Skip to main content

நீங்களும் படிக்கலாம் 22


அழகியசிங்கர் 


22) வேடிக்கைக் கவிதைகள்..


போன ஆண்டு பேயோன் என்ற எழுத்தாளரைப் பற்றி ஒரு இலக்கியவாதி சிலாகித்துப் பேசியதை அறிந்து யார் இந்தப் பேயோன் என்று யோசிக்கத் தொடங்கினேன்.  எனக்கு அதுவரை தெரியாத பெயராக இருந்தது.  செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி 2015 ஆம் ஆண்டு பேயோன் என்பவரின் இரண்டு புத்தகங்களை வாங்கினேன்.  காதல் இரவு என்ற அவருடைய கவிதைத் தொகுதியும், பேயோன் 1000 என்ற சமகால ட்விட்டர் நுண்பதிவு புத்தகமும்.  வேற புத்தகங்கள் அவருடையது எதாவது உள்ளதா என்பது தெரியவில்லை.  இப்புத்தகங்களில் ஒன்று 2011 ஆம் ஆண்டிலும் இன்னொன்று 2009ஆம் ஆண்டிலும் ஆழி வெளியீடாக வந்துள்ளன. 
கவிதைத் தொகுதிக்கு ஏன் காதல் இரவு என்ற பெயரை சூட்டினார் என்று யோசித்துக் கொண்டு அந்தப் புத்தகத்தைப் புரட்டினேன்.  சமீப காலத்தில் நான் படிக்க விரும்புகிற கவிதைத் தொகுதிகளை அவ்வளவு சுலபமாக நெருங்க முடிவதில்லை.  ஆனால் பேயோன் கவிதைத் தொகுதி வித்தியாசமான தொகுதியாக இருந்தது.  அவர் கவிதைகளில் தென்படும் அங்கத உணர்வு ரொம்பவும் இயல்பாக செயல்படுகிறது.  கவிதையில் ஒருவிதத் தீவிரத்தன்மையுடன் அலட்சிய மன்பான்மையும் செயல்படுகிறது.
புதிய கவித்துவங்கள் என்ற பெயரில் அவர் எழுதிய கட்டுரைகளில் தெளிவாகவே கவிதையைப் பற்றிய சில விஷயங்களை முன் வைக்கிறார்.  üகவிதையைப் படித்தவுடன் புரிந்துவிட அது நீதிக் கதை அல்ல, ஒன்றுமே புரியாமல் அடித்துவிட அது மழலை மொழியும் அல்ல.ý என்று குறிப்பிடுகிறார்.
இன்னொரு இடத்தில் ஒரு கவிதை எப்படி கவித்துவமாகிறது? என்ற கேள்வியை எழுப்பி, அது கையாளும் பொருண்மையினால்தான் என்கிறார். திரும்பவும் இவர் எப்படி கவிதை எழுதியிருக்கிறார் என்று பார்க்கும்போது, காதல் என்ற வார்த்தையை கிண்டல் செய்கிறாரோ என்று தோன்றுகிறது.  

முதல் பக்கத்திலேயே இப்படி எழுதுகிறார்.
üதெருவில் உன் பெயர் கொண்ட 
கடைகள் இருந்தால்
உடனே போய் எதாவது
வாங்கிவிடுவேன் 
காதல் கவிதைகளை நக்கல் செய்கிறாரோ என்ற சந்தேகம்தான் நம் மனதில் ஏற்படுகிறது.  
இன்றைய காலத்தில் சிலசமயம் கவிதைத் தொகுதியையோ, சிறுகதைத் தொகுதியையோ, நாவலையோ படிப்பது என்பது யாரோ ஒருவர் தண்டனை கொடுப்பதுபோல் தோன்றுகிறது.  ஆனால் பேயோன் கவிதைகள் அப்படிப்பட்ட உணர்வை ஏற்படுத்தவில்லை.  
இத் தொகுப்பில் கவிதைகளைப் பற்றியே கவிதை எழுதியிருக்கிறார்.  அதாவது மெட்டா கவிதை என்று அப்படி எழுதுவதைக் குறிப்பிடலாம். உதாரணமாக : மரத்தில் சிக்கிய கவிதை என்று ஒன்றை எழுதியிருக்கிறார்.  இது சற்று நீளமான கவிதை.  உரைநடை வடிவத்தில் எழுதப்பட்ட சோதனை கவிதை இது.  இதைப் படிக்கும்போதும் படிக்க சுவாரசியமாக இருக்கிறது.
எழுதிய கவிதை ஒன்று மரத்தில் சிக்கிக் கொண்டது.  அதை திரும்பவும் மீட்க வழி தெரியவில்லை.  கடைசியில் இப்படி எழுதுகிறார்.
üஇரண்டாவது, மூன்றாவது, நான்காவது முறையாக அந்தக் கவிதையை மீண்டும் எழுதிப் பார்த்துவிட்டேன்.  அதற்குப் பிறகு பலவற்றை எழுதிக் கிழித்தாயிற்று.  கழுவேறிய மரியாதை அந்த ஒரு கவிதைக்குத்தான்,ý என்று முடிக்கிறார்.
தேவையானவை என்ற கவிதையைப் படிக்கும்போது அது வெறும் காய்கறிகளின் லிஸ்ட்.
பெங்களூர் தக்காளி  - 2
குடை மிளகாய்      - 1
       ...........என்று லிஸ்ட்டை எழுதி முடித்துவிடுகிறார். வேற ஒன்றும் இதன் மூலம் சொல்ல முயற்சிக்கவில்லை.
அதேபோல் இருபத்திநாலு காதல் கவிதைகள் என்ற நீண்ட கவிதை.
இதேபோல் நக்கலடிக்கும் கவிதையை நான் இதுவரை படித்ததில்லை.
அந்தக் கவிதையின் கடைசிப் பாராவை உங்களுக்கு படிக்க அளிக்கிறேன். 

என்னங்க 
என்னங்க
என அழைத்துக்கொண்டே 
யிருக்கிறாய் விஷயத்தைச்
சொல்லாமல்..

இத் தொகுப்பைப் பார்க்கும்போது கவிதையை எள்ளி நகையாடுவதுபோல் தோற்றம் அளிக்கிறது.  சிலசமயம் சில கவிதைகள் படிப்பவரை சிந்திக்கவும் வைக்கிறது. பொதுவாக பேயோன் எழுதுகிற கவிதைகளைப்போல் பலரும் எழுதியிருக்கிறார்கள்.  ஆனால் அவர்கள் பெரும்பாலும் ஒன்றிரண்டு கவிதைகள்தான் ஒரு தொகுதியில் எழுதி இருப்பார்கள்.  இதில் விதிவிலக்கு என்னவென்றால் பேயோன் தொகுதி முழுவதும் இந்த விளையாட்டை விளையாடியிருக்கிறார்.  எப்போதும் இந்தக் தொகுதியை பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு கவிதைகளை வாசித்துக்கொண்டே இருக்கலாம்.  


காதல் இரவு - கவிதைகள் - பேயோன் - விலை ரூ50 ஆழி பப்ளிஷர்ஸ் 1 ஏ திலகர் தெரு, பாலாஜி நகர், அய்யப்பன்தாங்கல், சென்னை 600 077 தொலைபேசி எண் : 9940147473


 




Comments