31.7.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 1

அழகியசிங்கர் 


புத்தர் அழுதார்


வெய்யில்
யாரோ தினமும்
ஒரு பூவைக் கொன்று
புத்தரின் கையில் வைத்துவிடுகிறார்கள்
விரல்கள் நடுங்க...
பூ அதிர்வதாய் சொன்னேன்
காற்றென்று காரணம் சொன்னார்கள்
கடந்த வாரத்திலோர் நாள்
புத்தர் அழுததாய் சொன்னபோது
மழை என்று மறுத்தார்கள்
நேற்று அதிகாலையிலும் கூட
கண்ணீர் கசிவதாய் பதறினேன்
பனித்துளிகள் என்று சிரித்தார்கள்
மாலை நேரத்து
மந்திர உச்சாடனத்தில்
புத்தரின் விசும்பல் யாருக்கும்
கேட்காமல் போக
இன்றும் கூட யாரோ
ஒர பூவைக் கொன்று.


நன்றி : குற்றத்தின் நறுமணம் - வெய்யில் - கவிதைகள் - விலை : ரூ.80 - வெளியீடு : புது எழுத்து,  2/205 அண்ணா நகர். காவேரிப்பட்டினம் 635 112
தொலை பேசி : 98426 47101

30.7.16

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 22

அழகியசிங்கர்இந்தக் கூட்டம் விருட்சம் நடத்தும் 22வது கூட்டம்.  ஏன் இதுமாதிரி கூட்டங்கள் நடத்த வேண்டுமென்ற கேள்வியை நானே கேட்டுக்கொண்டேன்.  கீழ்க்கண்டவாறு அதற்கான பதில்களை சொல்ல விரும்புகிறேன் :

1. எழுத்தாளர்கள் அவர்களுடைய நண்பர்களை சந்திப்பதற்கு.   நான் வாசகர்கள் என்று சொல்வதைத் தவிர்க்கிறேன்;

2.  ஒரு படைப்பாளியின் படைப்புகளைப் பற்றிப் பேச;

3.  ஒரு படைப்பாளி அவர்களுடைய படைப்புகளைப் பற்றி அவர்களே அறிமுகப் படுத்திக்கொள்ள;

4. இதுமாதிரியான கூட்டங்களை எப்படி எதிர்கொள்வது என்று பார்வையாளர்கள் தங்களுக்குள் பயிற்சி எடுததுக்கொள்ள

கடந்த 22 கூட்டங்களாக இதை ஓரளவுக்கு நடைமுறையில் சாத்தியப் படுத்த முயற்சி செய்துள்ளோம் என்று நினைக்கிறேன். இப்போது நடைபெறுவது பெருந்தேவியின் கவிதைகள் குறித்த கூட்டம். கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

29.7.16

ஞானக்கூத்தன் இனி இல்லை


அழகியசிங்கர்
இன்றைய தினமணி இதழில் ஞானக்கூத்தன் குறித்து 'ஞானக்கூத்தன் இனி இல்லை' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி உள்ளேன். படிக்கவும். இன்னும் விரிவாக ஒரு புத்தகம் போடும் அளவிற்கு அவரைப் பற்றி எழுத முயற்சி செய்ய உள்ளேன். 


அதேபோல் நான், பிரமிள், விசிறி சாமியார் என்ற புத்தகத்தை 65 பக்கம் முடித்துள்ளேன்.  80 பக்கங்களில் அந்தப் புத்தகத்தை முடிப்பதாக உள்ளேன்.  


27.7.16

படித்ததில் பிடித்தது.....1

அழகியசிங்கர்

புதுமைப் பித்தன்


புதுமைப் பித்தன் இருந்த
வீட்டைத் தாண்டிச் செல்லும் போது
இந்த வீட்டு முன் கூடத்தில் வெற்றிலைச்
செல்லமும் உற்சாகமுமாக எத்தனையோ கதைத்து
எத்தனையோ நாட்கள் போக்கியாகி
விட்டது. எத்தனையோ கதைகள் சொல்லி
புஸ்தகங்கள் படித்து முடித்தாகி விட்டது
ரெண்டு கப் காபிக்கு காசு இருக்கிறதா
என்று பார்த்துக்கொண்டு காபியும்
சாப்பிட்டுவிட்டு மீதி கையில் காசிருந்தால்
வீட்டுக்கும் எதாவது வாங்கிக்கொண்டு
பேசிக்கொண்டே திரும்பி வந்து உட்கார்ந்து
பேசிப்பேசி பொழுதைத் தீர்த்த இடம் இது
இரவாகியும் வீடு திரும்பாமல் பேச்சின்
சுவாரஸ்யத்திலே இரவு பூரா தங்கிவிட்டு
காலையில் காபி சாப்பிட்டு விட்டுத்
திரும்புவதுண்டு !

இப்போது இந்த
வீட்டுக்குள்ளே போனால் எங்கள் பேச்சை
கேட்டிருந்த அந்த சாஷி பூதமான சுவர்கள்
எங்கள் பேச்சை எனக்குத் திருப்பி
சொல்லுமா...? சொல்வதாக வேண்டுமானால்
நான் கதை யெழுதலாம் சுவர்கள் பேசாது.
நன்றி கெட்ட சுவர்கள் - அவை வீட்டுக்
காரன் கட்சி தான் - எழுத்தின் அருமை
தெரியாதவை, உலகமே எழுத்துக்கு - நல்ல
எழுத்துக்கு எதிரியாய் இருக்கும்பொழுது  -
வேறு சொல்ல என்ன இருக்கிறது ..?

எழுதாதே எழுதாதே என்று உலகம் கூடி
சொல்ல நன்றாக எழுதினால் ஆபத்துதான்
அதற்கு நானே உதாரணம் என்று
புதுமைப் பித்தன் சொல்லிப் போனாரோ
என் சிந்தனை எங்கேயோ தொடர்கிறது.

26.7.16

PLEASE ATTEND THE MEETING


DEAR FRIEND,

PLEASE ATTEND THE MEETING WITHOUT FAIL. AFTER THE LAPSE OF 2 MONTHS VIRUTCHAM AGAIN CONDUCTS THIS MEETING. PL ATTEND WITHOUT FAIL.


AZHAGIYASINGAR


25.7.16

ஒரு கதை ஒரு கவிதை கூட்டம் அல்லது ஐந்து பேர்கள் கூட்டம்

ஒரு கதை ஒரு கவிதை கூட்டம் அல்லது ஐந்து பேர்கள் கூட்டம்


அழகியசிங்கர்இனி இக்கூட்டத்தின் பெயரை மாற்ற உள்ளேன்.  ஐந்து பேர்கள் கூட்டம் என்று.  ஒரு இடத்தில் கூடி ஐந்து பேர்கள் மட்டும் அமர்ந்து கதை கவிதைகள் வாசிக்கும் கூட்டமாக இது இருக்கும்.  பெரும்பாலும் போஸ்டல் காலனியில் உள்ள என் இடத்தில்தான் இருக்கும்.  இலக்கியக் கூட்டம் என்று (வர மாட்டார்கள் என்பதில் நம்பிக்கை உள்ளவன்) அதிகம் பேர்கள் வந்தால் சமாளிப்பது கடினம். 


ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தில் நாங்கள் பேசியதை இங்கே ஆடியோவில் உங்களுக்கு பதிவு செய்து அனுப்பி உள்ளேன். கேட்டு உங்கள் கருத்துகளை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.அங்கும் இங்கும் 4...........

அழகியசிங்கர்24.07.2916 (சனிக்கிழமை) அன்று குவிகம் என்ற இலக்கிய அமைப்பு கதை சொல்லும் கூட்டம் ஒன்று நடத்தியது.  10 பேர்களுக்கு மேல் கதை சொன்னார்கள்.  எல்லோரும் உற்சாகமாக  சொன்னார்கள். ஒவ்வொருவரும் விதம்விதமாக கதை சொன்னது  நன்றாக இருந்தது.  முடிவில் ஒரு சிறுமி அவளுக்குத் தெரிந்த கதையைச் சொன்னாள். எனக்குத் தெரிந்து இரண்டு முக்கிய நண்பர்கள் கதை சொன்னதுதான் தனிப்படட முறையில் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.  ஒருவர் என்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்.  சுரேஷ் என்ற பெயர்.  அதேபோல் இன்னொருவர் உமா பாலு. அலுவலக நண்பர். அவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவத்தை உருக்கமாக விவரித்தார். இருவரும் தனிப்பட்ட அனுபவத்தை கதைபோல் சொன்னார்கள்.  ஆனால் இருவராலும் சொன்னதை கதையாக எழுத முடியுமா என்பது தெரியவில்லை.  எழுதுவது என்பது வேறு; கதை சொல்வது என்பது வேறு.  இதுமாதிரியான கூட்டத்திற்கு நிச்சயமாக அதிகமாக கூட்டம் வரும். ஏன்என்றால் பார்வையாளர்களே கூட்டத்தில் பங்கு பெறுகிறார்கள்.  விடாமல் தொடர்ந்து இலக்கியக் கூட்டம் நடத்தும் குவிகம் இலக்கிய அமைப்புக்கு என் வாழ்த்துகள். ஒவ்வொரு முறையும் கதை சொல்லும் கூட்டங்களை தொடர்ந்து நடத்தினால் போதும்.

முன்னதாக வாசக சாலை என்ற அமைப்பு பத்தாம் தேதி பரிசல் புத்தக  அலுவலகத்தில்   கதையாடல் நடத்தியது.  சிறு பத்திரிகைகளில் வெளிவந்த கதைகளைப் பற்றி விமர்சனப் பார்வையை பலர் வைத்திருந்தார்கள்.   பத்திரிகையில் எழுதியவர்கள் அங்கு பேசியவர்களின் கருத்துக்களைக் கேட்டால், இனிமேல் எழுத வேண்டாம் என்று ஓட்டமாக ஓடிப் போய்விடுவார்கள்.                      
   
ஒவ்வொரு மாதமும் சுப்பு என்பவர் நடத்துகிற தமிழ் வளர்த்த சான்றோர் என்ற கதையாடல் கூட்ட நிகழ்ச்சியைக் கேட்டேன்.  வ வே சுவும். மாலனும் அமர்ந்துகொண்டு உரையாடிக் கொண்டிருந்தார்கள். எழுத்தாளர் அழகிரிசாமியைப் பற்றி பேசினார்கள்.  அழகிரிசாமி மௌனியையும் லாசராவையும்   மோசமாக விமர்சனம் செய்திருப்பதாக மாலன் குறிப்பிட்டார்.  அதைக் கேட்கும்போது சற்று சங்கடமாக இருந்தது.   முன்பே ஐராவதம் சொன்ன விஷயம் ஞாபகத்திற்கு வந்தது.  எழுபது வாக்கில் இலக்கியச் சங்கம் என்ற அமைப்பு கோணல்கள் என்ற சிறுகதைப் புத்தகம்  கொண்டு வந்தது. அதன் பிரதி ஒன்றை அழகிரிசாமியிடம் காட்டியபோது, ஆரம்பத்திலேயே  இப்படியா தலைப்பு வைக்கிறது என்று கிண்டல் செய்தாராம். 
                                                                                  **************                                 
25.07.2016 (ஞாயிறு) ஒரு கதை ஒரு கவிதை கூட்டத்தை வீட்டில் வைத்துக் கொண்டேன்.  போஸ்டல் காலனியில் நாங்கள் முன்பு இருந்த வீடு.  முக்கிய விருந்தாளியாக எஸ் வைதீஸ்வரனை அழைத்திருந்தேன்.  அவருடைய கவிதைத் தொகுதியும், கதைத் தொகுதியும் சமீபத்தில் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன.  தெளிவாக வைதீஸ்வரன் அவருடைய கதைகளையும் கவிதைகளையும் வாசித்தார்.  இந்தக் கூட்டத்தைப் பற்றி முகநூலில் முன்னதாக தெரிவிக்கவில்லை.   இனிமேல் தெரிவிக்க வேண்டாமென்று தோன்றுகிறது.  ஒரு ஐந்து இலக்கிய நண்பர்களை மட்டும் கூப்பிட்டு கூட்டம் நடத்துவதாக எண்ணம். வழக்கம்போல் கிருபானந்தனும், சுந்தர்ராஜனும் எனக்கு துணை நின்றார்கள். தரையில் அமர்ந்து கூட்டத்தை ரசிப்பது சற்று சிரமமாக இருந்தது.  ஹாலில் தொங்கிக்கொண்டிருந்த சீலிங் பேன் படபடவென்று சத்தம் போட்டபடி இருந்தது. நான் புதுமைப்பித்தன் கதையையும், சில க நா சு கவிதைகளையும் படித்தேன்.  கூட்ட நேரம் முடிந்து விட்டது.  அடுத்த முறை ஐந்து பிளாஸ்டிக் நாற்காலிகள் வாங்க வேண்டும்.
                                                                                   ***********
ஆத்மாநாம் தொடங்கிய ழ என்ற சிற்றேட்டின் கடைசி இதழான 28ல் ஞானக்கூத்தனின் மேசை நடராசர் என்ற கவிதை உள்ளது.  அப்போது அதைப் படித்து விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன்.  அக் கவிதையை இங்கு தருகிறேன்.


மேசை நடராசர்


மேசை மேல் உள்ள நடராசரைச்
சுற்றிலும் இருந்தவை பூத
கணங்கள் அல்ல.  கிங்கரர் அல்ல.
எழுதாத பேனா
மூக்குடைந்த கோணூசி
தைக்கும் நூலான பூணூல் உருண்டை
கருத்துத் தடித்த குடுமி மெழுகு
குப்புறப் படுத்துக் கொண்டு
சசிகலா படித்த நாவல்
முதல்வரின் மழை விமானம்
பயன்படாமல் பழுது பார்க்கப்பட
பங்களூர் சென்றதைக்
கட்டமிட்டுக் கூறிய செய்தித்தாள்
மூலை நான்கிலும் சாரமிழந்து
மையம் விடாத முகம் பார்க்கும் கண்ணாடி
கழுத்து நீண்ட எண்ணெய்ப் புட்டி; மற்றும்
இனிவரப் போகும் பலவகைப் பொருள்கள்

ஆனால் நடராசர்
ஆடிக் கொண்டிருக்கிறார்
இருப்பிடம் இமயமோ சித்சபையோ
இல்லையென்றாலும் சூழ்ந்தவை பூத
கணங்;கள் இல்லையென்றாலும்

எனக்குத்தான் ஆச்சரியம்
எடுத்த பொற்பாதத்தின் அருகே
கழுத்து நீண்ட எண்ணெய்ப் புட்டியைத்
தவிறியும் இடறி விடாமல்
ஆடிக் கொண்டிருக்கிறார்
மேசை நடராசர்.

22.7.16

எனக்குப் பிடித்த தலையங்கம்....

அழகியசிங்கர் அக்டோபர் 1988 ஆம் ஆண்டிலிருந்து 28வது இதழுடன் ழ என்ற பத்திரிகை நின்று விட்டது.  1978 ஆம் ஆண்டு மே மாதம் கவிதை மாத ஏடு என்ற பெயரில் ஆத்மாநாம் ஆசிரியர் பொறுப்பில் தொடங்கப்பட்ட இதழ்.  ஒவ்வொரு மாதமும் சரியாக வந்திருந்தால் 120 இதழ்கள் வரை வந்திருக்க வேண்டும்.  தமிழில் இதுமாதிரியான இதழ் தொடர்ந்து வராமல் போனது துரதிருஷ்டம் என்று கூட சொல்லலாம்.

ழ பத்திரிகை தொடர்ச்சியாக வராமல் போன தாமதத்தால் அதையே பார்த்து இன்னும் சில பத்திரிகைகள் உருவாகமல் இல்லை.  பிரம்மராஜனின் மீட்சி, ராஜகோபாலன் அவர்களின் மையம் என்ற பத்திரிகை, என்னுடைய விருட்சம் பத்திரிகை எல்லாம் ழ பத்திரிகையைப் பார்த்துதான் உருவாகி இருக்க வேண்டும். ஸ்வரம் என்ற பத்திரிகைக் கூட ழ மாதிரி இருக்கும்.

ழ பத்திரிகையைப் போல் எளிமையான பததிரிகையை நான் இதுவரை பார்த்ததில்லை.  கடைசி இதழான 28வது இதழ் வெளிவந்தபோது அது மாத இதழா காலாண்டு இதழா என்று குறிப்பிடப்பட வில்லை.  

ழ வில் பொதுவாக கவிதைகளும், மொழிபெயர்ப்புக் கவிதைகளும், கவிதைகளைக் குறித்து கட்டுரைகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்.  மொத்தம் 16 பக்கங்களுக்குள் எல்லாம் முடிந்து விடும்.  ஒரே பேப்பரில் எல்லாம் அடித்திருக்கும்.  தனியாக அதற்கென்று அட்டையெல்லாம் அடித்திருக்காது.  ழ பத்திரிகையை அதைச் சார்ந்த நண்பர்கள் அம்மணப் பத்திரிகை என்று குறிப்பிடுவார்கள்.  

எபபோதும் ழவின் இரண்டாவது பக்கத்தில் அதனுடைய தலையங்கம் ஒரு அரைப்பக்க அளவிற்கு எழுதியிருக்கும்.  அந்த அரைப் பக்கத்தில் அதை எழுதியிருக்கும் விதம் அற்புதமாக இருக்கும்.  ஆத்மாநாமின் தற்கொலைக்குப் பிறகு நாலைந்து இதழ்கள் ழ பத்திரிகை வந்து 28வது இதழுடன் நின்றுவிட்டது. சிலசமயம் தலையங்கம் கூட இருக்காது.  ஆத்மாநாமின் ஆசிரியப் பொறுப்பில் வந்த ழ முதல் இதழில் தலையங்கம் கூட கிடையாது.  

எப்போதும் என்னுள் தோன்றும் கேள்வி. இவ்வளவு எளிமையாகக் கொண்டு வந்த ழ இதழ் ஏன் தொடர முடியாமல் போய்விட்டது என்பதுதான்.  என்னதான் அச்சடிக்கிற முறை சிரமமாக இருந்தாலும் 16 பக்கம் என்பது அந்தக் காலத்திலும் எளிதாக அடித்துவிடலாம்.  பின் ஏன் நின்று விட்டது? 

ஒரு சிறு பத்திரிகை என்றால் ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள்தான் கொண்டு வர வேண்டும் என்ற விதி இருக்கிறதா? ழ வந்தபோதே அதன் விற்பனையைக் குறித்து யாரும் பெரிதாக கவலைப்பட வில்லை.  ஏன்என்றால் அவர்களுக்கு அந்தப் பத்திரிகையை விற்கக் கூட தெரியாது.  க்ரியாவில் அந்தப் பத்திரிகையைக் கொடுத்து விட்டு, விற்றப் பணத்தைக் கூட வாங்க போக மாட்டார்கள்.  ஏன் சந்தாதாரர்களுக்கு சில நூறு பேர்களுக்கு மட்டும் இந்தப் பத்திரிகை போய்க் கொண்டிருக்கும்.

இப் பத்திரிகையை ஒருவர் எளிதாகப் படித்து விடாலம்.  அதில் வெளியான ஒவ்வொரு கவிதையும் வாசகர்கள் உற்சாகப்படுத்தத் தவறாது.  இன்று ஒரு சிறுபத்திரிகையைப் படிப்பதே என்பதே தொந்தரவான விஷயமாக இருக்கிறது. ழவைப் பொறுத்தவரை அது ஒருவரால் நடத்தப்பட்ட பத்திரிகை இல்லை. அதனால்தான் அது வரமுடியாமல் போய்விட்டதாக எனக்குத் தோன்றும். அதை ஒருவர் மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால், இன்னும் அந்தப் பத்திரிகை வந்து கொண்டிருக்கும்.  16 பக்கங்களில் இந்தப் பத்திரிகையைக் கொண்டு வருவதில் பெரிய நேரம் ஒன்றும் ஆகியிருக்காது.  எளிதாகப் படைப்புகளும் கிடைத்திருக்கும்...ஏன் வரவில்லை? 

க நா சு சொல்வார் ஒரு சிறுபத்திரிகையை கொஞ்ச இதழ்கள் கொண்டு வந்துவிட்டு உடனே நிறுத்தி விட வேண்டும் என்று.  அவரும் சில பத்திரிகைகளை அப்படி கொண்டு வந்து விட்டு நிறுத்தி விட்டிருக்கிறார்.  அவர் சொல்லும் காரணம் தொடர்ந்து செயல்பட்டால் பத்திரிகை ஜலம் மாதிரி ஆகிவிடும் என்று.  என்னால் அதை உறுதியாக சொல்ல முடியவில்லை.  பத்திரிகையின் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக மக்கி விடும் என்பதை ஏற்க முடியவில்லை.  ழவைப் பொறுத்தவரை அப்படியெல்லாம் ஒன்றும் ஆகவில்லை.  அதன் கடைசி இதழான 28ல் வெளிவந்த தலையங்கத்தை உங்களுக்கு படிக்க கொடுக்கிறேன்.  இந்தத் தலையங்கம் 1988ல் வெளிவந்தது.  
üகடந்த முப்பது ஆண்டுகளாக இலக்கியச் சிற்றேடுகளால் வெளியிடப்பட்டு வளர்க்கப் பட்ட புதுக்கவிதை இன்று வர்த்தக ஏடுகளிகலும் இடம்பெற்று விட்டது.  புதுக்கவிதை வெளிவராத ஏடுகளே இன்று தமிழில் இல்லை என்று சொல்லலாம்.

ஆனால் வர்த்தக ஏடுகளில் வெளியாகும் புதுக்கவிதை பெயரளவில்தான் அந்தப் பெருமையைப் பெறுகிறதே  தவிர உண்மையில் புதுக்விதையாக அது இல்லை.  இன்று புதுக்கவிதை எழுதும் ஏராளமான கவிஞர்களுக்குப் புதுக் கவிதையின் வரலாறும் தெரிந்திருக்கவில்லை.  அது ஏன் வந்தது என்பதும் எவரெவர் அதன் தொடக்கக்கால ஆதர்சங்களோடு எழுதுகிறார்கள் என்பதும் தெரியாது.  வர்த்தக ஏடுகளும் வழக்கம்போல அசலான புதுக்கவிதைகளையும் புதுக்கவிஞர்களையும் புறக்கணித்து விட்டு தனக்குப் பயன்படும்படியான எழுத்துகளையும் கவிஞர்களையும் வெளியிட்டு அதைத் தவிர வேற நிகழ்ச்சிகள் இல்லை என்பது போன்ற மயக்கத்தை உண்டு பண்ணி வருகின்றன.  இந்தப் பணியில் தொலைக் காட்சியும் வானொலியும் பங்கு பெற்று வருகிறது.

எண்பதுகளில் நிகழ்ந்து வரும் இந்தச் சீரழிவு, இலக்கியச் சிற்றேடுகளின் புதுக் கவிதையை நல்ல வேளையாகப் பாதித்து விட்வில்லை.  வர்த்க ஏடுகளில் மோகமுறாது தொடர்ந்து சிற்úறேடுகளில் வெளியிடுவது கடினமான காரியமாக இருந்தபோதிலும் தொடர்ந்துசிற்றேடுகளிலேயே வெளியிட்டு வரும் கவிஞர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்லக் கூடி வருகிறது.  முப்பது ஆண்டுகால இருப்பினால் புதுக் கவிதை புதிய சராசரிகளைத் தோற்றுவித்து புதிய சராசரிக் கவிதைகளும் வெளியீடுகளுக்கு வருகின்றன.  அவற்றைக்  கடந்து புதுமையானவற்றையும், ஆழமானவற்றையும் இனம் கண்டு வெளியிடுவது அவ்வளவு எளிதானதல்ல.
'ழ' எப்பொழுது வந்தாலும் தனது கருத்தில் புதுமையையும், அருமையையும் இருத்திக் கொண்டு வரும். '

இந்தத் தலையங்கம் வெளிவந்தே 28 ஆண்டுகள் ஓடி விட்டன,.இன்னும் இதில் கூறப்படுகிற விஷயங்கள் எல்லாம் உண்மைதான்.  கிட்டத்தட்ட 60 ஆண்டு கவிதைக்கான சரித்திரத்தையே ழ சொல்லி விட்டது போல் தோன்றுகிறது.
   

21.7.16

ஓர் உரையாடல்

ஓர் உரையாடல் 


அழகியசிங்கர்
பால்கனியிலிருந்து வேடிக்கைப் பார்ததுக் கொண்டிருந்தார் அழகியசிங்கர்.  தெருவில் தூரத்தில் ஜெகனும், மோகினியும் வந்து கொண்டிருந்தார்கள்.  அவர்களைப் பார்த்து கையை ஆட்டினார்.  அவர்களும்.
வீட்டிற்குள் வந்தவுடன் முதல் கேள்வி ஜெகனிடமிருந்து.   ஒரு முக்கியமான விஷயத்திற்காகத்தான் வந்திருக்கிறோம்.

அழகியசிங்கர் :   என்ன? 
மோஹினி :  100வது இதழ் நவீன விருட்சம் குறித்துப் பேசுவதற்குத்தான்.  
அழகியசிங்கர் :  கூடிய விரைவில் வந்துவிடும்.  அதற்கான முயற்சியை கடுமையாக செய்து கொண்டு வருகிறேன்.  இதுவரை 150 பக்கங்கள் வரை டம்மி தயார் செய்து கொண்டிருக்கிறேன்.
ஜெகன் :  அப்படியென்றால் 200 பக்கங்கள் வரை வந்து விடுமா?
மோஹினி :   இதுவரை நீங்கள் கொண்டு வராத அளவிற்கு பக்கங்கள் அதிகம் உள்ள விருட்சம் வெளிவருகிறதா?
அழகியசிங்கர் :  கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எனக்கே பயமாகத்தான் இருக்கிறது.  200 பக்கமா?  நான் எப்போதுமே மிகக் குறைவான பக்கங்களில் நம்பிக்கைக் கொண்டவன்.
(அழகியசிங்கர் அமர்ந்திருந்த அறையை அவருடைய மனைவி எட்டிப் பார்க்கிறார்.  அழகியசிங்கரைப் பார்த்து, üயாருடன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்,ý என்று கேட்கிறார்.)
அழகியசிங்கர் :  ஏன் ஜெகன் மோஹினியுடன்தான்.
அழகியசிங்கர் மனைவி :    யாரும் உங்கள் முன் இருப்பதாக தெரியவில்லையே..
அழகியசிங்கர் :  இதோ இந்த நாற்காலிகளில் உட்கார்ந்திருப்பது உனக்குத் தெரியவில்லையா?
அழகியசிங்கர் மனைவி : யாரும் தெரியவில்லை.  நீங்கள் சொல்ற நண்பர்களை நான் பரர்த்ததே இல்லை.  
அழகியசிங்கர் :   உன் கண்ணிற்கு அவர்கள் தெரியவவே மாட்டார்கள்.  அவர்கள் என் மானஸீக நண்பர்கள்.  என் நலம் விரும்பிகள்..விருட்சத்தில்தான் தென்படுவார்கள்.
அழகியசிங்கர் மனைவி :     100வது இதழ் விருட்சமா?
அழகியசிங்கர் :   ஆமாம். விருட்சம்தான் என் மூச்சு..
(அழகியசிங்கர் மனைவி அந்த இடத்தைவிட்டு போகிறார்..)
ஜெகன் :  சார், என்ன திடீரென்று மூச்சுன்னு டயலக் அடிக்கிறீங்க..
அழகியசிங்கர் :  நம்ப பேசறதை நம்ப மாட்டேங்கறாங்க...
மோஹினி :   நீங்க என்னமோ நினைக்கிறீங்க...இந்த அளவிற்கு உங்களுக்கு அவங்க சுதந்திரம் கொடுத்திருக்காங்க.. அதனால்தான் விருட்சம் நூறாவது இதழ் வரை வந்திருக்கிறது.
ஜெகன் :  இந்தக் காலத்திலே நம்மள மாதிரி பத்திரிகை புத்தகம்னு சுத்தறவங்களை யாருமே பொறுத்துக்க மாட்டார்கள். 
அழகியசிங்கர் :  அவங்க உலகம் வேற.. ஏன் என் வீட்டில உள்ள எல்லோருமே என் மனைவிக்குத்தான் சப்போர்ட்.  
மோஹினி :   இப்ப தமிழ்ல புத்தகம் பத்திரிகை படிக்கிறவங்க ரொம்ப குறைச்சல்.
அழகியசிங்கர் :  அன்னிக்கு ரொம்ப வருஷம் கழித்து என் அலுவலக நண்பர் ஒருவரைப் பார்த்தேன்.  அவர் கேட்டார்:  என்ன விருட்சம் இன்னும் வரதா என்று.  ஆமாம்.  எனக்கே தெரியாம 99வது இதழ் வரை வந்து விட்டது.  இப்போது 100 வரப் போகிறதுன்னு சொன்னேன்...  üஅப்படியா...ý என்று ஆச்சரியப்பட்டார்.  அவரைப் பார்த்து இன்னொன்றும் சொன்னேன் : இப்ப துரத்திக்கிட்டே இருக்கேன்.  யாரு விருட்சம் படிப்பார்கள் என்று..
ஜெகன் :  உங்கள் நண்பர் உடனே ஓடிப் போயிருப்பாரே?
அழகியசிங்கர் :  அப்படித்தான் நடந்தது....ஓடியே போய் விட்டார்..
மோஹினி :   உங்கள் பத்திரிகை அமைப்பை மாத்தறீங்களா?  
ஜெகன் :  எப்போதும் கொண்டு வர மாதிரி கொண்டு வந்தால்தான் நன்றாக இருக்கும்.
மோஹினி :  முதல்ல மாத்தத் தெரியுமான்னு தெரியணும்..
அழகியசிங்கர் :  நான் அமைப்பை மாத்தலை.  ஆனா பக்கங்களை 200ஆ கூட்டியிருக்கேன்...அவ்வளவு பக்கங்கள் சரியா வருமான்னு தெரியலை.
மோஹினி :  உங்களால் பக்கத்தைக் குறைக்க முடியாதுன்னு தோணுது..
ஜெகன் :  நான் கூட தடம்னு ஆனந்தவிகடன் பத்திரிகையைப் பார்த்தேன்... புரட்டித்தான் பார்த்தேன்.  படிக்க முடியவில்லை. 
அழகியசிங்கர் : எதையும் படிக்க வேண்டும். 
ஜெகன் :     உண்மைதான்.  
அழகியசிங்கர் :   நான் வாங்கி வைத்திருக்கும் பல பத்திரிகைகளை உடனே படிப்பதில்லை.ஆனால் பத்திரிகை உள்ளே யார் யார் எழுதியிருப்பாங்கன்னு புரட்டிப் பார்ப்பேன்..
ஜெகன் :   எதற்கும் நேரம் ஒன்று வேண்டும்...
அழகியசிங்கர் :  நேரம் மட்டுமல்ல..மூடும் வேண்டும்.  அது இல்லை என்றால் படிக்க முடியாது.  நான் கல்லூரியில படிக்கும்போது சென்னையில் உள்ள எல்லா லைப்ரரியிலும் போய் புத்தகம் எடுப்பேன்.  தியோசாபிகல் சொûஸயிட்டியில் ஒரு லைப்ரரி உண்டு..அங்கும் போவேன்.  எடுத்த வந்த எல்லாப் புத்தகங்களையும் ஒரு இடத்தில்  குவித்து வைத்திருப்பேன். வீட்டில் உள்ளவர்கள் ஏளனமாகப் பார்ப்பார்கள்.  'படிக்கவே மாட்டான்..அப்படியே கொண்டு போய் கொடுப்பான்,' என்பான் என் சகோதரன். தினமும் என் முன்னால் உள்ள புத்தகங்களை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பேன். எந்தப் புத்தகத்தை எடுத்து முதலில் படிப்பது என்பதில் குழப்பமாக இருக்கும்.  ஒரு புத்தகம் எடுப்பேன்.  புரட்டிவிடடு வைத்துவிடுவேன். அப்புறம் அவசரம் அவசரமாக புத்தகங்களை எடுத்துக் கொண்டு திருப்பிக் கொடுக்க ஓடுவேன். அப்படி கொடுக்கும்போது அமெரிக்கன் லைப்ரரி புத்தகங்களை பிரிட்டிஷ் லைப்ரரிக்குக் கொண்டு போய் விடுவேன்.  எனக்கே என்னை நினைச்சா சிரிப்பா இருக்கும்..
மோஹினி :  அப்படி கொண்டு வர புத்தகங்களில் எதாவது ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க முடியாதா....
அழகியசிங்கர் :    ஏன் முடியாது என்று தெரியாது?  சில சமயம் சில புத்தகங்களை எடுத்துப் படிப்பேன்.....ஆனால் முழுக்க முடிக்க முடியாது. பாரதியார் எழுதிய கட்டுரைகளை நான் படித்த கல்லூரியில் உள்ள லைப்ரரியிலிருந்து எடுத்துப் படித்திருக்கிறேன். பெ தூரன் தொகுத்தது.  முக்கால்வாசி நான் படிப்பது மின்சார வண்டியில்தான். 
ஜெகன் :    இப்போது எப்படி? 
அழகியசிங்கர் :   அப்போது மாதிரி இல்லை.  ஆனால் லைப்ரரி போய்ப் புத்தகம் எடுத்துப் படிப்பதில்லை... என்னிடம் உள்ள புத்தகங்களையே படிக்கிறேன்.  புதுமைப்பித்தன் புத்தகத்தை வைத்துக்கொண்டு எதாவது ஒரு கதையை எடுத்துப் படித்துவிட்டு வைத்துவிடுவேன்.  பின் மௌனி கதைகளில் எதாவது படிப்பேன்...எனக்கு எதிலும் அவசரமில்லை.  எப்ப வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் யாரிடமும் இரவல் மட்டும் கொடுக்கக் கூடாது.  புதுமைப் பித்தன் கதைகளில் ஒரு கதையைப்  படித்து முடித்தப்பின் அந்தக் கதையைப் பற்றிய குறிப்பு கதை கீழேயே எழுதி விடுவேன்.  இது 'மிஷின் யுகம்' என்ற புதுமைப்பித்தனின் சிறுகதையின் கீழே இப்படி எழுதி உள்ளேன்.  'ஓட்டலில் பணிபுரிபவர் எப்படி மிஷின் மாதிரி ஆகிறார் என்பதுதான் கதை.  திறமையாக எழுதி உள்ளார்,' என்று.  படித்தத் தேதி வியாழக்கிழமை 28.04.2016 என்று குறிப்பிட்டுள்ளேன். 
                                                                             (இன்னும் வரும்...)

20.7.16

வடகிழக்கு மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்கள் சந்திப்பு

அழகியசிங்கர் 


சாகித்திய அகாதெமி நடத்திய வடகிழக்கு மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்கள் சந்திப்பிற்கு இன்று சென்றேன்.  சிறுகதை வாசிப்பை அமர்ந்திருந்து கேட்டேன்.  அஸ்ஸôமியிலிருந்து மணிகுண்டல பட்டாச்சார்யா, மணிபுரியிலிருந்து ஹவோபம் சத்யபதி, தமிழிலிருந்து கீரனூர் ஜாஹிர் ராஜா தெலுங்கிலிருந்து சம்மெட உமாதேவி முதிலிய எழுத்தாளர்கள் அவர்கள் எழுதிய கதைகளை ஆங்கிலத்தில் வாசித்தார்கள்.  

ஆங்கிலத்தில் வாசித்த எந்தக் கதையையும் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.  என் பக்கத்தில் அமர்ந்திருந்த கிருபானந்தன் என்ற நண்பர் புரிந்தது என்று தலை ஆட்டிக் கொண்டிருந்தார்.  எனக்கு சந்தேகம் அவருக்குப் புரிந்திருக்குமாவென்று.  

தெலுங்குக் கதையை ஆங்கிலத்தில் வாசித்த விதம் படு மோசமாக இருந்தது. ஏன் இந்தக் கதைகளை எல்லாம் தமிழிலும் வாசிக்கக் கூடாது? வாசித்திருந்தால் ரொம்பவும் ரசித்திருக்கலாம்.  ஆங்கிலத்தில் கேட்க நரக வேதனையாக இருந்தது.   

எனக்கு கூட்டம் திருப்தியாக இல்லாவிட்டாலும்,  சாகித்திய அகாதெமி கூட்டத்திற்கு வந்தால் எப்போதும் புத்தகம் வாங்காமல் இருக்க மாட்டேன். இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற தலைப்பில் ஆர். வெங்கடேஷ் எழுதிய ராஜாஜியைப் பற்றிய புத்தகமும், ஜி நாகராஜன் பற்றி சி மோகன் எழுதிய புத்தகத்தை வாங்கினேன்.  இரண்டுமே படிக்க வேண்டிய புத்தகங்கள். 

இதிலும் ஒரு குறை.  புத்தகம் உள்ளே அரிதாக உள்ள புகைப்படங்களைச் சேர்த்திருக்கலாம்.  128 பக்கங்கள் கொண்ட ராஜாஜி புத்தகத்தில் புகைப்படங்கள் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.  அதேபோல் ஜி நாகராஜன் புத்தகத்திலும்..
  

19.7.16

விட்டுப் போன கவிதைகள்.....

விட்டுப் போன கவிதைகள்.....

அழகியசிங்கர்


நான் முதலில் யாருடனும் இல்லை என்ற கவிதைத் தொகுதி கொண்டு வந்தேன்.  அப்போது அந்தத் தொகுதியை யாரும் திட்டவில்லை.  தமிழவன், வெங்கட்சாமிநாதன், நகுலன், ஞானக்கூத்தன், ரிஷி பாராட்டி எழுதியிருந்தார்கள்.  அதன்பிறகு இன்னொரு கவிதைத் தொகுதி கொண்டு வந்தேன்.  தொலையாத தூரம் கவிதை நூலின் தலைப்பு.  பெரும்பாலோருக்கு அப்படி ஒரு தொகுப்பு வந்ததே தெரியவில்லை. 

இந்த இரண்டு கவிதைத் தொகுதியில் உள்ள கவிதைகளைச் சேர்த்து இன்னும் கவிதைகளைச் சேர்த்து ஒரு முழுத்தொகுதியாக அழகியசிங்கர் கவிதைகள் என்ற புத்தகம் கொண்டு வந்தேன்.  ஓவியர் வரதராஜன் பிரமாதமாக அட்டைப் படம் அளித்திருந்தார்.  இந்தக் கவிதைத் தொகுதியைக் கொண்டு வரும் போது ஒரு பிரச்சினை ஏற்பட்டது.   மொத்தம் 180 கவிதைகள்.  ஒரு கவிதைத் தொகுதி 18ல் முடிவதில் எனக்கு விருப்பமில்லை.  அப்போது பிரமிளுடன் பேசிக் கொண்டிருந்ததால் 18ல் முடியும் எண் ஓமனின் எண்.   அது கவிதைத் தொகுதிக்கு நல்லதிலலை என்ற முடிவுடன், இன்னும் சில கவிதைகளைச் சேர்த்துக் கொண்டு வந்தேன.  அத் தொகுப்பில் உள்ள கடைசிக் கவிதை எங்கள் கிராமத்து வீரனைப் பற்றி எழுதிய கவிதை.

காலையில் தற்செயலாக ஒரு பைலைத் தேடும்போது எப்போதோ நான் எழுதிய இரண்டு கவிதைகள் என் கண்ணில் தட்டுப்பட்டு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. இரண்டு கவிதைகளையும் எழுதிய பிறகு மறந்தே போய்விட்டேன்.  

முன்பு போல் ஒரு பக்கம் அளவிற்கு என்னால் இப்போதெல்லாம் கவிதை எழுத முடிவதில்லை.  ஆனால் நான் இன்னும் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறேன்.  இப்போது எழுதுகிற கவிதைகள் எல்லாம் ஐந்து வரி அல்லது ஆறு வரிகளில் முடிந்து விடுகின்றன.

பைலில் கண்டுபிடித்த அந்தக் கவிதையின் ஒன்றின் பெயர் சிரிப்புக்குப் பின்னால்..

முதலில் குடிக்கும்போது
வேண்டாம் என்றேன்
குடிக்க ஆரம்பித்த பிறகு
வேண்டும் வேண்டும் என்றது மனசு

கழுத்துக்கு மேல் தலையில்
பாயும் வெள்ளமாய்
ஏதோ ஒன்று சுழல
பின் எழுந்து நின்று
நடந்து பார்த்தேன்
தள்ளாட்டம் மூளையிலா
என் அசைவிலா
இல்லை தள்ளாட்டம்
என்று நினைத்தபோது
நிதானமான ஒரு பார்வையை
எல்லோர்முன் வீசினேன்
ஆனால் 
பார்வை நிதானமாக 
அவர்களுக்கும் தெரியவில்லை

குடித்ததைப் பற்றி
உபதேசம் செய்வதெல்லாம் ஒன்றுமில்லை
பிறகு
எதாவது சொல்லலாமென்றும் தோன்றியது
ஒன்றும் சொல்ல ஒன்றுமில்லை
என்றும்
சொல்லலாம் சொல்லலாம்
என்றால்
சொல்வதற்கு வார்த்தைகளைத்
தேட வேண்டுமென்று தோன்றியது
நடந்து சென்று 
படிக்கட்டில் தடுமாறி 
விழப் பாரத்தபோதுதான்
நிதானம் நிதானமன்று
மனம் அரற்றியது
விழுந்தால் செம்மையாய்
அடிப்பட்டிருக்கும்
குறிப்பாக கண்ணாடியில் 
பாரத்த என் முகம்
சிதைந்து ஓலமிட்டிருக்கும்

திரும்பவும்
உட்கார்ந்தபோது
எதிரில்
இன்னொரு
அரை கப்
பீர்
எல்லோருடைய சிரிப்புக்குப் பின்னால்..


18.7.16

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள் 


அழகியசிங்கர்இன்றைய கவிதையின் முன்னோடி க. நா. சு.  ஆனால் எல்லோரும் க நா சுவை மறந்து விடுகிறார்கள்.  அப்படிப்பட்ட ஒருவர் கவிதை ஒன்றை எழுதினாரா  என்பதுகூட பலருக்குத் தெரிவதில்லை.பூனைக் குட்டிகளைப் பற்றி க நா சு அற்புதமாக கவிதை எழுதியிருக்கிறார்.  அதைத்தான் இங்கு அளித்துள்ளேன்.

'கவிதையின் சரித்திரத்தை நோக்கினால் அது மிகவும் சிக்கலான மொழிப் பண்பாட்டு மதச் சிக்கலிலிருந்து விடுபட்டு மொழிக்கு அப்பாற்பட்ட ஒரு சுதந்திரத்தை நாடியே செல்ல முயன்றிருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது.  குறுகிய அளவில் இலக்கணம், செய்யுள் போக்கு என்று ஏற்பட்ட விதிகள் மட்டும் மொழி எல்லைகள் அல்ல.  நல்ல கவிஞன் எவனும் இலக்கிய விதகளாலோ, செய்யுள் மரபிலோ தடுத்து நிறுத்தப்படுவதில்லை.  அதை சுலபமாகவே அவனால் மீறிவிட முடியும்.  ஆனால் மொழி, பண்பாடு, கலாச்சாரம், மதம் விதிக்கிற விதிகளை, எல்லைகளை மீறுவது அத்தனை சுலபத்தில் நடக்கிற காரியம் அல்ல என்றெல்லாம் குறிப்பிடுகிறார் க.நா.சு.  இன்றைய கவிதையின் தந்தை க நா சுதான்.  


பூனைக்குட்டிகள்

க நா சு

மேஜை மேல் படுத்துறங்கும்
கருப்புக் குட்டி
என்னைப் பேனா
எடுக்க விடாமல்
தடுக்கிறது.

நாற்காலியில்
படுத்துறங்கும்
கபில நிறக்குட்டி
என்னை உட்கார
அனுமதிக்க
மறுக்கிறது.
அடுப்பிலே
பூனைக்குட்டி
உறங்குகிறது
சமையல்
இன்று நேரமாகும்
என்கிறாள்
என் மனைவி.

ஐந்து பூனைக்குட்டிகளே
அதிகம் என்று
எண்ணும் எனக்கு
பாற்கடலில்,
வைகுண்டத்தில்,
எத்தனை பூனைக்குட்டிகள்
இருக்கும் என்று
கணக்கெடுக்கத் தோன்றுகிறது.
கசடதபற ஏப்ரல் 1972

17.7.16

அங்கும் இங்கும் 3...........அழகியசிங்கர் 


ஒரு கதை ஒரு கவிதை கூட்டம் நடத்துவதாக இருந்தேன்.  திடீரென்று தமிழச்சி தங்கபாண்டியன் வீட்டு திருமண வரவேற்பு விழா ஞாபகத்திற்கு வந்தது.  கதை கவிதைக் கூட்டத்தை அடுத்த வாரம் தொடரலாம் என்று விட்டுவிட்டேன்.  

வரவேற்பு நிகழ்ச்சியில் கூட்டம் என்றால் அப்படி ஒரு கூட்டம்.  மணமக்களை வாழ்த்த பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.  பல எழுத்தாள நண்பர்களைப் பார்த்தேன்.  என் பக்கத்தில் இரா முருகன் இருந்ததால் பேசிக்கொண்டே வந்தேன்.  நான் இதுவரை அவருடைய மூன்று நாவல்களை வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாகப் படிக்க நினைத்துக்கொண்டிருக்கிறேன்.   ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்து விட்டேன்.  திறமையான எழுத்தாளர். நான் தற்போது ஆங்கில நாவல்கள் சிலவற்றைப் படித்துக் கொண்டு வருகிறேன்.  ஒன்று  ITALO CALVINO  எழுதிய      IF ON A WINTER’S NIGHT A TRAVELER  இன்னொன்று   அதேபோல்    If Tomorrow comes என்று பரபரப்பாகப் பேசப்படும் எழுத்தாளரின் 
புத்தகமும், அதேபோல் KISS  -  ED MCBAIN புத்தகமும்  96 பக்கங்கள் வரை படித்துவிட்டேன்.  கேட்பவரே என்கிற லக்ஷ்மி மணிவண்ணனின் கவிதைத் தொகுதியும், பழனிவேளின் தவளை வீடும், குவளைக் கண்ணனின் பிள்ளை விளையாட்டும், இன்னும் பல புத்தகங்கள்.

மேடையில் வீற்றிருந்த தமிழச்சி தங்கபாண்டியன் என்னை ஞாபகப்படுத்திக்கொண்டு வரவேற்றது பெரிய விஷயமாக இருந்தது.  ஏன்என்றால் மூச்சு விடக்கூட முடியாதபடி கூட்டம். 

விருந்து முடிந்தவுடன் வெளியே செல்லும் முன் ஒரு தாம்புலப் பை கொடுத்தார்கள்.  அதில் பெட்டகம் நம் கையில் என்ற புத்தகம் இருந்தது.  உபயோகமான மருத்துவக் குறிப்புகள் கொண்ட புத்தகம்.  உண்மையிலே இது ஒரு பெட்டகம்.  எப்போதும் பத்திரமாக பாதுகாக்க  வேண்டிய புத்தகம். 

அதில் வெற்றிக்கு 20 கட்டளைகள் என்ற பகுதியில் :

முடியாது, நடக்காது போன்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது என்று எழுதியிருந்தது. 

15.7.16


ஆடியோ ஒலிபரப்பு - ஒரு கதை ஒரு கவிதை கூட்டம்

10.07.2-16 அன்று நடந்த ஒரு கதை ஒரு கவிதை கூட்டத்தில் நாங்கள் பேசியதை ஒலிபரப்பு செய்துள்ளேன்.  உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

14.7.16

மறந்து போன பக்கங்கள்....அழகியசிங்கர்தி சோ வேணுகோபாலனின்  கோடை வயல் என்ற தொகுதி மட்டுமல்ல, மீட்சி விண்ணப்பம் என்ற தொகுதியிலிருந்தும் கவிதைகளை மறந்து போன பக்கங்கள் என்ற தலைப்பில் புத்தகமாகக் கொண்டு வர எண்ணம்.


விசாரணை


தத்துவம்தானே?  வெங்காயம்...!
போடா! போ!
மூடியதை மூடிப்
பின்மூடி?....முடிவா?....
உரித்தால்?  மேலும் உரித்தால்?

கண்ணீர் கொட்டும்
முட்டாளுக்கு உருக்கம்;
மூளை மோதினால்
தலைக்குத் தேங்காய்!

உனக்கும் எனக்கும் 
முடிந்தால்
இதயத்துக்கு மருந்து;
அநேகருக்கு
வயிற்றை நிரப்ப
வேகும் கூத்துத்தான்!

வெட்டித் தனமாய்
வேடிக்கையாய்
அட வீம்புக்குத்தான்
வைத்தாலும்
தோலுரிக்கும் தொல்லையின்றி
வேறென்ன கண்டபயன்?

முட்டிமோதி முடிந்தமட்டும்
பார்த்து
முக்கித் திணறி முடிவில்
சிக்காத சிக்கல் என்று
நடையைக் கட்டும்
வேலை!

13.7.16

ஞாபகச் சிற்பம் என்கிற பிரம்மாராஜனின் கவிதைகள்.....

அழகியசிங்கர்


பிரம்மராஜனின் ஞாபகச் சிற்பம் என்ற கவிதைத் தொகுதியை தற்செயலாக மிகவும் தற்செயலாகப் பார்த்தேன்.  1988 ஆம் ஆண்டு வந்த இந்தப் புத்தகத்தின் விலை ரூ 12 தான்.  தன்யா பிரம்மா பதிப்பகம் மூலம் வந்திருக்கிறது.  இதில் முக்கியம் நாகார்ஜøனனின் முன்னுரை.  அந்த முன்னுரையைப் பயன்படுத்த வேண்டுமென்றால் அவருடைய அனுமதியைப் பெற வேண்டுமென்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  
ஒருவர் பிரம்மராஜன் புத்தகத்திற்கு நாகார்ஜøனன் முன்னுரையைப் படிப்பதற்கு அலாதியான திறமை பெற்றவராக இருக்க வேண்டும்.
ஒரு காலத்தில் வேகம் என்றால் அதை பிரம்மராஜன் என்றுதான் குறிப்பிடுவார்கள்.  கவிதைகளாக எழுதிக் குவிப்பவர் பிரம்மராஜன்.  அழகான அவர் கையெழுத்தில் அவர் அனுப்பிய பல கவிதைகளைப் படித்திருக்கிறேன்.
ஆனால் சமீபத்தில் அவர் கவிதைகள் எழுதுகிறாரா என்பது தெரியவில்லை.  தன்னை கவிதை மூலம் வெளிப்படுத்திக் கொண்டவர், இப்போது மௌனமாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை. 
அவர் கவிதை எழுதுவதோடல்லாம் இரண்டு முக்கியமான புத்தகங்களைக் கொண்டு வந்துள்ளார்.  ஒன்று ஆத்மாநாம் கவிதைத் தொகுதி.  இரண்டாவது சமகால உலகக் கவிதை.  உயிர்மை வெளியீடாக இப் புத்தகம் டிசம்பர் 2007ல் வெளிவந்த தொகுப்பு.
அவருடைய மீட்சி என்ற கவிதைக்கான சிற்றேடு.  அந்த மாதிரி தரமான உயர்வான அச்சில் ஒரு சிறுபத்திரிகை கொண்டு வருவது சிரமம்.  ஆனால் அவர் துணிந்து கொண்டு வந்தார்.  
பொதுவாக பிரம்மராஜன் கவிதைகளை வாசகர்கள் அவ்வளவு எளிதில் அனுக முடியாது.  எனக்கு பிரம்மராஜனின் கவிதைகளைப் படிக்கும் போது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாய்ப் புரியும்.  சில புரியாமலே போய்விடும். சிலவற்றைப் படிக்கும்போது வேறு அர்த்ததத்தில் தாவி விடும்.
தற்செயலாக என் கண்ணில் பட்ட ஞாபகச் சிற்பம் என்ற புத்தகத்தில் ஒரு கவிதை.  கவிதையின் தலைப்பு அய்யனார்.
மொத்தமே 3 வரிகள்தான் கவிதையே...

அய்யனார்

அப்பனுக்கு கல்குதிரைகள்
மகனுக்கு மண்குதிரைகள்
எனக்கு மனிதக் குதிரைகள்

மாலை நேரத்தில் இக் கவிதையைப் படித்துவிட்டு நான் யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.  இங்கு எனக்கு என்பது என்ன?
அய்யனாரே அவர் முன் உள்ள மனிதர்களைப் பார்த்துச் சொன்னதா?
இந்தக் கவிதையில் கூறுவது யார்?  அய்யனாரா?  அவர்தான் மனிதர்களைப் பார்த்து அப்படி சொல்ல முடியும் என்று தோன்றுகிறது.
கல்குதிரை, மண் குதிரை என்று சொல்லும்போது. மனிதர்களும் ஒரு விளையாட்டாக அய்யனார் போன்ற சாமிக்கு ஆகிவிடுகிறது.  
இந்தக் கவிதைத் தொகுதியில் வெளிவந்திருக்கும் மற்ற கவிதைகளையும் படிக்க படிக்க சுவாரசியமாக இருக்கிறது.  ஆனால் திட மனதுடன் நீங்கள் நாகார்ஜøனன் பிரம்மராஜன் கவிதைகளைக் குறித்து எழுதியதைப் படிக்க வேண்டும்.     

12.7.16

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்

அழகியசிங்கர்


ஒருநாள் காலையில் வாயில் ஒரு எலியைக் கவ்விக்கொண்டு  ஒரு பூனை எங்கள் அடுக்கக வளாகத்தில் நுழைந்து விட்டது. பூனையைத் துரத்தும்போது வாயில் வைத்திருந்த எலியைப் போட்டுவிட்டு ஓடிவிட்டால் என்ன செய்வது?  ஜாக்கிரதையாக பூனையை வெளியே எலியுடன் துரத்தவேண்டும்.  அப்படித்தான் மெதுவாக துரத்தி விட்டேன்.  

நாயைவிட பூனை மனிதர்களிடம் எளிதில் பழகாது.  மேலும் ஒருவர் வீட்டில் நாய் வளர்க்கிறார்கள் என்றால் அவர்கள் வீட்டிற்குப் போவதற்கே விரும்ப மாட்டேன்.  தெருவில் நாய்கள் நடமாடினால், நாய்களை உற்றுப் பார்க்க மாட்டேன்.  உற்றுப் பார்த்தால் போதும் நம்மைத் தொடர்ந்து வர ஆரம்பிததுவிடும்.  பிஸ்கட் கட்டாயம் வாங்கிப் போட மாட்டேன். அதே சமயம் பூனையைப் பார்த்தால் அதை அடித்துத் துரத்துவதுதான் என் முதல் வேலை. அதன் முன் பெரிய சத்தத்துடன் குதிப்பேன்.  என் சத்தத்தைக் கண்டு அது ஒன்றும் கவலைப் படாது.  அப்போதுதான் கையில் எதாவது கிடைக்கிறதா என்று பார்ப்பேன்.  இந்தச் சமயத்தில்தான் அது நகர ஆரம்பிக்கும். 

காலையில் தெருவில் மீனு மீனு என்று கூவி விற்கும் கிழவி முன் தெருவில் உள்ள அத்தனைப் பூனைகளும் சூழ்ந்து கொள்ளும்.  காக்கைகளும் ஆவலுடன் உலாவும்.

தற்செயலாக வைதீஸ்வரனின் நிழல் வேட்டை என்ற கவிதையைப் படித்தேன். பூனையைப் பற்றியும் எலியைப் பற்றியும் எழுதியிருந்தது.  உடனே இங்கே வாசிக்க அளிக்கிறேன்.


நிழல் வேட்டை


இலையிடையில்
எலி நினைவால்
பூனை நீண்டு
புலியாகும்.
செவிகள் கொம்பாகி
வாலில் மின் பாயும்
நகங்கள் கொடும்பசி போல்
மண்ணைத் தோலுரிக்கும்.
காற்றின் கண்ணிமைப்பில்
இலைகள் நிலைமாறி
எலிகள் நிழலாகப்
புலி மீண்டும் பூனைக்குள் ஒடுங்கி
முதுகைத் தளர்த்தும்.
கிட்டாத கசப்பை
மியாவால்
ஒட்டி, ஓட்டில்
வளைய வரும்
வீட்டுப் பூனை.

அதற்கு மட்டும் ஒரு ஆகாயம் என்ற வைதீஸ்வரன் கவிதைத் தொகுப்பில் வெளிவந்த கவிதை இது.  இந்தப் புத்தகம் ஒரு விருட்சம் வெளியீடு.

10.7.16

ஒரு கதை ஒரு கவிதை வாசிப்புக் கூட்டம் 7
வழக்கம் போல் நடைபெறும் ஏழாவது கூட்டம் இது.  நடேசன் பூங்கா இல்லை.  வேற இடத்தில் கூட்டத்தை மாற்றி உள்ளோம்.  யாவரும் வந்திருந்து கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
புதியதாக எழுதுபவர்கள் அவர்களுடைய படைப்புகளையும் படிக்கலாம்.  அதற்கு முக்கியத்துவம் தரப்படும்.

மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வரன் பூங்காவில் கூட்டம் நடைபெறுகிறது.  மாலை நான்கு மணியிலிருந்து ஐந்தரை வரை.

சிறுபத்திரிகைகளால் கதைகளின் தன்மை மாறியிருக்கிறதா என்ற தலைப்பில் உரையாடல் நடக்கிறது.

கலந்து கொள்பவர்கள் : அழகியசிங்கர், கிருபானந்தன், சுந்தர்ராஜன், நீங்களும்.


9.7.16

பேட்டி

(நவீன விருட்சம் 66வது இதழில் (ஜøன் 2005ல் வெளிவந்தது) அசோகமித்திரன் எழுதிய கட்டுரையைத் தந்திருக்கிறேன் வாசிக்க.  100வது இதழ் கொண்டு வரும்போது இன்னொரு திட்டமும் உள்ளது.  முதல் இதழிலிலிருந்து நூறாவது இதழ் வரை பிரசுரமானவைகளிலிருந்து ஒவ்வொரு இதழிலிருந்தும் முக்கியமான ஒரு படைப்பு விதம் எடுத்து புத்தகமாகக் கொண்டு வர எண்ணம்.) 

அசோகமித்திரன்

                                                                                         பேட்டிஒரு புது மாதப் பத்திரிகைக்காக நண்பர் ஒருவர் என்னைப் பேட்டி கண்டார்.  கேள்விகள் அவருடையது.  பதில்களை எழுதிக் கொடுத்து விட்டேன்.  அச்சில் எப்படி வரப் போகிறது என்று காத்திருந்து பார்க்க வேண்டும்.
கடந்த பத்தாண்டுகளாகத்தான் நான் பேட்டி காணக் கூடியவனாக நினைக்கப் பட்டிருக்கிறேன்.  பேட்டி காண வருபவர்கள் ஒருவர் தவறாமல் அவர் காணும் பேட்டி மிகவும் வித்தியாசமானது என்றுதான் சொல்வார்.  ஆனால் ஒரே மாதிரிக் கேள்விகள்.  அல்லது ஒரே மாதிரிப் பதில்களைப் பெறக்கூடும் கேள்விகள்.
உண்மையில் இந்தப் பேட்டிகளில் பேட்டி காணப்படுபவரை விட பேட்டி காண்பவரின் நோக்கம்தான் நன்கு வெளிப்படுகிறது.  ஆரம்பத்தில் அச்சில் என்னுடைய பேட்டிகளைக் கண்டு நான் திகைத்துப் போயிருக்கிறேன்.  இப்போது பதில்களை எழுதிக் கொடுத்து விடுவது அதனால்தான்.  இல்லாது போனால் பேட்டி காண்பவர் அவராகவே பதில்களை எழுதிக்கொண்டு விடுவார்.  இதைத் திட்டமிட்டபடி செய்வது உண்டு.  அப்படியொரு திட்டம் இல்லாமல் பேட்டிகள் நிகழ்ந்திருக்கின்றன.  இதெல்லாவற்றுக்கும் மேலாக ஆசிரியரின் தேர்வு என்று ஒன்றுண்டு.  அவர் வெட்டி விடும்போது எப்படி நான் முக்கியம் என்று நினைத்ததை உணர்ந்து கொண்டு அதை வெட்டிவிடுகிறார் என்றும் ஆச்சரியப் பட்டிருக்கிறேன்.
பேட்டிகளே பத்திரிகைத் தேவைக்காக உருவான ஒரு வடிவம்.  வள்ளுவரும், வீரமாமுனிவரும் பேட்டி கொடுத்ததாக வரலாறில்லை.  பத்தொன்பதாம் நூற்றாண்டில் பத்திரிகைகளும் மக்களிடையே ஜனநாயகச் சிந்தனைகளும் எழுச்சி பெற ஆரம்பித்ததில் ஒரு பிரச்னை குறித்துக் கேட்டு அதற்கு அந்த அறிஞரின் பதிலைத் தருவதில் பேட்டி வடிவம் ஒரு மாதிரித் தெளிவு பெறத் தொடங்கியது.
இரண்டாம் உலக யுத்தம் முடிந்தவுடன் சில அமெரிக்க இளைஞர்கள் üபாரிஸ் ரிவ்யூý என்ற பத்திரிகையைத் தொடங்கினார்கள்.  (கம்ப்யூட்டர்க்காரர்கள் திட்டவட்டமான தகவல்கள் பெறலாம்).  இவர்களுடைய பத்திரிகையில் பிரபல எழுத்தாளர்கள் இடம் பெறவும் வேண்டும், அவர்களுக்குச் சன்மானம் தரும்படியாகவும் இருக்கக் கூடாது.  இதற்கு ஓர் உத்தியாக üபாரிஸ் ரிவ்யூý பேட்டிகள் தொடங்கின.  பேட்டிக்கு முன்பு பேட்டி காண்பவர்  அந்த எழுத்தாளரின் படைப்புகள், அவருடைய தொடக்கம், வளர்ச்சி, வாழ்க்கை வரலாறு, படைப்புகள் அனைத்தையும் நன்கு அறிந்து ஆராய்ந்து வைத்திருப்பார்.  எழுத்தாளருக்கு அந்தப் பேட்டி புத்துணர்ச்சியூட்டுவதாக அமையும்.
பேட்டிகள் பற்றி முற்றிலும் எதிர் கோணத்தில் ஒரு கருத்து இருக்கிறது.  பேட்டியைப் படிப்பவர்கள் சாதாரணப் பத்திரிகை வாசகர்கள்.  அவர்களுக்கு எழுத்தாளர்கள் பற்றி அதிகம் தெரிந்திருக்கப் போவதில்லை.  ஆதலால் பேட்டி காண்பவர் அந்த வாசகர்களின் பிரிதிநிதியாக இருந்து அந்த எழுத்தாளரின் பதில்களைப் பெறுவதுதான் பெரும்பான்மை வாசகர்களுக்கு நியாயம் செய்வது ஆகும்!
ஆனால் பேட்டிகள் சலிப்படையச் செய்கின்றன.  உண்மையில் எழுத்தைப் பற்றியும் எழுத்தாளரைப் பற்றியும் ஒப்புக்குத்தான் கேள்விகள்.  பல கேள்விகள் ஜோசியர்களைக் கேட்பவையாக இருக்கும்.  இது எப்போது முடியும்?  அது எப்போது மாறும்?  இதை ஏன் நீங்கள் செய்யவில்லை?  அதை ஏன் செய்தீர்கள்?  உண்மையில் இதெல்லாம் யாருக்கும் எந்தத் தெளிவும் ஏற்படுத்தப் போவதில்லை.
எழுத்தாளனுக்கு - புனைகதை எழுத்தாளனுக்கு - அவனுடைய புனைகதைதான் முறையான வெளிப்பாடு.  அப் புனைகதைகளுக்கு அப்பால் அவன் பேச வேண்டியிருந்தால் அவன் புனை கதைப் படைப்பை ஒழுங்காகச் செய்யவில்லை என்றுதான் பொருள்.
இதெல்லாம் எல்லாருக்கும் தெரிந்ததுதான்.  ஆனால் பேட்டி தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.  பல சந்தர்ப்பங்களில் பேட்டி தாட்சண்யத்துக்காக ஒப்புக் கொள்ளப் படுகிறது.  பேட்டி காண வருபவர் நிறுவனம் எதையும் சாராது பாதுகாப்பற்ற நிலையில் இருப்பார்.  இந்தப் பேட்டி எதாவது ஒரு பத்திரிகையில் ஒரு சிறு தொகை அவருக்குப் பெற்றுத் தரக்கூடும்.
எனக்குத் தெரிந்த சிலர் வரிந்து கட்டிக்கொண்டு பேட்டிகள் தந்திருக்கிறார்கள்.  சென்ற ஆண்டு (அல்லது அதற்கு முந்தைய ஆண்டு) சாகித்திய அகாதெமி தலைவர், துணைத்தலைவர், மொழிவாரி ஒருங்கிணைப்பாளர் தேர்வு நடந்தது.  தலைவர் உருது எழுத்தாளர்.  அவரை யாரும் அறிமுகமில்லாதவர் என்றும் சொல்ல முடியாது.  அவர் துணைத்தலைவராக இருந்திருக்கிறார்.  இப்போது தலைவராக விரும்புகிறார்.  நம் குடியரசுத் தலைவர் தேர்தல் கூட ஒரு முறை ஒரு துணைத் தலைவரைத் தலைவராக்கியது.   இந்த உருது எழுத்தாளர் முரளி மனோகர் ஜோஷி பற்றிக் கவிதை எழுதியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு.  உருது மொழியில் இந்துத்துவா!   எனக்கு அன்று அவர் என்னதான் எழுதியிருக்கிறார் என்று அறிய ஆவலாகத்தான் இருந்தது.  ஆனால் பல தமிழ் எழுத்தாளர் தலைவர்கள் (அல்லது பிரமுகர்கள்) அவர் கவிதை எழுதினார் என்று கோபம் கொண்டிருந்தார்கள்.  அந்த மனிதர் விமரிசக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார் என்றுதான் அறிந்தவர்கள் சொல்வார்கள்.  விமரிசகர் கவிதை எழுதியிருந்தால் எப்படி இருக்கும்.  அன்று நிறையத் தமிழ்ப் பேட்டிகள் இந்த உருது மனிதரைத் தாக்கின.  இதை அவர் அறிந்திருந்தால் தமிழ் எழுத்துலகில் இந்த அளவு தாக்கப்படுவதற்கு அவருடைய பெயரும், புகழும் பரவியிருக்கிறதா என்று நினைத்துப் பூரித்துப் போயிருப்பார்.  முரளி மனோகர் ஜோஷியைப் புகழந்து பாடிய கவிதையை யாராவது தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டால் யனுள்ளதாயிருக்கும்.  இங்கேதான் எவ்வளவு பேரைப் புகழ்ந்து பாட வேண்டியிருக்கிறது.
         

8.7.16

வலலிக்கண்ணன் கடிதம்....

அழகியசிங்கர்    நவீன  விருட்சம் என்ற இதழைப் பார்த்தவுடன் இருவர் எனக்குக் கடிதம் எழுதாமல் இருக்கமாட்டார்கள். ஒருவர் வல்லிக்கண்ணன்.  இன்னொருவர் தி.க.சி. அவர்களுடைய கடிதங்களைப் பார்த்தால்தான் எனக்குத் தெரியும், விருட்சம் எல்லோருக்கும் போய் சேர்ந்திருக்குமென்று.

நவீன விருட்சத்தைப் புரட்டிக்கொண்டு வந்தபோது இக் கடிதம் கண்ணில் பட்டது.  உடனே இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். காங்கிரஸ் தலைவர் மூப்பனாருடன் ந பிச்சமூர்த்தி நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட புகைப்படத்துடன்...

வல்லிக்கண்ணன்                                                                                      29.09.2004
சென்னை                                                                            

     நீங்கள் சென்னையில் இல்லை, உத்தியோக உயர்வுடன் பந்தநல்லூர் வங்கிக் கிளைக்கு மாறுதல் பெற்றிருப்பதையும், மயிலாடுதுறையில் தங்கி தினசரி அங்கே போய் வந்து கொண்டிருப்பதையும் 64வது இதழ் மூலம் தெரிந்து கொண்டேன்.  உங்கள் அனுபவக் கசப்புகளை கவிதையில் பதிவு செய்திரக்கிறீர்கள்.  அட்டை உரையாடலில் வேறு அனுபவங்களை ரசமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

புகழ் பெற்ற üமயூரா லாட்ஜ்ý ஊத்தப்பம் பற்றியும் தெரிந்து கொண்டேன். ஒரு ஊத்தப்பம் ஆர்டர் செய்தும் முழுசாகச் சாப்பிட முடியாத  அதன் தரம் பற்றியும் அறிந்தேன்.  üசாப்பிட விளங்காத அளவிற்குý அதன் ருசி, காரம், மணம், குணம் இருக்கும் போலும்.  ஒருவேளை பெரிசாக, பருமனாக, சப்பென்று இருக்குமோ என்னவோ என்று என் மனம் சந்தேகப்படுகிறது.

வாணாதிராஜபுரம் ஊரின் பசுமையான சாலை, வேலூர் பாதைகள் வயல்கள் சூழ்ந்த, ஆள்கள் நடமாட்டமில்லாத பிரதேசம், இரவுக்காட்சி எல்லாம் என்னுள், üஆகா, அருமையான காட்சிகள்ý என்ற எண்ணத்தை எழுப்பும் விதத்தில் விவரிக்கப் பட்டிருக்கின்றன.  இவற்றை எல்லாம் கண்டு களித்து ரசிக்க எனக்குக் கொடுத்து வைத்திருக்கவில்லை என்று என் மனமாகப்பட்டது வருத்தப்பட்டுக் கொள்கிறது.  அது ஒரு குட்டிச் சாத்தான்.

üதனிமை சிலசமயங்களில் மோசமான எண்ணங்களையும் உருவாக்கும்,ý என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.  சரிதான்.  தனிமை என் இனிய நண்பன் என்று நான் ஒரு அருமையான கவிதை எழுதியிருக்கிறேன்.  சரி, எப்படியோ நாள்கள் போகின்றன.

'நவீன விருட்சம்' இதழ் சிறப்பாக இருக்கிறது.  மறக்கப்பட்டுவிட்ட கட்டுரை, கதைகளின் மறுபிரசுரம் பாராட்டப்பட வேண்டியதாகும்.  இப்படி அருமையான விஷயங்கள் காலப் பாழில் மறதிப் புழுதியில் மக்கிப் போயுள்ளன.  அவற்றை எல்லாம் திரும்பத் திரும்பப் படிப்பவர்கள் எவருமிலர்.  பல சமாச்சாரங்களை ஒரு தடவை படிக்கக்கூட வாசகர்கள் கிடைப்பதில்லை.  ஆனாலும் எழுத்து உற்பத்தி மிக நிறைய ரொம்ப ஏராளமாகப் பென்னம்பெரும் அளவில் நடந்து கொண்டிருக்கிறது. 


7.7.16

எப்படி இந்தப் பெண்கள் சமாளிக்கப் போகிறார்கள்

எப்படி இந்தப் பெண்கள் சமாளிக்கப் போகிறார்கள்அழகியசிங்கர்சமீபத்தில் நடந்த ஒரு பெண்ணின் கொடூரமான கொலையிலிருந்து பல விஷயங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன.  பெண்களைத் துரத்துவது என்பது காலம் காலமாக நடந்து வருகிறது.  எழுபது வாக்கில் என் உறவினர் பெண்ணை என்னுடன் கல்லூரியில் படித்தப் பையன் துரத்துவான்.  எதாவது கிண்டலாகப் பேசுவான்.  அவனுக்குத்  தெரியாது அந்தப் பெண் எனக்கு உறவினர் என்று. அவனிடம் இதுமாதிரி செய்யாதே என்று சொல்ல நினைத்தேன்.  அதற்குள் அவனுக்கு ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது. மின்சார வண்டியில் அவன் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தான். மீனம்பாக்கம் வரை அவன் சென்று கொண்டிருக்கும்போது, அவன் முன் பக்கம் உள்ள பெண்கள் பெட்டியில் இருந்த பெண்களைக் கிண்டல் செய்தபடி தலையை அளவுக்கு அதிகமாக நீட்டியபடி வந்திருக்கிறான்.  மீனம்பாக்கத்தில் ரொம்பவும் குறுகலாக இருந்த மின் கம்பத்தில் அவன் தலை மோதி, சம்பவம் இடத்திலேயே இறந்து விட்டான்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் மேற்கு மாம்பலம் இப்போது இருக்கிற வசதி இல்லாத காலத்தில் தெரு விளக்குகள் பளிச்சென்று எரியாது.  மாலை ஏழு மணிக்கே இருட்டத் தொடங்கி விடும்.  பெண்கள் தனியாக தெருவில் நடப்பதற்கே பயப்படுவார்கள்.  தனியாக நடந்து வரும் பெண்களை இடிப்பதற்கென்றே சிலர் இருப்பார்கள்.  

இதுமாதிரியான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டே வருகின்றன. பெண்களைத் துரத்துவது அல்லது எதாவது காரணம் காட்டி பெண்களை அடைய முயற்சி செயவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

விபரீதமாகப் போகும்போது கொலை செய்யும் அளவிற்குப் போய்விடுவார்கள்.  .  முன்பைவிட இப்போதெல்லாம் இது குறித்துப் பேசும் அளவிற்கு முன்னேறி உள்ளார்கள்.  ஊடகத்தில் இது குறித்து சலசலப்பு ஏற்படுகிறது.  நீதிபதிகள் இதை தனியாகவே ஒரு கேஸôக எடுத்துக்கொண்டு அரசாங்கத்தை விஜாரிக்கிறார்கள்.

இவ்வளவு நடந்தும் இதுமாதிரியான நிகழ்ச்சிகள் நடக்காமல் இருக்குமா? நடக்கத்தான் நடக்கும்.  பெண்களைத் துரத்தும் ஆண்கள் இருக்கத்தான் இருப்பார்கள். கொஞ்சம் பார்க்க லட்சணமாக இருக்கும் பெண்களுக்கு ஆபத்து எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும்.

இன்றைய காலத்துப் பெண்களும் துணிச்சலானவர்கள்.  ஆண்களின் இந்தத் துரத்தல்களைப் பற்றி கவலைப்படாதவர்கள்.  யாராவது சிலர்தான் ஏமாந்து விடுகிறார்கள்.

என் சீர்காழி வங்கிக் கிளையில் புதியதாக சேர்நத பெண் கேரளாவைச் சேர்ந்தவள்.  பார்க்க லட்சணமாக உயரமாக இருப்பாள்.  வங்கியில் புதிததாக சேர்பவர்களுக்கு பயிற்சி கொடுப்பார்கள்.  அப்படி பயிற்சி கொடுக்கும் இடத்திலேயே அந்தப் பெண்ணிற்கு பிரச்சினை ஆரம்பித்து விட்டது.  அந்தப் பெண்ணை பயிற்சி எடுத்துக்கொள்ளும் புதியதாக சேரும் ஒரு இளைஞன் துரத்த ஆரம்பித்தான்.  அவனிடமிருந்து தப்பிக்கவே போதும் போதும் என்று ஆகிவிட்டது.  செல்போனில் வெளி ஆட்கள் அடித்தால் எடுக்க மாட்டாள். முக்கியமாக முகநூலில் தொடர்பு கிடையாது.  எப்போது சீர்காழியை விட்டு ஆழப்புழைக்குப் போகப்போகிறோம் என்று தவமாய் இருப்பாள். மேலும் சீர்காழி என்ற இடத்தில் அறை எடுத்துக்கொண்டு அந்தப் பெண்மணி இன்னொரு ùப்ண்மணியுடன் கூட்டாக இருந்தாலும், சுற்றிலும் அவளை நோட்டமிடும் ஆண்களைக் கண்டு அவள் பயப்படாமல் இல்லை. ஆனால் இதைப் பற்றியெல்லாம் வெளியே யாரிடமும் சொல்ல மாட்டாள்.  தைரியமான பெண்.  மிக சாதாரண குடும்பத்தைச் சார்ந்த பெண் அவள். இப்போது அவள் ஊருக்கு திரும்பிப் போய்விட்டாள்.  திருமணம் செய்துகொண்டு பதவி உயர்வும் பெற்று மகிழ்ச்சியாக இருக்கிறாள்.  

சமீபத்தில் என் உறவினருடன் ஒரு நண்பர் வீட்டிற்குச் சென்றோம்.  அவர்கள் டில்லியைச் சேர்ந்தவர்கள்.  டில்லி ரொம்ப மோசமாம். மாலை 7 மணிக்கே தனியாக எந்தப் பெண்ணும் போக முடியாதாம்.  'உங்கள் சென்னை பரவாயில்லை,' என்றார் நண்பர். 

சரி. இப்படி தொடர்ந்து தொந்தரவு செய்யும் ஆண்களை எப்படி இந்தப் பெண்கள் சமாளிக்கப் போகிறார்கள்.  இது பெரிய கேள்விக்குறி.   
   

6.7.16

இன்று அவர் நினைவு நாள்.

இன்று அவர் நினைவு நாள்.  


அழகியசிங்கர்

ஆத்மாநாமை நான் முதன் முதலாக நண்பர் வைத்தியுடன்தான் சந்தித்தேன்.  என்னை ஆத்மாநாமிற்கு அறிமுகப்படுத்தினார் வைத்தி. ழ வெளியீடாக வந்திருந்த காகிதத்தில் ஒரு கோடு, அவரவர் கை மணல், சூரியனுக்குப் பின் பக்கம் என்ற மூன்று கவிதைத் தொகுதிகளை வாங்கினேன்.  காகிதத்தில் ஒரு கோடு என்ற புத்தகத்தில் ஆத்மாநாமின் கையெழுத்தைப் போடும்படி கேட்டுக்கொண்டேன்.

அன்று ஆத்மாநாம் நான் வைத்தி மூவரும் ராயப்பேட்டையில் உள்ள ஆனந்த் வீட்டிற்குச் சென்றோம்.  அதன்பின்,  சாந்தி தியேட்டர் பக்கத்தில் உள்ள ஒரு துணிக்கடைக்குச் சென்றோம்.  ஆனால் ஒன்றும் வாங்கவில்லை.  ஏன் அங்கு சென்றோம் என்பது புரியாத புதிர்.  அவருடைய நிஜம் என்ற கவிதையைப் பற்றி விஜாரித்தேன். அவர் பதில் சொன்னது ஞாபகத்தில் இல்லை.

அந்தக் கவிதை இதோ:

நிஜம் நிஜத்தை நிஜமாக
நிஜமாக நிஜம் நிஜத்தை
நிஜத்தை நிஜமாக நிஜம்
நிஜமே நிஜமோ நிஜம்
நிஜமும் நிஜமும் நிஜமாக
நிஜமோ நிஜமே நிஜம்
நிஜம் நிஜம் நிஜம்


இரண்டாவது முறையாக நான் ஆத்மாநாமை இலக்குக் கூட்டத்தில் சந்தித்தேன்.  ஒன்றும் பேசவில்லை.  ஆனால் அவர் கையில் ழ என்ற பத்திரிகையை வைத்துக் கொண்டிருந்தார். அப் பத்திரிகையை இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருந்தார்.  அவரைப் பார்க்க பாவமாக இருந்தது.    
மூன்றாவதாக நான் ஆதமாநமை ஞாநியின் திருமண வைபத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த பரீக்ஷா நாடகத்தில் சந்தித்தேன்.  என் பக்கத்தில் அமர்ந்திருந்த ஆத்மாநாமிடம் நகுலனைப் பற்றி கேட்டேன்.  'அவர் முக்கியமான எழுத்தாளர்,  எளிதில் புரியாது,'  என்றார் ஆத்மாநாம்.  என்னிடம் பேசிக்கொண்டு இருந்தவர், விமலாதித்த மாமல்லன் இருக்கும் இடத்திற்கு எழுந்து போய்விட்டார். மாமல்லனிடம் ஆத்மாநாம் கொடுத்தப் புத்தகத்தை வாங்கச் சென்று விட்டார்.

நான்காவது முறையாக ஜே கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தில் ஆத்மாநாமைச் சந்தித்தேன்.  நானும் அவரும் கைக் குலுக்கிக் கொண்டோம். ஆனால் ஒன்றும் பேசவில்லை.

ஐந்தாவதாக அவர் தற்கொலை பற்றிய செய்தியை அறிந்தேன்.  அவருடைய நண்பர்கள் இரங்கல் கூட்டமொன்றை நடத்தினார்கள்.   நானும் கலந்து கொண்டேன்.  உருக்கமான இரங்கல் கூட்டம் அது. முதன் முதலில் தற்கொலை செய்துகொண்ட கவிஞன் ஆத்மாநாமாகத்தான் இருக்க வேண்டும்.

இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரமிள், வெளியேற்றம் என்ற ஆத்மாநாம் கவிதையைப் படித்துவிட்டு கேவி அழுதார். நம்ப முடியாமல் இருந்தது.  இன்று ஆத்மாநாம் நினைவு நாள்.  என் நண்பர் வைத்தி, வளைந்த மீசைக்கொண்ட நண்பரை இனி பார்க்க முடியாது என்று ஆத்மாநாம் பற்றி எழுதிய கவிதை வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது.