31.10.16


நீங்களும் படிக்கலாம்....23


அழகியசிங்கர் 


  கோட்பாடு ரீதியாக ஒரு புத்தகத்தை அணுகுவது எப்படி?
எம் டி முத்துக்குமாரசாமி எழுதியுள்ள 'நிலவொளி எனும் இரசசிய துணை என்ற கட்டுரைகளும் கட்டுரைகள் போலச் சிலவும்' என்ற புத்தகத்தைப் படித்தேன்.  முன்னுரையில் 'இலக்கியம் பெரும்பாலும் பிரக்ஞையின் கரை உடையும் தருணங்களையே வாசக அனுபவமாக்குகிறது என இலக்கியப் பிரதி பற்றி எனக்கொரு கருத்து உண்டு' என்று  குறிப்பிடுகிறார் எம் டி எம்.   இதை கடந்த முப்பது வருட இலக்கியக் கோட்பாட்டு வாசிப்புகளிலிருந்து அவர் அணுக்கமாகப்  பெற்ற பார்வையாகும் என்கிறார்.  இதைச் சாதாரண வாசகனே அவன் படிப்பனுவத்திலிருந்து உணர முடியாதா?

இத் தொகுப்பில் உள்ள கட்டுரை ஒன்றில் சுப்பிரமணிய பாரதியார் மகா கவியே என்பதை நிரூபிக்கிறார் எம் டி எம்.  இக் கருத்தை ஜெயமோகனுக்கு பதிலாக தெரிவிக்கிறார்.   அப்படி சொல்லும்போது பாரதியார் கவிதைகளில் பிரஞ்ஞையின் கரை உடையும் தருணங்கள் வாசக அனுபவமாக எளிதில் வசப்படுகின்றன என்கிறார். பாரதியார் குறித்து அவர் கூறும் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.    

மொழியியல், இலக்கிய விமர்சனம், மனோதத்துவம், பெண்ணியம் ஆகிய சிந்தனைகளை முற்றிலும் புதியதாக மாற்றுகிறார் ஜøலியோ கிறிஸ்தவா. மேலும், üபெண்ணிய எழுத்தைப் பற்றி குறிப்பிடும்போது உடலுறுப்புகளை எழுதுவது உடல் உந்துதல்களை எழுதுவது ஆகாதுý என்கிறார் கிறிஸ்தவா.  மனிதனுக்கும் மொழிக்குமான எல்லா உறவுகளிலும் தன்னிலை மற்றவையின் ஊடாட்டம் நிகழ்வதைக் கவிûதையை முன்னிறுத்தி துல்லியமாக எடுத்துரைக்கிறார் கிறிஸ்தவா.  கிருஸ்தவாவைப் பற்றி விவரித்துக்கொண்டே போகிறார் எம்டிஎம்.  படிக்க படிக்க புதிய சிந்தனையை உருவாக்குகிறது. கிறிஸ்தவா புத்தகங்களைத் தேடிப் படிக்கத் தூண்டுகிறது.

'கற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு,' என்ற கட்டுரையில் பிரம்மராஜனின் கவிதைகளைத் தொடர்ந்து பயில்வதால் கிடைக்கும் வாசக அக லயம் அபூர்வமானது என்று குறிப்பிடுகிறார்.  

புனைவுகளாலும் எதிர் புனைவுகளாலும் மட்டுமே ஆளப்பட்ட ஈழத்துத் தமிழ்ப் போர்ச் சூழலும் போருக்குப் பின் வாய்த்த சூழலும் றியாஸ் குராணாவுக்கு பிரமிளின் கவிதையில் உள்ள இறகை விடுத்து பறவையைக் கவனிக்கும் ஆற்றலைத் தந்துள்ளது.

இது அதிகம் பாவிக்கப்பட்ட பறவை
இன்னும் பழுதடைந்துவிடாமல்  என்று கவிதை போகிறது.

பொதுவாக புனைகதையாளர்களையும் தத்துவாதிகளையும் சரித்திர ஆசிரியர்களையும் அரசியல்வாதிகளையும் விட கவிஞர்களையும் அவர்களின் கவிக் குரல்களையும் நம்பலாம் என்கிறார் முத்துக்குமாரசுவாமி.  இந்தக் கருத்துக்கு நானும் உடன் படுகிறேன்.

காலவழுவமைதி, சினிமாச்சோழர், மஹ்ஹான் காந்தி மஹ்ஹான், ஆகஸ்ட் 15 போன்ற ஞானக்கூத்தன் கவிதைகள் நுட்பமாக நவீனமான எதிர்ப்புக் கவிதையின் வடிவத்தைக் கட்டமைத்தவை என்கிறார்.  பிரமிளின் அரசியல் பிரக்ஞை விழிப்பு கண்டது 1980 களில்தான் என்கிறார்.  

எம்டிஎம் குறிப்பிட்ட சில கருத்துக்களை மேலும் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். 

- நகுலனில் நான் - நீ உரையாடல் களன் பெரும்பாலும் சமத்துவமுடையதாக இருக்கிறது.
- ஆத்மநாம் கவிதை தன்னிருப்பை முழுமையாக நிராகரிக்கிற தன்மை கொண்டது.
- சி மணி கவிதையில் வெளியே செல்லமுடியாமல் மாட்டிக்கொள்ளும் தன்னிலையை அவதானிக்கிறது.

பசுவய்யாவின் கவிதையிலோ நீ என்ற பிறன்மை முழுமையான கொடூரமாகி, நரகமாகிவிடுவதால் அதை எதிர்த்துப் போராடி தன்னை நிலை நிறுததுகிறது என்கிறார் எம்டிஎம்.  உதாரணமாக சவால் என்ற பசுவய்யாவின் கவிதையைக் குறிப்பிடுகிறார்.

போர்ஹெசின் கவிதைகளை முன் வைத்து எம்டிஎம் கூறுபவை : 'மனம் தன் போக்கில் அசைபோட்டுக் கொண்டிருக்கும்போதே போர்ஹெஸ்ஸின் கவிதைகள் நினைவுக்கு வந்தன .'

படிக்கும்போது வெகு சாதாரணமாகத் தோன்றக்கூடிய போர்ஹெஸ்ஸின் கவிதைகள் அனுபவம் - அகம் - வரலாறு - பிரபஞ்சம் என்ற தொடர்பை வெளிப்டுத்தி மொழி போதாதிருப்பதைப் பல இடங்களில் சுய சுட்டுதலாகக் கொண்டிருக்கின்றன.  இதற்கு உதாரணமாக பல கவிதைகளைக் குறிப்பிடுகிறார்

போர்ஹெசின் கவிதைகளை கடந்த 25 வருடங்களாக வாசிக்கிறவர் எம்டிஎம்.  மற்ற கவிஞர்களின் கவிதைளை விட அதிகமாக வாசித்திருப்பது போர்ஹெயின் கவிதைகள் என்கிறார்.  எம்டிஎம் போர்ஹெயின் கவிதைகளை பற்றி குறிப்பிடும்போது, அவருடைய தந்தையைப் பற்றி ஒரு குறிப்பும் கொடுக்கிறார்.  அவர் தந்தைக்கு ப்ரௌனிங்க் என்ற கவிஞரின் கவிதைகள் பிடிக்குமாம்.  போர்ஹெஸ÷க்குப் பிடித்த கவிஞர்களில் ப்ரௌனிங்கும் டென்னிசனும் உண்டு. உற்சாகமாகக் கூறி அப்பாவின் ரகசிய வாசிப்பு உலகத்தைத் திறந்து வைக்கிறார் எம்டிஎம்.  

மௌனிக்கும் போர்ஹெஸ÷க்கும் உள்ள பல ஒற்றுமைகளைப் பற்றி யாரும் எழுதியிருக்கிறார்களா என்பதை தேடிப் பார்க்கிறார் எம்டிஎம்.  தன் அடையாளம், பிறன்மை என்பதன் விளையாட்டைத் தன் கலையின் மையமான சரடாக மௌனியிடமும், போர்ஹெஸ÷டமும் காண்பதாக குறிப்பிடுகிறார்.  நான் மௌனியை மட்டும் படித்திருக்கிறேன்.  போர்ஹேûஸ அவ்வளவாய் படித்ததில்லை.  ஆதனால் எம்டிஎம் இந்தக் கட்டுரையைப் படித்தப்பிறகு போர்ஹெஸ் எழுதிய எழுத்துக்களையும் படிக்க விரும்புகிறேன். எம்டிஎம்மின் இந்தக் கருத்து எவ்வளவு தூரம் உண்மையானது என்று அறியவும் விரும்புகிறேன்.

அதேபோல் நவீன கவிதைகள் என்பது தான் - பிறன்மை என்பற்றிற்கிடையேயான உரையாடலே என்றொரு இலக்கிய கோட்பாடு பிரசித்தம் என்கிறார்.

தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே தன் அகம் நோக்கிப் பேசுகின்ற கவித்துவக் குரல் பாரதியால் கட்டமைக்கப்படுகின்றது என்கிறார்.  பாரதியார் கவிதைகள் இன்னும் நவீன வடிவமாக இருக்கின்றன என்று பல உதாரணங்கள் மூலம் நிரூபிக்கிறார்.

'இரசனை விமர்சனம் என்பது சந்தைப் பொருளாதாரத்தின் அரசியலை அப்படியே இலக்கியத்திற்குள் கொண்டு வருகிற விமர்சன முறையாகும்' என்று சாடுகிறாரர் எம்டிஎம்.  இதைத்தான் என்னால்  ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்படி என்று விவரமாக சொல்ல வேண்டும்.  பெரும்பாலோர் ரசனையின் அடிப்படையில்தான் விமர்சனம் செய்வார்கள். இன்றைய தமிழ் சூழலில் யாரும் ஒரு புத்தகத்தைப் படிக்கவே தயாராக இல்லை.  அப்படிப் படித்தாலும் அது குறித்து எதுவும் எழுதத் தயாராய் இல்லை.  அப்படியொரு சூழலில்  முதலில் விமர்சனம் செய்வதை தமிழில் ரசனை மூலமாக ஆரம்பித்து வைத்தவர் க நா சு.  எளிதாக எல்லோராலும் ஏற்றுக்கொள்கிற முறையும் இதுதான்.  ஆனால் எம் டி எம் இப்படி சொல்கிறார் : அவர் சார்ந்து இருக்கிற விமர்சன முறை பின்னை காலனிய, பின் நவீனத்துவ முறை என்கிறார். இந்த மாற்று விமர்சன முறையை கையாளுபவர்கள் பலர் ஒரே மாதிரியாக இதை அணுகுவதாக எனக்குத் தெரியவில்லை.  

காஃப்கா தன் தந்தைக்கு எழுதிய கடிதம் என்ற கட்டுரையில், தமிழில் சுந்தர ராமசாமிக்குக் காப்ஃகாவின் படைப்புகளின் பெரிய பிரமிப்பு இருப்பதாக குறிப்பிடுகிறார்.
  
ஏனெனில் தந்ûதையுடனான மகனின் உறவு என்பது பௌதிக தந்தையுடனான உறவு மட்டுமல்ல.  அது  மரபு, அரசு, குரு, அதிகார பீடம், விதி, தேசம், சட்டம் ஆகியவற்றோடு ஒருவன் கொள்கிற உறவின் தன்மையையும் சொல்லக்கூடியது என்கிறார்.  

  கோபோ அபேயை ஜப்பானிய இலக்கியத்தில் காஃப்கா, பெக்கெட், ஐயனஸ்கோ ஆகிய எழுத்தாளர்களோடு ஒப்பிடப்பட்டு விவாதிக்கப்படுபவர் என்கிறார்.  

சூஃபி இசையைப் பற்றி குறிப்பிடும்போது ராஜஸ்தானின் புகழ் பெற்ற, மறைந்த நாட்டுப்புறவியல் அறிஞர் பதம்பூஷண் கோமல் கோத்தாரியைப் பற்றி விவரிக்கிறார்.  அவருடன் சூஃபி இசையைச் சேகரிக்க பலமுறை பாலைவன கிராமங்களில் அலைந்த அனுபவத்தை படிக்க படிக்க நாமும் அந்த அனுபவத்தை உணர்வதுபோல் உணரச் செய்கிறார.  

ஒரு கதையைப்போல் சில கட்டுரைகளை எம்டிஎம் விவரித்துக் கொண்டு போகிறார்.  அதில் ஒன்று உஸ்தாத் பில்மிலலாஹ் கான் என்ற கட்டுரை.  பத்ரி என்ற நண்பர் மூலம் உஸ்தாத்தைப் பார்த்துப் பேசுகிற நிகழ்ச்சியை விவரிக்கும்போது அக் கட்டுரை படிப்பவரையும் பரவசப்படுத்தத் தவறவில்லை.   

'ஒரு ராகத்தை ஒரு உணர்வை உணர்ச்சியை இந்துஸ்தானி இசைக் கலைஞன் அடையாளம் காண்கிறான்.  அந்த உணர்வின் எல்லைகளைப் பரிசோதிக்கிறான்.  அதன் நுட்பங்களை வடிவாக்குகிறான், சக மனிதனிடம் பகிர்ந்து கொள்கிறான் அவனுக்கும் அந்த உணர்வும் தேடலும் அர்த்தமாகிறதா என்று கவனித்துக் கவனித்து மேலே போகிறான்.' என்று எம்டிஎம் விவிரித்துக்கொண்டே போகும்போது, வேற ஒரு பார்வையில் இந்துஸ்தான் இசையை ரசிக்க வேண்டுமென்ற உணர்வை ஏற்படுத்தத் தவறவில்லை.   

அஞ்சலி  என்ற தலைப்பில் பாடகர் பரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பற்றி குறிப்பிடுகிறார்.  புதிய பார்வையில் எழுதிய எம்டிஎம்மின் கதையான பத்மநாபனின் கூடு குறித்து ஒன்றை குறிப்பிடுகிறார்.  அந்தக் கதை பிரசுரமான தினத்தில்தான் ஸ்ரீனிவாஸ்  டிரைவ் இன்னில் சந்திக்கிறார்.  மூளை வளர்ச்சி குன்றிய ஒருவன் பிரமாதமான பாடல் வரிகளை சொல்வது பற்றிய கதை அது.  எங்கே உன் கதாபாத்திரம் சொல்லும் நல்ல வரி ஒன்றைச் சொல் பார்க்கலாம் என்கிறார் ஸ்ரீனிவாஸ் எம்டிஎம்மைப் பார்த்து.   'என் ஆத்மாவைக் கரைத்து உன் விழிகளுக்கு அஞ்சன மை தீட்டவா?' என்ற வரியை வாசித்துக் காட்டுகிறார் எம்டிஎம்.  ஸ்ரீனிவாஸ் புன்னகைத்தபடி அந்த வரியை மெதுவாக வாசித்துக் காட்டினாராம்.  பத்மநாபனின் கூடு கதைப் பிரதி கிடைக்குமென்றால் அதை ஸ்ரீனிவாஸ÷ற்கு மனப்பூர்வமாக சமர்ப்பணம் செய்வதாக உணர்ச்சிவசப்பட்டு  சொல்கிறார் எம்டிஎம்.  இத் தொகுதியில் இரண்டு தலயாத்திரைகள் பற்றியும், பாகேஸ்ரீராகம் பற்றியும், எம்டிஎம்மின் வாழ்க்கை அனுபவங்களைப் பற்றியும் சுவாரசியமாக சொல்லிக்கொண்டே போகிறார். 

இப் புத்தகத்தைப் படிக்கும்போது இரண்டு விதமாக நான் உணர்கிறேன்.  ஒன்று  எம்டிஎம்மின் தனிப்பட்ட வாழ்வியல் அனுபவம்.  இந்தப் பகுதியை அவர் பல சிறு கதைகளாகவோ நீண்ட நாவலாகவோ எழுதியிருக்கலாம்.  ஆனால் அவர் சுய சரிதமாக எழுதி உள்ளார். இன்னொரு பகுதியில் அவர் பல புத்தகங்களைப் படித்த அனுபவத்தையும், பல எழுத்தாளர்கள் பற்றிய கூற்றையும் விவரித்துக்கொண்டு போகிறார்.   கோட்பாட்டு முறையில் இப்புத்தகத்தை அணுக எனக்குத் தெரியவில்லை. ஆனால் எல்லோரும் விரும்பி வாசிக்கக் கூடிய புத்தகம் இது என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
நிலவொளி எனும் இரகசிய துணை - கட்டுரைகளும் கட்டுரைகள் போலச் சிலவும் - எம் டி முத்துக்குமாரசாமி - பக்கங்கள் : 263 - பதிப்பு : 2014 - விலை : ரூ.200 - வெளியீடு : அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310இ திருச்சி மாவட்டம், தொலைபேசி : 0432 273444 
                                                                                                               (நன்றி :  மலைகள்.காம்) 
 
 

30.10.16

தீபாவளியும் எங்கள் தெருவும்...

அழகியசிங்கர்
எங்கள் தெரு ஒரு சாதாரண தெரு.  முன்பு ரொம்பவும் மோசமாக இருந்தது.  இரண்டு பக்கமும் சாக்கடைகள் ஓடிக்கொண்டிருந்தன.  சாரி..தேங்கிக்கொண்டிருந்தன.  ஆனால் இப்போது இல்லை.  

தெருவில் ஏகப்பட்ட குடியிருப்புகள்.  நிறையா சின்ன சின்ன பசங்கள். வாலிபர்களும் உண்டு.  தீபாவளி அன்று எங்கள் தெருவிற்கு தயவுசெய்து வந்து விடாதீர்கள்.  நாங்கள் வேறு வழி இல்லாமல் இருக்கிறோம்.  காலையில் ஆரம்பிக்கும் பட்டாசு சத்தம் காதைப் பிய்த்துவிடும்.  எல்லோரும் சாதாரண வெடிகளை வெடிப்பதில்லை.  அணுகுண்டைதான் ஒவ்வொருவரும் வெடிக்கிறார்கள்.  அல்லது சரம் வெடிகளை சரம் சரமாக வெடிக்கிறார்கள்.  எங்கள் தெருவில் என்ன விசேஷம் என்றால் தீபாவளி இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னே ஆரம்பித்துவிடும்.  பின் தீபாவளி முடிந்தபின்ன்னும் இன்னும் சில நாட்கள் ஓடும்.  

சுற்றிச் சுற்றி இந்த பொடியன்கள் பாடாய் படுத்துவார்கள்.  நான் தீபாவளி அன்று காலையில் எழுந்து விட்டேன்.  என் வீட்டில் போன ஆண்டு நான் வாங்கிய கம்பி மத்தாப்பைத் தவிர  வேற எதுவும் இல்லை.  போன ஆண்டே நான் வாஙகியிருந்த கம்பி மத்தப்பை கொளுத்தவில்லை.  நேற்றோ தொடக் கூட இல்லை.  அதில் ஒரு பாக்கெட்டை தானம் செய்து விட்டேன். 

குளித்துவிட்டு சீக்கிரமாக ஒரு புத்தாடையைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தேன்.  என் மனைவி டிவி முன் அமர்ந்து விட்டாள்.  ம்ம்ம்  எப்படிப் பொழுதைப் போக்குவது.  யார் வீட்டிற்கும் போகப்பிடிக்கவில்லை.  எல்லோரும் போனில் விஜாரித்துக் கொண்டிருந்தோம். என் மனவி டிவியில் ஆழ்ந்து விட்டாள்.  பட்டிமன்றத்தை ரசித்துப் பார்க்கிறாள்.  நானும் பட்டிமன்றத்தைப் பார்த்தேன்.  எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.  அதில் தோன்றும் சில முகங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அதை ரசிக்க என்று வருகிற கூட்டத்தைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. நானும் ஒரு பட்டிமன்றம் ஏற்பாடு செய்யலாமென்று நினைக்கிறேன்.  தலைப்பு : பட்டி மன்றம் அவசியமா அவசியமில்லையா?  அவசியமில்லை என்ற தலைப்பில் நான் பேச விரும்புகிறேன்.

ம்ம்ம்.. என்ன செய்யலாம். நான் தீபாவளி நாட்களை நினைத்து என் மனதில் ஓட்டிக்கொண்டிருந்தேன்.  கல்லுரி படிக்கும் காலங்களில் தீபாவளி அன்று முதல் காட்சி சினிமா பார்க்காமல் இருக்க மாட்டேன்.  பெரும்பாலும் சிவாஜி படம்தான் பார்ப்பேன்.  சொர்க்கம் என்ற படம்.  தீபாவளி அன்று வந்த அந்தச் சினிமாவை க்ரோம்பேட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் போய்ப் பார்த்தேன். அதே போல் இரு மலர்கள் என்ற படத்தை பிராட்வேயில் க்யூவில் நின்று மாலை காட்சியைப் பார்த்தேன்.

சின்ன வயதில் என்னடா இப்படி முட்டாள்தனமாய் இருந்துவிட்டோமென்று நினைத்துப் பார்க்கிறேன். 

ஆனால் இப்போது தமிழ் சினிமாவைக் கண்டாலே எனக்குப் பிடிக்கவில்லை.  எந்தப் படமும் பார்க்கும்படி இல்லை. ம்ம்..எப்படிப் பொழுதைக் கழிப்பது..

வெளியில் வெடி சப்தம் தாங்க முடியவில்லை.  பழைய நானோ கார் இருந்தால், வெடிசத்த அலறலில், கார் கத்தியிருக்கும்.  இது புது நானோ கத்தவில்லை.  ஆனால் மாடியில் உள்ள வராந்தாவில் வெடி சப்த அதிர்வில் மேலே உள்ள விளக்கை மூடியிருக்கும் மூடி கழன்று விழுந்து விட்டது.

காலையில் தமிழ் ஹிந்து வந்திருந்தது.  அதைப் படித்தவுடன், எழுத்தாளர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழ் ஹிந்துவே வாழ்க என்று சொல்ல வேண்டும் போலிருந்தது.  முகநூலில் கொஞ்சம் மேய்ந்தேன். ம்ம்ம்....என்ன செய்யலாம்.. அப்போதுதான் தோன்றியது புத்தகத்தைப் படிக்கலாமென்று.  என்னிடம் ஏராளமாய் புத்தகங்கள் இருக்கின்றன.  எல்லாப் புத்தகங்களையும் நான் மதிக்கிறேன்.  எந்தப் புத்தகத்தை எடுத்துப் படித்தாலும் அதன் மூலம் நான் ஏதோ கற்றுக் கொள்கிறேன் என்று நினைக்கிறேன்.  அல்லது என் தோழன் மாதிரி புத்தகம் என்னுடன் இருப்பதாக நினைத்துக் கொள்கிறேன். 

யாருடனும் நாம் பேச வேண்டாம்.  புத்தகத்தை எடுத்துப் படித்துக்கொண்டிருக்கலாம்.  அப்போதுதான் என் பக்கத்தில் உள்ள ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிக்கொண்டிருக்கிறேன்.  புத்தகத்தின் பெயர் : நூலை ஆராதித்தல் - பத்மநாப ஐயர் - 75.  அந்தப் புத்தகத்தைப் பார்த்து பிரமித்து விட்டேன்.  பத்மநாப ஐயர் நண்பர்கள் பலரும் அவரைப் பற்றி கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.  452 பக்கங்கள் கொண்ட இந்த நீண்ட புத்தகம் என் கண் முன்னால்.

179ஆம் பக்கத்தில் யமுனா ராஜேந்திரன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  புத்தகங்களின் புழுதி வாசம் என்ற தலைப்பில்.  அதில் இப்படி எழுதுகிறார் .

'புத்தகங்களை விலக்கிவிட்டுச் சென்று ஐயரைப் பார்ப்பது என்பது கடினம். அவரது அறையில் புத்தகங்களினிடையில் அவரது சயனத்தை நாம் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.  படுக்கையறைக் கட்டில், சாப்பாட்டு மேசை, விரிந்த தரை, கூரையை முட்டும் அலமாரிகள், சமயலறைக்குப் போகும் இருபக்கமுமான வெளி என அறையின் ஓரத்தில், புத்தகங்கள் விரிந்திருக்கும் கட்டிலில் அமர்ந்துகொண்டு நம்முடன் பேசுவார்.  புத்தகங்களின் புழுதிதான் உலகிலேயே ஐயருக்குப் பிடித்தமான வாசமாக இருக்க வேண்டும்.'

இந்தப் புத்தகத்தை எடுத்துப் படிக்கும்போது எனக்கு தீபாவளி சத்தம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.  பத்மநாப ஐயரை நான் பார்த்ததில்லை.  இப் புத்தகத்தைப் படிக்கும்போது தெரிந்த நண்பரைப் போல் எனக்கு அறிமுகம் ஆகிறார் பத்மநாப ஐயர்.

இன்னொரு புத்தகம் 'இது போதும்.'  பாலகுமாரன் என்ற எழுத்தாளர் எழுதியது.  அவருடைய ஆன்மிக அனுபவத்தை எழுதி உள்ளார்.  

'இந்த உணவு எதற்கு உண்கிறோம் என்று யோசிக்கத் துவங்கிவிட்டால் உண்பதின் மீது மிகத் தெளிவான கவனம் வந்து விடும்.  ஆஹா, உணவு எவ்வளவு நன்றாக இரக்கிறது என்று நொட்டை விட்டு சாப்பிட்டோம் என்றால் உணவினுடைய பலன் என்ன என்பது மறந்து போய் உண்பதே முக்கியமாகி விடும்.  ருசியே பிரதானமாகி விடும்.  ருசி அறுத்தல் என்பது ஆன்மீகத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.'

தெருவில் பட்டாசு சத்தம் காதைப் பிளக்கிறது.  என் கவனம் புத்தகங்கள் பக்கம் போய்க்கொண்டிருக்கிறது.  

29.10.16

விருட்சம் ஏற்பாடு செய்துள்ள பத்து கேள்விகள் பத்து பதில்கள் - 9

அழகியசிங்கர்


வழக்கம்போல  ஒன்பதாவது கூட்டம் இது.  வெளி ரங்கராஜன் அவர்களைப் பேட்டி கண்டுள்ளேன்.  முன்பெல்லாம் நானும் வெளி ரங்கராஜனும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளாமல் இருக்க மாட்டோம்.  எதாவது இலக்கியக் கூட்டங்களில் சந்திப்போம்.  இப்போது முன்பு போல் முடிவதில்லை.    

பத்து கேள்விகள் பத்து பதில்கள் சார்பாக அவரைப் பேட்டி கண்டுள்ளோம். இதைப் பார்த்து ரசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  என் முயற்சிக்கு முழு ஆதரவு தருபவர் கிருபானந்தன்.  இதில் எதாவது குறைகள் தென்பட்டால் தெரிவிக்கவும்.  திருத்திக்கொள்ள முயற்சி செய்கிறோம்.  சோனி காமெராவின் டிஜிட்டல் பயன்பாடை இவ்வளவு தாமதமாகத்தான் கண்டு பிடித்தேன்.  

28.10.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 32அழகியசிங்கர்  


கண்ணன் - என் காதலன்   

சி சுப்பிரமணிய பாரதி 


ஆசை முகமறந்து போச்சே - இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகமறக்க லாமோ?

கண்ணில் தெரியுதொரு தேற்றம் - அதில்
கண்ண னழகுமுழு தில்லை
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்.

ஓய்வு மொழிதலுமில் லாமல் - அவன்
உறவை நினைத்திருக்க முள்ளம்
வாயு முரைப்பதுண்டு கண்டாய் - அந்த
மாயன் புகழினையெப் போதும்

கண்கள் புரிந்துவிட்ட பாலம் - உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு.
பெண்க ளினத்தி லிதுபோலே - ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ?

தேனை மறந்திருக்க வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வைய முழுதுமில்லை தோழி.

கண்ணன் முகமறந்து போனால் - இந்தக்
கண்க ளிருந்துபய னுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி?


நன்றி : பாரதி பாடல்கள் - ஆய்வுப் பதிப்பு - தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர் - விலை ரூ.80 - தமிழ்நாட்டரசின் பாரதி நூற்றாண்டு விழாத் திட்ட உதவியில் வெளியாகும் புதிய பதிப்பு - இரண்டாம் பதிப்பு : 1989 

          

கூட்டத்திற்கு வராதவர்கள் பார்த்து ரசிக்கவும்

அழகியசிங்கர்


100வது கூட்டத்திற்கு வர முடியாதவர்கள், கூட்த்தில் பேசியதை ஷ்ருதி டிவி படம் பிடித்துள்ளது.  அதை உங்களுக்கு திரும்பவும் தருகிறேன்.  

 பார்க்கவும்.  பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிரவும்.


26.10.16

100வது இதழ் நவீன விருட்சம் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு நன்றி...அழகியசிங்கர்

கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு என் நன்றி.  கிட்டத்தட்ட பேச வந்தவர்கள் எல்லோரும் வந்திருந்து சிறப்பாகப் பேசினார்கள். நன்றி. ஹால் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது.  இக் கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்தவர்கள் டாக்டர் பாஸ்கரன், கிருபானந்தன், சுந்தர்ராஜன். இம் மூவருக்கும் என் தனிப்பட்ட நன்றி.  நன்றி  நன்றி   நன்றி.

என் நெருங்கிய நண்பர்களை அழைத்து ஒரு சிலரைப் பேசவும் கேட்டுக்கொண்டேன்.   அவர்கள் பேசும்போது சில தகவல் பிழை இருப்பதாகப் பட்டது.   அதைப் பொருட்படுத்தவில்லை.

புகைப்படங்கள் வரவிற்காக காத்திருந்தேன்.  புகைப்படங்களை க்ளிக் ரவி கொடுத்துள்ளார்.  ஒன்று மட்டும் இத்துடன் இணைக்கிறேன்.


22.10.16

சில துளிகள்.......3


அழகியசிங்கர் 
- இன்றைய தமிழ் ஹிந்துவில் நவீன விருட்சம் 100வது இதழ் குறித்து குறிப்பு வந்துள்ளது.   தமிழ் ஹிந்துவிற்கு நன்றி.  

- நவீன விருட்சம் பத்திரிகையோனடு சேர்ந்து நான் இலக்கியக் கூட்டமும் நடத்தியிருக்கிறேன்.  ஆனால் எவ்வளவு கூட்டம் என்று எண்ணவில்லை. 200 இருக்கும்.  100 கார்டு வாங்கி எல்லோருக்கும் கூட்டம் பற்றி விபரம் சொல்வேன்.  திருவல்லிக்கேணி லேடீஸ் ஹாஸ்டல் மாடியில்தான் கூட்டம் நடக்கும்.  பார்த்தசாரதி கோயில் பக்கத்தில். வழக்கம்போல் கொஞ்சம் பேர்கள்தான் வருவார்கள்.  பெண்கள் வர மாட்டார்கள்.  வருபவர்கள் தலை வழுக்கையாக இருப்பார்கள்.

- கடந்த நாலைந்து மாதங்களாக அப்பா படுத்துப்படுக்கையாக இருக்கிறார்.  சில நாட்கள் நல்ல நினைவோடு இருக்கிறார்.  நான் அவரைப் பார்த்துக் கேட்டேன் : "நான் யார்?" என்று.  அவருக்கு இந்த 94 வயதிலும் கிண்டல் உண்டு.  "நீ என் அப்பா" என்றார் கையைக் காட்டியபடி.  அவர் சொன்னதைக் கேட்டு சிரிப்பாக இருந்தது.  என் மனûவிதான் குறிப்பிட்ட வேளைக்கு சாப்பாடு தருகிறார்.   நான்தான் ஊட்டி விடுவேன்.  ஆனால் அப்பா என்னைப் பார்த்துக்  கேட்பார்: க்ரோம்பேட்டையிலிருந்து உன் மனைவி எப்போது வருவாள் என்று.

- அப்பா கொஞ்சம் தெம்பாக இருந்தபோது வாசலைப் பார்த்தபடி இருந்த அறையிலிருந்து இன்னொரு அறைக்குப் போய் படுத்துக்கொள்ளப் போவார். நான் வாசலில் இருந்த அறையை இந்தியா என்பேன்.  தூங்கப் போகும் அறையை பாக்கிஸ்தான் என்பேன்.  அப்பாவைப் பார்த்து, "இந்தியாவிலிருந்து பாக்கிஸ்தான் போயிட்டியா," என்று கிண்டல் அடிப்பேன்.

- நான் விருட்சம் நூறாவது இதழ் கொண்டு வந்து விட்டேன் என்றேன் அப்பாவிடம்.  அவருக்கு ஒன்றும் புரியவில்லை.  

- நான் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும்போது விருட்சம் பத்திரிகையை ஒரு சில நண்பர்கள்தான் பார்ப்பார்கள்.  ஒன்றிரண்டு பேர்கள்தான் படிப்பார்கள்.. போனபோகிறது என்று ஒருவராவது அது குறித்துப் பேசுவார்.  2000 பேர்கள் உள்ள அலுவலகத்தில் இந்தக் கதி.

- மேற்கு மாம்பலத்தில் உள்ள ஆர்யாகவுடர் ரோடில் உள்ள  பிள்ளையார் கோயில் பக்கத்தில் உள்ள பத்திரிகைக் கடையில் விருட்சம் பத்திரிகையை விற்கக் கொடுத்தேன்.  5 பிரதிகள். அங்கே ஏகப்பட்ட சிறுபத்திரிகைகள் தொங்கிக் கொண்டிருக்கும்.  விருட்சம் பத்திரிகை விலை ரூ15.  அவருக்கு ரூ5 கொடுத்துவிடுவேன். பத்திரிகையும் புத்தகங்களையும் கொடுத்தேன்.  ஆனால் அவர் பத்திரிகை/புத்தகம் விற்றாலும் பணமே தர மாட்டார்.  பலமுறை அவரைப் பார்க்கப் போக வேண்டும்.  ஒருமுறை அவரைக் காணவே காணும்.  யாரோ இருந்தார்கள்.  போன் பண்ணினாலும் அவர் எடுக்க மாட்டார். அவரைப் பார்க்க முடியவில்லை.  எனக்கு கோபமாக இருந்தது.  அந்தக் கடை முன் சிறிது நேரம் நின்றேன்.  கண்ணை மூடிக்கொண்டேன்.  இனிமேல் இந்தக் கடைப்பக்கம் வரக்கூடாது என்று திரும்பி விட்டேன்.

- ஒரு சிறு பத்திரிகை வர வேண்டுமென்றால் அதற்கு முன்மாதிரியாக வேற ஒரு சிறு பத்திரிகை இருக்க வேண்டும்.  ஆரம்பத்தில் மலர்த்தும்பி என்ற பத்திரிகைதான் என்னைத் எழுதத் தூண்டியது.  அதை நடத்தியவர் என் பெரியப்பா பையன். அதன் பின் விருட்சம் என்ற பத்திரிகையை நடத்தத் தூண்டியது, ழ, கவனம் பத்திரிகைகளை நடத்திய நண்பர்களைப் பார்த்துதான்.   

- விருட்சம் பத்திரிகையை வாங்கிப் படிக்கும் நண்பர்களிடம் சொல்வேன். இந்தப் பத்திரிகையில் எதாவது ஒரு கவிதை, ஒரு கதை, அல்லது கட்டுரை படிக்க சிறப்பாக இருக்கலாம்.  அதற்காக நீங்கள் பைசா கொடுத்து வாங்கியதாக நினைத்துக் கொள்ளுங்கள் என்று.    

- ஒருமுறை என் நண்பர் ஒருவர் எனக்கு உதவி செய்வதாக சொன்னார்.  வேண்டாம் என்றேன்.  அவர் கேட்கவில்லை.  அவரிடம் ஒரு நோட்டைக் கொடுத்து விருட்சம் அனுப்ப வேண்டிய கவர்களைக் கொடுத்து முகவரிகளை எழுதச் சொன்னேன்.  ஒருவாரம் கழித்து நண்பரைப் பார்த்துக் கேட்டேன் : "என்ன ஆயிற்று?" அவர் சிரித்தபடியே  "இன்னும் பசங்க யாரும் கண்ணில் படவில்லை," என்றார்.  

- விருட்சம் 17வது இதழில் பாதகமான சில கடிதங்களைப் பிரசுரம் செய்து விட்டேன்.  அச்சடித்து வந்தும் விட்டது.  அதைத் தபாலிலும் அனுப்பி விட்டேன்.  ஆனால் நான் நிம்மதி இல்லாமல் இருந்தேன்.  அந்தக் கடிதங்கள் மூலம் சிலர் மனதைப் புண்படுத்தி விட்டதாகத்  தோன்றியது.  அந்தச் சமயத்தில் பிரமிள் நட்பினால் நான் ஷ்ரிடி சாய்பாபா பக்தனாக இருந்தேன். சாய்பாபாவை வேண்டிக்கொண்டேன்.  இந்த இக் கட்டிலிருந்து என்னைக் காப்பாற்று என்று.  இரண்டு நாட்கள் கழித்து ஒரு தபால்காரர் என் வீட்டிற்கு வந்தார். நான் அனுப்பிய எல்லா தபால்களும் எக்மோரில் உள்ள சார்டிங் அலுவலகத்தில் இருப்பதாகவும், உரிய தபால்தலைகள் இணைக்கவில்லை என்றும் கூறினார். எடுத்துப் போகச் சொன்னார்.  என்னால் நம்பவே முடியவில்லை. நான் சரியாகத்தான் ஸ்டாம்பு இணைத்திருந்தேன்.  ஆனால் அங்குப்போய் எல்லாவற்றையும் எடுத்து வந்து விட்டேன்.   பத்திரிகையில் இருந்த கடிதம் வந்தப் பக்கங்களைக் கிழித்து விட்டேன்.  திரும்பவும் எல்லோருக்கும் அனுப்பி விட்டேன்.   நான் அடைந்த நிம்மதிக்கு அளவே இல்லை.  சாய் மிராக்கல்.

- எனக்கு கவிதை ரொம்பவும் பிடிக்கும்.  ஆனால் அது ஆபத்தானது. எழுதுபவர்களுக்குத் தெரியாமல் கவிதை எழுதுபவர்களைக் காட்டிக் கொடுத்துவிடும். உங்கள் தலைவிதியைச் சொல்லி விடும்.   'நானை' பிரதானப்படுத்தி  கவிதை எழுதினால் ஆபத்துதான்.  ஆனால் ஒருவர் அக் கவிதையைப் படிக்கிறார் என்றால் அது படிப்பவரையும் பிடித்துக்கொள்ளும். கவிதையைப் படியுங்கள்.  எழுதுங்கள். ஆனால் உணர்ச்சி வசப்பட்டு அதனுடன் ஐக்கியமாகி விடாதீர்கள். 

- நவீன விருட்சம் ஒன்றாவது இதழ் 16 பக்கங்கள்தான்.  எல்லாப் பிரதிகளும் தீர்ந்து விட்டன.  என் நண்பர் ஸ்ரீகுமார் திரும்பவும் ஒரு 100 பிரதிகள் அதேபோல் அச்சடித்துக் கொண்டு வந்து விட்டார்.  என்னால் நம்பவே முடியவில்லை.  ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மேற்குமாம்பலத்தில் மகாதேவன் தெருவில் உள்ள  காமாட்சி ஹாலில் நடைபெறும் கூட்டத்தில் இலவசமாகக் கொடுக்க உள்ளேன்.
                                                                                (இன்னும் வரும்)

20.10.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 31

அழகியசிங்கர் 


ஏனென்றால்....                    ஜெ. பிரான்சிஸ் கிருபாநீரென்று தெரியும் மீனுக்கு
மீனென்று தெரியாது நீருக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்

குரலென்று தெரியும் குயிலுக்கு
குயிலென்று தெரியாது குரலுக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்

புயலென்று தெரியும் கடலுக்கு
கடலென்று தெரியாது புயலுக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்

உயிரென்று தெரியும் உடலுக்கு
உடலென்று தெரியாது உயிருக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்

கதிரென்று தெரியும் பகலுக்கு
பகலென்று தெரியாது கதிருக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்

நிலவென்று தெரியும் இரவுக்கு
இரவென்று தெரியாது நிலவுக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்

நீயென்று தெரியும் எனக்கு
நானென்று தெரியாது உனக்கு
ஏனென்று கேட்காதே என்னிடம்!


நன்றி : சம்மனசுக்காடு - கவிதைகள் - ஜெ பிரான்சிஸ் கிருபா - பக்கம் : 111 - விலை ரூ.95 - சந்தியா பதிப்பகம், புதிய எண் : 77, 53வது தெரு,9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83 - தொலைபேசி : 044 - 24896979 

17.10.16

நவீன விருட்சம் 100வது இதழ் குறித்து இன்னும் சில தகவல்கள்

நவீன விருட்சம் 100வது இதழ் குறித்து இன்னும் சில தகவல்கள்


அழகியசிங்கர் 
நவீன விருட்சம் 100வது இதழுக்கான கூட்டம் ஒன்றை மேற்கு மாம்பலத்தில் உள்ள மகாதேவன் தெருவில் உள்ள காமாட்சி ஹாலில் ஏற்பாடு செய்து உள்ளேன்.  வரும் ஞாயிற்றுக்கிழமை 23.10.2016 அன்று மாலை 6 மணிக்கு.  இது குறித்து விபரங்கள் இன்னும் சில தினங்களில் அளிக்கிறேன்.

நவீன விருட்சம் 100ல் பங்குகொண்ட படைப்பாளிகளைப் பற்றியும் படைப்புகளைப் பற்றியும் கூடிய விபரத்ததை இங்கு தருகிறேன்.

1. பெருந்தேவி கவிதைகள்
2. கா ந கல்யாணசுந்தரம் - என் கிராமத்து சுமைதாங்கி கல்
3. வேல் கண்ணன் கவிதைகள்
4. மறதியின் பயன்கள் - ஞானக்கூத்தன்
5. தூரம் - சிறுகதை - ஜெயந்தி சங்கர்
6. பொன் தனசேகரன் கவிதைகள்
7. நடப்பியல் - நீல பத்மநாபன்
8. அம்ஷன் குமார் கட்டுரை
9. அகலிகைப் படலம் - போயோன்
10. தமிழவன் சிறுகதைத் தொகுதியைப் பற்றி விமர்சனம்
11. லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள் 
12. ரோஸ் ஆன்றா கவிதைகள்
13. தமிழவன் சிறுகதை - காந்தி லிபி
14. ராமலக்ஷ்மி கவிதைகள்
15. எஸ் சுதந்திரவல்லி கவிதைகள்
16. தொடாத பூ - ந பெரியசாமி
17. சௌந்திரத்தின் ரோஜாப் பூ - ஸிந்துஜா
18. பிரபு மயிலாடுதுறை கவிதைகள்
19. காந்தி வாழ்க்கை - கட்டுரை - பிரபு மயிலாடுதுறை
20. அழகியசிங்கர் கவிதைகள்
21. ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு - கவிதை
22. சாந்தி மாரியப்பன் கவிதை 
23. வைதீஸ்வரனும் நானும் - அசோகமித்திரன் 
24. வைக்கோல் கிராமம் - இலா முருகன்
25. தற்காலிகம் - கவிதை - சத்யானந்தன்
26. டபுள் டக்கர் - அழகியசிங்கர்
27. வரைதலும் பேசுதலும் - அ மலைச்சாமி
28. ரசிகன் - ந கிருஷ்ணமூர்த்தி
29. பிரதாப ருத்ரன் கவிதைகள்
29. பேயோன் கவிதைகள்
30. எஸ் வி வேணுகோபாலன் கட்டுரை
31. எனக்கு படம் வரைய வராது - புலியூர் அனந்து
32. வே நி சூர்யா - கடிகாரம் சொன்ன கதை
33. எங்கே அவன் ? - வைதீஸ்வரன் கவிதை
34. காத்திருக்கும் சூரியன் - தெலுங்கு கதை தமிழில் 
35. கடற்கரைக் காற்று பலமாக வீசுகிறது - ஷாஅ
36. சிறகா கவிதைகள்
37. புதிய கானம் - ஆனந்த்
38. முதுவேனில் - எஸ் சங்கரநாராயணன்
39. ஒரு தவறு செய்தால் - சுந்தரராஜன்
40. இயங்கியல் - ச.விஷ்ணுதாசன்
41. ஐ சி யூ - அதுல் பிஸ்வாஸ்
42. ஸ்ரீதர் - சாமா கட்டுரை
43. நெருப்புப் பூச்சி - பானுமதி ந
44. நெனப்பு - கலைச்செல்வி
45. பிலிம் நியூஸ் ஆனந்தன் - அம்ஷன் குமார்
46. புகை - பானுமதி ந
47. அந்த போட்டோவில் - ஜெ ரகுநாதன்
48. ஜெமினி அருகில் இழந்த சொர்க்கம் - மாதவபூவராக
மூர்த்தி
49.நந்தாகுமாரன் கவிதைகள்
50. லாவண்யா சுந்தராஜன் கவிதைகள் குறித்து ஆனந்த் கட்டுரை
51. மரணத்தின் கண்ணாடி - 3 - க்ருஷாங்கினி
52. ஆர் ராஜகோபாலன் கவிதைகள் 
53. அபராஜிதா கவிதைகள் 
54. லாவண்யா கவிதைகள்
55. அதங்கோடு அனிஷ்குமார் கவிதைகள் 
56. புதுமைப்பித்தனின் காஞ்சனை - பெருந்தேவி 
57.இலவசம்தானே - ஜெ பாஸ்கரன்
58. ஜான்னவி கவிதைகள் 

இதில் கலந்து கொண்ட படைப்பாளிகள் 23ஆம் தேதி நடைபெறும் கூட்டத்திற்கு வர முயற்சி செய்யவும்.  படைப்பாளிகள் தங்கள் முகவரிகளை  navina.virutcham@gmail.com     அனுப்பவும். உடனே பத்திரிகையை அனுப்புகிறேன். 

ஒத்துழைப்பு அளித்த எழுத்தாளர்களுக்கு நன்றி.  என்னைப் பொறுத்தவரை ரொம்பவும் திருப்தியான இதழ் இது.  இதை விட பிரமாதமாக நான் ஒரு விருட்சத்தைக் கொண்டு வர முடியாது.  பல புதியவர்கள் இதில் எழுதி உள்ளார்கள்.  அவர்களுக்கு என் நன்றி. 260 பக்கங்கள் கொண்ட இந்த இதழின் விலை ரூ.100 தான்.

இந்த இதழில் நடேஷ் அவர்களின் ஓவியங்களையும், கசடதபற இதழ்களில் வெளிவந்த ஓவியங்களையும் பயன்படுத்தி உள்ளேன்.  ஓவியர்களுக்கு என் நன்றி. 14.10.16

விருட்சம் 100வது இதழ் வந்து விட்டது

அழகியசிங்கர்விருட்சம் இதழின் 100வது இதழ் வந்துவிட்டது.  நேற்று மதியம் வந்தது. கிட்டத்தட்ட 100வது இதழ் முடியும்போது 25 ஆண்டுகளில் முடிந்திருக்க வேண்டும்.  28 ஆண்டுகள் ஓடி விட்டன.  99வது இதழ் விருட்சம் பிப்ரவரி 2016ல் வந்தது.  அதன்பின் 8 மாதங்கள் தட்டுத் தடுமாறி 100வது இதழை இதோ அக்டோபர் மாதம் கொண்டு வந்து விட்டேன்.100வது இதழ் 100வது இதழ் என்றதால் பக்கங்களும் அதிகமாய் விட்டன. 260 பக்கங்கள்.  இதுவரை நான் விருட்சம் இவ்வளவு பக்கங்கள் கொண்டு வரவில்லை. இந்த இதழ் தயாரிக்க செலவும் அதிகம். ஆனால் நண்பர்கள் உதவியதால் கொண்டு வர முடிந்தது.  ஒரு இதழிலிருந்து இன்னொரு இதழ் கொண்டு வருவதற்குள் என் நிலையில் பெரிய மாறுதல் இருந்துகொண்டே இருக்கும்.   இந்த இதழில் பலர் எழுதியிருக்கிறார்கள்.  அத்தனை எழுத்தாள நண்பர்களைப் பற்றிய குறிப்புகளையும் நான் தயாரித்து இங்கு தெரியப்படுத்துகிறேன்.  எழுதிய அத்தனைப் படைப்பாளிகளுகளுக்கும் என் நன்றி உரித்தாகுக.  அதேபோல் இதழ் நான் கொண்டு வரும் வரைக்கும் என்னுடன் போராடி வெற்றிபெறச் செய்த நண்பர்கள் : கிருபானந்தன், டாக்டர் பாஸ்கரன், சுந்தர்ராஜன் முதலிய நண்பர்களுக்கும் என் நன்றி.  தக்க சமயத்தில் விளம்பரம், நன்கொடை அளித்த நண்பர்களுக்கும் நன்றி.  


இந்த இதழைக் கொண்டு வர ஒரு சிறிய கூட்டம் நடத்த உள்ளேன். 23ஆம்தேதி வைத்திருக்கிறேன்.  பலரைக் கூப்பிட உள்ளேன்.  கூட்டம் நடத்தும் இடத்தை இன்னும் தீர்மானம் செய்யவில்லை.  தெரியப்படுத்துகிறேன். அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.  


12.10.16

ஐராவதமும் புத்தக விமர்சனமும்...

ஐராவதமும் புத்தக விமர்சனமும்...            அழகியசிங்கர்என் வீட்டிற்குப் பக்கத்தில் ஐராவதம் இருந்தார்.  ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.  நான் டூ வீலரில் இப்படி வலம் வந்தால் அவர் வீடு வந்து விடும்.  அடிக்கடி நாங்கள் சந்தித்துக் கொள்வோம்.  ஒவ்வொரு விருட்சம் இதழிலிலும் எதாவது ஐராவதம் எழுதிக் கொடுப்பார்.  ஒரு முறை சிறுகதை எழுதித் தருவார்.  ஒருமுறை கவிதை எழுதித் தருவார்.  ஒருமுறை கட்டுரை எழுதித் தருவார்.  விருட்சத்திற்கு புத்தகங்கள் எல்லாம் விமர்சனத்திற்கு வரும். அந்தப் புத்தகங்களை உடனே படித்து விட்டு எழுத வேண்டும்.  என்னால் அப்படி படிக்க முடியாது.  ஒருமுறை ஐராவதத்தைப் பார்த்து, üüபுத்தகங்கள் வந்திருக்கின்றன.  விமர்சனம் செய்ய வேண்டும்,ýý என்றேன்.  üüஎன்னிடம் கொடுங்கள்.  விமர்சனம் செய்து தருகிறேன், என்றார்.   நாங்கள் இருவரும் ஒன்றாக அலுவலகம் செல்வோம்.   மாம்பலம் ரயில் நிலையத்தில் சந்தித்துக் கொள்வோம்.  விமர்சனத்திற்கு வந்த புத்தகங்கள் எல்லாவற்றையும் ஐராவதத்திடம் கொடுத்து விடுவேன்.

ஐராவதத்திடம் புத்தகங்கள் கொடுப்பதில் எனக்கு ஒரு நன்மை உண்டு. அவர் விமர்சனம் செய்து முடித்தப் பிறகு எல்லாப் புத்தகங்களையும் என்னிடமே திருப்பிக் கொடுத்து விடுவார்.  நான் என்ன வேகத்தில் புத்தகங்களைக் கொடுக்கிறேனோ அதே வேகத்தில் படித்துவிட்டு எழுதிக் கொடுத்து விடுவார்.  மேலும் புத்தக மதிப்புரைக்காக ஒரே ஒரு புத்தக் பிரதியைத்தான் விருட்சத்திற்கு அனுப்புவார்கள்.  நான் சொல்வேன் :  "புத்தக மதிப்புரை விருட்சத்தில் ஒன்றரைப் பக்கம் அல்லது இரண்டு பக்கங்களுக்கு மேல் வரக்கூடாது," என்று.  அதே பக்க அளவில் எழுதித் தருவார்.  அதிகப் பக்கங்கள் உள்ள புத்தகமாக இருந்தால் இரண்டு பக்கங்களுக்கு எழுதித் தருவார்.  

படித்துவிட்டு  அவர் மனசில் என்னன்ன தோன்றுகிறதோ அது மாதிரி எழுதித் தருவார்.  விமர்சனம் எழுதும்போது வேண்டுமென்றே பல வெளிநாட்டு எழுத்தாளர்களைப் பற்றி குறிப்பிடுவார்.  நான் கேள்வியே பட்டிருக்க மாட்டேன்.  எனக்கு அதெல்லாம் அவர் படித்திருக்கிறாரா என்ற சந்தேகம் கூட வரும்.  ஆனால் அவர் வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டிருப்பதுதான் அவருடைய வேலை.  ஒரு புத்தகத்தைப் படிப்பது என்றால் விடாமல் படிப்பார்.  வீட்டைவிட்டு எங்கும் போக மாட்டார். நடைபயிற்சி என்பதே கிடையாது.    ஒருமுறை இலக்கியச் சந்திப்பு கூட்டத்திற்கு அவரை விடாப்பிடியாக இழுத்துக்கொண்டு போனேன்.  அவரைப் பார்த்த ந முத்துசாமி ஆச்சரியப்பட்டார்.  "என்னய்யா இங்கே வந்திருக்கே?" என்று  அவரைப் பார்த்துக் கேட்க, அதற்கு "இவர்தான் என்னை தூசித் தட்டிக் கொண்டு வந்திருக்கிறார்," என்று ஐராவதம் சொன்ன பதிலைக் கேட்டு எனக்கு தாங்க முடியாத சிரிப்பு வரும்.    

ஒரு முறை சுந்தர ராமசாமி கொண்டு வந்த காலச்சுவடு இலக்கிய மலர் குறித்து ஒரு விமர்சனத்தை ஐராவதம் எழுதினார்.   நான்தான் üஒரு புத்தக விமர்சனத்தை இருவர் பேசுவதுபோல் எழுதுங்கள்ý என்றேன்.  அவ்வாறே எழுதினார்.  ஆனால் அதில் பிரச்சினை ஏற்பட்டு விட்டது.  சுந்தர ராமசாமியை üதமிழ் இலக்கிய உலகின் ஞானத் தந்தையாக தன்னை அறிவிக்கும் முயற்சிý என்று அந்த இலக்கிய மலரைப் பற்றி எழுதி விட்டார். ஐராவதம் எதை எழுதிக் கொடுத்தாலும் நான் பிரசுரம் செய்து விட வேண்டும்.  இல்லாவிட்டால் அடுத்த முறை எழுதித் தர மாட்டார்.  ஏன் என்னை விரோதியாக பார்க்கக் கூட ஆரம்பித்து விடுவார்.  நான் அப்போது உணர்ந்த ஒன்று நான் ஒருவனே விருட்சம் பத்திரிகை முழுவதும் எழுத முடியாது என்பது.  இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நான் அவரிடம் புத்தகங்கள் கொடுப்பதை குறைத்து விட்டேன்.  முக்கியமான எழுத்தாளர்கள் புத்தகங்களைக் கொடுப்பதைத் தவிர்த்தேன்.

நானே எதாவது எழுத முயற்சி செய்வேன்.  இல்லாவிட்டால் வரப்பெற்றோம் என்று பிரசுரம் செய்து முடித்து விடுவேன்.  ஐராவதம் பெரும்பாலும் சிறுகதைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதுவதை விட்டுவிட்டார்.  நான் புத்தகம் கொடுக்காவிட்டாலும் அவர் கைக்குக் கிடைக்கும் புத்தகங்களை எடுத்து எதாவது எழுதாமல் இருக்க மாட்டார். அவர் தெரு முனையில் இருக்கும் யுவராஜ் லென்டிங் லைப்ரரியிலிருந்து புத்தகங்களை வாங்கிப் படித்துவிட்டு அப் புத்தகம் பற்றி எழுதுவார்.  பழைய தீபாவளி மலர்களைப் படித்துவிட்டு அம் மலர் எப்படி வந்திருக்கிறது என்று எழுதுவார்.  

அவருக்கு யாரையாவது பிடித்து இருந்தால், புகழ்ந்து  தள்ளுவார்.   பிடிக்காவிட்டால் மோசமாக எழுதி விடுவார்.  ஒரு புத்தகத்தில் அவருக்குப் பிடித்தப் பக்கத்தை எடுத்துக்கொண்டு அதில் புத்தக ஆசிரியர் என்ன சொல்கிறாரோ அப்படியே எழுதுவார். சில பக்கங்களிலிருந்து பாரா பாராவாக எடுத்துப் போட்டு  ஆசிரியர் கருத்து பிரமாதம் என்று முடிப்பார்.    இதை புத்தக மதிப்புரையாக  எடுத்துக்கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை.  அவரிடம் கேட்டால் மழுப்பலாக சிரித்துவிட்டு பேசாமல் இருந்து விடுவார்.

ஆனால் எந்தப் புத்தகம் கொடுத்தாலும் எழுதக் கூடியவர்.  ஒருமுறை சதாரா மாலதி கவிதைப் புத்தகத்தைப் பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து எழுதிவிட்டார்.  சதாரா மாலதிக்கே தன் புத்தகத்திற்கான விமர்சனத்தைப் படித்து விட்டு நம்ப முடியாமல் இருந்தது.  அது ஒரு உயர்வு நவிற்சியாக இருந்தது.  புத்தகம் கொண்டு வருவது என்பது சிரமமானது. ஒரு புத்தகம் நமக்கு படிக்க சரியாக இல்லை என்றால் அப்புத்தகம் பற்றி ஒன்றும் சொல்லாமல் இருப்பதே சாலச் சிறந்தது.  அதைப் பற்றி எழுதி அடிப்பது அல்ல.

அப்படியென்றால் புத்தக விமர்சனம் என்றால் என்ன?  ஒரு நாவலை விமர்சனம் செய்வதென்றால் நாவலின் முன் கதை சுருக்கத்தைச் சொல்வதா? அல்லது நாவலின் சில பகுதிகளை பத்தி பத்தியாக எழுதுவதா? இதெல்லாம் கூட புத்தக விமர்சனத்தின் ஒரு கூறுதான் என்பார் ஐராவதம்.  இது தவறு என்று சொல்வதை நானும் ஏற்றுக்கொள்ளவில்லை.  ஐராவதம் சொல்வார் : சுஜாதாவின்  சலவைக்குப்போடும் கணக்கைக் கூட விமர்சனம் செய்யலாம் என்று. கோட்பாடு ரீதியாக புத்தகத்தை விமர்சிப்பதை அவர் ஏற்றுக்கொள்வதில்லை.  அது உடலை கூறுபோடும் விஷயம் என்பார். அவர் விமர்சன முறை க நா சு வின் ரசனை முறைதான்.

ஆனால் தமிழ்நாட்டில் புத்தகம் வருமளவுக்கு புத்தக விமர்சனம் வருவதில்லை. மேலும் புத்தக விமர்சனத்தைப் பார்த்து யாரும் புத்தகம் வாங்குவதில்லை.  வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களை யாரும் படிப்பதும் இல்லை.  பெரும்பாலான புத்கங்கள் கண்டு கொள்ளாமல் போய் விடுகின்றன.  

10.10.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 30


ழகியசிங்கர்  


சிட்டுக்குருவிப் பாட்டு


பாரதிதாசன் 
சிட்டுக்குருவிச் சிறுபெண்ணே,
சித்தம் போலச் செல்பவளே,
கொட்டிக் கிடக்கும் தானியமும்
கொல்லைப் புழுவும் திண்பவளே,
எட்டிப் பறந்தாய் மண்முழுதும்
ஏறிப் பறந்தாய் வானமெல்லாம்
இஷ்டப் படிநீ செய்கையிலே
ஏன்? என்பாரைச் üசீý என்பாய்.

உன்னைக் கேட்பேன் ஒருசேதி.
உரிமைத் தெய்வத்தின் மகளே,
தின்னத் தீனி தந்திடுவேன்.
தெரிவிக்காமல் ஓடாதே!
மன்னன் அடிமைப்பணி யில்லான்.
வாய்மைச் சிறகால் உலகேழும்.
மண்ணும் காந்திப் பெருமானார்
மகிழும் தோழி நீ தானா?

நன்றி : பாரதிதாசன் கவிதைகள் - மணிவாசகர் பதிப்பகம், 55 லிங்கித்தெரு, சென்னை 600 001 - இந்தப் பதிப்பில் புதிய கவிதைகள் இடம் பெற்றுள்ளன - விலை ரு.17.50 (பிளாஸ்டிக் உறையுடன்)

தேடல் என்கிற கதை..

அழகியசிங்கர்
இந்த வார கல்கி இதழில் (18.10.2016) என் கதை தேடல் பிரசுரமாகி உள்ளது.  இக் கதையைப் பிரசுரித்த கல்கி ஆசிரியருக்கு என் நன்றி.  கதைக்கான ஓவியத்துடன் ஒரு கதையைப்  பார்க்கும்போது வித்தியாசமாக இருக்கிறது.  இக் கதையை நீங்கள் படிக்க வேண்டும்.  இக் கதை எப்படி வந்திருக்கும் என்பதைப் பற்றி சொல்கிறேன்.

முடிச்சூர் ரோடில் உள்ள எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் ஒன்று உள்ளது.  அங்கு ஒரு முறை போனபோது, அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்மணியுடன் பேசிக்கொண்டிருந்தேன்.  அவர் எதிர்பாராதவிதமாய் அவர் வாழ்க்கையில் நடந்த சோகத்தை வெளிப்படுத்தினார்.  அரசாங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த அவருடைய கணவர்  திடீரென்று புத்தி பிசகிப் போய்விட்டார்.   வேலையைத் துறந்து பென்சன் வாங்கிக் கொண்டிருந்தார்.  வீட்டிலேயே அடைந்து கிடப்பார்.  ஒரு முறை பென்சன் அலுவலகத்திற்கு கையெழுத்துப் போட அவரை அந்தப் பெண்மணி அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்.  அவரை ஒரு இடத்தில் அமர வைத்துவிட்டு உள்ளே அலுவலரைப் பார்க்கச் சென்றிருக்கிறார்.  அவர் திரும்பி வரும்போது உட்கார்ந்த இடத்தில் கணவரைக் காணோம்.  எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தும் கணவரை கண்டு பிடிக்க முடியவில்லை.  அதன்பின் அவர் கணவரையே காணோம்.  கிட்டத்தட்ட இரண்டு மூன்று வருடங்கள் ஆனபிறகும் அவர் கணவரை காணவில்லை.   இதை இப்போதும் அந்தப் பெண்மனி உருக்கத்துடன் கூறிக்கொண்டிருப்பார்.

நான் அவரைப் பார்த்துச் சொல்வேன் : "அவர் போனவர் போனவர்தான்..இனிமேல் வர மாட்டார்..நீங்கள் உங்கள் பெண்களுக்குத் திருமணம் செய்ய முயற்சி செய்யுங்கள்."

இச் சம்பவத்தை என் மனம் பதிவு செய்து கொண்டது.  சமீபத்தில் என் இலக்கிய நண்பர் ஒருவருக்கு, அவர் யார் எங்கே இருக்கிறார் என்பது தெரியாமல் போய்விட்டது.  அவர் உடனே அப்பாலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டார்.  உண்மையில் அதன்பின் அவருக்கு சரியாகிவிட்டது.  ஆனால் அப்படி ஒன்று ஏன் நடந்தது என்று தெரியவில்லை.

என் மனதில் இதையெல்லாம் ஓட்டி ஒரு கதை எழுத நினைத்தேன்.  அந்தக் கதைதான் 'தேடல்.'  நான் இதுவரை 80 கதைகள் எழுதி இருப்பேன் (குறுநாவல்களையும் சேர்த்து).  அவற்றையெல்லாம் மொத்தமாக ஒரு தொகுப்பாகக் கொண்டு வர எண்ணம்.

8.10.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 29

அழகியசிங்கர்  

நேற்றையக் கனவு


திரிசடை


என் நேற்றையக் கனவில்
அந்தப் பாலம் தகர்ந்தது.
வெகுநாள் வருந்தி,
வியர்வை சிந்தி,
கல்லுடைத்து,
வெயிலில் வெந்து,
பகிர்ந்துகொள்ள எவருமற்ற நிலையில்
தனியே ஏங்கி அழுது
சிறுகச் சிறுக நான் கட்டி முடித்திருந்த
அந்தப் பாலம்
நேற்று என் கனவில் தகர்ந்தது

மீண்டும் அதைக்கட்ட
எனக்குக் காலம் இல்லை.
காலம் இல்லையென்றால் கனவேது?
கனவு இல்லையென்றால் ஆக்கமேது?
என் கனவை உணர்ந்த ஒரு இதயம்
எனக்காக அதைக் கட்டும்
தன் கனவில்.

PUBLISHED BY : 
THAMIZH SANGAM OF 
METROPOLITAN WASHINGTON AND bALTIMORE INC.
C/O DR N GOPALSAMY, 11205 GREENWATCH WAY, 
NORTH POTOMAC MD20878, U S A


7.10.16

இன்று ஞானக்கூத்தன் பிறந்தநாள்.....

இன்று ஞானக்கூத்தன் பிறந்தநாள்.....

அழகியசிங்கர் முன்பெல்லாம் கடற்கரையில் உள்ள வள்ளூவர் சிலை அருகில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நண்பர்கள் சந்திப்போம்.  ஞானக்கூத்தன் முன்னதாகவே வந்து அமர்ந்திருப்பார்.  நான் வைத்தியநாதன் என்ற என் நண்பரை அழைத்துக்கொண்டு வருவேன்.  ஆனந்த், ஆர்.ராஜகோபாலன், ராம்மோஹன், ஸ்ரீனிவாஸன் என்று நிறையா நணள்பர்கள் சந்தித்துக் கொள்வோம்.  இந்த முகநூல் அப்போது இல்லை.  இருந்திருந்தால் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு என்ன பேசினோம் என்பதை முகநூலில் பகிர்ந்து கொண்டிருப்போம்.

எங்கள் எல்லோரையும் விட மூத்தக் கவிஞர் ஞானக்கூத்தன்.  தலைமை என்றெல்லாம் இல்லாவிட்டாலும் கூட அவர் தலைமை தாங்கி நடத்துவதுபோல்தான் அந்தக் கூட்டம் நடைபெறும்.  இப்படி எத்தனையோ ஞாயிற்றுக்கிழமைகளை நான் இனிதாக கழித்திருக்கிறேன்.  

ஆனால் இப்போது ஒரு கூட்டம் கூட அதுமாதிரி முடியாது.  அவ்வளவுதூரம் இறுகி விட்டது பொழுது எல்லோருக்கும்.

ஒருமுறை ஞானக்கூத்தன் எங்களைப் பார்த்துச் சொன்னார். üஇன்று எனக்குப் பிறந்தநாள்ý என்று.  நாங்கள் அவரை வாழ்த்தினோம்.  

'இந்தப் பிறந்தநாளில் என்ன பெரிதாக நடந்தது.  ஒன்றே ஒன்றுதான் சொல்ல முடியும்.   இத்தனை நாட்கள் உயிரோடு இருந்திருக்கிறேனே அதுவே பெரிய விஷயம், என்று சொன்னேன், கேட்டு வீட்டில் உள்ளவர்கள் கண்கலங்கினார்கள்,'  என்றார் ஞானக்கூத்தன்.  

அன்று அவர் சொன்னதை இன்றும் கூட என்னால் மறக்க முடியாது.  

இன்று அவர் பிறந்தநாள்.   அவர் நினைவாக 'உபதேசம்' என்ற அவர் கவிதையை இங்கு அளிக்க விரும்புகிறேன்.அன்பைத் தவிர வேறொரு செய்தி
விளம்பத் தகுந்ததாய் உலகிலே இல்லை
நீண்டதாய் எங்கும் செல்வதாய்
இருக்க வேண்டும் என் அன்பு
சக்கரம் பொருந்தி சுமையை
எல்லாப் பொழுதும் எதிர்பார்த்துக் கொண்டு.
6.10.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 28

அழகியசிங்கர்


 எதன் கைதி

சமயவேல் 


அடிக்கடி வெளியே
எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
இந்த ஜன்னல்
அல்லது நிலையோரம்
சமையலறை ஜன்னல்
பின்வாசல்
அல்லது ஓர ஜன்னல்
மாற்றி மாற்றி
எட்டி எட்டிப் பார்க்கிறேன்
அலுக்காமல் தெருவைப் பார்த்தபடியே
நிற்கிறேன் அல்லது
மொட்டை மாடி ஏறி
எல்லாத் திசைகளையும் பார்த்து
நிற்கிறேன்
எவ்வளவு பார்த்தாலும்
வீட்டுக்குள் நுழைந்ததும்
திரும்பவும்
எட்டி எட்டி


நன்றி : அகாலம் - கவிதைகள் - சமயவேல் - பக்கம் : 52 - வெளிவந்த ஆண்டு : மே 1995 - விலை ரூ.12 - சவுத் ஏசியன் புக்ஸ் 6/1 தாயார் சாகிப் 2ஆவது சந்து, சென்னை 600 002

5.10.16

யார் தமிழ் புத்தகங்கள் படிக்கிறார்கள்?

அழகியசிங்கர்எனக்கு எப்போதும் இந்தச் சந்தேகம் வருவதுண்டு.  முன்பை விட இப்போது தமிழ்ப் புத்தகங்களை யாராவது விரும்பிப் படிக்கிறார்களா என்ற சந்தேகம்தான்.  இது குறித்த நான் பலரிடம் விஜாரிக்க விரும்பவில்லை.  சமீபத்தில் பெஸன்ட் நகர் பீச்சில் காலை 6 மணிக்கு சில இளைஞர்கள் கிட்டத்தட்ட 30 வயதுக்குள் இருப்பவர்கள் பெரும்பாலோர் ஐடியில் பணிபுரிபவர்கள் ஆங்கிலத்தில் கதைகளை வாசித்தார்கள்.  அவர்கள் வாசித்தக் கதைகளின் தரம் அவ்வளவாய் சிறப்பாய் இல்லை.  ஆனால் தமிழில் இதுமாதிரியான கூட்டத்தை நடத்தத்தான் முடியுமா?  யார் தமிழில் எழுதுகிறாரகள்? யார் தமிழ் கதைகளைப் படிக்கிறார்கள்? நானும் சிறி;து முயற்சி செய்து பூங்காவில் கதை கவிதை வாசிப்புக் கூட்டம் ஏற்பாடு செய்து நடத்தினேன்.  அக் கூட்டத்திற்கு யாரும் வரவில்லை.  அது நடத்துவது கேலிக் கூத்தாகி விடுமா என்று கூட எனக்குத் தோன்றியது.  

இப்போது உள்ள இளைஞர்களில் தமிழ் படிப்பவர்கள் மிக மிக குறைவு.  பொதுவாக பெரும்பாலோர் புத்தகங்களே படிப்பதில்லை. மீறிப் படிப்பவரகள் என்ன புத்தகங்களைப் படிக்கிறார்கள்.  பெரும்பாலோர் கட்டுரைகள் அடங்கிய புத்தகங்களை வாசிக்கிறார்கள். அல்லது தமிழ் நாவல்களை வாசிக்கிறார்கள்.  ஆனால் சிறுகதைப் புத்தகமோ கவிதைப் புத்தகமோ யாரும் பொருட்படுத்துவதில்லை.  அதனால் தமிழில் கவிதைப் புத்தகம் சரியாக விற்க முடியவில்லை.  சிறுகதைக்கும் அந்த நிலைதான். 

கட்டுரைகள் கூட பல்கலைக் கழக மாணவர்கள் இயற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை யாரும் படிப்பதில்லை.  தமிழின் இந்த நிலைக்கு யார் காரணம்?  இன்னும் போக போக நிலைமை மோசமாகி விடும்.  முன்பை விட தமிழில் இப்போது எதிர்கொள்கிற பிரச்சினைகளை சாதாரணமாக விளக்கி விட முடியாது.  

நான் இப்போது கூட தமிழில் எழுதிக்கொண்டிருக்கிற எழுதப் போகிற எழுத்தாளர்களை நினைத்து கவலைப்பட்டுத்தான்  இதைக் குறிப்பிடுகிறேன்.  அடிப்படையில் தமிழில் படிப்பது என்பது சரியாக வரவில்லை.  இன்றைய தமிழ் மாணவர்கள் மூலம் தமிழ் படைப்புலகம் சிறக்கப் போவதில்லை.  தமிழை மட்டும் நம்பாமல் இருக்கும் இளைஞர்களிடம்தான் அதாவது தமிழை ஆங்கிலத்திற்கு அடுத்ததாகப் பயன்படுத்தும் இளைஞர்களிடம்தான்  தமிழில் இனி படிக்கவும் தமிழ் மொழியில் படைப்புகளை உருவாக்கவும் வழி இருப்பதாகப் படுகிறது.  

நான் பள்ளிக்கூடத்தில் எட்டாவது வகுப்பு படிக்கும்போதே பள்ளி நூல்நிலையத்திலிருந்து புத்தகங்களை எடுத்துப் படித்துக் கொண்டிருப்பேன்.  தென்னாட்டுப் பழங்கதைகள் என்ற புத்தகம், இராமசாமிப் புலவர் தொகுத்தது எட்டுப் பாகங்கள் கொண்ட புத்தகம்.  ஒவ்வொரு பாகமும் 300 பக்கங்கள் இருக்கும்.  அப் புத்தகங்களை எடுத்து எடுத்துப் படிப்பேன்.  அப்படி தமிழில் புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வமாக இருப்பேன்.  இப்போதோ அத் தென்னாட்டு கதைகள் தொகுதி எங்கும் கிடைப்பதில்லை.  அவற்றை புத்தகங்களாகக் கொண்டு வந்த சைவ சித்தாந்த கழகம் அப் புத்தகத்தை திரும்பவும் பிரசுரிக்க விரும்பவில்லை.  காரணம் அப் புத்தகத்தைப் படிக்க சிறுவர்கள் யாரும் தயாராய் இல்லை.

இப்போது கொஞ்சம் யோசித்துப் பார்க்கிறேன்.  அப்படி ஆர்வமாக இருந்த நான், இப்போது அந்த அளவிற்கு ஆர்வம் ஏற்படாமல் போனதற்குக் காரணம் என்ன?  யோசித்துப் பார்க்கிறேன்.  இன்னும் நான் தினமும் புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன்.  ஆனால் முன்புபோல் படிக்க முடியவில்லை.  ஏன்?  என்னுடைய பள்ளிக்கூட காலத்தில் நான் தங்கசாலையில் இருந்தேன்.  அங்குள்ள ஒரு தியேட்டர் பக்கத்தில் கீழே பிளாட்பாரத்தில் மர்ம நாவல்களை விற்றுக்கொண்டிருப்பார்கள்.  பி டி சாமி, மாயாவி, அரூர் ராமநாதன் என்றெல்லாம்.  அப் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கிப் படித்துபின் மற்றவர்களுக்கும் படிக்கக் கொடுப்பேன்.  அதன் பின் என் வாசக எல்லை சற்று விரிவடைந்து, கல்கி, சாண்டில்யன், தமிழ்வாணன் என்றெல்லாம் போயிற்று.  மு வ வின் கரித்துண்டு, அகல் விளக்கு என்றெல்லாம் படித்திருக்கிறேன்.  என் கல்லூரி ஆண்டுகளில் நான் பாரதியாரின் கட்டுரைகளை எல்லாம் படிக்க ஆரம்பித்தேன்.  ஆனால் எங்கு சென்றாலும்  புத்தகம் படித்துக்கொண்டே இருப்பேன்.  

கொஞ்சங் கொஞ்சமாக ஆங்கிலப் புத்தகங்களையும் எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  ஆனால் இப்போதோ அந்த அளவிற்கு வேகமாக என்னால் புத்தகங்களைப் படிக்க முடிவதில்லை.  நான் அலுவலகத்தில் சேர்ந்த புதியதில் ராயப்பேட்டாவிலிருந்த க்ரியாவில் வித்தியாசமான புத்தகங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  கவிதைப் புத்தகங்களை வாங்கிப் படிப்பேன்.  பெரும்பாலும் சிறுகதைகளையும் கவிதைகளையும்தான் நான் படிப்பேன்.  எப்போதும் எனக்கு சில புத்தகங்கள் படித்தாலும் புரியாது.  அதுமாதிரி புரியாத புத்தகங்களையும், பத்திரிகைகளையும் நான் வைத்திருப்பேன்.  

முன்னே மாதிரி என்னால் புத்தகங்கள் படிக்க முடியாவிட்டாலும், புத்தகங்களை வாங்கி குவிக்க வேண்டுமென்ற ஆர்வமும், எந்தச் சந்தர்ப்பத்திலாவது இப் புத்தகங்களைப் படித்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.  என்னுடைய பலம் டிவியில் நான் முழுவதுமாக மாட்டிக்கொள்ளவில்லை.

ஆனால் என்னுடைய கவலை எல்லாம் இக் காலத்தில் இருக்கும் இளைஞர் மீதுதான். தெருவில் என் வீட்டு கீழே ஏகப்பட்ட இளைஞர்கள் கூடி வெறும் அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள்.  ஆனால் அவர்களில் யாருமே புத்தகம் படித்ததில்லை.  நான் இருக்கும் வளாகத்தில் 6 வீடுகள் உள்ளன.  அதில் ஒருவர் கூட புத்தகம் வாங்கவும் மாட்டார்கள்.  படிக்கவும் மாட்டார்கள்.  ஏன் என் வீட்டில் உள்ள என் மகனோ மகளோ தமிழ் புத்தகங்களைப் படிக்கவே மாட்டார்கள்.  என் அப்பா மனைவி எல்லாம் தமிழ் புத்தகங்களின் பக்கமே வர மாட்டார்கள். என் சகோதரன் வீட்டில் யாருமே தமிழ் புத்தகங்கள், பத்திரிகைகள் பக்கம் வரவே மாட்டார்கள். என் சகோதரன் நான்  தமிழ் புத்தகம் படிப்பதைப் பார்த்து கிண்டல் செய்வான். ஆனால் அவர்கள் முன் நான் குவித்து வைத்திருக்கும் தமிழ் புத்தகங்களைப் பார்த்து அவர்கள் சத்தம் போடுவார்கள்.  

இப்படியே போனால் ஒரு கட்டத்தில் தமிழ் புத்தகம் படிப்பது குறைந்து பின் யாரும் படிக்கக் கிடைக்காமல் போய்விடலாம்.  அந்தத் தருணத்தில் தமிழை வளர்க்க அரசாங்கமே பதிப்பாளர்களைக் கூப்பிட்டு புத்தகம் கொண்டு வர நிதி உதவி செய்யலாம்  அல்லது எதாவது ஒரு இடத்தில் எல்லோரையும் கூட்டி தமிழ் புத்தகங்கள் படிப்பவருக்கு சலுகையாக சன்மானம் வழங்கப்படும் என்று அளிக்கலாம்.  ஆனால் யார் எத்தனை பக்கங்கள் ஒரு புத்தகத்தை வாசிக்கிறார்கள் என்று கணக்குச் சொல்லும்படி இருக்கும்.  ஆனால் எனக்கோ புத்தகங்களைப் பார்த்தால் வாங்கி வைத்துவிட வேண்டுமென்ற வெறி இன்னும் துளிர்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

நான் ஒரே சமயத்தில் பல புத்தகங்களைப் படித்துக்கொண்டு  போவேன். மறந்து விடாமல் போவதற்கு புத்தகம் படித்து முடித்தப்பிறகு இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டேன் என்று எழுதுவேன்.  ஆனால் இப்போதோ நான் படிக்கும் புத்தகத்தைக் குறித்து சில பக்கங்கள் எழுத வேண்டுமென்று எழுதுகிறேன்.

இந்த இடத்தில் வல்லிக்கண்ணன் அவர்களையும், எஸ் ராமகிருஷ்ணன் அவர்களையும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.  ஒருமுறை வல்லிக்கண்ணன் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டத்தில் பேசக் கூப்பிட்டேன்.  வல்லிக்கண்ணன் மூச்சு விடாமல் அவர் படித்த அத்தனை நாவல்களைப் பற்றியும் சொல்லிக்கொண்டே போனார்.  மறக்க முடியாத நிகழ்ச்சி அது. 

சமீபத்தில் குவிகம் இலக்கியம் சார்பாக எஸ் ராமகிருஷ்ணன் எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று பத்து புத்தகங்களுக்கு மேல் புத்தகங்களைப் பற்றியும் புத்தக ஆசிரியரைப் பற்றியும் உற்சாகம் கரைபுரண்டோட சொல்லிக்கொண்டே போனார்.  

ஆனால் நான் உடனே படித்துவிட்டு எழுதி விட வேண்டும்.  இல்லாவிட்டால் மறந்து விடும்.  
    


3.10.16

என்னையும் கவிதை வாசிக்க அழைத்தார்...


அழகியசிங்கர்
                                                                                                       
நான் கிட்டத்தட்ட 300 கவிதைகள் எழுதியிருக்கிறேன்.  185 கவிதைகள் கொண்ட அழகியசிங்கர் கவிதைகள் என்ற புத்தகம் கொண்டு வந்துள்ளேன். 300 பக்கங்கள் வரை இருக்கும்.  ஆனால் விலை ரூ.150 தான்.  புத்தகக் கண்காட்சியின்போது ஒரு சிலர் வாங்குவார்கள்.  என்னிடம் உள்ள அத்தனைப் பிரதிகளும் விற்க இன்னும் 20 புத்தகக் கண்காட்சியாவது நடைபெற வேண்டும்.  அதன்பின் வினோதமான பறவை என்ற கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்தேன்.  தெரியாமல் 300 பிரதிகள் அடித்து விட்டேன். பின் புத்தக வெளியீட்டு விழா என்றெல்லாம் நடத்தவில்லை. பத்திரிகைகளுக்கு அனுப்பினேன்.  பல பத்திரிகைகள் கண்டு கொள்ளவே இல்லை.  வரப்பெற்றோம் என்ற தலைப்பில் ஒரு சில பத்திரிகைகள் அக் கவிதைத் தொகுதியைப் பற்றி கண்டு கொண்டது.  என் கவிதைகளைப் பற்றி தமிழவன், நகுலன், வெங்கட் சாமிநாதன், ஞானக்கூத்தன், ரிஷி போன்ற நான் மதிக்கும் படைப்பாளிகள் எழுதி உள்ளார்கள்.  

என் கவிதைத் தொகுதிகளை நான் புரட்டிப் புரட்டிப் பார்ப்பேன். என் கவிதைகளை நானே படித்து ரசிப்பேன்.  சமீபத்தில் புத்தகக் கண்காட்சியின்போது ஞானக்கூத்தன் வந்திருந்தார்.  அவரிடம் கேட்டேன். 'நானும் 'வினோதமான பறவை' என்ற கவிதைத் தொகுதி கொண்டு வந்துள்ளேன்.  யாரும் ஒன்றும் சொல்லவில்லை,' என்றேன். 'காலம் வரும். எல்லோரும் சொல்வார்கள்,' என்றார் அவர்.  எனக்கு அவர் சொன்னதைக் கேட்டு உடனே ஆச்சரியம்.  அப்படியெல்லாம் அவர் பேசிவிட மாட்டார்.  

இந்த வினோதமான பறவை கவிதைத் தொகுதியை வெள்ளம் வந்து பதம் பார்த்துவிட்டது.  அந்தப் புத்தகக் கட்டுகள் மட்டும் இருந்தால், இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ அந்தக் கவிதைத் தொகுதி விற்க.  

நான் தொடர்ந்து கவிதைகளை ஒரு  நோட்டில் எழுதிக் கொண்டு வருகிறேன்.  ஆனால் முன்பு இருந்த வேகம் இப்போது இல்லை.  சில சமயம் பல தாள்களில் எழுதுகிற கவிதைகளை எங்கயோ வைத்துவிடுவேன்.  சில தொலைந்தும் போய்விடும்.

30ஆம் தேதி செப்டம்பர் மாதம் ஆறுமணிக்கு பரிசல் செந்தில் என்னை கவிதை வாசிக்க அழைத்தார்.  எனக்கு ஆச்சரியம்.  அவருக்கு எப்படி என்னை கவிதை வாசிக்கக் கூப்பிட வேண்டுமென்று தோன்றியது என்ற ஆச்சரியம். எப்படியும் கவிதை வாசிக்க வேண்டுமென்று நினைத்தேன்.  காரணம்.  பல கவிதை எழுதுபவர்கள் அங்கு வந்திருப்பார்கள்.  அவர்கள் முன் வாசிக்கலாம் என்ற எண்ணம்தான்.  ஆனால் நான் இப்போது இருக்கிற சூழ்நிலையில் என்னால் வர முடியாமல் போய்விட்டது.  எதிர்பாராத திருப்பமாக நான் கவிதை வாசிக்க முடியாமல் போய்விட்டது.  

அங்கு நான் எழுதி கல்வெட்டில் வந்த ஒரு கவிதையை வாசிக்கத்தான் நினைத்தேன்.  அதை நான் இங்கே அப்படியே தருகிறேன்.  நீங்கள் படித்துவிட்டு உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க முடிந்தால் நன்றாக இருக்கும்.

 ரிடையர்டு ஆனால்...


அப்பா கேட்டார்:
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்யப் போகிறாய்?
வீட்டில் உன்னை மாதிரி சும்மா உட்கார்ந்திருப்பேன்

மனைவி கேட்டாள் :
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்யப் போகிறாய்?
சினிமா கச்சேரி என்று சுத்துவேன்

பையன் கேட்டான் :
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்யப் போகிறாய்?
ஊரைச் சுற்றுவேன். இந்தியா முழுவதும்
பார்க்காத இடம் அதிகம்

பெண் கேட்டாள் :
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்யப் போகிறாய்
லைப்ரரி போய் புத்தகக் குவியலில் முகம் புதைப்பேன்

நண்பன் கேட்டான்:
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்யப் போகிறாய்
காலையில் எழுந்தவுடன், மூக்கைப் பிடித்து உட்கார்ந்து விடுவேன்
பின் ஒவ்வொரு கோயிலாக படி ஏறுவேன்.

இலக்கிய நண்பர் கேட்டார்
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்யப் போகிறீர்
ஒவ்வொரு இலக்கியக் கூட்டமாகப் போவேன்
நானும் நடத்துவேன் கூட்டங்களை

அலுவலக நண்பர் ஒருவர் கேட்டார்
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்ய் போகிறீர்
ஒவ்வொரு பிராஞ்சாப் போவேன்
பார்ப்பேன் பணி புரிபவர்களை
எதாவது வித்தியாசம் தெரிகிறதா என்று..

நானே கேட்டேன் 
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்யப் போகிறாய்..
கடைக்குப் போவேன் காய்கறி வாங்க
பால் பாக்கெட்டுகளை எடுத்து பிரிட்ஜில் வைப்பேன்
குளிப்பேன் தோன்றியபோது
சாப்பிட செல்வேன் ஓட்டலுக்கு
வண்டியை ஓட்டுவேன் அங்கும் இங்கும்
வெறுமனே மதியம் படுத்துத் தூங்குவேன்
எழுந்து காப்பி போடுவேன்
கம்ப்யூட்டரில் பேஸ் புக் பார்ப்பேன்.

ஒருநாள் மகிழ்ச்சியாப் போயிற்று என்று சந்தோஷப்படுவேன்.
ஆனால் சம்பாதிக்க மாட்டேன்.