Skip to main content

திரௌபதி ஏன் ஒன்றும் சொல்லவில்லை...


அழகியசிங்கர்


துருபத மன்னனின் பெண் கிருஷ்ணயை என்கிற திரௌபதி. எந்தத் தகப்பனும் தன் பெண்ணை ஐந்து பேர்களுக்கு ஒரே சமயத்தில் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்க மாட்டான்.  

முதலில் யுதிஷ்டிரர், "அரசே..எனக்கு இன்னும் திருமனம் நடைபெறவில்லை.  எனவே நான்தான் முதலில் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.  அதற்கு நிங்கள் அனுமதி தர வேண்டும்,"  என்று கூறுகிறார்.  

துருபதன் அர்ச்சுனனுக்குத்தான் தன்பெண்ணை மணம் முடிக்க நினைக்கிறார்.  யுதிஷ்டிரர் சொன்னதைக் கேட்டு, துருபதன் சொல்கிறான் : "வீரரே என் பெண்ணை நீர் மணந்து கொண்டாலும் எனக்குச் சம்மதமே அல்லது யாருக்குச் செய்து கொடுக்க விருப்பமோ அவருக்குத் திருமணம் செய்து கொடும்,"என்கிறான்.

இதைக் கேட்டதும் யுதிஷ்டிரர் சொல்கிறார் : "அரசே.. நாங்கள் ஐவரும் திரௌபதியை மணந்துகொள்ள விரும்புகின்றோம்; இதனை என் தாய் முன்னமேயே கூறியுள்ளாள்.  கிடைத்ததை ஒன்று சேர்ந்து அனுபவிப்பதென்பது எங்கள் உடன்பாடு; எனவே அர்ச்சுனனால் பந்தயத்தில் வெற்றி கொள்ளப்பட்ட உம் புதல்வியைத் தர்மப்படியே ஐவரும் மணந்து கொள்கிறோம்.  நீங்கள் அனுமதி ககாடுங்கள்," என்றார். 

இந்த வார்த்தையைக் கேட்டு துருபத மன்னன் திடுக்கிட்டான் யுதிஷ்டிரரைப் பார்த்துப் பேசத் தொடங்கினார் : "அரசே ஒருவனுக்கு பல மனைவிகள் இருப்பது சாஸ்திரத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது; ஆனால் ஒருத்திக்குப் பல புருஷர்கள் இருப்பது உலக வழக்கில் இல்லை. வேத சாஸ்திரங்களும் இதனை அங்கீகரிக்கவில்லை.  யுதிஷ்டிரரே.  நீர் தர்மம் தெரிந்தவர்; பரிசுத்தமானவர், நீரே தருமத்திற்கு விரோதமான காரியத்தைச் செய்யச் சொல்கிறீர்; இப்படிப்பட்ட எண்ணம் உமக்கு எப்படி உண்டானது?" என்ற கோபத்துடனும், வருத்தத்துடனும் கேட்டார்.

இந்த இடத்தில் வியாசர் வந்திருந்து இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதாக மகாபாரதம் சொல்கிறது.  என்னுடைய கேள்வி.  திரௌபதி இதற்கு என்ன கருத்து வைத்திருந்தாள்.  ஐவரையும் திருமணம் செய்துகொள்ள ஏன் உடன்பட்டாள்.  அவளுக்கு இதற்கு உடன்பாடு உண்டா? அவளுக்கு வேறு வழி இல்லையா?  மகாபாரத்தத்தில் இந்தப் பகுதி மௌனமாக போய்விடுகிறது. ஏன்?

Comments