31.3.17

கூட்டத்தை வெற்றிகரமாக 8.45க்கு முடித்துவிட்டேன்....

அழகியசிங்கர்எப்போதும் ஒரு இலக்கியக் கூட்டம் என்றால் சிலர் பேசுவார்கள். சிலர் பேசாமல் விலகி விடுவார்கள். அசோகமித்திரன் நினைவேந்தல் கூட்டத்திலும் அதுமாதிரியான நிகழ்ச்சி நடக்காமல் இல்லை.  இக் கூட்டத்தை சிறப்பாக நடத்த ஸ்ரீகுமார் அவர்கள்தான் காரணம்.  பத்மா அவர்களும் கூட்டத்தை சரியான முறையில் நெறிப்படுத்தி எடுத்துச் சென்றார்.  முதலில் அம்ஷன்குமாரின் ஆவணப்படம் 5.15 ஆரம்பமாகியது.   அது முடிந்தவுடன் நாசர் நடித்த ஜெர்மன் இயக்குநர் எடுத்த புலிக் கலைஞன் என்ற அசோகமித்திரன் கதையை அடிப்படையகாக் கொண்ட குறும்படம் சரியாக 15 நிமிடங்களில் முடிந்து விட, ஒவ்வொருவராக 6 மணிக்கு எல்லோரையும் பேச அழைத்தோம்.

கூட்டம் முடியும்போது மணி இரவு 8.45.  அவ்வளவு நேரம் பொறுமையாக பலர் இக் கூட்டம் முடியும் வரை தங்கியிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் நானும் ஒரு கட்டுரை வாசிக்க எழுதி வைத்திருந்தேன். அம்ஷன்குமார் பேசி முடித்தவுடன், 8.45 மணியைத் தொட்டுவிட்டது.  நான் என் கட்டுரையை வாசிக்கவில்லை.  ஏன்எனில் வாசிப்பது என்பது அந்த நேரத்தில் காது கொடுத்து கேட்க எல்லோருக்கும் அலுப்பாக இருக்கும்.  அதனால் நான் எழுதி வாசிக்க நினைத்தக் கட்டுரையை இங்கு அளிக்கிறேன்.

அசோகமித்திரனும் நானும்...

ஆரம்பத்திலிருந்து அசோகமித்திரன் கதைகளைப் படித்துக்கொண்டு வருபவன்.  ஆனால் படிப்பதில் ஆர்வம் உள்ள நான் எல்லோருடைய கதைகளையும் படிப்பவன்.  அவருடைய கதைகளைப் படிக்கும்போது எனக்கு நெருக்கமாக  அவை தோற்றம் அளிக்கும். அவர் எழுத்து போல அவரும் எளிமையான மனிதர்.  அவருடன் பேசிவிட்டு ஒருவர் வீட்டிற்கு வந்தால், அசோகமித்திரன் கதை ஒன்று உருவாகிவிடும்போல் தோன்றும்.
தள்ளாத வயதிலும் அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டும், புத்தகங்களைப் படித்துக்கொண்டும் கூட்டங்களில் கலந்து கொண்டும் இருந்தார்.  அவரிடம் எந்தவித பந்தாவும் கிடையாது.  யாரையும் அவர் மதிக்க தெரிந்தவர்.  எந்த மனிதருக்கும் எதாவது ஒன்று பிடிக்காமல் இருக்கும்.  அசோகமித்திரனுக்கும் பிடிக்காமல் எத்தனையோ விஷயங்கள் உண்டு.  ஆனால்  அதை நேரிடையாக வெளிப்படுத்த மாட்டார். மறைமுகமாக சொல்வார்.  அல்லது சொல்லாமல் விடுவார்.
கடைசியாக கலந்து கொண்டு அவர் பேசிய கூட்டம் விருட்சம் 100வது இதழ் கூட்டம்.  பேசிக் கொண்டிருக்கும்போது என் காலம் முடிந்துவிடும் என்று அவர் குறிப்பிட்டார்.  அவர் அது மாதிரி ஏன் சொல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.  அவருக்கே அவர் மரணம் தெரிந்திருக்கிறது.  உண்மையில் அவர் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவருக்கு பலவிதங்களில் பாதிப்பை நிகழ்த்தாமல் இல்லை.  ஆனால் உற்சாகமாகக் கலந்து கொள்வார், அவதிப்படுவார்.  பின் திரும்பவும் கலந்து கொள்வார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் படுகிற அவதியையும் என்னிடம் கூறாமல் இருக்க மாட்டார்.
ஒவ்வொரு முறையும் நான் அவரைப் பார்க்கப் போகும்போதெல்லாம்  ரத்தினச் சுருக்கமாக அவர் பேச்சு இருக்கும்.  பேசியது போதும் என்று தோன்றும்போது, போதும் பிறகு பார்க்கலாம் என்று கூறிவிடுவார்.
ஒரு முறை ஒரு பேனாவைக் கொடுத்து பேனாவிற்கு ரீபிள் போடச் சொல்லிக் கொடுத்தார். அது ஒரு பழைய பேனா.  நான் கடை கடையாக ஏறி இறங்கினேன்.  ஒரு கடையில் ரீபிள் கிடைத்தது.  ஆனால் பேனாவில் ரீபிளைப் போட முடியவில்லை.  காரணம் பேனாவில் ஸ்பிரிங் இல்லை. அசோகமித்திரனுக்கு வேற ஒரு பேனாவை வாங்கிக்கொடுத்துவிட்டு அந்தப் பேனாவையும் கொண்டு போய் கொடுத்தேன். ஸ்பிரிங் இல்லை என்றேன்.  பேனாவை வாங்கிக்கொண்ட அசோகமித்திரன் ஸ்பிரிங்கை தேடிப் பார்க்கிறேன் என்றார்.  அடுத்த முறை அவரைப் பார்க்கும்போது, ஸ்பிரிங் கிடைத்துவிட்டது.  சரி கொடுங்கள் என்றேன்.  ஆனால் பேனா எங்கோ போய்விட்டது. தேடிப் பார்க்க வேண்டும் என்றார்.  இதை அவர் சிரிக்காமல் சொல்வார்.  அவர் கருத்துக்களை ஒளிவு மறைவில்லாமல் சொல்வார்.  நான் முகநூலில் எதையாவது எழுதியிருப்பேன்.  அதைப் படித்து விட்டு வீட்டுப் பக்கம் வர முடிந்தால் வாருங்கள் என்று முக நுலில் கமென்ட் எழுதவார்.  எனக்கோ நான் எழுதியதற்கு எதாவது எழுதப் போகிறாரென்று நினைத்துக் கொண்டிருப்பேன்.  இதுதான் அசோகமித்திரன்.
இன்னொன்று. அவருக்கு கவிதையே பிடிக்காது.  உங்களுக்கு கவிதை என்றால் ரொம்பப் பிடிக்கும்போல் இருக்கிறது என்று என்னை கிண்டல் செய்வார். ஆமாம் என்று அவர் எதிரில் சொல்ல மாட்டேன். முகநூலில் ஒரு கதையை அடிப்பதற்குப் பதில் கவிதை எழுதி பதிவிடலாமென்பேன்.
ஒருமுறை நானும் அவரும் ஒரு இலக்கியக் கூட்டத்திற்குப் போய்விட்டு வந்து கொண்டிருந்தோம்.  அந்த இலக்கியக் கூட்டத்தில் நான் கவிதை வாசித்திருந்தேன்.  அசோகமித்திரன் அதைக் குறித்து ஒன்றும் சொல்லவில்லை.  எனக்கோ என் கவிதையைக் குறித்து அவர் கருத்தை அறிய வேண்டும் என்று ஆவல். தாங்கமுடியாத ஆவல். இந்த இடத்தில்தான் நான் ஒரு தப்பு செய்துவிட்டேன்.  என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் என் கவிதை எப்படி இருந்தது என்று கேட்டுவிட்டேன்.  அசோகமித்திரன் நிதானமாக, நான் கவிதை எழுதினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது என்றார் சிரிக்காமல்.  அவரைப் போல் ஒரு நகைச்சுவை உணர்வுகொண்ட எழுத்தாளரை நான் இதுவரை பார்த்ததில்லை.  இனிமேலும் பார்க்க முடியாது என்று நினைக்கிறேன்.
இக் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் என் நன்றி.  

30.3.17


தமிழ் நடிகர்களில் சிலர் மாத்திரம் நம் கவனத்தைக் கவர்வார்கள். அவர்கள் நடிப்பு மட்டும் இல்லாமல் தீவிர வாசகர்களாக இருப்பார்கள். நாசர் அவர்களில் ஒருவர். படிப்பு மட்டுமல்ல, நடிப்பதிலும் திறமையானவர். பேசாமல் கண் அசைவுகள் மூலம் நடிக்கக் கூடிய திறமையானவர். எந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்தாலும் அந்தப் பாத்திரமாக மாறிவிடுவார். தீவிர வாசகர். அசோகமித்திரன் எழுத்துக்களில் அபிமானம் உடையவர். அசோகமித்திரனின் புலிக்கலைஞன் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். மொத்தமே 16 நிமிடங்கள் கொண்ட படம் என்று நினைக்கிறேன். நாசர் மாதிரி இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர் ரோகிணி, வசந்த், மிஷ்கின், கமல்ஹாசன் போன்றவர்கள். 

அம்ஷன்குமார் ஒரு தீவிர இலக்கியவாதியாக இருந்து பின் சினிமாத் துறையில் அடியெடுத்து வைத்தவர். அவர் அசோகமித்திரனை வைத்து எடுத்த ஆவணப் படம் பலவிதங்களில் சிறப்பானவை. இந்த ஆவணப்படமும், நாசரின் புலிக்கலைஞன் குறும்படமும் நாளை நிகழ்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

29.3.17

அன்புடையீர்,

அசோகமித்திரன் நினைவேந்தல் கூட்டத்திற்கான தகவல் அழைப்பை இத்துடன் இணைத்துள்ளோம்.


28.3.17

அசோகமித்திரன் - நினைவேந்தல் கூட்டம்


வரும் வெள்ளி அன்று மாலை 5.30 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் ஏற்பாடு செய்துள்ளோம். தலைமை ஏற்று நடத்துவதற்கு இந்திரா பார்த்தசாரதி ஒப்புக்கொண்டுள்ளார். புலிக்கலைஞன் என்ற அசோகமித்திரனின் சிறுகதையின் குறும்படம் திரையிடப்படும்.

கீழ்க்கண்டவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். பெரும்பாலோரை தொடர்புகொண்டு அவர்கள் அனுமதியை இன்னும் சில தினங்களில் பெற முயற்சிப்போம்.

1. எஸ் வைதீஸ்வரன் 2. சா கந்தசாமி 3. பாரதிமணி 4. கே எஸ் சுப்பிரமணியன் 5. நடிகர் நாசர் 6. பாலகுமாரன் 7. அம்ஷன்குமார் 8. திலகவதி 9. திலீப் குமார் 10. ஞாநி
11. பத்மா 12. சாருநிவேதிதா 13. எஸ் ராமகிருஷ்ணன் 14. திருப்பூர் கிருஷ்ணன் 15. மனுஷ்யப்புத்திரன் 16. இளையபாரதி 17. இரா.தெ.முத்து 18. சிகரம் ச. செந்தில்நாதன் 19. இரா முருகன் 20. பாரவி 21. சுகுமாரன் 22. வெளி ரங்கராஜன் 23. வேடியப்பன் 24. கிருஷாங்கினி 25. லதா ராமகிருஷ்ணன் 26. ஷங்கர ராம சுப்பிரமணியன் 27. நடிகை ரோகிணி 

மேலும் அசோகமித்திரன் குடும்பத்தில் யாராவது ஒருவரைப் பேச அழைக்க உள்ளோம்.


இக் கூட்டத்தை அழகியசிங்கர், ஸ்ரீகுமார், பெருந்தேவி ஏற்பாடு செய்கிறோம்.

26.3.17

பொதுவாக இரங்கல் கூட்டத்தை நடத்த.............அழகியசிங்கர்அசோகமித்திரனுக்கு அடுத்த வாரம் ஒருநாள் இரங்கல் கூட்டம் நடத்த உள்ளேன்.  பெரும்பாலும் இதுமாதிரியான நெருங்கிய எழுத்தாள நண்பரின் இரங்கல் கூட்டம் நடத்தும்போது, தவறிப்போய் கூட அழாமல் இருக்க முயற்சிப்பேன். மனதில் துக்கம் அலைமோதி பரபரப்பாகி விடும். ஞானக்கூத்தன் இரங்கல் கூட்டம் நடந்தபோது சா கந்தசாமி மேடையில் விம்மி விட்டார்.  நான் விம்ம முடியாமல் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அசோகமித்திரனுக்கும் நான் இரங்கல் கூட்டம் நடத்த விரும்புகிறேன். அடுத்த வாரத்தில் ஒருநாள்.  முக்கால் வாசி வெள்ளிக்கிழமை.  ஆனால் இன்னும் இடம் பார்க்கவில்லை.  இதுமாதிரியான கூட்டத்தை நடத்த நான் விளக்கில் பயன்படுத்தும் திரிபோல்தான் செயல்படுவேன்.  அதுமாதிரியான கூட்டத்தை சிறப்பாக செயல்படுத்தக் கூடியவர்கள்.  எழுத்தாள நண்பர்கள், வாசகர்கள்.  
அசோகமித்திரனுக்கு ஏகப்பட்ட எழுத்தாள நண்பர்கள் இருக்கிறார்கள். வாசகர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் இக் கூட்டத்தை சிறப்பாக எடுத்துச் சென்றுவிடுவார்கள்.

சென்னையில் எளிதாக எல்லோரும் வந்து போகிற மாதிரி ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். இக் கூட்டத்திற்கு 100 பேர்களுக்குமேல் கட்டாயம் வருவார்கள் என்று நம்புகிறேன். இதைப் படிக்கும் யாராவது ஒருவர் ஒரு நல்ல இடத்தை ஏற்பாடு செய்து கொடுத்தால் நன்றி உடையவனாக இருப்பேன்.

24.3.17

இனிமேல் மிளகாய் பஜ்ஜியை வாங்கிக்கொண்டு போக முடியாது..

இனிமேல் மிளகாய் பஜ்ஜியை வாங்கிக்கொண்டு போக முடியாது..


அழகியசிங்கர்

                                                                                                                 நான் கிட்டத்தட்ட வாரம் ஒருமுறையாவது அசோகமித்திரனைப் பார்க்காமல் இருக்க மாட்டேன்.  அவருக்கு தேவையான உதவிகளைச் செய்வேன்.  "உங்களை தொந்தரவு செய்கிறேன்," என்பார்.  "பரவாயில்லை. நான் ஓய்வுப் பெற்று சும்மாதான் இருக்கிறேன்..உங்களுக்கு நான் உதவுகிறேன்," என்பேன்.  ஒவ்வொரு முறையும் மேற்கு மாம்பலத்திலிருந்து தி நகருக்கு டூ வீலரில் போய் அவரைப் பார்த்துவிட்டு வந்துவிடுவேன்.  விருட்சம் ஆரம்பித்தபோது என் பத்திரிகையில் அவர் தொடர்ந்து கட்டுரை எழுதித் தருவார்.  அவருடைய நகைச்சுவை உணர்வை சாதாரணமாக நினைத்து விட முடியாது.  

நான் ஒவ்வொரு முறை அவர் வீட்டிற்குச் செல்லும்போது, ஆர்யகவுடர் ரோடில் உள்ள வெங்கடேஷ்வரா போளி ஸ்டாலில் ஒரே ஒரு மிளகாய் பஜ்ஜி வாங்கிக்கொண்டு போவேன்.  அசோகமித்திரன் ஒன்றே ஒன்று போதும் என்பார்.  எனக்கு இந்த மிளகாய் பஜ்ஜி மட்டும் பிடிக்காது.  ஆனால் அசோகமித்திரன் ரசித்து சாப்பிடுவார்.  அவர் சாப்பிட்டுக்கொண்டே, இந்த பஜ்ஜி விலை என்ன என்று கேட்பார்.  ஐந்து ரூபாய் என்பேன்.  அவரால் நம்ப முடியாது.  ஐந்து ரூபாய்க்கு இவ்வளவு சுவையான பஜ்ஜியா என்று வியப்பார்.  

"இந்த மிளகாய் பஜ்ஜி செய்யறவனுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்,"  என்பார்.  அதைக் கேட்டு தாங்க முடியாத சிரிப்பு வரும் எனக்கு.

ஒரு முறை அவருக்குப் போன் செய்து, 'உங்களுக்கு ஞானப்பீட பரிசு கிடைக்கப் போகிறது,' என்பேன்.  üஅதெல்லாம் எனக்குக் கிடைக்காது,ý என்று சாதாரணமாக சொல்வார்.  ஹிந்து பத்திரிகையில் அவர் கட்டுரை வந்தால், நான்தான் ஹிந்து பத்திரிகையைக் கொண்டு போய் கொடுப்பேன். 

"கதைகளை எழுதினால் மற்ற பத்திரிகைகளுக்கு அனுப்புங்கள்," என்றார் ஒருநாள்.  "யாரும் போட மாட்டார்கள்," என்பேன்.  "பத்திரிகைகளில் பிரசுரமாகிற மாதிரிதான் நீங்கள் எழுதுகிறீர்கள், நிச்சயம் வரும்," என்பார்.

அந்த சமயத்தில் பத்திரிகைகளில் அவர் கதைகளை அனுப்பி பட்ட அனுபவத்தை சொல்வார்.  சுதேசமித்திரன் என்ற பத்திரிகையில் அவர் அனுப்பிய கதைகள் எதுவும் பிரசுரம் ஆகவில்லையாம்.  அவர் அனுப்பிய காலத்தில் ஒரே பிரதி மட்டும் எழுதி அப்படியே அனுப்பி விடுவார்.  திரும்பவும் அக் கதைகளைப் பெற சுதேசமித்திரன் பத்திரிகை அலுவலகத்திற்குப் போய் அக் கதைகளை தேடியிருக்கிறார்.  தியாகராஜன் என்ற பெயரில்.  அவருடைய பெயரைப் போல வேற ஒரு தியாகராஜன் கதைகள் கிடைக்குமாம்.இப்படி அவர் தொலைத்த கதைகள் பலவாம்.  

அசோகமித்திரன் ஆசிரியராக இருந்த சமயத்தில் கணையாழியில் என் குறுநாவல்கள் தொடர்ந்து வந்திருக்கின்றன.  என் கதைகள் மட்டுமல்ல. ஜெயமோகன்., பாவண்ணன், கோபிகிருஷ்ணன், சுப்ரபாரதி மணியன், இரா முருகன் போன்ற பலருடைய குறுநாவல்கள் வந்திருக்கின்றன. கணையாழியல் தி ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட விபத்து என்ற என் கதையில் சில மாற்றம் செய்ய அசோகமித்திரன் வீட்டிற்குச் சென்றிருக்கிறேன்.  அப்போது அவருக்கு சுரம்.  அவர் அக் கதையை அப்படியே சொல்வார்.  ஒன்றும் மாற்ற வேண்டாம்.  அப்படியே இருக்கட்டும் என்று அறிவுரை கூறி அனுப்பி விட்டார். 

பல எழுத்தாள நண்பர்களை அசோகமித்திரன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போயிருக்கிறேன்.  பல இடங்களுக்கு துணையாக அவருடன் சென்றிருக்கிறேன்.  அவர் நடக்கும்போது கீழே மட்டும் விழக்கூடாது என்று ஜாக்கிரதையாக இருப்பேன். ஆனால் அவரைப் பிடித்துக்கொண்டு அழைத்து வருவது அவருக்குப் பிடிக்காது.  

நேற்றுதான் நானும் நண்பரும் வெங்கடேஷ்வரா போளி ஸ்டாலில் மிளகாய் பஜ்ஜி வாங்கிச் சாப்பிட்டோம்.  எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது என்றாலும், அசோகமித்திரனை நினைத்துக்கொண்டுதான் சாப்பிட்டேன்.  அந்த நேரத்தில்தான் அசோகமித்திரன் இறந்து விட்டார் என்ற செய்தி டிவி மூலம் பின்னால் தெரிய வந்தபோது ரொம்பவும் சோகமாகிவிட்டேன்.  என் அப்பா ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி இறந்து விட்டார்.  அசோகமித்திரன் நேற்று 23ஆம் தேதி இறந்து விட்டார்.  இனிமேல் மிளகாய் பஜ்ஜி வாங்கிக்கொண்டு தி நகர் பக்கம் போக முடியாது.

23.3.17

மனதுக்குப் பிடித்த கவிதைகள்


அழகியசிங்கர்  


ஒரு கவிதை படிப்பவருக்குப் புரிய வேண்டுமா? வேண்டாமா? இந்தக் கேள்விக்கு ஒரு கவிதை வாசிப்பவருக்குப் புரிய வேண்டும் என்று நான் அழுத்தமாகக் கூறுவேன்.  பிரம்மராஜன் கவிதைகள் அவ்வளவு எளிதாகப் புரியாது.  இதை பிரம்மராஜன் காதுபட சொல்லாதீர்கள் என்று என் நண்பர்கள் சிலர் சொல்வார்கள்.  காரணம். நான் சொல்வதைக் கேள்விப்பட்டு பிரம்மராஜன் பெருமிதம் அடையக் கூடும் என்றுதான்.   ஆனால் உண்மையில் பிரம்மராஜன் கவிதை அவ்வளவு சுலபமாகப் புரியாது.  ஒவ்வொரு வரியாக புரியும்.  ஆனால் முழு கவிதைக்குள் போவதற்குள் பெரிய பாடாக இருக்கும்.  முபீன் சாதிகா கவிதைகளும் அப்படித்தான்.   கவிதை எப்படி எழுத வருகிறது என்று ஒருமுறை அவரிடம் கேட்டேன்.  தானாகவே எழுதுகிறது என்பது போல் சொன்னார்.  என்னால் நம்ப முடியவில்லை.   ஆட்டோமெடிக் ரைட்டிங் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது. அதுமாதிரி உண்டா என்பதும் தெரியாது.  அன்பின் ஆறாமொழி என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்தக் கவிதையை எடுத்துக்கொண்டால், முதலில் தலைப்பு அவருக்குத் தோன்றியதா?  அல்லது கவிதை வரிகள் முன்னதாக தோன்றியதா?  எது தலைப்பை தீர்மானித்தது? இந்தக் கேள்விக்கு எனக்குப் பதில் தெரியவில்லை.  ஆனால் இக் கவிதையை வாசிக்கும்போது இதன் ரிதம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. 

59)  அன்பின் ஆறாமொழி

முபீன் சாதிகா 

மீன் படரும் நீரிலும்
கருமை புகா வானிலும்
தொட்டுணரா தீயிலும்
பிளவு காணா கல்லிலும்
வருந்தும் வருந்தா வளியிலும்
நகையோடு பகையும் துயரிலும்
மெலியதில் வலியாய் மலரிலும்
நேரில் எதிரா திசையிலும்
முகம் கலக்கும் ஆடியிலும்
முற்றோடு சுவையாய் அமுதிலும்
முறிவோடு சுவையாய் அமுதிலும்
முறிவோடு தூண்டா நஞ்சிலும் 
ஒளிபுகா திரையின் இருளிலும்
அடரும் வெளியாய் கானிலும்
தளிரோடு துளிரும் முளையிலும்
முழுமையின் உருவாய் அண்டத்திலும்
விரைந்துழலும் ஒளியிலும்
ஒடுக்கும் துடியின் இடியிலும்
பொழிவில் வெருளா புயலிலும்
திரளும் தீரத்தின் பிணியிலும்
எம்மில் மாறா எச்சத்திலும்
நிச்சயமில்லா நிதர்சன நேசத்திலும்
தீரா வெகுளலலின் இறுதியிலும்
நிறையுமேûô நெறியின் நசை

நன்றி : அன்பின் ஆறாமொழி - கவிதைகள் - முபீன் சாதிகா - வெளியீடு : பாலம் பதிப்பகம் பி விட், 25 அபிராமி அபார்ட்மெண்ட்ஸ்,  3வது பிரதான சாலை, தண்டிஸ்வரர் நகர், வேளச்சேரி, சென்னை 42
முதல் பதிப்பு : நவம்பர் 2011 - விலை : ரூ.60.


22.3.17

காலை 11 மணியிலிருந்து மூன்று மணிவரை...

காலை 11 மணியிலிருந்து மூன்று மணிவரை...

அழகியசிங்கர்இதைப் படிப்பவருக்கு குறைந்தது அறுபது வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.  அப்படி இருப்பவர்கள்தான் இதைப் படிக்க வேண்டும்.  மார்ச்சு மாதமே வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது.  11 மணிக்கு மேல் வீட்டைவிட்டு வெளியே செல்வதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.  வெயிலில் நடந்து போகாதீர்கள்.  சைக்கிளில் போக வேண்டுமென்று நினைக்காதீர்கள்.  டூ வீலரிலாவது போக வேண்டுமென்று யோசிக்காதீர்கள்.  ஆனால் காரில் போவதாக இருந்தால் ஏசியை ஆன் செய்துவிட்டு போங்கள்.  அதுவும் கட்டாயமாக போக வேண்டுமென்றால் போங்கள். நீங்கள் ரத்த அழுத்த நோயாளியாக இருந்தால் வெளியே தலை காட்டாதீர்கள்.  

நீங்கள் வெயிலைத் தவிர்க்க நிழலில் இருங்கள்.  60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லோரும் பதவியிலிருந்து ஓய்வுப் பெற்றவர்களாகத்தான் இருப்பார்கள்.  ஒருசிலர் இன்னும் எதாவது ஒரு பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.  ஓய்வுபெற்றவர்கள் வீட்டைவிட்டு 11 மணியிலிருந்து 3 மணிவரை எங்கும் போகாதீர்கள்.  அதேபோல் அலுவலகத்தில் பணிபுரிபவர் அலுவலகத்தை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும். 

ஓய்வு பெற்றவர்கள் வீட்டில் இருக்கும்போது சும்மா இருங்கள்.  முடிந்தால் புத்தகம் எடுத்துப் படியுங்கள்.  டிவி பார்க்க விரும்புவர்கள் டிவியைப் பார்க்கலாம்.  அல்லது தூங்க வேண்டுமென்று நினைத்தால் நன்றாகத் தூங்கிவிடுங்கள்.  ஆனால் ஒருபோதும் வெயிலில் உலா போகாதீர்கள்.  வீட்டில் சும்மா இருப்பது எப்படி என்பதை யோசித்துப் பாருங்கள்.  சமீபத்தில் ஒரு இல:கிய நண்பரை சந்தித்தேன்.  அவரிடம் சில புத்தகங்களைப் படிக்கக் கொடுத்தேன்.  வேண்டாம் என்று திருப்பி தந்துவிட்டார்.  இத்தனைக்கும் ஒரு காலத்தில் தீவிரமாக இலக்கியத்தில் ஈடுபபட்டவர்.  அவருடைய கவிதைத் தொகுதி கூட ஒரு பதிப்பாளர் மூலம் மிகச் சிறப்பாக வெளிவந்திருந்தது.  இப்போது அவருக்கு எழுதுவதிலும் படிப்பதிலும் நாட்டம் இல்லை.  அவர் சொன்னார் : üஎனக்கு எந்தப் புத்தகமும் வேண்டாம்.  நான் சும்மா இருக்க விரும்புகிறேன்,ý என்று.

எனக்கு அவர் சொன்னதிலிருந்து பெரிய யோசனை.  சும்மா இருப்பதைப் பற்றி.  ஒரு நிமிடம் அப்படி இருக்க முடியாது என்று தோன்றியது.  பால்கனியிலிருந்து வெளியே பார்க்கிறேன்.  வெயில் கொளுத்துகிறது.  அவ்வளவு வெளிச்சம்.  இதோ வீட்டிலிருந்து ஒரு குரல் கேட்கிறது.  காப்பிப் பொடி அரைத்து வரவேண்டுமென்று.  ஜிப்புப் போன பேன்ட், பெத்தான்கள் அறுந்த சட்டைகளை எடுத்துக்கொண்டு போஸ்டல் காலனி இரண்டாவது தெருவில் இந்தத் தாங்க முடியாத வெயிலில் தைத்துக் கொண்டிருக்கும் தெரு டைலரிடம் கொண்டு போக தயாராக இருக்கிறேன்.  எல்லாம் மூன்று மணிக்கு மேல்.  சரி சும்மா இருப்பது என்பது புத்தகம் படிக்காமல் இருப்பதா?


21.3.17

நீங்களும் படிக்கலாம்...29

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              
அழகியசிங்கர்

எஸ் எம் ஏ ராம் நாடகங்கள்......
ஐந்து நாடகங்களின் தொகுப்புதான் எஸ் எம் ஏ ராம் நாடகங்கள் என்ற தொகுப்பு.  அவரிடம் முதலில் ஒரு கேள்வி கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது?  ஏன் இவர் தொடர்ந்து நாடகங்கள் எழுதாமல் விட்டுவிட்டார்.  அதற்கு பல காரணங்களை அவர் சொல்லலாம்.  நாடகம் எழுதத் தயார்.  ஆனால் பத்திரிகை இல்லை பிரசுரம் செய்வதற்கு என்றும் சொல்லலாம்.  
நகுலன் சென்னை வரும்போது கையில் ஒரு நோட்டு வைத்திருப்பார்.  அந்த நோட்டில் அவர் என்ன தோன்றுகிறதோ அதை எழுதிக்கொண்டிருப்பார்.  அவர் எழுத்து பிரசுரமாவதைப் பற்றி கவலைப் பட மாட்டார்.  எந்தப் பத்திரிகைக்காவது அவர் படைப்புகளை அனுப்பினால் கூடவே தபால்தலைகளையும் இணைத்து அனுப்புவார்.
ராமிற்கு நாடகம் எழுதும் திறமை இருந்தும் ஏன் தொடர்ந்து செயல்படவில்லை.  இன்னொரு கேள்வி: நாடகம் எழுதுவது என்பது நிகழ்த்திக் காட்டுவதற்காகத்தானா? அப்படியென்றால், அதற்கான வாய்ப்பு என்பது இல்லை என்றே தோன்றுகிறது.  ஒரு நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட வேண்டுமென்று நினைத்தால், இன்றைய சூழ்நிலையில் அதன் சாத்தியம் குறைவாகவே இருப்பதாக இருக்கிறது. பிரபலமான சபா நாடகங்கள் தடுமாறிக்கொண்டிருக்கிற காலம் இது.  மேலும் ஒரு நாடகத்தை நடத்த வேண்டுமென்றால் குறைந்த பட்சம் 10000 ரூபாய்க்களாவது தேவை என்று நாடகத்தில் அனுபவமிக்க என் நண்பர் ராஜாமணி குறிப்பிட்டுள்ளார். செலவு செய்வதோடல்லாமல், நடிப்பதற்கு சரியான நடிகர்கள் கிடைக்கவேண்டும்.  பின் பார்வையாளர்கள் வேண்டும். இந்தக் காலத்தில் யார் நாடகத்தைப் பார்க்க வருகிறார்கள்.  இலவசமாக நாடகத்தைப் போடுவதாக இருந்தாலும், யாரும் பார்க்க வருவார்களா என்பது சந்தேகம். காரணம் நாடகம் நடக்கும் இடம், வருகிற தூரம் இதெல்லாம் முக்கியமான காரணங்களாக மாறி விடுகின்றன.     
ராமின் இந்த ஐந்து நாடகங்களையும் பலர் மேடை ஏற்று நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.  அந்த அளவிற்கு அவர் எழுதிய நாடகங்களுக்கு ஒருவித கௌரவம் கிடைத்திருக்கிறது. இனி இதுமாதிரியான நாடகம் நடத்தப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று நினைத்து, நாடகத்தை எழுதத் தொடங்க வேண்டும் ராம். மேலும் நாடகத்தைப் பிரசுரம் செய்யப் பத்திரிகைகள் இல்லை என்பதையும் நினைத்து, தொடர்ந்து நாடகங்கள் எழுதிப் பார்க்க வேண்டும்.
இன்று பல்கலைக்கழகங்களில் நாடகத் துறை என்று ஒன்று இருந்தால், ராம் நாடகங்களை கொண்ட புத்தகத்தை உதாரணமாக வைத்துக்கொண்டு நாடகங்களை நடத்திப் பார்க்கலாம்.  அதற்கெல்லாம் பல்கலைக்கழகங்கள்தான் முயற்சி செய்ய வேண்டும்.  
நாடகப் புத்தகங்களை நாம் அதிகமாக உருவாக்க வேண்டும்.  நாடகம் நடத்தப் படுகிறதோ இல்லையோ நாடகப் புத்தகத்தை ஒரு நாவல் படிப்பதுபோல ஒரு சிறுகதைத் தொகுதி படிப்பதுபோல படிக்க வேண்டும்.  1957ஆம் ஆண்டு க நா சுவின் நல்லவர் என்ற புத்தகம் வந்துள்ளது.  அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் க நா சு இப்படி எழுதி உள்ளார் :
'நாடகங்கள் பார்ப்பதில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் கிடையாது.  ஆனால் நாடகங்கள் படிப்பதில் நான் யாருக்கும் சளைத்தவன் அல்ல.  நாடகங்கள் நடிக்கப்படுவதற்காக எழுதப்பட வேண்டிய அவசியமே இல்லை.  இலக்கியமாகப் படிப்பதற்காக மட்டும் எழுதப்பட்டால் போதும் என்பது என் அபிப்பிராயம்.' இப்படி தெளிவாக தன் கருத்துக்களை முன் வைக்கிறார்
க நா சு.  அந்த விதத்தில் ராம் நாடகங்கள் படிப்பதற்கும் இலக்கிய அனுபவத்தைத் தர தவறவில்லை. 
ந சிதம்பரசுப்பிரமணியன் என்ற மணிக்கொடி எழுத்தாளர், அவருடைய ஊர்வசி நாடகப் புத்தகத்தில் ஒன்றை குறிப்பிடுகிறார்.  'நாம் படித்து அனுபவிக்கும்படியாக நாடகம் ஒன்றுமில்லை,' என்று தன் கருத்தைத் தெரிவிக்கிறார். 
இதெல்லாம் பார்க்கும்போது ராம் நாடகங்கள் படித்து ரசிக்கும்படியாக இருக்கிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 
அவருடைய ஐந்து நாடகங்களை ஐந்து விதமாக எழுதி உள்ளார்.  üசுயதரமம்ý என்ற நாடகத்தில் மகாபாரத்தில் வரும் திரௌபதி, பஞ்ச பாண்டவர்களை திருமணம் செய்துகொள்வதற்கு முன் தன் எதிர்ப்பை பதிவு செய்கிறார்.  மகாபாரதத்தில் இந்தப் பகுதி மௌனமாக்கப்பட்டிருக்கிறது.  ஆனால் ராம் நாடகத்தில் திரௌபதி இப்படி கூறுகிறாள் : தர்மங்களில் சந்தர்ப்பங்களே முக்கியமானவை; சங்கல்பங்கள் அல்ல,ý என்று கூறியபடி யுதிஷ்டிரனின் கழுத்தில் மாலை அணிவிக்கிறாள்.  
மூடிய அறை என்ற 2வது நாடகத்தைப் படிக்கும்போதே, மூடிய அறையில் நிச்சயம் ஒன்றும் இருக்கப் போவதில்லை என்று வாசகருக்குத் தெரிந்துவிடுகிறது. 25 வருடமாக திறக்கப் படாத மச்சு ரூமை திறக்க எல்லோரும் முயற்சி செய்கிறார்கள்.  அதை மையமாக வைத்து இந்த நாடகத்தை எழுதிக்கொண்டு போகிறார் ராம்.  வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை நயம்பட வெளிப்படுத்துகிறார் ராம். அந்தக் குடும்பத்தின் மூத்தப் பையன் அறையைத் திறந்து பார்த்து, அதில் ஒன்றுமில்லை என்று சொல்கிறான்.  ஆனால் மற்றக் குடும்பத்தினர்கள் அவன் சொல்வதை நம்பவில்லை.  அவனை பைத்தியக்காரன் என்று குறிப்பிடுகிறார்கள். இன்றைய உலகத்தை நையாண்டி செய்வதுபோல் இருக்கிறது.     
மூன்றாவது நாடகமான மணிமேகலையின் கண்ணீர் என்ற நாடகம். இந் நாடகத்தைப் படிக்கும்போது ராமின் கற்பனை அசாதரணமாக உள்ளது.  திரௌபதியும் சீதையும் மணிமேகலையைச் சந்தித்துப் பேசுவதுபோல் வருகிறது.  நாடகமே காவிய நடையில் எழுதி உள்ளார்.  இந்த நாடகத்தை என்னால் ரசிக்க முடியவில்லை.  காரணம்: திரௌபதியும், கண்ணகியும் மணிமேகலையை எப்படி சந்திக்க முடியும்.  இந்தக் கற்பனை கொஞ்சம் பேராசையான கற்பனையாக இருக்கும்போல் படுகிறது.
இத் தொகுப்பில் இரண்டு பெரிய நாடகங்களில் ஒன்று எப்ப வருவாரோ இன்னொன்று ஆபுத்திரனின் கதை.  சாமுவேல் பெக்கெட் எழுதிய நாடகத்தின் மையக் கருவை வைத்துக்கொண்டு இந்திய சூழ்நிலைக்கு ஏற்ப எழுதியிருப்பதாக குறிப்பிடுகிறார். ஒருவர் வந்திருந்து சுபிட்சத்தைக் கொண்டு வரப்போகிறார் என்று அவருக்காகக் காத்திருப்பதுபோல் இந் நாடகம் போய்க்கொண்டிருக்கிறது.  ஆனால் அவர் வரவே இல்லை.  வரப்போகிறார் வரப்போகிறார் என்று காத்திருக்கிறார்.  இதுதான் இந் நாடகம்.  இதைப் படிக்கும்போது கொஞ்சங்கூட அலுப்பில்லாம் எழுதிக்கொண்டே போகிறார் ராம்.  
பெரிய நாடகமான ஆபுத்திரனின் கதையில் அண்ணன் தம்பி இருவர் மூலம் நாடகத்தைத் துவக்குகிறார்.  ஆள் அரவமற்ற இடத்தில் அபுத்திரின் கோமுகி  ஆற்றில் அட்சயப் பாத்திரத்தை எறிகிறான்.  அதை இரண்டு அழகிய கரங்கள் வெளியே தோன்றி ஏற்றுக்கொள்கிறது.  அவன் சொல்கிறான் : 'ஆபுத்திரனின் அடையாளம் அழிந்து விடவில்லை.  அது அட்சயப்பாத்திரமாக இன்னும் கோமுகியின் வயிற்றில் உயிர்த்திருக்கிறது.' என்று.
இந் நாடகங்கள் எல்லாம் நிதானமாக வாசித்து ரசிக்க வேண்டிய இலக்கியத் தரமான நாடகங்கள்.  இந் நாடகங்கள் நடத்திக் காட்டப் பட வேண்டியவை.  ராம் மேலும் நாடகங்கள் எழுத வேண்டும்.  வேறு விதமாக யோசிக்க வேண்டும்.

எஸ் எம் ஏ ராம் நாடகங்கள் - எஸ் எம். ஏ.ராம் - தொடர்புக்கு: எஸ் மோகன் அனந்தராமன், 7 எ மாருதி பிளாட்ஸ்இ சரோஜினி முதல் குறுக்குத் தெரு, ராஜாஜி நகர். பல்லாவரம், சென்னை 43 - விலை ரூ.150 - முதல் பதிப்பு : டிசம்பர் 2015

20.3.17

கதா மஞ்சரி கதை -3


அழகியசிங்கர்

  வீடு நிறைந்த பொருள்                                                            


ஒருவன் பதினாயிரம் வராகன் வைத்திருந்தான்.  அவன் தனக்கு இறக்குங்காலம் அடுத்திருப்பதை அறிந்தான்.  தன் இரு மக்களையும் அழைத்தான்.  ஒவ்வொருவனுக்கும் ஐந்தைந்து பணங் கொடுத்ôன்.  üüஇதனாலே வீட்டை நிறையும்படி செய்பவனுக்கு என் பொருள் முழுவதும் தருவேன்,ýý என்ளான்.  அவர்களிலே மூத்தவன் ஐந்து பணத்துக்கு மலிந்த பொருளாகிய வரகு வைக்கோலை வாங்கிவந்து வீடு நிறையக் கொட்டி பரப்பி வைத்தான்.  இளையவன் நல்ல விளக்கு வாங்கிவந்து வீடெங்கும் விளக்கமாகப் பொருள்கள் தெரிய ஏற்றி வைத்தான்.  தந்தை அவ்விரண்டையும் பார்த்தான்.  இளையவன் அறிவை வியந்து பாராட்டினான்.  அவனுக்கே தன் உடைமை முழுவதையும் ஒப்புவித்தான்.  ஆதலால், அறிவுடை ஒருவனே பெரியவன் ஆவான்.

கதா மஞ்சரி கதையை இப்போது எழுதினால் எப்படி இருக்கம்?

ஒரு பணக்காரர்.  மரணம் அடையும் தறுவாயில் அவர் இருக்கிறார்.  தன் சொத்து முழுவதும் அவருடைய இரண்டு புதல்வர்களில் யார் அறிவில் சிறந்தவர்களோ அவர்களுக்கு அளிக்க விரும்புகிறார்.  புதல்வர்கள் இருவரையும் கூப்பிட்டு அனுப்பினார்.  இருவரகளும் வந்தனர்.  'உங்கள் இருவருக்கும் ஒரு பரிட்சை வைக்கப் போகிறேன்.  அதில் யார் வெற்றிப் பெறுகிறாரோ அவருக்கு என் சொத்து முழுவதும் கொடுக்க விரும்புகிறேன்,' என்றார்.  மகன்கள் இருவரும் சிறிது நேரம் யோசித்தார்கள்.  அப்பாவுக்கு மூளை பிசகிப் போய்விட்டது என்று முடிவுக்கு வந்தார்கள்.  ஆனாலும் அப்பாவிடம் ஒன்றும் சொல்லவில்லை.  அவர்கள் அப்பா ஆளுக்கு ஒரு லட்சம் ருபாய் பணம் கொடுத்து, 'இந்த வீட்டில் உள்ள அறை முழுவதும் ஒரு லட்சம் ரூபாயக்கு எதாவது வாங்கி நிரப்ப வேண்டும்.  யார் நிரப்புகிறார்களோ அவர்கள் அறிவை மெச்சி என் சொத்து முழுவதும் தரப்படும்' என்றார். மூத்தப் பையன் யோசித்தான்.  இந்த அறை முழுவதும் நிரப்ப கவிதைப் புத்தகம்தான் லாயிக்கு என்று கவிதைப் புத்தகங்களாக வாங்கி வீடு முழுக்க நிரப்பி விட்டான்.  இளையவன் யோசித்தான்.  பெரிய குத்துவிளக்குப் போதும் என்று அவனுக்குத் தோன்றியது.  பொரிய குத்துவிளக்கை வாங்கிக்கொண்டு, எண்ணெய் இட்டு விளக்கு ஏற்றினான்.  அவர்கள் அப்பா அவர்கள் இருவரும் என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்த்தார்.  பெரிய பையன் மீது கோபமான கோபம்.  யாராவது கவிதைப் புத்தகங்களை வாங்குவார்களா என்ற கோபம்தான்.  இரண்டாவது பையனின் செய்தது அவருக்குப் பிடித்திருந்தது. 
வீட்டிற்கே விளக்கு ஏற்றிவிட்டான் என்று எண்ணினார்.  தன் சொத்து முழுவதும் இரண்டாவது பையனுக்கு எழுதிக் கொடுக்க எண்ணி அவர் கருத்தைக் கூறினார்.  முதல் பையன் அவர் பேச்சைக் கேட்டு, 'கிழவா.. உனக்கு புத்தி எதாவது பிசகிப் போச்சா...ஒழுங்கா பாதிப் பாதியாக சொத்தைப் பிரித்துக்கொடு.. இல்லாவிட்டால் கொலை விழும்,' என்று மிரட்டினான்.

இரண்டாவது பையனோ, 'சொன்னபடி முழு சொத்தையும் என் பெயருக்கு மாற்று....இல்லாவிட்டால் உன்னை கொன்றுவிடுவேன்,' என்று மிரட்டினான்.

செல்வந்தார் அவர்கள் இருவரும் பேச்சைக் கேட்டு மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.  

19.3.17

100 கவிதைப் புத்தகங்களிலிருந்து 100 கவிதைகள்....


.

அழகியசிங்கர்மனதுக்குப் பிடித்த கவிதைகள் என்ற தலைப்பில் இதுவரை 57 கவிதைகள் கொண்டு வந்துள்ளேன்.  இப்போது 58 கவிதையை கொண்டு வர உள்ளேன். இப்படி 100 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு தொகுப்பு நூல் கொண்டு வர உள்ளேன்.  கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன்.  நான் தேர்ந்தெடுக்கும் கவிதையைக் குறித்தும், முடிந்தால் கவிஞர் பற்றியும் எதாவது எழுத வேண்டுமென்று தோன்றியது.  1988ஆம் ஆண்டு விருட்சம் ஆரம்பித்த நாளிலிருந்து என்னிடம் கவிதைப் புத்தகங்கள் சேர்ந்த வண்ணம் உள்ளன. இந்தக் கவிதைப் புத்தகங்களையும் அதில் குறிப்பிடப்பட்ட கவிதைகளையும் நான் மதிக்கிறேன்.  
58வது கவிதையாக நான் நேசன் புத்தககத்திலிருந்து  எடுக்கிறேன். 'ஏரிக்கரையில் வசிப்பவன்' என்பதுதான் கவிதையின் புத்தகம்.  இத் தொகுப்பில் பல கவிதைகள் குறிப்பிடும்படி உள்ளன.  நேசன் ஒரு திறமையான கவிஞர்.  ஆரம்ப காலத்தில் நேகனும், ராணிதிலக் அவர்களும் போஸ்டல் காலனியில் உள்ள என் வீட்டிற்கு வருவார்கள்.  அவர்கள் எழுதிக்கொண்டிருந்த கவிதைகளை என்னிடம் காட்டுவார்கள்.  அவர்களை அக் கவிதைகளை வாசிக்கச் சொல்வேன்.  அவர்களும் கவிதைகளை வாசிப்பார்கள்.  உடனடியாக அக் கவிதைகளை வாங்கிக்கொண்டு விருட்சம் இதழ்களில் பிரசுரம் செய்வேன்.  அவர்களைப் பார்க்கும்போது உண்மையாக கவிதைக்காகவே வாழ்ந்தவர்கள் போல் தோன்றும்.  
இத் தொகுப்பில் பெரும்பாலான கவிதைகள் என்னை கவர்ந்தாலும், 'என்னைச் சுற்றும் ஏழு நிலவுகள்' என்ற கவிதையை நான் தொகுப்பில் சேர்க்க விரும்புகிறேன். 
ஒவ்வொரு நிலவையும் பார்க்கும்போது ஏற்படுகிற அனுபவங்களை நேசன் விவரித்துக்கொண்டு போகிறார்.  ஏழாவது நிலவு 'எனக்குப் பிடிபடாமல் நழுவிக்கொண்டிருக்கும் ஒரு சொல்,' என்று முடிக்கிறார். படிப்பவரின் ஆன்மிக உணர்வை தட்டி எழுப்பும் விதமாய் இக் கவிதை உள்ளதாக தோன்றுகிறது.   எளிமையான நேசனின் இந்தக் கவிதையை எப்போதும் வாசிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.


மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 58

 என்னைச் சுற்றும் ஏழு நிலவுகள் 


ஸ்ரீநேசன்


முதல் நிலவை எப்போதும்
எறும்புகள் மொய்த்தவண்ணம் உள்ளன
இரண்டாவது நிலவு
குழந்தைகளால் மட்டுமே ரசிக்கக்கூடியது
மூன்றாவது நிலவு போலீஸ்காரனின் துப்பாக்கிச் சூட்டுக்குக்
காத்திருக்கும் ஒரு போராளியின் இதயம்
நான்காவது நிலவு எப்போதும் என்னை அழைத்துக்
கொண்டேயிருக்கும் வறண்ட மலையின் குன்று
ஐந்தாவது நிலவு
மதுக்கோப்பையாகத் தளும்பிக்கொண்டிருக்கிறது
ஆறாவது நிலவுக்குள் சிவை உருவாகிக் கொண்டிருக்கிறாள்
ஏழாவது நிலவு
எனக்குப் பிடிபடாமல் நழுவிக்கொண்டிருக்கும் ஒரு சொல்.


நன்றி : ஏரிக்கரையில் வசிப்பவன் - கவிதைகள் - ஸ்ரீ நேசன் - மொத்தப் பக்கங்கள் : 80 - வெளியீடு : ஆழி பப்ளிஷர்ஸ், 12 முதல் பிரதான சாலை, யுனைட்டட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600 024 - தொலைபேசி : 044-23722939 - விலை : ரூ.60  


18.3.17

தண்ணீர் சண்டை ஆரம்பமாகிவிட்டது

தண்ணீர் சண்டை ஆரம்பமாகிவிட்டது

அழகியசிங்கர்


எங்கள் தெருவில் முதல் தண்ணீர் சண்டை இன்று ஆரம்பமாகிவிட்டது.  இனி தினமும் இந்தக் காட்சிகளைக் கொண்டாட்டமாகப் பார்த்து ரசிக்கலாம்.  தினமும் காலையிலிருந்து தெருவில் உள்ள பெண்கள் தண்ணீருக்காக குடம் குடமாக எங்கிருந்தோ தண்ணீரை சேகரித்த வண்ணம் இருக்கிறார்கள்.  ஆண்கள் இதில் கலந்து கொள்வதாக தெரியவில்லை.  எப்படித்தான் இந்தப் பெண்களுக்கு இந்தக் குடங்களைக் கொண்டு வரும் சக்தி இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.  அதேபோல் தண்ணீர் பிடிக்க அவர்கள் சண்டைப் போடுவதும் ஆபாசமாக இருக்கும்.  ஒரே வீட்டில் பத்து குடுத்தனங்கள் இருப்பார்கள்.  எத்தனை தண்ணீரை சுமந்தாலும் தேவை இருந்துகொண்டே இருக்கும்.  
நாங்கள் போஸ்டல் காலனி வீட்டில் இருந்தபோது தண்ணீருக்காக ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறேன்.  மொத்தம் 7 அடுக்ககங்கள்.  எல்லோரும் சேர்ந்து லாரியில் தண்ணீர் வாங்கிக் கொண்டு, சம்பில் கொட்டுவோம்.  சம்பை சரியாக மூடாவிட்டால் நாங்கள் கொட்டிய தண்ணீரெல்லாம் எதிர்சாரியில் உள்ள வீடுகளுக்கு தானாகவே ஓடிவிடும்.  
எங்களுக்குள்ளே சண்டையும் ஏற்படும்.  தண்ணீர் பிரச்சினை போதுதான் நாங்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்வோம்.  அதற்கு முன் நாங்கள் யாவரும் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ள மாட்டோம்.  கீழ் வளாகத்தில் குடியிருப்பவர் ஒரே ஒரு பெண்மணி.  முதல் மாடியில் நாங்கள் இருந்த வளாகத்திலிருந்து எதிர் வளாகத்தில் உள்ள இடத்தில் பத்து பன்னிரண்டு பேர்கள் இருப்பார்கள்.  தண்ணீர் விலைக்கு வாங்கி அளந்து விடும்போது எல்லோரும் பணத்தை சமமாகப் பிரித்துக்கொள்ள úவ்ணடும்.  கீழே உள்ள பெண்மணி ஒப்புக் கொள்ள மாட்டார்.  இத்தனைக்கும் அவர் ஒரு டீச்சர்.  üüநான் எப்படி என் ஒருவளுக்காக அத்தனைப் பைசா கொடுப்பது,ýý என்று சண்டைக்கு வருவார்.  பத்து நபர்கள் உள்ள குடும்பத்திற்கு சங்கடமாக இருக்கும்.
ஆனால் தண்ணீரைத் திறந்து விடும் சமயத்தில் ஒரு ஆளுக்காக தண்ணீர் நிரப்ப மாட்டார்.  பலருக்கு நிரப்புவதுபோல் பக்கெட்டுகளில் நிரப்பி வைத்திடுவார். பணம் குறைவாகத்தான் கொடுப்பார்.  
நான் இதை எப்படி சரி செய்வது என்று மண்டையைப் போட்டு உடைத்துக்கொள்வேன்.  எனக்கு சிலசமயம் நல்ல பெயர் கிடைப்பதாக இருக்கும்.  பின் கெட்ட பெயரில் வந்து முடியும்.  அந்தச் சமயத்தில் அற்புதமாக ஒத்துழைப்பு நல்கியது எங்கள் வளாகத்தில் உள்ள கிணறுதான்.  அதை வைத்து நான் அற்புதக் கிணறே என்று ஒரு கவிதை எழுதினேன்.  அது ஒரு நீண்ட கவிதை.  அதில் ஒரு பகுதியை 
இங்கே தர விரும்புகிறேன்.

அற்புதக் கிணறோ
எந்நேரமும் தவறாமல்
அளித்த
தண்ணீரின் கொடையை
ஒரு நாளைக்கு
சில மணி நேரங்களில்
எங்களின்
சில பக்கெட்டுகளை
நிரப்ப
அள்ளித் தருகின்றது
தண்ணீரை ஒருநாள் முழுவதும்
பாதுகாக்க
நாங்கள் பதட்டப்படுகிறோம்

அற்புதக் கிணற்றின்
காய்ந்த மார்பு காம்புகளிலிருந்து
நீருக்குப் பதில்
செந்நீரா கசிகிறது
அற்புதக்கிணற்றின்
திரவ ஊற்றே
உம் முன்னே
தலை வணங்கி நிற்கிறோம்

சென்னையில் இப்படி ஒரு தண்ணீர் பிரச்சினை வருமென்று நினைத்துப் பார்க்காத தருணம் அது. 
இதோ உங்களுக்குக் கேட்கிறதா எங்கள் தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் பலமாக ஹான்ட் பைப்பில் தண்ணீர் அடிக்கும் சத்தம்.  

17.3.17

ஒரு குழப்பம்......அழகியசிங்கர்இன்று யாரும் இல்லை வீட்டில்.  அதனால் மாலை சங்கீதா ஓட்டலுக்கு டிபன் சாப்பிடச் சென்றேன்.  பங்களூரிலிருந்து நண்பர் மகாலிங்கமும் வந்திருந்தார்.  ஒரே கூட்டம்.  இந்த ஓட்டல் அசோக்நகரில் லட்சணமான ஓட்டல்.  அங்கே மரியாதையுடன் வாடிக்கையாளர்களுக்கு சர்வீஸ் செய்கிறார்கள்.  நான் எப்போதும் இங்கே போகத் தொடங்கி விட்டேன்.  இந்த ஓட்டல் வந்த பிறகு இங்குள்ள மற்ற ஓட்டல்களின் மவுசு குறைந்து விட்டதாக எனக்குத் தோன்றுகிறது.

கொஞ்ச நேரத்தில் சினிமாப் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின.  நான் மியூசிக் சிஸ்டம் மூலம் பாடுவதாக நினைத்தேன்.  ஆனால் ஒரு ஆணும் பெண்ணும் ஓட்டலின் மூலையில் நின்றுகொண்டு  பாடிக்கொண்டிருந்தார்கள்.  டி எம் சௌந்தர்ராஜன் மாதிரி, பி பி ஸ்ரீனிவாஸ், ராஜா மாதிரி எல்லாம் உடனே உடனே பாடிக்கொண்டிருந்தார்கள்.  ஒரு நிமிடத்தில் பழைய எம்ஜி ஆர் பாடல்களைக் கேட்டபோது, என் நிகழ் காலத்திலிருந்து நழுவி பழைய காலத்திற்குப் போனதுபோல் தோன்றியது.  எம்ஜிஆர் படங்கள் பாடல்கள் மூலம்தான் எனக்கு எம்ஜிஆரைத் தெரியும்.  அவர்கள் பாடல்களைக் கேட்கும்போது எம்ஜிஆரைப் பார்ப்பதுபோல் உணர்வு எழுந்தது. அந்தப் பாடல்களைக் கேட்கும்போது, நான் நிஜார் போட்டு சுற்றும் பையனாக மாறியதுபோல் இருந்தது.  இந்தக் கால மயக்கம் ஆச்சரியமாக இருந்தது.  

டிபனும் நன்றாக இருந்தது.  நாங்கள் சாப்பிட்டு விட்டு வரும்போது, அங்கு பாடுபவரைப் பார்த்து சந்திரபாபு பாடிய ஒரு பாடலை பாடும்படி சொன்னேன்.  அவர், 'பம்பரக் கண்ணாலே..' என்ற பாட்டைப் பாடினார்.  

வீட்டிற்கு வந்தவுடன், பழைய நிலையிலிருந்து மாறி புது நிலைக்கு வந்து விட்டேன்.

16.3.17

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 57

அழகியசிங்கர்  

 காடு

வஸந்த் செந்தில்ஒருவர் சென்று
மழையோடு திரும்பி வந்தார்

ஒருவர் சென்று
மலர்களோடு திரும்பி வந்தார்

ஒருவர் சென்று
சுள்ளிகளோடு திரும்பி வந்தார்

ஒருவர் சென்று
பழங்களோடு திரும்பி வந்தார்
ஒருவர் சென்று
பறவைகளோடு திரும்பி வந்தார்

பச்சயங்களோடு ஒருவர்
மிருகங்களோடு ஒருவர்
மீளவேயில்லை ஒருவர்

ஒருவர் பயந்து
உள் செல்லவேயில்லை

அவரவர் தேவைகளை
அவரவரக்கு அளித்து
வழிதொலைத்த பாதைகளை
வழியெல்லாம் வைத்து

அடர்ந்து கிடக்கிறது காடு

நன்றி : மழையும் நீயும் - கவிதைகள் - வஸந்த் செந்தில் - பதிப்பகம் : இலக்குமி நிலையம், ப எண் : 53, பு எண் : 115, கௌடியா மடம் சாலை, இராயப்பேட்டை, சென்னை 600 014 - முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2001 - விலை : ரூ.30 - பக்கம் : 144 

15.3.17

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில்


அழகியசிங்கர்
1. இந்த ஆண்டு கோடை கடுமையாக உள்ளதா?
ஆமாம்.  எங்கள் தெருவில் உள்ளவர்கள் 24 மணி நேரமும் தண்ணீருக்காக அலை அலை என்று அலைகிறார்கள்.  எங்கள் வீட்டிலும் அந்தப் பிரச்சினை வெடிக்கும்.

2. இப்போது என்ன புத்தகம் ஆங்கிலத்தில் படிக்க எடுத்து வைத்திருக்கிறீர்கள்?
    டங்ழ்ஸ்ரீஹ் கன்க்ஷக்ஷர்ஸ்ரீந் ன் பட்ங் இழ்ஹச்ற் ர்ச் ஊண்ஸ்ரீற்ண்ர்ய்  என்ற புத்தகத்தைப் படிக்கப் போகிறேன்.

3. விருட்சம் சார்பாக கவிதைக்காக பரிசு கொடுக்க விரும்பினால், யாருக்கு  பரிசு வழங்குவீர்கள்?
என்னை வம்பில் மாட்டாதீர்கள்.  நான் யாருக்கும் பரிசு வழங்க விரும்பவில்லை.

4. இலக்கியக் கூட்டங்களுக்கு இப்போதெல்லாம் செல்வதில்லையா?
ஒரு இலக்கியக் கூட்டம் மயிலாப்பூரில் நடந்தது.  அங்கு போவதற்கு கிளம்பினேன்.  5 மணிக்கு மாம்பலத்திலிருந்து கிளம்பினேன்.  மயிலாப்பூர் போய்ச் சேரும்போது மணி 6 மணி மேல் ஆகிவிட்டது. பின் கூட்டத்தில் கலந்து கொண்டு வீடு வரும்போது மணி 9 ஆகிவிடுகிறது.  இலக்கிய கூட்டம் போகலாமா வேண்டாமா என்ற யோசனை வருகிறது.

5. அப்படியென்றால் கூட்டம் எங்கே நடைபெற வேண்டும்?
அவரவர் பகுதிகளில்தான் கூட்டம் நடைபெற வேண்டும்.  மாம்பலத்தில் கூட்டம் நடந்தால், மாம்பலத்தில் உள்ளவர்கள் கூட வேண்டும்.  மயிலாப்பூர் என்றால் மயிலாப்பூர்.  திருவல்லிக்கேணி என்றால் திருவல்லிக்கேணி.

6. அப்படியாவது கூட்டம் நடத்த வேண்டுமா?
ஆமாம்.  இன்று தமிழில் யாரும் புத்தகமே படிக்க மாட்டார்கள். கூட்டம் மூலம் புத்தகங்கள் பற்றியும் எழுத்தாளர்கள் பற்றியும் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளட்டும்.

7. வாழ்க்கை என்றால் என்ன?
வாழ்க்கை என்றால் திங்கள், செவ்வாய், புதன், வியாழன்....

8. ரோடில் செல்லும்போது, டூவீலரில் போவீரா, காரில் போவீரா, பஸ்ஸில் போவீரா, நடந்து போவீரா..
டூ வீலரில்தான் போவேன்.  காரில் கூட்டம் இல்லாத இடத்திற்குப் போவேன். பார்க்கில் மட்டும் நடப்பேன். பஸ்ஸில் நஹி.

9.  உங்களைப் பார்க்க நண்பர்கள் வருவார்களா?  நண்பர்களைப் பார்க்க நீங்கள் போவீர்கள்.
இரண்டுமே நடப்பதில்லை.  அவசியம் இருந்தால்தான் சந்திப்பு நிகழும்.

10. உங்கள் வீட்டில் எந்த அறைக்குச் செல்ல விரும்பவில்லை?
அப்பா படுத்திருந்த அறைக்கு..

11. புத்தகம் பதிப்பது மூலம் நீங்கள் லாபம் சம்பாதிக்க விரும்புகிறீரா பொழுதுபோக்கா?
பொழுதுபோக்கு..

12. பொழுதுபோக வேண்டுமென்றால் என்ன வழி இருக்கிறது
எத்தனையோ வழி உண்டு.  டிவி சீரியல் பார்த்துக்கொண்டே பொழுதைப் போக்கிக் கொள்ளலாம்.

13. கவிதை எப்படி இருக்க வேண்டும்?
படித்தவுடன் மனதில் பிடித்துக்கொள்ள வேண்டும்.  இன்னும் படிக்க வேண்டும் என்று ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்.

14. சமீபத்தில் நீங்கள் மகிழ்ந்த தருணம் எது?
முதன் முதலாக என் கவிதைகளைப் பிரசுரம் செய்த மலர்த்தும்பி என்ற பத்திரிகையைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.

15. தூக்கத்தைப் பற்றி உங்கள் கருத்தென்ன?
தூக்கம் வந்தால் தூங்கி விடுங்கள்.  பகலாக இருந்தாலும் இரவாக இருந்தாலும்.

16.  நீங்கள் ஒரு நண்பரோடு படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் எது

சிலப்பதிகாரம். கோவலன் பற்றி ஒரு வரி வருகிறது :
நகரப் பரத்தரொடு
திரிதரு மரபிற் கோவலன் போல

17. இத்துடன் போதுமா?

போதும்.  பின்னால் தொடர்வோம்.12.3.17

யார் வந்திருந்து புத்தகத்தைப் போட்டிருப்பார்கள்..


அழகியசிங்கர்ஐராவதத்திற்கு ஒரு கெட்ட பழக்கம் அவர் பேப்பர் கடைகளில் போய் பத்திரிகை, புத்தகங்கள் விலைக்கு வாங்கிப் படிப்பார்.   புதியதாக குமுதம் வந்தால் வாங்கிப் படிக்க மாட்டார்.  பேப்பர் கடைகளில் எப்போது வருகிறது என்று பார்த்து வாங்கி வந்து விடுவார்.  தீபாவளி மலர்களையும் அப்படி வாங்கிப் படித்திருக்கிறார். 

இந்தப் பேப்பர் கடைகளில் பழையப் புத்தகங்களும் கிடைக்கும்.  ஐராவதம் இதுமாதிரி பேப்பர் கடைகளில் வீசி எறியப்படும் புத்தகங்களையும் விலை கொடுத்து வாங்கிவிடுவார்.  எனக்கும் அவர் மாதிரி ஒரு பித்து.  பேப்பர் கடைகளில் என்ன புத்தகம் கண்ணில் படுகிறது என்று பார்ப்பேன்.  

பேப்பர் கடைகளில் புத்தகங்களை விலைக்குப் போடுபவர்களை நான் உயர்வாகவே நினைக்க மாட்டேன்.  ஏன்என்றால் ஒரு பேப்பர் கடையில் புத்தகங்களை விலைக்குப் போட்டால் ஒரு கிலோவிற்கு ரூ8 தான் பணம் கிடைக்கும்.  ஆனால் ஒரு கிலோ புத்தகம் என்பது நாலைந்து புத்தகங்களுக்கு குறைவில்லாமல் இருக்கும்.  என்னைப் போன்றவர்கள் திரும்பவும் அந்தப் புத்தகங்களை வாங்கச் சென்றால், பேப்பர் கடைக்காரர் ஒரு கிலோவிற்கு ரூ.100 என்று கொடுப்பார்கள்.  அல்லது புத்தகத்தின் பாதி விலையைக் கேட்பார்கள். இப்படி அந்நியாயக் கொள்ளை இந்தப் பேப்பர் கடைகளில் நடக்கின்றன.   புத்தகம் வைத்திருப்பவர்கள் இப்படி புத்தகங்களை ஒழித்துக் கட்ட வேண்டுமென்றுதான் பேப்பர் கடைகளில் புத்தகங்களைப் போடுகிறார்கள்.  அவர்கள் ஒன்றே ஒன்று செய்யலாம்.  அவர்களிடம் புத்தகம் இருக்க வேண்டாமென்று நினைத்தால் ஏதாவது நூல் நிலையத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்து விடலாம்.   அல்லது யாராவது உங்கள் நண்பர்கள் புத்தகங்களைப் படிக்கும் புழுக்களாக இருந்தால், அவர்களிடம் கொடுத்தால் அவர்கள் உங்களுக்கு புத்தகங்களைப் படித்துவிட்டு திருப்பியே தரமாட்டார்கள்.  நீங்களும் மறந்து விடுவீர்கள்.  பெரும்பாலான நண்பர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.  ஏன் நீங்களும் அப்படிப்பட்ட ஒருவராக இருக்கலாம்.

இன்று காலை கோவிந்தன் ரோடில் உள்ள ஒரு பேப்பர் கடைக்குச் சென்றேன்.  அங்கு அடுக்கி வைத்திருந்த புத்தகங்களைப் பார்த்தேன்.  அதில் ஒரு புத்தகம் இருந்தது.  அந்தப் புத்தகத்தின் பெயர் : கெட்டவன் கேட்டது.  இந்தப் புத்தகத்தை வெளியிட்டது நான்தான்.  என் புத்தகமே எப்படி பேப்பர் கடைக்கு வந்தது என்ற திகைப்பு.  மேலும் அது ஒரு சிறுகதைத் தொகுப்பு.  எழுதியவர் சாட்சாத் ஐராவதம் அவர்கள்.   19 சிறுகதைகளைக் கொண்ட அந்தப் புத்தகத்தின் விலை ரூ.130 தான்.  வெளியான ஆண்டு 2012.  யார் இதை பேப்பர் கடையில் போட்டிருப்பார்கள்.  இலவசமாக நான் யாரிடமாவது படிக்கக் கொடுத்தப் புத்தகமா அல்லது என்னிடம் விலைக்கு வாங்கிய புத்தகமா?  அந்த நபர் யார் யார் யார் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.  ஐரனி என்னவென்றால் பேப்பர் கடையில் பழையப் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் ஐராவதத்தின் புத்தகமும் பேப்பர் கடையில் இருப்பதுதான்.  

கநாசு அப்படித்தான் அவர் வெளியிட்ட ஒரு நாவல் புத்தகம் விற்பனை ஆகாமல் இருந்ததாம்.  மாமனார் வீட்டு பரண் மீது இருந்ததாம்.  அந்தப் புத்தகக் கட்டுகளை பழைய பேப்பர் கடையில்  போட்டுவிட்டாராம் க நா சு. இது உண்மையான தகவலா?  எழுத்து பழைய இதழ்களை சி சு செல்லப்பாவும், அவர் புதல்வர் மணியும் பேப்பர் கடையில் எடைக்குப் போட்டுவிட்டார்களாம்.

இதைப் படிப்பவருக்கு நான் வேண்டிக் கேட்டுக்கொள்வது என்னவென்றால் பேப்பர் கடையில் கிலோ எட்டு ரூபாய் என்று நூற்றுக்கணக்கில் விலை கொடுத்து வாங்கும் புத்தகங்கûள் போட்டு விடாதீர்கள்.  தயவுசெய்து உங்கள் ஏரியாவில் இருக்கும் லைப்ரரிக்குப் புத்தகங்களை இலவசமாகக் கொடுத்து விடுங்கள்.

11.3.17

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 56

அழகியசிங்கர்


அவதார ஆசை


திலகபாமா

மலராய் இருந்திருந்தேன்
மகரந்தத்துள் உனைத் திணிக்கப் பார்க்கின்றாய்
தென்றலாய் இருந்திருந்தேன்
என்னில் சுகம் கண்டு
உனதென்று எனை உன்
சுவாசமாய் உள்ளிழுக்கப் பார்க்கின்றாய்
தீங்கனியாய் இருந்திருந்தேன்
தோலுரித்து விதையெடுத்து
மண்ணில் புதைக்க நினைக்கின்றாய்
சங்கீதமென்றிருந்தேன்
தாளங்களுக்குள் சிக்கவென்று
தொடைதட்டிப் பார்க்கின்றாய்
நெருஞ்சிமுள்ளாய்
அவதார மெடுக்க ஆசை
எனை நானாய் இருக்க
விட்டு விடுவாயென்பதாலும்
மிதிப்பவர்கள் சதை மீறி
குத்திவிடலாமென்பதாலும்


நன்றி : சூரியாள் - கவிதைகள் - திலகபாமா - வெளியீடு : மதி நிலையம் - விலை : ரூ.35 - வெளிவந்த ஆண்டு : 2002

8.3.17

பெண்கள் தினம்


அழகியசிங்கர்இன்றைய தினம் பெண்கள் தினம். இந்தத் தினத்தை ஞாபகப்படுத்தும் விதமாக என் பாட்டியின் ஞாபகம் வந்தது.  பாட்டியை வைத்து நான் எழுதிய ஜாடி என்ற கவிதையை இங்கு அளிக்க விரும்புகிறேன்.

 ஜாடி


பழக்கப்படுத்தினாள்
ஜாடியைப் பாட்டி
ஒன்றும் எழுதாத நாள்பட்ட வெள்ளைத்தாளின்
நிறத்தில் நீண்ட ஜாடியின் இடுப்பு
பொருத்தமாய் மாநிறத்தில் மூடி

உண்டு உண்டு கல்லூரி நாட்களில்
இரசாயனக்கூடத்தில்
குடுவைகளும் அமில ஜாடிகளும்
கண்டிப்பைக் காட்டும் பேராசிரியர் வழியில்
கிலியைத் தோற்றுவிக்கும்
உபயோகம் அவற்றுக்கு

மணமும் சுவையும் நிரம்பிய ஜாடி
பாட்டி பாதுகாத்த ஜாடி
காலம் காலமாய்
ஊறும் மாவடு வைத்திருக்கும் ஜாடி
சுருங்கியத் தோற்றத்தில் சுவைதரும் ஜாடி
நீண்ட சாதாரண ஜாடி
மலர்ச்செடி வைக்க முடியாத
பாட்டி வைத்திருக்கும் ஜாடி
மாவடு வைத்திருக்கும் தருணத்தில்
நிரம்பி வழியும் ஜாடி
பார்க்கும்போதே
சுவை ஊறும் விதம்விதமான தேர்ந்த மாவடுகள்
பழகிய மாவடுவின்
சுருங்கியத்தோற்றம்
பாட்டியின் ஊறுதியை ஞாபகமூட்டும்
கையில் தெரியும் மாவடுவின் கறை
பாட்டியின் கவனத்திற்குச் செல்லும்
கண்டிப்பு நிறைந்த அவள் குரலை
அலட்சியப்படுத்தி
ஊறும் முன்னே சுவைத்து மகிழ்வோம்
மாவடுவை ஜாடியில் எப்போதும் நிரப்ப
üபென்சன்ý பணம் பயன்படும்

ஆயிற்று
பாட்டிபோய் நான்கு ஆண்டுகள்
ஜாடியுமா?
எங்கள் கவனத்திலிருந்து தப்பி
பரண்மீது கிடக்கிறது
இடம் மாற்றம் செய்தபோது
காலி செய்தோம் பரணை
நினைவுச் சுவடுகளைப் பதித்த
எத்தனையோ பொருட்களில்
தூசிகளுடன் காட்சி தந்த ஜாடியுமொன்று
எடுத்தவுடன்
பழக்க தோஷத்துடன் கை ஜாடியுள் நுழைய
பழைய ஞாபகம்
மாவடு வாசனையில்
பாட்டியும் தென்பட்டாள்

மாவடு கலைந்ததுபோல்
நாட்களும் கரைந்து போயிற்று
எடுத்தவுடன்
எதைக் கேட்கிறது?

மாவடுவையா
பாட்டியையா

 

7.3.17

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 55


அழகியசிங்கர்  


 தவிர்த்த கவிதைபா வெங்கடேசன்
மன்னிக்கவும் நண்பரே நான்
தவறுதலாக எதையும்
பேசிவிடவில்லை.
அந்த அறையின் உத்திரங்களுடன்
உரையாட முடியுமானால்
உண்மையை நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.
நீங்கள் கவிதை எழுதுபவரா,
எனக்குத் தெரியாது.
அங்கே உலவ விட்டிருந்த கவிதை
உங்களுடையதுதானா,
அதுவும் எனக்குத் தெரியாது.
அங்கே ஒரு கவிதை இருந்தது.
அதைச் சுற்றிச் சிலர் அமர்ந்திருந்தார்கள்.
நானும் அவர்களுடனிருந்தேன்.
எல்லோருக்கும் அது
செல்லமாய் இருந்தது.
எல்லோரும் அதைத் தன்னிடமே
வருமாறு  அழைத்துக்கொண்டிருந்தார்கள்.
யாரிடம் செல்வதெனத் தெரியாமல்
அது விழித்துக்கொண்டிருந்தபோது
குழப்பத்தைக் குறைக்குமென்று
நம்பி மட்டுமே நான் அதனிடம்
என்னை வேண்டுமானால்
கழித்துக்கொள்ளேனென்று சொல்லிவைத்தேன்.
ஆனால் நண்பரே
நிச்சயமாக எனக்குத் தெரியும்
அங்கே ஒரு கவிதை
இருந்ததென்று.
மேலும் நண்பரே
அதை நான் தவிர்த்த கணத்தில்
அங்கே இருந்திராத உங்களை
நிச்சயம் அது
நானாக உணர்ந்திருக்கும்.

(நரனுக்கு)


நன்றி : நீளா - கவிதைகள் - பா வெங்கடேசன் - முதல் பதிப்பு : டிசம்பர் 2014 - வெளியீடு : காலச்சுவடு பப்பளிகேஷன்ஸ் (பி) லிட் - 669 கே பி சாலை, நாகர்கோவில் - 629001 - விலை : 70 - 04652 - 278525

6.3.17

பிளாட்பார கடையில் கண்டெடுத்த முத்து


அழகியசிங்கர்சிலசமயம் பிளாட்பார கடைகளில் அபூர்வமாக சில புத்தகங்கள் கிடைக்கும்.  அட்டைப் போயிருக்கும்.  விபரம் போயிருக்கும்.  எழுபதெட்டு இனிய கதைகள் என்ற கதா மஞ்சரி புத்தகம் கண்ணில் பட்டது.  உடனே வாங்கிக்கொண்டேன்.  முன்பக்கத்தில் உள்ள பல கதைகளின் பக்கங்கள் போய்விட்டன.  இருக்கும் கதைகளை பத்திரப்படுத்தலாமென்று எடுத்துக்கொண்ட முயற்சி இது.  வாழ்க இவ்வையகம்.


1)   கழுதையின் குரல்ஓர் ஊரில் இசைப்புலவன் ஒருவன் இருந்தான்.  அவன் தன்னிடமுள்ள குறை தெரியாதவன்.  அவன் வேறு நாட்டு அரசனிடம் இசைபாடிப் பரிசு பெறலாமென்று எண்ணினான்; வேறு நாட்டுக்குவந்து ஒரு வீட்டிலே இறங்கி இருந்து வந்தான்ல்.  மறுநாள் விடியற்காலத்தில் எழுந்து பாட்டுப் பாடினான்.  அடுத்த வீட்டு வண்ணாத்தி ஒருத்தி பெருங்குரலிட்டு அழுதாள்.  இவன் பாட்டை நிறுத்தினான்.  அவளும் அழுகையை நிறுத்திவிட்டாள்.  இவ்வாறாக ஒரு வாரம் வரை நடந்து வந்தது.  அதனால் இசைப் புலவன் வண்ணாத்தியை அழைத்தான்: "நான் பாடும்போது நீ ஏன் அழுகிறாய்," என்று வினவினான்.  அதற்கு அவள்,"ஐயா...தங்கள் பொன்னான குரலைக் கேட்கும்போது போன திங்கள் செத்துப்போன என்னிடம் இருந்த ஒரேஒரு கழுதையினுடைய நினைப்பு வருகின்றது.  அதனால் அழுகின்றேன்," என்று சொல்லி அழுதாள்.  இசைப்புலவன் வெட்கமுற்றான்.  அரசனைப் பார்க்காமலேயே தன் ஊருக்குப் போய்விட்டான்.  

        அதனால் தன் குற்றம் தெரியாமல் நடக்கிற அறிவற்றோன் எவனும், உலகில் நன்மதிப்பு இழப்பான். 

5.3.17

திரௌபதி ஏன் ஒன்றும் சொல்லவில்லை...


அழகியசிங்கர்


துருபத மன்னனின் பெண் கிருஷ்ணயை என்கிற திரௌபதி. எந்தத் தகப்பனும் தன் பெண்ணை ஐந்து பேர்களுக்கு ஒரே சமயத்தில் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்க மாட்டான்.  

முதலில் யுதிஷ்டிரர், "அரசே..எனக்கு இன்னும் திருமனம் நடைபெறவில்லை.  எனவே நான்தான் முதலில் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.  அதற்கு நிங்கள் அனுமதி தர வேண்டும்,"  என்று கூறுகிறார்.  

துருபதன் அர்ச்சுனனுக்குத்தான் தன்பெண்ணை மணம் முடிக்க நினைக்கிறார்.  யுதிஷ்டிரர் சொன்னதைக் கேட்டு, துருபதன் சொல்கிறான் : "வீரரே என் பெண்ணை நீர் மணந்து கொண்டாலும் எனக்குச் சம்மதமே அல்லது யாருக்குச் செய்து கொடுக்க விருப்பமோ அவருக்குத் திருமணம் செய்து கொடும்,"என்கிறான்.

இதைக் கேட்டதும் யுதிஷ்டிரர் சொல்கிறார் : "அரசே.. நாங்கள் ஐவரும் திரௌபதியை மணந்துகொள்ள விரும்புகின்றோம்; இதனை என் தாய் முன்னமேயே கூறியுள்ளாள்.  கிடைத்ததை ஒன்று சேர்ந்து அனுபவிப்பதென்பது எங்கள் உடன்பாடு; எனவே அர்ச்சுனனால் பந்தயத்தில் வெற்றி கொள்ளப்பட்ட உம் புதல்வியைத் தர்மப்படியே ஐவரும் மணந்து கொள்கிறோம்.  நீங்கள் அனுமதி ககாடுங்கள்," என்றார். 

இந்த வார்த்தையைக் கேட்டு துருபத மன்னன் திடுக்கிட்டான் யுதிஷ்டிரரைப் பார்த்துப் பேசத் தொடங்கினார் : "அரசே ஒருவனுக்கு பல மனைவிகள் இருப்பது சாஸ்திரத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது; ஆனால் ஒருத்திக்குப் பல புருஷர்கள் இருப்பது உலக வழக்கில் இல்லை. வேத சாஸ்திரங்களும் இதனை அங்கீகரிக்கவில்லை.  யுதிஷ்டிரரே.  நீர் தர்மம் தெரிந்தவர்; பரிசுத்தமானவர், நீரே தருமத்திற்கு விரோதமான காரியத்தைச் செய்யச் சொல்கிறீர்; இப்படிப்பட்ட எண்ணம் உமக்கு எப்படி உண்டானது?" என்ற கோபத்துடனும், வருத்தத்துடனும் கேட்டார்.

இந்த இடத்தில் வியாசர் வந்திருந்து இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதாக மகாபாரதம் சொல்கிறது.  என்னுடைய கேள்வி.  திரௌபதி இதற்கு என்ன கருத்து வைத்திருந்தாள்.  ஐவரையும் திருமணம் செய்துகொள்ள ஏன் உடன்பட்டாள்.  அவளுக்கு இதற்கு உடன்பாடு உண்டா? அவளுக்கு வேறு வழி இல்லையா?  மகாபாரத்தத்தில் இந்தப் பகுதி மௌனமாக போய்விடுகிறது. ஏன்?

4.3.17

எத்தனை திட்டுக்களை ஒரு நாளைக்கு வாங்குவீர்கள்?


அழகியசிங்கர்

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 தடவைகளாவது நான் திட்டு வாங்காமல் இருப்பதில்லை. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று என்னைத் திட்டாதவர்கள் தினமும் பத்துப் பேர்களுக்குக் குறையில்லாமல் இருப்பார்கள்.   இதைச் சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.  என்னை யார் திட்டுகிறார்கள் என்ற கேள்வியைக் கேட்பீர்கள்.  உண்மைதான்.  என்னை யார் திட்டப் போகிறார்கள்? திட்டுவதற்குக் காரணம்தான் என்ன இருக்கிறது. ஆனால் நீங்கள் திட்டுதல் என்பதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?  என் முகத்துக்கு நேரே கண்டபடி பேசி திட்டுவதாக நினைக்காதீர்கள்.  யாருக்கும் என்டமிருந்து எந்தப் புகாரும் இல்லை.  பின் திட்டு என்றால் என்ன? 

திட்டு என்பது ஒரு பாவனை.  அதை எல்லாரிடமும் எல்லா நேரத்திலும் நமக்குக் கிடைக்காமல் போகாது.  உங்களுக்கு இன்னும் புரியவில்லை என்று தோன்றுகிறது.  உண்மையில் திட்டுபவர்களுக்கு நாம் பிறரைத் திட்டுகிறோம் என்பது தெரிவதே இல்லை.  ஏன் நான் கூட என்னை அறியாமல் யாரையாவது திட்டியிருப்பேன்.

காலையில் எழுந்தவுடன் கம்ப்யூட்டர் முன்னால் அமருகிறேன் என்று வைத்தக்கொள்ளுங்கள்.  என் திட்டு உடனே ஆரம்பமாகிவிடும். 'காலையிலே எழுந்தவுடனே கம்ப்யூட்டரா?' என்று மனைவி ஆரம்பிப்பாள் முதல் திட்டை.. 'படுக்கையை மடித்து வைக்கவில்லையா' என்று இரண்டாவது திட்டுக்கும் போய்விடுவாள்.   நான் பதில் சொல்ல மாட்டேன்.  

   என் வீட்டு பால்கனியில் எப்போதும் காலை வேளையில் காக்கைகள் அமர்ந்துகொண்டு கத்திக்கொண்டே இருக்கும். தாங்க முடியாது சத்தம்.  நான் கிட்டே போய், 'யே காக்கையே கத்தாதே,' என்பேன்.  உண்மையில் அது என்னை, என் குடும்பத்தைத் திட்டுகிறது என்றுதான் நினைத்துக்கொள்வேன். இதெல்லாம் திட்டா என்று நீங்கள் கேலியாகப் பார்ப்பது எனக்குத் தெரிகிறது. அப்படிப் பார்ப்பதுகூட திட்டுதான்.  இன்னும் உதாரணம் சொல்கிறேன். போன மாதம் 28ஆம்தேதி டாக் சென்டரில் ஒரு கூட்டம் நடந்தது.  உங்களுக்குத் தெரியுமா?  ஒன்றுமில்லை அந்தக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க்கிழமை  நடக்கும்.  இந்த முறையும் அதுமாதிரி  நடந்தது. தமிழ்மகன் என்ற எழுத்தாளரின் நாவல் பற்றிய கூட்டம் அது.  தமிழ்மகன் அதிகமாக நாவல்கள் எழுதி உள்ளார்.  'மானுடப் பண்ணை' என்ற நாவலைப் பற்றி அன்று பேச்சு.  

சரியாக 6 மணிக்கு டாக் சென்டருக்குச் சென்றேன்.  வழக்கம்போல் தட்டில் சுடச்சுட கிச்சடி, ஒரு போன்டா வாங்கிக்கொண்டு வந்து உட்கார்ந்தேன்.  என் தட்டில் ஒரு போன்டாதான் போட்டார்கள். என் அருகில் எனக்குத் தெரிந்த நண்பர் இருந்தார்.  அவர் தட்டில் 2 போன்டாக்கள் இருந்தன.  அவர் கேட்டார். அதாவது திட்டினார்.  "என்ன சரியான நேரத்திற்கு வந்திருக்கீங்க போலிருக்கு," என்றார்.  உங்களுக்கு இந்தத் திட்டு என்னவென்று புரியுதா? கூட்டத்திற்கு வருவதுபோல் கிச்சடி சாப்பிட வந்திருக்கிறேன் என்ற அர்த்தம்.  இப்படித்தான் நம்மிடம் சிலரும், நாமும் சிலரிடமும் பேசிவிடுகிறோம்.

டாக் சென்டருக்குப் போகும் முன் வழக்கம் போல் அன்றைய திட்டுக்கள் ஆரம்பமாகாமல் இல்லை.  முன்னதாக நான் கார் எடுத்துக்கொண்டு என் பெண் வீட்டிற்குச் சென்றேன். என் கூட காரில் என் மனைவியும் வந்தாள்.  அவளுக்கு நான் காரை எடுத்துக்கொண்டு போவது அவ்வளவாய் விருப்பம் இருப்பதில்லை.  வண்டியில் உட்கார்ந்தவுடன், பெல்ட் போடுங்கள் என்று திட்ட ஆரம்பித்தாள்.  உண்மையில் என்னுடன் காரும் திட்டு வாங்குவதாகத்தான் நான் நினைத்துக்கொண்டேன்.  

பெண் வீட்டிலிருந்து கிளம்பி திரும்பி வீடு வந்தேன்.  பெண் கேட்டாள். "ஏன் சீக்கிரம் போக வேண்டுமென்று நினைக்கிறே?" இதுவும் திட்டு.  காரை எடுத்துக்கொண்டு வீடு திரும்பும்போது மனைவி இன்டிக்கேட்டர் போடும்படி அடிக்கடி திட்டு.  காருக்கும் சேர்த்து. 

இதெல்லாம் பரவாயில்லை.  வண்டியின் பின்னாலும் முன்னாலும் வருகிற டூ வீலர்கள் எல்லாம், ஆட்டோக்காரர்கள் எல்லாம், காரில் செல்பவர்கள் எல்லாம், 'வண்டியை   ஒழுங்காய் ஓட்டுய்யா' என்று திட்டாமல் இருப்பதில்லை.  என் முன்னாலும் பின்னாலும் வருபவர்கள்தான் ஒழுங்காக வண்டிகளை ஓட்டுவதில்லை.  ஆனால் நான் வண்டியை ஒழுங்காகத்தான் ஓட்டுகிறேன். ஆனால் திட்டு எனக்குத்தான்.  ஆர்யகவுடர் ரோடு வழியாக நீங்கள் மாலை நேரத்தில் வண்டியை எடுத்துக்கொண்டு ஏன் நடந்துகூட சென்றால் போதும், யாரிடமும் திட்டு வாங்காமல் தப்ப முடியாது.  அதேபோல் வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலில் நீங்கள் மிளகாய் பஜ்ஜி வாங்க நிற்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  உங்களுக்கு பஜ்ஜியைக் கட்டிக் கொடுப்பவர், உங்களையே பார்க்க மாட்டார்.  உங்களை மௌன மொழியில் திட்டுகிறார் என்று அர்த்தம்.     இப்படி தினமும் ஒரு பத்து திட்டாவது வாங்காமல் இருப்பதில்லை.