Skip to main content
கூட்டத்தை வெற்றிகரமாக 8.45க்கு முடித்துவிட்டேன்....

அழகியசிங்கர்



எப்போதும் ஒரு இலக்கியக் கூட்டம் என்றால் சிலர் பேசுவார்கள். சிலர் பேசாமல் விலகி விடுவார்கள். அசோகமித்திரன் நினைவேந்தல் கூட்டத்திலும் அதுமாதிரியான நிகழ்ச்சி நடக்காமல் இல்லை.  இக் கூட்டத்தை சிறப்பாக நடத்த ஸ்ரீகுமார் அவர்கள்தான் காரணம்.  பத்மா அவர்களும் கூட்டத்தை சரியான முறையில் நெறிப்படுத்தி எடுத்துச் சென்றார்.  முதலில் அம்ஷன்குமாரின் ஆவணப்படம் 5.15 ஆரம்பமாகியது.   அது முடிந்தவுடன் நாசர் நடித்த ஜெர்மன் இயக்குநர் எடுத்த புலிக் கலைஞன் என்ற அசோகமித்திரன் கதையை அடிப்படையகாக் கொண்ட குறும்படம் சரியாக 15 நிமிடங்களில் முடிந்து விட, ஒவ்வொருவராக 6 மணிக்கு எல்லோரையும் பேச அழைத்தோம்.

கூட்டம் முடியும்போது மணி இரவு 8.45.  அவ்வளவு நேரம் பொறுமையாக பலர் இக் கூட்டம் முடியும் வரை தங்கியிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் நானும் ஒரு கட்டுரை வாசிக்க எழுதி வைத்திருந்தேன். அம்ஷன்குமார் பேசி முடித்தவுடன், 8.45 மணியைத் தொட்டுவிட்டது.  நான் என் கட்டுரையை வாசிக்கவில்லை.  ஏன்எனில் வாசிப்பது என்பது அந்த நேரத்தில் காது கொடுத்து கேட்க எல்லோருக்கும் அலுப்பாக இருக்கும்.  அதனால் நான் எழுதி வாசிக்க நினைத்தக் கட்டுரையை இங்கு அளிக்கிறேன்.

அசோகமித்திரனும் நானும்...

ஆரம்பத்திலிருந்து அசோகமித்திரன் கதைகளைப் படித்துக்கொண்டு வருபவன்.  ஆனால் படிப்பதில் ஆர்வம் உள்ள நான் எல்லோருடைய கதைகளையும் படிப்பவன்.  அவருடைய கதைகளைப் படிக்கும்போது எனக்கு நெருக்கமாக  அவை தோற்றம் அளிக்கும். அவர் எழுத்து போல அவரும் எளிமையான மனிதர்.  அவருடன் பேசிவிட்டு ஒருவர் வீட்டிற்கு வந்தால், அசோகமித்திரன் கதை ஒன்று உருவாகிவிடும்போல் தோன்றும்.
தள்ளாத வயதிலும் அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டும், புத்தகங்களைப் படித்துக்கொண்டும் கூட்டங்களில் கலந்து கொண்டும் இருந்தார்.  அவரிடம் எந்தவித பந்தாவும் கிடையாது.  யாரையும் அவர் மதிக்க தெரிந்தவர்.  எந்த மனிதருக்கும் எதாவது ஒன்று பிடிக்காமல் இருக்கும்.  அசோகமித்திரனுக்கும் பிடிக்காமல் எத்தனையோ விஷயங்கள் உண்டு.  ஆனால்  அதை நேரிடையாக வெளிப்படுத்த மாட்டார். மறைமுகமாக சொல்வார்.  அல்லது சொல்லாமல் விடுவார்.
கடைசியாக கலந்து கொண்டு அவர் பேசிய கூட்டம் விருட்சம் 100வது இதழ் கூட்டம்.  பேசிக் கொண்டிருக்கும்போது என் காலம் முடிந்துவிடும் என்று அவர் குறிப்பிட்டார்.  அவர் அது மாதிரி ஏன் சொல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.  அவருக்கே அவர் மரணம் தெரிந்திருக்கிறது.  உண்மையில் அவர் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவருக்கு பலவிதங்களில் பாதிப்பை நிகழ்த்தாமல் இல்லை.  ஆனால் உற்சாகமாகக் கலந்து கொள்வார், அவதிப்படுவார்.  பின் திரும்பவும் கலந்து கொள்வார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் படுகிற அவதியையும் என்னிடம் கூறாமல் இருக்க மாட்டார்.
ஒவ்வொரு முறையும் நான் அவரைப் பார்க்கப் போகும்போதெல்லாம்  ரத்தினச் சுருக்கமாக அவர் பேச்சு இருக்கும்.  பேசியது போதும் என்று தோன்றும்போது, போதும் பிறகு பார்க்கலாம் என்று கூறிவிடுவார்.
ஒரு முறை ஒரு பேனாவைக் கொடுத்து பேனாவிற்கு ரீபிள் போடச் சொல்லிக் கொடுத்தார். அது ஒரு பழைய பேனா.  நான் கடை கடையாக ஏறி இறங்கினேன்.  ஒரு கடையில் ரீபிள் கிடைத்தது.  ஆனால் பேனாவில் ரீபிளைப் போட முடியவில்லை.  காரணம் பேனாவில் ஸ்பிரிங் இல்லை. அசோகமித்திரனுக்கு வேற ஒரு பேனாவை வாங்கிக்கொடுத்துவிட்டு அந்தப் பேனாவையும் கொண்டு போய் கொடுத்தேன். ஸ்பிரிங் இல்லை என்றேன்.  பேனாவை வாங்கிக்கொண்ட அசோகமித்திரன் ஸ்பிரிங்கை தேடிப் பார்க்கிறேன் என்றார்.  அடுத்த முறை அவரைப் பார்க்கும்போது, ஸ்பிரிங் கிடைத்துவிட்டது.  சரி கொடுங்கள் என்றேன்.  ஆனால் பேனா எங்கோ போய்விட்டது. தேடிப் பார்க்க வேண்டும் என்றார்.  இதை அவர் சிரிக்காமல் சொல்வார்.  அவர் கருத்துக்களை ஒளிவு மறைவில்லாமல் சொல்வார்.  நான் முகநூலில் எதையாவது எழுதியிருப்பேன்.  அதைப் படித்து விட்டு வீட்டுப் பக்கம் வர முடிந்தால் வாருங்கள் என்று முக நுலில் கமென்ட் எழுதவார்.  எனக்கோ நான் எழுதியதற்கு எதாவது எழுதப் போகிறாரென்று நினைத்துக் கொண்டிருப்பேன்.  இதுதான் அசோகமித்திரன்.
இன்னொன்று. அவருக்கு கவிதையே பிடிக்காது.  உங்களுக்கு கவிதை என்றால் ரொம்பப் பிடிக்கும்போல் இருக்கிறது என்று என்னை கிண்டல் செய்வார். ஆமாம் என்று அவர் எதிரில் சொல்ல மாட்டேன். முகநூலில் ஒரு கதையை அடிப்பதற்குப் பதில் கவிதை எழுதி பதிவிடலாமென்பேன்.
ஒருமுறை நானும் அவரும் ஒரு இலக்கியக் கூட்டத்திற்குப் போய்விட்டு வந்து கொண்டிருந்தோம்.  அந்த இலக்கியக் கூட்டத்தில் நான் கவிதை வாசித்திருந்தேன்.  அசோகமித்திரன் அதைக் குறித்து ஒன்றும் சொல்லவில்லை.  எனக்கோ என் கவிதையைக் குறித்து அவர் கருத்தை அறிய வேண்டும் என்று ஆவல். தாங்கமுடியாத ஆவல். இந்த இடத்தில்தான் நான் ஒரு தப்பு செய்துவிட்டேன்.  என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் என் கவிதை எப்படி இருந்தது என்று கேட்டுவிட்டேன்.  அசோகமித்திரன் நிதானமாக, நான் கவிதை எழுதினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது என்றார் சிரிக்காமல்.  அவரைப் போல் ஒரு நகைச்சுவை உணர்வுகொண்ட எழுத்தாளரை நான் இதுவரை பார்த்ததில்லை.  இனிமேலும் பார்க்க முடியாது என்று நினைக்கிறேன்.
இக் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் என் நன்றி.  

Comments