10.10.16

தேடல் என்கிற கதை..

அழகியசிங்கர்
இந்த வார கல்கி இதழில் (18.10.2016) என் கதை தேடல் பிரசுரமாகி உள்ளது.  இக் கதையைப் பிரசுரித்த கல்கி ஆசிரியருக்கு என் நன்றி.  கதைக்கான ஓவியத்துடன் ஒரு கதையைப்  பார்க்கும்போது வித்தியாசமாக இருக்கிறது.  இக் கதையை நீங்கள் படிக்க வேண்டும்.  இக் கதை எப்படி வந்திருக்கும் என்பதைப் பற்றி சொல்கிறேன்.

முடிச்சூர் ரோடில் உள்ள எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் ஒன்று உள்ளது.  அங்கு ஒரு முறை போனபோது, அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்மணியுடன் பேசிக்கொண்டிருந்தேன்.  அவர் எதிர்பாராதவிதமாய் அவர் வாழ்க்கையில் நடந்த சோகத்தை வெளிப்படுத்தினார்.  அரசாங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த அவருடைய கணவர்  திடீரென்று புத்தி பிசகிப் போய்விட்டார்.   வேலையைத் துறந்து பென்சன் வாங்கிக் கொண்டிருந்தார்.  வீட்டிலேயே அடைந்து கிடப்பார்.  ஒரு முறை பென்சன் அலுவலகத்திற்கு கையெழுத்துப் போட அவரை அந்தப் பெண்மணி அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்.  அவரை ஒரு இடத்தில் அமர வைத்துவிட்டு உள்ளே அலுவலரைப் பார்க்கச் சென்றிருக்கிறார்.  அவர் திரும்பி வரும்போது உட்கார்ந்த இடத்தில் கணவரைக் காணோம்.  எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தும் கணவரை கண்டு பிடிக்க முடியவில்லை.  அதன்பின் அவர் கணவரையே காணோம்.  கிட்டத்தட்ட இரண்டு மூன்று வருடங்கள் ஆனபிறகும் அவர் கணவரை காணவில்லை.   இதை இப்போதும் அந்தப் பெண்மனி உருக்கத்துடன் கூறிக்கொண்டிருப்பார்.

நான் அவரைப் பார்த்துச் சொல்வேன் : "அவர் போனவர் போனவர்தான்..இனிமேல் வர மாட்டார்..நீங்கள் உங்கள் பெண்களுக்குத் திருமணம் செய்ய முயற்சி செய்யுங்கள்."

இச் சம்பவத்தை என் மனம் பதிவு செய்து கொண்டது.  சமீபத்தில் என் இலக்கிய நண்பர் ஒருவருக்கு, அவர் யார் எங்கே இருக்கிறார் என்பது தெரியாமல் போய்விட்டது.  அவர் உடனே அப்பாலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டார்.  உண்மையில் அதன்பின் அவருக்கு சரியாகிவிட்டது.  ஆனால் அப்படி ஒன்று ஏன் நடந்தது என்று தெரியவில்லை.

என் மனதில் இதையெல்லாம் ஓட்டி ஒரு கதை எழுத நினைத்தேன்.  அந்தக் கதைதான் 'தேடல்.'  நான் இதுவரை 80 கதைகள் எழுதி இருப்பேன் (குறுநாவல்களையும் சேர்த்து).  அவற்றையெல்லாம் மொத்தமாக ஒரு தொகுப்பாகக் கொண்டு வர எண்ணம்.

No comments: