31.8.09

மதிமை சாலா மருட்கை

திரு. ஆனந்த்தின் கவிதைத் தொகுப்பான 'அளவில்லாத மலர்' ஐப் படிக்க எடுத்துக்கொண்டபோது அதற்கு முன்பாக இரண்டு கவிதைத் தொகுப்புகளைப் படித்திருந்தேன். ஒன்று, கவிதாவின் 'சந்தியாவின் முத்தம்'. மற்றது சூரியநிலாவின் 'இன்றும் நிகழ்கிறது உனக்கான காத்திருப்பு'. பின்னது இரண்டும் இவ்வாண்டு (2008) வெளிவந்தவை. ஆனந்த்தின் தொகுப்பு டிசம்பர் 2007லேயே வெளிவந்துவிட்டது. ஆனால் தொகுப்பு எனக்குத் தற்போதுதான் கிடைத்தது. டிசம்பர் 2007ல்தான் தமிழச்சி தங்கபாண்டியனின் 'தனப் பேச்சி'யும் வெளிவந்தது. இந்தத் தொகுப்புகளை எல்லாம் இங்கே ஒருசேர நான் குறிப்பிடுவதற்குக் காரணம் ஆகஸ்ட் 2008ல் நான் உணர்ந்துகொண்ட சில வரலாற்று சலனங்கள்.

திரு. ஆனந்த்தின் கவிதைத் தொகுப்பான 'அளவில்லாத மலர்' ஐப் படிக்க எடுத்துக்கொண்டபோது அதற்கு முன்பாக இரண்டு கவிதைத் தொகுப்புகளைப் படித்திருந்தேன். ஒன்று, கவிதாவின் 'சந்தியாவின் முத்தம்'. மற்றது சூரியநிலாவின் 'இன்றும் நிகழ்கிறது உனக்கான காத்திருப்பு'. பின்னது இரண்டும் இவ்வாண்டு (2008) வெளிவந்தவை. ஆனந்த்தின் தொகுப்பு டிசம்பர் 2007லேயே வெளிவந்துவிட்டது. ஆனால் தொகுப்பு எனக்குத் தற்போதுதான் கிடைத்தது. டிசம்பர் 2007ல்தான் தமிழச்சி தங்கபாண்டியனின் 'தனப் பேச்சி'யும் வெளிவந்தது. இந்தத் தொகுப்புகளை எல்லாம் இங்கே ஒருசேர நான் குறிப்பிடுவதற்குக் காரணம் ஆகஸ்ட் 2008ல் நான் உணர்ந்துகொண்ட சில வரலாற்று சலனங்கள்.

2008ஆம் ஆண்டில் ஆகஸ்டு முடியும்போது புதுக்கவிதைக்கு 50 வயது முடிந்துவிட்டது. 1958ஆம் ஆண்டு ஆகஸ்டு மாத சரஸ்வதி இதழில்தான் அமரஜீவி க.நா. சுப்ரமணியம் அவர்களின் 'புதுக்கவிதை' என்று பெயரிடப்பட்ட கட்டுரை வெளியாயிற்று. 'புதுக்கவிதை' என்ற பெயர் புழக்கத்துக்கு வந்தது அப்போதிலிருந்துதான். 50 ஆண்டு நிறைவு பெற்ற சமயம் வெளிவந்த புதுக்கவிதைகள் பெருமைப்படத்தக்கனவா என்ற கேள்வியுடன்தான் நான் கவிதைகளைப் படித்தேன்.

புதுக்கவிதை தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியத்துக்குப் பின் பக்தி இலக்கியத்துக்குப் பின் தோன்றிய மிகப் பெரிய இலக்கிய இயக்கம். முதல்ப் பார்வையில் இவ் இயக்கம் கவிதை சார்ந்ததாகத் தெரிந்தாலும் உண்மையில் இது எல்லாத் துறைகளையும் சார்ந்ததுதான். புதுக்கவிதை மாறுதல் வேட்கையைக் குறித்த சின்னம்தான். அதனால்தான் தாங்கள் கவிஞர்களாக இல்லாவிட்டாலும் புதுக்கவிதையில் வேறு துறையினருக்கும் ஈடுபாடு இருந்தது. 50 ஆண்டுகளுக்குப் பிறகும் இளமையுடன் முன்னேறிக்கொண்டிருக்கும் 'புதுக்கவிதை' என்ற பெயரையே கொண்டாட வேண்டும் என்று ஓர் அவா. சிறிய, பெரிய பத்திரிகையாளர்களுக்கு இதைப் பற்றிய நினைவே இல்லை. ஒன்றிரண்டு பேரிடம் இதைக் குறித்துப் பேசிப் பார்த்தேன். அவர்களுக்கு இதில் அக்கறை இல்லை. கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் எத்தனைப் பேர் பெயரும் பணமும் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும்போது ஒரு விதத்தில் விசனமாகத்தான் இருக்கிறது. ஒருவேளை நூறாண்டுக்குக் குறைவாக எதையும் கொண்டாடும் உணர்வு தமிழர்களிடத்தில் எழுவதில்லையோ என்னவோ.

2008-9ம் ஆண்டு புதுக்கவிதையின் ஆண்டாக எனக்கு நானே அறிவித்துக்கொண்டு கவிதைகளைப் படிக்கத் தொடங்கினேன். புதுக்கவிதையின் முதல்வர்களான ந. பிச்சமூர்த்தி மற்றும் க.நா.சு. இவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு நான் படிக்கத் தொடங்கிய கவிதைத் தொகுப்புகளில் சிலதான் ஆனந்த், கவிதா, சூரியநிலா மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் முதலானோரின் தொகுப்புகள். இவர்களில் மூத்தவர் ஆனந்த். ந. பிச்சமூர்த்தியை அவர் பார்த்திருக்க மாட்டார். ஆனால் க.நா. சுப்ரமணியத்தை அவர் அறிவார். க.நா.சு.வுக்கும் ஆனந்தைத் தெரியும். ஆனந்தின் 'இரண்டு சிகரங்களின் கீழ் என்ற படைப்பை நான் நாவல்1 என்று குறிப்பிட்டதைப் பற்றிக் க.நா.சு. என்னிடம் கேள்வி கேட்டார். நானும் அதற்குப் பதில் சொல்லியிருக்கிறேன்.
ஆனந்தை எனக்குத் தெரிவதற்கு முன்பாக அவருடைய தந்தையைத்தான் எனக்குத் தெரிந்திருந்தது. என்னை விட மூத்த, ஆனால் வாலிபராகவே பலராலும் கருதப்பட்ட ஒய்.ஆர்.கே. சர்மா அவர்களின் மகன்தான் ஆனந்த் என்பது பின்னர்தான் தெரிந்தது. சர்மா பெரிய வாசகர். எல்லா எழுத்தாளர்களுக்கும் நண்பர். சர்மா அமரஜீவி லா.ச. ராமாமிருதத்துக்கு உறவினர். ஆனந்த் எழுதத் தொடங்கியிருக்கிறார் என்று தெரிந்தாலும் நான் எதையும் அவரிடமிருந்து படிக்கக் கேட்கவில்லை. அவர் எழுதத் தொடங்கியபோது கசடதபறவின் மூன்றாவது அவதாரம் வெளிவந்துகொண்டிருந்தது. முதலில் பெரிய அளவிலும் இடையில் சற்றுச் சிறிய அளவிலும் மூன்றாவதாக வாராந்தரப் பத்திரிகை அளவிலும் கசடதபற வெளிவந்தது. கசடதபற வெளிவந்துகொண்டிருந்தாலும் அவர் தன் கவிதைகளை அதில் வெளியிட முன்வரவில்லை. தான் எழுதியவற்றைக் கவிதைகள் என்று கூட சொல்ல முன்வரவில்லை. எதேச்சையாக ஒரு நாள் அவர் கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தபோதுதான் அவர் கவிதைகள் எழுதி வைத்திருப்பது தெரிந்தது. நான் அவற்றைக் கவிதைகள் என்றும், வெளியிடத் தகுந்தவை என்றும் சொல்லி ஒரு கவிதையைக் கசடதபறவில் வெளியிடச் செய்தேன். அது வெளியாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. இன்றும் அதன் சுவடுகள் - மனப் பதிவுகள் - என்னிடம் உள்ளன. அந்தக் கவிதை கவனிக்கப்பட்டது. அந்தக் கவிதையின் வெளியீடு ஆனந்தைக் கவிதையின் சன்னதியிலேயே இருக்க வைத்தது. ஆனந்த் கவிதைகள் பின்பு தொகுக்கப்பட்டு'அவரவர் கைமணல்' என்ற பெயரில் வெளியாயின. அத்தொகுப்பின் மற்றொரு பகுதியில் தேவதச்சனின் கவிதைகள் இடம்பெற்றன. பின்பு'காலடியில் ஆகாயம்' என்ற தொகுப்பும் வெளியாயிற்று. இப்போது வெளிவந்திருக்கும் அளவில்லாத மலர் அவருக்கு மூன்றாவது தொகுப்பாகும்.
தொடக்கத்திலிருந்தே ஆனந்த் தனித்துவம் உடையவராகவே இருந்துவருகிறார். அவரது கவிதையல்லாத எழுத்துகளிலும் இதைப் பார்க்க முடியும். இலக்கியத்தில் தனித்துவம் ஒரு சிறப்பான மதிப்பாகக் கவிஞன் விஷயத்தில் கருதப்படுகிறது. ஒரு படைப்பாளி தனித்துவத்தை அடைவது மிகக் கடினம். அதை விடக் கடினம் அதிலிருந்து அவன் விடுபடுவது. க.நா.சு.வும்2 தனித்துவம் பற்றிக் குறிப்பிடுகிறார்.

'எனக்கு, எனக்கு, எனக்கு என்பதில்தான் இலக்கிய சிருஷ்டியும், இலக்கிய விமரிசனமும் அடங்கியிருக்கிறது. தத்துவ தரிசனம் ஆணவத்தைப் போக்க அவசியப்படுகிறது. ஆனால் இலக்கியத்தில் ஆணவம், தனித்தன்மை அவசியப்படுகிறது. அதில்லாவிட்டால் மெஷின்கள் உற்பத்தி செய்யும் இலக்கியம்தான் இருக்கும். மனிதர்கள் ஒருவரிடமிருந்து மாறுபட்டுச் செய்யும் இலக்கியம் இராது.
- க.நா. சுப்ரமணியம், இலக்கியத்துக்கு ஓர் இயக்கம், பக். 27

க.நா.சு. சொல்லியுள்ள கருத்துகளைக் கொண்டு தமிழ்ப் படைப்பாளிகளை எடைபோடுவது சுவையான விஷயமாக இருக்கும். ஆனால் ஆணவம், தனித்துவம் இருந்தால் மட்டும் ஒரு படைப்புக்குப் போதுமானதல்ல. சில சமயம் இவை இரண்டும் இடையூறாகவே கூட அமையலாம். ஆனால் இந்தச் சொற்கள் எப்படிப் பொருள் கொள்ளப்படுகிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

ஆனந்தின் தனித்துவம் என்ன? அதை உருவாக்கும் கூறுகள் எவை? தொடக்கத்திலேயே அவர் எழுத்தில் நான் அவதானித்தது ஒரு விதமான'அயன்மைஒ. நேர்ப் பழக்கத்தில் இந்த அயற்பண்பு அவரிடம் காணப்படுவதில்லை. ஆனால் எழுத்தில்தான் இப்பண்பு புலப்படுகிறது. எனவே இது அவரது அக உலகத்துடன் தொடர்புடையது எனக் கூறலாம். இப்பண்பு அவரது படைப்புகள் மூலம் ஒரு வினோதமான உலகத்தை சுட்டிக்காட்ட விரும்புவதாய்த் தெரிகிறது. விசாலமான, உயர்வான, விரைவான உணர்வுகளை வாசகனிடத்தில் எழுப்பும் முயற்சிகளே ஆனந்தின் கவிதைகள் என்று மதிப்பிடத் தோன்றுகிறது. வனம், ஆறு, மலை முதலியன அந்த வினோத உலகத்தையும் உணர்வையும் எழுப்பிக் காட்டும் படிமங்களாக அமைகின்றன3. இந்த வினோத உணர்வுக்கு அளவு ஒரு குறுக்கீடாகும். ஸ்திரத்தன்மை, நம்பகத்தன்மை - எனவே பாதுகாப்புணர்வைத் தருவது'அளவு' என்கிற தத்துவம். பரிச்சயமான உலகில் எல்லாப் பொருள்களும் அளக்கப்பட்டுள்ளன; கலையும் வடிவப் பொருள் என்கிற முறையிலும், அதன் உபகரணங்கள் அளவுக்குரியது என்பதாலும் அளவுக்குரியதாகிறது. அளவினால்தான் கலைகள் அறியப்பட்டுள்ளன. நான் ரமேஷ்-பிரேம் உப்பு கவிதைத் தொகுதி பற்றிக் குறிப்பிட்டது போல, கலை யதார்த்த - நிஜ உலகப் பொருள்களின் அளவை மாற்றி அமைத்துக்கொள்கிறது. பொருள்களை அவற்றின் அளவிலிருந்து விடுவிப்பதே கலையின் பிரதான நோக்கம் போல் காண்கிறது. ஒரு பொருளின் துல்லியத்தை பொருளிலிருந்து அகற்றினால் பொருளிடத்தில் நமக்கிருந்த பரிச்சயம் பாதிக்கிறது. பொருளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் புதிய அளவு மருட்சியை விளைவிக்கிறது. எனவேதான் புதுமையின் விளைவுகளில் ஒன்றாக மருட்சியைக் கூறுகிறார் தொல்காப்பியர்.

புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே

என்பது தொல்காப்பியம்.'மருட்கை'என்பது வியப்பு. அற்புதம் எனினும் அமையும் என்கிறது உரையாசிரியரான பேராசிரியரின் விளக்கம். மருட்கை பற்றிய தொல்காப்பியரின் நூற்பாவுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள்'அளவு'பற்றியும் குறிப்பிடுவது கவனிக்க வேண்டிய ஒன்று. தொல்காப்பியரின் நூற்பாவே பெருமை, சிறுமை என்று அளவு பற்றிய சொற்களைப் பயன்படுத்துகிறது. எனவே வியப்புக்கும் அளவுக்கும் தொடர்பிருக்கிறது என்று சொல்லலாம். தொல்காப்பியர் கூறும் வியப்பு என்கிற மெய்ப்பாடுதான் ஆனந்த் கவிதையில் இயங்குகிறது என்பது என் கருத்து.

ஆனந்த் தன் கவிதைத் தொகுப்புக்கு'அளவில்லாத மலர்' என்று பெயர் வைத்திருக்கிறார். இந்தத் தொடரை உயிர்ச்சுனைஎன்ற தன் கவிதையிலிருந்து அவர் எடுத்துக்கொண்டிருக்கிறார். மலர்அளவற்று இருக்க முடியுமா? பொதுவாக மலர்கள் எண்ணற்றவையாகவே உள்ளன. பெரிய மலர்கள் எண்ணப்படுகின்றன. எனவே மலர் எண் என்ற அளவுக்கு உட்படவே செய்கிறது. மலர் வேறு சில அளவுக்கும் ஆட்பட்டதுதான். முதலில் அது பார்க்கப்பட்டதும் சிறியது, பெரியது என்பது அறியப்படுகிறது. அதன் இதழ்கள் இத்தனை என்பது அறியப்படுகிறது. ஆறு பருவங்கள், ஐந்து திணைகள், இரண்டு பொழுதுகள், மற்றும் ஏழு வண்ணங்கள் இவற்றுக்கு ஆட்பட்டே அது மலர்கிறது. இப்படிப்பட்ட மலர் ஒன்றுதான் நம்மால் அறியக்கூடியது. அதற்குத்தான் நாம் விதிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் மலரை அளவில்லாத என்று குறிப்பிடும்போது மலரை அதன் உற்பத்தி தத்துவத்திலிருந்து விலக்கிக்கொள்ள வேண்டியுள்ளது. உற்பத்தியான, உற்பத்தி செய்யக்கூடிய ஒன்றைத்தான் நம்மால் அறிந்துகொள்ள முடியும். எல்லா மலரும் அளவுடையனவே. அளவில்லாத மலரோ உற்பத்தியான ஒன்றல்ல; உற்பத்தி செய்யக்கூடிய ஒன்றல்ல. ஆனால் இதைப் பார்க்க முடியுமா? நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஆம், பார்த்திருக்கிறீர்கள். ஆனால் பார்க்கவில்லை என்றுதான் பதில் சொல்வீர்கள். ஞாபகப்படுத்திப் பாருங்கள்.

வெண் தாமரைக்கன்றி நின்பதம் தாங்க என் உள்ளத் தண் தாமரைக்குத் தகாது கொலோ' என்று கேட்கிறது சகலகலாவல்லி மாலை. சகலகலாவல்லியின் பாதம் வெண்தாமரையின் மேல் இருக்கிறது. வெண்தாமரைப் பூவின் மேல் சரஸ்வதி நின்றிருப்பதாக சகலகலாவல்லி மாலை சொல்கிறது. பாரதியும் வெள்ளைத் தாமரைப்பூவில் இருப்பாள் என்கிறார். சரஸ்வதியை வீணையும் கையுமாக உட்கார்த்தி வைத்துக் காட்டினாலும் லக்ஷ்மியை செந்தாமரைப் பூவின் மேல் நிற்பதாகக் காட்டியிருக்கிறார் ஓவியர் ரவிவர்மா. ராட்சதத் தாமரைப் பூக்கள் அல்ல இவை. இந்தப் பூக்களின் உற்பத்தி ஸ்தானம் வேறு.

இராமனைப் பார்க்க சாளரத்தில் தோன்றிய பெண்களின் முகத்தை சாளரம் தோறும் பூத்த தாமரை என்றார் கம்பர். இந்தத் தாமரை உருவகத் தாமரை, அளவுடையது. ஆனால் ஆனந்தின் அளவில்லாத மலர் இத்தகையதல்ல. ஓரளவு சகலகலாவல்லியும், செந்திருவும் நிற்கும் மலர்களோடு உறவுள்ளதெனக் கூறலாம். அந்த மலர்கள் கூட இனம், எண்ணிக்கை மற்றும் நிறம் போன்ற அளவுடையதாக இருக்கிறது. ஆனால் ஆனந்தின் மலர் என்ன மலர் என்றே தெரிந்துகொள்ள முடியாது!

உயிர்ச்சுனையின் ஆழத்தில்
மலர்ந்து கொண்டே
துளிபொழிந்த அந்த
அளவில்லாத மலரைக் கண்டேன்.

என்கிறது கவிதை. எனவே மலரின் உற்பத்திஸ்தானம் - உயிர்ச் சுனை - அசாதாரணமானது, ஆகவே மலரும் அப்படியே ஆகிறது. அளவில்லாத என்றாலும் அந்தப் பொருள்'மலர்' என்றே பெயரிடப்படுகிறது. ஏன்? உயிர்ச் சுனை என்ற கவிதையில் கிட்டிய அனுபவம்'மலர்' என்ற பெயருக்கு அருகில் இருப்பதால் அப்படிப் பெயர் பெறுகிறது.'மலர்' என்று ஒரு பகுதி அறியப்பட்டு இன்ன மலர் என்ற மற்ற பகுதி அறியப்படாமல் போவதால் குழப்பம் ஏற்படுகிறது. இந்தக் குழப்பமும் இயல்புதான்.

அந்த நாள்
எனக்கு நன்றாக
நினைவில் இருக்கிறது
அன்று என்ன
நடந்தது என்பதுதான்
ஞாபகமில்லை

என்கிறது ஆனந்தின் மற்றொரு கவிதை. ஒரு பகுதி தெரிந்தும், மற்றொரு பகுதி தெரியாமல் போவதும் மனித இயல்புதான் என்பது போல. எனவே அளவில்லாத மலர் மாயாஜாலத்தில், தாந்த்ரீகத்தில் பார்க்கப்படுவதாக அமைகிறது. ஆனந்த குமாரசுவாமி சொன்னார்: விக்கிரகங்கள் அவை குறிக்கும் இறைவர்களின் பிம்பங்களே தவிர அவையே இறைவர்களில்லை என்று. இந்த பிம்பம் நூற்றுக்கு நூறு ஒத்துப் போகிற பிரதிபிம்பம் இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்4.

காலதேச அளவிலா வரையறுக்கப்பட்ட உலகிலிருந்து மாறுபட்டதைக் காட்ட காலதேசம் பற்றிய உணர்வை பின்னப்படுத்த வேண்டிய அவசியம் கவிதைக்கு ஏற்படுகிறது. இதனால் ஆனந்தின் காலதேசம் பற்றிய அளவுகளை - அவை பற்றிய உணர்வுகளைத் தளர்த்திக் கொள்ளச் செய்கின்றன.

தொகுப்பின் முதல் கவிதையான'வேகம்'காலம் பற்றிய அளவை சிதைக்கிறது. ஒரு மரம் - இங்கே தென்னை மரம் - வளர்வதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் - அதுவே அது எடுத்துக் கொள்ள வேண்டிய காலமும் கூட - வெகுவாகக் குறைத்துக் காட்டப் படுகிறது. இந்தக் குறைப்பு - தொல்காப்பியம் கூறும் சிறுமை ஆகும். அந்தக் கவிதையிலேயே'வியந்து'என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் கவிஞர். 'வெடித்துச் சிதறிஒ,'கதி மாறிய'என்ற தொடர்கள் மருட்சியைத் தருவன. காலம், வெளி இரண்டிலும் நிகழ்ந்த மாற்றத்தை இக் கவிதை உணர்த்துகிறது. இக் கவிதை ஏற்படுத்திய மருட்சி காரணமாகக் கவிதை அதன் பொருள் புரிகிற தளத்தில் புலப்படுவதில்லை. பரிச்சசயமான முறையில் கடைசி இரண்டு வரிகள் நீங்கலாக மற்ற பகுதியின் பொருளைக் கூறிவிடமுடியும். ஆனால் அப்படிக் கூறுவது கவிதை எழுப்பித் தரும் உணர்வை மறைத்து விடும்.

கடைசியாக'என்னை மட்டும் காணவில்லை'என்று கவிதையின் நான் கூறுகிறது. ஏன் அப்படி? இதுவரை இருந்த'நான்ஒக்கு அந்நிகழ்வினால் ஏற்பட்ட மாற்றம் ஒரு புதிய'நான்'உருவாகக் காரணமாகி விட்டது. அதனால்தான் என்னை மட்டும் காணவில்லை என்று கவிதைக்கு சொல் நிகழ்ச்சி ஏற்படுகிறது.

ஆனந்தின் கவிதையில் பல நான்கள் வருகின்றன. ஒரு குறுநாவலுக்குக் கூட'நான் காணாமல் போகும் கதை' என்று பெயர் வைத்திருக்கிறார். கவிதை இயல் கவிதையில் இடம்பெறும் நான்கள் வேறு வேறானவை என்றே அறிந்திருக்கிறது. கவிதை ஒருவருடைய கூற்றாகையால் கூறுவோர் பலராகக் கூறுகிற நானும் பலவாகிறது. நான் என்கிறபோது கூறுவோரின் திணையும், பெயரும், பாலும் தெரிவதில்லை. நகுலனின் கவிதையிலும் இந்த'நான்' பற்றிய நிலைபாட்டு விவாதம் நடைபெறுகிறது.

பணமுண்டா?
செலவுண்டு
முதல் இல்லை
உனக்கென்று
என்ன உண்டு
நான் கூட இல்லை

- சச்சிதானந்தம் பிள்ளையின் தனிமொழி

நான் ஒரு
உடும்பு
ஒரு
கொக்கு
ஒரு
ஒன்றுமே இல்லை

- சச்சிதானந்தம் பிள்ளையின் தனிமொழி

மழை இன்னும் வரவில்லை.
என்னுடன் ஒருவருமில்லை
நான் கூட இல்லை.

- மழை மரம் காற்று

குஞ்சுண்ணியை
உங்களுக்குத் தெரியும்
தானே. அவர்
எழுதியிருந்தார்
இன்று காலையில்
உறங்கி
விழித்ததும்
என்னை நான்
காணவில்லை
- கண்ணாடி

ஆனந்தின்'வேகம்' என்ற கவிதை'என்னை'மட்டும் காணவில்லை5 என்று முடிகிறது.'உயிர்ச்சுனை' என்ற கவிதையில் யாருமற்று/அவ்வப்போது நானுமற்று என்று சொல்லப்படுவது கவனிக்கத் தகுந்தது. எழுத்தாளர்களில் மௌனி தன் கதைகளில் இத்தகைய அனுபவத்தை ஆராய்ந்திருக்கிறார். க.நா.சு.வின் 'சாவித்ரி'6 என்ற சிறுகதை கூட இந்தச் சமயத்தில் நினைவில் வருகிறது.
எழுத்து பத்திரிகையின் புதுக்கவிதையைத் தொடர்ந்து 70களில் வெளியிட்ட கவிஞர்களின் தத்துவ விசாரங்களில் ஒன்று'நான்' மற்றும்'பெயர்' பற்றியுமாக இருந்தது. புனைபெயர் வைத்துக்கொள்வது கூட அழகுக்காக இல்லாமல் தன் பெயரை மறைத்துகொள்ளவும் உண்மையான விமரிசனக் கருத்துகள் எழச் செய்யவும்தான். 'அநாமிகா' போன்ற பெயர்கள் கூடப் பத்திரிகைப் பெயராக சிந்திக்கப்பட்டதுண்டு. ஆனந்தின்'பெயரைத் தேடி'என்ற கவிதை

அகராதியில்
என் பெயரைத்
தேடிக் கொண்டிருந்தேன்

என்று தொடங்குகிறது. கோகுலக்கண்ணனின் ஒரு கவிதை'அகராதியில் விழுந்த குழந்தைஒஎன்று பெயர் பெற்றிருக்கிறது.

நாம் எத்தனையோ கவனத்துடன் இருந்தபோதிலும்
குழந்தை திடீரென விழுந்துவிட்டது அகராதிக்குள்

என்று அதிர்ச்சி தருகிறது கோகுலக்கண்ணனின் கவிதை. படைப்பாளிகள் சிலர் - சிலர்தான் - தாங்கள் உணரும் அனுபவங்களின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளவை இத்தகைய கவிதைகள்.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் நவீன கவிதை அதிர்ச்சியை சற்றுக் கூடுதலாகப் படைத்துக் காட்டியிருந்தும் அது தன் நகைச்சுவையை இழந்துவிடவில்லை. சொல்லப் போனால்7 20ஆம் நூற்றாண்டில்தான் தமிழில் நகைச்சுவை அதிகமாகக் கவிதையில் வெளிப்பட்டிருக்கிறது. அதுவே பலவகையான சாயல்களைக் கொண்டுள்ளது. அனந்தவர்தனரின்'த்வன்யா லோகாஒவில் சொல்லப்பட்ட'ஸ்தாயி பாவம்ஒ,'சஞ்சாரி பாவம்' எல்லாம் இக்கவிதைகளில் காணப்படுகின்றன.

கோரைப்பற்கள்

நான்கு கால்கள்
வளைந்த ஒரு வால்
நான்கு கோரைப் பற்கள்
எச்சில் வழிய
துடித்துத் தொங்கும்
நீண்ட நாக்கு
அனைத்தும் இருந்தது
பயத்துக்கு
- ஆனந்த்
இக்கவிதையில்'துடித்து' என்ற வினைச்சொல் அச்சமூட்டும் நோக்கம் உடையது. ஆனால் கவிதையின் குரலோ நகைச்சுவைக் குறிப்புடையது.

முத்தம்

பரிமாறிக்கொள்பவர்களின்
சொர்க்கமாகத் தொடங்கி
சிறைக்கூடமாக முடிகிறது.

- கவிதா -'சந்தியாவின் முத்தம் ஒதொகுப்பில்

ஆனந்தின் கவிதையில் பயம், ஹாஸ்யம் என்றால், கவிதாவின் கவிதையில் சிருங்காரம், ஹாஸ்யம் என்று அமைப்பு உருவாகிறது. நகைச்சுவையில் ஒரு அதிசய வகையைச் சேர்ந்தது ஆர். ராதாகிருஷ்ணனின்'அலறல்' என்ற கவிதை.

அலறல்

எட்வர்டு முன்ச்சின் மறக்க முடியாத
ஓவியம்'அலறல்' எனப் பெயர்
பெற்றது. அவ்வளவுதான்.
ஒன்றுமே சொல்ல இயலாத
இந்த ஓவியத்தைப் பற்றி பல
புத்தகங்கள், அதற்கும் மேலே
கட்டுரைகள், விவாதங்கள்;
ஆத்ம ப்ரகடன வாதம் என்ற கலைச் சித்தாந்தம்
அன்று பஸ்ஸில் ஜன்னலோரமாக
அமர்ந்திருந்தவரின் வாய் முற்றிலும்
திறந்த வண்ணமாக்வே இருந்தது.
கடைசி ஸ்டாப்பில் இறங்கப் போன நான்
அவரை எழுப்பலாமென்றால்
அவர் உயிர் பிரிந்துவிட்டிருந்தது.

-'நெகிழ்ச்சி'ஒரு நிகழ்ச்சியல்ல' தொகுப்பில்.

பழனிவேளின்'தவளை வீடு' என்ற தொகுப்பிலிருந்து ஒரு கவிதை,

எளிமையானதாகச் சிக்கலானதாக
மிகப் பெரிய திகைப்பை ஏற்படுத்தும் தண்ணீர்
கண்ணாடியைப் போல பிரதிபலிப்பதும்
உள்ளே ஊடுருவ அனுமதிப்பதும்
தன்னில் இருப்பதை ஒளிர்வு மறைவோடு காட்டுவதும்
தனக்கென ஓர் ஒலியை வைத்துக்கொண்டு
ஒரே சமயத்தில் எல்லாத் தன்மையோடும்
தண்ணீரால் மட்டுமே இருக்க முடிகிறது
இந்த மாயச் சவால் மீது
தவளை யொன்று குதிக்கிறது.

பழனிவேளின் கவிதையில் ஸ்தாயி பாவம் (நிலையான பாவம்) சஞ்சாரி பாவம் - இரண்டாவதாகக் கவனத்தைக் கவரும் - வெளிப்படும் பாவம் என்ன என்பதை வாசகர்களின் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.

பஞ்சவர்ண வெட்டுக்கிளி தவ்வும்போது
பூமிக்குச் சிறிது எடை குறையக்கூடும்

என்று பழனிவேள் ஒரு கவிதையில் குறிப்பிட்டிருக்கிறார். விண்வெளி சாதனையின் விளைவாக பூமியின் எடை சிறிது குறைக்கப்பட்டது அதிசயமான சாதனை.'பூமிக்குப் பாரம் என்ற பழங்கருத்தை எண்ணிக்கொள்ளவும் இக்கவிதையின் அவதானிப்பு தூண்டுகிறது.

புதுமை என்பதே ஒரு சுவையாகத் தொல்காப்பியர் சொல்லியிருக்கிறார்.'விருந்தே'தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே' என்று செய்யுளியலில் குறிப்பிட்டிருக்கிறார்.'விருந்து' என்பது வெளியிலிருந்து வந்து ஏற்கப்பட்டதிடமிருந்து மதிக்கப்படுவது. அது யாப்பின் மேற்று என்று சொன்னாலும் ஒரு சுவைக்குப் புறத்திலிருந்தும் இன்னொரு சுவை முதல் சுவையை சேர்க்கையால் சிறப்பிக்க முடியும் என்பதுதான் கருத்து. இந்தக் கருத்தை'காவ்ய மீமாம்சை' என்ற நூலை வடமொழியில் எழுதிய ராஜசேகரர்8 நன்றாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். மரபியலில் இளமைப் பெயர்கள் பற்றி எழுதும்போது தொல்காப்பியர்,

நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே

என்று விதிக்கும்போது அவர் ஒரு முறுவல் செய்தது போல் என் மனதுக்குப் படுகிறது. நெல்லுக்கும் புல்லுக்கும் இளமையின் பெயர் கிடையாது என்பது நூற்பாவின் கருத்து. இதைக் கூறும்போது தொல்காப்பியருக்குப் பிரிப்பு வந்திருக்குமோ.

புதுக்கவிதையின் நடை இடைக்காலத்தில் மாறிவிட்டிருப்பதைக் கவனிக்க முடிகிறது. ஒரு புதுவகையான அழகும் இடம்பெறத் தொடங்கியுள்ளது. ஆனந்தின் கவிதைகளிலிருந்தே சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

பெரிய கன சதுரத்துக்கும்
சிறிய கோளத்துக்கும் கீழே
மூன்று பௌர்ணமிக்கு ஒருமுறை
நட்சத்திரங்கள் சில
கடந்து போகின்றன.

஑இரண்டு இடுக்குகள்' கவிதையிலிருந்து

சூரியன் மறுபக்கம் சுழன்றபின்
தம் நிழல் விழாதென நினைத்து
தாவரங்கள் ரகசியங்களை
தமக்குள் பகிர்ந்துகொள்கின்றன

-'இருளுக்குள் விழும் நிழல்' கவிதையில்

திரைகள் விலகிய பின்னும்
விக்கிரகங்கள்
உடையற்று நிற்கின்றன
-'காத்திருக்கும் வேளை' என்ற கவிதையில்

ஆனந்தின் அளவில்லாத மலர் தொகுப்பில்'புதியது' என்ற கவிதை பல வரிகளைக் கொண்டது. மாணிக்கவாசகரின் சிவபுராணம் மாதிரி, பாரதியாரின் அகவல் மாதிரி ஒலித்துக்கொண்டு நகர்கிறது இந்தக் கவிதை. கவிதையில் ஒரு மூதாட்டி வருகிறாள். தமிழில் காதம்பரி என்று ஒரு மொழிபெயர்ப்புக் காவியம் இருக்கிறது. அதைப் பாரதியார் படித்திருப்பார் அல்லது கேள்விப்பட்டிருப்பார் என்று சொல்லலாம். அந்தக் காதம்பரி குயிலில் எதிரொலிக்கிறது. கானகம், மையத்தில் குளம், காதல் முதலிய படிமங்கள் ஆனந்தின் புதியது கவிதையில் காதம்பரியை நினைவூட்டுகின்றன.

ஆனந்தின் கவிதைத் தொகுப்பில் வேகம், ஆதிமொழி, அந்த நாள், எனக்கான இடங்கள், இரண்டு இடுக்குகள், காதல், ஊர்வலம், மரங்கள் பேசும் ரகசியங்கள், மீன்கொத்தி முதலாக யாளிகளின் வரலாறு வரை இருபது கவிதைகள் சிறப்பாக நமது கவனத்தைக் கவர்கின்றன.

ஆனந்த் கவிதை இயல் குறித்தும் தொடர்ந்து எழுதியும், தனிப்பட விவாதித்தும் வருகிறார். திரு. பெருமாள்முருகனின் நீர் மிதக்கும் கண்கள் (2005), திரு. கோகுலக்கண்ணனின் மரம் பூக்கும் ஒளி (2007) ஆகிய தொகுப்புகளுக்கு ஆனந்த் எழுதியிருக்கும் குறிப்புகள் சிந்தனையைத் தூண்டுவன. கடந்த 30 ஆண்டுகளில் ஆனந்த் சூப்பர் கவிஞராகிவிட்டார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. நேற்று நடந்தது போல் இருக்கிறது அவரது முதல் கவிதையை அவரது கையெழுத்தில் படித்தது.

கட்டுரையின் தொடக்கத்தில் புதுக்கவிதையின் 50 ஆண்டு நிறைவைக் குறிப்பிட்டேன். இக்காலகட்டத்தில் முதல் 25 ஆண்டுக்குள் அறிமுகமான கவிஞர் என்கிற முறையில் ஆனந்தின் கவிதைகளைக் குறித்துக் கூடுதலாக இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. ஆனந்தின் கவிதைகளோடு 50 ஆண்டு நிறைந்த மகிழ்ச்சிக்காக நான் மீண்டும் படித்த கவிஞர்கள் பலர்: தேவதச்சன், சேரன், நாஞ்சில் நாடன், லதா (சிங்கப்பூர்), தேவேந்திர பூபதி, யவனிகா ஸ்ரீராம், யுவன், யூமா வாசுகி, புதுவை இளவேனில், ஆர். ராதாகிருஷ்ணன், அழகியசிங்கர், கவிதா, சூர்யநிலா, மாலதி மைத்ரி, ர. ஸ்ரீனிவாசன், கோகுலக்கண்ணன், தமிழ் மணவாளன் முதலியோர் அவர்களில் சில பேர்.

இனிய கனவொன்று
சுவடற்று தேய்வதைப் போல்

என்பது பெருமாள்முருகனின் ஒரு கவிதை வரி. புதுக்கவிதை அப்படியில்லை.


குறிப்புகள்

1) சிறுகதை, நாவல் அல்லது குறுநாவல் இவற்றின் நீளத்தைப் பற்றிக் க.நா.சு. பேசுவார். வடிவம் பற்றியே நாவல், குறுநாவல், கவிதை என்பது குறிப்பிடப்படுவதால் அதன் நீளம் ஒரு பொருட்டல்ல என்பார் க.நா.சு. ஒரு சிறுகதை 300 பக்கம் கூட இருக்கலாம் என்பார் க.நா.சு. ஆனந்தின் இரண்டு சிகரங்களின் கீழ் ஒரு நாவல் என்று நான் குறிப்பிட்டது அதன் வாசிப்புத் தரும் இயல்பைப் பற்றி. மற்ற அத்தியாயங்கள் படிக்கத் தரப்படாமலேயே ஒரு நாவலின் ஒன்றிரண்டு அத்தியாயங்கள் மட்டுமே வாசகனுக்குத் தரப்படலாம். வடமொழியில் கூறப்படும் கண்ட காவியம் (கண்டம் என்றால் ஒரு துண்டு) அகண்ட (துண்டமற்றது) காவியம் பற்றிய கருத்துகளைப் போன்றது க.நா.சு.விடம் நான் சொன்னது.

2) விரும்பத் தகுந்ததும் சலிப்புத் தருவதுமாக தனித்துவம் காணப்படுகிறது. இசைத் துறையில் இதற்கு உதாரணங்கள் கூறலாம். சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் சிதம்பரம் ஜெயராமன் இவர்களின் தனித்துவம் சலிப்பூட்டுகிறது.ந.பிச்சமூர்த்தியின் கவிதைகளில் சில இடங்களையும் கூறலாம்.

3) சர்ரியலிசம், உருவகம் முதலியவை இவ்வுலகைப் படைத்துக் காட்டுகின்றன. ஆனந்தின் படைப்புகள் வினோதத்துக்கு நல்ல எடுத்துக்காட்டுகள்.

4, 5) ந. பிச்சமூர்த்தியின் 'காதல்' என்ற கவிதையின் இறுதி அடியும்'என்னைக் காணவில்லை'என்று முடிகிறது.

6) 1939ம் ஆண்டு மணிக்கொடியில் வெளியான க.நா.சு.வின் சிறுகதை சாவித்ரி நுட்பமாகப் பின்னப்பட்ட ஒன்று.

7) க.நா.சு.வின் அபஸ்வரம் கவிதை நவீன கவிதை இலக்கியத்தின் நகைச்சுவைக்குக் கொடியேற்றம் செய்வது.

8) கி.பி. 10ம் நூற்றாண்டில் வாழ்ந்தார். கவிஞர், நாடகாசிரியர் மற்றும் கவிதை இயலாளர்.

9. பாரதியின்'நான்'என்ற கவிதையை அய்யப்பப் பணிக்கரின் 'ஞானப்பானை'என்ற கவிதையுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
26.8.09

நான்,பிரமிள்,விசிறி சாமியார்.......8
பிரமிள் இதற்கு பிறகு பலதடவைகள் விசிறி சாமியாரைப் போய்ப் பார்த்தார். ஆனால் நான் அதன்பின் பார்க்கவில்லை. பாலகுமாரன் மூலம் விசிறி சாமியார் புகழ் எங்கும் பரவி விட்டது. தனியாக அவர் ஆஸ்ரமம் வைத்துக்கொண்டு போனபின், அவரைச் சுற்றிலும் கூட்டம். அக் கூட்டத்தில் அவரை நெருக்கமாக பார்த்துப் பேச வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தோடு நான் அந்த ஆஸ்ரமத்திற்குப் போயிருக்கிறேன். ஆனால் விசிறி சாமியாரைப் பார்க்கக் கூட முடியவில்லை.

என் மூட் மாறிவிட்டதை பிரமிள் நன்றாக அறிந்திருந்தார். அடுத்தநாள் பிரமிளிடம், இன்னொரு முறை விசிறி சாமியாரைப் போய்ப் பார்க்கலாமா என்று கேட்டேன். இன்னொரு முறை நம்மைப் பார்க்க விரும்ப மாட்டார் என்றார் பிரமிள். பின் நாங்கள் மூவரும் திருவண்ணாமலையைச் சுற்றி வந்தோம். தவம் புரியும் குகை போன்ற இடங்களைப் பார்த்தோம்.

விசிறி சாமியாரிடமிருந்து விடைபெற்று வரும்போது, எஙகள் மூவருக்கும் விசிறி சாமியார் கி.வா.ஜா அவர்கள் விசிறி சாமியார் பற்றி எழுதிய கவிதைகள் அடங்கிய நூலைக் கொடுத்தார்.

நானும் பிரமிளும் சென்னை திரும்பும்போது, என் மனதில் சாமியார் என்றால் யார்? அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்றெல்லாம் தோன்றியவண்ணம் இருந்தன. சாமியாரெல்லாம் குழந்தை மாதிரி, அவர்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை அறிய முடியாது என்று பிரமிள் குறிப்பிட்டார். நீங்கள் பெரிதாக இதைப் பற்றி நினைக்காதீர்கள் என்றும் குறிப்பிட்டார். சாமியார் பிரமிள் கையை சிறிது நேரம் பிடித்துக்கொண்டிருந்தபோது, அந்த ஸ்பரிசம் ரொம்ப குளிர்ச்சியாக இருந்தது என்று குறிப்பிட்டார். ஒரு ஆரோக்கியமான பெண்ணின் கையைத் தொடும்போது அப்படித்தான் குளிர்ச்சியாக இருக்கும் என்றும் பிரமிள் குறிப்பிட்டார். அவர் சொன்னதைக் கேட்டு எனக்குத் திகைப்பாக இருந்தது. பிரமிள் திருமணமே செய்து கொள்ளாதவர். அவருக்கு குடும்பமே கிடையாது. ஆரோக்கியமான பெண்ணின் கை எப்படி குளிர்ச்சியாக இருக்கும் என்பது அவருக்கு எப்படித் தெரியும். பிரமிளைப் பார்த்து இந்தக் கேள்வியை கேட்கவே இல்லை. மரியாதை நிமித்தமாக இதைக் கேட்கவில்லை.
(இன்னும் வரும்)

அது கூட
வரட்டுமென்று அனுமதிப்பதா அதனை

வாராது தடுப்பதா.......

வந்து போய்விட்டது

விட்டுவிடு.

25.8.09

தனிமை
நூறாண்டுக்கு முந்தைய
பாழடைந்த வெறுமை
படர்ந்த கோயில்களுக்கு
தனியாக செ‌ன்று
திரும்பும்போதெல்லாம்
முதுகுக்கு பிறகு
சன்னமாக கேட்கிறது
விசும்பலொலி
அடு‌த்த முறையாவது
உன்னிப்பாகப் பார்க்க வேண்டும்
உங்களுடன் ஒரு வார்த்தை

நண்பர்களே,

இத்தனை நாட்களாக நான் உங்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. என் கணினி ஒத்துழைக்கவில்லை. எதிர்பாராதவிதமாய் ஏற்பட்ட விபத்தைச் சரிசெய்ய சரியாய் 2 வாரங்கள் ஓடிவிட்டன. நேற்றுவரை முரசு அஞ்சல் கிடைக்கவில்லை. இன்று ஒரு நண்பரின் புண்ணியத்தால் முரசு அஞ்சல் கிடைத்துவிட்டது. இந்த இரண்டுவாரங்களில் ஒரு கூட்டம் நடத்தினேன். அது குறித்து தகவல் தருவது அவசியம். சில புகைப்படங்களை இணைக்கவும் வேண்டும். அதேபோல் என் கட்டுரை நான், பிரமிள், விசிறி சாமியார்..தொடர்ந்து எழுதி முடிக்க வேண்டும். எனக்குப்பிடித்த கவிதை, எனக்குப்பிடித்த கதை எல்லாவற்றையும் கொண்டு வரவேண்டும். முக்கியமாக நீங்கள் எழுதுவதையும் நான் பிரசுரிக்க வேண்டும். மெதுவாக நவீன விருட்சம் 84வது இதழை எல்லாருக்கும் அனுப்பிவிட்டேன். இன்னும் சிலருக்கு விட்டுப் போயிருக்கும். அவர்கள் விபரங்கள் தெரிந்தால் அதையும் அனுப்பி விடலாம். இன்று புதியதாய் வருபவர்கள் பிரமாதமாய் எழுதித் தள்ளி விடுகிறார்கள். நான் நடத்திய கூட்டத்தில் blogல் எழுதும் நண்பர்களைச் சந்திக்க நேர்ந்தது மகிழ்ச்சியான விஷயமாக எனக்குத் தோன்றியது.

திரும்பவும் தினம் தினம் சந்திக்க முயற்சி செய்யலாம்.

அன்புடன்

அழகியசிங்கர்

24.8.09

கண்ணோடு காண்பதெல்லாம்நகைச்சுவையும் உடல்நலமும்
என்றொரு புத்தகம் வெளியிட்ட
புகைப்படமொன்று இருந்தது
நீள் மேஜையில்.
காதைக் கிழிக்கும் சத்தத்துடன்
ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த
தொலைக்காட்சித் தொடரின்
அன்றைய எபிசோடில்
அடுத்தடுத்த
மாரடைப்பு சம்பவங்கள்.
அவ்வப்போது
திறந்து மூடிக்கொண்டிருந்த
அறைக்கதவு வழியே
கசிந்துகொண்டிருந்தது
அந்த இதய நோய் மருத்துவரின்
ஆர்ப்பாட்டமில்லாத
அமைதியான பேச்சு.

23.8.09

மழை இரவு

பெரும் மழை இரவொன்றில்
குளிர் தளைத்திருந்த உடலை
வெப்பமேற்ற வென்புகை குழலொன்றை
பற்ற வைத்தேன்.
மஞ்சள் விளக்கின் அருகாமை
வெப்பமும் ஈரக்காற்றில் படபடத்துக்
கொண்டிருந்த படிக்கப் பிடிக்காமல்
வீசி எரிந்த புத்தகத்தின் வாசனையும்
ஏனோ பிடித்திருப்பதாக தோன்றியது.
வெளியில் தவளை சப்தமும்
அதன் பின்னான அமைதியும்
மழை இரவின் அச்சத்தை
திரித்துக் கொண்டிருந்தது.
நீண்ட நேரம் சிறு சிறு புகைகளாக
சுவைத்திருந்த சிகரெட் விரலில்
சுடும் போது சுண்டி எரிந்து விட்டு
மீண்டும் படுத்துக் கொண்டேன்.
அதன் பின் பெய்த மழையும்
பரவியிருந்த சிகரெட் நெடியும்
எப்போது விலகியது என எனக்கு
தெரியவில்லை.
மீண்டும் என்னை எழுப்பிவிட்டது
கதவிடுக்கில் கசியும் அதே சூரியன்

10.8.09

குட்டி கவிதைகள் 21
காந்தி கொள்கை என்ன?
கேட்டார் வாத்தியார்
தெரியாது என்றேன்
அடித்துவிட்டு சொன்னார்
அகிம்சை என்று


2
ஒற்றை முத்தம்தான் தருவேன்
அடம்பிடித்தாள் குழந்தை
யார் பெறுவது?
சண்டைஇட்டன
என் இரு கன்னகளும்

இரவெல்லாம்

இரவெல்லாம் கத்தியபடி

வழியெங்கும்

வயிறு வெடித்து

கிடந்த தவளைகள்

நினைவூட்டுகின்றன

முன்தின மாலையின்

நமக்கான பிரிவொன்றை

சட்டையொன்று-----------------
என்னை

தன்னுள்ளே உடுத்தியபடி

சட்டையொன்று கிளம்பியது.

எதிர்வந்தவர்கள்

நலம் விசாரிக்க

என்னை இறுதிவரை

பேசவிடாமல்

தன்னைப் பற்றியே

பெருமையடித்து தீர்த்தது.

புறக்கணிப்பின் உச்சத்தில்

ஒரு நாள்
சட்டைக்குள்ளிருந்த

நானொன்று
அம்மணமாக வெளியேறியது

யாரிடமும் சொல்லாமல்


9.8.09

கூட்டம் பற்றிய அறிவிப்பு


விருட்சம் அழைக்கிறது

கவிதை வாசிப்பும், கவிதைக் குறித்து உரையாடலும்

ந.பிச்சமூர்த்தி எழுதிய 'காதல்' என்ற கவிதை மணிக்கொடியில் வெளியாகி 75 ஆண்டுகள் ஆகிவிட்டன.

க.நா சுப்ரமணியம் 'சரஸ்வதி' யில் வெளியிட்ட புதுக்கவிதை என்ற கட்டுரைக்கு 50 வயது நிறைவடைந்துவிட்டது.

சிறு இதழ்களின் முன்னோடியான 'எழுத்து' முதல் இதழ் வெளிவந்தும் 50 ஆண்டுகள் ஆகிவிட்டன.


விழா ஒருங்கிணைப்பாளர்கள் : ஞானக்கூத்தன்

பேராசிரியர் சிவக்குமார்

நடைபெறும் நாள் : 16.08.2009 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம் : மாலை 6 மணிக்கு
இடம் : கருத்தரங்கு அறை, தேவநேய பாவணர் மைய நூலகம்

735 அண்ணா சாலை சென்னை 600 002

கவிஞர்கள் பலரும் கலந்துகொண்டு கவிதை வாசிக்க வேண்டும். கவிதைகள் குறித்து உரையாடவும் அழைக்கிறோம்.

7.8.09

எச்சம்
"அவனோட பேரைச் சொல்ற மாதிரியோ, அவனை ஞாபகப்படுத்துற மாதிரியோ எதுவுமே இனிமேல இந்த வீட்டில இருக்கக்கூடாது. ராசிம்மா, எல்லாத்தையும் சேர்த்து வை. யாராவது ஏழை, எளியதுகளுக்குக் கொடுத்துடலாம்".


வீட்டிற்கு வந்த உடனேயே கூடத்திலிருந்த பலகையைத் தூக்கி வெளியே எறிந்தவாறே சொன்னார் ராசாத்தியின் அப்பா. அது முன்பக்க வேலியோரத்திலுள்ள கல்லின் மேல் விழுந்து சப்தமெழுப்பி அடங்கியது. முற்றத்திலிருந்து வீட்டுக் கூடத்துக்கு இரண்டு படிகள் ஏறி வரவேண்டும். அந்தக்காலப் படிகள். ஒவ்வொன்றும் ஒரு அடியளவு உயரத்தில் கருங்கல்லினால் கட்டப்பட்ட உயர்ந்த படிகள். அவரது பெற்றோர் மூலம் கிடைத்த பூர்விகச் சொத்தாக எஞ்சியிருந்த ஒரே வீட்டின் படிகள். காலம் காலமாக அந்த வீட்டின் குடித்தனங்களைப் பார்த்துப் பார்த்துத் தேய்ந்த படிகள்.


குமார் அந்தப்பலகையைப் படிகளின் மீது வைத்துத்தான் இரவுகளில் மோட்டார் சைக்கிளை உள்ளே கொண்டு வந்து வைப்பான். குமாருக்கு அந்த வீட்டில் மிகப்பிடித்தவையாக இருந்தவை இரண்டுதான். ஒன்று அந்த மோட்டார் சைக்கிள். மற்றது ராசாத்தியின் ஒரே தங்கை கல்யாணி.


பலகை விழும் சத்தம் கேட்டு பாடக்கொப்பியோடு உள்ளேயிருந்து வந்து எட்டிப்பார்த்தாள் கல்யாணி. அவள் இந்த வருடம்தான் உயர்தரப்பரீட்சை எழுதுவதற்காகக் காத்திருக்கிறாள். கண்களில் மேற்படிப்புப் பற்றிய கனவுகள் மிதந்தன. அம்மா இறக்கும் முன் அக்காவிடம் தங்கையை நன்றாகப் படிக்கவைக்கும் படி சொல்லியிருக்கிறாளாம். முற்றத்தைப் பார்த்துவிட்டு, வாசல் தூணைப் பிடித்தவாறே கண்கள் கலங்கிச் சிவந்திருந்த அக்காவைப் பார்த்தாள். உதடுகள் துடித்தபடி பெரும் அழுகையை அடக்கச் சிரமப்பட்டபடி நின்றுகொண்டிருந்தாள் ராசாத்தி.


வெளியே போய்விட்டு அப்போதுதான் வந்த அப்பா, சட்டையைக் கழற்றிவிட்டுச் சாய்மனைக் கதிரையில் உட்காந்து கொண்டார். போன காரியம் என்னவாயிற்று என அப்பா ஏதாவது சொல்வாரென அப்பாவை ஒரு கணம் பார்த்தாள் ராசாத்தி. ஆளுருக்கும் வெயிலின் கிரணங்கள், முகத்தில் வயோதிபத்தையும் மீறிக் கருமையைத் தந்திருந்தது. இளகிய மனம். அன்பான அப்பா. தற்போதைய முகத்தில் கோபத்தின் அடர்த்தி, இயலாமையின் பரிதவிப்பு வியாபித்திருந்தது. வியர்த்து வழிந்த மேனியைத் துண்டால் துடைத்தவாறே கண்மூடிக் கொண்டார் அவர்.


கல்யாணி உள்ளே போய் கூஜாவிலிருந்த குளிர்ந்த நீரை ஒரு கிளாஸில் எடுத்துவந்து அப்பா முன்னிருந்த சிறிய மேசை மேல் வைத்து "என்னாச்சுப்பா?" என்றாள். அவர் மெதுவாகக் கண்திறந்து பார்த்து திரும்பவும் கண்ணை மூடிக் கொண்டார். அவராகவே சொல்லுவார் என அவள் அருகிலிருந்த கதிரையில் அமர்ந்துகொண்டாள்.


உள் அறையில் தொட்டிலில் படுத்திருந்த ராசாத்தியின் ஆறுமாதக் குழந்தை சிணுங்கும் சப்தம் கேட்டது. ராசாத்தி திரும்பவும் அப்பாவை ஒருமுறை பார்த்துவிட்டு தனது அறைக்குப் போய்த் தொட்டிலை ஆட்டத்தொடங்கினாள். தாலாட்டாக எதையும் பாடவில்லை. கண்ணில் வழியும் கண்ணீர் குரலைக் கரகரப்பாக்கிக் காட்டிக் கொடுத்துவிடும்.


இனி அவளது வாழ்வின் எஞ்சிய நாட்களில் குமார் இல்லை என்பது மட்டும் அப்பா சொல்லாமலேயே புரிந்துவிட்டது. அறையைச் சுற்றிப் பார்வையைச் சுழல விட்டாள். குமார் கடைசியாக வீட்டைவிட்டுப் போகும்போது தன்னால் இயன்றதையெல்லாம் கொண்டுபோயிருந்தான். குழந்தை தூங்கியபிறகு அலமாரியிலிருக்கும் அவனது பழைய உடுப்புக்களையும், கட்டிலின் கீழிருக்கும் ஒரு சப்பாத்துச் சோடியினையும், மேசையின் மேலிருக்கும் அவனது சீப்பு மற்றும் எண்ணெய் போத்தலையும் சேர்த்து மூட்டை கட்டி அப்பாவிடம் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் ஓடலாயிற்று.


குழந்தை கண்மூடியிருந்தது. தொட்டில் ஆடுவது ஒரு கணம் நின்றுபோயிடினும் கைகள் இரண்டையும் இறுக்க மூடிக் கண் திறந்து பார்த்து மலங்க மலங்க விழித்தது. விழித்த கண்களில் தூக்கம் இன்னும் மிச்சமிருப்பது தெரிந்தது. ராசாத்தி தொட்டிலை ஆட்டிக் கொண்டேயிருந்தாள். இந்தத் தொட்டிலைக் கட்டித்தரச் சொல்லிக் கேட்ட அன்றுதான் குமாரிடமிருந்தான இறுதி அடிகள் அவளுக்கு விழுந்தன.


அவனது அடிகளில் என்றும் கணக்குவழக்கே இருந்ததில்லை. சின்னச் சின்னக் கோபத்துக்கெல்லாம் கை நீட்டப்பழகியிருந்தான். அவளும் அமைதியாக அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டேயிருப்பாள். அவன் வீட்டிலில்லாத பொழுதுகளில் தன் நிலையை எண்ணி அழுவாள். அவன் முன்னால் அழுதாலும், மூதேவி எனத் தொடங்கும் வசவு வார்த்தைகளைக் கொண்டு திட்டியவாறே திரும்பத் திரும்ப அடிப்பான். அன்றைய தினம் பெரும் பிரச்சினை வரக்காரணம் அவனது அடிகளையும், கொடுஞ்சொற்களையும் அப்பா கேட்க நேர்ந்ததுதான்.


அது குழந்தை பிறந்த நான்காம் மாதம். குழந்தைப்பிறப்பில் பிரச்சினையாகி சத்திர சிகிச்சையின் போது குழந்தையோடு, அவளது கருப்பையையும் முற்றாக நீக்கிவிட்டிருந்தனர். பத்துமாதம் குழந்தையைச் சுமந்த அவளுடல், பருத்துப் போய்க் கொஞ்சம் அவலட்சணமாகியிருந்தது உண்மைதான்.


அவள் வீட்டுக்கு வந்த நேரம் தொட்டு அவன் வார்த்தைகளால் வதைக்கலானான். அவள் துரதிர்ஷ்டக்காரியென்றும் அவனுக்கு நிறையக் குழந்தைகள் வேண்டுமென்றும் அவளால் இனி முடியாதாகையால் தங்கையைக் கட்டிவைக்குமாறும் கேட்டு அவளை நச்சரிக்கலானான். அவனிதை முதன்முறை சொன்னபொழுதில் அவள் மிகவும் அதிர்ந்து போனாள். பிற்பாடு அவன் எல்லாச் சண்டைகளின் போதும் இதையே சொல்லிவர அவளுக்குப் பழகிவிட்டது. தீயின் நாக்குகள் நெருப்பை எறிந்துகொண்டேயிருந்தன.


கல்யாணி இவளை விடவும் மிகுந்த அழகினைத் தன்வசம் கொண்டிருந்தாள். அதிலும் இளமையோடு, சிவப்பாக இருந்தது அவளை அவன் பக்கம் ஈர்த்திருக்கக்கூடும். ராசாத்திக்கு அவள் தங்கை என்பதனை விடக் குழந்தை என்பதே சரி. அவளது பத்துவயதில் பிறந்திட்ட தங்கை. அம்மாவைப் புற்றுநோய் தாக்கி இறந்துபோனதிலிருந்து அவளைப் பார்த்துப்பார்த்து வளர்த்தவள் இவள்தான்.


இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் ராசாத்திக்குக் கல்யாணமாயிற்று. ராசாத்தியின் கரிய நிறம் அவளைப் பெண் பார்க்கவருபவர்களின் கண்களை மிகவும் உறுத்தியதில் அனேக வரன்களால் நிராகரிக்கப்பட்டாள். இறுதியாக வந்த குமாரும் முதலில் மறுத்துவிட்டுப் பின்னர் சில ஒப்பந்தங்களோடு சம்மதித்தான். ரொக்கமாக ஒரு தொகைப்பணமும், ஒரு மோட்டார் சைக்கிளும், அவர்கள் குடியிருக்கும் வீடும் அவனுக்கு வேண்டுமென்று தரகரிடம் கேட்டு, தரகர் ராசாத்தியின் அப்பாவிடம் ஒப்புதல் வாங்கிய பிறகே அவன் கல்யாணத்திற்குச் சம்மதித்தான்.


மாதாந்தம் வரும் பென்ஷன் பணத்தில் தன் இரு மகள்களுக்குமான செலவுகளைச் சமாளித்து வாழ்ந்துவந்தவருக்கு கல்யாணச் செலவுக்கு தனது ஒரே தென்னந்தோப்பை விற்பதனைத் தவிர வேறுவழியிருக்கவில்லை. விற்று வந்தபணத்தில் குமாருக்கான ரொக்கப்பணத்தோடு, மோட்டார் சைக்கிளையும் வாங்கிக் கொடுத்துக் கல்யாணச் செலவு முழுவதையும் அவரே ஏற்றுச் செய்தார். திருமணம் முடிந்து சில மாதங்களில்தான் குமாரின் சுயரூபம் தெரியவரலாயிற்று.


தினந்தோறும் மதுவாசனையோடு வீட்டுக்கு வரலானான். ஒரு நள்ளிரவில் குடித்துவிட்டு, சைக்கிளோடு வீதியில் விழுந்துகிடந்தவனை இவர்தான் தேடிப்போய்க் கூட்டி வரவேண்டியிருந்தது. அவன் வீட்டிலிருந்த சமயமெல்லாம் கல்யாணியையே தேனீர் தரச் சொல்வதும், உணவு பரிமாறச் சொல்வதும் அவனது ஆடைகளைத் துவைக்கச் சொல்வதுமாக இருந்ததில் முதன்முதலாக அச்சத்தின் சாயல் அவர் மனதில் படியலாயிற்று.


'வீட்டை அவனுக்குக் கொடுத்தாயிற்று.. இன்னும் நாமிங்கே இருப்பது சரியில்லை' என்று ராசாத்தியிடம் காரணம் சொல்லி விட்டு இரண்டு தெரு தள்ளியிருந்த ஒரு வீட்டுக்குத் தங்கள் உடமைகளோடு வாடகைக்குக் குடிபோனார்கள் அப்பாவும், தங்கையும். வீட்டில் குமார் இல்லாத சமயங்களில் இருவரும் வந்து ராசாத்தியைப் பார்த்துவிட்டுப் போனார்கள். குழந்தைப் பிறப்பின் போதும், வைத்தியசாலையிலும் கூடவே உதவிக்கு இருந்தார்கள்.
அன்றைய தினம் தொட்டில் கட்டித்தரச் சொல்லிக் கேட்ட பொழுதில் ஆரம்பித்த சண்டையின் போது அவன் ராசாத்தியை அடித்து, கல்யாணியுடனான திருமண எண்ணத்தைச் சத்தம்போட்டுச் சொன்னது அப்போதுதான் வீட்டுக்கு வந்திருந்த அப்பாவினதும், கல்யாணியினதும் காதுகளிலும் விழுந்தது. அந்தச் சமயம் அவன் வீட்டிலிருப்பானென அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. அத்தோடு அவன் சொன்ன சொற்களின் தீக்கங்குகள் அவர்கள் மனதில் பற்றி எரியலாயிற்று. தொடர்ந்தும் அறையிலிருந்து ராசாத்திக்கு அடிக்கும் சப்தம் வந்ததில் அப்பாவின் கோபம் எல்லை கடந்தது. தன்னுயிர் வதைப்படுவதைக் காணச் சகிக்காத கோபம்.


அவர்களது அறைக்குள் போய் மகளுக்கு அடிவிழுவதிலிருந்தும் தடுக்க அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டதில் அவன் அலமாரியின் மூலைக்கு வீசப்பட்டுப் போய்விழுந்தான். விழுந்தவன் கைகளுக்கு சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கட்டில் பலகை கிடைத்தது. அதனைத் தூக்கிக்கொண்டு அவரை அடிக்க வந்தான். அவர் அதைத் தடுக்க, அவன் மல்லுக்கட்ட... தொடர்ந்த கைகலப்பை முடிவுக்குக் கொண்டுவர, கல்யாணி அப்பாவை இழுத்துக் கொண்டுபோய் சமையலறைக்குள் அவருடன் உட்புறம் பூட்டிக் கொண்டாள்.


குமார் அதற்கு மேல் அங்கிருக்கவில்லை. தனக்குத்தேவையான எல்லாவற்றையும் சூட்கேசுக்குள் போட்டு அடுக்கியவன், தடுத்துத் தடுத்துப் பார்த்துத் திராணியற்று, வீறிட்டழும் குழந்தையைத் தோளில் போட்டவாறே நின்றிருந்தவளை ஒருகணம் முறைத்துப் பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஏறிப் போய்விட்டான். போனவன் போனவன் தான். திரும்பவும் வரவேயில்லை.ராசாத்தி அவனுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளமுற்பட்ட போதெல்லாம் அவளது அழைப்புக்கள் நிராகரிக்கப்பட்டுக் கொண்டே வந்தன.


வீட்டில் வாழாவெட்டியாக மூத்தபெண் இருந்தால் இளையவள் வாழ்க்கையும் பாதிக்கப்படுமே என்ற கவலை அப்பாவைப் பிடித்து வாட்டத் துவங்கியது. எப்படியாவது குமாரைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டு அவனைத் திரும்பக் கூட்டிவர எண்ணினார் அவர். நாலைந்து முறை அவன் ஊருக்குப் போனபோதெல்லாம் அவனைச் சந்திக்க முடியாமல் போகவே ஊர்த் தலைவரிடம் முறையிட்டு விட்டுப் போனார். அவர் இன்றுதான் வரச்சொல்லியிருந்தார்.


குழந்தை தூங்குவதைப் போல் தெரியவில்லை. கள்ளம்கபடமற்ற விழிகளைத் திறந்து இவளைப் பார்த்துப் புன்னகைத்தது. சிரிக்கக் கூடிய மனநிலையிலா இருக்கிறாள் அவள்? மிகுந்த துயரத்தை மனம் சுமக்க, சிறு விளையாட்டுப் பொருளொன்றை அதன் கையில் கொடுத்துக் கட்டிலில் விட்டாள். குமாரது பொருட்களையெல்லாம் சேகரித்து அவனது சாறனொன்றிலேயே மூட்டை கட்டத் துவங்கினாள்.


கண் திறந்து பார்த்த அப்பாவிடம் "உங்களுக்கு குடிக்க ஏதாச்சும் ஊத்தட்டுமாப்பா?" எனக் கல்யாணி கேட்டாள். தலையை ஆட்டி மறுத்தவருக்குக் குமார் ஊர்த்தலைவர் வீட்டில் வைத்து எல்லோர் முன்னாலும் சொன்னது காதுகளில் மீண்டும் எதிரொலித்தது.


"அன்னிக்கு வீட்ட விட்டு அடிச்சுத் தொரத்திட்டு இன்னிக்கு மன்னிப்புக் கேட்க வந்திருக்கீக. எனக்கு நிறையக் குழந்தைங்க வேனும்..ஒத்தக் குழந்தைக்காக நான் கல்யாணம் பண்ணிக்கல. எனக்குக் கல்யாணியைக் கட்டி வைக்குறதுன்னாச் சொல்லுங்க..இப்பவே வாறேன். கட்டி வைங்க. ஒரு வீட்டிலேயே ரெண்டு பேரையும் வச்சுக் காப்பாத்துறேன். இல்லேன்னாச் சொல்லுங்க..இப்பவே அத்துவிட்டுடறேன். தாயும் வேணாம்..புள்ளயும் வேணாம்"


இதனைக் கேட்ட உடனேயே அவன் முகத்தில் 'தூ' எனக் காறியுமிழ வேண்டுமென எழுந்த எண்ணத்தைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார். எதுவும் பேசாமலேயே வந்துவிட்டவர்தான் அவனது எல்லாப்பொருட்களையும் மூட்டை கட்டச் சொன்னார். ஒரு கிளியைப் பூனையிடம் கொடுத்து அதன் சிறகுகளை இழந்தது போதும்..இன்னொன்றின் சிறகுகளையும் இழப்பதற்கு அவர் மனம் ஒப்பவில்லை.


மூட்டையைத் தூக்கிவந்து அப்பாவின் அருகினில் வைத்தாள் ராசாத்தி. சத்தம் கேட்டு அவர் கண்திறந்து பார்த்தார். அவளது கரத்திலிருந்த குழந்தையை வாங்கிக் கொண்டார். அவர் காலடியில் அமர்ந்துகொண்டாள் ராசாத்தி.
"அவன் நமக்கு வேணாம்மா.ரொம்பத் தப்பாப் பேசுறான். அவனைக் கெட்ட கனவா நெனச்சு மறந்துடலாம். இனிமே அவனை ஞாபகப்படுத்துற எதுவுமே இந்த வீட்டுல என் கண்ணுல படக்கூடாது. எல்லாத்தையும் எங்கேயாவது கொண்டுபோய்த் தொலைச்சிடணும்"


அப்பா சொல்வதைக் கேட்டவாறே,


"இவனும் அவர அப்படியே உரிச்சு வச்சுப் பொறந்திருக்கானே...இவனை எங்கே கொண்டுபோய் நான் தொலைக்க?" என்று கதறியழ ஆரம்பித்தாள் ராசாத்தி.

இரண்டு கவிதைகள்


நாற்பட்டகம்


இன்று இது நான் புகைக்கும் எத்தனையாவது சிகரெட்டோ


இன்று இவள் நான் காதலிக்கும் எத்தனையாவது பெண்ணோ


இன்று இது எத்தனையாவது இன்றோ


இன்று இது எத்தனையாவது எத்தனையாவதோ


எப்போது நினைத்தாலும் அழ முடிகிறது


எப்போது நினைத்தாலும் காதல் வசப்பட முடிகிறது


எப்போது நினைத்தாலும் கவிதை எழுத முடிகிறது


எப்போதுமே நினைக்கத்தான் முடிகிறது


தனிமைக்கு பயந்தவர்கள் சிகரெட் பிடிக்கிறார்கள்


தனிமைக்கு பயந்தவர்கள் மது அருந்துகிறார்கள்


தனிமைக்கு பயந்தவர்கள் காதலிக்கிறார்கள்


தனிமைக்கு பயந்தவர்கள் கவிதை எழுதுகிறார்கள்


தனிமைக்கு பயந்தவன் தனிமையாகவே இருக்கிறேன்திட்டவட்டமாக


நான் அவளைச் சுற்றி


ஒரு வட்டம் வரைந்தேன்


அவள் என்னைச் சுற்றி


ஒரு வட்டம் வரைந்தாள்


வட்டங்கள் ஒன்றை ஒன்று


வெட்டிக் கொண்ட


இணையும் புள்ளிகளில்


யாரோ எங்களைச் சுற்றி


ஒரு வட்டம் வரைந்தார்


ஏதோ ஒரு விதிப்படி


நாங்கள் அந்த வட்டங்களை விட்டுத்


துடித்து வெளியேறினோம்


இப்போது நாங்கள்


எந்த வட்டத்திற்குள்ளும்


இல்லை ... இல்லாமலும் இல்லை

4.8.09

நான்,பிரமிள்,விசிறி சாமியார்.......7

பல ஆண்டுகள் கழித்து இச் சம்பவத்தைப் பற்றி எழுதுகிறேன். விசிறி சாமியாரும் இல்லை, பிரமிளும் இல்லை. விசிறி சாமியாரைப் பார்த்து, ''நீங்கள் ஏன் என்னிடமிருந்து சிகரெட்டிற்குப் பணம் வாங்கவில்லை,'' என்று அப்போது கேட்க தைரியம் இல்லை. அப்படியே கேட்டாலும் விசிறி சாமியார் பதில் சொல்லியிருப்பாரா என்பது தெரியாது. ஆனால் விசிறி சாமியார் நான் ஆவலுடன் சிகரெட் வாங்க அவரிடம் பணம் நீட்டியபோது வாங்க மறுத்தது என் மனதில் ஆழமாய் பதிந்து விட்டது. அதுவரை உற்சாகமாக இருந்த நான் உற்சாகம்குன்றியவனாக மாறிவிட்டேன். ஏன் வருத்தமாகக் கூட மாறிவிட்டது? ஏன் இதுமாதிரி சாமியார்களெல்லாம் பார்க்கிறோம்? என்று கூடத் தோன்றியது. ஏன் என்னிடம் வாங்கவில்லை என்பதற்குக் காரணமெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அந்த இடத்தைவிட்டுப் போய்விட வேண்டுமென்றுகூட தோன்றியது. எத்தனைப் பேர்கள் வழிபடுகிற சாமியார் உண்மையில் மிக முக்கியமானவர். அவர் இதுமாதிரி செய்ததற்கு எதாவது காரணம் இருக்குமென்று யோசித்தேன். மேலும் நான் சிகரெட் பிடிக்காதவன். அதனால் என்னிடமிருந்து அதை வாங்காமல் இருந்திருக்கலாமென்று நினைத்தேன்.பிரமிளுக்கு நான்தான் பணம் செலவு செய்திருந்தேன். சென்னையிலிருந்து திருவண்ணாமலை வரை. மேலும் சாப்பிட எல்லாவற்றிக்கும். இது எதாவது கர்வத்தை என்னிடம் வெளிப்படுத்தியிருக்கும். சாமியாருக்கு இது தெரிந்திருக்கும். அதனால் சாமியார் என்னிடம் பணம் வாங்காமல் பிரமிள் மூலம் வாங்குகிறார் என்று நினைத்துக் கொண்டேன். இப்படி நினைக்கும்போது வருத்தம் இன்னும் கூடி கூடிப் போயிற்று.என் பக்கத்தில் இருந்த லயம் சுப்பிரமணியன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பேசாமல் இருந்தார். சிலசமயம் அவர் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் கூட வந்ததுண்டு. மனிதர் என்ன கல்லுப்போல அசையாமல் இருக்கிறாரே என்ற ஆச்சிரியம் கூட என்னிடம் சூழ்ந்து கொண்டது.பிரமிளுக்கு லயம் சுப்பிரமணியன் மீது அவ்வளவு அன்பு. சத்தியமங்கலத்திலிருந்து சென்னைக்கு அவர் வருகிறார் என்பதை அறிந்தால் போதும் பிரமிள் அவ்வளவு உற்சாகப்படுவார். அவர் வருவதற்கு முன்பே என்னிடம் சொல்லி சொல்லி சந்தோஷப் படுவார். சுப்பிரமணியனும் சென்னை வந்தால் பிரமிள் இருக்குமிடத்தில்தான் இருப்பார். பிரமிள் அவரை சுப்பு சுப்பு என்று ப்ரியமாகக் கூப்பிடுவார். பிரமிளுடைய அத்தனை எழுத்துக்களையும் புத்தகங்களாகப் பிரசுரம் செய்ய சுப்புவிடம்தான் அதிகாரம் அளித்திருந்தார். சாமியாரிடம் பெட்டி பாம்பாக அடங்கி இருந்த பிரமிளிடம் நட்பு கொள்வது அவ்வளவு சுலபமானதல்ல. என்னிடம் ஒரு சமயத்தில் நன்றாகப் பழகுவார். சிலசமயம் கிட்டவே நெருங்க விட மாட்டார்.ஒரு முறை என்னிடம் கோபம். ஏன் கோபம் என்பதை வெளிப்படையாகவும் சொல்ல மாட்டார். ஜே கிருஷ்ணமூர்த்தி சென்னை வந்தால் ஞாயிற்றுக்கிழமையெல்லாம் காலை நேரத்தில் கேள்வி பதில் கூட்டம் நடத்துவார். பெரும்பாலும் கேள்வி கேட்பவர்கள் கிருஷ்ணமூர்த்தியை எதாவது கேட்டு காயப்படுத்தி விடுவார்கள். ஒருவர் கேட்கிறார் : '' நீங்கள் ஏன் இவ்வளவு ஆடம்பராகவும் ரொம்பவும் தூய்மையாகவும் டிரஸ் செய்து கொள்கிறீர்கள்?'' இந்தக் கேள்வியைக் கேட்டவுடன்கிருஷ்ணமூர்த்தி எப்படி பதில் சொல்லப் போகிறார் என்று திகைப்பாக இருந்தது. ''மற்றவர்களுக்கு மரியாதைத் தர'' என்ற கிருஷ்ணமூர்த்தியின் பதில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதுவும் உடனே பதில் சொல்லிவிட்டார். அந்தக் கூட்டம் நடக்கும்போதுதான் பிரமிள் எங்கே என்று துழாவிப் பார்த்தேன். அவர் ஓரிடத்தில் உட்கார்ந்திருந்தது தெரிந்தவுடன், நானும் அங்கு போய் பக்கத்தில் அமர்ந்துவிடுவேன். பிரமிள் என்னைப் பார்த்தவுடன் அங்கிருந்து கிளம்பி வேறு ஒரு திசையிலிருக்கும் ஓரிடத்தில் போய்விடுவார். என் மீது ஏதோ கோபம். நானும் விடாமல் அவரைத் தொடர்வேன். இடம் மாறி மாறி முகத்தை வேறுபக்கமாக திருப்பிக் கொள்வார்.


(இன்னும் வரும்)