24.6.12

எதையாவது சொல்லட்டுமா....74

 கடந்த சில தினங்களாக அலுவலகம் போகாமல் வீட்டில் இருக்கிறேன்.  பையன் திருமணத்தை ஒட்டி.  வீட்டில் நானும், அப்பாவும்தான்.  காலையில் நடக்கப் போவேன்.  சரவணபவன் ஓட்டல் எதிரில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியைச் சுற்றி சுற்றி வருவேன்.  நான்கு தடவைகள்  சுற்றினால் அரைமணிநேரம் ஓடிவிடும்.  பின் சரவணபவன் ஓட்டலில் 2 இட்லி ஒரு மினி காப்பி அல்லது பொங்கல் அல்லது வடை மினி காப்பி நிச்சயம் சாப்பிட்டு வீட்டிற்கு வந்து மெதுவாகக் குளித்து மெதுவாக மதியம் சாப்பிடுவேன்.  ஒருமுறை காலை 11 மணிக்கு வெயிலில் வெளியே சுற்றினேன்.  கடுமையை உணர்ந்தேன்.

 1984ஆம் ஆண்டு வாக்கில் நான் சம்பத்தைச் சந்தித்திருக்கிறேன். 2 முறைகள் சந்தித்திருப்பேன்.  ஒருமுறை ஞாநி நடத்திய கூட்டம் ஒன்றில்.  பாதல்சர்க்கார் பற்றிய கூட்டம் அது என்று நினைக்கிறேன்.  அப்போது சம்பத் என்பவர் சத்தமாக விவாதம் செய்ததாக நினைப்பு.  எதைப் பற்றி பேசினார்கள், என்ன பேசினார்கள் என்பதைப் பற்றி ஞாபகம் இல்லை.  அடுத்த முறை சம்பத்தை ஜே கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தின்போது, கூட்டம் முடிந்து நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, பேசிக்கொண்டு வந்தேன்.  ஆனந்தவிகடன் நடத்த உள்ள நாவல் போட்டியில் நாவல் எழுதப் போவதாக சம்பத் குறிப்பிட்டார்.  பின் சம்பத்தைப் பார்க்கவில்லை.  சம்பத்தைப் பற்றி அவர் நண்பர்கள் பேச பேச ஆச்சரியமாக இருக்கும். 

 ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய் சம்பத்தைப் பற்றி கதை சொல்லியிருக்கிறார்கள்.  நானும் சம்பத் எழுதியவற்றை தேடிக் கண்டுபிடித்துப் படித்திருக்கிறேன்.  ழ வில் அவர் கவிதை ஒன்று ஏழு வைடூரியங்களைச் சேர்த்து கோர்த்ததுபோல் மூளையில் இருக்குமென்று எழுதியிருப்பார்.  தொடர்ந்து அவர் குறுநாவல்களில் மண்டைக்குள் முணுக்கென்று வலிப்பதுபோல் எழுதியிருப்பார்.  பிறகு மரணத்தைப் பற்றியே எழுதியிருப்பார்.  அவர் எழுத்தில் பிரிவு பெரும் துயரமாக இருக்கும்.  ஒரு கதை தி ஜானகிராமனின் அம்மா வந்தாள் கதையை ஞாபகப்படுத்தும். 

 சம்பத் எப்படி எழுதினாரோ அப்படியே வாழ்ந்தார்.  அவருடைய முதல் நாவல் இடைவெளி வரும்போது அவர் இல்லை.  திரும்பவும் அந்த நாவல் முழுவதும் மரணத்தைப் பற்றி அவர் தேடியிருக்கிறார்.  மரணத்தைப் பற்றி எழுதி எழுதி மரணத்தையே தழுவிவிட்டார்.  சம்பத் மரணம் நடந்தபோது, ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சி பரபரப்பாகப் பேசப்பட்டது.  அதனால் சம்பத் மரணத்தைப் பற்றி பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.  ஆனால் அசோகமித்திரன் சம்பத் மரணத்தைப் பற்றி குமுதத்திலோ கணையாழியிலோ குறிப்பிட்டிருக்கிறார்.

கணையாழியில் எழுதும்போது, சுஜாதாவைப்போல் திறமையானவர் சம்பத் என்று குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்கள்.  ஆனால் சுஜாதாபோல் திறமையானவர் இல்லை சம்பத்.  பிஎ இக்னாமிக்ஸ் படித்துவிட்டு, கிடைத்த நல்ல வேலையை உதறித் தள்ளியவர்.  அவர்குடும்பத்தாருக்கு அவரைப் பிடிக்காமல் போனதற்கு குடும்பத்தாரைப் பற்றியே அவர் எழுத ஆரம்பித்துவிட்டார்.  சம்பத் அவர் குடும்பத்தாருக்கு வேண்டாதவராகிவிட்டார்.  அவர் எழுத்தையும் அவரையும் அவர் குடும்பத்தார் மதிக்கவில்லை.  இன்னும்கூட அவர் கதைகளைப் புத்தகமாகக் கொண்டுவர அவர் குடும்பத்தினர் விரும்பவில்லை.  சம்பத் பற்றி பேசக்கூட அவர் தயாராக இல்லை.

 ஐராவதம் பணிபுரிந்த ரிசர்வ் வங்கிக்குச் சென்று மணிக்கணக்கில் சம்பத் பேசிக்கொண்டிருப்பார்.  ஐராவதத்தைச் சுற்றி இருந்தவர்களுக்கு தர்ம சங்கடம் ஆகவிடும். 

 இந்திராபார்த்தசாரதியுடன் ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும் போது, அவர் சொன்ன ஒரு விஷயம் என் ஞாபகத்திற்கு வருகிறது.  சம்பத் ஒரு நாவலை எழுதிக்கொண்டு, படிக்கும்படி இ.பாவைத் தொந்தரவு செய்தாராம்.  இ.பாவும் படித்துவிட்டு, எழுதியது சரியில்லை என்று சொல்லிவிட்டாராம்.  சொல்லிமுடித்து சிறிது நேரத்திற்குள் ஏதோ பேப்பர் பொசுங்கும் வாசனை வர ஆரம்பித்ததாம்.  இ.பா சமையல் அறைக்குப் போய்ப் பார்த்தபோது, சம்பத் அவர் எழுதிய நாவலை அடுப்பில் பொசுக்கிக் கொண்டிருந்தாராம்.

14.6.12


கொடை

கடல் பார்க்கவும்
அலைகளில் கால் நனைக்கவும்
ஆசைப்படாதவர் உண்டா
அருவியின் முகத்துவாரம்
இன்னும் அருமையாக இருக்கும்
அல்லவா
கங்கை,காவிரி,வைகை
சமுத்ரநாயகனுக்கு
எத்தனை நாயகிகள்
தேங்கிய தண்ணீரை
பார்க்கப் பிடிப்பதில்லை
குளத்தில் நீந்தும் மீனுக்கு
மார்க்கெட்டில் மவுசு அதிகம்
ஏரியில் பறவைகள் கூட்டம்,
மக்களின் தாகத்தை தீர்க்கவும்
பறவைகளுக்கு அடைக்கலம் கொடுக்கவும்
நிறைஞ்ச மனசு வேணும்
தோணி உண்டு ஓடையில் பயணிக்க
நீங்கள் துடுப்பை வலிக்க வலிக்க
உங்கள் ஜாதகத்தையே சொல்லும்
ஓடை
வானத்தின் கொடை தான்
மக்களின் தாகத்தை
தணித்துக் கொண்டிருக்கிறது.

கூர்


பாதசாரிகள் கவனத்துடனேயே
சாலையை கடக்கிறார்கள்
எந்த வாகனத்தில் சென்றாலும்
கோயிலைக் கண்டால்
கன்னத்தில் போட்டுக் கொள்ள
மறப்பதில்லை வெகுஜனங்கள்
சீரூடை அணிந்த
மாணவர்களின் மிதிவண்டி
வேகமெடுக்கிறது
பள்ளியை நோக்கி
மின்வெட்டு,பெட்ரோல் தட்டுப்பாடு
சகலத்தையும்
எப்படி பொறுத்துக் கொள்கிறார்கள்
சாமானியர்கள்
வீட்டின் பெரும்பகுதியை
ஆடம்பரப் பொருட்கள் தான்
அடைத்துக் கொண்டுள்ளது
வெள்ளைக்காரன் விட்டுச் சென்ற
ஆங்கிலம் தான்
இன்னும் நம்மை
ஆண்டு கொண்டிருக்கிறது
இதிகாச நாயகர்களை
கார்ட்டூன் பாத்திரமாக்கி
கேலி செய்கிறார்கள்
விட்டேத்தியாய்
இருக்கும் வரை தான்
வீட்டில் இருக்கலாம் போல.


ப.மதியழகன்

துருக்கிப் படை வீரர்களுக்கான மயானம்
1.
நானொரு கப்பற்படை மாலுமி
எனது விழிகளைச் சாப்பிட்டன மீன்கள்
பார்ப்பதும் அழுவதும் என்னைப் பற்றியதாகவே உள்ளன
எனது வாழ்க்கையில் நான் உயர்ந்திருந்தேன்
என்னை நீங்கள் நம்பாவிடில்
எனது ஆடைகளைப் பாருங்கள்

உயிரற்ற ஏனையவர்களுக்கும் எனக்கும்
எந்த வித்தியாசமுமில்லையென்பதால்
நான் படைவீரனொருவனும் தானெனச் சிலர் கூறினர்.
முன்னொரு காலத்தில் நாம் வீடுகளில் வசித்தோம்
தற்போது நாம் சுவர்களைத் தாண்டி வந்து
கதவுகளுக்கு வெளியே உள்ளோம்

அத்தோடு இன்னுமொருவர் கூறினார்
அவர்களை நம்பாதீர்
அவர்கள் பொய்யர்கள்
நாம் உயிர் வாழவில்லை

2.
எனதறைக்குள் எளிதாக நுழைவதற்காக
அவர்கள் இறந்த உறவுகளின் வடிவத்தில் வருகிறார்கள்
அவர் ஒரு தடவை கதைக்கையில்
அவர் மாமா ஒருவரா அல்லது சகோதரனொருவனா என நான் பார்க்கிறேன்
அவரொரு காவற்துறை அதிகாரியென நான் காண்கிறேன்

ஐந்து வயதேயானவோர் மகள் இருந்தாள் எனக்கு.
இறந்து விட்ட அவளும் நானும் இப்பொழுது ஒன்றாக இருக்கிறோம்
வார்சா நகரின் பின்னால் தனது
கரங்களை விட்டு வந்திருக்கும் அவளால்
அசைய இயலாதாகையால் வெறுப்படைந்திருக்கிறாள்

ஒரு குரல் சொல்கிறது
மண்ணைக் கிளறியெடுக்க எந்த உருளைக் கிழங்குகளும் இல்லை
உடைப்பதற்கு எந்தக் கற்களும் இல்லை
சந்தைக்குக் கொண்டு செல்ல எந்தச் சுமையும் இல்லை
நானிங்கு அமைதியாக உள்ளேன்

ஒருவன் தனது மனைவி குறித்து கவலையுற்றிருக்கிறான்
வீட்டின் தகவல்களை அவன் என்னிடம் கேட்கிறான்

நான் மரணித்தபோது
அவர்கள் எனது மிகச் சிறந்த மேலங்கியைக் கைப்பற்றிக் கொண்டனர்
எனக்குக் குளிராக இருக்கிறது
குளிர்காலம் முன்னால் வருகிறது

பின்னர் அவர்கள் ஒன்றாகக் கதைத்தனர்

3.
"நாம் ஒரு குவளையிலிருந்து நீரருந்துகிறோம்
மாலைவேளைகளில் ஒன்றாக உணவு உண்கிறோம்
எமது அன்பிற்குரியவர் மீது யாருடைய நேசமோ இருக்கிறது
யாருக்கோ எமது தாய்மாரினால் சீராட்டி வளர்க்கப்படத் தேவையாக இருக்கிறது"

எமது படகுத் துறைகளுக்கு அவர்கள் கண்டபடி வந்து செல்கின்றனர்
ட்ராம் வண்டிகளில் எமக்கிடையே அவர்கள் நுழைகின்றனர்
அவர்கள் நம்மை விட்டு ஒருபோதும் செல்வதில்லையெனத் தெரிகிறது
மீண்டுமொரு நீண்ட காலம் வாழும் தேவை அவர்களுக்கிருக்கிறது

- ஒக்தே ரிஃபாத் (துருக்கிக் கவிதை)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

A. Thiagarajanமராத்திய மொழியில் ஹைக்கூ (2)


திருமதி சிரிஷ் பை அவர்களை அவரது சிவாஜி பார்க் இல்லத்தில் ஹைஜின் பூஜா மலுஷ்டே அவர்களுடன் ஒரு மாலைப் பொழுதில் சந்தித்தேன். 

பூஜாமலுஷ்டே விற்கு நன்றி - இந்த சந்திப்பிற்கும் , உரையாடலில் பல இடங்களில் பை அவர்களுக்காக  இக்விவலேன்ட் ஆங்கில வார்த்தைகளை உடனுக்கு உடன் எனக்குச் சொல்லியும் உதவியதற்கு. 

ஹைக்கூ என்பது கவிதை அல்ல ; அது ஒரு கவித்துவமான ஆச்சர்யப் படல் என்று ஆரம்பித்தார் சிரிஷ் பை. 
மூன்றுவரிப் பாடல்கள் எல்லாம் ஹைக்கூ ஆகி விட முடியாது. 
ஹைக்கூ ஒரு சிந்தனைத் துளியோ அல்லது ஒரு உணர்வு மட்டுமோ அல்ல.

ஆரம்பத்தில் இயற்கை பற்றி மட்டுமே எழுதி வந்தார். அவர் எழுத ஆரம்பித்த காலத்தில் ஹைக்கூ மராத்திய மொழியில் அறிமுகப்படாது இருந்தது. ஹைக்கூ வை காய்கூஸ் ( மராத்திய மொழியில் எதற்காக என்று பொருள் வரும் ஏளனத்தில் ) என்றும்,  இ ஸ் ஸா  என்ற மாபெரும் ஜப்பானிய ஹைஜீன் அவர்களை குஸ்ஸா ( கோபம் என்ற பொருளில்) என்றும் கேலி செய்து சந்தோஷப் பட்ட பெரிய மராத்திய கவிகளும் எழுத்தாளர்களும் சிரிஷ் பை அவர்களையும் என்ன எழுதுகிறாய் என்று ஏளனமாகக் கேட்டதுண்டு என்று நினைவு கூர்ந்தார் சிரிஷ் பை.

சிரிஷ் பை ஒரு பெரிய பெயர் பெற்ற குடும்பத்தில் பிறந்தவர். பத்திரிகை ஆசிரியாராக வெகு காலம் பணி ஆற்றியவர். இவரது தந்தை ஒரு பெரிய பொதுநலவாதியாகவும், பத்திரிகையாளராகவும், பேச்சாளராகவும்,  கவியாகவும்,   மிகவும்  மதிக்கப்பட்ட பிரபலமாகவும் இருந்தார். ஜனாதிபதி பரிசு பெற்ற நீண்ட நாள் ஓடி பெயர் பெற்ற  ஷ்யாம்சி ஆச்சி என்ற படம் சிரிஷ் பையின் தந்தையார் தயாரித்ததே.

தந்தையின் வழி எழுத்துலகில் வந்த சிரிஷ் பை தனக்கு ஹைக்கூ மூலம் பெயரும் புகழும் வந்த போது
தந்தை இல்லாததை வருத்தத்துடன் நினைவு கூர்ந்தார்.

மற்ற கவிதைகள் எழுதுவதை தற்போது முற்றிலும் நிறுத்தி விட்டதாகவும் ஹைக்கூ மட்டுமே எழுதுவதாகவும் சொன்னார். 

ஜன்னலின் கதவில் அமர்ந்து கா கா என்று கரையும் அந்த சொற்களிலும் சோகம் இருப்பதை ஹைக்கூ காட்ட முடியும்.

ஒருவர் பூக்களை அவ்வளவு வேகமாகப் பறிக்கிறார் - அந்த வேகத்தில் ( வையலன்சில்) , பூக்களுடன் சில மொட்டுகளும் பறிக்கப் பட்டன. தற்போது நடக்கும் சிறு பெண்களின் கற்பழிப்பு தான் நினைவிற்கு வருகிறது. இதுவே ஹைக்கூ அல்லாமல் ஒரு கவிதையானால், இந்த விஷயத்தை வெகு ஓபனாகவே சொல்லியிருக்க முடியும் - என்கிறார் சிரிஷ் பை.

விஜய் டெண்டுல்கர் என்ற ஒரு பெரும் எழுத்தாளர் ஜப்பானிய ஹைக்கூ மொழிபெயர்ப்பு புத்தகம் ஒன்றை தனக்கு அன்பளித்ததே தனது ஹைக்கூ பயணத்தின் ஆரம்பமாக ஆனது. " அதை படித்து படித்து அதில் ஒரு பேரானந்தம் கண்டாதாகக் கூறுகிறார் பை. தானும் எழுத ஆசைப் பட்டு எழுத ஆரம்பித்தார். ஆரம்பத்தில் தான் எழுதியது எதுவும் ஹைகூவாகவே இல்லை என்று தனக்கே தெரிந்தது. கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பிறகு ஒரு நாள் தனியாக தோட்டத்தில் ஹைக்கூ எழுத வரவில்லையே என்று வருத்தத்தில் இருந்த போது, திடீரென அவரது முதல் ஹைக்கூ பிறந்தது என்கிறார் பை. மேலே சொன்ன காக்கை பற்றியதுவே அது. 

அதன் பின்னர் ஹைக்கூ தானாகவே சரளமாகவே வந்தது என்கிறார். சுபாவமாகவே எந்த ஒரு அதீத உழைப்பு, முயற்சி இன்றி வந்தது ஹைகூக்கள். 

ஹைக்கூ என்பது கஷ்டப்பட்டு "கம்போஸ்" செய்யப் படுவது இல்லை. சொல்லாட்சி மிகவும் முக்கியமானது. எந்த சொற்களை எவ்வாறு எங்கு பிரயோகம் செய்கிறோம் என்பது ஒரு ஹைகூவை ஆக்கவோ அழிக்கவோ கூடும். எவ்வாறு முடிப்பது என்பதும் ஹைகூவில் க்ரிடிகள் ஆனா விஷயம்.

ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்கள், பல விருதுகள், மராத்திய மாநிலத்தின் எல்லா இடங்களில் இருந்தும் ஹைக்கூ சொல்லவும், அது பற்றி பேசவும் முடிவில்லா அழைப்புகள். 

83 வயதை எட்டிய சிரிஷ் பை வெளியில் அதிகம் செல்வதில்லை; ஹைக்கூ மட்டுமே எழுதிகிறார்.

ஹைக்கூ எழுத விரும்பும் ஆர்வலர்கட்கு அவர் சொல்வது-

ஜப்பானிய ஹைக்கூ நிறைய படியுங்கள்- ஸ்டடி செய்யுங்கள்.
மீண்டும் மீண்டும் படியுங்கள்

சாதாரண கவிதைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று உணருங்கள்.
இது இல்லாமல் ஹைக்கூ என்பது என்ன என்று தெரிந்து கொள்ளாமலே போய்விடுவீர்கள்.வார்த்தைப் பிரயோகங்களை கவனியுங்கள். எழுத ஆரம்பியுங்கள்.அனாவசியமாக கூடுதலாக ஒரு வார்த்தை இல்லாமல் எழுதுங்கள். மீண்டும் எழுதுங்கள். எழுதிக்கொண்டே இருங்கள்.

இதோ சிரிஷ் பை எழுதிய  சில ஹைக்கூ - 

மாலை சூரியன் மஞ்சளில் தொலைந்த மஞ்சள் பட்டாம் பூச்சி, நான் குனிந்த பார்த்த பொது, நிழலில் தென்பட்டது. 

வேகமாகச் செல்லும் கார் ஒன்றின் கண்ணாடியில் ( விண்ட்ஸ் க்ரீனில் ) ஒரு சிறிய பட்டாம்பூச்சி  மெதுவாக உள்வந்து அமைதியாக உட்கார்ந்தது. 
 
யாருமில்லா இருள்
மழைத்துளிகள் நில்லாது
இலைகளில் தட்டிக்கொண்டிருக்கின்றன
 
ஓ! எவ்வளவு பனிமூட்டம் 
அவ்வளவு ஆழம் 
பள்ளத்தாக்கு அளவு 
 
காற்று கூட்டிச் செல்கிறது
காய்ந்த இலைகளையும் தூசியையும்  
உடன் ஒரு பட்டாம் பூச்சியையும்
 
லேசான தூறல்
கழுவப்படாமலே
இலை மேல் தூசி
 
தலை மேலே பட்டாம்பூச்சியின் சப்தம் அறியாமலே
இந்த ஆண் பூனை
சூரிய ஒளியில் சோம்பேறித்தனமாக படுத்துக் கொண்டிருக்கிறது.
 
( this is a tomcat ie a male domestic cat. Tomcat as a verb means pursue women promiscuously for sexual gratification.)
 
அடுத்து பூஜா மலுஷ்டே ....

இலைகளற்று பூக்களற்று....

கிணற்றடியில்
சலவைக்கல்லில் குமித்துக் கிடக்கும்
ஈரத் துணியில்

மடிப்புக் கலையாமல் காத்திருக்கிறது
எனது தனிமை

உலர்த்தும் கணந்தோறும் நெடுகப் படர்கிறது
வான் நோக்கி மௌனக் கொடி
இலைகளற்று, பூக்களற்று

நட்சத்திரங்களைத்
தொட்டுவிடும் வேட்கையோடு


     இளங்கோ

12.6.12

இருப்பு


 

ஓவியக் கண்காட்சிக் கூடத்தின் 
ஒரு சுவரில்
பிள்ளையார் விதம் விதமான
கோணங்களில் அருள் பாலித்தார்.

தன்னலமற்று உலகை இரட்சிப்பதாகப்
பசுவைக் கொண்டாடும் படங்களால்
நிரம்பியிருந்தன இன்னொரு சுவர்.

போட்டிகள் நிறைந்த உலகின்
ஆக்ரோஷங்களை வெளிப்படுத்தின
சேவல் சண்டைக் காட்சிகள்.

கொல்கத்தா வீதிக் காட்சிகளால்
சோகம் அப்பி நின்றிருந்தது
சன்னல்கள் அற்ற இடதுசுவர்

உயிரைக் குழைத்திழைத்த 
ஓவியங்களைப் பிரியும் துயர்
இலாபக் கணக்குகளால்
ஆற்றப் பட்டன

கையில் சுமந்திருந்த மோதகத்தைச்
சத்தமின்றி பிள்ளையாரின் 
காலடித்தட்டில் வைத்து விட்டு
எதிர்சுவற்றுச் சந்தைக் காட்சியில் 
சாலையில் உருண்டு கிடந்த 
தக்காளியைச் சுவைக்கச் சென்றிருந்த 
மூஞ்சுறு
சேவல்களுக்கு அஞ்சி 
உத்திரத்தின் வழியே
திரும்பிக் கொண்டிருக்கையில்
வானத்துச் சூரியன் 
மேற்கே சரிந்துவிட..,
விற்காத படங்களுடன்
வெளியேறினர் ஓவியர்.

இருண்ட காலிக் கூடத்தின் 
சுவர்களெங்கும் ஓடிஓடித்
தேடிக் கொண்டேயிருந்தது 
பிள்ளையாரை மூஞ்சுறு.
***

ராமலக்ஷ்மி

11.6.12

பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில்


வானக் கரிய வாவியில் மின்னி நீந்திடும்
சிலவேளை
வீழ்வதாய்ப் போக்குக் காட்டும்
ஊணுண்ணிப் பட்சியென மீன்கொத்தி நிலா
மேற்கிலிருந்து கிழக்காய் நகர்ந்து நகர்ந்து கொத்திட
காலையில் செவ்வாகாயம் வெறிச்சோடிக் கிடக்கும்

இடித்திடித்துக் கொட்டிய
நேற்றின் இரவை நனைத்த மழை
உனதும் எனதுமான ஏகாந்தப் பொழுதொன்றை
நினைவுறுத்திக் கொண்டேயிருந்ததில்
அச்சமுற்றிருந்தேன் நான்

மின்சாரம் தடைப்பட்டெங்கும்
அந்தகாரம் மேவிய பொழுதில் கண்மூடி
விழித் திரைக்குள் உனையிறக்கியிருந்தேன்
உதறப்பட்ட காலத்தின் துளிகளோடு
உன் மீதான எனது சினங்களும்
ஆற்றாமைகளும் வெறுப்பும்
விலகியோடிப் போயிருக்கவேண்டும்
நினைத்துக் கொண்டேயிருந்தேன் உன்னையே

அப் பாடலைப் பாடியபடி
அச் செல்லப் பெயரால் எனை விளித்தபடி
பிரகாசத்தையள்ளி வீசுமுன் குரலையும் கேட்டேன்
அங்குமிங்குமசையும் ஊஞ்சல்
அந்தரத்தில் சரணடையும் ஆவல்
அக் கணத்து மனநிலையை என்சொல்வேன்

அகழ்வுகளுக்குள் தேடினால் அர்த்தமற்ற நம்
சச்சரவுகளின் நூலாம்படை திரண்டுகிடக்கும்
எமக்கெதிரான
எல்லாப் புழுதிகளுமெழும்பிக் கட்டிய மதிலதன்
அத்திவாரத்தில் இருவரில்
எவரது அன்பைப் போட்டு மூடினோம்

இனித் தவறியும் ஒருவரையொருவர்
நினைத்தலோ பார்த்தலோ கதைத்தலோ
ஆகாதெனும் விதியை நிறுவிச் சலனங்களை
விழுங்கிச் செறிக்க முடியாது
விழி பிதுங்கி நிற்கும் நம் துயர் பொழுதுகள்
யுகங்களாகத் தொடர
வேண்டியிருந்தோமா

பிரிவின் அன்றை
இருவரும் எப்படியோ வாழ்ந்து கடந்தோம்
சர்வமும் நிகழ்ந்து முடிந்தது பூமியில் அன்றும்
பின்வாசல் சமதரைப் புல்வெளி
நிலவின் பால் குடித்தரும்பிய
பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயிலில்
இரவின் சாயல் துளியேதுமில்ல

எம்.ரிஷான் ஷெரீப்

நாம் பறவை மரம்கிளைஅதிர
எழும்பிப்பறக்கின்றது பறவை

கிளையிலிருந்து
உதிர்கின்றது ஒரு இலை,
அதன்சிறகிலிருந்து
உதிர்கின்றது ஒரு இறகு

இலை
நமது
இருப்பிற்கான ரசீது
இறகு
நாம்
பறப்பதற்கான பயணச்சீட்டு

ரவிஉதயன்

சுத்தம் சோறு போடும்

மதி


வீட்டைச் சுத்தம் பண்ணி நாளாச்சு

குப்பைக்குள் கொஞ்சூண்டு
வீடு மீதமிருந்தது !

ஒரு வெள்ளிக்கிழமை
ரெண்டாம் சாமத்தில்
சடாரெனச் சுதாரித்துக் கொண்டு
மூக்கின் மேல் துணியைக் கட்டினோம்.

வீடு அதிர
விளக்குமாறு அதிர
ஆவேசமாய் என்றாவது
வீட்டைச் சுத்தம் செய்து
பழக்கம் உண்டா உங்களுக்கு ?

காலியான அரிசி மூடைச் சாக்கொன்றில்
வேண்டாத சாமானனைத்தும்
விறுவிறுவென அள்ளிப்போட்டபடி
..................

உப்பு புளி மிளகு
நவதானியச் சத்து மாவு
மூன்று மாதமாய்ப் பிரிக்காத
ஒரு கிலோ பருப்பு பாக்கெட்
கண்ணாடி பாட்டில்கள்
காலி பாட்டில்கள்
கத்தை கத்தையாய்
காகிதங்கள்
சாவி தொலைத்த பூட்டுகள்
பூட்டு தெரியாத சாவிகள்
கொஞ்சம் துணிமணி
கிழிந்த செருப்புகள்
நாலே நாலு பேர் இருந்த வீட்டில்
பதினைந்து டூத் பிரஷ்கள் !
...............

ஏழெட்டு சாக்குகளில் குப்பைச் சாமான்.
வாசலில் வைத்து விட்டு வந்து
பெருக்கி கழுவி வியர்த்து குளித்து
முடிந்ததும் பார்த்தால்
வீட்டின் விசாலம்
முதல் முறை உறைத்தது.

சுத்தம் சோறு போடும்.
..................................................

காலையில் சோம்பல் முறித்துக்
கதவைத் திறந்து மாடத்தில் நிற்கிறேன்.
குப்பை அள்ளும் வண்டிக்காரி
என் வீட்டின் பிரிக்காத
பருப்பு பாக்கெட்டை
பத்திரப்படுத்திக் கொண்டிருந்தாள்.

சுத்தம் சோறு போடும்.

10.6.12

கரடி


பொம்மைகளை வெறுக்கும்
பெண்ணொருத்தி பாண்டிபஜாரில்,
தன் தோழிக்குப் பரிசளிக்க
பெரிய கரடி பொம்மை வாங்கினாள்.
அதன் தலையைப் பிடித்துத்
தூக்கிக் கொண்டு நடந்தவள்
வாகாக இல்லாததால்
வேறு வழியின்றி
அதைக் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டாள்.
ரங்கநாதன் தெருவைக் கடக்கையில்
கரடி அவள் தோள் மேல் சாய்ந்து கொண்டது.
மின்வண்டியில்
பக்கத்தில் இடமிருந்தும்
தன் மேலேயே வைத்துக்கொண்டாள்.
குளிர்காற்று வீசியபோது
கரடி அவளைக் கட்டிக்கொண்டது.
"டேய் விடுடா என்னை"
என்று அதட்டினாள்.

 முகுந்த் நாகராஜன்.

THREE POEMS

யாத்ரிகன்

இக்கரைக்கு அக்கரை பச்சை
எப்ப பார்த்தாலும்
எதிர் வீட்டு கனவானிடம்
என்னை ஒப்பிட்டுப் பார்த்தால்…
கதவைத் திறந்ததும்
இருட்டு கடை அல்வாவை
எதிர்பார்த்து
கைகளைத் துழாவும்
குழந்தைகளின் கண்கள்
மனோவேகத்திற்கு
உடல் ஒத்துழைக்கவில்லை
நீந்தத் தெரியாதவன்
கடலில் மீன் பிடிக்க போன
கதை
கவரிங் நகை வாங்கக்கூட
யோசிக்க வேண்டியிருக்கிறது
இதில் தங்கத்திற்கு
எங்கே செல்வது
படியளக்கிறவன்
பரிதாபம் பார்ப்பதால்
மூன்று வேளையும்
வயிற்றை நிரப்ப முடிகிறது
பிள்ளைங்க என்ன கிளாஸ்
படிக்கிறாங்க என்று கேட்டால்
யோசிக்க வேண்டியிருக்கிறது
சர்க்கஸ் கலைஞன்
சிங்கத்தின் வாயில்
தன் தலையை
கொடுப்பது போல்
வாழ்க்கை எங்களை
வேட்டையாடத் துடிக்கிறது
நோஞ்சான்
நாய் துரத்தினால்
எப்படி இவ்வளவு வேகமாக
ஓடுகிறான் என வியந்ததுண்டு
ஓடிக்களைத்து ஓரிடத்தில்
நின்று பார்த்தால் தான்
தெரிகிறது
துரத்தியது நாயல்ல நிழலென்று
பிச்சைக்காரர்களை
பார்க்கும் போதெல்லாம்
நான் திருவோடு ஏந்துவது
போலுள்ளது.

வடு

படுக்கையிலிருந்து எழுந்திருக்க
மனம் வரவில்லை
வங்கிக் கணக்கை வைத்து
எடைபோடும்
மனிதர்கள் மத்தியில்
வாழ வேண்டியிருக்கிறது
தோணி முன்னேறிச் செல்ல
துடுப்பை வலிக்க வேண்டுமென
யாருக்குத்தான் தெரியாது
எல்லாக் கதவுகளையும்
தட்டிப் பார்த்துவிட்டேன்
திறக்காது என்று
எனக்குத் தெரியாது
வக்கத்துப் போனவனுக்கு
வாழ தகுதியில்லை
என்று சமூகம்
கைகொட்டிச் சிரிக்கிறது
அமுதத்தையே சாப்பிட
கொடுத்தாலும்
நாய் நரகலைத் தான்
தின்னும்
எது எப்படியோ
இன்னொரு காயப்படுத்த
காத்திருப்பவனை நோக்கி
இந்தக் காலையில்
கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.

விகாரம்

இந்த பாதை
எங்கு போய் முடிகிறது
விதி சகதியில் அமிழ்த்தி
வெளியே தூக்கி எறிந்த போது
பேரண்ட சக்தி
தலைவிரி கோலமாய்
தாண்டவம் ஆடியது
மனிதர்கள்
அருவருப்பு அடையும்
போது தான் தெரிந்தது
எனது கோர ரூபமும்
விகாரமான
என் ஜடாமுடியும்
காலணி இல்லாமல்
கத்திரி வெயிலில்
நடந்தாலும்
பாதங்கள் சூடு பொறுத்தது
ஆனால் அன்றைக்கு
மனம்
சொல் பொறுக்கவில்லை
ஏற்கனவே இறந்தவன்
நடந்து செல்கிறேன்
ஆழ்ந்த உறக்கத்தில் லயிப்பவன்
பாடையில் போகிறான்
வழிநெடுகிலும் எத்தனை
கோயில்கள்
அடியவர்களுக்கு
சிவனாக மட்டுமே
இருந்திருக்கலாம்
சைவ நெறியை
மீறாமல் நடந்திருக்கலாம்
பிட்டுக்கு மண்
சுமந்தவனிடமா
பிச்சை கேட்பது
பித்தனிடமா
சகலத்தையும் ஒப்படைத்து
சரணடைவது.


ப.மதியழகன்

செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்

நினைவு தினம்

அன்றைக்கென்று
அலுவல் நிமித்தம்
அடுத்த நாடொன்றுக்கு
ஆகாயப் பயணம்.
அலை அலையாய்
அம்மாவின் நினைவுகளோடு.
அசைவ உணவை
அண்டாமல் இருந்ததொன்றே
அயலக வாழ்வில்
அடியேனால் முடிந்தது
அம்மாவின் இந்த முதலாம்
ஆண்டு நினைவு நாளில்.

0

அப்படியே இருப்பதுதான்

என்றைக்காவது
பார்த்தால்
கேட்பதற்கென்று
சில கேள்விகள்
என் வசம்.
என்றைக்காவது
பார்த்தால்
கேட்கப்படாமல்
அவைகள்
அப்படியே
இருப்பதுதான்
அழகு.

o
எப்போதும் போல
எப்போதும் போல்தான்
இதையும் சொன்னேன்.

எப்போதையும் போலின்றி
கேட்கின்ற வகையில்
நீ இருந்ததுதான்
இன்றைய சிறப்பம்சம்.

9.6.12

Two poems


கவி


சட்டென உடைந்து விடுகிறது
ஏதோவொரு காதல்
ஏதோவொரு நட்பு
ஏதோவொரு ரகசியம்
ஏதோவொரு இறப்பு
ஏதோ சில
சிலவாகிய பல

எவ்வித சமரசமும் இல்லாமல்
கிளையிலிருந்து வீழும் இலை போல்
வானிலிருந்து நழுவும் நட்சத்திரம் போல்
உயர எறிந்த பந்து கீழே விழுவது போல்
காற்றடைந்த குமிழி போல்
இன்னும் போல பல

புதிதாய் முளைவிடும் இலை
காலம் வெளித்தள்ளிய நட்சத்திரம்
பிடித்து இழுத்த விசையுறு பந்து
வெற்றிடம் உருவாக்கும் குமிழ்
மற்றுமொரு காதல்
வெறுப்புமிழ்ந்த நட்பு
விவரித்துவிட வேண்டிய ரகசியம்
வேறொருவருக்கான உயிர்

ஏதேனும் தேவைப்படுகிறது தான்
நிரப்பி விடவும், விட்டு விடுதலையாகவும்..
வீடு


சதுரங்கள் மடித்த
முக்கோணங்களாகவோ
வட்டங்களாகவோ
செவ்வகவமாகவோ தான்
எப்போதும் இருக்கின்றன
வீடுகள்


வெறுப்புக்களும்,
நிராசைகளும்,
சலிப்புக்களும்
புகைந்து வெளியேறிக்கொண்டே
இருக்கின்றன .

தங்கசங்கிலிக்குள்
புதைந்த சம்பிரதாயங்களின்
ரகசியம் அவிழ்க்கப்படுகின்றன


கடமைகள்,பொறுப்புக்கள்
வளர்ந்து அச்செடுக்கப்படுகின்றன
அசல் பிரதிகளை போல

எப்போதாவது தான்

பசியாற வைக்கும்
உணர்வுகள் சங்கமிக்கும்
அன்பை மட்டுமே
போதிக்கும்
உள்ளாழ்ந்து பக்தி
செலுத்தும் இடமாக
இருக்கின்றன வீடுகள்.

8.6.12

நான், பிரமிள், விசிறி சாமியார்.............17

அழகியசிங்கர்


ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தேவைப்படுவது. உணவு, உடை, இருப்பிடம்.  இந்த மூன்றுமே பிரமிளுக்குச் சிக்கலாக இருப்பதாகவே எனக்குப்படும்.  இருப்பிடம் என்பதை எடுத்துக்கொண்டால், வேறு வழியில்லாமல் இருக்க வேண்டுமென்று இருப்பதாக எனக்குப்படும். 

க்ரியா அலுவலகத்திற்கு எதிரில் உள்ள தெருவில் உள்ள இடத்தில் ஒரு அறையில் அவர் ரொம்ப வருடங்கள் குடியிருந்தார்.  அது வெறும் அறை.  பொது எதிரில் உள்ள ஒரு அறையில் அவர் ரொம்ப வருடங்கள் குடியிருந்தார்.  அது வெறும் அறை.  பொது கழிவறை, குளியலறை. அந்த இடத்திற்கான வாடகையைக்கூட யாரோ சில நண்பர்கள் அவருக்கு உதவினார்கள். 

பின் அங்கிருந்து திருவான்மியூரில் உள்ள ஒரு இடத்திற்குச் சென்றார்.  அங்கிருந்து அவர் அயோத்தியா குப்பம் என்ற இடத்திற்கு வந்தார்.  உள்ளே நுழையக்கூடிய அறை மட்டும்தான்.  பொதுவாக அயோத்தியா குப்பத்திலுள்ள எல்லோரும் பயன்படுத்தும்படி பொது கழிவறை.  போதுமான வசதிகள் இல்லாமல் எத்தனையோ ஏழை மக்கள் இப்படியெல்லாம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.  மயிலாடுதுறையில் நான் இருந்த இடத்திலுள்ள தெருவில் பாய் முடைபவர்கள், பாயெல்லாம் முடைந்து தெருவில்தான் படுத்துக்கொள்வார்கள்.  அவர்கள் இருப்பிடம் தெருதான்.

சைதாப்பேட்டையில் என் உறவினர் ஒருவர், காற்று சூரியவெளிச்சம் இல்லாத வீட்டில் குடியிருந்தது இப்போதுகூட ஞாபகம் வருகிறது.  அனல் கக்கும் இந்த வெயில் காலத்தில், உறுதியான மனம் படைத்தவர்கள்கூட பேதலித்துப்போக வேண்டிய சூழ்நிலைதான் ஏற்படும். 

பிரமிள் நுங்கம்பாக்கம் வந்தபோது, அவர் தங்கியிருந்த அறைக்குப் பக்கத்தில் பன்றிகளை வெட்டி விற்பனை செய்துகொண்டிருப்பார்கள்.  பன்றி அலறலுடன், அந்த இடத்தில் நாற்றம் குடலைப் புடுங்கும். பிரமிளைப் பார்க்க அவர் அறைக்குப் போகவே எனக்கு நடுக்கமாக இருக்கும். 

சரி, பிரமிள் என்னமாதிரியான உடை உடுத்திக்கொள்வார்.  எத்தனை எண்ணிக்கை உள்ள சட்டைகள் வைத்திருந்தார்.  எத்தனை பாண்ட் அவர் வைத்திருந்தார்.  அதெல்லாம் அவருடன் பழகும்போது நான் கவனித்ததே இல்லை.  அவருடன் விசிறி சாமியாரைப் பாரக்கச் சென்றபோது, அழுக்கான உடையுடன் விசிறி சாமியார் காட்சி அளித்தார்.  அழுக்கான உடையில் இருந்தாலும் அவர் முகத்தில் காணப்படும் தேஜஸ் ஆச்சரியமாக இருக்கும். 

தெருவில் நடமாடும் பிச்சைக்காரர்கள், பைத்தியக்காரர்கள் அழுக்கான உடையில் பார்க்கும்போது, நாம் ஏனோ முகம் சுளிக்காமல் இருப்பதில்லை.  வசதியாக இருந்தும், பலர் உடைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. 

முழுமையாக மூன்று வேளை சாப்பாடு அவருக்குக் கிடைத்ததில்லை.  இருந்தும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பெரிய விஷயங்களைப் பற்றி அவர் பேசியிருக்கிறார்.  ஒரு நல்ல புத்தகம் படித்தாலும் சரி, ஒரு நல்ல சினிமா பார்த்தாலும் அதைப் பற்றியெல்லாம் சொல்லாமல் இருக்க மாட்டார்.  இதோ அவரைப் பற்றி இன்னும் என்ன சொல்ல வேண்டும் என்பதை சொல்ல முயற்சி   செய்கிறேன்.
                                                            

                                                                                                                         (இன்னும் வளரும்)

5.6.12

நான், பிரமிள், விசிறி சாமியார்.............16

அழகியசிங்கர்


இந்தத் தொடரை எழுதவே தோன்றாமல் நிறுத்திவிட்டேன்.  பிரமிளைப் பற்றி இன்னும் என்ன எழுதுவது என்பதைப் பற்றி யோசித்துப் பார்க்கிறேன். பிரமிளின் கடைசித் தினங்களைப்பற்றி எழுத எனக்கு விருப்பமில்லை.  நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது, பாரதியார் பற்றி புத்தகம் தூரன் எழுதியதைப் படித்துக்கொண்டிருப்பேன்.  பாரதியாரின் மரணம் எனக்குப் படித்தபிறகு பெரிய துக்கமாக இருக்கும்.  அவர் வாழ்ந்த இடத்தையும், பார்த்தசாரதிக்கோயிலையும் இப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். 

நோபல் பரிசு பெற பாரதியார் தாகூருடன் போட்டிப்போடுகிறார்.  அந்தத் திறமை பாரதியாருக்கு உண்டு.  ஆனால் பாரதியார் வாழ்ந்த வாழ்க்கை மிகக் கொடூரமானது.  அதிக ஆயுளுடன் அவர் இருந்திருந்தால், அவர் நோபல் பரிசுகூட வாங்கியிருப்பார். 

பிரமிளை எடுத்துக்கொள்ளுங்கள்.  56வயது சாகக்கூடிய வயதே இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது.  வறுமை அவரைப் பற்றிக்கொண்டு விடவில்லை என்பது உண்மை.  ஆனால் அவரிடம் எந்தக் கெட்டப் பழக்கமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆரம்ப காலத்தில் அவர் கஞ்சா புகைப்பார் என்று எனக்கு சில நண்பர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.  அவர் குடிப்பாரா என்பதுகூட எனக்குத் தெரியாது.  என் எதிரில் அவர் குடித்தது இல்லை.

அவருக்கு எப்போதும் இருப்பது.  பசி.  பசி.  அந்தப் பசி ஒரு ஏழையின் பசி.  தீவிரமான பசி.  அவர் சாப்பிடும்போது ரசித்து சாப்பிடுவார். சாப்பிட்டப்பிறகு சந்தோஷத்தை வெளிப்படுத்துவார்.  ஒரு சாப்பபாடு சாப்பிட்டதற்கே தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மனிதர் பிரமிள்.  எனக்கு இன்னும்கூட அவருக்கு சாப்பாடு வாங்கித் தரவேண்டும் என்று தோன்றும். 

நான் இன்னும் குறிப்பிட வேண்டியது அவருடைய நடை.  எந்த இடத்திற்கும் அவர் நடந்தே சென்றுவிடுவார்.  வேகமாக நடப்பார்.  எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.  அவருக்கு சர்க்கரை நோயும், ரத்த அழுத்த நோயும் வர வாய்ப்பே இல்லை. 

ஆனால் வயிற்றில் வந்துவிட்டது.  மஞ்சள்காமாலை நோய் அவரை வாட்டி எடுத்துவிட்டது.  இதுகூட அவர் கண்ட இடங்களில் கண்ட நேரத்தில் சாப்பிடுவதால் தொற்றிக்கொண்டிருக்கும் என்றே நினைக்கிறேன்.  ஆரோக்கியமற்ற இடங்களில்தான் அவர் குடியிருந்தார். இன்னும்கூட எத்தனையோ பேர்கள் இப்படியெல்லாம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.  பிரமிள் உழைக்க விரும்பவில்லை.  என் நண்பர் ஒருவர் அவரைப் பற்றி குறிப்பிடும்போது, பிரமிளுக்கு ஒரு இடம் கொடுத்து, சாப்பிட வசதியும் செய்து கொடுத்தால், அவர் இன்னும் பல சாதனைகளைப் புரிந்திருப்பார் என்று. ஆனால் அவர் குறைந்த அளவுகூட உழைக்கத் தயாராய் இல்லை. 

நான் பலபேர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.  வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பவர் ஒரு டூவீலருடன் வந்து உழைத்துவிட்டு பணம் சம்பாதிக்கிறார்கள்.  கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்பவர்கள், டூவீலரில் எல்லா இடங்களுக்கும் சென்று பணம் சம்பாதிக்கிறார்கள்.  தினசரி தாள்களைப் போடுபவர்கள் கூட ஒரு வண்டியைப் பயன்படுத்தி வாழக்கைக்குத் தேவையானதைச் சம்பாதித்து சந்தோஷமாக வாழ்கிறார்கள். 

ஆனால் பிரமிள் சம்பாதிக்கவே இல்லை. மிக நெருங்கிய நண்பர்கள் அவருக்கு பலவிதங்களில் உதவி செய்தார்கள்.  டேவிட் சந்திரசேகர் என்ற நண்பர்.  சிண்டிக்கேட் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்.  பிரமிளுக்கு உதவி செய்திருக்கிறார்.  அவர் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டார்.  அவர் இறந்தது இருக்கட்டும்.  பிரமிள் என்ன சொல்வாரென்றால், அவர் இதுவரை இருந்ததே எனக்கு உதவி செய்வதற்காகத்தான் என்று.  பிரமிள் இப்படிச் சொல்வதை நான் ரசிக்க மாட்டேன்.

ராமானுஜம் என்ற நண்பர் பிரமிள் பணம் கேட்காமலயே அவர் பாக்கெட்டில் பணம் வைப்பார்.  அந்த ராமானுஜத்தை ஓவராக கஞ்சா அடிப்பதிலிருந்து காப்பாற்றி இருக்கிறேன் என்று பிரமிள் என்னிடம் கூறுவார்.  ஜே கிருஷ்ணமூர்த்திதான் ராமானுஜத்தைக் காப்பாற்றியதாகவும் மேலும் பிரமிள் குறிப்பிடுவார்.  வங்கியில் சம்பாதித்துக்கொண்டிருந்த ராமானுஜம் இருக்கிற வேலையும் விட்டுவிட்டு எல்லாரிடம் பணம் கேட்டு பிச்சை எடுக்க ஆரம்பித்துவிட்டார்.  என்ன சோகம் என்று எனக்குத் தோன்றும்.

                                                                                                                              (இன்னும் வரும்)
a

பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு


....
அழகியசிங்கர்

முன்கதைச் சுருக்கம்

அழகியசிங்கரின் கதாபாத்திரமான பத்மநாபன் 50வது வயதில் பதவி உயர்வு பெற்று கும்பகோணம் செல்வதை அழகியசிங்கரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் பத்மநாபனை விட்டுப் பிரிவது என்பதை அழகியசிங்கரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

4.

கும்பகோணத்தில் வட்டார மேலாளரை பத்மநாபனுக்குத் தெரியும்.  நேரிடையாக அவரிடம் பேசினார்.  ''சார், நான் கும்பகோணத்திற்கு வருகிறேன்.  மயிலாடுதுறையில் என் உறவினர்கள் இருக்கிறார்கள்.  அஙகுள்ள பிராஞ்சில் எனக்கு போஸ்டிங் தரமுடியுமா?''

''அது முடியாது.  எதாவது நல்ல பிராஞ்சா பாத்துப்போடறேன்.''

''அப்படி இல்லாவிட்டால், மயிலாடுதுறையிலிருந்து போகும்படி எதாவது பிராஞ்ச் தர முடியுமா?''

''பார்க்கிறேன்.''

அவர் பார்க்கிறேன் என்று சொன்னது.  பந்தநல்லூர் என்ற கிளையை.  மயிலாடுதுறை கும்பகோணம் இடையில் உள்ள இடம் இந்த பந்தநல்லூர்.  மயிலாடுதுறையிலிருந்து 28கிலோமீட்டர்.  கும்பகோணத்திலிருந்து 30 கிலோமீட்டர்.

என்னடா இது ஏதோ ஒரு கிராமத்தில் போய் மாட்டிக்கொள்கிறோம் என்று தோன்றியது.  கிராமத்திற்குப் போய் பணிபுரியும்   வாய்ப்பு எனக்கு இருந்ததில்லை.  அதுவும் 50வயதிற்குப் பிறகு. மடமடவென்று சேரும்படி உத்தரவு வந்தது. 

நான் டாக்டர் செல்வாவைப் போய்ப் பார்த்தேன்.  ''என்ன டாக்டர், பதவி உயர்வு என்ற பெயரில் பந்தநல்லூர் போகலாமா?'' என்று கேட்டேன். 

''தாராளமாகப் போகலாம்..''

''நான் பிராப்பர்டிஸ் வச்சிருக்கிறேனே?''

''எல்லோருக்கும் அதெல்லாம் உண்டு.  மருந்து சாப்பிட்டி சரி பண்ணலாம்...'' என்றார்.  பின் அவர் எழுதிக்கொடுத்த மருந்துகளை வாங்கிக்கொண்டேன்.

இந்த இடத்தில் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.  உடம்பு நினைத்து நான் பயப்படுவேன்.  அபிராமன் குறித்து நான் சொன்ன நிகழ்ச்சியைத்தான் அழகியசிங்கர் ஒரு கதையாக எழுதியிருந்தார்.  நேற்றிருந்தவன் என்பது அந்தக் கதையின் பெயர். 

முதல்நாள் என்னைப் பார்க்க வந்த அபிராமன், அடுத்தநாள் இறந்து கிடக்கிறான். இது என் 20 வயதில் நடந்த கதை.  அபிராமன் படித்தும் வேலை கிடைக்கவில்லை.  அவனுடைய இதயத்தில் ஒரு ஓட்டை.  அதைச் சரிசெய்ய அறுவைசச் சிகிச்சைச் செய்ய வேண்டும்.  பணம் தர யாரும் தயாராய் இல்லை.  அபிராமன் ஒரு சனிக்கிழமை கக்ககூஸில் மார்பில் ஏற்பட்ட எதிர்பாராத வலியுடன் இறந்து கிடந்தான்.  முதல் நாள் காலையில் என்னைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தான்.  அவனிடமிருந்து பேனா வாங்கிக்கொண்டேன்.  பேனா வியாபாரம் செய்வதாகச் சொன்னான்.  அவனுக்காக இரக்கப்பட்டு பேனா வாங்கிக்கொண்டேன்.  பாட்டி போட்டுக்கொடுத்த கசப்பான காப்பியைக் குடித்தான். என்னுடன் அலுவலகம் போகும் வழி வரை வந்துகொண்டிருந்தான்.  நானும் அவனும் தெரு முக்கில் உள்ள ஒரு இடத்தில் அமர்ந்துகொண்டு எப்போதும் பேசிக்கொண்டிருப்போம்.  அந்த இடம் வரை வெள்ளிக்கிழமை அவனைப் பார்த்தேன். 

சனிக்கிழமை அவன் வீட்டு வழியாக மாலை வந்துகொண்டிருந்தபோதுதான் தெரிந்தது அவன் இறந்தது.  வீடு முழுக்க தண்ணீரால் அலம்பி விட்டிருந்தார்கள்.  அவன் சாப்பிட வேண்டுமென்று நினைத்த காப்பி சாப்பிடாமல் கருத்த நிறத்தில் அப்படியே இருந்தது.  அன்று அவன் சடலத்தைக்கூட பார்க்கமுடியவில்லை என்ற வருத்தம் எனக்கு இருந்தது.

எனக்கு துக்கம் தாங்கமுடியவில்லை.  இதுதான் கதை. நிஜ நிகழ்ச்சி எப்படி பிரமையாக மாறி பயத்திற்குத் தாவி விடுகிறது என்பதுதான் கதை.  அழகியசிங்கர் அந்தக் கதையைச் சிறப்பாக எழுதியிருந்தார்.  வழக்கம்போல் ஒரு சிறுபத்திரிகையில்தான் அந்தக் கதை பிரசுரமானது. 

ழ 6வது இதழ்


பிப்ரவரி / மே 1979


 பலமுறை
 பஸ்ஸிலும் நடந்தும் சைக்கிளிலும்
 போகுமிடம் போகையில்
 இரண்டு பக்கமும் வயல்களைப் பார்த்துப்
 போனதுதான் இந்த ரோடு;
 சும்மா உலாவ வருகையில்

 இன்று தெரிந்தது

 வயலுக்கு நடுவேதான் ரோடு போகிறது.


 பிரதீபன்.

எதையாவது சொல்லட்டுமா.........72

அழகியசிங்கர்

நான் இன்னும் சீர்காழியிலிருந்து சென்னைக்கு வரவே இல்லை என்றே நினைக்கிறேன்.  நான் முன்பு பார்த்த சென்னை மாதிரி இது தெரியவில்லை.  மிகச் சாதாரணமாக நடக்கும் சாலையில் கூட கூட்டம் அதிகமாகத் தெரிகிறது. வண்டியை அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கம் கொண்டு வர முடியவில்லை.

போன மாதம் முழுவதும் என் புதல்வனின் திருமணத்தில் மூழ்கியிருந்தேன்.  முதலில் நான் என் பையனுக்கு திருமணம் செய்து வைக்கப்போகிறேனென்பதை நம்பவில்லை.

8 ஆண்டுகளுக்குமுன் என் பெண்ணிற்குத் திருமணம் செய்து முடித்திருந்தேன்.  வயது கூடிக்கொண்டே போகிறது.  என்னால் என்னை நம்பமுடியவில்லை.  காரணம் நான் வயதானவன் மாதிரி தோன்றவில்லை என்று நம்பிக்கொண்டிருந்தேன். என்னுடைய பல நண்பர்கள் தளர்ந்து போயிருந்தார்கள்.  திருமணத்திற்கு நான் பலரைக் கூப்பிடவே இல்லை.  காரணம் முகவரிகளைத் தொலைத்துவிட்டேன்.  கிட்டத்தட்ட 55 பேர்களுக்குமேல் பல எழுத்தாள நண்பர்களைப் கூப்பிட்டேன். இப்போது அப்படி இல்லை.  8 ஆண்டுகளுக்கு முன், நான் தலையை டை அடித்திருந்தேன்.  முதன் முறையாக அப்போது டை அடித்திருந்ததால் வினோதமாகக் காட்சி அளித்தேன்.

பெண் திருமணத்தின்போது தெரிந்த என் வினோதமான புகைப்படங்கள் என்னை நகைப்புடன் பார்த்து  சிரித்துக்கொண்டிருந்தன.  முன்பு பலரை நேரில் போய்ப் கூப்பிட்டேன்.  இப்போது முடியவில்லை

என் வயது 58.  59 வயதை முடிக்க உள்ளேன். ஆனால், 60 மாதிரி தெரிந்தேன். கழுத்தில் தெரிந்த சுருக்கங்களை மறைக்க முடியவில்லை.  இந்த முறை டை அடிக்கவில்லை  என் பல நண்பர்கள் வந்தார்கள்.  எல்லோரிடமும் போட்டோ  எடுத்துக்கொண்டேன்.  ஒவ்வொருவரும் அவரவர் பெண் அல்லது புதல்வன் திருமணம் செய்து கொடுத்ததைப் பற்றி சொன்னார்கள்.  ஒரு நண்பர் சொன்னார்.  உன் கடமை முடிந்துவிட்டது.  இனி நீ சுதந்திரமானவன்.  நான் சிரித்தேன்.  சுதந்திரமானவன் என்று எப்படி சொல்லமுடியும்? 

இன்னொரு நண்பர் அவர் பையனை அழைத்துக்கொண்டு வந்தார்.  எனக்கு அடையாளமே தெரியவில்லை.  வேகமாக வந்த அவர் போட்டோ வில் நின்று போட்டோ  எடுத்துக்கொண்டார்.  அப்போது யார் என்று யோசித்துக்கொண்டேன்.  பின் அவர்  விருந்து சாப்பிட்டு வந்து நான் யாரென்று தெரியவில்லையா என்று கேட்டார்.  எனக்கு அவர் நீலகண்டன் என்று அப்போதுதான் புரிந்தது. 

உறவினர் ஒருவர் மேடையில் வந்து, நான் கிருஷ்ணன் என்றார்.  யார் இவர் என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.  அவர் என் உறவினர் என்று மெதுவாகத்தான் புரிந்தது.

திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடன், ஒரு பெண் புதிதாக எங்கள் வீட்டிற்குள் நுழைந்ததுபோல் தெரிந்தது. எனக்கு என் திருமணம் ஞாபகம் வந்தது.  அதனுடைய ரிகர்சல்தான் இந்தத் திருமணம் என்று தோன்றியது.