தில் திரு சம்பந்தத்தின் சோகமான
மரணம் என்னை எந்த வகையில் பாதிக்கக் கூடும் ..ஏதோ ஒரு
மனிதனின் இழப்பு என்ற தகவலைத் தாண்டி ?
இன்னும் யோசித்துப் பார்த்தால் என்னைப் பொறுத்தவரையில்
அவர் எப்போதுமே இறந்தவர் தான்

ஒருவரின் சாவு என்பது அவருக்கும் நமக்கும் உள்ள அன்றாட
நெருக்கத்தையும் சார்புகளையும் உறவையும் பொறுத்தே
முக்கியத்வம் பெறுகிறது..

நமது குடும்பம் காலப்போக்கில் குடும்பங்களாக விரிவடைந்து
அவைகள் மேலும் உபகிளைகளாக பல ஊர்களில் படர்ந்து
பல்கிப் பெருகும் போது நமக்கு ஆரம்பத்தில் தெரிந்த குடும்ப
உறவுகள் பிறகு வெறும் நட்புக்களாகி பிறகு வெறும் அறிமுகங்களாக
பிறகு அதுவும் நீர்த்துப் போய் அவர்கள் அதிகம் பாதிக்காத எங்கோ
வாழ்கின்ற நபர்களாக மாறிப் போய்விடுகிறார்கள்

இந்த மாற்றங்களளே ஒரு வித மரணமாக அல்லது மரணத்தின்
வெவ்வேறு வகையான சாயல்களாக எனக்குத் தோன்றுகிறது.

* * * **

சில வருஷங்களுக்கு முன் என் சகோதரர் இறந்து போனார்.
அவருக்கு உயிருக்கு உயிரான நண்பர்கள் இருந்தார்கள்.

சகோதரர் இறந்து போன சில தினங்களுக்குப் பிறகு ஒரு
நண்பர் வாசலில் வந்து கதவைத் தட்டினார்.. திறந்தேன்...

''ராமனாதன் இல்லையா..? '' என்று கேட்டுக் கொண்டே உள்ளே
வந்தார். அவர் வெளியூருக்கு போய் விட்டு பத்து நாட்களுக்கு பிறகு
அப்போது தான் வருகிறார்.. நாங்கள் அவர் முகத்தை பார்த்துக் கொண்டு
எப்படி இதை சொல்வது என்று தெரியாமல் வாயடைத்துப் போய் நின்றோம்..

அவருக்கு எங்கள் மௌனம் அர்த்தமாகவில்லை. அந்த சமயம் எங்கள்
அண்ணி தலை விரிகோலமாக பொட்டு இல்லாமல் வெளியே வந்து
எட்டிப் பார்த்து நண்பரைப் பார்த்தவுடன் ''ஓ''வென்று அழுதார்.. ''ஒங்க நண்பர் போய்ட்டார் ''........
வந்த நண்பர் ஒரு நிமிஷம் திகைத்துப் போய் தலையைப் பிடித்துக்
கொண்டு கீழே தடாலென்று விழுந்தார்.. ''அய்யோ அய்யோ..' என்று
கதறினார்.. அவரால் அந்த அதிர்ச்சியை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை

''ஊர்லேருந்து வந்தவுடனெ இன்னிக்கு கண்டிப்பா வந்து பாப்பேன்னு
சொல்லியிருந்தேனே..இப்படி என்னை ஏமாத்திட்டு போய்ட்டானே ! இனிமே
அவன் மாதிரி ஒரு மனுஷனை எங்கெ போய் பாப்பேன்..'' என்று வாய் குளரி
புலம்பினார்... வெகுநேரம் ..

நண்பனின் இந்த நிரந்தரப் பிரிவு ஈடுசெய்ய முடியாத இழப்பாக
அவருக்கு தோன்றியது.

மரணம் அதன் முழு உக்கிரத்துடன் அவரை துடிக்க வைத்துக் கொண்டிருந்தது.

சற்று நேரம் விம்மி அழுத பின்பு மெள்ள தாங்கி எழுந்தார்.

''ராமனாதனுக்கு இந்த புஸ்தகத்தை கொடுக்கலாம்னு ஊர்லேருந்து வாங்கிண்டு வந்தேன்..இதை என் ஞாபகமா அவன் போட்டொ அடியிலெ வைச்சுடுங்கோ..
என்று ஒரு புஸ்தகத்தை மேஜையின் மேல் வைத்தார்..
அதன் தலைப்பு ''Life is beautiful ''

** ** ** **
தான் இறந்து போன பிறகு
நண்பர்களில் யார் யார் எந்த எந்த விதமாக அனுதாபத்தை தெரிவிக்கிறார்கள்
விரோதிகள் எவ்விதம் சந்தோஷப்படுகிறார்கள்
என்று அறிந்து கொள்ளும் ஆவலுடன் தான் இறந்து விட்டதாக ஒரு செய்தியை
பேப்பரில் போட்டு விட்டு ஒளிந்து கொண்டு வேடிக்கை பார்த்தான் ஒரு மேதை
அவன் பெயர் P. T Barnum அமெரிக்காவில் ஸர்க்கஸ் கலையில் புரட்சிகள்
செய்த ஒரு வித்யாசமான மனிதன் ..

மனித உள்மனக் கருத்துகளை கிளறிப் பார்க்க மரணம் இவனுக்கு
ஒரு வசதியான நாடகமாக அமைந்தது....
** ** **

ஒரு பெரிய அரசியல் தலைவர் ஆஸ்பத்திரியில் அவசரப்
பிரிவில் சேர்க்கப் பட்டு தீவிரமான சிகிச்சையில் உயிரோடு
போராடிக் கொண்டிருக்கும் போதே அவர் மரணத்தை ஆவலுடன்
எதிர்பார்த்த சில அரசியல் பிரமுகர்கள் அவசர ஆத்திரத்தால்
அந்த தலைவரின் இரங்கல் செய்தியை பார்லிமெண்டில் அறிவித்துவிட்டார்கள்.
பிறகு அல்லோல கல்லோலமாகி அந்த தவறான இரங்கலுக்காக
மன்னிப்புக் கோரப்பட்டது; சில ஆண்டுகளுக்கு முன்னால்..
இந்த சம்பவம் பலருக்கும் இப்போது நினைவுக்கு வரலாம்...

மரணம் சிலரை சில சமயம் முட்டாளாக்கி விளையாடுகிறது.
** ** **
கடைசியாக மரணத்தை பற்றிய இன்னொரு பரிமாணத்தை
சொல்லும் என் சிறிய கவிதை ஒன்று

''மரத்தை விட்டுப் பிரிந்து
மலர்கள்
மண்ணில் மெத்தென்று விழுகின்றன;
சாவிலிருந்து துக்கத்தை
சத்தமில்லாமல் பிரித்தவாறு. ''

22.10.09

தாமதமான மனிதாபிமானம்...நடுச்சாமம் சற்றே நகர்ந்த
அதிகாலைச் சாலையில்
விமானதளம் விரைகையில்
குறுக்காக கிடந்த
அந்த சாலையோரச்சடலத்தின்மேல் படாமல்
வண்டியை ஓட்டுனரும்
பார்வையை நானும் திருப்பிய லாவகம்...
ஊர் வந்திறங்கி
வேலை முடித்து
வந்த ஊர் பிரசித்தமெல்லாம்
வாங்கிபோட்டு விமானம் ஏறிஇறங்கி
வீடு திரும்புகையில் -
காலையில் காரை நிறுத்தியிருக்கலாமோ?

நினைவின் கணங்கள்

பெரும்பெரும் வலிநிறை

கணங்களுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும்

நகர்ந்து வந்த கணங்கள்

சில பொழுதுகளில் அழகானவைதான்

புன்னகை தருபவைதான்

ஒரு தனித்த அந்தி

எல்லாக் கணங்களையும்

விரட்டிக்கொண்டு போய்

பசுமைப் பிராந்தியமொன்றில்

மேயவிடுகிறது

நீ வருகிறாய்

மேய்ச்சல் நிலத்திலிருந்த

கணங்களனைத்தையும் உன்னிரு

உள்ளங்கைகளிலள்ளி உயரத்தூக்கி

கீழே சிதறட்டுமென விடுகிறாய்

எல்லாம் பள்ளமென ஓடி

நினைவுகளுக்குள் புதைகிறது

மீளவும்

நினைவின் கணங்கள்

மலையிறங்கக் காத்திருக்கின்றன

19.10.09

எதையாவது சொல்லட்டுமா....4

3வது இலக்கியக் கூட்டம் 18.10.2009 அன்று வழக்கம்போல் எல்எல்ஏ பில்டிங்கில் நடந்தது. இந்த முறை அஜயன்பாலாவும், தமிழ்மணவாளனும் கலந்துகொண்டார்கள்.

சினிமாவைப்பற்றிய அனுபவத்தை அஜயன்பாலா பகிர்ந்துகொண்டார்.

எல்லோருக்கும் போன் ஒரு முறை செய்வது. பின் இன்னொருமுறை போன் செய்வது. இதுதான் கூட்டம் நடத்தும் முறை. பத்திரிகையிலோ வேறு எங்கேவோ விளம்பரம் கிடையாது.

அஜயன்பாலா சினிமாவைப் பற்றிய தன் அனுபவத்தைப் பேசினார். எனக்குப் பல ஆண்டுகளாக அஜயன்பாலாவைத் தெரியும். அவர் ஒரு பிடிவாதக்காரர். சினிமாவில் தன் தடத்தைப் பதிய வைக்கவேண்டுமென்ற வைராக்கியம் மிக்கவர். இதற்காக பல இன்னல்களை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். சினிமாவை விட அவரை அதிகமாகக் கவர்வது சிறுகதை எழுதுவதுதானாம். இதைக் கேட்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் முதல் சிறுகதை நவீன விருட்சத்தில்தான் வந்தது. ஒரு உதவி டைரக்டராக சினிமாவில் நுழைய அவர் பட்ட சிரமங்களை சுவாரசியமாகப் பேசினார். எனக்கு அதைக் கேட்க கேட்க ஆச்சரியமாக இருந்தது. வேலைக்குக் கட்டாயம் போகக்கூடாதென்று முடிவெடுத்து, டிகிரி சர்டிபிக்கேட்டை போய் வாங்கக்கூட இல்லையாம். வாங்கினால் வேலை கொடுக்கும் அலுவலகத்தில் போய் பெயர் பதிவு செய்ய வீட்டிலுள்ளவர்கள் தொந்தரவு செய்வார்கள் என்ற அச்சம் அவருக்கு;. அவர் சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். சில படங்களில் உதவி இயக்குனராகவும் இருந்திருக்கிறார். ஒரு படம் அவரே டைரக்ட் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். உலகத் தரத்திற்கு தமிழ் படங்களை உயர்த்த வேண்டுமென்ற அசையாத நம்பிக்கை வைத்திரு;கிறார்.. அவர் முயற்சிக்கு வாழ்த்துகள்

தமிழ் மணவாளன் நீண்ட கட்டுரை ஒன்றை எடுத்து வாசிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. கவிதையை அவர் எப்படிப் புரிந்து கொண்டாரோ அதை தாளில் எழுதி உள்ளார். அதை அப்படியே வாசித்தார். கவிதையைக் குறித்து அவர் புரிந்துகொண்ட விதமாகவும் ஒட்டுமொத்த கட்டுரையாகவும் அது தோன்றியது. அவர் படித்த விஷயத்தைப் பார்த்தவுடன், எனக்கும் அதுமாதிரி ஒன்றை தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டுமென்று தோன்றியது.
கவிதை எழுதும் ஒவ்வொருவரும் கவிதையைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை ஒரு தாளில் பதிவு செய்து கொள்வது நல்லது. எதை அவர் கவிதையாக நம்புகிறார் என்பது முக்கியம்.

கவிதையைக் குறித்து உரையாடும் போது பிரம்மராஜன், ஜெயபாஸ்கரன், சுகுமாரன் கவிதைகள் குறித்து பேச்சு திரும்பியது. லாவண்யா,"நான் பிரம்மராஜன் கவிதை ஒன்றை 50 தடவைகள் படித்தேன். அதன்பின்தான் புரிந்தது," என்றார். உடனே அது குறித்து பலத்த ஆட்சேபணை எழுந்தது. விஜய மகேந்திரன், "லாவண்யாவே இப்படி சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது,"என்றார்.

அக் கூட்டத்தில் ஆச்சரியம். சுவாமிநாதன் என்பவர். இவரை இனி சுவாமிநாதன் என்று குறிப்பிடுகிறார்கள். அவர் பல விஷயங்களைக் குறித்து ஆழமான கருத்துக்களை வைத்திருக்கிறார். அஜயன் பாலாவின் முயற்சிக்கு வாழ்த்துத் தெரிவித்தார். சினிமா படங்களைப் பற்றி ஆழமான அறிவை வைத்திருக்கிறார். சின்ன சின்ன நாடுகளெல்லாம் 5 படங்கள் தயாரித்தாலும், எல்லோரும் பேசும்படி செய்துவிடுகிறார்கள். தமிழில் அது சாத்தியமே இல்லை என்றார். ஆனாலும் அஜயன் பாலா ஒரு இளைஞர். அந்தக் கனவோடு இருக்கும் அவருக்கு வாழ்த்துகள் என்றார்.

அந்தக் காலத்தில் இதெல்லாம் ஒரு இயக்கமாக இருந்தது. சினிமாவுக்கென்று, நாடகத்திற்கென்று, பத்திரிகைக்கென்று. ஆனால் இதெல்லாம் இப்போது சாத்தியம் இல்லாமல் போய்விட்டது என்றார் பாரவி. தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ளும் தேவகோட்டை வா மூர்த்தி, பாரவி, எஸ். சுவாமிநாதனைப் பாராட்டாமல் இருக்க முடிவில்லை.

கூட்டத்தில் பேசியதை டேப்பில் பதிவு செய்திருக்கிறேன். கேட்டால் நன்றாகவே இருக்கும்.

15.10.09

இதயத்தில்


என்னுடைய நிறம்
கருப்புமில்லாத
வெளுப்புமில்லாத
சாம்பல் நிறம்
என் இதயப் பகுதியில்
பச்சை நிறத்தில்
ஒரு முதலை இருக்கிறது
வெகுநாட்களாக நானும்
இந்த முதலையும்
காத்துக்கிடந்தோம்
இருபத்தைந்து வயது யுவதி
என்னை ஸ்பரிசித்தாள்;
இப்போது அவள் வீட்டில் நான்;
வயது முதிர்ந்த அவரை
என்னுடன் அனுப்புகிறாள்
வெளியே செல்லும் எங்களுக்குக்
கையசைத்து விடையளிக்கிறாள்
விரைந்த வாகனத்தின்
தகரத்தில் மாட்டிய என் கை
குருதிப் புனலில்
நினைவிழந்த பெரியவருக்குக்
குழாயில் சொட்டும் இரத்தம்
எல்லோரும் பார்த்துக்கொண்டே இருக்கிறோம்
தொங்கியபடி நானும்
நாவில் குருதியொழுகும் முதலையும்
குதிரை இதயத்துடன்
வந்தவனுடன் அவளும்

முன்னாள் காதலிகள்சொல்லக் கூடாத பொழுதொன்றில் தொடங்கினேன்
எனக்குப் பத்துப் பெண்குழந்தைகள் வேண்டும்
முன்னாள் காதலிகள் பெயர்களை வைக்கவென
மனதிற்குள் சேர்த்துக்கொண்டேன்.
எனக்கு ஆண்குழந்தைதான் வேண்டும்
அதுவும் ஐந்து என
அவள் சொல்கையில்
மெதுவாய்
முழிக்கிறது ஒரு மிருகம்
o

கவிதை (1)அலுவலகம்

செல்லும் வழியில்

அடிபட்டு

இறந்திருந்தது ஒரு செவலை நாய்

விரையும் வாகனங்களின்

குழப்பத்தில் சிக்கி

இறக்க நேரிட்டிருக்கலாம்

நாலைந்து நாட்களில்

தேய்ந்து கரைந்தது

இறந்த நாயின் உடல்

காக்கைகள் கொத்தி தின்ன

ஏதுவில்லை

வாகனங்கள்

நெடுகித் தொலையும்

பெருவழிச்சாலையில்

எப்போதும்

பிறரின் மரணங்கள்

ஒட்டியிருக்கிறது

நமது பயணத்தடங்களில்.

பதட்டம்..சகபயணி ஒருவன்
சட்டைப் பாக்கெட்டிலிருந்து
எடுத்த
மூக்குக்கண்ணாடியோடு
மாட்டிக்கொண்டபடி
வந்த பேனாவை மீண்டும்
சரியாகப் பொருத்தவில்லை - தன்
சட்டைப் பாக்கெட்டில்.

பதட்டம் கூடிக் கொண்டிருந்தது
பார்த்துக்கொண்டிருந்த என்னுள்.

8.10.09

எதையாவது சொல்லட்டுமா....3

காலை 7.30 மணியிலிருந்து இரவு 7.30 மணிவரை என்ற தலைப்பில் எழுதலாம் என்று நினைத்தேன். தலைப்பு பொதுவான தலைப்புதான் அதில் மாற்றம் இல்லை. ஆரம்பத்தில் எனக்கு பாரமௌன்ட் பப்ளிஸிட்டியில் வேலை. நாள் ஒன்றுக்கு மூன்று ரூபாய் சம்பளம். வெள்ளிக்கிழமை மட்டும் பூஜை முடிந்தபிறகு ரூ.2.50 பைசா கொடுப்பார்கள். வாங்கிக்கொண்டு எங்கள் வீட்டு தெருமுனையில் உள்ள டீ கடையில் சுண்டல் சாப்பிடுவேன். நான் டீ கடையில் சுண்டல் சாப்பிடுவது என் தம்பிக்குப் பிடிக்காது. பின் பள்ளிக்கரணை என்ற இடத்தில் கார்டெக்ஸ் அடுக்குபவனாக எனக்கு வேலை. மாதம் ரூ.205 சம்பளம். என்னை வேலைக்கு எடுத்துக்கொள்ள சிபாரிசு செய்தவர் நான் அதிகமாக தலை முடி வைத்திருந்தால் பிடிக்காது. பாக்டரி பக்கத்தில் இருக்கும் டீ கடையில் டீ குடிப்போம்.

இந்த வேலைக்கு நான் காலையில் 7.30 மணிக்கு சைதாப்பேட்டையில் பஸ் பிடிக்க வருவேன். சைதாப்பேட்டை ஸ்டேஷனலில் உள்ள ஒரு கடையில் செய்தி வாசிக்கும் சப்தம் கேட்கும். செய்திகள் வாசிப்பது....சரோஜ் நாராயணசாமி என்று ரேடியோவில் கேட்கும் பின் நான் பள்ளிக்கரணை பாக்டரி போய்விட்டுத் திரும்பும்போது சைதாப்பேட்டையில் அதே செய்திகள் வாசிப்பது ரேடியோவில் கேட்கும். என்னடா வாழ்க்கை என்று தோன்றும். சம்பளம் குறைச்சல். ஆனால் உழைப்பு அதைவிட அலைச்சல் அதிகம். சம்பாதிக்கிற ஒவ்வொருவருக்கும் சம்பாதிக்கிறோம் என்ற கர்வம் இருக்கும். குறைச்ச சம்பளம் வாங்கினாலும் என்னிடமும் கர்வம் இருக்குமென்று தோன்றுகிறது.

வேறு ஒரு வேலைக்குத் தாவும்போது, பள்ளிக்கரணை வேலை போய்விட்டது. பெரிய இழப்பு ஏற்பட்டதுபோல் நான் ரொம்பவும் வருத்தப்பட்டேன். இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது. அப்போதுதான் நான் தீவிர எழுத்திற்கு அறிமுகம் ஆகிக்கொண்டிருந்தேன். ராயப்பேட்டையில் இருந்த க்ரியாவில் அடிக்கடி புத்தகம் வாங்கப் போவேன். சி மணியின் 'வரும் போகும்' கவிதைப் புத்தகத்தைப் பார்ப்பேன். எனக்குத் தோன்றும் இந்தக் கவிதைப் புத்தகம் போகவே போகாது எப்போதும் க்ரியாவில் இருந்துகொண்டே இருக்குமா என்று.

எனக்கு அடுத்த வேலை வங்கியில் கிடைத்துவிட்டது. பாருங்கள் நாம் நினைப்பதுபோல்தான் நமக்கு எல்லாம் வாய்க்கிறது. நான் பாரத வங்கிக் கிளையில் டிடி வாங்கச் செல்லும்போது அங்கே உள்ளே உட்கார்ந்திருப்பவர்களைப் பார்த்து பொறாமைப் படுவேன். எனக்கும் அவர்களைப் போல் ஒரு தேசிய வங்கியில் தட்டச்சர் வேலை. ஐந்தாவது மாடியில் வேலை. ரெமின்டிங் மிஷினில் எல்லோரும் தட்டு தட்டென்று தட்டுவோம். அதில் பரத் என்ற வித்தியாசமான நண்பர். அவர் லா.ச.ரா கதைகளை அப்படியே ஒப்பிப்பார். ஆச்சரியப்பட்டுப் போவேன். எனக்கோ லா.ச.ரா கதைகளை முழுக்கப் படிக்க முடியாது. ஏன் மௌனியை ரசிப்பதுபோல் லா.ச.ராவை ரசிக்க முடியாது. மிகைப் படுத்தப்பட்ட உணர்வுகளை லா.ச.ரா அள்ளித் தெளிக்கிறார் என்று நினைப்பேன். மேலும் அவருக்கு கவிதைகள் மீது அக்கறை இல்லை. நா மு வெங்கடசாமி நாட்டார் என்பவருடைய எழுத்தும் என்னால் ரசிக்க முடியாது.

நான் வங்கியில் சேர்ந்தபோதுதான் ஜே.கிருஷ்ணமூர்த்தி புத்தகம் படிக்கத் தொடங்கினேன். வருடாவருடம் சபரி மலைகோயிலுக்குப் போகும் (போய்விட்டு வந்து அளப்பான்) ரவி என்கிற நண்பன், நான் கொடுத்த ஜே கிருஷ்ணமூர்த்தி புத்தகத்தைப் படித்துவிட்டு, சபரிமலை கோயிலுக்குப் போவதை நிறுத்திவிட்டான். என்னிடம் வாங்கிய புத்தகத்தைப் படித்துவிட்டு எனக்கு அறிவுரை கூற ஆரம்பித்துவிட்டான். அலுவலகம் முழுவதும் அவன் பேச்சில் மயங்காதவர்கள் இல்லை.

வங்கியில் சேர்ந்தபிறகுதான் நான் கதை எழுத ஆரம்பித்தேன். என் கதைகள் எந்தப் பத்திரிகையில் பிரசுரமாகவில்லை. கவிதைகளையும் சேர்த்து சொல்லலாம். செருப்பு என்று ஒரு கதை எழுதினேன். என் பெரியப்பாப் பையன் நடத்திய 'மலர்த்தும்பி' (ஏன் இப்படிப்பட்ட பெயரை அவன் தேர்ந்தெடுத்தான்) என்ற பத்திரிகையில் பிரசுரம் செய்தான். அந்தக் கதை வந்த பத்திரிகையை அலுவலகத்தில் உள்ள எல்லோரிடமும் காட்டி விற்றேன். மாலதி என்ற பெண்மணியிடம் கொடுத்திருந்தேன்.

ஒருநாள் காலை மாலதி இருந்த அறைக்கு வந்தேன். 'உங்கள் செருப்பு நன்றாக இருக்கிறது,' என்றாள் மாலதி. நான் உடனே என் காலில் உள்ள செருப்பைப் பார்த்தேன். அவ்வளவு திருப்தி தராத செருப்பென்று யோசித்தேன். அவள் சிரித்தாள். 'நான் உங்கள் கதையைச் சொல்கிறேன்,' என்றாள். எனக்கு வெட்கமாகப் போய்விட்டது.

காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை அலுவலகம். 4.45 நாங்கள் புறப்படத் தயாராகிவிடுவோம். மின்சார வண்டி, மாம்பலம் என்று நான் கிளம்பி விடுவேன். ஒரு தகராறுபோது இந்த செட்டப்பை நான் கலைத்தேன். பிராஞ்சுக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு சென்றேன்.வாழ்க்கை நிம்மதியாகப் போய்க்கொண்டிருந்தது. ஆத்மாநாம் பிறகு 'ழ' என்ற பத்திரிகை திரும்பவும் வர நான்தான் காரணம். அப்போது நான் பிராஞ்சில் இருந்தேன். திரும்பவும் ஒரு தப்பு செய்தேன். பிராஞ்சிலிருந்து தலைமை அலுவலகத்திற்கு வந்தேன். சுருக்கெழுத்தாளராக..அப்போது நான் எழுதிய கவிதை ஒன்றுதான் தட்டச்சுப்பொறி.. தமிழில் யாரும் தட்டச்சுப்பொறி பற்றி கவிதை எழுதவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.

25 வருடம்...ஒரு வருடம் இரண்டு வருடம் இல்லை...25 வருடங்கள் நான் தலைமை அலுவலகம், பிராஞ்ச் என்று மாறி மாறி இருந்தேன். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் போய்க்கொண்டிருந்தது. பின் தெரியாமல் ஒரு முட்டாள்தனம் செய்துவிட்டேன். 2004ல. அதுதான் பதவி உயர்வு பெற்று உதவி மேலாளராக மாறியது. மாறிய உடன் என்னைத் தூக்கி அடித்தார்கள். 280 கிலோமீட்டர்கள் தூரத்தில். பந்தநல்லூர் என்ற கிராமத்தில். நொந்து போய்விட்டேன். பதவி உயர்வால் என் சம்பளம் பெரிய அளவில் மாற்றம் இல்லை. நான் மட்டும் தனியாக இருந்தேன். குடும்பம் என்னுடன் வரவில்லை. ஆனால் வேலை கடுமையாக இருந்தது. வேலை முடிந்தபின்பும் திருப்தி அற்ற நிலை. வேலையும் பொறுப்பும் கூடின. சம்பளத்தில் ஒன்றும் மாற்ற மில்லை. ஆனால் 4 ஆண்டுகள் தனிமை வாசம். வாரம் ஒருமுறை சென்னை விஜயம். சனிக்கிழமை சென்னை வருவேன். ஞாயிற்றுக்கிழமை சென்னையிலிருந்து பந்தநல்லூர் வந்துவிடுவேன். ஞாயிற்றுக்கிழமை இரவில் கும்பகோணம் பாச:ஞ்சரில் தாம்பரத்திலிருந்து கிளம்பி மயிலாடுதுறையில் போய் இறங்குவேன். அப்போது ஏற்பட்ட தவிப்பில் பல கவிதைகள் எழுதினேன். பந்தநல்லூரில் கிடைத்தப் பதவி உயர்வு, கும்பகோணம் பாசஞச்சர., விபரீதக் கடிதம், மின் விசிறி, ஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன். எல்லாம் தனிமை வாசத்தைப் பற்றிய கவிதைகள். கும்பகோணம் பாசஞ்சர் என்ற கவிதையை பாசஞ்கர் வண்டியில் வரும் டிடிஆரிடம் படித்துக் காட்டினேன். கவிதை ரசனை இல்லாதவர். அவரால் ரசிக்க முடியவில்லை.

4 ஆண்டுகள் கழிந்தும் சென்னை மாற்றல் எளிதாகக் கிட்டவில்லை. எப்படியோ ஒரு ஆண்டு தற்காலிக மாற்றம் பெற்று வந்துவிட்டேன். ஹஸ்தினாபுரம் என்ற ஊரில் உள்ள கிளையில் மாற்றம். க்ரோம்பேட்டை அருகில். திரும்பவும் காலை 7.30 மணிக்குக் கிளம்பினால் வர இரவு 7.30 மணி ஆகிவிடுகிறது. இப்போது உள்ள வயதில் கூலி அதிகம் கிட்டாமல் மெய் வருத்தம். 20 மாதங்கள் எப்படியோ ஓட்டிவிட்டேன். 7.30லிருந்து 7.30வரை. இன்று (08.10.2009) அதற்கு முடிவு வந்துவிட்டது. டெம்பரரி முடிந்துவிட்டதால் திரும்பவும் பந்தநல்லூருக்குச் செல்ல வேண்டுமென்று கழட்டி விட்டுவிட்டார்கள். என்னடா இது இந்த வயதில் இப்படி ஒரு அவதி என்று நொந்து போயிருக்கிறேன்.

7.10.09

சாட்சிவிவாகரத்து
வழக்கொன்றிற்காக
சாட்சி சொல்ல
நீதிமன்ற வளாகத்தின்
வேப்பமரத்தடியில்
காத்திருந்தபோது பார்த்தது.
ஜில்லென்ற தூறல் காற்றில்
நனைந்த சிறகுகளை
ஒ‌ன்றுக்கொன்று ஆறுதலாய்
கோதிக்கொண்டிருந்தன
தவிட்டு குருவிகள் இரண்டு.

வாசனை திரவியம்


வாசனையால் ஆனவனை
ஒருமழைக் காலத்தில்
சந்திக்க நேரிட்டது
பொத்தலாக நனைந்திருக்கும்
அவனது உடலெங்கும் பொங்கிய
அந்த வாசனை
அறுவறுப்பைக் கொடுத்தது
பின்னுச்சியிலிருந்தும்
முதுகெலும்பின் அடிப்பாகத்திலிருந்தும்
தனக்கு வாசனை பிறப்பதாகவும்
மக்கிய இதழ்களை
உணவாகப் புசிப்பதாகவும் கூறினான்
மெல்ல மெல்ல என்னிடமிருந்து
வாசனையை அவன்
உறுஞ்சுவதாக உணர்ந்தேன்
சட்டென அகலுகையில்
இழுத்து இழுத்து பெய்த மழையின்
சகதியொட்டிய என் உடலெங்கும்
வாசனை பரவிக் கொண்டிருந்தது

எதையாவது சொல்லட்டுமா....2


ரு தீபாவளிபோது நாங்கள் இருக்கும் அடுக்கத்தில் யாவரும் வருத்தத்துடன் இருந்தோம். எங்கள் தெரு முனையில் உள்ள ஒரு வீட்டில் வசித்த வந்த ஒரு வயதான பள்ளி ஆசிரியை கொலை செய்து விட்டான் ஒரு கொலையாளி.. அதவும் நகைக்காக. அந்தப் பள்ளி ஆசிரியை தனியாக வசித்து வந்தார். எங்கள் பகுதியில் சின்ன சின்ன திருட்டுக்கள் நடக்கும். ஆனால் கொலை செய்யும் அளவிற்குப் போகுமென்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒருமுறை எங்கள் அடுக்கத்தில் உள்ள வீடுகளின் வாசல்களைப் பூட்டிவிட்டு மாடியில் உள்ள பித்தளை வால்வுகளைத் திருடிப் போனான் ஒருவன்.

கீழே உள்ள ஒரு குடியிருப்பில் புகுந்து பீரோவையெல்லாம் திறந்து நகைகளை எடுக்கப் போனான். கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தில் அவ் வீட்டின் டிவியை எடுத்துக்கொண்டு போய்விட்டான். அது பெரிய ரகளையாகிவிட்டது. அந்த வீட்டுக்காரர் போலீஸில் புகார் சொல்ல விரும்பவில்லை. அது எதாவது விபரீதத்திற்கு எடுத்துப் போய்விடுமோ என்று பயந்தார். அந்தக் குடியிருப்பில் இரண்டு வாசல்கள். கொல்லைப் பக்க வாசல் வழியாக பத்துப் பாத்திரங்களைத் தேய்க்கப் நடமாடும் பகுதியைப் பயன்படுத்தினார்கள். பொது இடத்தை அது மாதிரி பயன்படுத்துவதை நாங்கள் எதிர்த்தோம். ஆனால் அவர்களிடம் சொல்லி அவர்கள் கேட்கப் போவதில்லை என்பதை நிச்சயமாக நம்பினோம். இந்தத் திருட்டு நடந்த பிறகு உடனடியாக இன்னொரு வாசலை மூடி விட்டார்கள்.

அடிப்படையில் இது மாதிரியான திருட்டுகள் எதாவது முடிவை நோக்கி வருகிறதா என்றெல்லாம் யோசிப்பேன். திருடப்படுவதால் நமக்குத் தெரிய வேண்டிய உண்மை எது என்றெல்லாம் யோசிப்பேன். ஒரு முறை மாடியில் உலர்த்திய மனைவியின் பட்டுப்புடவை திருட்டுப் போயிற்று. எனக்கு துணுக்கென்றது. ஏற்கனவே பயன்படுத்திய பட்டுப்புடவைதான். ஆனால் திருடுப் போகக்கூடாது, போய்விட்டது என்று நினைத்தேன். இந்தச் சமயத்தில்தான் மனம் எதாவது தொடர்புப் படுத்திப் பார்த்துக்கொண்டே இருக்கும்.

திருடுப் போயிற்று என்று நாங்கள் வருத்தத்துடன் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது இரண்டு போன்கள் வந்தன. முதல் போன் என் ஒன்றுவிட்ட சகோதரனின் (பெரியப்பாவின் புதல்வன்) பையன் நீச்சல் குளத்தில் நீச்சல் அடிக்கக் கற்றுக்கொள்ளும்போது ஜம்ப் பண்ணும்போது தண்ணீர் ஆழம் இல்லாததால் தலையில் அடிப்பட்டு மரணம் அடைந்த செய்தியைச் சொன்னார்கள். கேட்டவுடன் பதிறிப் போய்விட்டோம். உடனே இரண்டாவது போன் வந்தது. என் அலுவலக நண்பனிடமிருந்து. தெருவில் மருத்துவமனைக்குச் சென்ற அவன் அப்பா ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டார் என்ற செய்தி. என்னடா இது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்கிறதே என்று நினைத்தேன். அன்று சனிக்கிழமை. பட்டுப் புடவை திருடு போனதற்கும், இதற்கும் எதாவது சம்பந்தம் இருக்குமாவென்று யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த மூன்றும் வெவ்வேறு நிகழ்ச்சிகள்.

அந்த மரண நிகழ்ச்சிக்கு நாங்கள் எல்லோரும் குடும்பத்துடன் சென்றோம். தூங்கிக் கொண்டிருக்கிற மாதிரி ஒன்றுவிட்ட சகோதரினின் பையன் படுத்திருந்தான். பெரியப்பா பையனிடம் சென்று ஆறுதல் சொல்ல முற்பட்டேன். அவன் உடனே, 'நீ வருத்தப்படாதே,' என்றான். பெரியப்பாப் பையன் கொஞ்சங்கூட அழவில்லை. ஆனால் அவன் மனைவியோ பயங்கரமாக புலம்பிக் கொண்டிருந்தாள். அதேபோல் அலுவலக நண்பனின் வீட்டில், அவன் அப்பாதான் அந்தக் குடும்பத்தில் முக்கியமானவர். அவருடைய எதிர்பாராத முடிவு அந்தக் குடும்பத்திற்குப் பெரிய அடி. அதுவும் தெருவில் அனாதையாய் அவர் மரணம் நிகழ்ந்து விட்டது. அப்பாவின் மரணத்திற்குப் பிறகு என் நண்பன் தன் இயல்பான நிலைக்குத் திரும்ப பல மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

அலுவலகம் முடிந்து நாங்கள் இருவரும் மின்சார வண்டியில் செல்வோம். மனம் கலங்கியிருந்த அவனை தினமும் தேற்றுவேன். என்கூட வருவதில் பிரியப்படுவான். இந்த இரண்டு மரணங்களையும் பட்டப் பகலில் பட்டுப்புடவை திருடு போனதற்கும் நான் முடிச்சுப் போடுவேன்.

தெரு முனையில் வயதான ஓய்வுப்பெற்ற ஆசிரியையை நகைக்காக கொலை செய்த விஷயத்திற்கு வருகிறேன். அந்த நகையைக் கொள்ளை அடிக்க வந்தவன், முதலில் கொல்ல வேண்டுமென்ற நோக்கத்திற்காக வந்திருக்க மாட்டான். இது என் யூகம். ஆனால் பணத்திற்காக கொலையைக் கூட துச்சமாக நினைப்பவனாக இருப்பான். நகையை எடுக்க முயற்சி செய்யும்போது, ஆசிரியை எதிர்ப்பு தெரிவித்திருப்பார். அப்போது திருட வந்தவன் வேறு வழியில்லாம் கழுத்தை நெரித்துக் கொன்றிருப்பான். இந்த நிகழ்ச்சியை நாம் பத்திரிகையில் படிக்கும்போது ஒருவித மன அழற்சி ஏற்படுவதுண்டு. ஆனால் இந்த நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை எடுத்துக்கொள்ளுங்கள். என்ன பாடுபட்டிருப்பார்கள். பத்திரிகையில் எந்தவித உணர்ச்சியுமில்லாமல் வெளிவருகிற செய்தி ஒரு கலைப் படைப்பாக மாறும்போது பலவித உணர்ச்சிக் கோளங்களைப் பிரதிபலிக்கின்றன. இக்கொலையை அடிப்படையாகக் கொண்டு ராம்காலனி என்ற குறுநாவல் ஒன்றை எழுதியிருக்கிறேன்.

பல மாதங்கள் கழித்து போலீஸ் அந்தக் கொலைகாரனைக் கண்டுபிடித்து அவன் புகைப்படத்தை பேப்பரில் வெளியிட்டிருந்தார்கள். இந்தச் சம்பவம் எனக்கு போலீஸ் மீது ஒருவித மரியாதையே ஏற்பட்டது. சமீபத்தில் நடந்த ஒரு இரட்டைக் கொலையும் அவர்கள் துப்பு கண்டுபிடித்துவிட்டார்கள்.

ரொம்ப மாதங்கள் கொலை செய்யப்பட்ட ஆசிரியை வசித்த வீடு பாழடைந்து காணப்பட்டது. எனக்கு பேய் வீடு மாதிரி தோற்றம் தரும்.

இப்போது பாண்டிச்சேரி அன்னையின் பேரில் அந்த வீடு ஒரு அடுக்ககமாக மாறி பலர் குடியும் வந்துவிட்டார்கள். இதை எதற்கு சொல்ல வருகிறேன். போலீஸின் திறமை.

சமீபத்தில் உன்னைப் போல் ஒருவன் என்ற படத்தைப் பார்த்தேன். அதில் போலீஸ் அதிகாரியாக வரும் மோகன்லால் தத்ருபமாக ஒரு போலீஸ அதிகாரிபோல் காட்சி தருகிறார். மிகையில்லாமல் அவர் நடிப்பு ரசிக்கும்படியாக இருந்தது.

5.10.09

ஜ்யோத்ஸனாமிலன் கவிதைகள்கதவு

இது ஒரு காலம்
யாராலும்
நிச்சயம் கொள்ள இயலவில்லை
எதைப்பற்றியும்
கதவை
திறந்து வைப்பதா அல்லது
மூடி விடுவதா என்பதையும் கூட

ஒவ்வொரு முறையும்
கதவைத் திறக்கும் போதும்
சிறிதே தயங்குகின்றன கைகள்

மீண்டும் மீண்டும்
நிச்சயம் கொள்ள முடியாமலே போய்விடுகிறது எனக்கு

நான் இருப்பது

கதவுக்கு
இந்தப் பக்கமா அல்லது
அந்தப் பக்கமா?


(ஜ்யோத்ஸனாமிலன்(1941) கவிதை, நாவல் இத்துறைகளில் ஹிந்தி, குஜராத்தி மொழிகளில் சிறந்து விளங்குகிறார். அவரது கவிதைகளும், கதைகளும், ஆங்கிலத்திலும் வேறு பல இந்திய அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன)

4.10.09

எதையாவது சொல்லட்டுமா....1


நான் எதையாவது எழுதுவது என்று தீர்மானித்துவிட்டேன். அப்படி எழுதும்போது யார் மனதையாவது புண்படுத்தாமல் இருக்க வேண்டும். சிலசமயம் என்னை அறியாமல் யார் மனதையாவது புண் படுத்தி விடுவேன். பேசும்போது கூட சிலசமயம் அப்படி நடந்து விடுவதுண்டு. ஒரு சமயம் என் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை. நான் அவரைப் பார்த்து,'எப்படி அப்பா இருக்கு உடம்பு' என்று கேட்டேன். அவருக்கு செம்ம கோபம். உடம்பு எப்படியிருக்குன்னு கேட்கறானே, என்ன திமிர் இருக்குமென்று.

அது போகட்டும், நான் சொல்ல வேண்டிய விஷயம் வேறு. எஸ் சண்முகத்தை நான் நடத்தும் கூட்டத்திற்கு அழைத்தேன். வருகிறேன் என்று சொன்னாலும் கூட அவரால் வர முடியாது என்பதை ஊகித்துதான் அப்படி அழைத்தேன். அப்போதுதான் அவர் சொன்னார் நாகார்ஜுனன் எழுதிய 'நளிர்' என்ற புத்தகத்திற்கு நடத்தப்போகும் கூட்டத்தில் அக்டோபர் 2 ஆம்தேதி அவர் பேசப் போவதாக..நாகார்ஜுனன் இந்தியாவில்தான் இருக்கிறார் என்றும் கூறினார். ஆனால் சென்னையில் இல்லை. கேராளாவில் இருக்கிறார் என்றார்.

லண்டனில் இருக்கும் நாகார்ஜுனன் இந்தியாவிட்டு திரும்பவும் லண்டனுக்குப் போவதற்குமுன் ஒரு முறையாவது பார்க்க வேண்டுமென்று நினைத்தேன். சென்னையில் நாகார்ஜுனன் இருக்கும்போது நானும் அவரும் இலக்கியக்கூட்டங்கள், சினிமா க்ளப்புகளில் சந்திப்பது வழக்கம். விருட்சம் இலக்கியக் கூட்டங்களிலும் அவர் பேசியிருக்கிறார். அவர் லண்டன் போனபிறகு தொடர்பு இல்லை. அவர் சென்னைக்கு வருகிறார் என்பது கூட தெரியாது. மேலும் நானும் சென்னையில் இல்லாமல 4 ஆண்டுகள் மயிலாடுதுறையில் இருந்தேன்.

அவருடைய வலைத்தளத்தில் நாகார்ஜுனன் 3 கூட்டங்களில் பேசுவதாக அறிவிப்பு விட்டிருந்தார். இதில் காந்தி ஜெயந்தி கூட்டத்தில்தான் கலந்துகொள்ள முடியுமென்று தோன்றியது.

அவருடைய புத்தக விமர்சனக் கூட்டம் நான் கூட்டம் நடத்தும் எல்எல்ஏ பில்டிங்கில்தான் நடந்தது. பேசவந்தவர்களில், எஸ்.சண்முகம், வீ அரசு (இவர் சிறுபத்திரிகைகள் குறித்து எதாவது கூட்டம் பல்கலைக் கழகத்தில் நடத்தினாலும் விருட்சத்தைச் சேர்க்க மாட்டார்.), தமிழவன் முதலியவர்கள் நளிர் புத்தகத்தைப் பற்றியும் நாகார்ஜுனன் பற்றியும் பேசுகிறார்கள்.

பொதுவாக ஒரு கூட்டத்திற்குப் போவதற்குள் என்னை தயார் படுத்திக்கொள்வதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். அன்று அப்படித்தான் நடந்தது. 2011ல் நானோ கார் வாங்கப் போவதால், கார் ஓட்ட காலை நேரத்தில் கற்றுக்கொள்ள சென்று விட்டேன். பின் வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டு எல்எல்ஏ பில்டிங் நோக்கி பயணித்தேன். பின்தான் தெரிந்தது தி நகர் வழியாகச் செல்வது கடினம் என்பது. பின் சுற்றி தேனாம்பேட்டை வழியாக அண்ணா சாலையைப் பிடித்து எல்எல்ஏ பில்டிங் வந்தேன்.

வண்டியை வைத்துவிட்டு மாடியை எட்டியபோது எனக்கு சந்தோஷம். பலரைச் சந்தித்தேன். அஜயன் பாலா, முத்துக்குமார், டி கண்ணன், வளர்மதி, குட்டி ரேவதி என்றெல்லாம். உள்ளே நுழைந்தபோது கோணங்கி பேசிக்கொண்டிருந்தார். இவர் எழுத்துக்கும் இவர் பேச்சுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. எளிதில் புரியாது என்பதுதான். நாகார்ஜுனுனைப் பார்த்தேன், சண்முகத்தைப் பார்த்தேன், வீ அரசைப் பார்த்தேன், தமிழவனைப் பார்த்தேன்...கோணங்கி பேசிக்கொண்டே இருந்தார். என்னால் அவர் பேச்சைப் புரிந்துகொண்டு நிதானத்திற்கு வரவே முடியவில்லை.

பின் அவர் பேசி முடித்துவிட்டு என் சீட்டிற்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டார். வலது பக்கத்தில் கோணங்கியும், இடது பக்கத்தில் குட்டி ரேவதியும் உட்கார்ந்து இருந்தார்கள். இலக்கியக் கூட்டங்களில் ஒரு பொதுவான விதி உண்டு. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலும் ஹலோ சொல்லும் வழக்கம் உடனடியாக வராது. 'உங்களைக் கூட்டத்தில் பார்த்தால் கண்டுகொள்ளவே மாட்டேங்கறீங்க..' என்று வைதீஸ்வரன் பல முறை என்னிடம் சொல்லியிருக்கிறார். எனக்கோ ஆச்சரியமாக இருக்கும். இப்போதுதான் தோன்றுகிறது அது இலக்கியக்கூட்டத்தின் விதி என்று.

கூட்டம் முடியும் நேரத்தை நெருங்கியதால், சண்முகம் 15 நிமிடத்தில் பேசும்படி ஆகிவிட்டது. புத்தகத்தைப் பற்றியும், நாகார்ஜுனன் பற்றியும் மாறி மாறி பேசிக்கொண்டே போனார் சண்முகம்.

அடுத்தது தமிழவன் பேச ஆரம்பித்தார். எனக்குத் தெரியும் தமிழவன் எப்படிப் பேசுவார் என்று. நிதானமாக நாகார்ஜுனன் பற்றியும், பொதுவாக இலக்கியக் கூட்டங்கள் பற்றியும், இலக்கியத்தில் ஈடுபட்டு வரும் பல இலக்கிய நண்பர்களைப் பற்றியும் சுவாரசியமாகப் பேசினார். தமிழில் தீவிர எழுத்தைப் பற்றி நன்றாகப் பேசக் கூடியவர்களில் அவரும் ஒருவர். அவர் சொன்ன ஒரு விஷயம் என்னை கவர்ந்தது. நாகார்ஜுனன் நாவல்கள் எழுதுவதில்லை. ஆனால் அவருக்குப் பதிலாக கோணங்கி எழுதிவிடுகிறார் என்று.

பல இலக்கிய நண்பர்கள் நாகார்ஜுனுனைப் பார்க்கவே வந்திருந்தார்கள். கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக லண்டனில் வசிக்கும் நாகார்ஜுனுனைப் பார்க்கும்போது அவர் பெரிதாக மாற்றம் அடையாமலே இருந்ததாகப் பட்டது. அவர் எழுந்து பேசும்போது அவர் வழக்கம்போல் எப்படிப் பேசுவோரோ அப்படியே பேசினார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்மொழியுடன் தொடர்பு இல்லாமல் போனதால், தொலைபேசி மூலம் தமிழ்நாட்டில் உள்ள நண்பர்களுடன் பேசியதாகக் குறிப்பிட்டார். வலைத்தளத்தில் தீவிரமாக நாகார்ஜுனன் எழுதிய பல விஷயங்கள் புத்தக உருவத்தில் வெளிவந்தள்ளது. கிட்டத்தட்ட 527 பக்கங்கள் கொண்ட நளிர் புத்தகம். லண்டனிலிருந்து தொலைபேசியில் அவர் பேசும்போது வலைத்தளத்தைப் பற்றி பல விஷயங்களைக் குறிப்பிடுவார். வலைத்தளத்தில் தினமும் எதாவது எழுதிக்கொண்டிருக்க வேண்டும் என்ற நியதியை அவர் கடைப்பிடித்து வந்தார். நளிர் புத்தகம் அவருடைய உழைப்புதான். அவர் தமிழ் சற்று வித்தியாசமாக இருக்கும். நளிர் புத்தகத்தில் 181ஆம் பக்கம் திருப்பியபோது கண்ணில் பட்ட ஒரு வரி 'பிறகு ஜானுடன் பார்த்தது இன்னும் சில படங்கள்.' இதை ஒரு உதாரணத்திற்குத்தான் சொல்ல வந்தேன்.

லண்டனிலிருந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கும் நாகார்ஜுனுனைப் பார்த்து ஹலோ சொல்ல நினைத்தேன். அவர் கூட்டம் முடிந்து திரும்பும்போது சொல்லலாம் என்று நினைத்தேன். அவர் நான் வந்ததைக் கூட கண்டுகொள்ளவில்லைபோல் தோற்றம் தந்தார். பல இலக்கிய நண்பர்கள், பல விசிறிகள் அவருக்கு. கூட்டம் முடிந்து வெளியே வந்து அவருடைய நளிர் புத்தகத்தை விலைக்கொடுத்து வாங்கினேன். பின் அவரைப் பார்த்து ஹலோ சொல்லிவிட்டுப் போய்விடலாம் என்று நினைத்தேன். பார்த்தல் அவரைச்சுற்றி வேறு சிலர் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நகர்ந்தபிறகு நான் ஹலோ சொல்வதற்குள், நாகார்ஜுனன் நகர்ந்து வேகமாக முன்னால் போய்விட்டார்.

மற்ற நண்பர்களுடன் நான் பேசிக்கொண்டே வந்தேன். எல்எல்ஏ பில்டிங் வாசலில் என் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது வாசலில் பேசிக்கொண்டிருந்த நாகார்ஜுனனைப் பார்த்து ஹலோ சொல்ல நினைத்தேன். அதற்குள் அவர் அங்கு இல்லை. ஆனால் மற்ற நண்பர்கள் இருந்தார்கள். கோணங்கியைப் பார்த்து, 'என்ன உங்கள் எழுத்துடன் நெருங்கி வர முடியவில்லை,' என்றேன். அதைக் கேட்டு அவர் சிரித்தார். அவருடைய பேச்சு கூட சிலசமயம் கவித்துவமாக இருக்கும். அவருடைய நாவல் ஒன்றை வாங்கி நிதானமாக வாசிக்க முயற்சி செய்ய வேண்டுமென்று நினைத்தேன்.

ஆழி பதிப்பகம் நிதானமாக நல்ல தரமான புத்தகங்களை குறுகிய காலத்தில் அதிகமாகக் கொண்டு வந்துள்ளது. நிதானமாக வாசிக்க வேண்டிய கோணங்கி நாவலையும், வாசிக்க வாசிக்க பக்கங்கள் குறையாத பா வெங்கடேசனின் நாவலையும் எப்போதுதான் தொடங்கப் போகிறேன் என்பது தெரியாது. நான் எதையாவது சொல்லட்டுமா என்று இப் பகுதியில் ஆரம்பித்திருக்கிறேன். சரி, நீங்கள் இதைப் படித்துவிட்டு எதையாவது சொல்லி விடாதீர்கள்.மழைக்குப்பின்........


இந்தக் கணம்தான்
உருவானதுபோல் எல்லாம்

நான் பார்க்க பார்க்க
முளைத்தன மரங்கள்

படர்ந்து சென்றது வானம்
எதிலும், எங்கும்

காற்றில் பழுத்தன பறவைகள்
மனிதர்களும்
இப்போதுதான் தோன்றியதுபோல்
எங்கெல்லாமொ.....எப்படியெல்லாமோ

மண்ணில்தான் எத்தனை இதமும் பதமும்
விதைத்துவிடு
மனதில் தோன்றியதை
ஆகாயத்தைக் கூட

சிருஷ்டித்துக் கொள்
விரும்பியவற்றை
மரம், பறவை, வீடு
ஏன் மனிதனையும் கூடத்தான்

தமிழில் : திலீப் குமார்

(ஜ்யோத்ஸனாமிலன்(1941) கவிதை, நாவல் இத்துறைகளில் ஹிந்தி, குஜராத்தி மொழிகளில் சிறந்து விளங்குகிறார். அவரது கவிதைகளும், கதைகளும், ஆங்கிலத்திலும் வேறு பல இந்திய அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன)