அழகியசிங்கர்
எங்கள் தெருவில் இப்படி ஒரு சம்பவம் நடக்குமென்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. என் வீட்டிற்கு எதிர் வீட்டல்தான் அந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஒரு நடுத்தர வயது பெண்மணி தற்கொலை செய்து கொண்டு விட்டாள். முதலில் அந்தப் பெண்ணின் கணவன்தான் தற்கொலை செய்துகொண்டு விட்டான் என்று நாங்கள் தவறாக எண்ணியிருந்தோம். ஆனால் அவன் இல்லை. அவன் மனைவி.
அவள் கணவன் ஒரு குடிகாரன். எப்போதும் அவர்கள் சண்டைப் போட்டுக்கொண்டிருப்பார்கள். அந்தப் பெண்ணின் இரண்டு பிள்ளைகளும் அவர்களுடன் வளரவில்லை. ஒன்பதாவது வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் அவள் மகள் கே கே நகரில் உள்ள பாட்டி வீட்டில் வளர்ந்து வருகிறாள். அவளுடைய பையன் வேறு ஊரில் படித்துக்கொண்டிருக்கிறான். அந்த வீட்டில் அவர்கள் குடும்பம் தவிர ஏழு எட்டு குடும்பங்கள் உண்டு. எல்லோரும் அவள் கணவனின் சகோதரர்களின் குடும்பங்கள். அந்த சிறிய இடத்தில் எல்லோரும் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே ஆச்சரியமான விஷயம்.
ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டு விட்டாள் என்பதை அந்த வீடு கொஞ்சங்கூட வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. துக்கத்தின் சாயல் அந்த வீட்டில் கொஞ்சங்கூட தெரியவில்லை. ஏன் தெருவில்கூட அந்தத் துக்கம் தெரியவில்லை? யாரும் அதைப் பற்றி பேசக்கூட இல்லை. ஏதோ சாதாரண நிகழ்ச்சி நடந்ததுபோல் அந்த வீடுஇருந்தது.
ஏன் அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி என்னை சுற்றிய வண்ணம் இருந்தது. ஒவ்வொரு நாளும் காலையில் அந்தப் பெண் அவர்கள வளர்க்கும் முரட்டுத்தனமான நாயை எடுத்துக்கொண்டு தெருவிற்கு வருவாள். அதன் காலைக்கடனை முடிக்க எங்கள் தெருதான் கிடைத்தது. என் வீட்டிற்கு வாசலில் வந்து நிற்கும்போது கொஞ்சம் தள்ளி போகச் சொல்வேன். தள்ளிப் போவாள். அந்தப் பெண்ணைப் பற்றி நினைக்கும்போது அவள் ஏன் தற்கொலை செய்துகொண்டாள் என்ற கேள்விக்கு பதில் தெரியவில்லை. நல்ல உயரமாகவும், குண்டாகவும் இருப்பாள். அவள் கணவனுடன் அவளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவனுக்கு அவள் பொருத்தமானவள் இல்லை. ஆனால் அவ்வளவு திடமான தோற்றத்தில் இருந்த அவள் ஏன் தற்கொலை செய்து கொண்டாள். அவன்தான் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும்.
தற்கொலை செய்துகொண்ட பெண்ணிற்காக தெரு எந்த மரியாதையும் செய்யவில்லை. அவள் கணவனின் மற்ற சகோதரர்களின் குடும்பங்கள் அதை ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக்கொள்ளவில்லை. ஏன் இப்படி?
பல ஆண்டுகளுக்கு முன் ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்டு விட்டார். அவருடைய நண்பர்களின் வட்டாரத்தில் அது பெரிய அதிர்ச்சியாக மாறி இருந்தது. முதன்முதலாக சிறு பத்திரிகை சூழலில் பிரபலமான தமிழ் கவிஞர் தற்கொலை செய்து கொண்டு விட்டார். திருவல்லிக்கேணியில் ஆத்மாநாமிற்காக இரங்கல் கூட்டம் நடந்தது. எல்லோரும் வந்திருந்தார்கள். ஹால் முழுவதும் துக்கம் வழிந்து கொண்டிருந்தது. ஆதிமூலம் அருமையாக ஆத்மாநாமை வரைந்திருந்தார். அவருடைய ஓவியத்தைப் பார்க்கும்போது மனதை என்னவோ செய்தது.
அக் கூட்டம் ஞானக்கூத்தன் தலைமையில் நடந்தது. என் அருகில் ஆத்மாநாமின் நெருங்கிய நண்பர் ஒருவர் கண்கலங்கி அழுததை பார்த்தேன். அக் கூட்டத்திற்கு பிரமிள் வந்திருந்தார். அது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.
என்னமோ தெரியவில்லை அன்று பிரமிள் ஆத்மாநாமைப் பற்றி பேசியதுதான் என் மனதில் இன்னும் கூட ஞாபகத்தில் இருக்கிறது. ஆத்மாநாம் பங்களூரில் உள்ள ஒரு கிணற்றில்தான் தற்கொலை செய்து கொண்டார். கிணற்றின் ஒவ்வொரு படியாக இறங்கி கடைசிப் படியில் தன் உடைகளைக் களைத்துப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரமிள் குறிப்பிட்டார் : ஆத்மாநாம் நினைத்திருந்தால் அந்தக் கடைசித் தருணத்தில் தன் முடிவை மாற்றிக்கொண்டிருக்கலாம். தற்கொலை செய்துகொள்பவருக்கு அந்தக் கடைசி தருணம் மிக முக்கியமானது. அந்தக் கடைசித் தருணத்தைத் தாண்டிவிட்டால் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் மாறிப் போயிருக்கும்.
ஆத்மாநாம் எழுதிய கவிதைகளிலிருந்து ஒரு கவிதையைப் படித்து பிரமிள் விம்மி விம்மி அழுதார். உண்மையிலேயே பிரமிள் கண்கலங்கிய காட்சியை அன்று ஒருநாள்தான் பார்த்தேன். கூட்டம் முடிந்தவுடன் நான் பிரமிளை அழைத்துக்கொண்டு போய்விட்டேன். ஆத்மாநாம் தற்கொலையை அவருடைய நெருங்கிய நண்பர்களால் தடுத்திருக்க முடியும் என்று பிரமிள் தனிப்பட்ட முறையில் கூறிய கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அன்று அந்தத் தற்கொலையைப் போல் பரபரப்பான தற்கொலையை என்னால் அறிந்திருக்க முடியவில்லை.
ஆனால் இப்போதெல்லாம் தற்கொலைகள் ஒரு பொருட்டாகக் கருதப்படுவதில்லை. நான் வசிக்கும் தெருவே அதற்கு சாட்சி.
காலம் மாறி விட்டது. தினம் தினம் தற்கொலைகள் எளிதாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. தேனியில் வசிக்கும் என் இலக்கிய நண்பர் ஒருவர், 'எங்கள் மருத்துவமனையில் தினமும் யாராவது தற்கொலை செய்து கொண்டு இறந்து போகிறார்கள்,' என்று சொன்னதைக் கேட்கும்போது திகைப்பாக இருந்தது.
சமீபத்தில் என் வங்கிக் கிளைக்குப் பக்கத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவன் ஒருவன் தலைமை ஆசிரியர் திட்டிவிட்டார் என்ற காரணத்தை வைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டு விட்டான். இது சாதாரண செய்தியாக என் காதிற்குள் நுழைந்தது.
'என் நண்பன் ஆத்மாநாம்,' என்று ஆத்மாநாமைப் பற்றி கட்டுரை எழுதிய ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டு விடுவார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அவர் அவதிப் பட்டுக்கொண்டிருந்தார். வீட்டிலிருந்த பொருட்களை ஒவ்வொன்றாக தெரிந்தவர்களுக்குக் கொடுக்க ஆரம்பித்திருந்தார். பின் மனைவியின் நகைகளை திருப்பதி உண்டியில் பிரார்தனையாக செலுத்திவிட்டார். அவரால் தனிமையைச் சந்திக்க முடியவில்லை. 'அவரை யாராவது பார்த்துக் கொள்ள வேண்டும். தற்கொலை செய்து கொண்டு விடுவார்,' என்று மனோதத்துவ மருத்துவர் ருத்திரன் குறிப்பிட்டபோது அதை முதலில் நான் நம்பவில்லை.
பிரபல பத்திரிகைகளில் எழுதும் படைப்பாளி. தத்துவ ஞானி ஜே கிருஷ்ணமூர்த்தியிடம் நம்பிக்கை உள்ளவர். வாழ்க்கையை தைரியமாகச் சந்திக்கக் கூடியவர் என்றெல்லாம் நினைத்திருந்தேன். மேலும் வயதானவர்கள் தற்கொலை செய்து கொள்வதை விரும்ப மாட்டார்களென்றும் எண்ணியிருந்தேன். எல்லாம் தப்பாகப் போய்விட்டது.
எழுத்தாளர் சுஜாதா மரணமடைந்த அடுத்த நாள்தான் ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டார். விரல்விட்டு எண்ணக்கூடிய மிகக் குறைவான வர்கள்தான் அவர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார்கள். ஸ்டெல்லா புரூஸ÷ற்கு இரங்கல் கூட்டம் எதுவும் நடக்கவில்லை. ஆனால் =அவர் தற்கொலை செய்துகொண்டதுபோல் துணிச்சல் யாருக்கும் வராது,+ என்று எனக்குத் தெரிந்த பெண் படைப்பாளி குறிப்பிடுவார்.
ஸ்டெல்லா புரூஸ÷ன் தற்கொலையை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றைய சூழ்நிலையில் தற்கொலை அடைந்தவர்களுக்காக யாரும் இரங்குவதில்லை என்றும் தோன்றுகிறது.
(அம்ருதா மார்ச்சு 2013 இதழில் வெளிவந்த கட்டுரை)
Comments