Skip to main content

Posts

Showing posts from April, 2013

திரும்பவும்...

அழகியசிங்கர்


ஏதோ ஒரு சுழற்சி
நடந்துகொண்டே இருக்கிறது

நாம்
ஆரம்பித்த இடத்தில்
வந்து கொண்டிருப்பதாக தோன்றுகிறது

நமக்குப் பதில்
நம் புத்திரர்கள் தொடர்கிறார்கள்

அவர்களும்
நம்மைப் போல் வியர்வைச் சிந்துகிறார்கள்
சம்பாதிக்க எங்கோ
ஓட்டமாக ஓடுகிறாரகள்

ஒரே குரலில் சத்தம் போடுகிறார்கள்
மகிழ்ச்சியை நம்மைப்போல் அனுபவிக்கிறார்கள்
நமக்கு ஏற்பட்ட துன்பமும் துயரமும்
அவர்களிடமும் தொடர்கின்றன

எதைப் பற்றியும் கவலைப்படாமல்
எஞ்சிய வருடங்களை நகர்த்திக்கொண்டிருக்கிறோம்

நாம் எதையோ எதிர்பார்த்துக்
காத்துக்கொண்டிருக்கிறோம்

சுழற்சி
திரும்பவும்....                           (19.04.2013)

புதையல்

குமரி எஸ். நீலகண்டன்


சிறு வயதில் அங்கே புதையல் கிடைத்தது. இங்கே புதையல் இருக்கும் என்றெல்லாம் அன்றைய பெரியவர்கள் கதைத்த போதெல்லாம் நான் நம்பவே இல்லை...

சாலையோர சாக்கடைகளை செப்பனிடுவதற்கு கோடையே சரியானத் தருணமென முன்பு போட்ட அதன் காங்கிரீட்டுகளை உடைத்தார்கள்.

இயந்திர துளைப்பான்களால் தூள் கிளப்பினர் காற்று வெளியெங்கும்...
சிறுமலை போல் குவிந்தன தோண்டிய மண்களோடு உடைந்த காங்கிரீட் துண்டுகளும்

பாதசாரிகள் வழுக்கியும் சறுக்கியும் மலை ஏறி இறங்கி மயானத்திற்கு பக்கம் சென்று வந்தனர்...

சாக்கடையை மூடுவதற்கு கனம் கூடிய காங்கிரீட் பாளங்கள் வந்து இறங்கின...

திறந்த சாக்கடைக்குள் தோண்டிய மண்கள் விழுந்தன.... அந்தப் புதையலை காங்கிரீட் பாளங்களால் மூடினார்கள்...

அகத்திலிருப்பவை தெரியாத அளவிற்கு அழகாகவே மூடினார்கள் ஒப்பந்தம் போல்.

அடுத்த ஒப்பந்தத்திற்கான புதையல் உள்ளே மூடப் பட்டிருக்கிறது...
புதையல் புதையல் என்கிறார்களே அதை இப்போது நான் நம்புகிறேன்...

ஊழல் ஊழல் என்கிறார்களே ஒப்பந்தம் ஒப்பந்தம் என்கிறார்களே இரண்டிற்கும் என்ன வித்தியாசம் அதுதான் புரிய மாட்டேங்கிறது...

வெயில் கவிதை

ரவிஉதயன்முதல் வரியிலிருந்து
கடைசிக்கு முந்தின வரிவரைக்கும்
ஒரே வெயில்...
ஒரே அனல்...
ஒரே சூடு...
கடைசி வரிக்கடியில்
ஒரு எறும்புநிழல்
அதில் இளைப்பாறுகிறேன்.

 ஓர் ஒழுங்கற்ற தெருவில் இருக்கிறேன்


அழகியசிங்கர் நான் குடியிருப்பது
 ஓர் ஒழுங்கற்ற தெரு
 இங்கே கட்டடங்கள் நீளம் நீளமாக
 வளர்ந்துகொண்டே வருகின்றன..
 குடியிருப்புகள் நாளுக்குநாள்
 பெருகிக்கொண்டே போகின்றன

 கட்டடங்களில் வாகனங்களை
 நிறுத்த முடியாதவர்கள்
 தெருவில்
 நிறுத்துகிறார்கள்
 அத்தனை வாகனங்களா என்று பயப்படும் அளவிற்கு
 வாகனங்களை இடிக்காமல்
 தெருவில் நடப்போர் அவதிப் படுகிறார்கள்

 மாலை நேரங்களில்
 எல்லோரும் தெருவில் நின்று
 பேசிக்கொண்டிருக்கிறார்கள்
 சிலர்
 விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்
 சத்தம் போட்டபடியே
 சைக்கிள் ஓட்டிச்செல்லும்
 பொடியன்களும் இருக்கிறார்கள்.

 வளர்ப்பு நாய்களை
 தெருவில் உலாவ விடுகிறார்கள்
 தெருவை பாத்ரூமாக
 அவை பயன்படுத்துகின்றன

 தெருமுனையில்
 வாலை சுழற்றியபடி
 மாடுகளை கட்டி வைத்திருக்கிறார்கள்

 ஒழுங்கற்ற தெருவில்
 நாங்கள் நடமாடிக்கொண்டிருக்கிறோம். 

 (12.04.2013)

ழ 6வது இதழ் - பிப்ரவரி / மே 1979

தேவதச்சன்


மூன்று கவிதைகள்வாழ்வு சாவெனத்தன்
வேசம் மாற்றிக் கொள்ளுமுன்
உன் சீட்டைக் காலிபண்ணு
நீ பாத்திரம் அது
பார்வையாளனெனத்
தலைகீழாய் நாடகம் மாறப்போகிறது.


மேகம் தெரியாத
மீனின் கோஷத்தை
ஓரத்தில்லை
இரண்டும் தெரிந்த
பறவையின் பாட்டை
ஏற்றிப்பார்.


விதையாய் தொடர
வேறுவழி உண்டோ
மரமாய் பெருகி
பழமாய் கனியாமல்

ம்
என்றும்
சோற்றால் பசியை
ஜெயிக்கணு மென்றால்
பசியால் சோற்றை
ஜெயீக்கணும் தான்.

2.பகலிலிருந்து
உதிர்ந்தவனுக்கு
பகலெல்லாம் துவக்கம்
பகல் தொறும் துவங்கும் என்கனம்
ஒரு வெளிறிய சந்தேகம்
இடையறாது மிதந்து தொங்கும்
பயமேகம்
இடையறாதுசிரித்தோடும்ஒடைப்புனலில்
பகலுக்கொரு
பார்வைச் சன்னல்


3.திறந்து கிடக்கிறது
வரம்
நீ விரும்புவதுன்
உடல் முழுவதும்
ஆகுககதிரவன் எழுதுகிறான்

அழகியசிங்கர்ஒரு தாளை எடுத்து
கதிரவன் எழுதினான்
இரண்டு வரிகள்
பின் அம்மாவிடம் காட்டினான்

இதெல்லாம் கவிதை
இல்லை என்றாள் அம்மா

கதிரவன் விடவில்லை
இன்னும் இரண்டு வரிகளைச் சேர்த்தான்
பின் அப்பாவிடம் காட்டினான்

உனக்கு அதெல்லாம் வராது என்றார்
அப்பா
பல்லை நறநறவென்று கடித்தான் கதிரவன்

பின்
இன்னும் இரண்டு வரிகளைச் சேர்த்தான்

அலுவலகம் போகும் பிகுவில்
இருந்த அக்காவிடம் காட்டினான்

வேலையைப் பார், கதிரவா..
உனக்கெல்லாம் வராது இதெல்லாம்..என்றாள்.

இன்று யாருடன் சுற்றப் போகிறாள் இவள்
என்று கோபமாக முறைத்தான்.

பின் சற்றும் மனம் தளராமல்
இன்னும் இரண்டு வரிகளைச் சேர்த்தான்

துள்ளிக் குதிக்கும் வயதில் நடமாடும்
தங்கையிடம் காட்டினான்

போடா...இங்க கொண்டு வராதே
வெட்டியாய்ப் பொழுதைக் கழிக்காதே
கலீல் கீப்ரான் என்ற நினைப்போ என்றாள்..

அவளை அடிக்கப் போனான் கதிரவன்
அம்மா கதிரவனைத் திட்டினாள்
பெண் குழந்தையைத் தொடாதே..என்றாள்


கதிரவன் தான் எழுதிய காகிதத்தை
ஒருமுறை படித்தான்..திரும்பவும்
இன்னொருமுறை படித்தான் பிறகு
கிழித்து எறிந்தான் துண்டங்களாக..


ஒருமுறை கதிரவன் வீடு திரும்பும்போது
அம்மா பக்கத்து வீட்டாரிடம் பேசிக் கொண்டிருந்தாள்

என்மகன் கதிரவன் கவிதை எழுதுகிற…

வளசரவாக்கம்

அழகியசிங்கர்


 காலையில் பொழுது விடிந்ததும்
 தூங்கியும் தூங்காமலும்
 எழுந்து கொஞ்சம் உட்கார்ந்தபிறகு
 ஞாபகம் வருகிறது
 வளசரவாக்கம் என்று

 8.30மணி அளவில்
 ஓடி ஆடிப் போக முடியாத வயதில்
 ஏதோ தொத்தல் வண்டியில்
 ஏறி
 எதிர்படும் கூட்டத்தைப்பற்றி
 கவலைப்படாமல்
 முகத்தில் புன்னகை மாறாமல்

 இதோ
 வளசரவாக்கம்

 வந்து நுழைந்தவுடன்
 என் சீட்டில் போய் அமர்ந்து கொள்வேன்
 ஏதோ கனவுலகில் இருப்பதுபோல்
 தோற்றம்
 பலவிதமான மனிதர்களைப்
 பார்த்து பார்த்து
 அவர்கள் ஏதோ சொல்ல
 நானும் கேட்பேன்
 பின் நான் ஏதோ சொல்ல
 அவர்களும் கேட்பார்கள்
 வளசரவாக்கம் வளசரவாக்கம்

 சக ஊழியர்கள் அவர்கள்
 இருக்கைகளில் போய் அமர்ந்து
 எதிர்படும் நீண்ட கூட்டத்தை
 சமாளிப்பார்கள்
 வளசரவாக்கத்தில்தான்
 இருக்கிறோமா
 என்பது தெரியாமல்
 வாகன நெரிசல்
 பிரதான சாலை வழியாக
 போய் வந்தவண்ணம் இருக்கும்..

 நான் வெளியே வரும்போது
 இருட்டாகிவிடும்..
 வீடு போய் சேர்வதற்குள்
 போதும் போதுமென்றாகிவிடும்

 இப்படித்தான் கிலி உண்டாக்குகிறது
 வளசரவாக்கம்..
                                                          09.04.2013

அப்பா......

     அழகியசிங்கர்அப்பா சொன்னார் :
குட்மார்னிங்
சரிதான்

காலையில் காஃபியைச்
சுடச்சுட குடிப்பார்
சரிதான்

முன்னாள் முதல்வர்
கருணாநிதி மாதிரி பேசுவார்
சரிதான்

தெருவில் போவோர் வருவோரைப்
பார்த்து
நலமா என்று கேட்பார்
சரிதான்

ஃபோனில் யாராவது பேசினால்
நலமுடன் வாழ்க என்பார்
சரிதான்

கண்ணாடி இல்லாமல்
பேப்பர் படிப்பார்
சரிதான்

தடியை ஊன்றி தானே
நடைபயிற்சி செய்வார்
சரிதான்

தரையில் அமர்ந்து
காய்கறி நறுக்குவார்.
சரிதான்

யார் உதவி இல்லாமல்
தன் துணிகளை
தானே துவைப்பார்
சரிதான்

சத்தமாக மெய்மறந்து
பாட்டுப்பாடுவார்
சரிதான்

91வயதில் தானே
ஷேவ் செய்து
கொள்வார்
சரிதான்

டிவி முன் சீரியலை
விழுந்து விழுந்து ரசிப்பார்
சரிதான்

படுக்கையை விரித்து
தானே படுப்பார்
சரிதான்

ஆனால் என் 59வது வயதில்
என் தலைமை அலுவலகத்திற்குப்
போன் பண்ணி
என்னை மாம்பலம் கிளைக்கு
மாற்றச் சொல்லி கெஞ்சுகிறார்
அதுதான் சரியில்லை...........
                                             08.04.2013

காலத்தின் கொலைகாரன்

எம்.ரிஷான்ஷெரீப்


வினைகளின்சருகுகளைத்தீண்டிடவென புதிதாகவிழுந்திருக்கிறது ஐங்கூர்பழுத்தஇலை சிவப்புக்கலந்தநிறமதற்கு உடைசல்களின்சிதிலங்களுக்கிடையில் சிக்கியிருக்கிறதுபுதுத்தளிரொன்றும்
எப்படிப்பூத்ததுவோ பசுமையெரிந்தசெடிகளுக்கிடையில் எதற்கும்வாடிடாமலரொன்று அன்றியும் எந்தக்கனிக்குள்இருக்கின்றது அடுத்தமரத்துக்கானவிதை
எல்லாவாசனைகளும்பூக்களாகி நாசிக்குள்நுழையும்கணமொன்றில் செழித்தஏரியின் கரைகளைக்காக்கின்றனஓரமரங்கள்
வசந்தத்தின்முகில்கூட்டங்களலையும் சுவரோவியங்களில்தோப்புக்கள் எவ்வளவுரம்யமானதாயிருக்கின்றன
இங்குநீர்தேங்கியகுட்டைகளில் தலைகீழாகவளருகின்றன அருகாமைசடப்பொருட்கள்
விம்பங்கள்மட்டுமேகாட்டுகின்றன வாழ்வின்நிறங்களை கனவுக்கண்ணாடிகளில்
தேய்ந்திடும்காலமொன்றைநோக்கியே நகரும்எண்ணங்களுக்குக்

இசைத்தட்டளவு வாழ்க்கை

 ரவிஉதயன்


சுழலும் இசைத்தட்டளவு
வாழ்க்கை
மெல்லிய ரேகைகள் போலவரிகள்
நாட்கள்
செக்கு மாடு சுற்றுவாழ்க்கை.
அதன் மேல்
ஊசி முனைப் பயணம்.
சட்டென்று
நின்று விடுகிறது
நகர்கிற வாழ்வு சிலருக்கு.

சுற்றுக்கள் முடிந்து
மீண்டும்
சுழல தொடங்குகிறது
தொடக்கத்திலிருந்து மிகச்சிலருக்கு.

பிரியத்தின் யதார்த்தமும் எதிர்பார்ப்பும்

தேனு


மழைச்சாரல் துவங்கிய நாளொன்றில் நெஞ்சோடு அணைத்து வந்திருந்தாள் யாழினி, பெயரும் சூட்டியாகிவிட்டதென இறுமாப்பாய் சிரித்து இதழ் குவித்து கலைநேசன் என்றாள். அன்றிலிருந்து வீட்டில் ஒருவனாய் வளரத் துவங்கினான், முகத்தோடு முகம் வைத்து புரிதலாய் அவள் மொழியில் கொஞ்சிக் கொண்டே இருப்பாள், உணவு வேளைகளில் எல்லாம் அவனுக்கும் வைத்துத் தானும் அருகமர்ந்து உட்கொள்வாள். அவன் குளிப்பதற்காகத் தனியாய் ஒரு தொட்டி வாங்கி தினம் இரு மணி நேரம் குளிக்க வைத்துச் சிரிக்க யாழினிக்கு மட்டுமே வந்தது.. இணை பிரியா தோழர்களாகிப் போயினர் இருவரும்.. கட்டிக் கொண்டே தூங்குவதும் அவர்கட்கு வழக்கமாகிப் போனது.. இயந்திரமாய் கல்வி ஏற்றும் பன்னிரெண்டாம் வகுப்பும் வந்தது, பிரியா விடை கொடுத்து அழுதழுது அவனுக்கு முத்தம் முத்தமாய் கொடுத்து விடுதிக்குச் சென்று விட்டாள் யாழினி.. இரு நாட்களாய் இம்மியும் நகராமல் வாசலையே பார்த்துக் கொண்டிருக்கிறான் கலைநேசன்..

அழகியசிங்கர் கவிதைகள்

கவிதை ஒன்று


டேபிளின் மீதிருந்த
காப்பிக் கோப்பைகளை
அலட்சியமாக விட்டுவிட்டுப்
போய்விட்டீர்கள்....

யார் அதை எடுத்துத்
தூக்கி எறிவது....

உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
அது அப்படியே இருப்பது....

காப்பிக்கோப்பைகள்
தானாகவே போய்க்
குப்பைக் கூடையில் வீழாது..

மிச்சம் மீதியிருக்கும்
காப்பிக் கரைகளைப்
பார்க்க பார்க்க அருவெறுப்பாக இல்லையா..
யார்தான் அதைத் தூக்கி எரிவார்கள்..
                                                                      11.02.2013


கவிதை இரண்டு

வாழ்க்கை என்பது
என்னவென்று கேட்டேன்..

வாழ்க்கை என்பது
அப்படித்தான் என்றான் படுபாவி

                                                                     15.02.2013

எதையாவது சொல்லட்டுமா....83

அழகியசிங்கர்

பந்தநல்லூர் கிராமத்தில் பணி புரிந்து கொண்டிருந்தபோது, என் அலுவலக நண்பர் ஒருவர் நடிகர் நீலு மாதிரி இருப்பார்.  அவரும் நானும் உதவி மேலாளர்கள்.  இது பெரிய பதவி இல்லை.  மேலே உள்ளவர்களும் நம்மை மதிக்க மாட்டார்கள்.  கீழே பணிபுரிபவர்களும் நம்மை மதிக்க மாட்டார்கள்.  நாங்கள் இருவரும் கெட்ட பெயரைத்தான் சம்பாதித்துக் கொண்டிருந்தோம்.  வங்கிக் கிளை அலுவலகத்தை காலையில் போய் திறப்பது முதல், இரவு மூடும் வரை நாங்கள் படுகிற அவஸ்தையை எந்த மாதிரியும் விளக்க முடியாது.  மேலும் அந்தக் கிராமத்தில் சரியான ஓட்டல் இல்லாமல், மருத்துவ வசதி இல்லாமல் தங்குவது என்பது  முடியாத காரியம்.  நானும், அந்த நண்பரும் ஐம்பது வயதைத் தாண்டியவர்கள்.
நான் அந்த நண்பரை நடிகர் நீலு மாதிரி இருப்பார் என்று சொன்னது அடையாளத்திற்குத்தான்.  நம் தமிழ் சினிமாவில் பல நடிகர்களை தமிழ் சினிமா உலகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று எனக்குத் தோன்றும்.  அதில் நீலு என்ற நடிகரும் ஒருவர்.  அவரை ஒரு நகைச்சுவை நடிகராக மட்டும் நடிக்க வைத்துவிட்டு அம்போ என்று தமிழ் சினிமா உலகம் விட்டுவிட்டது.  அவர் உருவத்திற்கு ஏற்ற ஒரு கதையை பிரமாதமாக …