24.12.10

எதையாவது சொல்லட்டுமா......../ 33

இந்த முறை நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி அவருடைய சிறுகதைத் தொகுப்பிற்காகக் கிடைத்துள்ளது. தரமான படைப்பாளியான நாஞ்சில் நாடனை அடையாளம் காண சாகித்ய அகாடமிக்கு இவ்வளவு காலம் பிடித்துள்ளது. எனக்கு நாஞ்சில் நாடனை ஒரு படைப்பாளி என்கிற மாதிரியும், நண்பர் என்கிற முறையிலும் தெரியும். அவருடைய நண்பரான வைத்தியநாதனை (கவிஞர் நாஞ்சில் நாடன் சென்னை வரும்போதெல்லாம் சந்திக்காமல் இருக்க மாட்டார். எனக்கும் நாஞ்சில்நாடன் சென்னையில் இருக்கிறார் என்ற தகவல் வைத்தியநாதன் மூலம் தெரியவரும். அதேபோல் நான் கோயம்பத்தூர் செல்லும்போதெல்லாம் நாஞ்சில்நாடனை சந்திக்காமல் இருக்க மாட்டேன்.

70-களில் நாஞ்சில்நாடன் எழுத ஆரம்பித்துவிட்டார். பெரும்பாலும் அவருடைய கதைகள் யதார்த்த உலகைச் சார்ந்தவை. இன்றைய உலகத்தை எதிர்கொள்ளும்போது நாஞ்சில்நாடனால் 'தலைகீழ் விகிதங்கள்' போன்ற நாவலை எழுத முடியுமா என்பதைச் சொல்ல முடியாது.

நான் கடைசியாக படித்த அவருடைய நாவல் சதுரங்கக் குதிரை. அந்த நாவலைப் படித்தபோது சினிமாவை மனதில் வைத்துக்கொண்டு எழுதியிருக்கிறாரோ என்றெல்லாம் எனக்குத் தோன்றும். நாஞ்சில்நாடன் நாவல் மட்டுமல்ல சிறுகதைகளும் எழுதி உள்ளார். கணையாழியில் முள் என்ற அவருடைய சிறுகதை எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.

நாஞ்சில் நாடன் ஒருவழியாக எழுதி முடித்துவிட்டார். ஆனால் அவருடைய முந்தைய நாவல்களைக் கூட இப்போது அவர் எழுதினால் அவர் தாண்டி வர வேண்டும். இன்று எழுதுபவர்களும் அவருடைய நாவல்களைத் தாண்டி வரவேண்டும். இன்று நாவல் எழுதுவது ஒரு சவால். அதாவது எல்லோரும் படிக்கும்படி புதிய விதமான நாவல்கள் வரவேண்டும். எல்லா விதமான முயற்சிகளையும் எல்லோரும் செய்து கொண்டு வருகிறார்கள் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

தாமதமாக ஒரு கலைஞனைப் புரிந்துகொண்டதற்காக சாகித்ய அகாடமிக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

19.12.10

இது அவனைப் பற்றியக் கதையல்ல

வெகுநாட்களாகவே கதை எழுதிவிட விருப்புற்றிருந்தாலும், கதை எழுதுதல்
குறித்த பல கேள்விகள், இயலுமா எனும் ஐயம், நற்பல கதையாசிரியர்கள்
இருக்குமிடத்தில் எழுதல் குறித்த தயக்கம், எழுத்துக்கு உடன்படாமல்
இருக்கிற சூழல், வர மறுக்கிற வார்த்தைகள், வந்தாலும் உறவு முறித்துக்
கொண்டு போகிற காதலியாய் கரு என முடியாமையின் எச்சங்கள் மிகைந்து பொதிந்து
கிடந்த தறுவாயில்..

அவன் எனக்கு எந்த விதத்திலும் நெருக்கமானவனில்லை, அவன் எனக்கு எந்த
விதத்திலும் தூரமானவனுமில்லை, அவனை நான் அறிந்திருக்கிறேன், அவனை நான்
அறியாமலும் இருக்கிறேன், அவனை எனக்கு அவனாக தெரியும், அவனை எனக்கு
அவனாகவும் தெரியாது, இப்பேர்ப்பட்ட குழப்பமான சூழலில் உங்களுக்கு எப்படி
அவனை அறிமுகம் செய்யப் போகிறேன் என்று எனக்கு புரியவில்லை.

இந்த இரவில் அவனைப் பற்றி கதை சொல்லவேண்டும் என்று ஏன் எனக்கு
தோன்றியதென்று அறிகிலேன், எனினும் அவனைப் பற்றி சொல்லவே எனக்கு
விருப்பமாய் இருக்கிறது, தற்போது தான் சென்னையில் இருந்து பெங்களூருக்கு
புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன், கோயம்பேட்டில் பேருந்தில் ஏறி எனக்கான
முன்பதிவு செய்துவிட்ட ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துவிட்டேன்.

அவனைப் பற்றி நினைத்தாலே அவனின் பல பெயர்களும் நினைவுக்கு வருவதை
தவிர்க்க இயலாது, மொன்னை பிளேடு, ரம்பம், செடி, அறுவை, தோல்வாயன், தொன
தொன கிழவி இத்யாதி, இத்யாதி. இவ்வளவு பெயர்கள் இருந்தாலும் அவன் அதனை
பொருட்டாக எடுத்துக் கொண்டதுமில்லை, அதை பற்றி கவலையுற்று தன்னை மாற்றிக்
கொள்ளவும் எண்ணியதில்லை. பெரும்பாலும் அவன் பேச்சுக்கள் ஒரு
நிலைப்பட்டதாய் இருக்காது, அது சம்பந்தம் சம்பந்தமில்லாத களங்களுக்கு
மாறிக் கொண்டே இருக்கும், சம்பந்தமே இல்லாத சில விடயங்களையும் சம்பந்தம்
செய்யும், அப்பேர்ப்பட்ட தருணங்களில் அவனைக் கண்டு நான் வியக்காமல்
இருந்ததில்லை, என்றாலும் அவன் பேச்சுக்கள் உண்டாக்குகிற அயர்ச்சி
எரிச்சலோடு முகம் சுழிக்கவும் வைக்கும், நானே அவனிடம் அப்படி நடந்து
கொண்டும் இருக்கிறேன்.

பேருந்து இன்னும் புறப்படவில்லை, மனதை இழுத்து செல்கிற அழகிய பெண்களைப்
போல, எதிர்பாராமல் சந்திக்கிற இனிமையான மனிதர்களைப் போல, சுவையான
சம்பவங்களைப் போல, மகிழ்ச்சியான தருணங்களைப் போல, மேகங்கள் வானத்தில்
கூடி கூடி கலைந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முன் இந்த மேகங்களை நான்
பார்த்திருக்கிறேனா ? இவை புதிய மேகங்களா ? அல்லது பழயவைகள் தானா ? என்
அருகிருக்கையில் அமர்ந்திருப்பவனை போலத் தான் இந்த மேகங்களுமா,
இங்கிருந்து புறப்பட்ட உடன் இதனுடனான என் தொடர்பு அறுந்துவிடுமா ?

ஓவியங்களில் அவனுக்கு மிகைந்த ஈடுபாடு உண்டு, அதுமட்டுமல்ல கைவினைப்
பொருட்களும் மிக அழகழகாக செய்வான். வீட்டில் அவன் அறையின் நான்கு
சுவர்களிலும் நான்குவித வண்ணப்பூச்சுக்கள் அடித்து வைத்திருக்கிறான்,
வித்யாச வித்யாசமான வண்ண விளக்குகள், மணி போன்ற சின்ன சின்ன விளக்குகள்,
இயற்கை காட்சி போன்ற நவீன ஓவியங்கள் என்று அந்த சுவர்களை மெருகேற்றியும்
வைத்திருக்கிறான். அவன் வீட்டுக்கு சென்று வருகிறவர்கள், அதுவரை
பழக்கமாகாத அவனைப் பார்ப்பார்கள், ஒரு கண்காட்சிக்கு வந்திருப்பதைப்
போன்று உணர்வார்கள். அவனை காண அவன் வீட்டுக்கு ஒரு முறை சென்றிருந்தேன்,
வெளியே எங்கோ போயிருப்பதாய் சொன்னார் அவன் அப்பா..

அவனுக்காக அவன் வீட்டில் காத்திருந்தேன், சற்றைக்கு மிகைந்த நேரம்
கழித்தே வந்தான், என்னை கண்டும், எதுவும் பேசுமால் வீட்டின் பின்புறமாய்
சென்றான்

“அந்த தம்பி ரொம்ப நேரமா உனக்காக காத்திட்டு இருக்கு, நீ எங்க போய்
சுத்திட்டு வர” என்ற அவன் அம்மாவின் குரலையும் பொருட்படுத்தவே இல்லை..

என்ன மனுசன் டா இவன் ? இவன பார்க்கத்தானே வந்திருக்கோம், கண்டுக்காம கூட
போறான் என்று அவமானமாக இருந்தது. அதற்கு மேல் அவன் வீட்டில்
அமர்ந்திருக்க தன்மானம் தடுத்தது, கடுப்பாக இருந்தது, அப்படியே சொல்லாமல்
கிளம்பி விடலாம் என்று தோன்றியது.

“சொல்லாமல் கிளம்பினால் அவன் வீட்டார் என்னைப் பற்றித்தான் என்ன
நினைப்பார்கள் ?”

அவன் கண்டு கொள்ளவில்லை என்றாலும் அவன் வீட்டார்கள் நல்லவிதமாய் தானே
என்னிடம் நடுந்து கொண்டார்கள், உபசரித்தார்கள், அப்படி இருக்க அவர்களிடம்
கூறாமல் செல்வது சரியாக இருக்குமா ?

அவன் அம்மாவை அழைத்து “ நான் கிளம்புறேன் மா” என்றேன்

அவர்களுக்கு என் மனநிலை புரிந்திருக்க வேண்டும்

“ஒரு நிமிஷம் இருப்பா, அவன போய் கூட்டியாறேன்” என்று சங்கடமான முகத்தோடு
சொன்னார்கள்

“நீங்க இருங்க மா, நானே போய் அவன பார்த்து சொல்லிட்டு கிளம்புறேன்”

அவர்கள் பதில் சொல்லும் முன் வீட்டின் பின்புறம் நோக்கி நடந்தேன்

வீட்டுக்கு வரும் பொழுது கொண்டு வந்திருந்த கான்கிரிட் கட்டும் கம்பியை,
கொல்லையில் இருந்த மாமரத்தில் வயிறு தட்டையான “S” போன்ற வடிவத்தில்
வளைத்துக் கொண்டிருந்தான்.

“நான் கிளம்புறேன் டா”

“இரு டா, உனக்கொன்னு செய்து காட்டலாம் தான் இந்த கம்பியை வளச்சிட்டு
இருக்கேன்” என விழிகளில் பெருமை பொங்க சிரித்தான்

வீட்டுக்கு வந்தவனை வா னு கூட கூப்பிடாம வந்துட்டு, எனக்கு செய்து
காட்டுறேன் னு சொல்றியே “ லூசா டா நீ” என்று கேட்க தோன்றியது

ஆனால் கேட்கவில்லை.

திரும்பி பார்த்த போது என் இடது புற வரிசையில் ஜன்னலுக்கடுத்த இருக்கயில்
அமர்ந்திருந்த பெண் குலுங்கிக் குலுங்கி அழுதவாறு அலைபேசியில் யாரிடமோ
பேசிக் கொண்டிருந்தாள். பொத்தல் விழுந்த ஓடாக அவள் கண்களில் இருந்து
கண்ணீர் வழிந்தோடி கொண்டிருந்தது. ஒரு விடை பெறுதலுக்கான பேச்சாகத்தான்
அது இருக்க வேண்டும், பிரிவுத் துயரில் தான் அவள் அழுது கொண்டிருக்கிறாள்
என்று மனது பேசியது. தலை நிறைய அவள் சூடியிருக்கும் பூக்களில் இப்போது
எந்த நறுமணம் வீசும் ? ஆற்றாமையின் நறுமணமா ? அழுகையின் நறுமணமா ? அவளின்
நறுமணமா ? இல்லை பூவின் நறுமணமா ?

வேரோடு அறுந்துவிடுகிற பிரிவோ ? அல்லது தற்காலிகமான பிரிவோ ? அதை
சொல்லுதல் என்பது அவ்வளவு சுலபமானதல்ல, வார்த்தைகள் நனைய வழிகிற
கண்ணீரில் அந்த பிரிவின் கனம் குறைந்துவிடுவதில்லை. ஒரு அழுத்தத்தை
என்றுமே அது நம்முள் இருத்துகிறது, அதன் அடர்த்தி அதிகமாகும் போதெல்லம்
யானையின் கால்களை கொண்டு அது நம்மை நசுக்குகிறது. அடர்த்தி குறையும் போது
எறும்பின் கால்களை போல சுருங்கி மனசின் பரப்பெங்கும் ஊர்ந்து கொண்டே
இருக்கிறது.

வளைத்த கம்பியை வைத்து அவன் ஒரு டைனோஸர் செய்தான், மிகத்துல்லியமாக இல்லை
என்றாலும் அது டைனோஸர் போலவே இருந்தது.

“இந்த ஓவியங்களை எதை பார்த்து வரைஞ்ச டா” என்று அவன் சுவரில் இருக்கும்
ஓவியங்கள் குறித்து கேட்டேன்

“இதுவா வான்காவுடையது, இணையத்தில் பார்த்தேன், பிரிண்ட் எடுத்துட்டு
வந்து வரைஞ்சேன், உனக்கு வான்கா பற்றி தெரியுமா ? “

உதட்டைப் பிதுக்கினேன்

“அவரு ஒரு போஸ்ட் இம்ப்ரஷனிஸ்ட், அவரோட ஓவியங்கள் எல்லாம் வயல் வெளி
காட்சிகள் நிறைந்ததாகவே இருக்கும், வாழும் போது அவரை யாரும் கண்டுக்க கூட
இல்ல, கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஓவியங்கள் வரை வரைஞ்சுருக்கார், ஆனால்
அதில் இரண்டே இரண்டுதான் அவர் வாழும் போது விற்ற, அதுவும் சொற்ப
விலைக்கு, இப்ப அவர் கையால் வரையப்பட்ட ஓவியங்கள் 2 கோடி வரை
விற்கப்படுது, கடைசி வரை அவர் கல்யாணமே பண்ணிக்கல” என்று ஒரு
குறுஞ்சரித்திரத்தையே சொன்னான்

“எங்க இருந்து டா இவ்வளவு விஷயங்கள சேகரிக்கிற”

“இணையத்தில் இருந்துதான்” என்று பெருமையோடு என் வியப்பை கண்டு
புன்னகைத்தான்

“டா வின் சியோட, மோனோலிஸா ஓவியம் பற்றிய ரகசியம் என்ன னு தெரியுமா டா”

நான் கேட்டதும் அவனின் கருத்த முகம் மேலும் இருண்டது, அவனுக்கு அபிராமி
குறித்த நினைவுகள் வந்திருக்க வேண்டும், அபிராமியும் இவனை உண்மையாகவே
காதலித்தாள், ஆனால் இவனின் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் அவளுக்கு இவன்
மீதாக பயத்தை உண்டு பண்ணிவிட்டது. அவள் இவனைப் பிரிந்ததின் சரியான விவரம்
எனக்கு தெரியாதென்றாலும், அவள் இவனை விட்டு முற்றுமாக விலகி
சென்றுவிட்டாள் என்பது எனக்கு நிச்சயமாய் தெரியும்.

அவனை அப்படிப் பார்க்க எனக்கு பரிதாபமாக இருந்தது, அவன் கவனத்தை திசை
திருப்ப..

“ஜிம்மி எங்க டா காணோம்” என்றேன்

“ஜிம்மியா இரு சொல்றேன்” என்று சொல்லிவிட்டு, டைனோஸரின்
முன்னங்கால்களிலும், பின்னங்கால்களிலும் நுண்மையாய் வெட்டிய கம்பிகளை
நகங்களாக செருகிக் கொண்டிருந்தான்.

பிறகென்னை கொல்லைப்புறம் அழைத்து சென்றான், “ இந்த கொய்யா செடியை
பார்த்தியா, பெரிசா வந்திருக்கு இல்ல”

“ம்” இதை எதற்கு என்னிடம் காட்டுகிறான் என்று யோசித்துக் கொண்டிருந்த
போதே

“இந்த செடி ரொம்ப நாளா வளராமலே இருந்துச்சு, ஏதாவது உரம் வச்சா வளரும்னு,
ஜிம்மிய கொன்னு இதுக்கு உரமா புதைச்சுட்டேன்”

அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போன்னேன் நான், அவனைப் பார்க்கவே எனக்கு பயமாக
இருந்தது, அவன் எந்த சலனமும் இல்லாமல் சாதாரணமாய் நின்றிருந்தான். அவன்
முகத்தில் பெருமை பொங்கும் புன்னகை வழிந்து கொண்டிருந்தது..

பசங்க சொல்வது போல் இவனுக்கு மனப்பிறழ்வு தான் ஏற்பட்டிருக்கிறது..

எனக்கு அதற்கு மேல் அவன் வீட்டில் இருக்க தைரியமில்லை, அவன் பதிலைக் கூட
கேட்காமல் "கிளம்புறேன் டா" என்று சொல்லி வெளியேறிவிட்டேன்

குழந்தை போல் வளர்த்த பிராணியை கொல்ல மனம் வருமா ? எப்போதாவது இவன்
வீட்டுக்கு வரும் என்னையே வாலாட்டி, துள்ளி இப்பக்கமும், அப்பக்கமும் ஒரு
குழந்தை போல ஓடி சந்தோஷமாய் வரவேற்குமே அந்த அன்பான ஜீவனையா இவன்
கொன்றுவிட்டான். அபிராமி இவனைப் பார்த்து மிரட்சியுற்றத்தின் அர்த்தம்
கொஞ்சம் விளங்க ஆரம்பித்தது.

அவனை ஒரு சரியான மனநல மருத்துவருக்கு கூட்டி செல்ல வேண்டும் என்று
தோன்றியது, ஆனாலும் அவன் மீது உண்டான வெறுப்பும், பயமும் என்னை அவனை
விட்டு விலகவே செய்தது. அதற்கப்புறம் அவனிடம் இருந்து வரும்
மின்னஞ்சல்களைக் கூட படிக்காமல் டெலிட் செய்ய ஆரம்பித்தேன்

அழுது கொண்டிருந்த பெண்ணை பார்த்தேன், அவள் தற்போது மகிழ்ச்சி பொங்கும்
குரலில் பேசிக் கொண்டிருந்தாள், தன் துயரத்தில் இருந்து வெளி வந்து
சமாதானமாகி இருக்க வேண்டும் என்று தோன்ற, அவளுக்கடுத்து ஜன்னலுக்கு அருகே
அமர்ந்திருந்த பெண்ணும் யாரோடோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.

சாலையில் வாகனங்கள் விரைவாக சென்று கொண்டிருந்தன, இதில்
பெரும்பாலானவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருக்க வேண்டும்,
கனரகவாகனங்களின் விளக்கு வெளிச்சங்கள் கண்களைக் கூச வைத்தன, என் அருகே
அமர்ந்திருந்தவன் உறங்கிக் கொண்டிருந்தான்.

எனக்கான கதையை ஏந்தி வந்தவன் மனதில் நடமாடிக் கொண்டிருந்தான்.

களங்கம்

நிலாவிலிருந்து
வெகு தூரத்திலிருப்பதாக
அறிவியல் புத்தகங்கள்
விவரித்த நட்சத்திரங்கள்
நிலவின் அருகில்
சூழ்ந்திருந்தன நேற்று
பின்னிரவில் எழுந்தவள்
நிலவில் களங்கம் என்றாள்
சில தினங்களில்
வளர்ந்தது நிலா
களங்கத்துடன்
தொலைந்திருந்த நட்சத்திரங்களுடன்
அறிவியலில் வாசித்திராத
வேறு நிலவுகளும்

மனமுகிலில் தவழ்ந்தன

உணர்தல் நிமித்தம்

ஒரு தாளில் தீட்டப் பெற்ற
ஆரஞ்சு வர்ணம் பழமாதல் போல்
வளை கோடுகள் கடலாதல் போல்
இரு 'V' பறவைகளாதல் போல்
பசிய நீள் கோடுகள்
செழும் புற்களாதல் போல்
பக்கவாட்டு முகமொன்றில்
நம்பப் பெறும் உயிர்ப்புள்ள
இன்னொரு விழி போல்
மனம் அசைவுறுகையில்
மௌனம் இசையாதல் போல்
பார்வை மொழியாதல் போல்
புன்னகை உறவாதல் போல்
வார்த்தைகள் ஒலியாதல் போல்
சொல்லாமல் செல்லும் -
சொல்லும் பொருள் அடர்
உணர் கவிதை.

இரண்டு கவிதைகள்

தாகத்தோடு நிற்கும் காகம்


தண்ணீர் முழுவதையும் குடித்துவிடவேண்டும்
தாகம் என்பது ஒரு புறமிருக்க
தண்ணீர் முழுவதையும் நானே குடித்துவிடவேண்டும்


தாகமெடுக்கவேண்டுமே
இதயமும் இருட்டிக்கொண்டுவரவேண்டும்


குடம் குடமாக கொண்டுவந்து கொடுக்கிறது காகம்


மேகத்தின் வயிற்றுக்குள் கடல், நீர்த்தேக்கங்கள்
எல்லாம் கறுத்து இரத்தம் கட்டினாற்போல்
நிறத்தில் காகத்தை ஒத்தது
எவ்வளவு பெரிய காகம்


பெரிய காகம் கரையும்
சிறிய காகம் நனையும்
தென்னை மரங்களில், மா மரங்களில் பறந்துபோய் தங்கி தலை உணத்தும்


கோதுமை மாவு ரொட்டி சுடுகிற மணம் வருது
கிடுகு கூரை கொதிச்சு ஆவிபோகுது


02 முட்டையிடும் நாய்கள்


மூன்று பன்றிகளுக்கு நடுவில் ஒரு நாய்.
பன்றிகள் இறைச்சியை சாப்பிடுகின்றன
நாயும் இறைச்சி சாப்பிடும்தானே.
ஏன் அது பன்றிக்கு தெரியவில்லை
தெரிந்தும் பங்கு கொடுக்காமல் தான் மட்டும் சாப்பிடுகின்றன.
அப்படித்தான்.


நாய்கள் பசியில் தன் நிழலை சாப்பிடுகின்றன.


வாய்க்குள்ளிருக்கும் இறைச்சியை உண்பதா
நாய் சாப்பிடுகின்றதுபோல் நிழலைச் சாப்பிடுவதா?சில நேரம் நிழல் மிக சுவையாகயிருக்கும் என எண்ணின


சாவின் அறிகுறி தெரியுமா?

அதன் இசை காதுகளுக்குள் இறங்குமா?

இது பற்றி நாயிடமும், பன்றிகளிடமும் கேட்போம்


கடைசியாக என் கண்களால் ஒரு காட்சி கண்டேன்
நாய்கள் முட்டையிடுகின்றன
நாய்கள் முட்டையிடுகின்றன

15.12.10

க நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்.....2

க.நாசுவின் இலக்கிய முதிர்ச்சியும் விமர்சனப் பாங்கும்

நகுலன்

க.நா.சுவினால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அவருடன் எனக்குச் சுமார் ஒரு பதினைந்து வருஷப் பழக்கமுண்டு. அவருடன் நான் உள்ளங்கலந்து உறவு கொண்ட நாட்களை இப்பொழுது நினைக்கும் பொழுது இதை எழுதும் இந்தப் பொழுதில் கூட எனக்கு ஒரு மன நிறைவு உண்டாகிறது. எழுத்தாளர் என்ற நிலையில் அன்றி ஒரு தனி மனிதன் என்ற நிலையிலும் நான் அவரை மதிக்கிறேன். நவீன தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு அவர் செய்திருக்கும் சாதனை - நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம், நாடகம் என்ற பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்கது. இனி இக்கட்டுரையில் அவர் இலக்கிய முதிர்ச்சியைப் பற்றியும் விமர்சனப் பாங்கு பற்றியும் ஒரு பரவலான பரிசீலனை செய்வதே என் நோக்கம்.

''எதற்காக எழுதுகிறேன்?'' என்ற கட்டுரையில் க.நா.சு கீழ் வருமாறு எழுதியிருக்கிறார். ''உலகத்தையும், உலகத்தில் நடப்பதையும் காட்சியாகக் கண்டு, சொந்த விஷயங்களையும் கூட ஈடுபாடில்லாமல், பற்றின்மையுடன் சாட்சி பூதமாகக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது வேதாந்தத்தின் லட்சியம். காண்பதையும், நடப்பதையும் உண்மையென்று நம்பி விடக்கூடாது என்பது அதன் நோக்கு. இந்த லட்சியம் கலை பற்றி, முக்கியமாக எழுத்துக் கலை பற்றி, எத்தனை தூரம் உண்மை என்பது சிந்தித்துப் பார்த்தால் தெரியவரும். மேலும் அவர் சொல்கிறார்:"என் ஆன்மீகமான ஆனந்தத்தின் விளைவாக எழுதப்பட்ட என் கதைகளையோ, கவிதைகளையோ, நாடகங்களையோ, நாவல்களையோ யார் அங்கீகரிக்க மறுத்தாலும், அதனால் சமுதாயத்திற்கோ மற்றவர்களுக்கோ ஒரு லாபமும் இல்லை என்று யார் ஒதுக்கி விட்டாலும் எனக்கு இதைவிடச் சிறந்த அனுபவம் வேறில்லை - வேறு அவசியம் என்றும் நான் நினைக்கவில்லை.''

நான் தெரிந்து பழகின தமிழ் எழுத்தாளர்களில் அவரைப்போல பரவலாகவும் ஆழமாக, ஆம், ஆழமாகவும் ரஸனை அடிப்படையில் உலக இலக்கியத்தில் ஒரு பரிச்சயம் உடையவரை நான் காணவில்லை. இங்கு ஒன்று சொல்ல வேண்டும். அவர் எதைப் படித்தாலும் அதைப் பற்றித் தீர்க்கமாகச் சிந்தித்துத் தனக்கு என்று ஒரு தனிப் பார்வையை வகுத்துக் கொள்கிறார்.

''இலக்கிய வட்டம்'' 17.01.1964 இதழில் ''உலக இலக்கியம் - 2'' என்ற தலையங்கக் கட்டுரையில் அவர் வருமாறு எழுதுகிறார் : ''நான் எழுதுவதற்கு எதுவும் படிப்பது அவசியமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது என்று சில ஆசிரியர்கள் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். இது பற்றி இரண்டு அபிப்பிராயங்கள் சொல்லலாம். ஆனால் கலைக்கும் சிருஷ்டிக்கும் படிப்பு உதவுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை...படிக்கப் பயிற்சி செய்து கொள்ளாத இலக்கிய ஆசிரியன் சில சமயம் மட்டமானதையும் உயர்ந்தது என்று எண்ணி ஏமாந்து விடுவான். தன் எழுத்தில் மட்டுமில்லை மற்ற எழுத்திலும் தரம் பார்க்க அவன் அறியாது இருந்து விடுவான். அதற்காக வேணும் படிக்கப் பயிற்சி செய்து கொள்வது இலக்கிய ஆசிரியனுக்கும் நல்லது - மற்றவருக்கும் நல்லது.''

நான் பழகிய பல தமிழ் எழுத்தாளர்கள் - உலக இலக்கியத்தை விட்டுத் தள்ளுங்கள் - தங்கள் படைப்புகளைப் பற்றி ஒரு பரவச நிலையில் பேசுபவர்கள். தமிழிலேயே பிற எழுத்தாளர்களை அநேகமாகப் படிப்பதில்லை. தங்களைத் தாண்டி என்ன இருக்கிறது, இருக்கலாம் என்ற ஒரு போதை. இந்த வகையில் இயங்கும் எழுத்தாளர்களில் ஒவ்வொரு எழுத்தாளனும் ஏதோ ஒரு நல்ல நாவலை எழுதிவிட்டுத் தான் தமிழ் இலக்கியத்தின் சிகரத்தை தொட்டு விட்டதாகத் தான் நினைக்கிறான். க.நா.சு இதற்கு விதிவிலக்கு.

அவருடன் நான் பேசிய தருணங்களில் நான் ஏதாவது மாறான அபிப்பிராயத்தைச் சொன்னால் அதை கவனமாகக் கேட்பார், அதில் சாரம் இருந்தால் ஏற்றுக்கொள்வார். நான் ஏதாவது அசம்பாவிதமாகச் சொன்னால், ''இருக்கலாம். துரைஸ்வாமி. எனக்குச் சரியாகப்படவில்லை,'' என்று சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார். அவருடைய அபிப்பிராயத்தில் இலக்கியப் படைப்பதும் ஒரு தொழில். மற்ற தொழில்களில்போல், இதற்கும் சுயமாக உள்ள ஒரு ஆற்றலைத் தவிரப் படிப்பு, கடினமான உழைப்பு இவை அவசியமென்று நினைக்கிறார். மேலும், அவர் ''இலக்கிய வட்டம்'' 24/4/1964 இதழில் ''இலக்கிய ரஸனை'' என்ற தலையங்கத்தில் வருமாறு எழுதிகிறார். ''இலக்கியத்தில் இன்று உள்ளதை மட்டும் வைத்து ரஸனையோ விமர்சனமோ கிடையாது. பாரம்பரியம், மரபு பூராவையும் வைத்துத்தான் விமர்சனமும், ரஸனையும் தோன்ற முடியும்.''

(இன்னும் வரும்....)

8.12.10

லதாமகன் கவிதை

மழைபொழியும் நாளை
ஐஸ்கிரீம் வழிய
நீ பார்த்துக் கொண்டிருந்த
போதுதான்
என்
முதல் கவிதையை எழுதினேன்
நான்
o
அழும் குழந்தையை
அணைத்து சமாதனப்படுத்துவாய்
எப்பொழுதும்
மழை பொழியும் போதெல்லாம்
அழும் குழந்தாய் மாறிவிட
ஆசை எனக்கு
o
உன் கூந்தல்
வழிந்த மழையைத்தான்
தேனென சேகரித்துப்
போகிறது
தேனீக்களெல்லாம்.
o
நட்சத்திரங்களின்
எண்ணிக்கைக்கு முத்தமிடுகிறாய்
மழை நாளில்
மழை பொழிந்த வானாகிறேன்
முத்த நாளில்.
o
ஒற்றைக்குடைக்குள்
நீயும் நானும்
ஒண்டிக்கொண்டிருக்க
நிலமெல்லாம்
பூக்கள் தூவும்
காதலின் மழை
oOo

7.12.10

லதாமகன் கவிதை

குட்டி மீனைப்போல்
வாய்திறந்து பாடத்தொடங்குகிறாள்
சந்தியாக்குட்டி
ஸ்வரங்கள் தப்பிய
குரலுக்கு ஏற்ப
தன் ஸ்வரங்களை மாற்றிக்கொள்கிறது
இசை
o
டம் டம் சத்தத்தில்
ஆடத் தொடங்கும் கால்கள்
சந்தியாவுடையவை.
ஆடிமுடித்து
அப்பா என ஓடி வந்து
வெட்கத்துடன்
அணைத்துக் கொள்ளும்போதுதான்
முழுமையடைகிறது
எனக்கான நடனம்.
o
நீரை அள்ளி
கடலுக்குள் தெளித்துக் கொண்டிருக்கிறாள்
சந்தியாக்குட்டி
ஸ்பரிசங்களில் தன்
பிறப்பிடம் அறிகிறது
முன்னாள் மழை.
o
பப்லுக்குட்டிக்கு மம்மு என
பொம்மைக்கு
புட்டிப்பால் ஊட்டுகிறாள்
சந்தியாக்குட்டி
அகலச் சிரித்து
உடலெங்கும் பாலாகிறது
பப்லுகுட்டி.
o
எங்கள் எல்லோரையும்போல்
நடித்துக் காட்டுவாள்
சந்தியாக்குட்டி
அவளைப்போல்
வாழ்வதற்கு
இன்னும் யாரும் பிறக்கவில்லை.
oOo

5.12.10

க நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்.......1


(பட்டியல்கள் தொடர்ச்சி......)

- அசோகமித்திரன்


க.நா.சு இல்லாமலும் இவர்கள் நன்றாக எழுதியிருப்பார்கள். எழுதினார்கள். க.நா.சு எடுத்துக் கூறுவதற்கு முன்புகூட இவர்களுக்கு உண்மையான ரசிகர்கள் இருந்திருக்கக்கூடும். ஆனால் க.நா.சுவால்தான் இவர்கள் பற்றி விமரிசனப் பூர்வமாக ஒரு ரசிகர் பார்வை உண்டு பண்ண முடிந்தது. மெளனியின் கதைகளுக்கும் நீல பத்மநாபனின் 'தலைமுறைகள்' நாவலுக்கும் அப்படைப்புகளையும், அப்படைப்பாளிகளையும் சிறிதும் பிடிக்காததோர் மத்தியில் கூட அவை இலக்கியமே என்று ஒத்துக்கொள்ளக் கூடிய சூழ்நிலை இன்றிருக்கிறதென்றால், அது க.நா.சுவின் திட்டவட்டமான, முறையான வாதங்கள் நிறைந்த விமர்சனங்களால்தான். அதேபோல ஜனரஞ்சங்கத் தன்மையே இலக்கிய நயமாக என்றென்றும் நியதியாகிவிடும் தமிழ் எழுத்துத்துறை வரை என்று மலைப்பூட்டிய நாளில் அந்த ஜனரஞ்சகப் படைப்புகள் பற்றித் துணிவாகவும், திட்டவட்டமாகவும், அறிவுபூர்வமாகவும் எடுத்துக் கூறிய பெருமை க.நா.சுவுடையதுதான். அவர் அறிவுபூர்வமாகத் தன் கணிப்புகளை எடுத்துக் கூறுவது - அவைகளுக்கு மறுப்புக் கூற இடமில்லாமல் அவர் வாதங்கள் இருப்பதால் - எவ்வளவோ பேருக்கு கோபமூட்டியிருக்கிறது, கோபமூட்டுகிறது.

க.நா.சுவுக்கு இப்படியும் ஒரு பெயர் உண்டு. அவர் இருப்பதும் இல்லாததுமாக ஆங்கிலத்தில் எழுதி, ஆங்கிலப் பத்திரிகைகளில் ஆதிக்கம் செலுத்துகிறார் என்று. க.நா.சு பல ஆங்கில வெளியீடுகளில் பல கட்டுரைகள் தற்காலத் தமிழ் இலக்கியத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். ஆனால் அந்த வெளியீடுகள் அவருக்கு மாறுபட்ட கருத்துகளை வெளியிடத் தடை விதித்ததில்லை.

தமிழ் இலக்கிய உலகைப் பற்றிக் க நா சு ஒருவரால்தான் ஆங்கிலத்தில் எழுத முடியும் என்றில்லை. அவரைவிட அந்த மொழியில் திறமையும் செல்வாக்கும் உள்ளவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எப்போதோ ஒரு முறை, அதுவும் க.நா.சு ஆரம்பித்த ஒரு சர்ச்சைக்கு பதிலடி போலத்தான் எழுதியிருக்கிறார்கள். ஆனால் தொடர்ச்சியாக, வருஷக் கணக்கில் அதுவும் முப்பதாண்டுகளுக்கும் மேலாக, அதே கோபத்துடன், அதே தீவிரத்துடன் எழுதவில்லை.

குறிப்பாக அவர்களே ஒரு இலக்கியப் பார்வை அமைத்துக்கொண்டு அப் பார்வையைப் பிறருக்குத் தெரியப்படுத்துவதில் க.நா.சு கொண்டிருக்கும் அயராத தீவிரத்துடன் செயல்படவில்லை. பல ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒன்றில் தீவிரத் தன்மை கொண்டிருப்பது அந்த ஒன்றில் அந்த நபர் கொண்டிருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையையும், அக்கறையையும்தான் காட்டும். க.நா.சுவின் கருத்துகள், கணிப்புகள் எப்படியாயினும் தமிழ் இலக்கியத் துறையில் அவருக்குள்ள நம்பிக்கையையும் அக்கறையையும் முப்பதாண்டுப் பணியின் நிரூபணம் ஆகியிருக்கின்றன. தமிழ் மொழி அல்லாதோர் மத்தியில் தமிழ் இலக்கியம் கவனத்தையும் கணிப்பையும் பெற்ற வருகிறதென்றால், அது க.நா.சுவும் அவர் போன்றோரும் தமிழ் இலக்கியம் பற்றி வேறு மொழிகளில் எழுதுவதால்தான். விஞ்ஞானப் பார்வை எல்லாத் துறையிலும் வளர்ந்திருக்கும் இந்த இருபதாம் நூற்றாண்டில் ஒருவர் முதன் முதலாக ஏதோ கூறியிருக்கிறார் என்பதால் மட்டும் அது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் ஒருவர் எடுத்துக் கூறுவதால்தான் அப்பொருள் பற்றி மேற்கொண்டு பரிசோதனை நடத்த ஒரு தளம் அமைகிறது. ஆதலால் முதன் முதலாக ஒன்றைப் பற்றி ஒருவர் கூறும் கருத்தும், கணிப்பும் முக்கியத்வமும், மதிப்பும் பெறத்தான் செய்கின்றன.

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்துவிட்டு ஸ்பெயின் திரும்பினார். அவருக்கு விருந்து. ஆனால் ஸ்பெயின் பிரபுகளுக்கு கொலம்பஸ் மீது மிகுந்த அலட்சியம். அந்த விருந்திலேயே அவர் காது கேட்க 'அப்படி என்ன பிரமாதமாக இவன் சாதித்துக் கிழித்து விட்டான்' என்று பரிமாறிக் கொண்டார்கள். கொலம்பஸ் விருந்து முடியும் தறுவாயில் ஒரு முட்டையை உங்களால் செங்குத்தாக நிற்கச் செய்ய முடியுமா?'' என்று கேட்டார். பிரபுக்கள், சீமாட்டிகள் அனைவரும் விருந்து மேஜை மீது முட்டைகளைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தார்கள். இறுதியாக ''நீ செய்து காட்டு, பார்ப்போம்,'' என்றார்கள். கொலம்பஸ் தன் கையிலிருந்த முட்டையின் ஒரு நுனியைச் சிறிது தட்டி விட்டார். முட்டை இப்போது செங்குத்தாக நின்றது. ''இது என்ன பிரமாதம்?'' என்றார்கள் பிரபுக்கள். ''முற்றிலும் உண்மை. ஒருவர் செய்து காட்டிவிட்டால் அப்புறம் எதுவும் பிரமாதம் இல்லைதான்,'' என்று கொலம்பஸ் கூறினார்.

தற்காலத் தமிழ் இலக்கியத்தைத் தரம் பிரித்து இனம் கண்டுகொள்ள வாசகர்களுக்கு ஒரு சூழ்நிலை ஏற்படுத்துவதில், அளவிலும் தரத்திலும் தொடர்ந்து ஊக்கம் குன்றாமலிருத்தலிலும் க.நா.சு ஆற்றிய பணிக்கு நிகராக இன்றுவரை யாரும் பணி புரியவில்லை. இந்த விதத்தில் அவர் துணையில்லாதவர். தனியர்.
(நன்றி : கசடதபற பிப்ரவரி 1972)

3.12.10

ஆத்மாநாம் கவிதைகள் இரண்டு

கவிதை தலைப்பிடப் படாதது

இந்தக் கவிதை
எப்படி முடியும்
எங்கு முடியும்
என்று தெரியாது.

திட்டமிட்டு முடியாது
என்றெனக்குத் தெரியும்
இது முடியும்போது
இருக்கும் (இருந்தால்) நான்
ஆரம்பத்தில் இருந்தவன் தானா

ஏன் இந்தக் கேள்வி
யாரை நோக்கி

இன்றிரவு உணவருந்தும்
நம்பிக்கையில் இங்கிருப்பேன்

இப்படியும் ஒரு நம்பிக்கை

இருந்த நேற்று
எனக்கிருண்ட கணங்கள்

அவற்றின் தவளைக் குரல்கள்
கேட்கும் அடிக்கடி

அதனை ஒதுக்கத் தெரியாமல்
தவிக்கையில்

நிகழ்ச்சியின் சப்தங்கள்
செவிப்பறை கிழிக்கும்

நாளை ஓர் ஒளிக்கடலாய்
கண்ணைப் பறிக்கும்

இருதயம்
இதோ இதோ என்று துடிக்கும்.


இன்னும்


புறாக்கள் பறந்து போகும்
கழுத்திலே வைரத்தோடு
கிளிகளும் விரட்டிச் செல்லும்
காதலின் மோகத்தோடு
காக்கைகள் கரைந்து செல்லும்
தானியம் தேடிக்கொண்டு
குருவிகள் கிளுகிளுப் பூட்டும்
கிளைகளில் தவழ்ந்து கொண்டு
பாசிக் கரை படர்ந்த
தாமரைக் குளத்து நீரில்
நீளக்கால் மெல்ல அளையும்
கரை நிழல் கீழமர்ந்து.
பழங்களைக் கடித்துத் தின்ற
அணில்களும் அவ்வப்போது
கேள்விகள் கேட்டாற் போலத்
தலைகளைத் தூக்கிக் காட்டும்
சிவனருள் பூசாரி
குடத்தில் நீரெடுப்பார்
மந்திரம் சொல்லும் வாயால்
தம்மையே நொந்து கொண்டு
கற்புடைப் பெண்டிற் கூட்டம்
அக்கரைக் கற்கள் மீது
ஊர்க் கதை பேசிக்கொண்டு
துணிகளைத் துவைத்துச் செல்லும்
வயல்களுக்கப்பால் இருந்த
சூரியன் மேலே சென்றான்
எருமைகள் ஓட்டிச் சென்ற
சிறுவனின் தலையில் வீழ்ந்தான்.

2.12.10

எதையாவது சொல்லட்டுமா / 32

நான் கடைசியாக நாராணோ ஜெயராமனைப் பார்த்தது தி நகரில் உள்ள ஒரு துணிக்கடையில். அப்போது அவர் எழுதுவதை almost நிறுத்திவிட்டார். பிரமிள்தான் அவர் அங்கு இருப்பதை சொல்லி என்னை நா ஜெயராமனுக்கு அறிமுகப்படுத்தினார். ஜெயராமன் ஜெயின் கல்லூரியில் கெமிஸ்டிரி டிபார்ட்மெண்டில் டெமான்ஸ்டிரேட்டராகப் பணி ஆற்றிக்கொண்டிருந்தார். பின் ஒரு நண்பருடன் சேர்ந்து பார்ட்டனராக ஒரு துணிக்கடை வைத்திருந்தார். அது அவருக்குப் பொருத்தமில்லாத பணி. மேலும் அந்த இடத்தில் எதுவும் போணி ஆகாது. சில பதிப்பாளர்கள் அங்கு புத்தகக் கடை வைத்துக்கூட போணி ஆகாமல் கடையை இழுத்து மூடி விட்டார்கள்.

வேலி மீறிய கிளை என்ற 48 கவிதைகள் கொண்ட தொகுப்பை க்ரியா 1976 நவம்பரில் நாரோணோ ஜெயராமன் புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதன் பின் அவர் பெரிதாக எதுவும் எழுதவில்லை என்றுதான் தோன்றுகிறது. அவர் எழுத முடியவில்லை என்பதற்கு சொன்ன காரணம்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது.

'எதற்கு எழுத வேண்டும்? ஜே கிருஷ்ணமூர்த்திதான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாரே?' என்றார். 'ஏன் ஞானக்கூத்தன், அசோகமித்திரன் கூட எதுவும் எழுத வேண்டாம். அதுதான் ஜே கிருஷ்ணமூர்த்தி ஒரு மாற்று மாற்றி விட்டாரே உலகத்தை.' நா ஜெயராமனின் இந்தப் பேச்சு சங்கடமாக இருந்தது. ஜெயராமன் 48 கவிதைகளுடன் நின்றுவிட்டார். குறிப்பிடும்படியாக சில கதைகளும் எழுதி உள்ளார். சா கந்தசாமி நாவல் போல் தொலைந்து போனவர்களில் ஜெயராமனும் ஒருவர்.

அவர் புத்தகம் இனி வருவதற்கு வாய்ப்பில்லை. க்ரியா இன்னொருமுறை அவர் கவிதைத் தொகுதியை வெளியிடுமா என்பது தெரியவில்லை. அப்படி வெளியிட்டாலும் யார் இந்த ஜெயராமன். ஜெ கிருஷ்ணமூர்த்தியை தப்பாப் புரிந்துகொண்டு பல எழுத்தாளர்கள் எழுதாமல் போய்விட்டார்கள். பிரமிளால் ஒரு நாவல் எழுத முடியவில்லை. ஜே கிருஷ்ணமூர்த்தி தத்துவம் உள்ளே புகுந்து எழுத்தை எழுதவிடாமல் பண்ணிவிட்டது. அல்லது எழுதுவதில் எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விட்டது.

எனக்கு ஜெயராமனின் 48 கவிதைகளாவது இதைப் படிப்பவர்கள் படிக்க வேண்டுமென்ற எண்ணம். அதனால் நான் கொஞ்சம் ஜெயராமனை இதில் இயங்க வைக்கிறேன்.

1. அமிழல்

ஆடாத கிளைமேல்

கரையாமல், சிறகு பரத்தி,

தலை தாழ்த்தி, நீட்டிய அலகால்

இடம், வலமெனச் சொறிந்து நின்றது - காகம்

இருகூறு என இருபக்கம் பிரிந்த

இறகுகள் தொய்ந்து விழும்நிலை பெற்றன-

அகம் பார்க்கும் நிலை இதுவெனத் தெளிவு.


2. நிலை


அமர்ந்திருக்கும் வரப்பு.

வரப்பின் மேல் சிலுக்கும் செடி.

அரக்குச் சிவப்பாய்

ஒளிரும்

மேற்குச் சிதறல்கள்.


அண்ணாந்த கண்

தொலைவில் அதிசயிக்க

வேகம் கொள்ளும் பறவைகள்.


வடப்புறத்தில் நீர்த்தடங்களாய்

முயங்கிக் கிடக்கும் உருவங்கள்.

தொலைவில் மேயும் மாடு.

கன்று

எல்லாமே ஸ்தம்பித்து நிற்கின்றன.

எங்கோ மூலையில்

கட்டிப் போட்ட

வீட்டு நாய் மட்டும்

குரைத்துக்கொண்டே யிருக்கிறது.


3. வானளாவி நின்று


இந்த வானிற்கும்

என் முகம்தான் போலும்!

குளுமையாய் கொஞ்சம் பச்சை.

அல்லது

இள நீலம்.

நரம்பு முறுக்க செஞ்சிவப்பு.

துக்கம் முட்டச் சாம்பல்

நுரை ததும்ப வெள்ளை என

நிறம் காட்டி

வெளியாய் விரிந்து.......

(இன்னும் வரும்)

1.12.10

இரண்டு கவிதைகள்

பிறந்தநாள் 58

ஓடிவிட்டன

நாட்களும், மாதங்களும், ஆண்டுகளும்

கழுத்தில் சுருக்கம்

இளமை இன்னும் மாறவில்லை

என்று அப்போதிருந்து சிந்தனை

ஓட்டம் ஒரே மாதிரிதான்

வானத்தில் நட்சத்திரம் மின்ன

தூரத்தில் தெருநாய் குரைத்தது

வேடிக்கையாக யாரோ

கொட்டாவி விட்டனர்

இன்று 58

@@@@@@@@

ஒரு ரோஜாப்பூவை

சூடிக்கொண்டிருந்த பெண்

என்ன நினைக்கிறாள்

சீர்காழி பஸ்ஸில் ஏறி

சிதம்பரம் போகிறாளா?

வழியில் எங்காவது

இறங்கி விடுவாளா?

அலுவலகம் போகிறாளா?

வகுப்பிற்குச் செல்கிறாளா?

வீட்டிற்குத்தான் போகிறாளா?

ஒற்றை ரோஜா

புத்தம்புது மலராய் மினுமினுக்க

அவள் கன்னத்திலும்

சிவப்பை அள்ளித் தெளித்திருந்ததா?

28.11.10

அவர்கள்..

*
அதன் பிறகு அவர்கள் வரவேயில்லை

ஒரு மௌனத்தை உடைத்து
நிழலை வெயிலில் ஊற்றிய பிறகு

ஒரு கோரிக்கையை
கிழித்துக் குப்பையில் எறிந்தபிறகு

ஒரு புன்னகையின்
அகால மரணத்துக்குரிய
ஈமக் காரியங்களுக்கு பிறகு

கனவின் கூச்சல்களை
மொழிப்பெயர்த்து வாசித்துக் காட்டிய
மனப் பிறழ்வுக்கு பிறகு

ஒவ்வொன்றின் உதிர்விலும்
தடயமற்று போவதிலும்
இருந்த அவர்கள்

அதன் பிறகு
வரவேயில்லை..

26.11.10

சாட்சிகளேதுமற்ற மழை

கதவு யன்னல்களிலிருந்து

வழிகின்றன முகங்கள்

கொட்டப்படும் நீர்த்தாரைகளைப் போல


கைகளில் கட்டப்பட்டிருக்கும்

நுண்ணிய கயிறுகளை அவிழ்த்துக் கொண்டு

பார்த்திருக்கும் அவற்றின் விழிகளில்

நிழலாக அசைகின்றன

பாதையோர மரங்களும்

ஈரப் பறவைகளும் மழையும்

ஒரு தெருச் சண்டையும்


புன்னகையும் சிரிப்பும் எள்ளலும்

சுழிப்பும் முணுமுணுப்பும்

அருவருப்பும் கலந்த உணர்ச்சிகள்

மழைச்சாரலிடையில்

அங்கிங்கு தாவும் தவளைகளைப் போல

அவதானித்திருக்கும் முகங்களில் மாறிட

பேய்களின் வாய்களுக்கெனவே

பிறப்பெடுத்தவை போல

வெளியெங்கும் வீச்சமேற்றுகின்றன

பிணங்களின் வாடையுடனான

அழுக்கு மொழிகள்


இடி வீழ்ந்து

இலைகள் கிளைகள் எரிய

மொட்டையாகிப்போன மரமொன்றென

நடுத்தெருவில் நின்று ஓலமிட்டழுதாள்

மேலாடையுரிக்கப்பட்ட குடிகாரனின் மனைவி

புதைக்கப்பட்ட விரல்களில்

புழுக்களூர்வதைப் போல

நேச உணர்வேதுமற்றவன்

தன் தாக்குதலைத் தொடர்ந்தான்


நத்தைகள் ஆமைகளைப் போல

தங்களை உள்ளிழுத்து

கதவுகளைப் பூட்டிக்கொண்டன

தெருவில் நிகழ்ந்த

கொலையைக் கண்டமுகங்கள்

எதையும் காணவில்லையென்ற

பொய்யை அணியக்கூடும்

இனி அவர்தம் நாவுகள்

பூனைகள்.....பூனைகள்.......பூனைகள்.....பூனைகள்...30

சாபம்

வைதீஸ்வரன்

என்
காலடியில் ஒரு பூனை
கடவுளை வேண்டித்
தவம் இருக்கிறது
என் கை தவறி விழும்
இட்டிலிக்காக.

அதன்
தவத்தை உண்மை யாக்க
நான் குட்டிக் கடவுளாகி
இட்டிலியைத்
தவற விடுவேன்.
பல தடவை நான்
கோணங்கிக் கடவுளாகி
இட்டிலியை கைவிடாமல்
கட்டை விரல் காட்டுவேன்

பொறுமை வறண்ட பூனையின்
அரை வெள்ளைக் கண்களில்
ஒரு நரகம் தெரியும்
விரல் முனையால் சிறிது
பல் முளைக்கும்.

நள்ளிரவில்
இருள் அறுக்கும் ஓலம்
பூனைக் குரவளைக்குள்
ஓரெலியின் இரத்தம்
பீச்சி யடிக்கும்.

கனவுக்குள் நான்
எலியாகி இறந்த பின்பும்,
விழித்துப்
பதறிக் கொண்டிருப்பேன்.
ஏனென்று தெரியாமல்

24.11.10

லதாமகன் கவிதை

அந்த நிலத்தில்
ஒரு பொம்மை இருந்தது.

பிறகு
ஒரு குடில் இருந்தது

பிறகு
ஒரு இடிபாடு இருந்தது

பிறகு
சில பிணங்கள் இருந்தது

பிறகு
ஒரு பங்கீடு இருந்தது

பிறகு
நிறைய சமாதி இருந்தது

பிறகு
ஒரு பிரளயத்தில் எல்லாம் அழிந்தது

பிறகு
அங்கு கடவுள் வந்தார்.

21.11.10

நான், பிரமிள், விசிறி சாமியார்....16

பிரமிள் அடிக்கடி என்னை சந்திக்காமலே பல மாதங்கள் இருப்பார். சில சமயம் அடிக்கடி சந்தித்துக் கொண்டும் இருப்பார். பக்கத்தில் சந்திக்கும் தூரத்தில் இருந்தாலும் கடிதங்கள் எழுதிக் கொண்டிருப்பார். ஒரு சமயம் சந்திக்காத சமயத்தில் நான், குவளைக்கண்ணன், யுவன், தண்டபாணி நால்வரும் டிரைவ் இன்னில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தோம். தூரத்தில் பிரமிள் வேறு சில நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். நான் அவரை கவனிக்கவில்லை.

அப்போதுதான் பிரமிள் என்னைப் பார்க்க விரும்புவதாக அவருடன் இருந்த ஒரு நண்பர் மூலம் சொல்லி அனுப்பினார். நான் அவர் வந்திருப்பதை அப்போதுதான் கவனித்தேன். என் நண்பர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு பிரமிள் இருக்குமிடத்திற்கு வந்தேன்.

அவரைத் திரும்பவும் பார்க்கும்போது, என்னை அறியாமலேயே ஒருவித பரிதாப உணர்வு எனக்கு ஏற்பட்டது. இதுமாதிரி அனுபவம் எனக்கு ஆத்மாநாமை ஒரு முறை ஞாநி இருக்குமிடத்தில் ஒரு கூட்டத்தில் சந்திக்கும்போது ஏற்பட்டது. அதேபோல் கோபிகிருஷ்ணனைப் பார்க்கும்போது ஏற்படும். காரணம் புரியாது.

பிரமிள் அப்போது தேவதேவன் உடல்நிலை பாதிப்பு அடைந்ததைப் பற்றி சொன்னார். கேட்கும்போது வருத்தமாக இருந்தது. தேவதேவன் மென்மையான மனிதர். அழகான கையெழுத்தில் அவர் அதிகமாக கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பார். ஆரம்பத்தில் விருட்சம் ஒவ்வொரு இதழிலும் அவர் கவிதைகள் அனுப்பாமல் இருக்க மாட்டார். பிரமிள் மதிக்கக்கூடிய கவிஞர்களில் தேவதேவனும் ஒருவர்.

''சரி, உங்கள் நண்பர்களுடன் நீங்கள் பேசிக்கொண்டிருந்தீர்கள்...நான் உங்களைக் கூப்பிட்டு தொந்தரவு செய்துவிட்டேன். நீங்கள் போங்கள்...'' என்று என்னை அனுப்பி விட்டார்.

நான் திரும்பவும் என் நண்பர்களிடம் வந்து, அவர்தான் பிரமிள் என்றேன். அவர்களுக்கும் அவரைச் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் இருந்தது. எல்லோரும் கிளம்பும்போது, பிரமிளும் அந்த இடத்தைவிட்டுக் கிளம்பி விட்டார். அப்போது என் பக்கத்தில் வந்தவரை, 'இவர்தான் குவளைக்கண்ணன்,' என்று குவளைக் கண்ணனை அறிமுகப் படுத்தியதாக நினைப்பு. பிரமிள் அவரைப் பார்த்து,'இப்போது அமெரிக்காவில் உறவு என்பது சாத்தியம் இல்லாமல் இருக்கிறது...எல்லாம் பணம்...பணம் கொடுத்தால் பேசுவதற்கு நண்பர்கள் கிடைப்பார்கள். சிறிது நேரம் பேசுவதற்கு பணம் கொடுக்க வேண்டும். அவர்கள் சிறிது நேரம் நம்முடன் இருந்துவிட்டுப் பேசிவிட்டுப் போய்விடுவார்கள்...வயதானவர்களுக்கு யாரும் பேசுவதற்குக் கிடைக்க மாட்டார்கள். குறிப்பாக இளைஞர்கள் கிடைக்க மாட்டார்கள்....'' என்றார்.

பின் நாங்கள் வாசல் பக்கமாக நகர்ந்து வந்தோம். எதிரில் பிரமிளுக்குத் தெரிந்த ஒரு இலக்கிய நண்பர் வந்தார். அவர் பிரமிளைப் பார்த்து, 'ஹலோ..' என்றார். உடனே பிரமிள் அவரைப் பார்த்து பயந்து ஓடுவதைப் போல் ஒதுங்கிப் போனார். அந்தக் காட்சி விசித்திரமாக இருந்தது. இதுதான் பிரமிள். அவருக்குச் சிலரை சிலசமயம் பிடிக்கும். சிலசமயம் பிடிக்காது.
(இன்னும் வரும்)

அது என்ற ஒன்று..

ஒவ்வொரு துரிதக் கணத்திலும்
நீங்கள் ஒன்றைத் தவறவிடுவீர்கள்
அது
உங்களின் ஒரு பகுதி என்பதை
நம்ப மறுப்பீர்கள்

அதை
ஏற்றுக் கொள்வதில் இருக்கும்
அசௌகரியத்தை
வாதிட்டு வென்று விடுவீர்கள்

பாதுகாப்பைக் கோரும்
ஒரு அபலையின் நடுங்கும் விரல்களைப் போல்
அது
உங்கள் அறைக்குள் ஓர் இடம் தேடி
அலைவதை
கவனிக்க மறந்து விடுவீர்கள்

உங்கள் துயரத்தின் பாடலை
அது ரகசியமாய் சேமித்து வைத்திருக்கும்

உங்கள் தோல்வியின் குறிப்புகளை
அது உங்கள் முதுகுக்குப் பின்புறமிருந்து
எழுதிக் கொண்டிருக்கும்

உங்கள் மௌனங்களுக்குள் நீங்கள் கேட்டிராத
முனகல்களை
இழைப் பிரித்துக் கோர்த்து வைத்திருக்கும்

அது ஒரு
சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கும்
உங்களை நோக்கி ஒரு பிரகடனத்துக்காக
உங்கள் மீதான ஒரு புகாருக்காக
நீங்கள் தான் உங்களின் அவமானம்
என்பதை உரைப்பதற்காக

அது
காத்துக் கொண்டிருக்கும்

ஒவ்வொரு துரிதக் கணத்திலும்
நீங்கள் தவற விடும்
அந்த ஒன்று
உங்களின் ஒரு பகுதி என்பதை
இப்போதும்
நம்ப மறுப்பீர்கள்..!

வீடு

மூதாதையர்கள் வாழ்ந்த இடம்
நாங்களனைவரும் வளர்ந்த இடம்
ஓடிவிளையாட நிறைய மறைவிடங்கள்
இருந்த இடம்
எப்பொழுதும் சந்தன வாசம்
கமழும் இடம்
சமையலறையில் விறகு அடுப்பு
அணைக்கப்படாமல்
சதா எரிந்து கொண்டேயிருந்த இடம்
தாத்தா, பாட்டி புழங்கிய பொருட்களால்
அவர்களது ஞாபகங்களை மீட்டெடுக்கும்
பணிகளைச் செய்த இடம்
வீசிய புயலுக்கு தாங்காமல்
ஆங்காங்கே விரிசல் கண்டது சுவர்கள்
இதோ பொக்லைன் இயந்திரம்
தரைமட்டமாக்கிக் கொண்டுள்ளது
எங்கள் பொக்கிஷத்தை
இனி எங்கள் ஞாபகங்களில் தான்
வாழும் இந்த வீடு.

20.11.10

எதையாவது சொல்லட்டுமா - 31

இங்கு இதுதான் எழுத வேண்டுமென்பதில்லை. மனதில் படும் எதையாவது எழுதுவதுதான் இந்தப் பகுதி. அதை எல்லோரும் படிக்கும்படியாக எழுத வேண்டும். இதுதான் என் நோக்கம். உண்மையில் தினமும் எதையாவது எழுதலாமா என்று யோசிப்பதுண்டு. ஆனால் முடிவதில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சில நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன். சி சு செல்லப்பா சென்னை திருவல்லிக்கேணியில் தனியாக வீடு வாடகை எடுத்துக்கொண்டு அவருடைய மனைவியுடன் வந்துவிட்டார். இருவரும் வயதானவர்கள். முடியாதவர்கள். சி சு செல்லப்பாவின் புதல்வர் பங்களூரில் தன் குடும்பத்துடன் வசித்து வந்து கொண்டிருந்தார். சி சு செவால் புதல்வருடன் இருக்க முடியவில்லை. துணிச்சலாக வந்து விட்டார். கூட அவருடைய உறவினர் சங்கரசுப்பிரமணியன் வசித்து வந்தார். சங்கரசுப்பிரமணியனின் தாயார் சி சு செல்லப்பாவின் மனைவியின் மூத்த சகோதரி. அவர் சென்னையில் இருந்த இந்தத் தருணத்தில்தான் நான் அவரைச் சந்தித்தேன்.

சி சு செல்லப்பாவை முதன் முதலாக க.நா.சுவின் இரங்கல் கூட்டம் போது சந்தித்தேன். அப்போது அவர் அழுக்கு வேஷ்டியும், சட்டையும் அணிந்திருந்தார். எளிமையான மனிதர். அந்தக் கூட்டத்தில் என்ன பேசினார் என்பது ஞாபகத்தில் இல்லை. ஆனால் படபடவென்று பேசிக் கொண்டிருந்ததாக தோன்றியது. சி சு செல்லப்பாவிற்கு க.நா.சுவை உண்மையாகப் பிடிக்காது. சி சு செ ஒருசிலரைப் பற்றியே அதாவது மணிக்கொடி எழுத்தாளர்களைப் பற்றியே சொல்லிக் கொண்டிருப்பார். மணிக்கொடி எழுத்தாளர்களைத் தவிர வேறு யாரும் எழுத்தாளர்கள் இல்லை என்று கூட சொல்வார். ஆனால் க.நா.சு அப்படி அல்ல. அவர் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களைப் பற்றியும் படித்துவிட்டு அபிப்பிராயம் சொல்வார். சி சு செ கொஞ்சம் பிடிவாதக்காரர். அவருக்கு இலக்கு பரிசு கிடைத்தபோது அதை அவர் வாங்கிக் கொள்ளவில்லை. ஆனால் அந்தப் பரிசுத் தொகையில் புத்தகம் கொண்டுவர வேண்டுமென்று விரும்பினார்.
அதுதான் சி சு செல்லப்பாவின் 'என் சிறுகதைப் பாணி' என்ற புத்தகம். அந்தப் பரிசு வழங்கும் தினத்தில் சிறப்பாகவே கூட்டம் நடந்தது. சிறுபத்திரிகையில் எழுதும் எழுத்தாளர்களைக் கூப்பிட்டு கெளரவம் செய்தார்கள். சி சு செல்லப்பா உற்சாகமாகப் பேசினார். ஆனால் சி சு செல்லப்பா அப்போது வந்து கொண்டிருந்த பத்திரிகைகளைப் படிப்பாரா என்பது சந்தேகம்.

ஒரு இலக்கியச் சிந்தனை நிகழ்ச்சியின்போது, சி சு செல்லப்பா அங்கு கூடியிருந்த பதிப்பாளர்களைச் சந்தித்து தன்னுடைய சுதந்திர தாகம் என்ற மெகா நாவலை பிரசுரம் செய்ய முடியுமா என்று கேட்டுக் கொண்டிருந்தார். யாரும் அந்தப் புத்தகத்தைப் போட தயாராய் இல்லை. அந்தத் தருணத்தில்தான் எனக்கு சி சு செல்லப்பா மீது இரக்க உணர்ச்சியே ஏற்பட்டது.

அவர் 80 வயதிற்குமேல் அந்தப் புத்தகத்தை தானாகவே வெளியிடும்படி நேர்ந்தது. அந்தப் புத்தகம் கொண்டுவர, மணி ஆப்செட்டை அவருக்கு அறிமுகம் செய்தேன். அவர்கள் புத்தகம் சிறப்பாக வர எல்லா உதவியையும் செய்தார்கள். சி சு செல்லப்பா அந்த வயதில் துணிச்சலாக அவர் புத்தகத்தை வெளியிட்டார். அவர் ஒரு சாதனை வீரர். அப்புத்தகம் பற்றி விமர்சனம் எல்லாப் பத்திரிகைகளிலும் வெளிவந்து அவருக்கு பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்தத் தருணத்தில்தான் நான் அடிக்கடி சி சு செல்லப்பாவை அவர் வீட்டில் சந்திப்பேன். வீட்டிற்கு வந்தவுடன் சாப்பிட எதாவது கொடுப்பார். சி சு செல்லப்பா அந்தக் காலத்தில் உள்ள நண்பர்களைப் பற்றி பேசுவார். பி எஸ் ராமையா மீது அளவு கடந்த அன்பு அதிகம். க.நா.சு, மெளனி பற்றி சிலாகித்துச் சொல்ல மாட்டார். க.நா.சு பற்றி அவர் சொன்ன ஒரு விஷயம் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. க.நா.சுவை சென்னையில் ஒரு இடத்தில் குடி வைக்க சி சு செல்லப்பா ஏற்பாடு செய்திருக்கிறார். க.நா.சுவால் வாடகைக் கொடுக்க முடியவில்லை. ஒரு சமயம் வீட்டுக்காரர் அவர் தங்கியிருக்கும் இடத்தைப் பார்க்க வந்தபோது அதிர்ச்சியாகி விட்டது அவருக்கு. க.நா.சு குடியிருந்த வீடு காலியாக இருந்ததோடு அல்லாமல், நாலைந்து மாத வாடகை வேறு தரவில்லையாம். வீட்டுக்காரர் சி சு செல்லப்பாவைப் பிடித்துக் கொண்டு விட்டார். சி சு செல்லப்பாவிற்கு க.நா.சுமீது கோபமான கோபம்.

இந்தச் சம்பவத்தை சி.சு செல்லப்பா என்னிடம் சொன்னபோது எனக்கு க.நா.சு மீதுதான் வருத்தம் ஏற்பட்டது. எந்த ஒரு நிலையில் அவர் வீட்டை காலி செய்திருக்க வேண்டும்?

19.11.10

எதையாவது சொல்லட்டுமா / 30

தீபாவளிக்கு அடுத்தநாள் என் இடது கண்ணைப் பார்க்க சகிக்கவில்லை. கண் வீங்கியிருந்தது. கண்ணில் வலியும் இருந்தது. எனக்கு பயம் வந்துவிட்டது. அன்று என் அம்மாவின் திதி. நானும் சகோதரனும் சேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அம்மாவின் திதியை நடத்துவோம். என்னைப் பார்த்தவுடன் என் சகோதரன்.

''என்ன மெட்ராஸ் ஐ யா?'' என்றான். பின் ''கிட்ட வராதே...எல்லாருக்கும் பரவிவிடும்'' என்று கூப்பாடு போட்டான்.

எனக்கு எப்படி இந்த நோய் வந்தது என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். புரியவில்லை. அன்று திதி முடிந்து அவன் வீட்டிற்கு என் சகோதரன் போனபோது அவனுக்கும் மெட்ராஸ் ஐ வந்துவிட்டது. இந்த மெட்ராஸ் ஐ எப்படிப் பொறுத்துக் கொள்வது என்பது தெரியவில்லை. நான் பெரும்பாலும் வசிக்கும் சீர்காழி வங்கிக் கிளையில் யாரோ ஒரு வாடிக்கையாளர் கருப்பு நிற கண்ணாடி அணிந்து வந்திருந்தான். அவன் மூலம் எனக்குப் பரவியிருக்க வாய்ப்புண்டா என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. கண்ணில் அழுக்குகள் சேர்ந்தால் அது மெட்ராஸ் ஐ ஆக மாறிவிடுமோ என்று தோன்றியது. என் கண் எப்போதும் சிவப்பாக இருக்காது. கண் சிவப்பாக மாறினால் அதற்குப் பல அறிகுறிகள் உண்டு என்று எனக்குத் தெரியும். உடலில் எதாவது குறை இருந்தால் கண் காட்டிக் கொடுத்துவிடும்.

எதாவது தப்பு செய்தால்கூட கண் காட்டிக்கொடுத்து விடும். எனக்கு ரமணரின் கண்கள் பிடிக்கும். தீர்க்க ஒளியுடன் தீட்சண்யமாக கண்கள் பளபளக்கும். அரவிந்தரின் கண்கள் சாந்தமாக இருக்கும். நடிகைகளில் ஸ்நேகாவின் கண்களைப் போல பிரகாசமான கண்களை நான் பார்த்ததில்லை.

என் மெட்ராஸ் ஐயால் எனக்கு சில அனுகூலங்கள். அலுவலகத்தில் முதலில் ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொண்டேன். பின் கண் வலி அவ்வளவாக தீரவில்லை என்பதால் இன்னொரு நாளும் எடுத்துக்கொண்டேன். இரண்டுநாள் விடுமுறையில் லைப்ரரி செல்வது என்று பல விஷயங்களை முடித்துக்கொள்ள பயன்படுத்திக்கொண்டேன். ஹூக்கின்பாதம்ஸ் சென்று ஒரு ஆண்டுக்கு முன் விற்பனைக்குக் கொடுத்தப் புத்தகப் பணத்தைக் கேட்டேன். எதுவும் ஒழுங்கில்லை. நான் கேட்காமலயே பணம் வரும் இடத்திலிருந்தும் பணம் வருவதில்லை. இப்போது கேட்டாலும் நடப்பதில்லை. அரசாங்க லைப்பரரியில் பத்திரிகை அனுப்பியதற்கு பில் அனுப்பினேன். போய் கேட்டேன். வரவில்லை என்று சொல்லி விட்டார்கள். போனில் எத்தனை முறை கேட்டாலும் அவர்கள் உதிர்க்கும் பதில் இதுவாகத்தான் இருக்கும். நான் திரும்பவும் விடுமுறை எடுத்துக்கொண்டு எனக்கு மெட்ராஸ் ஐ வந்தபிறகுதான் வரமுடியும். ஒருநாள் விடுமுறை எடுத்ததற்கே அலுவலகத்திலிருந்து போன் வந்துவிட்டது. 'மெட்ராஸ் ஐ ஆக இருந்தாலும் பரவாயில்லை. வாருங்கள்.' என்று கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். புதன் கிழமை சென்றேன்.

என் சகோதரனனும் 3 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு விட்டான். கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தபோது என் முகமா இது என்று திரும்பவும் கேட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். பல ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு நண்பரை அடிக்கடி பார்க்கப் போவேன். அவர்கள் வீட்டில் அந்த நண்பரின் தாய் என்னைப் பார்த்து பாக்கியராஜ் என்று கூப்பிடுவார். அவர்கள் சினிமா பார்க்க மாட்டார்கள். ஆனால் டிவியில் வரும் சினிமாவைப் பார்த்திருப்பார். சமீபத்தில் அவர் இறந்து விட்டார். நண்பரின் வீட்டிற்கு துக்கம் விஜாரிக்கச் சென்றேன். என்னை பாக்கியராஜ் என்று நண்பரின் அம்மா கூப்பிட்டதை அவர்கள் ஞாபகப் படுத்தினார்கள்.

எனக்கும் பாக்கியராஜுற்கும் மூக்குக் கண்ணாடியைத் தவிர எந்த ஒற்றுமையும் கிடையாது. நான் உயரம். கிட்டத்தட்ட 6 அடி. மேலும் பாக்கியராஜ் சற்று குண்டாக தோற்றம் தருவார். அவரை விட நான் நிறம் அதிகம். குரல் கூட வித்தியாசம் உண்டு.

என் அலுவலகத்தில் உள்ள ஒருவர் என்னைப் பார்த்து, 'ரவி சாஸ்திரி மாதிரி இருக்கேம்மா,' என்றார். என்னால் நம்ப முடியவில்லை.ரவி சாஸ்திரிக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஏதோ சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். சமீபத்தில் தலையில் வெள்ளை முடி அதிகமாக இருந்ததால் டை அடிக்கலாமென்று அடித்துக் கொண்டேன். என்னைப் பார்த்து என் அலுவலகத்தில் உள்ள ஒருவர் ஒரு நகைச்சுவை நடிகர் பெயரில் கூப்பிட ஆரம்பித்து விட்டார். திரும்பவும் அவருக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

திரும்பவும் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்துக்கொண்டேன். உண்மையில் நான் யார். அவர்கள் சொல்லும் ஒருவர் இல்லை.

எதையாவது சொல்லட்டுமா / 29

தீபாவளிக்கு அடுத்தநாள் என் இடது கண்ணைப் பார்க்க சகிக்கவில்லை. கண் வீங்கியிருந்தது. கண்ணில் வலியும் இருந்தது. எனக்கு பயம் வந்துவிட்டது. அன்று என் அம்மாவின் திதி. நானும் சகோதரனும் சேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அம்மாவின் திதியை நடத்துவோம். என்னைப் பார்த்தவுடன் என் சகோதரன்.

''என்ன மெட்ராஸ் ஐ யா?'' என்றான். பின் ''கிட்ட வராதே...எல்லாருக்கும் பரவிவிடும்'' என்று கூப்பாடு போட்டான்.

எனக்கு எப்படி இந்த நோய் வந்தது என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். புரியவில்லை. அன்று திதி முடிந்து அவன் வீட்டிற்கு என் சகோதரன் போனபோது அவனுக்கும் மெட்ராஸ் ஐ வந்துவிட்டது. இந்த மெட்ராஸ் ஐ எப்படிப் பொறுத்துக் கொள்வது என்பது தெரியவில்லை. நான் பெரும்பாலும் வசிக்கும் சீர்காழி வங்கிக் கிளையில் யாரோ ஒரு வாடிக்கையாளர் கருப்பு நிற கண்ணாடி அணிந்து வந்திருந்தான். அவன் மூலம் எனக்குப் பரவியிருக்க வாய்ப்புண்டா என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. கண்ணில் அழுக்குகள் சேர்ந்தால் அது மெட்ராஸ் ஐ ஆக மாறிவிடுமோ என்று தோன்றியது. என் கண் எப்போதும் சிவப்பாக இருக்காது. கண் சிவப்பாக மாறினால் அதற்குப் பல அறிகுறிகள் உண்டு என்று எனக்குத் தெரியும். உடலில் எதாவது குறை இருந்தால் கண் காட்டிக் கொடுத்துவிடும்.

எதாவது தப்பு செய்தால்கூட கண் காட்டிக்கொடுத்து விடும். எனக்கு ரமணரின் கண்கள் பிடிக்கும். தீர்க்க ஒளியுடன் தீட்சண்யமாக கண்கள் பளபளக்கும். அரவிந்தரின் கண்கள் சாந்தமாக இருக்கும். நடிகைகளில் ஸ்நேகாவின் கண்களைப் போல பிரகாசமான கண்களை நான் பார்த்ததில்லை.

என் மெட்ராஸ் ஐயால் எனக்கு சில அனுகூலங்கள். அலுவலகத்தில் முதலில் ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொண்டேன். பின் கண் வலி அவ்வளவாக தீரவில்லை என்பதால் இன்னொரு நாளும் எடுத்துக்கொண்டேன். இரண்டுநாள் விடுமுறையில் லைப்ரரி செல்வது என்று பல விஷயங்களை முடித்துக்கொள்ள பயன்படுத்திக்கொண்டேன். ஹூக்கின்பாதம்ஸ் சென்று ஒரு ஆண்டுக்கு முன் விற்பனைக்குக் கொடுத்தப் புத்தகப் பணத்தைக் கேட்டேன். எதுவும் ஒழுங்கில்லை. நான் கேட்காமலயே பணம் வரும் இடத்திலிருந்தும் பணம் வருவதில்லை. இப்போது கேட்டாலும் நடப்பதில்லை. அரசாங்க லைப்பரரியில் பத்திரிகை அனுப்பியதற்கு பில் அனுப்பினேன். போய் கேட்டேன். வரவில்லை என்று சொல்லி விட்டார்கள். போனில் எத்தனை முறை கேட்டாலும் அவர்கள் உதிர்க்கும் பதில் இதுவாகத்தான் இருக்கும். நான் திரும்பவும் விடுமுறை எடுத்துக்கொண்டு எனக்கு மெட்ராஸ் ஐ வந்தபிறகுதான் வரமுடியும். ஒருநாள் விடுமுறை எடுத்ததற்கே அலுவலகத்திலிருந்து போன் வந்துவிட்டது. 'மெட்ராஸ் ஐ ஆக இருந்தாலும் பரவாயில்லை. வாருங்கள்.' என்று கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். புதன் கிழமை சென்றேன்.

என் சகோதரனனும் 3 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு விட்டான். கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தபோது என் முகமா இது என்று திரும்பவும் கேட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். பல ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு நண்பரை அடிக்கடி பார்க்கப் போவேன். அவர்கள் வீட்டில் அந்த நண்பரின் தாய் என்னைப் பார்த்து பாக்கியராஜ் என்று கூப்பிடுவார். அவர்கள் சினிமா பார்க்க மாட்டார்கள். ஆனால் டிவியில் வரும் சினிமாவைப் பார்த்திருப்பார். சமீபத்தில் அவர் இறந்து விட்டார். நண்பரின் வீட்டிற்கு துக்கம் விஜாரிக்கச் சென்றேன். என்னை பாக்கியராஜ் என்று நண்பரின் அம்மா கூப்பிட்டதை அவர்கள் ஞாபகப் படுத்தினார்கள்.

எனக்கும் பாக்கியராஜுற்கும் மூக்குக் கண்ணாடியைத் தவிர எந்த ஒற்றுமையும் கிடையாது. நான் உயரம். கிட்டத்தட்ட 6 அடி. மேலும் பாக்கியராஜ் சற்று குண்டாக தோற்றம் தருவார். அவரை விட நான் நிறம் அதிகம். குரல் கூட வித்தியாசம் உண்டு.

என் அலுவலகத்தில் உள்ள ஒருவர் என்னைப் பார்த்து, 'ரவி சாஸ்திரி மாதிரி இருக்கேம்மா,' என்றார். என்னால் நம்ப முடியவில்லை.ரவி சாஸ்திரிக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஏதோ சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். சமீபத்தில் தலையில் வெள்ளை முடி அதிகமாக இருந்ததால் டை அடிக்கலாமென்று அடித்துக் கொண்டேன். என்னைப் பார்த்து என் அலுவலகத்தில் உள்ள ஒருவர் ஒரு நகைச்சுவை நடிகர் பெயரில் கூப்பிட ஆரம்பித்து விட்டார். திரும்பவும் அவருக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

திரும்பவும் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்துக்கொண்டேன். உண்மையில் நான் யார். அவர்கள் சொல்லும் ஒருவர் இல்லை.

18.11.10

மேன்மக்கள்

எல்லோரும் உடம்பின்

வியர்வை ஊற்றுக்

கண்களிலெல்லாம்

வாசனைத் திரவமூற்றி

காற்றில் போதையேற்றி

சற்றே முகமெங்கும்

வெள்ளை அடித்து

வீதிக்கு வருகிறார்கள்.

அவர்களின் ஒரு கையில்

பெரிய பூதக் கண்ணாடியும்

இன்னொரு கையில்

தார் சட்டியும்.

பூதக்கண்ணாடியால்

ஒவ்வொருவரையும்

கூர்ந்து பார்த்துவிட்டு

அவர்கள் முகத்தில்

சிறிது கரும்புள்ளி

தென்பட்டால் கூட

உடனடியாக அவருடைய

உருவம் வரைந்து

அதில் தார் பூசி

எல்லோருக்கும் காட்டி

இளித்து இன்பமடையும்

மக்கள்.

12.11.10

இரண்டு கவிதைகள்

கொல்லும் முகம்

சுழலும் விழிகளில் நீ஡ ஏனோ?
கழநிகளில் பாய்ந்ததுதான் போதாதோ!
மறையும் மாலையில் ஒளிர்ந்திடும் -
உன்முகம்தான் என் வாழ்வின் விதிப்பயனோ?

தெரிந்ததில்லை பயணம் தொடர்ந்தக்கால்!
தெரிந்ததில்லை - பருவமதில் - மாற்றத்தில் -
தெரிந்ததுதான் யாருக்கு எப்போது?
இயம்புமோ உன்முகம்தான் அதைப்பற்றி?

என் உறக்க, விழிப்பில், ஊர்ந்தவளே!
என் சிந்தையில் படர்ந்த கோடிப் பூவே
என் மூளையில் பூத்த வெண்மலரே!
உன் முகம்தான் என்னைக் கொன்றதடி.


இன்னொரு கவிதை

அழிவுப் பாதையில் பயணம் -
இல்லாத கேள்விகளை எல்லாம் கேட்டு -
தொடுவானம் கண்டது!
ஆக்கப் பாதையில் பயணம் -
செளகரியங்களின் நிரந்தரத்திறகான - கதறலோடு
பட்டமெனப் பறக்கவும் -
ஆதூரம் கொண்டது
ரொம்ப நாட்கள் கழித்து-
ஒரு மரத்தடியில் உட்கார்ந்தேன் -
அழிவுப் பாதையும் -
ஆக்கப் பாதையும் -
தெரியாத இடத்தில் -
களைத்து!

9.11.10

யாராக இருக்கிறாள்?

குளிரும் கம்பிகளில்
முகம் வைத்தபடி
சிறுமி ஒருத்தி
கடும் மழையில்
தனித்து நிற்கிறாள்.

மழை
ஆயிரம் குமிழ்களாய்
பூத்து மறைவதை
உற்று நோக்கி
தன்னை மறக்கிறாள்.

பின்மாலை நேர மழை
வண்ணக் குடைகளாய்
ததும்பிச் செல்ல
பரவசம் இலைச் சொட்டாய்
அவள் இதயமெங்கும்.

வீட்டின் உள்ளே
திரும்பிப் பார்த்துவிட்டு
தவிர்க்கவியலா உந்தலோடு
உள்ளும் புறமும் நனைய
கம்பிகளூடே கை நீட்டுகிறாள்.

மழை - சிதறல்களாய்
உள்ளங்கைகளில்
பட்டுத் தெறிக்கும்
அந்த இடி, மின்னல் கணத்தில்
அவள் யாராக இருக்கிறாள்?

8.11.10

நான், பிரமிள், விசிறி சாமியார்....15
நான் இந்தத் தொடரை ஆரம்பித்து பல மாதங்கள் ஓடிவிட்டன. ஆனால் தொடர்ந்து இதை எழுதி முடிக்க முடியவில்லை. பிரமிள் பற்றி பல விஷயங்கள் யோசித்து யோசித்து எழுத வேண்டி உள்ளது. எதுவும் ஒரு ஒழுங்கில்லாமல் இந்தத் தொடர் போய்க் கொண்டிருக்கிறது. எழுத்தாளர் பலருக்கு பிரமிளைப் பிடிக்கவில்லை. அது ஏன் என்று நான் ஆராய்ந்து பார்ப்பேன். பல மூத்த எழுத்தாளர்கள் அவருடன் ஒரு காலத்தில் நெருங்கி பழகியிருக்கிறார்கள். பின் அவரை விட்டு விலகி ஓடியும் இருக்கிறார்கள். அப்போதெல்லாம் பிரமிள் பற்றி அவர்கள் மூலமாகவும், அவர்களைப் பற்றி பிரமிள் மூலமாகவும் கேட்டுக் கொண்டிருப்பேன்.

அவர்கள் பிரமிள் பற்றி பேசும்போதே கசப்புணர்வுடன் பேசுவார்கள். பிரமிள் இலங்கைக்காரரா தமிழ்நாட்டைச் சார்ந்தவரா? இந்தக் குழப்பமும் எல்லோருடனும் இருக்கும். ஆனால் இலங்கையில் தன் குடும்பத்தை விட்டு வந்தவர். பின் அங்கு செல்லவே இல்லை. தனி மனிதனாகவே தமிழ் நாட்டில் தங்கி விட்டார். கடைசிவரையில் அவர் தனிமனிதர். முரண்பாடு மிக்க மனிதர். எனக்கு அவர் வாழ்வதை நினைத்து ஆச்சரியமாக இருக்கும். அவர் யாரிடமும் அடிமையாய் போய் பணம் சம்பாதிக்கவே இல்லை. கொஞ்சம் இணங்கினால் போதும், அவரால் ஓரளவு பணம் சம்பாதிக்க முடியும். ஆனால் அவரால் முடியாது. அதேபோல் வறுமையை அவர் சந்தித்ததைப் போல் யாரும் சந்தித்திருக்க மாட்டார்கள். ஆனால் இதைப் பற்றியெல்லாம் அவர் பேச மாட்டார். வறுமையைப் பற்றி அவர் கவிதை எழுதியும் இருக்கிறார். அது தனி மனிதனின் வறுமையைப் பற்றி அல்ல.

அரும்பு பத்திரிகை ஆசிரியர் அவர் அன்புக்குரியவர். அவர் சொல்லி அரும்பு பத்திரிகையில் அவர் எழுதினார். ஆனால் கொஞ்ச காலம்தான் அது நீடித்தது. எல்லாவற்றிலும் ஒருவித முரண்பாடு மிக்க மனிதராகவே இருந்து வந்தார்.

அவர் கடைசிக் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அவர் வசித்த வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த பெண்மணி கூறியதைக் கேட்டு எனக்குத் திகைப்பாக இருந்தது. பிரமிள் நுங்கம்பாக்கத்தில் ஓரிடத்தில் குடியிருந்தார். அந்த இடத்தின் பக்கத்திலேயே பன்றி மாமிசம் விற்கும் இடம். பன்றியை வெட்டிப் போடும்போது ஏற்படும் ஒரு வித துர்நாற்றம் சூழ்ந்தபடியே இருக்கும். பிரமிள் மட்டும் அங்கு இல்லை. இன்னும் நாலைந்து குடித்தனங்களும் அங்கு இருந்தன. மற்ற குடித்தனங்களில் இருந்தவர்கள் பிரமிளை பெரியவர் என்று குறிப்பிடுவார்கள்.

ஒருமுறை பிரமிள் தன் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள பெண்மணியிடம் ஒருநாள் மின்சார பில்லை கட்ட கார்டும், பணமும் கொடுத்துவிட்டு சென்று விட்டார். அந்தப் பெண்மணி அவர் கேட்டுக்கொண்டபடி பணம் கட்டிவிட்டார். பிரமிள் திரும்பவும் அந்தக் கார்டைப் பார்த்து பணம் கட்டுவதில் ஏதோ வித்தியாசம் இருப்பதாக நினைத்து அந்தப் பெண்மணியைத் திட்டிவிட்டார். பிரமிள் திட்டியதைக் கேட்டு அந்தப் பெண்மணி அழுது விட்டார். உண்மையில் தவறு பிரமிள் மீதுதான் என்பதை பிரமிள் உணர்ந்து விட்டார்.

இந்தத் தவறை உணர்ந்தவுடன், சாதாரணமானவர்கள் அதை வேறு விதமாக எடுத்துச் சென்றிருப்பார்கள். ஆனால் பிரமிள் செய்த காரியம் அந்தப் பெண்மணியை மேலும் மிரள வைத்துவிட்டது. பிரமிள் அந்தப் பெண்மணியைப் பார்த்து, அந்தப் பெண்மணியின் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டார். அவருடைய இந்தச் செய்கை அந்தப் பெண்மணியை மிரள வைத்துவிட்டது. இதுதான் பிரமிள். அவருடைய அதீத தன்மையை நான் இப்போது கூட பலரிடம் பார்ப்பதுண்டு. பிரமிள் அறையில் பக்கவாத நோயுடன் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது, யாரும் அவருடைய அறைக்கு பல மணிநேரங்கள் செல்லவில்லை.
(இன்னும் வரும்)

6.11.10

அப்பாவின் குடை
மூட்டெலும்புகள் உடைந்து

மடங்காமல் முடங்கியது

அப்பாவின் குடை.

சிகிச்சைக்கு

வழக்கமான

இடத்திற்கேச் சென்றேன்.

அப்படியே இருந்தான்

அப்பாவின் குடைக்காரன்

அதே இளமையுடன்

அதே இடத்தில்.


சரி செய்ய முடியுமா என்று

குடைக்காரனிடம் கேட்டேன்.

சரி செய்து விடலாம்

என்றவன் சரி செய்து

கொண்டே அப்பா

எப்படி இருக்கிறார் என்றான்.

அப்பாவைக் காப்பாற்ற

முடியவில்லை என்றேன்

வருத்தத்துடன்.

அப்படியா....அதான்

அப்பாவைக் காணவில்லை...

என்றவன் சரி செய்த

குடையை விரித்தான்.

விரித்த கருங்குடைக்குள்

அப்பாவிற்கே உரிய

சிரிப்பு மழை

இடி முழக்கமாய்.....5.11.10

க நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்.......1

(பட்டியல்கள் தொடர்ச்சி......)

க.நா.சுவின் விமர்சனப் பார்வையில் ஒரு படைப்பின் தனித்தனி அம்சங்கள் போதிய கவனம் தரப்படாமல் போவதில்லை. ஆனால் அவருடைய இறுதிக் கணிப்பில் அப்படைப்பு அதன் முழுமையில் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதற்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. இதைக் கூட ஒரு லெளகீக சாமர்த்தியத்துடன் செய்து நல்ல பெயர் வாங்கிக்கொண்டு போய் விடலாம் குறைந்த பட்சம், பொல்லாப்பு பெற்றுக்கொள்ளாமல் சமாளித்துவிடலாம். ஆனால் க.நா.சு அவருடைய வாதங்கள், கணிப்புகளைக் கூறிவிட்டு அவைகளை விளக்கக் குறிப்பிட்ட படைப்புகள், படைப்பாளிகள் பெயர்களையும் எடுத்துக் கூறியிருக்கிறார். இன்னும் ஒரு படி மேலே போய் அவர்களை ரகவாரியாகப் பிரித்துப் பட்டியல்கள் போட்டிருக்கிறார்.

பட்டியல்கள் - இதை வைத்ததுத்தான் க.நா.சு எவரிடமும் முதல் வசவை வாங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய சக விமரிசகர்கள், எழுத்தாளர்களிலிருந்து தொடங்கி, ஒரு பத்திரிகை இதழ் வெளிவந்தால் அதன் அட்டவணையிலிருந்து கடைசிப் பக்கம்வரை உள்ளதை ஒவ்வொரு வரியில் வியந்து - பாராட்டி, திட்டி எழுதும் ஆர்வ வாசகன் வரை க.நா.சுவின் பட்டியல்கள் உபாதைப்படுத்தியிருக்கின்றன. க.நா.சு இப்போது எந்தப் பரிசுகளும், பாராட்டுகளும் வழங்க அதிகாரம் படைத்த அமைப்பு எதிலும் அங்கத்தினர் இல்லை. சுத்த சாதாரணர். ஆனால் அவர் பட்டியல்களில் இடம் பெறுவதும் இடம் பெறாமல் போவதும் எழுதாளர்களுக்குள் மிகவும் பெருமை தருவதாகவும் மிகவும் அவமதிக்கப் படுவதாகவுமான விஷயமாகி விடுகிறது.

நகுலன் ஒரு கவிதை எழுதியிருந்தார். அதன் வரிகள் முழுவதும் நினைவில் இல்லை. ஆனால் கவிதை இந்த முறையில் இருந்தது.

யார் இந்த
க.நா.சு -
இவர் முறையாகத் தமிழ் படித்தவரல்ல
இலக்கணம் இவரை மீறியது
கவிதை இவருக்குக் கைவராத
கலை
சிறுகதை நாவலோ சுத்தமாகப்
பிரயோசனம் இல்லை
விமரிசனமோ - ஒழுங்காக
நான்கு வார்த்தை எழுதத் தெரியாது
மனுஷனுக்கு.
அது போகட்டும்
இவர் என் கதை பற்றி என்ன சொன்னார்?


இது ஏதோ ஒருவரைப் பாராட்டி, கெட்டிகாரத்தனமாக எழுதிய கவிதையாகத் தோன்றவில்லை. நிதர்சனமாகக் காணக் கிடைக்கும் உண்மைதான். இல்லாது போனால் க.நா.சு என்ன அபிப்பிராயம் வைத்திருக்கிறார் என்பது ஏன் இவ்வளவு தீவிரமான உணர்ச்சிகளைத் தமிழ் படைப்பிலக்கியத்தில் நேரடியாக, ஆத்மார்த்மாக ஈடுபடும் தொடர்பும் உள்ளவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்?

தமிழில் க.நா.சு பட்டியல்களை உபயோகப்படுத்தியதுபோல, தமிழுக்குப் பட்டியல்கள் தேவைப்படுவதுபோல, எல்லா மொழிகளுக்கும் பட்டியல்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என்று தீர்மானமாகக் கூற முடியவில்லை. இலக்கிய வரலாறு என்று சிறிது விரிவாக எழுதப்படும்போதுதான் பட்டியல்களைக் காண முடிகிறது. ஆனால் தமிழ் நவீன இலக்கியம் சிறிது காலம் தாழ்த்திய துவக்கம் கண்டதாலும், தமிழில் விமரிசனப் பூர்வமான கணிப்புகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலை ஸ்திரமாக இன்னும் உருவாகாத காரணத்தாலும் பட்டியல்கள் அத்யாவசியமாக இருக்கின்றன. பொதுப்படையான இலக்கிய விமரிசகன் சூத்திரங்கள், அல்லது கூற்றுகள், தற்கால படைப்பிலக்கியத்தைப் பொறுத்த வரையில், வாசகர்களுக்கு ஏதோ வாயுப்படலமாகப் போய்விடுகின்றன. விமரிசனக் கூற்றுகள், சூத்திரங்களுக்குத் திட்டவட்டமாக, ஸ்தூலமாக உதாரணங்களைக் கூறியே விளக்கக் கொண்டிருக்கிறது. அப்போது பட்டியல்கள் தவிர்க்க முடியாததாகப் போய்விடுகின்றன.

ஒரு குறிப்பிட்ட தருணத்தில் க.நா.சு தரும் பட்டியல், அப்படியே நூற்றுக்கு நூறு பூர்ணமானது என்று கொள்ள முடியாது. அவர் பார்வைக்குக் கிடைத்தவரை அந்தப் பட்டியல் முழுமையானது என்றுதான் கொள்ள முடியும். இதிலும் கூட, மனித இயல்பில் கூடிய ஞாபக மறதி, கவனக்குறைவு செயல்பட்டுச் சில பெயர்கள், சில படைப்புகள் ஒரு குறிப்பிட்ட க.நா.சு விமரிசத்திலோ கட்டுரையிலோ விட்டுப் போய்விட இடமிருக்கிறது. இருந்தும் க.நா.சு ஒவ்வொரு கால கட்டத்திலும் பல கண்டுபிடிப்புகளைச் சாதித்திருக்கிறார். அவர் பார்வைக்குட்படுவது மற்ற தமிழ் விமரிசகர்கள், இலக்கிய அன்பர்களுக்குக் குறையாத வண்ணம் இருந்துவருகிறது. நாற்பதாண்டு காலமாக எழுதி மணிவிழா பெற்ற எழுத்தாளரின் சமீபத்திய படைப்பு பற்றியும் க.நா.சுவால் அபிப்பிராயம் கூற முடியும். ஓராண்டு காலமாக நடக்கும் ஒரு சிறு பத்திரிகையில் ஒரு கதை எழுதி அடி எடுத்து வைக்கும் இளைஞனின் சாத்தியக் கூறுகள் பற்றியும் க.நா.சுவால் கூற முடியும். இன்று தமிழ் இலக்கிய உலகில் சிறப்பான பெயர்களாக இரக்கும் ஜெயகாந்தன், மெளனி, லா.ச.ரா., சுந்தர ராமசாமி, அழகிரிசாமி, ஹெப்சிபா ஜேசுதாசன், நீல பத்மநாபன், ஷண்முகசுந்தரம், நகுலன், வே.மாலி, ஷண்முகசுப்பையா, சா கந்தசாமி இவர்கள் எல்லோரும் ஒருவிதத்தில் க.நா.சுவின் கண்டுபிடிப்புகளே.

(இன்னும் வரும்)


- அசோகமித்திரன்


க நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்.....1

பட்டியல்கள்இந்த ஆண்டு (1972) குடியரசு தினத்தன்று சென்னையில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. 'கைராலி ஸ்டடி சர்க்கிள்' என்னும் குழு, நான்கு தென்னிந்திய மொழிகளின் தற்கால இலக்கியம் பற்றிக் கட்டுரைகள் படிக்க ஏற்பாடு செய்திருந்தது. கட்டுரையாசிரியர்கள் நான்கு பேருமே சிறிது கடுமையான விவாதத்திற்கு உட்பட வேண்டியிருந்தது. தெலுங்கு மொழிக் கட்டுரையை ஒரு அன்பர் வெகுவாகக் குறை கண்டார். தெலுங்கு மொழி புரட்சிகர எழுத்தாளர்களின் படைப்புகளுக்குப் போதிய கவனமும் முக்கியத்துவமும் தராதது குறித்துக் கண்டனம் தெரிவித்து, புரட்சிகர எழுத்தாளர்களின் நோக்கங்களைக் கட்டுரையாசிரியர் பூரணமாகப் புரிந்துகொள்ள புரட்சிகர எழுத்தாளர்க சங்கத்தின் பிரகடனத்தின் சில பகுதிகளை உன்னிப்பாகப் படிக்குமாறு வற்புறுத்தினார். கட்டுரையாசிரியர் கண்டனங்களுக்குப் பதில் அளித்தார். திருப்திகரமாகப் பதில் கூறினாரா என்று கூற முடியாது. ஆனால் அவர் கூறிய பதில் ஒன்று சிந்தனைக்குரியது ''எந்தப் பிரகடனம்தான் மிக உன்னத நோக்கங்களை எடுத்துக் கூறாமல் இருக்கிறது?இலக்கிய சங்கம், மக்கள் எழுத்தாளர் சங்கம், படைப்பாளிகள் குழாம், இலக்கிய வாசகர் வட்டத்திலிருந்து திறனாய்வு மன்றம், தமிழ் எழுத்தாளர் சங்கம், சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கம், சாகித்திய அகாடமி, தமிழ் வளர்ச்சிக் வரலாற்றுக் கழகம், இலக்கியச் சிந்தனை வநடி இவ்வமைப்புகளின் இலக்கியக் கோட்பாடுகள் மிகவும் உன்னதமானவையே. அதேபோல் விமரிசர்கள் ரகுநாதன், சி சு செல்லப்பா, எழில் முதல்வன்,. வெ.சாமிநாதன், டாக்டர் ந. சஞ்சீவி, தி.க.சி, டாக்டர் கைலாசபதி இவர்களின் அடிப்படை இலக்கியக் கொள்கைகளும் உன்னதமானவையே, எழுத்து கலையாக உருக்கொள்ள வேண்டும். அது மனிதாபிமானத்தில் எழுந்ததாக இருக்க வேண்டும். மன விரிவை உண்டு பண்ணுவதாக இருக்க வேண்டும், கற்பனை மயக்கங்களைத் தவிர்ப்பதாக இருக்க வேண்டும், மனித ஆன்மிக எழுச்சிக்கு வழி கோலுவதாக இருக்க வேண்டும். சமூகப் பரிணாமத்திற்கு வலுவூட்டுவதாக இருக்க வேண்டும் - இதிலெல்லாம் ஒரு குறையும் காண முடியாது.அநேகமாக எல்லாருமே இந்த அடிப்படைக் கொள்கைகளைத்தான் அளவுகோலாகக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இதன்படிப் பார்த்தால் இவர்கள் அனைவரும் ஏகோபித்ததாகத்தான் ஒரு குறிப்பிட்ட படைப்பைச் சிறந்ததென்றும் இன்னொன்றைச் சிறந்தது அல்ல என்றும் கூற வேண்டும்.ஆனால் நடைமுறை அவ்வாறில்லை. ஒருவர் நல்ல படைப்பு என்று கூறியது மற்றொருவரால் மிகவும் இழிவானது என்று தள்ளிவிடப் படுகிறது. ஒருவர் ஒரு எழுத்தாளரைச் சிறந்த எழுத்தாளர் என்று தேர்ந்தெடுத்தால் அது .இன்னொருவருடைய தேர்வுக்கு முற்றிலும் முரண்பட்டதாக இருக்கிறது. ஆதலால் அரசியல் அல்லது சமூக அமைப்புகளின் பிரகடனங்கள் போல இலக்கிய விமரிகர்களின் அடிப்படைக் கொள்கைகளும், அளவுகோல்களும் உன்னதமாக இருந்தபோதிலும் அவை செயல்படுத்தப்படும் முறையில் அந்த அமைப்பு அல்லது அந்த விமரிகரின் தன்மை வெளிப்பட்டுவிடுகிறது.இன்னும் பொதுப்படையான இலக்கிய நோக்குகளை, வெவ்வேறு காலங்களில் அறிஞர்கள் கூறிவிட்டுப்போன இலக்கணங்களை மட்டும் எடுத்துச் சொல்லி சர்ச்சை - கண்டனங்களுக்கு உட்படாமல் நல்ல பெயர் வாங்கிப் போகும் கட்டுரைகளையும், கூட்டங்களிலும் எதிர்காண முடிகிறது. ஆனால் இன்றைய வாழ்க்கையில் இந்த நோக்கங்கள், கொள்கைகளின் பொருத்தம், குறிப்பிட்ட படைப்புகள் - படைப்பாளிகளைப் பொறுக்கி எடுத்துக் கூறுவதில் இருக்கிறது. இனங் கண்டு, தரம் பிரித்துக் கூறுவதில் இருக்கிறது. இனங் கண்டு, தரம் பிரித்துக் கூறுவதில் இருக்கிறது. இத் திசையில், தமிழ் இலக்கியத் துறையில், சுமார் முப்பதாண்டு காலமாக ஒருவர் பெயர் தனித்து நிற்கிறது. அது க.நா.சு.
தமிழிலக்கியம் நசித்துக் கொண்டிருக்கிறது,


சிறுகதை இலக்கியம் தேங்கிவிட்டது என்று பல பெரியோர்கள் அடித்துக் கூறும் இந்த ஆண்டிலும் பெயர் சொல்லிக் குறிப்பிடக்கூடிய முப்பது நாற்பது எழுத்தாளர்கள் போல, க நா சுவும் சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்னர், அவர் தமிழில் எழுத முன் வந்தபோது தன் வரையில் சுய விமரிசனம் செய்து கொண்டு, தன் படைப்பு நன்றாக அமைய வேண்டும் என்ற ஒற்றைத் தட நோக்கத்துடன் தான் ஆரம்பித்திருக்க வேண்டும்.க.நா.சு நன்றாகவே எழுதினார். அன்றிலிருந்து இன்றுவரை அவருடைய படைப்பிலக்கிய எழுத்து ஒரு சீரான தகுதி படைத்ததாகவே இருந்து வந்திருக்கிறது. அவர் தனக்குக் குறைந்தபட்சத் தகுதியாக வைத்து வருவது மிக உயர்ந்த இலக்கியமாகவே இருந்து வருகிறது. அவர் பல மொழி பெரய்ப்புகளும் செய்திருக்கிறார். அவர் மொழிப்பெயர்ப்புக்காகத் தேர்ந்தெடுத்த படைப்புகளும் அவருடைய ஆராய்ந்துணரும் ஆற்றலுக்குச் சான்றாக இருக்கின்றன.அவர் படைப்பிலக்கியம் படைப்பதில் மட்டும் அன்றிலிருந்து இன்றுவரை கவனம் செலுத்தியிருந்தால் பொது ஜனப் பார்வையில் அவருடைய உருவம் இன்றுள்ளது போலப் பலவிதப் பிரதிவாத கோப, தாப, விரோத உணர்ச்சிகளைத் தோற்றுவிப்பதாக இருந்திருக்காது. வாதப் பிரதிவாத சர்ச்சைகளில் உட்படுத்தப்படாமல் இருப்பதில் நன்மை உண்டா இல்லையோ, செளகரியங்கள் பல உண்டு. ஆனால் க.நா.சு செளகரியங்களை நாடிச் சென்றதாகத் தெரியவில்லை. சர்ச்சைகளை, சர்ச்சைகள் மூலமாகப் பலரின் ஆழ்ந்த விருப்பு வெறுப்புகளைத்தான் நாடிச் சென்றிருக்கிறார். நாடிச் சென்றிருக்கிறார் என்று கூறுவதுகூடத் தவறாக இருக்கலாம். அவருடைய இயல்பு, அவருடைய இலக்கிய உணர்வு, அவருடைய விமரிசனங்கள் காரணமாக அவரைச் சர்ச்சைகளிடத்தில்தான் அழைத்துச் சென்றது.க.நா.சு தன் தேர்வுகளுக்கு, அவர் பொறுக்கி எடுத்த படைப்புகளுக்கு, அவை சிறந்தது, சிறந்ததல்ல என்று தான் நிர்ணயித்ததற்குக் காரணம் கூறாமல் இருந்ததில்லை. காரணங்கள் கூறுவதைப் பல வகைகளில் செய்யலாம். வெகு எளிதாக, படிப்போரும் உணராவண்ணம் அவர்களுடைய உணர்ச்சிகளை லேசாகத் தூண்டித் தான் கூறுவதே சரி என்று ஒப்புக்கொள்ள வைக்கும் விதத்தில் செய்யலாம். இது பிரசாரகர்களின் வழி. ஆனால் க.நா.சு விஞ்ஞான விளக்கங்களுக்குரிய மொழியில்தான் அவருடைய விமர்சனங்களைச் செய்திருக்கிறார்.ஓரிலக்கியப் படைப்பு பல அம்சங்கள் கொண்டதாயிருப்பினும் அது வெற்றிகரமானதாக, அதை முழுமையாகப் பார்க்கும்போது அந்த உணர்வைத் தர வேண்டும். ஒரு கைகலப்பில் வெற்றி அடைந்து விட்டு, யுத்தத்தில் தோற்றுப் போவதற்குச் சமமாகும் ஒரு படைப்பு அதன் முழுமையில் வெற்றிகரமாக அமையாதது.
(இன்னும் வரும்)
-அசோகமித்திரன்

தாய்மை


தாய்மை

அருள்ஜோதி தனது வலக்கை விரல்நுனிகளைக் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டாள். அந்தக் கன்னம் வீங்கிப் போயுமிருந்தது. பல் வலி மூன்று நாட்களாகத் தாங்கமுடியவில்லை. முன்பைப் போல ஏதாவது வருத்தமென்றால் விழுந்து படுத்துக் கிடக்கவாவது முடிகிறதா என்ன? விடிகாலையில்தான் எத்தனை வேலைகள். கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டும். வீட்டை, முற்றத்தைக் கூட்டித் துப்புரவாக வைத்துக் கொள்ளவேண்டும். மூத்தவளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பத் தயார் செய்யவேண்டும். அதிலும் அந்தப் பிள்ளை சோம்பேறிப் பிள்ளை. மெதுவாக எழுப்பி எழுப்பிப் பார்த்தும் எழும்பாவிட்டால் கொஞ்சம் சத்தம் போட்டுத்தான் எழுப்பவேண்டியிருக்கும். விடுமுறை நாளென்றால் ஜோதி அவளைக் கொஞ்சம் அவள் பாட்டிலே தூங்கவிடுவாள். அவள் எழும்பித்தான் என்ன செய்ய? வளர்ந்த பிறகு இப்படித் தூங்கமுடியுமா? அதற்கு இளையவள்.. ஜோதி எழும்பும்போதே எழும்பிவிடுவாள். இப்பொழுதுதான் நடக்கத் தொடங்கியிருக்கும் வயது. அவளை இடுப்பில் வைத்துக் கொண்டு வீட்டு வேலைகளைச் செய்யமுடியுமா? பாலைக் கொடுத்து, கொஞ்சம் இறக்கிவிட்டால் அது ஓடிப் போய் எதையாவது இழுக்கத் தொடங்கும். ஒரு முறை இப்படித்தான். குழந்தையின் சத்தமே இல்லையே என்று தேடிப் பார்த்தால் அது வாசலுக்கருகில் படுத்திருந்த பூனையினருகில் உட்கார்ந்து அதன் வாலை வாயில் போட்டுச் சப்பிக் கொண்டிருந்தது. ஜோதி சத்தம் போட்டு ஓடி வந்து பூனையைத் துரத்திவிட்டு குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள். பயந்துபோனது சத்தமாக அழத் துவங்கியது. பூனையின் மென்மையான மயிர்களெல்லாம் அதன் வாய்க்குள் இருந்தது. அவள் பூனையைத் திட்டித் திட்டி, அவளது சுட்டுவிரலை அதன் வாய்க்குள் போட்டுத் தோண்டித் தோண்டி பூனையின் முடிகளை எடுத்துப் போட்டாள். அது இன்னும் கத்திக் கத்தி அழத் தொடங்கியது. முருகேசு இருந்திருந்தால் அவள்தான் நன்றாக ஏச்சு வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பாள்.

குழந்தை சிணுங்கினாலே அவனுக்குப் பிடிக்காது. அவளிடம் வள்ளென்று எரிந்துவிழுவான். அவள் அவனுடன் ஒன்றுக்கொன்று பேசிக் கொண்டோ, சண்டைக்கோ போக மாட்டாள். பொறுத்துக் கொண்டு போய்விடுவாள். என்ன இருந்தாலும் குழந்தைகள் மேலுள்ள பாசத்தால்தானே இந்த மாதிரி நடந்துகொள்கிறான். அந்த மீனாளுடைய கணவன் போல குடித்துவிட்டு வந்து சண்டை பிடிக்கிறவனென்றால் கூடப் பரவாயில்லை. பதிலுக்குச் சண்டை போடலாம். இவன் தன் பாட்டில் காலையில் எழும்பி, சாயம் குடித்துவிட்டு, அவள் அவித்துக் கொடுப்பதைச் சுற்றி எடுத்துக் கொண்டு தோட்டத்துக்கு வேலைக்குப் போனால் பொழுது சாயும்போது வந்துவிடுவான். அதன்பிறகு குழந்தைகளோடு வயல் கிணற்றுக்குப் போய் குளித்துக் கொண்டு வந்தானானால், அவள் இரவைக்குச் சமைத்து முடிக்கும் வரை, விளக்கைப் பற்ற வைத்துக் கொண்டு பிள்ளைகளுடன் கதைத்துக் கொண்டிருப்பான். மகன் பாலன் அப்பாவிடம் ஏதாவது கதை சொல்லச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருப்பான். அவனையும் அடுத்தவருடம் பள்ளிக் கூடத்தில் சேர்க்க வேண்டும். மூத்தவளையும், இளையவளையும் போல இல்லை அவன். சரியான சாதுவான பையன். ஒரு தொந்தரவில்லை. வேலைகளும் சுத்தபத்தமாக இருக்கும். ஜோதியும் எப்பொழுதாவது பகல்வேளைகளில் அரிசி, பருப்பு, வெங்காயமென்று வாங்க சந்திக் கடைக்குப் போவதென்றால் தொட்டிலில் சின்னவளைக் கிடத்திவிட்டு மூத்தவளிடம் குழந்தையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அவனைத்தான் கூட்டிப் போவாள். அவனும் ஒரு தொந்தரவும் தராமல் அவளோடு கடைக்கு வந்து அவள் சாமான்கள் வாங்கிமுடியும்வரை பார்த்திருப்பான். அங்கு கண்ணாடிப் போத்தல்களில் விதவிதமாக இனிப்புப் பொருட்கள் நிறைந்திருக்கும். அதையே பார்த்துக் கொண்டிருப்பான். அவளுக்குப் பாவமாக இருக்கும். அவனுக்கும் மற்றப் பிள்ளைகளுக்கும் சேர்த்து அதில் வாங்கிக் கொள்வாள். அவனது பங்கை அவனிடம் உடனே கொடுத்துவிடுவாள். எனினும் அவன் உடனே சாப்பிட்டு விடுவானா என்ன? அப்படியே எடுத்துக் கொண்டு வந்து அக்கா, தங்கையுடன் உட்கார்ந்து யார் கூட நேரம் சாப்பிடுகிறார்களெனப் போட்டிபோட்டுக் கொண்டு ஒன்றாய்ச் சாப்பிடுவதில்தான் அவனுக்குத் திருப்தி.

வர வர பல்வலி கூடிக் கொண்டே வருவது போல இருந்தது. 'பெரியாஸ்பத்திரியில் மருந்தெல்லாம் சும்மா கொடுக்கிறார்கள்... போய் மருந்து வாங்கு...ஒரே மருந்தில் வலி போய்விடும்' என்று பீலியில் தண்ணீர் எடுக்கப் போனபோது சுமனாதான் சொன்னாள். அவள் சொன்னால் சரியாகத்தானிருக்கும். அவள் பொய் சொல்லமாட்டாளென்று ஜோதிக்குத் தெரியும். அடுத்தது இந்த மாதிரி விஷயத்தில் பொய் சொல்லி அவளுக்கென்ன இலாபமா கிடைக்கப் போகிறது? அவள்தானே அயலில் இருக்கிறவள். அவசரத்துக்கு உடம்புக்கு முடியாமல் போனால், சின்னவளைத் தூக்கிக் கொண்டு பீலியடிக்குப் போயிருந்தால் அவள்தானே தண்ணீர் நிரம்பிய குடத்தை வீட்டுக்குக் கொண்டு வந்து தருகிறவள். பீலித் தண்ணீர் எப்பொழுதும் குளிர்ந்திருக்கும். அதனால் வாய் கொப்பளித்தபோதுதான் முதன்முதலாகக் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு பல் வலிக்கிறதென்று முகத்தைச் சுழித்துக்கொண்டு அப்படியே குந்திவிட்டாள். அயலில் முளைத்திருந்த வல்லாரை இலைகளைக் கிள்ளிக் கொண்டிருந்த சுமனாதான் அருகில் வந்துபார்த்தாள். வாயைத் திறக்கச் சொல்லிப் பார்த்தாள். கடைவாய்ப்பல்லில் ஒரு ஓட்டை. 'அடியே ஜோதி..எவ்ளோ பெரிய ஓட்டை..வலிக்காம என்ன செய்யும்? இப்பவே போய் மருந்தெடடி' என்றாள். உடனே போய் மருந்தெடுக்க காசா, பணமா சேர்த்துவைத்திருக்கிறாள் ஜோதி? அடுத்து இந்தக் காட்டு ஊருக்குள் இருக்கும் நாட்டுவைத்தியர் கிழமைக்கு நான்கு நாட்கள்தான் கசாயம், குளிகை, எண்ணெய்யென்று கொடுப்பார். எல்லா வியாதிகளுக்கும் ஒரே மருந்து. அதற்கும் வெற்றிலையில் சுற்றி எவ்வளவாவது வைக்கவேண்டும். கோயிலிலென்றால் ஒரு சாமியார் இருக்கிறார். ஏதாவது தீன்பண்டம் செய்து எடுத்துக் கொண்டு, ஒரு கொத்துவேப்பிலையும் கொண்டுபோனால் தீன்பண்டத்தை வாங்கிக் கொண்டு அந்த வேப்பிலைக் கொத்தால் வலிக்கிற இடத்தில் தடவிக் கொடுப்பார். வலி குறைந்தது மாதிரி இருக்கும்.

சுமனா நகரத்துக்குப் போகச் சொல்கிறாள். எம்மாம் பெரிய தூரம். அந்தக் கிராமத்திலிருந்து யாரும் முக்கிய தேவையில்லாமல் நகரத்துக்குப் போக மாட்டார்கள். நகரத்துக்குப் போவது அவ்வளவு லேசுப்பட்ட காரியமா? எவ்வளவு தூரம் நடக்க வேண்டியிருக்கிறது? போகும்போதென்றால் பரவாயில்லை. பள்ளமிறங்கும் வீதி. பத்துக் கிலோமீற்றரென்றாலும் நடந்துகொண்டே போகலாம். வரும்போதுதான் மேடு ஏறவேண்டும். அதுவும் தேயிலைத்தோட்டத்து வீதியில் நடக்கும்போது நிழலெங்கே இருக்கிறது? வெயிலில் காய்ந்து காய்ந்து மேலே ஏறி வீட்டுக்கு வந்துசேரும்போது உயிரே போய்விடுகிறது. நகரத்தில் காசு நிறையக் கொடுத்தால், குணமாக்கியனுப்பும் ஆஸ்பத்திரி கூட இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறாள். ஒரு முறை கங்காணியையா வீட்டு ஆச்சி, தோட்டத்தில் செருப்பில்லாமல் நடக்கும்போது கண்ணாடியோட்டுத் துண்டொன்றுக்கு காலைக் கிழித்துக் கொண்டு, இரத்தம் கொஞ்சம்நஞ்சமா போனது? தோட்டமே பதறிப் போனது கிழவி மயக்கம் போட்டதும். துரைதான் தனது காரில் ஏற்றி நகரத்துக்கு அனுப்பிவைத்தார். உயிரில்லாமல்தான் வீட்டுக்கு வரும் என்று தானே தோட்டமே பேசிக் கொண்டது? காயத்தில் பால் போல வெள்ளைப் பிடவையைச் சுற்றிக் கொண்டு ஆச்சி வந்து சேர்ந்தது. கங்காணி வீடு வரை கார் வந்து நின்றதும் ஆச்சி எதுவும் நடக்காத மாதிரி தானாகவே நொண்டி நொண்டி நடந்து வீட்டுக்குள் போனதுதானே அதிசயம். அதற்குப் பிறகும் ஆச்சி செருப்புப் போட்டுக் கொள்ளவில்லை எப்பொழுதும். அவர் மட்டுமல்ல தோட்டத்தில் யாருமே செருப்புப் போட்டுக் கொண்டு நடந்தால்தானே. அடுத்தது இந்தக் காடு மேடு பள்ளமெல்லாம் இந்தச் செருப்புப் போட்டுக் கொண்டு இலகுவாக நடக்க இயலுமா என்ன?

இரவெல்லாம் பல்வலியில் முனகினாள். கராம்பு, பெருங்காயம் எதையெதையோ எடுத்து வலிக்கும் இடத்தில் வைத்து கடித்துக் கொண்டு தூங்க முயற்சித்தாள். நித்திரை வந்தால்தானே? காலை எழும்பிப் பார்க்கும்போது கன்னத்தில் ஒரு பக்கம் வீங்கியுமிருந்தது. சுமனா சொன்ன மாதிரி உடனேயே ஆஸ்பத்திரிக்குப் போய்விட முடியுமா என்ன? எவ்வளவு வேலை இருக்கிறது? குழந்தைகள் பிறக்கும் முன்பென்றால் அவளும் தோட்டத்துக்கு கொழுந்து பறிக்கப் போய்க் கொண்டிருந்தாள். குழந்தை பிறந்த பிறகு பிள்ளையைப் பார்த்துக் கொள்ள ஒருவருமில்லையென்று அவளை வேலைக்குப் போகவேண்டாமென்று சொல்லிவிட்டான் முருகேசு. தோட்டத்துக்குப் போகாவிட்டால் என்ன? வீட்டில் எவ்வளவு வேலையிருக்கிறது? அவளது வீடு இருப்பது வீதியோடு காட்டுக்குப் போகும் மலையுச்சியில். கடைச் சந்திக்கு, கிணற்றுக்கு, பீலிக்கென்று கீழே இறங்கினால் திரும்ப வீட்டுக்கு வர ஒரு பாட்டம் மூச்சிழுத்து இழுத்து மேலே ஏறிவர வேண்டும். தினமும் தண்ணீருக்காக மட்டும் எத்தனை முறை இறங்கி ஏற வேண்டியிருக்கிறது? குடிசை வீடென்றாலும், சாணி பூசிய தரையென்றாலும் கூட்டித் துப்புரவாக வைத்துக் கொண்டால்தானே மனிதன் சீவிக்கலாம்? அத்தோடு தினமும் குழந்தை அடிக்கடி நனைத்துக் கொள்ளும் துணிகளையெல்லாம் துவைத்துக் காய்த்து எடுக்கவேண்டும். அந்தக் குளிரில் வெந்நீர் காயவைத்து குழந்தையைக் குளிப்பாட்டும் நாளைக்கு இன்னும் வேலை கூடிப் போகும். உடம்பில் தண்ணீர் பட்டதும் விளையாடும் குழந்தை, தண்ணீரிலிருந்து எடுத்ததும் ஒரு பாட்டம் அழும். மூத்தவள் இருக்கும் போதெனில், தங்கையைத் தூக்கிவைத்துக் கொள்வாள்தான். ஆனாலும் ஏழுவயதுப் பிள்ளையிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு அவளுக்கு ஒரு திருப்தியோடு வேலை செய்யமுடியாது.

முருகேசு காலையில் கொல்லைக்குப் போய் கை, கால் கழுவிக் கொண்டு வந்ததுமே சுடச் சுடச் சாயமும், உள்ளங் கையில் சீனியும் கொடுத்துவிட வேண்டும். அவன் குடித்து முடிப்பதற்கிடையில் அடுப்பில் வெந்திருப்பதை அது கிழங்கோ, ரொட்டியோ எடுத்து, ஒரு சம்பல் அரைத்துச் சுற்றிக் கொடுத்துவிடுவாள். ஒன்றும் கொடுக்காவிட்டாலும் அவன் ஒன்றும் சொல்லமாட்டான். ஆனால் வேலைக்குப் போகும் கணவனுக்கு ஒன்றும் சமைத்துச் சுற்றிக் கொடுக்காமல் அனுப்புவது எப்படி? பட்டினியோடு வேலை செய்யமுடியுமா? வீட்டில் சமைக்க ஒன்றுமில்லாவிட்டால் பரவாயில்லை. அவன்தான் வாரக் கூலி கிடைத்ததுமே ஒரு பை நிறைய சமையலுக்குத் தேவையான எல்லாமும் வாங்கிவந்து விடுகிறானே. குறை சொல்ல முடியாது. கொஞ்சம் கூடப் பணம் கிடைத்தால், பிள்ளைகளுக்கு பிஸ்கட்டுக்களும் கொண்டுவந்து கொடுப்பான். காலையில் அவன் கிளம்பிப் போனதற்குப் பிறகுதான் அவள் சாயம் குடிப்பாள். அதையும் முழுதாகக் குடித்து முடிப்பதற்கிடையில் குழந்தை அழத் தொடங்கும். ஓடிப் போய் அதைத் தூக்கிக்கொண்டு பாயில் படுத்திருக்கும் மூத்தவளைத் தட்டித் தட்டி எழுப்புவாள். பிறகு அவளை கிணற்றடிக்கு அனுப்பிவிட்டு, குழந்தைக்குப் பால் கொடுப்பாள். ஒரு வழியாக அதைத் தூங்க வைத்துவிட்டு, மூத்தவளுக்கு உணவைக் கட்டிக் கொடுப்பாள். இரவில் தண்ணீரூற்றி வைத்த எஞ்சிய சோற்றை, வெங்காயம், மிளகாய், ஊறுகாய் சேர்த்துப் பிசைந்து அவளுக்கு ஊட்டிவிடுவாள். பிள்ளையைப் பசியில் அனுப்ப முடியுமா? எவ்வளவு தூரம் நடக்கவேண்டும்? அவள் நன்றாகப் படிப்பதாக ஒரு முறை அவளது ஆசிரியையும் சொல்லியிருக்கிறார். அப்படியிருக்க தூரத்தைக் காரணம் காட்டி அவளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல் இருக்கமுடியுமா? பிள்ளைகளை எப்படியாவது படிப்பிக்க வைத்து உயர்ந்த ஒரு நிலைக்குக் கொண்டு வரவேண்டுமென்றுதான் முருகேசுவும் அடிக்கடி சொல்வான். படிக்காவிட்டாலும் இந்தத் தோட்டத்தில் வேலை கிடைப்பது பிரச்சினையில்லைத்தான். ஆனாலும் படிப்பால் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் ஆயுள் முழுதும் தோட்டத்தில் கூலி வேலை செய்தாலும், கொழுந்து பறித்தாலும் கிடைத்துவிடுமா? அருள்ஜோதியின் சிறிய வயதில் இந்தத் தோட்டத்திலெங்கே பள்ளிக்கூடமொன்று இருந்தது? அதனால் ஒரு எழுத்துக் கூட அவளுக்குத் தெரியாது. முருகேசு பிறந்த தோட்டத்திலென்றால் ஐந்தாம் வகுப்பு வரை படிப்பிக்கக் கூடிய வைக்கோல் வேய்ந்த ஒரு சிறிய பள்ளிக் கூடம் இருந்தது. அதில் அவன் மூன்றாம் வகுப்பு வரை படித்திருக்கிறான். பிறகு அவனது அப்பா பாம்பு கொத்திச் செத்துப் போனதால், மாடு மேய்க்கவும், பால் கறந்து விற்கவுமே நேரம் சரியாக இருந்தது. அவனது அப்பாவைப் பாம்பு கொத்தியது கண்ணில். எவ்வளவு நாட்டுவைத்தியம் செய்தும் குணமாகவில்லை. பச்சிலை தேடி எத்தனை ஊருக்கு அலைந்திருப்பான் அந்தச் சிறுவயதில். கடைசியில் எதுவும் உதவவில்லை.

அருள்ஜோதி தினமும் இரவைக்குத்தான் சோறு சமைப்பாள். இரவில் எஞ்சியதையோ, காலையில் அவித்ததையோ அவளும் பிள்ளைகளும் பகலைக்கும் வைத்துச் சாப்பிடுவார்கள். அவளென்றால் பசியிலும் இருந்துவிடுவாள். பிள்ளைகளைப் பட்டினி போடுவதெப்படி? அவள் வளர்ந்த காலத்தில்தான் உண்ண இல்லாமல், உடுக்க இல்லாமல் கஷ்டத்தோடு வளர்ந்தாள். பிள்ளைகளையும் அப்படி வளர்ப்பது எவ்வாறு? ஆனாலும் பகலைக்குச் சோறு சமைப்பதைக் காட்டிலும் இரவில் சமைத்தால்தானே கணவன் சூட்டோடு சூட்டாக ருசித்துச் சாப்பிடுவான்? உழைத்துக் களைத்து வரும் கணவனுக்கு ஆறிய சோற்றைக் கொடுப்பது எப்படி? ஆசையோடு அவன் வாங்கிவரும் கருவாடோ, நெத்தலியோ, ஆற்றுமீனோ உடனே சமைத்துக் கொடுத்தால்தானே அவளுக்கும் திருப்தி? இரவைக்குப் பாரமாக ஏதாவது வயிற்றில் விழுந்தால்தான் நன்றாக நித்திரை வரும்..உடலும் ஆரோக்கியமாக வளருமென்று அவளது அம்மா இருக்கும்வரை சொல்வாள். மூத்தவள் இவள் வயிற்றிலிருக்கும் போதல்லவா அம்மா கிணற்றுக்குப் போகக் கீழே இறங்கும்போது வழுக்கிவிழுந்து மண்டையை உடைத்துக் கொண்டாள்? உரல் மாதிரி இருந்த மனுஷி. குடம் உருண்டு போய் வீதியில் விழுந்து, ஆட்கள் கண்டு அவளை வீட்டுக்குத் தூக்கிவரும்போதே உயிர் போய்விட்டிருந்தது. இப்படி நடக்குமென்று யார் கண்டது? விஷயம் கேள்விப்பட்டு தோட்டத்தில் வேலையிலிருந்த இவளும், முருகேசுவும் குழந்தை வயிற்றிலிருக்கிறதென்றும் பாராமல் ஓட்டமாய் ஓடி வந்தார்கள். குழந்தை பிறந்ததுமே அம்மாவின் பெயரைத்தான் அவர்கள் அதற்கு வைத்தார்கள். ஆனாலும் அப் பிள்ளையின் மீது கோபம் வரும்போதெல்லாம் அம்மாவின் பெயரைச் சொல்லித் திட்டுவது எவ்வாறு? அதனால் அதை ராணி என்று செல்லப் பெயர் வைத்தும் கூப்பிடத் தொடங்கினார்கள். அருள்ஜோதிக்கு அடிக்கடி அம்மாவின் நினைவு வரும். உடலில் ஏதாவது வருத்தம் வரும்போது, சுவையாக ஏதாவது சாப்பிடும்போது, அம்மா நட்டு வளர்த்த முற்றத்துத் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கும்போது, அம்மா விழுந்த இடத்தைக் காணும்போது என்றெல்லாம் ஒரு நாளைக்குப் பல தடவைகள் அம்மாவை நினைத்துப் பெருமூச்சு விட்டுக் கொள்வாள். கொல்லைப் புறத் தோட்டத்தில் கத்தரி, வெண்டி ,பாகலென்று அவள் நட்டிருக்கும் மரக்கறிச் செடிகளுக்குத் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றுவதிலும், களை பிடுங்குவதிலும், உரம் போடுவதிலுமே பின்னேரம் கழிந்துவிடும். இரண்டு மூன்று கிழமைக்கொரு முறை காய்களை ஆய்ந்து சந்திக் கடைக்குக் கொடுத்து செலவுப் புத்தகத்திலிருக்கும் கணக்கைக் குறைத்துக் கொள்வாள். வீட்டிலிருப்பதென்று சொல்லி சும்மா இருப்பதெப்படி?

சுமனா சொன்னபடியே அருள்ஜோதி பெரியாஸ்பத்திரிக்கு வந்திருந்தாள். தனியாகத்தான் வந்தாள். சுமனாவையும் கூட்டி வந்திருக்கலாம். கூப்பிட்டால் வந்திருப்பாள்தான். ஆனால், அவளும் வந்தால் இளையவை இரண்டையும் யாரிடம் விட்டு வருவது? கீழ் வீட்டு சுமனாவிடம் இரண்டு குழந்தைகளையும் ஒப்படைத்துவிட்டு பள்ளிக்கூடம் செல்லும் மூத்தவளோடு வீட்டைப் பூட்டிக் கொண்டு பாதைக்கு வரும்போதே நன்றாக விடிந்திருந்தது. அவள் இதற்குமுன்பும் ஓரிரு முறை பெரியாஸ்பத்திரிக்குப் போயிருக்கிறாள்தான். ஆனால் அது நோயாளி பார்க்கத்தான். இப்படி மருந்தெடுத்து வரப் போனதில்லை. அதிலும் ஒருமுறை முருகேசுவின் சித்தி மலேரியாக் காய்ச்சல் வந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்டதுமே, சுவையாக சோறு சமைத்து, பார்சல் கட்டி எடுத்துக் கொண்டு அவள்தான் முருகேசுவுடன் ஆஸ்பத்திரிக்கு வந்தாள். நோயாளிக்குச் சோறு கொடுக்கவேண்டாமென்று தாதி சொன்னதும் அங்கிருந்த வேறொரு நோயாளிக்கு அப் பார்சலைக் கொடுத்துவிட்டாள் ஜோதி. ஆஸ்பத்திரியென்றால் நோயாளியை அங்கேயே தங்க வைத்துக் கொள்வார்களென்றே அவள் எண்ணியிருந்தாள். அப்படியில்லையென்றும் மருந்து கொடுத்து உடனே அனுப்பிவிடுவார்களென்றும் சந்திக் கடை லலிதா சொன்னபிறகு தானே இன்று இங்கு வரவே அவளுக்கு தைரியம் வந்தது? அதன் நாற்றம்தான் அவளால் தாங்கிக் கொள்ளமுடியாதது. ஆஸ்பத்திரிக்குப் போய்வந்தால் சேலையெல்லாம் கூட அந்த வாசனைதான். அதற்காக பழையதைக் கட்டிக் கொண்டு போகமுடியுமா? இருப்பதிலேயே நல்லதைத்தான் உடுத்திக் கொண்டு போக வேண்டும். நகரத்துக்குப் போவதென்றால் சும்மாவா? சின்னவள்தான் கையை நீட்டி நீட்டி அழுதாள். சுமனா அவளைத் தூக்கிக் கொண்டு கொல்லையில் கூண்டுக்குள் இருந்த கிளியைக் காட்டப் போனதும்தான் அருள்ஜோதியால் வீதிக்கு வரமுடிந்தது.

பல் வலி தாங்கமுடியவில்லை. கைக்குட்டையைச் சுருட்டி கன்னத்தில் வைத்து அழுத்தியவாறுதான் ஆஸ்பத்திரிக்கு நடந்துவந்தாள். வந்து பார்த்தால் மருந்தெடுக்க கிட்ட நெருங்க முடியாதளவு சனம். விடிகாலையிலேயே வந்து நம்பர் எடுத்து எத்தனை பேர் காத்திருக்கிறார்கள்? அவளுக்குப் போன உடனேயே வைத்தியரை அணுக முடியுமா என்ன? வந்த உடனே அவளுக்கு நம்பர் எடுக்கவேண்டுமென்பது கூடத் தெரியாது. அருகிலிருந்த ஒரு பெண்தான் அவளை நம்பர் எடுக்கும்படி சொன்னாள். அவள் இரவே வந்து காத்திருந்து ஒருவாறு நம்பர் எடுத்துவிட்டாளாம். காலையில் ஒரு மணித்தியாலம் மட்டும்தான் நம்பர் வினியோகிப்பார்கள். யாருக்குத் தெரியும் இது? அருள்ஜோதி அந்த நேரத்தைத் தாண்டி வந்திருந்தாள். இப்பொழுது என்ன செய்வது? எல்லா நோயாளிகளுக்கும் மருந்து கொடுத்த பிறகு நேரமிருந்தால் வைத்தியர் நம்பர் இல்லாதவர்களையும் பார்ப்பாரென அதே பெண்தான் சொன்னாள். அவ்வளவு பாடுபட்டு வந்ததற்குக் கொஞ்சம் காத்திருந்தாவது பார்ப்போமென ஒரு மூலையில் நிலத்தில் குந்தினாள் அருள்ஜோதி. எத்தனை விதமான நோயாளிகள்? காயத்துக்கு மருந்து கட்டும் அறையிலிருந்து வரும் ஓலம் கேட்டுக் கொண்டிருக்க முடியாதது. அவளுக்கு அதையெல்லாம் கவனிக்க எங்கு நேரமிருக்கிறது. பல்லுக்குள் யாரோ ஊசியால் குத்திக் குத்தி எடுப்பது போல வலியெடுக்கும்போது, பக்கத்திலிருப்பவளுக்கு உயிரே போனாலும் தன்னால் திரும்பிப் பார்க்கமுடியாதென அவள் நினைத்துக் கொண்டாள். அவளுக்கு முன்னிருந்த வாங்கில் அமர்ந்திருந்த ஒருத்தியின் ஏழெட்டு மாதக் குழந்தை அருள்ஜோதியைப் பார்த்துச் சிரித்தது. அவள் கன்னத்தில் அழுத்திப் பிடித்திருந்த கைக்குட்டையை எடுத்து விரித்து அக் குழந்தையை நோக்கி அசைத்தாள். அது இன்னும் சிரித்தது. அருள்ஜோதியால் சிரிக்க முடியவில்லை. திரும்ப கன்னத்தில் கையை வைத்து அழுத்திக் கொண்டாள்.

ஆஸ்பத்திரியின் வாடை இப்பொழுது பழகி விட்டிருந்தது. ஒவ்வொருவராக உள்ளே போய் வந்து கொண்டிருந்தாலும் சனம் குறைவதுபோல் தெரியவில்லை. ஒரு நாளைக்கு நூறு பேரைத்தான் வைத்தியர் பார்ப்பாரென அங்கு கதைத்துக் கொண்டார்கள். அவளைப் போல நம்பரில்லாமல் எத்தனை பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்? அதிலும் பக்கத்தில் நிலத்தில் அமர்ந்திருக்கும் இந்தக் கைப்பிள்ளைக்காரியை முதலில் உள்ளே அனுப்பாமல் அவள் உள்ளே போவதெப்படி? நூற்றியோராவது ஆளாக அவள் போனாலும் வீட்டுக்குப் போய்ச் சேர அந்தியாகிவிடுமென அவளுக்குத் தோன்றியது. ஆனால் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்ததற்கு இருந்து மருந்தெடுத்துக் கொண்டே போக வேண்டுமென்ற வைராக்கியமும் உள்ளுக்குள் எழாமலில்லை. பல் வலிக்கு மருந்தெடுக்கப் போகவேண்டுமென்று முருகேசிடம் சொன்னதுமே, குறை சொல்லக் கூடாது, சட்டையை எடுத்து அதன் பைக்குள் கைவிட்டு கொஞ்சம் பணத்தை எடுத்து நீட்டினான். பெரியாஸ்பத்திரியில் போய் வரிசையில் காக்க வேண்டாம் என்றும் காசு கொடுத்து ஒரு மருத்துவரைப் பார்த்து மருந்து எடுத்துக் கொண்டு வரும்படியும் சொன்னான்தான். ஆனாலும் இலவசமாகக் கிடைக்கும் மருந்துக்கு எதற்குக் காசு கொடுக்கவேண்டுமென்றும் அவளுக்குத் தோன்றியது. அந்தக் காசை எடுத்துக் கொண்டு வந்ததும் நல்லதாகப் போயிற்று. இங்கு மருந்தெடுக்க முடியாமல் போனால் அந்தத் தனியார் க்ளினிக்குக்குப் போய் மருந்தெடுத்துக் கொண்டு போகலாம். அவள் கன்னத்தில் கைக்குட்டையை வைத்து அழுத்தி வேதனையில் முனகுவதைக் கண்ட ஒரு தாதி அருகில் வந்தாள். இவள் பல்வலியென்றதும் பல் டாக்டர் புதன்கிழமை மட்டும்தான் வருவாரெனவும் புதன்கிழமை வந்து நம்பரெடுத்து அவரைப் பார்க்கும்படியும் சொல்லிவிட்டுச் சென்றாள். அதற்குப் பிறகும் அங்கு காத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமென்ன இருக்கிறது? அதிலும் கையில் காசிருக்கும்போது எதற்காக இங்கே காத்துக் கிடந்து நேரத்தை வீணாக்கவேண்டும்? அவள் எழும்பி வெளியே வந்தாள்.

வெயில் சுட்டது. பசித்தது. காலையில் எதுவும் சாப்பிடாமல் கிளம்பிவந்தது. அருகிலிருந்த குழாயருகில் போய் வயிறு நிறையத் தண்ணீர் குடித்தாள். தண்ணீர் பட்டதும் வலி சற்றுக் குறைந்தது போலவும் இருந்தது. தனியார் கிளினிக் இருக்குமிடத்தை விசாரித்துக் கொண்டு அங்கே நடக்கத் தொடங்கினாள். கடுமையான வெயிலல்லவா இது? மயக்கம் வருவதுபோலவும் உணர்ந்தாள். அந்தக் கிளினிக் அதிக தூரமில்லை. பணம் கட்டி மருந்து எடுப்பதற்கும் சனம் நிறைந்திருப்பதைக் கண்டுதான் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அங்கிருந்த வாங்கில் போய் உட்கார்ந்துகொண்டாள். வரிசைப்படி இந்தச் சனம் மருந்து எடுத்து முடித்து, அதன் பிறகு தனது முறை வருவதற்கு வெகுநேரமெடுக்குமெனத் தோன்றியது. பிள்ளை பள்ளிக்கூடத்திலிருந்து வந்துவிடும். பசியிலிருப்பாள். ஏதோ தீர்மானித்தவள் எழுந்து வெளியேயிறங்கி வீதிக்கு வந்தாள். கையிலிருந்த காசுக்கு பிள்ளைகளுக்கு பிஸ்கட்டும், மூத்தவளுக்கு பள்ளிக் கூடத்துக்குக் கொண்டு போக ப்ளாஸ்டிக் தண்ணீர்ப் போத்தலொன்றும் வாங்கினாள். இங்கு வெறுமனே உட்கார்ந்திருந்தால் அங்கு பிள்ளைகளை யார் பார்த்துக் கொள்வது? சுமனாவும் வீட்டில் சும்மாவா இருக்கிறாள்? அவளுக்குத் தையல் வேலைகள் ஆயிரமிருக்கும். சின்னவள் அவளைப் போட்டுப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருப்பாள். இந்தப் பல்வலிக்கு கசாயம் குடித்தாலோ, கோயிலுக்குப் போய் வேப்பிலை அடித்தாலோ சரியாகப் போய்விடும். ஒன்றுமில்லாவிட்டால் பெருங்காயம், கராம்புத் துண்டு வைத்துப் பார்க்கலாம்.

பூனைகள்.......பூனைகள்.........பூனைகள்......29

தந்தைமை


என் வீட்டு மாடிப்படி யோரம்
தினம் தினம் அலைந்துக் கொண்டிருந்த
வெள்ளைநிற வயிறு பெருத்த பூனை
நான்கு குட்டிகளை ஈன்றிருந்தது நேற்று

குட்டிப்போட்ட பூனை சும்மா இருக்குமா?
நொடிக்கொரு முறை மாடி யேறியது
சமையல்கட்டுக்குள் பதுங்க இடம் தேடியது
மாடிப்படிகளில் கக்கி வைத்தது கண்டதையும்
இரவுகளில் அழுதது உயிர் கரைய

தொந்தரவு மிகுந்த முன்னிர வொன்றில்
இரை தேடிச் சென்றவளை ஏமாற்றி
பலவந்தமாய் பிடுங்கிய குட்டிகளை
பக்கத்துத் தெரு குப்பைத்தொட்டி யோரம்
விட்டு திரும்பிய மறு கணம்

பிரசவத்துக்கு அம்மா வீடு சென்றிருந்த
மனைவியிடமிருந்து அலைபேசி தகவல் வந்தது
தாயும் சேயும் நலமென்று ஆறுதலாய்

-என்.விநாயக முருகன்

2.11.10

குடை


மழைக்காலங்களில்

மனிதர்களுக்கு முளைக்கும்

மூன்றாம் கை

மேகக் கருமை

வந்து ஒட்டிக் கொண்டது

கைகளில் தவழும் குடைகளில்

தூறல்களில் நனைந்தே

வீடு சேரும் நேரங்களில்

பைகளில் தூங்கும்

புதிதாய் வாங்கிய குடைகள்

கணினி யுகமானாலும்

குடைகளின் வடிவம் மட்டும்

மாறுவதே இல்லை

குடை மீது விழும்

மழைத்துளிகள் வருத்தப்பட்டன

நனைதலின் சுகம்

மனிதர்களுக்கு தெரிவதில்லையென

1.11.10

யானை

கானின் அடர்பச்சை இருளோடு
அறையுள் பிரமாண்டத்தை
கொண்டு வந்திருந்தது யானை.
யாருமற்ற ஒரு நாளில்
யானையும் மெல்ல அசைந்தது.
கால்களை உதறிவிட்டு
உடலை சிலிர்த்தபடி
உயிர்ப்பின் சந்தோஷ கணங்களை
அடிக்குரலோங்கிப் பிளிறிவிட்டு
சின்னக் கண்களால்
அறையை அளந்தது.
ஒரடி எடுத்தாலும்
அறையை விட்டு வெளியேறும்
நிலை அறிந்த யானைக்கு
இப்போது இரு முடிவுகள்.
எந்த முடிவு என்பதோ
முடிவுகள் என்னென்ன என்பதோ
நீங்கள் அறியாததில்லை
வாழ்வின் வாதை தெரியாததுமில்லை. -

அனுவாகம்

ஒரு நிமிடம் தான்

திரும்பி ஒரே ஒரு பார்வை தான்

குசுகுசுக்கள் எல்லாம் அடங்கின

இங்கே பார்வைகள் மட்டுமே

காக்காய்கள் போல

இப்படியும் அப்படியும்

ஆட்டம் கண்டன-

மௌன சொற்கள்

இல்லை மௌனத்தில் சொற்கள்

பதுங்கிச் செல்லும்

படுத்துப் பதுங்கிச் செல்லும்

ஜீவன்கள் போலே-

ஏதோ இரண்டு வெவ்வேறு

கபடி ஆட்டக் கட்சிகள் போல-

சிந்சியரிட்டி இல்லையென்றால்

ஏன் இங்கு?

என்னுடைய செல் போன்

கூவியது- இல்லை நடுங்கியது..

அணைத்து வைக்க முடியவில்லை

பாஸ் அழைத்தால்?

எடுத்துப் பார்த்து

பின்னரே

கவனித்தேன்

அடுத்த அனுவாகத்துக்கு

எல்லோரும் சென்றிருந்தனர்

குகுசுத்தவர்களும்

கூடவே

28.10.10

குட்டிக்கதைகள்


ஏழு பேர்


ஆர். ராஜகோபாலன்


அங்கே மொத்தம் ஏழு பேர் இருந்தார்கள். அவர்களில் பெரியவனாகத் தெரிந்த ஒரே ஒரு பையன் மட்டுமே கால்சிராயும் சட்டையும் அணிந்திருந்தான். மற்றவர்களில் சிலர் மேலேயோ கீழேயோ மட்டு஧மை அணிந்திருந்தார்கள். இரு பொடியன்கள் ஒன்றுமே இல்லாது இருந்தார்கள். ஒரு சிறுமிகூட ஒரு கிழிந்தபாவாடை ஒன்றையே இடுப்பு வரை கட்டியிருந்தாள். அவள் மடியிலிருந்த குழந்தை வாயில் விரலைப் போட்டுக்கொண்டு அவள் மார்பில் தலையை சாய்த்துக் கொண்டிருந்தது.


இவன் உட்கார்ந்த திண்ணைக்கு நான்கு வீடுகளுக்கப்பால் அவர்கள் இப்போது வந்திருந்தார்கள். நன்றாகவும் தெளிவாகவும் அவர்கள் செய்கை இவனுக்குத் தெரிந்தது. கீழே கிடந்த ஒரு அறுந்த மாலையை அவர்களில் ஒருவனுக்குப் போட்டுக் கைதட்டி பெருஞ்சத்தம் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு பையன் நழுவி விழும் கால்சிராயை ஒரு கையில் பிடித்துக்கொண்டே கூச்சல் போட்டுக்கொண்டிருந்தான்.


அவர்களுக்குச் சுற்றுப்புற பிரக்ஞையே இல்லாதது போல இவனுக்குப் பட்டது. பொழுது போகாமல் வெளியே வந்து உட்கார்ந்திருந்த இவனுக்கு அது மிகுந்த வேடிக்கைக்குரியதாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூட இருந்தது. ஒரு அயலானின் பார்வையுடனேயும் கலைக் கண்களுடனேயும் தான் அதை கண்டு களிப்பதாக நினைத்துக் கொண்டான்.


அவர்கள் இப்போது இவனுக்கு எதிரில் சாலையோரமாக கிடத்தி வைக்கப்பட்டிருந்த கை வண்டியிடம் நெருங்கி வந்தார்கள். அதே சிறுவனுக்கு மறுபடியும் மாலை போட்டுக் குதித்துக் குதித்துக் கூச்சல் போட்டார்கள். சட்டை போடாமல் பரட்டைத் தலையுடனிருந்த அந்தச் சிறுவன் கைகளைக் கூப்பி மிகுந்த கம்பீரத்துடன் தலையை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் அசைத்துக் கொண்டிருந்தான். கைவண்டியை இவனுக்கு மிக அருகில் கொண்டு வந்து ''வாழ்க வாழ்க'' என்று அவர்கள் கோஷம் செய்தார்கள்.


இவனுக்கு திடீரென்று தானும் அவர்களில் ஒருவனாகிவிட்டதைப் போலவும் தானும் ஒருவனாகிவிட்டதைப் போலவும் தானும் அவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருப்பதைப் போலவும் ஒருவித பயம் ஏற்பட்டது. உடம்பைச் சிலிர்த்துக்கொண்டு தான் ஒரு பி எஸ் ஸி என்பதையும் அன்று தான் லாண்டரிலிருந்து வாங்கிவந்த வேஷ்டியையும் பனியனையும் போட்டுக்கொண்டிருப்பதையும் நினைத்துக் கொண்டான். எழுந்து நின்று வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ''போங்கடா போங்க'' என்று கைகளை ஆட்டி சத்தம் செய்தான்.


இப்போது மாலையுடனிருந்த பையன் மாலையை எடுத்து இவன் மேல் படும்படியாக வீசிப் போட்டான். இவன் நகர்ந்து நின்று கொண்டு மிகுந்த கோபத்துடனும் அருவருப்புடனும் மாலையைக் கையில் எடுத்தபோது அவர்களில் பெரியவனாக இருந்த பையன், ''சாவு மாலை'', ''சாவு மாலை'' என்று கத்தினான். எல்லோரும் ஒன்று சேர்ந்துகொண்டு ''வாழ்க'' என்பதற்குப் பதில் இப்போது ''ஒழிக ஒழிக'' என்று பெருங் கூச்சல் எழுப்பினார்கள். வாயில் விரலைப் போட்டுக்கொண்டிருந்த குழந்தை தலையைத் தூக்கி ஒரு நிமிடம் இவனைப் பார்த்துவிட்டு மீண்டும் தலையைச் சாய்த்துக் கொண்டது.


''சாவு மாலையென்றால் நீங்களேனடா கொடுத்தீர்கள்?'' என்று அவர்களுக்கு மேல் கத்தவேண்டும் போல் இவனுக்குத் தோன்றியது..திடீரென்று தன்னுடைய நிலையிலிருந்து கீழே விழுந்து விட்டதைப் போன்று உணர்ந்தான்.. தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று மிகுந்த வெட்கத்துடன் தலையை லேசாகித் தூக்கி சுற்றும் முற்றும் பார்த்தான். அவனுக்குத் தெரிந்தவர்கள் அங்கே யாரும் இல்லை.


சிறுவர்கள் கைவண்டியை விட்டு விட்டு சிறிது தூரத்தில் நின்றுகொண்டு இன்னும் பெரியதாகக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களை அலட்சியம் செய்வதுபோல் இவனும் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்ததும் அவர்கள் தொடர்ந்து சநத்தம் செய்து கொண்டிருந்தார்கள். திடீரென்று முகமெல்லாம் வேர்ப்பதைப் போலவும் உணர்ந்தான். ஏதோ ஒரு முக்கியமான வேலையை மறந்து விட்டிருந்தது இப்போதுதான் ஞாபகம் வந்ததைப் போல் வீட்டிற்குள் ஓடினான். அன்றுதான் இவன் நீண்ட நேரம் இடைவிடாது ரேடியோ கேட்டுக்கொண்டிருந்தான். சமீப காலத்தில் வானொலி நிகழ்ச்சிகள் மிகுந்த முன்னேற்றத்தை அடைந்திருப்பதாயும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருப்பதாயும் கூட இவனுக்கு அன்று தோன்றியது.

(கசடதபற / நவம்பர் 1971)

19.10.10

கையறு நிலை


வானவெளியெங்கும் நட்சத்திரக் கூட்டங்கள்

இடைவெளியின்றி ஜொலிக்கின்றன

காற்று வெளியெங்கும் பூ வாசம்மன

வெளியை மயக்குகின்றன

வெளியினூடே வெளிச்சம் பாய்ச்சும்

கிரணங்கள் முயங்கிக் கிடக்கின்றன

பேரவஸ்தையானதொரு விசும்பல்

ஆகாயமெங்கிலும் எதிரொலிக்கின்றன

குட்டியை பறிகொடுத்த

யானையின் பிளீறிடல் சத்தம்

வனமெங்கிலும் ஆக்ரமிக்கின்றன

இரவுக்கு முத்தம் தந்து

வழியனுப்பி வைக்கின்றன குழந்தைகள்

தனது வாழ்வினூடே

குட்டி குட்டி கதைகளை

சேகரித்து வைத்திருக்கின்றார்கள்

பாட்டிமார்கள்

அநீதியை எதிர்த்து சமர்

செய்யாமல்

கையறு நிலையில்

நின்று கொண்டிருந்தார் கடவுள்

அவரது கட்டற்ற


கட்டற்ற அற்புதசக்தியை


கடன் வாங்கிப்


போயிருந்தது சாத்தான்.

16.10.10

கடவுள் ஆடிடும் ஆட்டம்

கடவுளுக்கு முன்னதான
ஜாதகக் கட்டங்களில்
இடையறாது சுழலும்
சோழிகள் திரும்பி விழுகின்றன

சதுரங்க ஆட்டங்களில்
சிப்பாய்களை இழந்த ராஜாக்கள்
பயந்திருக்கின்றனர்
ராணிகள் அருகில்.

வண்ணம் மாறிவிழும் சீட்டுக்கள்
கோமாளியாக்கிக் கொண்டிருக்கிறது
பிரித்தாடும் கடவுளை.

மனிதர்களின் ஆட்டத்தின்
சூட்சுமங்கள் புரியாது
தெறித்தோடுகிறார்
மனிதர்களுடனாடும் கடவுள்.

o

ஒரு விளையாட்டின் இடைவேளையில்
தேநீர் அருந்தும் கடவுளை
கடவுளைச் சந்தித்தேன்.

இருவருக்கும் பேசுவதற்கு ஒன்றுமில்லை
புன்னகைத்தோம்
பிரிந்தோம்.

அவர் சொல்லாத உண்மைகளும்
நான் கேட்காத கேள்விகளும்
ஒன்றுடன் ஒன்று பேசிக்கொண்டிருந்தன பின்பு.

o

மரணத்தறுவாயில் என்னை வரச் சொல்லியிருந்தார்
கடவுள்

ரகசியம் எதாவது உடைக்கப்படலாம்
என்றோ

காதல் எதாவது சொல்லப்படலாம்
என்றோ

புலம்பல்கள் சேரலாம்
என்றோ

நினைத்திருந்தேன்.

நான் போய் சேருவதற்குள்
கடவுள் போய்சேர்ந்திருந்தார்.

o

கடவுள் பொம்மைகளை வைத்து
விளையாடிய குழந்தைகளை
பழிவாங்குவார்
பிறிதொருநாள்.15.10.10

பூனைகள்.....பூனைகள்.......பூனைகள்.....பூனைகள்...28பூனையின் பிடிவாதம்எழுத எழுத…
எழுத மறுத்தப்
பேனா முனை
காகிதப் பாதையில்
எங்கோத் தட்டிற்று.
ஓடும் மோட்டார் சக்கரத்தில்
சிக்கிய சேலைத் துண்டாய்
பேனா முனையின்
இரு கம்பீர
கம்பங்களைப் பிளந்து
அதற்குள் ஒரு
காகிதத் துணுக்கு.
ஜீரணிக்க இயலாமல்
கக்கிய மைக்குள்
மிதந்து வந்த
ஒரு பூனை
பிடிவாதமாய்
வரைமுறையின்றி கத்திற்று
ஒரு எலியினை
வரை வரை என்று.குமரி எஸ். நீலகண்டன்


கானல்


காற்றோடு கூடிய அடர்த்தியான சாரல் மழை ஊரையே ஈரலிப்புக்குள் வைத்திருந்தது. மேகக் கருமூட்டம் பகல் பொழுதையும் அந்திவேளையைப் போல இருட்டாக்கியிருந்தது. விடுமுறை நாளும் அதுவுமாய் இனி என்ன? உம்மா சமைத்து வைத்துள்ள சுவையான சாப்பாட்டினைச் சாப்பிட்டுவிட்டு அடிக்கும் குளிருக்கு ஏதுவாய்ப் போர்த்தித் தூங்கினால் சரி. வேறு வேலையெதுவும் இல்லை.
ஒருமுறை வெளியே வந்து எட்டிப்பார்த்தேன். வீட்டுக்கு முன்னேயிருந்த வயல்காணி முழுதும் நீர் நிறைந்து வெள்ளக் காடாகியிருந்தது. நாளை கொக்குகளுக்கு நல்ல நண்டு வேட்டை இருக்கிறது என எண்ணிக் கொண்டேன். இந்தக்கிழமை போயா தினத்துக்கும் சேர்த்து மூன்று நாட்கள் விடுமுறை. மழை வெளியே எங்கும் இறங்கி நடமாட விடாது போலிருக்கிறது.
"நானா உங்களுக்கு போன்'' தங்கை சமீனா கொண்டு வந்து நீட்டினாள்.
" யாரு ? "
" வஜீஹா மாமி ஊட்டுலீந்து "
ஹாரிஸாக இருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன். அவன் என்னுடன் கூடப்படித்த நெருங்கிய சினேகிதர்களில் ஒருவன். கொழும்பில் வேலை செய்யும் அவனும் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்திருக்க வேண்டும். இந்த முறை அவன் வீட்டுக்கும் போய் வரவேண்டுமென்ற திட்டமிருந்தது எனக்குள். போன மாதம் கொழும்பில் விபத்தொன்றில் சிக்கி ஆஸ்பத்திரியில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து விட்டு வீட்டுக்கு வந்திருக்கிறான்.
தொலைபேசி அழைப்பினை எடுத்தேன். மதீனா ராத்தா எடுத்திருந்தார். ஹாரிஸின் மூத்த ராத்தா. அவர்களது உம்மா என்னை அவசரமாகப் பார்க்கவேண்டும் எனச் சொன்னதாகச் சொன்னார். மழை விட்டவுடன் வீட்டுக்கு வருவதாகச் சொல்லி வைத்தேன்.மனதுக்குள் நிறையக் கேள்விகள் எழும்பி மறைந்தது. இப்படியான தொலைபேசி அழைப்புக்கள் வருவது எனக்கு இதுதான் முதல் தடவை. அதுவும் வஜீஹா மாமியிடமிருந்து. ஏதும் அவசரமில்லாமல், காரணமில்லாமல் கூப்பிட்டிருக்க மாட்டார்.
மதியச்சாப்பாட்டினை மேசையில் பரத்திவிட்டு உம்மா சாப்பிட அழைத்தார். சாப்பிட்டு முடித்து வந்து பார்த்தும் மழை விடுவது போலத் தெரியவில்லை. ஹாரிஸின் வாப்பா அவனது சிறுவயதிலேயே இறந்துவிட்டார். அவனுக்கு மூத்ததாக இரண்டு ராத்தாமார். வாப்பாவின் பென்ஷனில்தான் அவர்களை அவன் உம்மா கஷ்டப்பட்டு வளர்த்தார். இப்பொழுது ஹாரிஸும் வேலைக்குப் போவதால் குடும்பக் கஷ்டம் சிறிதளவாவது குறைந்திருக்கவேண்டும்.
அவன் வீடு ஊருக்குள் இருந்தது. நடந்து போவதென்றால் பத்து நிமிடங்களாவது எடுக்கும். சமீனாவிடம் குடையை வாங்கிக்கொண்டு நடக்கத் தொடங்கினேன். மண் வீதியெங்கும் சேற்று நீர் தேங்கி அழுக்காகியிருந்தது. நடக்க நடக்க பின் கால்களில் தெறித்தது. பேசாமல் சைக்கிளில் வந்திருக்கலாம்.
சிவப்பு ரோசாவுக்கென ஹாரிஸ் வீட்டு முன் வாயிலில், பதியம் போடப்பட்டிருந்தது. வீதியோடு ஒட்டிய வேலிக்கென வளர்க்கப்பட்ட மரங்களுக்குள்ளிருந்து மல்லிகைக் கொடியொன்று எட்டிப் பார்த்தது. வீட்டு வாயிலில் கூரையிலிருந்து வடிந்த பீலித்தண்ணீரில் சேறு தெறித்திருந்த கால்களைக் கழுவிக்கொண்டு செருப்பைக்கழற்றி வைத்து விட்டுக் கதவைத் தட்டி "ஹாரிஸ் " என்றபடியே உள் நுழைந்தேன்.
" வாங்கோ தம்பி. ஹாரிஸ் போஸ்ட் ஒபிஸுக்குப் போறனெண்டு சொல்லிட்டு இப்ப கொஞ்சத்துக்கு முந்தித்தான் போன..வருவான்.. நீங்க இரிங்கோ." சொன்னபடி உள்ளிருந்து வந்த மதீனா ராத்தாவின் பின்னால் வஜீஹா மாமியும் வந்தார்.
"ஓஹ்..சரி..மெதுவா வரட்டும்..ஹாரிஸுக்கு இப்ப எப்படியென்? கால்ல பலத்த அடியெண்டு கேள்விப்பட்டேன். பார்க்க வர எனக்கு லீவு கிடைக்கல்ல. இப்ப நடக்கேலுமா? "..முன் விறாந்தையில் போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்துகொண்டேன்.
அருகிலிருந்த கதிரையில் வஜீஹா மாமியும் அமர்ந்து கொண்டே..
" ஓஹ்...நடக்க ஏலும். இப்ப சைக்கிள் மிதிச்சுக் கொண்டுதான் போஸ்ட் ஒபிஸ் போயிருக்கான். ஒரு மாசமா கொழும்பு ஹொஸ்பிடல்ல இருந்தான். நாங்க மூணு நாளைக்கொருக்காப் போய் பார்த்துட்டு வந்து கொண்டிருந்தம்...பெண்டேஜ் வெட்டினாப் பெறகு கூட்டிக்கொண்டு போகச் சொன்ன..போன கிழமைதான் கூட்டிக் கொண்டு வந்தம். கால்ல வீக்கம் இன்னும் இரிக்கு. வாற கெழமயிலிரிந்து வேலைக்குப் போப்போறான். சொல்றதொண்டும் கேக்குறானில்ல. அதுபத்திப் பேசுறதுக்குத்தான் உங்களக் கொஞ்சம் வரச் சொன்னன் மகன். மதீனா..தம்பிக்கு குடிக்க எதாச்சும் ஊத்திக்கொண்டு வாங்கோ" என்றார்.
" ஐயோ..வாணம் மாமி..இப்பத்தான் நல்லாச் சாப்டுட்டு வந்தன்...ஹாரிஸால என்ன பிரச்சினை மாமி ? அஞ்சு நேரம் தொழுதுகொண்டு உங்கட பேச்சைக் கேட்டு வளர்ற பொடியன் தானே"
" அதெல்லாம் முந்தி மகன். அவனுக்கு மூத்ததா ரெண்டு ராத்தாமார் இரிக்காங்க..கல்யாண வயசாகி மிச்சநாள். இவன் என்னடாண்டால் இருவத்தஞ்சு வயசிலேயே ஒரு பிள்ளையப் பழக்கமாக்கிக் கொண்டு வந்து அவனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கச் சொல்றான். "
வஜீஹா மாமி சொல்லிக் கொண்டிருக்கும் போதே மதீனா ராத்தா வீட்டு மரத்தில் காய்த்த பப்பாளிப் பழமொன்றை துண்டுகளாக வெட்டியெடுத்து ஒரு தட்டில் கொண்டுவந்து என் முன்னால் இருந்த சிறு மேசையில் வைத்து "எடுங்கோ தம்பி " என்றார்.
" அதுவுமொரு சிங்களப்பிள்ள. ஹொஸ்பிடல்ல வச்சுப் பழக்கமாகியிரிக்கு. வீட்டுக்கு வந்த நாள்ல இரிந்து இவன் அடிக்கடி ஒரு நம்பருக்கு கோல் எடுத்துப் பேசிக் கொண்டிருக்கிறதப் பார்த்துட்டுக் கேட்டா இப்படிச் சொல்றான். ஏன்ட உசிர் இரிக்கிறவரைக்கும் இது போல ஒண்ட ஏன்ட ஊட்டுல செய்ய அனுமதிக்க மாட்டன். எங்கட பரம்பரயிலயே இப்படியொரு காரியத்த யாரும் செஞ்சில்ல இண்டைக்கு வரைக்கும். இவன் இப்படி ஏதாவது செஞ்சுக்கொண்டு வந்து நிண்டானெண்டால் இந்த ரெண்டு கொமர்களையும் நான் எப்படிக் கரை சேத்துறது மகன்? " சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாமிக்கு அழுகை வந்துவிட்டது. உடுத்திருந்த சாரி முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
கேட்டுக்கொண்டிருந்த மதீனா ராத்தாவின் முகமும் வாடிச் சோர்ந்திருந்தது. நான் பேச்சை மாற்ற விரும்பினேன்.
" சின்ன ராத்தா எங்க? காணல்ல? " என்றேன்.
" அவ தையல் கிளாஸுக்குப் போயிருக்கா. உம்மா சேர்ந்திருந்த சீட்டுக்காசு கிடைச்சு ஊட்டுக்கு ஒரு தையல் மெஷினும் வாங்கிட்டம்.. நானும் தைக்கிறன். அவள் பூப்போடவெல்லாம் பழகோணுமெண்டு சொல்லிக் கிளாஸுக்குப் போறாள். நல்லா சொல்லித் தாராங்களாம். நீங்க பழம் சாப்பிடுங்கோ தம்பி. "
"மகன் ..அண்ட அசலுல யாருக்கும் தெரியாது. இவன்ட மாமாவுக்குக் கூடச் சொல்லல்ல. நீங்கதான் அவன்கிட்ட இது சம்பந்தமா பேசோணும்..நீங்க சொன்னாக் கேப்பான். நல்ல புத்தி சொல்லுங்கோ அவனுக்கு. அவன நம்பித்தான் நாங்க எல்லோரும் இரிக்கிறம் மகன். "
" நீங்க கவலைப்பட வாணம் மாமி..நான் அவன்கிட்ட பேசுறேன். எல்லாம் சரியாகிடும்..நீங்க ஒண்டுக்கும் யோசிக்க வாணம்." என்று சொல்லியவாறே எழுந்தேன்.
"ஹாரிஸ் வந்தானெண்டால் எங்கட ஊட்டுக்கு வரச்சொல்லுங்கோ..நான் இன்னும் ரெண்டு நாளைக்கு ஊட்டுலதான் இரிப்பன்..அவன் வராட்டி ராவாகி நானே வாறேன். போய்ட்டு வாறேன் மாமி "
செருப்பை அணியும் போது மதீனா ராத்தா ஒரு கறுப்புப் பொலிதீன் பையைக் கொண்டு வந்து நீட்டினார்.
"என்ன ராத்தா இது ? "
" உம்மாக்கிட்டக் கொடுங்கோ..மிச்சம் நாளாச்சி அவங்களப் பார்த்து..நாங்க சலாம் சொன்ன எண்டு சொல்லுங்கோ "
நான் சரியெனச் சொல்லி, கொடுத்த பப்பாளிப் பழங்களை வாங்கிக் கொண்டு குடையுடன் நகர்ந்தேன். மழை லேசான தூறலாகப் பின் தொடர்ந்தது.
மஃரிபுக்குப் பள்ளிக்குப் போய்விட்டு வருகையில் என்னைத் தேடி வந்த ஹாரிஸ் என் வீட்டில் இருந்தான். அவன் குடித்து விட்டு வைத்திருந்த தேனீர்க் கோப்பையையும் எடுக்காமல் உம்மா அவனது விபத்து பற்றிய கதைகளைப் பரிதாபத்தோடு கேட்டுக்கொண்டிருந்தார். வாப்பா அவனது காலைக் காட்டச் சொல்லிப் பார்த்தார். நான் அவனை எனது அறைக்குள் கூட்டிக்கொண்டு வந்தேன். லேசாக நொண்டியபடியே நடந்துவந்தான். கட்டிலில் அமரச் சொல்லி விபத்து எப்படியானதென விசாரித்தேன்.
"வேலைக்குப் போயிட்டு வரச்சதான்.. பஸ்ஸை நான் இறங்கும் முன்னமே இழுத்துட்டான்..கீழ விழுந்துட்டன்..சின்ன எலும்பு முறிவு..பெருசாக் கட்டுப்போட்டு உட்டுட்டாங்க..இன்னம் குளிசை தந்திரிக்கு..குடிக்கச் சொல்லி..."
பிறகு அவனது வேலை பற்றியும், கொழும்பில் தங்குமிடம் பற்றியெல்லாம் விசாரித்துவிட்டு விஷயத்துக்கு வந்தேன்.
" யாரோ ஒரு சிங்களப்புள்ளயொண்டோட பழக்கமாம் ? எப்போலிரிந்து டா? "
" அது மச்சான்...யாரு உனக்குச் சொன்ன ?"
" அத விடு..நீ சொல்லு...என்ன பழக்கம்? என்ன விஷயம்..? மறைக்காமச் சொல்லுடா "
" அது தான் நான் எக்ஸிடண்ட் பட்டு ஹொஸ்பிடல்ல இருக்குறப்ப நல்ல அன்பாப் பார்த்துக் கொண்டது..நான் படுத்திருந்த வார்டுல வேல செய்ற நர்ஸொண்டு.."
" நீ அவள லவ் பண்றியாம்..கல்யாணம் செய்யப்போறியாம் ? "
" என் மேல ரொம்ப அன்பு அவளுக்கு..அவ மேல எனக்கும் விருப்பமொண்டிரிக்கு..நானின்னும் அவக்கிட்ட அதச் சொல்லல்ல..ஆனா நான் சொன்னா மறுக்க மாட்டாளெண்டு எனக்கு நல்லாத் தெரியும் "
" உனக்குப் பைத்தியமாடா மச்சான் ? உனக்கு ரெண்டு ராத்தாமார் இரிக்காங்க..உன்ன நம்பி உன்னோட குடும்பம் இரிக்கு..நீ இப்படிச் செஞ்சா ஊருல யாரு உன் குடும்பத்த மனுஷனா மதிப்பாங்க ? "
" ம்ம்..எக்ஸிடண்ட் பட்டுத் தன்னந்தனியா ஹொஸ்பிடல்ல இரிக்கிறப்போ ஊருலிரிந்து எவன் வந்தான் என்னப் பார்க்க? அந்தப் புள்ளதான் பார்த்துக் கொண்டது. கல்யாணமெண்டொண்டு கட்டினா அவளைத்தான் கட்டுவேன்..நீதான் மச்சான் ஹெல்ப் பண்ணனும் " என்று என் கைகளைப் பிடித்துக் கொண்டான். அவனிடம் இதற்கு மேல் இது பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை எனத் தோன்றியது. அந்தப் பெண்ணிடம் பேசிப் பார்த்தால் என்ன ?
" அவளுக்கு விருப்பமா இந்த லவ்வுல ? "
" நான் இன்னும் வெளிப்படையா அவக்கிட்டச் சொல்லல..நேத்தும் கோல் எடுத்தேன்..ஒரு ஜாதிக் குளிசையை மறந்து வச்சிட்டுப் போயிட்டனெண்டு மறக்காம பார்மஸில வாங்கிக் குடிக்கச் சொன்னா.."
" அவக்கிட்டக் கேட்காம நீ கல்யாணம் வரைக்கும் கற்பன பண்ணி வச்சிரிக்க "
" இல்ல மச்சான்..அவள் கட்டாயம் ஏத்துக் கொள்வாளென்ற நம்பிக்கை எனக்கிரிக்கு. நீதான் மச்சான் எனக்கு ஹெல்ப் பண்ணனும். எங்கட ஊட்டுல விருப்பப்பட மாட்டாங்க..நீதான் எடுத்துச் சொல்லணும் "
இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைக்காளானேன்..வஜீஹா மாமிக்கு சார்பாக இவனிடம் பேச வந்தால் இவன் சார்பாக அவரிடம் பேசப் போகவேண்டும் போலிருக்கிறது.
"சரி..அப்ப நாளைக்கே கேட்டுப்பாரு...நான் வேலைக்குப் போறதுக்கு முந்தி ஏதாச்சும் ஒண்டு செஞ்சு வச்சிட்டுப் போறேன் "
இரவுச் சாப்பாட்டுக்குப் பின்னர் திரும்பவும் மழை பிடித்துக்கொண்டது. சேற்றுப்பாதையில் சைக்கிள் மிதித்து விழுந்து தொலைத்தால் திரும்பவும் விபரீதமென சைக்கிளை எனது வீட்டில் வைத்து விட்டுக் குடையைக் கொடுத்து நடந்து போகச் சொல்லியனுப்பினேன். அவன் போய் வெகுநேரமாகியும் எனக்குத் தூக்கம் வரவில்லை.
மழை விட்டிருந்த மறுநாட் காலை பத்து மணிக்கெல்லாம் வந்த அவனது தொலைபேசி அழைப்பு எங்கிருக்கிறேனெனக் கேட்டு உடனே என்னைச் சந்திக்கவேண்டுமெனவும் வீட்டிலேயே இருக்கும்படியும் உடனே வருவதாகவும் சொன்னது. நான் காத்திருக்கத் தொடங்கினேன்.
குடையைத் தந்தவனின் முகம் சோர்ந்துபோயிருந்தது.. வீட்டில் ஏதாவது பிரச்சினை பண்ணி விட்டு வந்திருப்பானோ ? மேலும் என்னை யோசிக்கவிடாமல்
" போன்ல அவக்கிட்டப் பேசினேன் " என்றான்.
" ஓஹ்..என்ன சொன்னா? "
" ஒரு நோயாளிய அன்பாப் பார்த்துக்கொள்றது நர்ஸ்மாரோட கடமையாம்..அவளுக்கு என்னை மாதிரியே ஒரு நானா ஆர்மில இருக்கானாம்..அதனாலயும்தான் அன்பாப் பார்த்துக்கொண்டாளாம் "
" ம்ம்..நல்ல விஷயம். நீதான் தப்பாப் புரிஞ்சுக்கொண்டிரிக்கிறாய்..நீ கேட்டதுக்கு அவ கோபப்படாமயா இரிந்தா ? "
" இல்லடா..நான் கேட்ட உடனே சிரிக்கத் தொடங்கிட்டாடா மச்சான்..அவளுக்கு ஏற்கெனவே கல்யாணமாகி ரெண்டு வயசுல ஒரு புள்ளயும் இரிக்காம் " என்றான்.

சொற்குறிப்புக்கள்
# ஊடு - வீடு
# ராத்தா - அக்கா
# உம்மா - அம்மா
# வாப்பா - அப்பா
# அண்ட அசலுல - அயலில்
# குளிசை - மாத்திரை
# நானா - அண்ணன்