Skip to main content

காலை 11 மணியிலிருந்து மூன்று மணிவரை...

காலை 11 மணியிலிருந்து மூன்று மணிவரை...

அழகியசிங்கர்



இதைப் படிப்பவருக்கு குறைந்தது அறுபது வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.  அப்படி இருப்பவர்கள்தான் இதைப் படிக்க வேண்டும்.  மார்ச்சு மாதமே வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது.  11 மணிக்கு மேல் வீட்டைவிட்டு வெளியே செல்வதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.  வெயிலில் நடந்து போகாதீர்கள்.  சைக்கிளில் போக வேண்டுமென்று நினைக்காதீர்கள்.  டூ வீலரிலாவது போக வேண்டுமென்று யோசிக்காதீர்கள்.  ஆனால் காரில் போவதாக இருந்தால் ஏசியை ஆன் செய்துவிட்டு போங்கள்.  அதுவும் கட்டாயமாக போக வேண்டுமென்றால் போங்கள். நீங்கள் ரத்த அழுத்த நோயாளியாக இருந்தால் வெளியே தலை காட்டாதீர்கள்.  

நீங்கள் வெயிலைத் தவிர்க்க நிழலில் இருங்கள்.  60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லோரும் பதவியிலிருந்து ஓய்வுப் பெற்றவர்களாகத்தான் இருப்பார்கள்.  ஒருசிலர் இன்னும் எதாவது ஒரு பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.  ஓய்வுபெற்றவர்கள் வீட்டைவிட்டு 11 மணியிலிருந்து 3 மணிவரை எங்கும் போகாதீர்கள்.  அதேபோல் அலுவலகத்தில் பணிபுரிபவர் அலுவலகத்தை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும். 

ஓய்வு பெற்றவர்கள் வீட்டில் இருக்கும்போது சும்மா இருங்கள்.  முடிந்தால் புத்தகம் எடுத்துப் படியுங்கள்.  டிவி பார்க்க விரும்புவர்கள் டிவியைப் பார்க்கலாம்.  அல்லது தூங்க வேண்டுமென்று நினைத்தால் நன்றாகத் தூங்கிவிடுங்கள்.  ஆனால் ஒருபோதும் வெயிலில் உலா போகாதீர்கள்.  வீட்டில் சும்மா இருப்பது எப்படி என்பதை யோசித்துப் பாருங்கள்.  சமீபத்தில் ஒரு இல:கிய நண்பரை சந்தித்தேன்.  அவரிடம் சில புத்தகங்களைப் படிக்கக் கொடுத்தேன்.  வேண்டாம் என்று திருப்பி தந்துவிட்டார்.  இத்தனைக்கும் ஒரு காலத்தில் தீவிரமாக இலக்கியத்தில் ஈடுபபட்டவர்.  அவருடைய கவிதைத் தொகுதி கூட ஒரு பதிப்பாளர் மூலம் மிகச் சிறப்பாக வெளிவந்திருந்தது.  இப்போது அவருக்கு எழுதுவதிலும் படிப்பதிலும் நாட்டம் இல்லை.  அவர் சொன்னார் : üஎனக்கு எந்தப் புத்தகமும் வேண்டாம்.  நான் சும்மா இருக்க விரும்புகிறேன்,ý என்று.

எனக்கு அவர் சொன்னதிலிருந்து பெரிய யோசனை.  சும்மா இருப்பதைப் பற்றி.  ஒரு நிமிடம் அப்படி இருக்க முடியாது என்று தோன்றியது.  பால்கனியிலிருந்து வெளியே பார்க்கிறேன்.  வெயில் கொளுத்துகிறது.  அவ்வளவு வெளிச்சம்.  இதோ வீட்டிலிருந்து ஒரு குரல் கேட்கிறது.  காப்பிப் பொடி அரைத்து வரவேண்டுமென்று.  ஜிப்புப் போன பேன்ட், பெத்தான்கள் அறுந்த சட்டைகளை எடுத்துக்கொண்டு போஸ்டல் காலனி இரண்டாவது தெருவில் இந்தத் தாங்க முடியாத வெயிலில் தைத்துக் கொண்டிருக்கும் தெரு டைலரிடம் கொண்டு போக தயாராக இருக்கிறேன்.  எல்லாம் மூன்று மணிக்கு மேல்.  சரி சும்மா இருப்பது என்பது புத்தகம் படிக்காமல் இருப்பதா?


Comments