30.3.13

பயணீ கவிதைகள்

If there are images in this attachment, they will not be displayed.  Download the original attachment
 
 

அமுதாக்கா இறந்துவிட்டாள்

 
காலையில் படுக்கையிலிருந்து விழித்தெழுந்து
வெளியே வந்து பார்த்தபோது வானம் இருண்டிருந்தது
மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது
எதிரே கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியில்
27.09.2009 அன்று அமுதாக்கா இறந்துவிட்டதாகச் செய்தி இருந்தது
ஆம் அமுதாக்கா இறந்துவிட்டாள்
27.09.2009 திங்கட்கிழமை மாலை 6 மணியளவில்
அமுதாக்கா தூக்குப் போட்டுக் கொண்டு இறந்து போனாள்
அவள் சாவுக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன
பல ஊகங்களும் உலவுகின்றன
அமுதாக்காவை எனக்கு நன்றாகத் தெரியும்
அவள் ஒரு பெண் குழந்தையின் தாய்
முருகனின் அழகு மனைவி
சுந்தர பெருமாளின் அன்பான கள்ளக்காதலி
எங்கள் தெருவின் சிறந்த அழகி
அமுதாக்காவை முதன்முதலில் தேநீர் கடையில்
நண்பர்களுடன் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது பார்த்தது
இடுப்பில் குழந்தையுடன் சொம்பில் தேநீர் வாங்க வந்தவளை
நண்பர்கள் நமட்டுச் சிரிப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்க
நான் மட்டும் வைத்த கண் வாங்காமல்
அமுதாக்கா திரும்புவரை பார்த்துக் கொண்டேயிருந்தேன்
அன்று ஒற்றைச் சாமந்திப்பூ சூடி வந்த அமுதாக்கா
இடத்தை விட்டு அகன்ற பின்பும்
சாமந்திப் பூவின் மணம் அங்கே சுற்றிக் கொண்டிருந்தது
அது அமுதாக்காவின் மாயமாக இருக்கலாம்
எங்கள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளியிருக்கும்
அமுதாக்காவின் இல்லத்திலிருந்து
இப்பொழுது மரண ஓலமும் செண்டை மேளமும் ஒலித்துக் கொண்டிருந்தன
சாமந்திப் பூவின் மணமும் கொஞ்சம் தூக்கலாக வீசிக் கொண்டிருந்தது
இதுவும் அமுதாக்காவின் மாயமாக இருக்கலாம்
மேலும் மழை வலுத்துப் பெய்யத் தொடங்கியிருந்தது
 
ஆற்றுப்பாலத்தைக் கடக்கும் மண்புழு
 
அதுவொரு கிழக்கு மேற்காக அமைந்த நெடிய ஆற்றுப்பாலம்
மண்புழுவொன்று ஆற்றுப்பாலத்தைத் தெற்கிலிருந்து வடக்காக
கடந்து செல்ல நீண்ட நேரமாக முயன்று கொண்டிருக்கிறது
லாரிகளும் பேருந்துகளும் கார்களும் இருசக்கர வாகனங்களும்
ஆற்றுப்பாலத்தில் தொடர்ந்து சென்று கொண்டிருப்பதால்
மண்புழுவின் கடக்கும் காலம் தள்ளிக் கொண்டே போகிறது
அப்பொழுது சிறுமியொருத்தி வடக்கிலிருந்து ஆடிப் பாடிக் கொண்டு
ஆற்றுப்பாலத்தின் ஓரம் வந்து நிற்கிறாள்
வாகனங்களின் ராட்சத வேகத்தையும் இரைச்சலையும் கண்டு
புன்முறுவலுடன் பாலத்தை நோட்டமிடும் சிறுமி
எதிரே மண்புழுவொன்று பாலத்தைக் கடக்க எத்தனிப்பதும்
பின்பு திரும்புவதுமாக இருப்பதைக் காண்கிறாள்
ஆற்றுப்பாலத்தின் ஓரம் சிறுநீர் பெய்துவிட்டு
திடுமென வடக்கிலிருந்து தெற்காக ஆற்றுப்பாலத்தைக் கடக்கத் தொடங்குகிறாள் சிறுமி
சிறுமியின் இந்தத் திடீர் செய்கையால்
வாகனங்கள் ஸ்தம்பித்து ஒன்றோடொன்று மோதிக் கொள்கின்றன
பேருந்தும் பேருந்தும் பேருந்தும் லாரியும் லாரியும் காரும்
காரும் இருசக்கர வாகனமும் லாரியும் லாரியும் லாரியும் இருசக்கர வாகனமும்
காரும் காரும் காரும் பேருந்தும்
இருசக்கர வாகனமும் இருசக்கர வாகனமும் இருசக்கர வாகனமும் பேருந்தும்
ஒன்றோடொன்று மோதி ஆற்றுப்பாலத்தை ஸ்தம்பிக்கச் செய்கின்றன
எதைப் பற்றியும் கவலைப்படாமல் சிறுமி பாலத்தைக் கடக்கத் தொடங்க
மண்புழுவும் ஒருவிதத் துணிச்சலில் பாலத்தைக் கடக்கத் தொடங்குகிறது
சிறுமியும் மண்புழுவும் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொள்கிறார்கள்
பின்பு அவரவர் வழியில் நடக்கத் தொடங்குகிறார்கள்
ஸ்தம்பித்த ஆற்றுப்பாலத்தைக் கடந்தபடி. . . .
 
புதிய சொற்களோடு இரவுக்காகக் காத்திருப்பவர்கள்
 
நேரம்  -  காலை 4.30 மணி
இடம்  -  அயன்புரம் பேருந்து நிலையம்
அன்றைய செய்தித்தாள்கள் ஓரிடத்தில் குவிக்கப்பட்டு
பின்பு பகுதி வாரியாக அடுக்கப்படுகின்றன
உள்ளூர் செய்தி முதல் உலகச் செய்தி வரை
செய்தித்தாள்களில் குவிந்திருக்கும் சொற்களை
பொறுக்கியெடுத்துக் கொண்டு அவரவர் பகுதிகளுக்கு விரைகிறார்கள்
செய்தித்தாள் விநியோகிப்பவர்கள்
செய்தித்தாள் விநியோகிப்பவர்கள் இறைத்த சொற்களை
செய்திகளாகச் சேகரித்துக் கொண்டு
தங்கள் காலையைத் தொடங்குகிறார்கள் அந்தந்த பகுதிவாசிகள்
இந்த வழக்கமான சொற்களை நிராகரித்து
புதிய சொற்களோடு இரவுக்காகக் காத்திருக்கிறார்கள்
திருடர்களும் பொறுக்கிகளும் பேடிகளும் பைத்தியக்காரர்களும்
இவர்களோடு கள்ளக்காதலர்களும் வேசைகளும் காமத்தரகர்களும் காத்திருக்கிறார்கள் 
காத்திருக்கும் இவர்களைப் புன்முறுவலுடன்
கடந்து செல்கிறார்கள் செய்தித்தாள் விநியோகிப்பவர்கள்
 
பச்சைப் பட்சி
 
இன்று வெயில் அடி அடியென அடித்துக் கொண்டிருக்கிறது
நான் என் பச்சைப் பட்சியைத் தேடி கிழக்கே செல்கிறேன்
அவளைக் காண இந்த வெயில் நாள்
ஒரு நல்ல சகுனமென்றே தோன்றுகிறது
கிழக்கு ஒரு பெரும் பாலையென விரிந்திருக்கிறது
இந்தப் பரந்த மணற்பரப்பு எனக்கு எதையோ நினைவூட்டுகிறது
மேலும் பாலையின் ஊளையொலி எனக்கெதையோ சொல்கிறது
எனக்கெதுவும் புரியாமல் கிழக்கின் வழி நடக்கிறேன்
பாலையைத் தொடர்ந்து
கிழக்கு ஒரு காட்டின் வழியே என்னை அழைத்துச் செல்கிறது
நிறம் மாறிக் கொண்டேயிருக்கும் இந்தக் காடு
ஒரே நேரத்தில் வசீகரித்தும் விலகியும்
என்னை நகர்த்திக் கொண்டிருக்கிறது
நான் பச்சைப் பட்சியின் இருப்பிடம் சென்று சேர்ந்தபோது
அவள் அங்கில்லை
அவள் தன் கருத்த ட்ராகனைத் தேடி
தென்கிழக்கே சென்றிருப்பதாக அறிகிறேன்
வந்த வழியைத் திரும்பிப் பார்க்கும்போது
பாலையின் ஊளையொலி மீண்டும் எனக்கெதையோ சொல்வதாக உணர்கிறேன்
புரிந்தும் புரியாத குழப்பத்தில்
நான் இப்பொழுது தென்கிழக்கே பயணமாகிறேன்
 
வெயில் நகரம்
 
நானும் தந்தையும் எங்கள் நிலத்தைப் பிரிந்து வெகுதூரம் வந்துவிட்டோம்
மலைகளுக்கு நடுவே எங்கள் நிலத்தில்
அவரவருக்கான முட்டாள்தனத்துடன் வாழ்ந்து வந்த நாங்கள்
வேறு வழியின்றி இந்த நகரத்திற்கு வந்து சேர்ந்தோம்
நாங்கள் இந்த நகருக்கு வந்து சேர்ந்த நாளில்
வெயில் ஓர் அரக்கியென எங்கும் வியாபித்திருந்தது
மேலும் வெயில் எங்களைப் பின்தொடர்ந்து கொண்டுமிருந்தது
எங்களைப் போலவே பலரும் தங்கள் நிலத்தைப் பிரிந்து
வெயில் பின்தொடர இந்த நகருக்கு வந்து கொண்டிருந்தார்கள்
எங்கள் நிலத்திலிருந்து துண்டிக்கப்பட்ட நாங்கள்
இந்த நகரத்தில் வெயிலுடனும் சில புத்திசாலித்தனத்துடனும் வாழப் பழகிக் கொண்டோம்
நகரத்தில் என்னைப் போலவே வாழும்
ஒரு புத்திசாலிப் பெண்ணை காதல் புரிந்து மனைவியாக்கிக் கொண்டேன்
எப்பொழுதும்போல் வெயில் எங்களைப் பிந்தொடர்ந்து கொண்டிருந்தது
வெயில் நுரைத்துப் பொங்கி நகரமெங்கும் வழிந்து கொண்டிருந்த நாளில்
எங்களுக்கொரு செல்ல மகள் பிறந்தாள்
வெயிலின் நிறத்தோடும் அதன் மினுமினுப்போடும்
வெயில் நகரத்தின் பரிசாக. . .
 
ஒரு மகளின் கனவு
 
காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடன்
தந்தையிடம் ஓடோடி வந்த சிறுமி
இரவில் தான் கண்ட கனவை விவரிக்கத் தொடங்குகிறாள்
அப்பா அதுவொரு பெரிய காடு
காடு அடர்த்தியாகவும் இருட்டாகவும் இருக்கு
அந்தக் காட்டுக்குள்ள நாம ரெண்டு பேர் மட்டும் போறோம்
நாம ஏன் அங்குப் போறோம்னு தெரியல ஆனா போறோம்
காட்டு விலங்குகள் எல்லாம் நிழல் நிழலா தெரியுது
எதையும் சரியா கண்ணால பார்க்க முடியல
திடீர்னு பார்த்தா நமக்கு முன்னால
ஒரு பெரிய யானைக்கூட்டம் நின்னுக்கிட்டு இருக்கு
நாம அன்னிக்கு டிஸ்கவரி சேனலில் பார்த்தோமே
ஒரு பெரிய யானைக்கூட்டம் அதையும்விட பெருசு
அப்புறம் இன்னொரு நாள் மிருகக்காட்சிச் சாலையில் பார்த்தோமே
அதையும்விட பெரிசு
தந்தையானவர் அப்பொழுதிருந்த காலையின் பதற்றத்தில்
கதையைப் பாதியில் நிறுத்தி மகளிடம் சொன்னார்
குட்டிம்மா காலையில அப்பாவுக்கு நிறைய வேலைகள் இருக்கு
மீதிக் கதைய அப்பா அலுவலகம் போய்ட்டு வந்து
இரவு கேட்டுக்கறேன் சரியாடா செல்லம்
மகளிடம் பதிலை எதிர்பாராமலேயே அவளைவிட்டு நீங்குகிறார்
சுவாரஸ்யத்தின் சங்கிலி அறுபட்ட கோபத்தில்
மகள் தனக்குள் எண்ணிக் கொள்கிறாள்
இனி இந்த அப்பாவை ஒருபோதும்
தன் கனவுக்குள் அழைத்துச் செல்லக்கூடாதென்று...

28.3.13

ஓடு ---------------


- வைதீஸ்வரன்

----------------
ஆமையைப் பார்த்தால்
பொறாமையாக இருக்கிறது.
நத்தையைப் பார்த்தால்
அதை விட அசூயை.
பூமியில் ஆனந்தமாக இடம்மாறுகின்றன
அவைகள்....வீட்டையும் மூட்டை கட்டிக் கொண்டு.
ஆறுமாதத்துக்கு ஒரு முறை
விரட்டுகிறான் வீட்டுக் காரன்...
அடுத்த வீட்டைத் தேடிக் கொண்டு
ஓட வேண்டியிருக்கிறது, பூமியின் ஓரத்துக்கே
சாமி ரொம்ப ஓர வஞ்சகன்.

ஒற்றைச் சுவடு


If there are images in this attachment, they will not be displayed. Download the original attachment


எம்.ரிஷான் ஷெரீப்,
ஒளி பட்டுத் தெறிக்கும்
முகம் பார்க்கும் கண்ணாடி
சுமந்துவரும் விம்பங்கள் பற்றி
மெல்லிய காற்றிற்கசையும் திரைச்சீலைகளிடமும்
சொல்லப் படாக் கதைகள் இருக்கின்றன

தரை,சுவர்,தூண்,கூரையெனப்
பார்த்திருக்கும் அனைத்தும்
வீட்டிற்குள்ளான ஜீவராசிகளின்
உணர்வுகளையும்
அத்தனை ரகசியங்களையும்
அறிந்தே இருப்பினும் வாய் திறப்பதில்லை

" ஆதித்யா, உன் தனிமை பேசுகிறேன். கேட்கிறாயா? "

"நான் தனித்தவனாக இல்லை. இந்தச் சாலையோர மஞ்சள் பூக்கள், காலையில் வரும் தேன்சிட்டு, புறாக்கள், கிளிகள், மைனாக்கள், எனது எழுத்துக்கள் என எனைச் சூழப்பல இருக்கத் தனித்தவனாக இல்லை. நீ பிதற்றுகிறாய். வழி தவறி வந்திருக்கிறாய் "


" இல்லை. உன் மனதுக்கு நீ தனித்தவன். இதுவரையில் நீ வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு முகமூடியை அணிந்தபடியே ஊர்கள் தோறும் சுற்றி வந்திருக்கிறாய். நீ நீயாக இருந்ததில்லை. இப்பொழுதும் ஒப்புக் கொள்ள மறுக்கிறாய். நீ ஆதித்யா. ஆனால் ஆதித்யாவாக என்றும் நீ இருந்ததில்லை. உனது சுயத்தை வெளிக் காட்டத் தயங்கியபடி உள்ளுக்குள் மருகுகிறாய். "


" உன்னிடம் என்னைப் பற்றிய விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் எனக்கென்ன இருக்கிறது ? நீ யார் ? எதற்கு வந்திருக்கிறாய்? "


" இந்த அலட்சியம், யாரையும் மதிக்காத அகம்பாவம், எல்லாவற்றிலும் நான் மட்டுமென்றான திமிர், பணம் சம்பாதிப்பதை மட்டுமே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் சுயநலம், உனது தேவைகளுக்கு ஏற்றவிதத்தில் உருமாறிக் கொள்ளும் பச்சோந்தித்தனம், முக்கியமாக எதையும், யாரையும் புரிந்துகொள்ளாத அல்லது புரிந்துகொள்ள முயற்சிக்காத முன்கோபம் இவையெல்லாம்தான் இன்றென்னை உன்னருகில் அழைத்துவந்திருக்கிறது. "


" சரி. இருந்துவிட்டுப் போகட்டும். எனக்கு நீ வந்திருப்பது பிடிக்கவில்லை. அதுவும் கேள்விகளோடு...கேள்விகள்...கேள்விகள்..கேள்விகள். உன் வருகையின் நோக்கமென்ன ? "


" நானாக வரவில்லை. அன்பே உருவான ஸ்ரீயைப் பிரிந்தாய். நான் தானாக வந்துவிட்டேன். நான் வரக்கூடாதெனில் ஏன் அவளையும் பிரிந்தாய்? இது உனது முதல் மனைவிக்குப் பிறகான நான்காவது காதல். அவளை நேரில் பார்க்காமலே வந்த காதல். அசிங்கங்களுக்குள் வாழ்ந்த உன்னைத் தூய்மைப்படுத்தி அருகிலமர்த்திக் கொண்டவளை உதைத்து நீ வந்திருக்கிறாய். நான் வந்துவிட்டேன். "


" ஆம். அவளைப் பிரிந்தேன். அவளென்னை நிம்மதியாக இருக்கவிடவில்லை. என்னை அடிமைப்படுத்தப் பார்த்தாள். அவள் சொல்லும்விதமெல்லாம் நான் நடந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்த்தாள். மீறினால் வாதித்தாள். "


" எதனால் அவள் அப்படி நடந்துகொள்கிறாள் என யோசித்தாயா ? ஒரு கணமேனும் அது குறித்து அவள் நிலையிலிருந்து சிந்தித்தாயா? "


" எதற்கு சிந்திக்கவேண்டும்? நான் நானாகத்தான் இருப்பேன். அவளுக்காக நான் ஏன் என்னை மாற்றிக்கொள்ளவேண்டும்? "


" நீ மாற்றிக் கொண்டிருக்கத்தான் வேண்டும். ஏனெனில் நீதான் அவளைத் துரத்தித் துரத்திக் காதலித்தாய். ஒத்துவராதெனச் சொல்லி அவள் விலகி விலகிப் போனபோது அவள் குறித்துக் கவிதைகள் பாடினாய். உனது குருதியைத் தொட்டுக் கடிதம் எழுதி அவளை உன் பக்கம் ஈர்த்தாய். அவள் உனக்காக அவள் முடிவை மாற்றிக் கொள்ளவில்லையா ? நீ மாற்றிக் கொள்வதில் உனக்கென்ன தயக்கம் ? "


" அவளுக்கு என் மேல் நம்பிக்கையில்லை. அதனால் தான் மாறச் சொல்கிறாள். நான் ஆண். அவளையும் விட மூத்தவன். பல அனுபவங்களைக் கற்றவன். அவள் சொல்வதைக் கேட்கவேண்டுமென்ற கடமையோ அவசியமோ எனக்கில்லை. "


" அவள் இளமை மிகுந்த அழகி. இதுவரையில் எக்காலத்திலும் உன்னைத் தவிர்த்து எவருடைய காதலுக்கோ , வேறு எச் சலனத்துக்கோ இடம் கொடுக்காதவள். எப்பொழுதும் அவளைச் சூழவும் மிகுந்த அன்பானவர்களை மட்டுமே கொண்டவள். அப்படிப்பட்டவள் உன் மேல் நம்பிக்கையில்லாமலா தனது தாய்நாட்டை விட்டு, பெற்றவர்கள், உடன்பிறப்புகள் அனைத்தையும் விட்டு உன்னுடன் உனது நாட்டுக்கு வந்துவிடுவேன் எனச் சொன்னாள் ? நீயழைத்தது போல் அவள் அப்படி உன்னை அழைத்திருந்தால் நீ போவாயா? மாட்டாய். நீ செல்ல மாட்டாய். அவளில்லாவிட்டால் இன்னொரு அழகி. இன்னொரு அப்பாவிப்பெண். மடங்கா விட்டால் பெருவிரலின் ஒரு துளி இரத்தம், சில கவிதைகள் போதுமுனக்கு. "


" நீ அதிகம் பேசுகிறாய். "


" உண்மையைப் பேசுகிறேன். நீ இதுபோல அவளைப் பேசவிடவில்லை. அவள் இதையெல்லாம் சொல்லியிருந்தால் அடங்காப்பிடாரி என அவள் பற்றி உன் சகாக்களிடம் பகிர்ந்துகொண்டிருப்பாய். வழமை போலவே அவர்களிடத்தில் உன்னை நல்லவனாகக் காட்ட அவள் குறித்துத் தீய பிம்பங்களை உருவாக்கிப் புலம்பித் தீர்த்திருப்பாய். "


" இல்லை. அவளும் பேசினாள். இது போல அல்லது இதைவிடவும் அதிகமாக அவள் பேசினாள். எனக்குக் கட்டுப்பாடுகள் விதித்தாள். எனது சுதந்திரத்தை அவளது வார்த்தைகளுக்குள், சத்தியங்களுக்குள் அடக்கினாள்.அவள் சொன்ன சிலவற்றை செய்யத்தானே செய்தேன். இருந்தும் போதவில்லை அவளுக்கு. தினமும் இன்னுமின்னும் புதுப் புதுக் கட்டளைகளோடு வந்தாள். "


" சரி. அந்தக் கட்டளைகளால் இதுவரை உனக்குத் தீயவை எதேனும் நடந்ததா சொல். எல்லாவிதத்திலும் உனது உயர்ச்சியைச் சிந்தித்துத்தானே அவள் தன் எண்ணங்களை உன்னிடத்தில் சொன்னாள். நீ நடந்து கொண்ட விதமும், உனது வாழ்க்கை முறையான தீய நடத்தைகளும் அப்படியவளை விதிக்கச் செய்தன. நீ ஒழுங்கானவனாக இல்லை. இதனாலேயே உன் முதல் மனைவி விஜியையும் பிரியநேர்ந்ததென்பதனை நீ மறந்துவிட்டாய். பின்னர் உனது பணத்தினை மொய்த்தபடி இரவுகளுக்கு நிறையப் பெண்தோழிகள். அது இன்றுவரையிலும் தொடருகின்றதென்பதனை ஒரு தூயவள் எப்படி ஏற்றுக் கொள்வாள்? நீ அவளை மெய்யாலுமே காதலித்திருந்தாயெனில், அவளது நேசமும் அன்பும் மட்டுமே உனக்குப் போதுமெனில் அவள் சொல்லமுன்பே உன் தீய சினேகிதங்களை விட்டிருக்கவேண்டுமல்லவா ? உனது துர்நடத்தைகளை விட்டும் நீங்கியிருக்கவேண்டுமல்லவா ?"


" அவள் என்னை அடிமையாக்கப் பார்த்தாள். "


" மன்னிக்கவும். திருத்திக்கொள். அவள் உன்னை நல்வழிப்படுத்த முயற்சித்தாள். உன்னை நேர்வழியில் கூட்டிச் செல்லவெனக் கைகோர்த்து நடந்தாள். வீணாகும் உனது நேரங்களைச் சுட்டி உனது எழுத்துக்களில் நீ பெரிதாக ஏதாவது சாதிக்க வேண்டுமென விரும்பினாள். நள்ளிரவிலும், நேரம் காலமின்றியும் உனக்குத் தொலைபேசும் ஒழுக்கம் தவறிய பெண்களின் அருகாமையைத் தவிர்க்கச் சொன்னாள். உனக்கது பிடிக்கவில்லை. உனக்குக் காதலியும் வேண்டும். இரவுகளில் கன்னம் தடவப் பெண் தோழிகளும் வேண்டுமென்றால் எந்தத் தூயவள் ஏற்றுக் கொள்வாள் ? ஓரிரு நாள் பொறுத்துப் பார்த்தாய். காதல் குறித்த அழகிய உவமைகள் கொண்டும், பிதற்றல்கள் கொண்டும் அவளது கோரிக்கைகளை நிறுத்தப் பார்த்தாய். உனது வார்த்தைகளைத் தடிக்கச் செய்தாய். விஜி தீக்குளித்த அன்றும் உனது வார்த்தைகள்தானே தடித்தன? ஒவ்வொரு காதலும் உன்னை விட்டு நீங்கிய பொழுதாவது அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டிருக்க வேண்டாமா நீ ? "


" நீ பழையவற்றைக் கிளறுகிறாய். "


" சரியாகச் சொன்னாய். நீ இன்னும் பழைய குப்பைகளை உன் வாசலில், உனது முகத்துக்கு நேராகவே வைத்திருக்கிறாய். அகற்றவும் மறுக்கிறாய். அதற்கூடாகவே அவளையும் அழைக்கிறாய். குப்பைகள் சூழ வாழ்ந்து பழகாதவள் நாற்றம் தாங்காமல் அதை அகற்றச் சொல்கிறாள். உனது சுவாசத்திற்காகச் சோலைகளை வழிகளில் நிறுத்துகிறாள். நீயாகப் புறந்தள்ளி இன்னுமின்னும் குப்பைகளைச் சேகரித்துக் கொண்டு மீண்டும் மீண்டும் நாற்றங்களில் மெய்மறக்கிறாய். அவளென்ன செய்வாள் விட்டுப் போவதைத் தவிர."


" அவள் சொன்ன ஒரு சிலவற்றையாவது நான் செய்திருக்கிறேன் .ஆனால் அவள் எனக்காக இதுவரையில் அணுவளவாவது ஏதேனும் செய்திருக்கிறாளா ? "


" இதற்குத்தான் அவள் நிலையில் உன்னை வைத்துச் சிந்திக்கச் சொன்னேன். அவள் உன்னைப் பற்றி, உனது உயர்ச்சி பற்றி ஒவ்வொரு கணமும் யோசித்ததால்தானே உனக்கு நல்ல அறிவுரைகள் சொன்னாள். அவள் இதுவரையில் உன்னை நேரில் கூடப் பார்த்ததில்லை. நீ அவளுக்குக் கிடைப்பாயென்ற நிச்சயமேயில்லை. இருந்தும் உன்னை மிகவும் நல்வழிப்படுத்த முயற்சித்தாள். மெய்யான அன்போடு தனது ப்ரியத்திற்குரிய எழுத்தையும் உனக்காக விட்டுவிட்டு தனது சொந்தங்கள் எல்லாவற்றையும் துறந்து உன்னுடன் வந்து, உனக்காகவே வாழ்கிறேன் என்றாள். . உன்னுடன் வாழவந்த பிறகும் உனக்குப் பிடித்தவகையில் சமைத்து, உனக்குப் பிடித்தவகையில் உடுத்தி, உனக்குப் பிடித்தவகையில் உறவாடி உன்னுடனே இருந்திருப்பாள். இதைவிடவும் வேறு என்ன வேண்டும் உனக்கு ? என்ன எதிர்பார்க்கிறாய் நீ ? உனது தவறுகள் குறித்து எந்தக் கேள்வியும் கேட்காதவளையா? அதற்கு நீ ஒரு பொம்மையைக் காதலித்திருக்கவேண்டும். ஒழுக்கம் நிறைந்த ஒரு பெண்ணையல்ல. "


" நான் என்ன செய்யவேண்டுமென நீ சொல்ல வருகிறாய்? "


" இந்தக் காதலிலிருந்தாவது , இந்த அனுபவத்திலிருந்தாவது பாடம் கற்றுக் கொள். உனது வீண்பிடிவாதங்களையும் துர்நடத்தைகளையும் தீய சினேகங்களையும் உனை விட்டும் அப்புறப்படுத்து. நீ தவறு செய்தால் அடுத்தவர் மேல் பழியினை ஏற்றித் தாண்டிப் போகப் பார்க்காமல் அது உனது தவறுதானென ஒத்துக்கொள். மீண்டும் அத் தவறு நிகழாமல் பார்த்துக் கொள். "

" சரி. நானும் அவள் மேல் அன்பாகத்தானே இருந்தேன்."


" அன்பு இருந்திருந்தால் அதனை உள்ளுக்குள் வைத்திருந்ததில் என்ன பயன்? இருவரும் அருகிலிருந்தாலாவது அன்பைச் சொல்ல ஒரு புன்னகை, ஒரு சிறு தொடுகை போதும். பகிர்ந்தருந்தும் தேனீர்க்கோப்பை போதும். ஆனால் கடல் கடந்து, தேசங்கள் கடந்து காதல் கொள்பவர்களுக்கு அன்பைச் சொல்ல எழுத்துக்களும் பேச்சும் மட்டும்தானே உள்ளன. அவற்றில் ஏன் உன் அன்பைக் காட்டவில்லை ? யார் யாருக்காகவோ கவிதை, கதை எனக்கிறுக்குமுன்னால் அவளுக்கான காலை வணக்கத்தை ஏன் அன்பைக் குழைத்தனுப்ப முடியவில்லை ?"


" இப்பொழுது நான் என்ன செய்யவேண்டும் என்கிறாய்? "


" உனது தீய நடத்தைகளை விட்டொழி. யாருக்கும் வாக்குறுதியளிக்கும் முன்பு இரு தடவைகள் யோசி. கொடுத்த வாக்குறுதியை மீறாதே இனிமேல் உன்னை நேசிக்கும் எவர்க்கும் உனது அன்பினை செய்கைகளாலும் நடத்தைகளாலும் வார்த்தைகளாலும் வெளிப்படுத்து. நீ நீயாக இருந்து அவளது விருப்பப்படியே எழுத்துக்களில் சாதித்துக்காட்டு. "


" சரி. செய்கிறேன். அவள், அவளது அன்பு எனக்கு மீளவும் வேண்டும். கிடைப்பாளா ? "


" முதலில் இப்படி அழுவதை நிறுத்து. ஒன்று அவளில்லையேல் வாழ்க்கையே இல்லையென்று விசித்து விசித்தழுகிறாய். இல்லாவிடில் இனி மகிழ்ச்சியாக வாழ அவள் நினைவுகள் மட்டுமே போதுமெனச் சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறாய். முதலில் ஒரு நல்ல மனநலவைத்தியனிடம் போய் முழுமையாக உன்னைப் பற்றி எடுத்துரைத்து சிகிச்சை பெற்றுக்கொள். யதார்த்தம் உணர். சூழவும் பார். இப்பொழுது கூட உன்னையே நீ இரண்டாம் நபரென எண்ணி உன்னுடனே நீ சத்தமாகக் கதைத்துக்கொண்டிருக்கிறாய். . காலை நடைக்காக வந்திருப்பவர்கள், வீதியில் செல்பவர்கள், பால்காரன், பத்திரிகை போடுபவன் என எல்லோரும் வீதியோரம் அமர்ந்திருக்கும் உன்னைப் பைத்தியக்காரன் எனச் சொல்லி வேடிக்கை பார்க்கிறார்கள் பார். "