23.3.17

மனதுக்குப் பிடித்த கவிதைகள்


அழகியசிங்கர்  


ஒரு கவிதை படிப்பவருக்குப் புரிய வேண்டுமா? வேண்டாமா? இந்தக் கேள்விக்கு ஒரு கவிதை வாசிப்பவருக்குப் புரிய வேண்டும் என்று நான் அழுத்தமாகக் கூறுவேன்.  பிரம்மராஜன் கவிதைகள் அவ்வளவு எளிதாகப் புரியாது.  இதை பிரம்மராஜன் காதுபட சொல்லாதீர்கள் என்று என் நண்பர்கள் சிலர் சொல்வார்கள்.  காரணம். நான் சொல்வதைக் கேள்விப்பட்டு பிரம்மராஜன் பெருமிதம் அடையக் கூடும் என்றுதான்.   ஆனால் உண்மையில் பிரம்மராஜன் கவிதை அவ்வளவு சுலபமாகப் புரியாது.  ஒவ்வொரு வரியாக புரியும்.  ஆனால் முழு கவிதைக்குள் போவதற்குள் பெரிய பாடாக இருக்கும்.  முபீன் சாதிகா கவிதைகளும் அப்படித்தான்.   கவிதை எப்படி எழுத வருகிறது என்று ஒருமுறை அவரிடம் கேட்டேன்.  தானாகவே எழுதுகிறது என்பது போல் சொன்னார்.  என்னால் நம்ப முடியவில்லை.   ஆட்டோமெடிக் ரைட்டிங் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது. அதுமாதிரி உண்டா என்பதும் தெரியாது.  அன்பின் ஆறாமொழி என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்தக் கவிதையை எடுத்துக்கொண்டால், முதலில் தலைப்பு அவருக்குத் தோன்றியதா?  அல்லது கவிதை வரிகள் முன்னதாக தோன்றியதா?  எது தலைப்பை தீர்மானித்தது? இந்தக் கேள்விக்கு எனக்குப் பதில் தெரியவில்லை.  ஆனால் இக் கவிதையை வாசிக்கும்போது இதன் ரிதம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. 

59)  அன்பின் ஆறாமொழி

முபீன் சாதிகா 

மீன் படரும் நீரிலும்
கருமை புகா வானிலும்
தொட்டுணரா தீயிலும்
பிளவு காணா கல்லிலும்
வருந்தும் வருந்தா வளியிலும்
நகையோடு பகையும் துயரிலும்
மெலியதில் வலியாய் மலரிலும்
நேரில் எதிரா திசையிலும்
முகம் கலக்கும் ஆடியிலும்
முற்றோடு சுவையாய் அமுதிலும்
முறிவோடு சுவையாய் அமுதிலும்
முறிவோடு தூண்டா நஞ்சிலும் 
ஒளிபுகா திரையின் இருளிலும்
அடரும் வெளியாய் கானிலும்
தளிரோடு துளிரும் முளையிலும்
முழுமையின் உருவாய் அண்டத்திலும்
விரைந்துழலும் ஒளியிலும்
ஒடுக்கும் துடியின் இடியிலும்
பொழிவில் வெருளா புயலிலும்
திரளும் தீரத்தின் பிணியிலும்
எம்மில் மாறா எச்சத்திலும்
நிச்சயமில்லா நிதர்சன நேசத்திலும்
தீரா வெகுளலலின் இறுதியிலும்
நிறையுமேûô நெறியின் நசை

நன்றி : அன்பின் ஆறாமொழி - கவிதைகள் - முபீன் சாதிகா - வெளியீடு : பாலம் பதிப்பகம் பி விட், 25 அபிராமி அபார்ட்மெண்ட்ஸ்,  3வது பிரதான சாலை, தண்டிஸ்வரர் நகர், வேளச்சேரி, சென்னை 42
முதல் பதிப்பு : நவம்பர் 2011 - விலை : ரூ.60.


22.3.17

காலை 11 மணியிலிருந்து மூன்று மணிவரை...

காலை 11 மணியிலிருந்து மூன்று மணிவரை...

அழகியசிங்கர்இதைப் படிப்பவருக்கு குறைந்தது அறுபது வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.  அப்படி இருப்பவர்கள்தான் இதைப் படிக்க வேண்டும்.  மார்ச்சு மாதமே வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது.  11 மணிக்கு மேல் வீட்டைவிட்டு வெளியே செல்வதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.  வெயிலில் நடந்து போகாதீர்கள்.  சைக்கிளில் போக வேண்டுமென்று நினைக்காதீர்கள்.  டூ வீலரிலாவது போக வேண்டுமென்று யோசிக்காதீர்கள்.  ஆனால் காரில் போவதாக இருந்தால் ஏசியை ஆன் செய்துவிட்டு போங்கள்.  அதுவும் கட்டாயமாக போக வேண்டுமென்றால் போங்கள். நீங்கள் ரத்த அழுத்த நோயாளியாக இருந்தால் வெளியே தலை காட்டாதீர்கள்.  

நீங்கள் வெயிலைத் தவிர்க்க நிழலில் இருங்கள்.  60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லோரும் பதவியிலிருந்து ஓய்வுப் பெற்றவர்களாகத்தான் இருப்பார்கள்.  ஒருசிலர் இன்னும் எதாவது ஒரு பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.  ஓய்வுபெற்றவர்கள் வீட்டைவிட்டு 11 மணியிலிருந்து 3 மணிவரை எங்கும் போகாதீர்கள்.  அதேபோல் அலுவலகத்தில் பணிபுரிபவர் அலுவலகத்தை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும். 

ஓய்வு பெற்றவர்கள் வீட்டில் இருக்கும்போது சும்மா இருங்கள்.  முடிந்தால் புத்தகம் எடுத்துப் படியுங்கள்.  டிவி பார்க்க விரும்புவர்கள் டிவியைப் பார்க்கலாம்.  அல்லது தூங்க வேண்டுமென்று நினைத்தால் நன்றாகத் தூங்கிவிடுங்கள்.  ஆனால் ஒருபோதும் வெயிலில் உலா போகாதீர்கள்.  வீட்டில் சும்மா இருப்பது எப்படி என்பதை யோசித்துப் பாருங்கள்.  சமீபத்தில் ஒரு இல:கிய நண்பரை சந்தித்தேன்.  அவரிடம் சில புத்தகங்களைப் படிக்கக் கொடுத்தேன்.  வேண்டாம் என்று திருப்பி தந்துவிட்டார்.  இத்தனைக்கும் ஒரு காலத்தில் தீவிரமாக இலக்கியத்தில் ஈடுபபட்டவர்.  அவருடைய கவிதைத் தொகுதி கூட ஒரு பதிப்பாளர் மூலம் மிகச் சிறப்பாக வெளிவந்திருந்தது.  இப்போது அவருக்கு எழுதுவதிலும் படிப்பதிலும் நாட்டம் இல்லை.  அவர் சொன்னார் : üஎனக்கு எந்தப் புத்தகமும் வேண்டாம்.  நான் சும்மா இருக்க விரும்புகிறேன்,ý என்று.

எனக்கு அவர் சொன்னதிலிருந்து பெரிய யோசனை.  சும்மா இருப்பதைப் பற்றி.  ஒரு நிமிடம் அப்படி இருக்க முடியாது என்று தோன்றியது.  பால்கனியிலிருந்து வெளியே பார்க்கிறேன்.  வெயில் கொளுத்துகிறது.  அவ்வளவு வெளிச்சம்.  இதோ வீட்டிலிருந்து ஒரு குரல் கேட்கிறது.  காப்பிப் பொடி அரைத்து வரவேண்டுமென்று.  ஜிப்புப் போன பேன்ட், பெத்தான்கள் அறுந்த சட்டைகளை எடுத்துக்கொண்டு போஸ்டல் காலனி இரண்டாவது தெருவில் இந்தத் தாங்க முடியாத வெயிலில் தைத்துக் கொண்டிருக்கும் தெரு டைலரிடம் கொண்டு போக தயாராக இருக்கிறேன்.  எல்லாம் மூன்று மணிக்கு மேல்.  சரி சும்மா இருப்பது என்பது புத்தகம் படிக்காமல் இருப்பதா?


21.3.17

நீங்களும் படிக்கலாம்...29

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              
அழகியசிங்கர்

எஸ் எம் ஏ ராம் நாடகங்கள்......
ஐந்து நாடகங்களின் தொகுப்புதான் எஸ் எம் ஏ ராம் நாடகங்கள் என்ற தொகுப்பு.  அவரிடம் முதலில் ஒரு கேள்வி கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது?  ஏன் இவர் தொடர்ந்து நாடகங்கள் எழுதாமல் விட்டுவிட்டார்.  அதற்கு பல காரணங்களை அவர் சொல்லலாம்.  நாடகம் எழுதத் தயார்.  ஆனால் பத்திரிகை இல்லை பிரசுரம் செய்வதற்கு என்றும் சொல்லலாம்.  
நகுலன் சென்னை வரும்போது கையில் ஒரு நோட்டு வைத்திருப்பார்.  அந்த நோட்டில் அவர் என்ன தோன்றுகிறதோ அதை எழுதிக்கொண்டிருப்பார்.  அவர் எழுத்து பிரசுரமாவதைப் பற்றி கவலைப் பட மாட்டார்.  எந்தப் பத்திரிகைக்காவது அவர் படைப்புகளை அனுப்பினால் கூடவே தபால்தலைகளையும் இணைத்து அனுப்புவார்.
ராமிற்கு நாடகம் எழுதும் திறமை இருந்தும் ஏன் தொடர்ந்து செயல்படவில்லை.  இன்னொரு கேள்வி: நாடகம் எழுதுவது என்பது நிகழ்த்திக் காட்டுவதற்காகத்தானா? அப்படியென்றால், அதற்கான வாய்ப்பு என்பது இல்லை என்றே தோன்றுகிறது.  ஒரு நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட வேண்டுமென்று நினைத்தால், இன்றைய சூழ்நிலையில் அதன் சாத்தியம் குறைவாகவே இருப்பதாக இருக்கிறது. பிரபலமான சபா நாடகங்கள் தடுமாறிக்கொண்டிருக்கிற காலம் இது.  மேலும் ஒரு நாடகத்தை நடத்த வேண்டுமென்றால் குறைந்த பட்சம் 10000 ரூபாய்க்களாவது தேவை என்று நாடகத்தில் அனுபவமிக்க என் நண்பர் ராஜாமணி குறிப்பிட்டுள்ளார். செலவு செய்வதோடல்லாமல், நடிப்பதற்கு சரியான நடிகர்கள் கிடைக்கவேண்டும்.  பின் பார்வையாளர்கள் வேண்டும். இந்தக் காலத்தில் யார் நாடகத்தைப் பார்க்க வருகிறார்கள்.  இலவசமாக நாடகத்தைப் போடுவதாக இருந்தாலும், யாரும் பார்க்க வருவார்களா என்பது சந்தேகம். காரணம் நாடகம் நடக்கும் இடம், வருகிற தூரம் இதெல்லாம் முக்கியமான காரணங்களாக மாறி விடுகின்றன.     
ராமின் இந்த ஐந்து நாடகங்களையும் பலர் மேடை ஏற்று நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.  அந்த அளவிற்கு அவர் எழுதிய நாடகங்களுக்கு ஒருவித கௌரவம் கிடைத்திருக்கிறது. இனி இதுமாதிரியான நாடகம் நடத்தப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று நினைத்து, நாடகத்தை எழுதத் தொடங்க வேண்டும் ராம். மேலும் நாடகத்தைப் பிரசுரம் செய்யப் பத்திரிகைகள் இல்லை என்பதையும் நினைத்து, தொடர்ந்து நாடகங்கள் எழுதிப் பார்க்க வேண்டும்.
இன்று பல்கலைக்கழகங்களில் நாடகத் துறை என்று ஒன்று இருந்தால், ராம் நாடகங்களை கொண்ட புத்தகத்தை உதாரணமாக வைத்துக்கொண்டு நாடகங்களை நடத்திப் பார்க்கலாம்.  அதற்கெல்லாம் பல்கலைக்கழகங்கள்தான் முயற்சி செய்ய வேண்டும்.  
நாடகப் புத்தகங்களை நாம் அதிகமாக உருவாக்க வேண்டும்.  நாடகம் நடத்தப் படுகிறதோ இல்லையோ நாடகப் புத்தகத்தை ஒரு நாவல் படிப்பதுபோல ஒரு சிறுகதைத் தொகுதி படிப்பதுபோல படிக்க வேண்டும்.  1957ஆம் ஆண்டு க நா சுவின் நல்லவர் என்ற புத்தகம் வந்துள்ளது.  அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் க நா சு இப்படி எழுதி உள்ளார் :
'நாடகங்கள் பார்ப்பதில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் கிடையாது.  ஆனால் நாடகங்கள் படிப்பதில் நான் யாருக்கும் சளைத்தவன் அல்ல.  நாடகங்கள் நடிக்கப்படுவதற்காக எழுதப்பட வேண்டிய அவசியமே இல்லை.  இலக்கியமாகப் படிப்பதற்காக மட்டும் எழுதப்பட்டால் போதும் என்பது என் அபிப்பிராயம்.' இப்படி தெளிவாக தன் கருத்துக்களை முன் வைக்கிறார்
க நா சு.  அந்த விதத்தில் ராம் நாடகங்கள் படிப்பதற்கும் இலக்கிய அனுபவத்தைத் தர தவறவில்லை. 
ந சிதம்பரசுப்பிரமணியன் என்ற மணிக்கொடி எழுத்தாளர், அவருடைய ஊர்வசி நாடகப் புத்தகத்தில் ஒன்றை குறிப்பிடுகிறார்.  'நாம் படித்து அனுபவிக்கும்படியாக நாடகம் ஒன்றுமில்லை,' என்று தன் கருத்தைத் தெரிவிக்கிறார். 
இதெல்லாம் பார்க்கும்போது ராம் நாடகங்கள் படித்து ரசிக்கும்படியாக இருக்கிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 
அவருடைய ஐந்து நாடகங்களை ஐந்து விதமாக எழுதி உள்ளார்.  üசுயதரமம்ý என்ற நாடகத்தில் மகாபாரத்தில் வரும் திரௌபதி, பஞ்ச பாண்டவர்களை திருமணம் செய்துகொள்வதற்கு முன் தன் எதிர்ப்பை பதிவு செய்கிறார்.  மகாபாரதத்தில் இந்தப் பகுதி மௌனமாக்கப்பட்டிருக்கிறது.  ஆனால் ராம் நாடகத்தில் திரௌபதி இப்படி கூறுகிறாள் : தர்மங்களில் சந்தர்ப்பங்களே முக்கியமானவை; சங்கல்பங்கள் அல்ல,ý என்று கூறியபடி யுதிஷ்டிரனின் கழுத்தில் மாலை அணிவிக்கிறாள்.  
மூடிய அறை என்ற 2வது நாடகத்தைப் படிக்கும்போதே, மூடிய அறையில் நிச்சயம் ஒன்றும் இருக்கப் போவதில்லை என்று வாசகருக்குத் தெரிந்துவிடுகிறது. 25 வருடமாக திறக்கப் படாத மச்சு ரூமை திறக்க எல்லோரும் முயற்சி செய்கிறார்கள்.  அதை மையமாக வைத்து இந்த நாடகத்தை எழுதிக்கொண்டு போகிறார் ராம்.  வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை நயம்பட வெளிப்படுத்துகிறார் ராம். அந்தக் குடும்பத்தின் மூத்தப் பையன் அறையைத் திறந்து பார்த்து, அதில் ஒன்றுமில்லை என்று சொல்கிறான்.  ஆனால் மற்றக் குடும்பத்தினர்கள் அவன் சொல்வதை நம்பவில்லை.  அவனை பைத்தியக்காரன் என்று குறிப்பிடுகிறார்கள். இன்றைய உலகத்தை நையாண்டி செய்வதுபோல் இருக்கிறது.     
மூன்றாவது நாடகமான மணிமேகலையின் கண்ணீர் என்ற நாடகம். இந் நாடகத்தைப் படிக்கும்போது ராமின் கற்பனை அசாதரணமாக உள்ளது.  திரௌபதியும் சீதையும் மணிமேகலையைச் சந்தித்துப் பேசுவதுபோல் வருகிறது.  நாடகமே காவிய நடையில் எழுதி உள்ளார்.  இந்த நாடகத்தை என்னால் ரசிக்க முடியவில்லை.  காரணம்: திரௌபதியும், கண்ணகியும் மணிமேகலையை எப்படி சந்திக்க முடியும்.  இந்தக் கற்பனை கொஞ்சம் பேராசையான கற்பனையாக இருக்கும்போல் படுகிறது.
இத் தொகுப்பில் இரண்டு பெரிய நாடகங்களில் ஒன்று எப்ப வருவாரோ இன்னொன்று ஆபுத்திரனின் கதை.  சாமுவேல் பெக்கெட் எழுதிய நாடகத்தின் மையக் கருவை வைத்துக்கொண்டு இந்திய சூழ்நிலைக்கு ஏற்ப எழுதியிருப்பதாக குறிப்பிடுகிறார். ஒருவர் வந்திருந்து சுபிட்சத்தைக் கொண்டு வரப்போகிறார் என்று அவருக்காகக் காத்திருப்பதுபோல் இந் நாடகம் போய்க்கொண்டிருக்கிறது.  ஆனால் அவர் வரவே இல்லை.  வரப்போகிறார் வரப்போகிறார் என்று காத்திருக்கிறார்.  இதுதான் இந் நாடகம்.  இதைப் படிக்கும்போது கொஞ்சங்கூட அலுப்பில்லாம் எழுதிக்கொண்டே போகிறார் ராம்.  
பெரிய நாடகமான ஆபுத்திரனின் கதையில் அண்ணன் தம்பி இருவர் மூலம் நாடகத்தைத் துவக்குகிறார்.  ஆள் அரவமற்ற இடத்தில் அபுத்திரின் கோமுகி  ஆற்றில் அட்சயப் பாத்திரத்தை எறிகிறான்.  அதை இரண்டு அழகிய கரங்கள் வெளியே தோன்றி ஏற்றுக்கொள்கிறது.  அவன் சொல்கிறான் : 'ஆபுத்திரனின் அடையாளம் அழிந்து விடவில்லை.  அது அட்சயப்பாத்திரமாக இன்னும் கோமுகியின் வயிற்றில் உயிர்த்திருக்கிறது.' என்று.
இந் நாடகங்கள் எல்லாம் நிதானமாக வாசித்து ரசிக்க வேண்டிய இலக்கியத் தரமான நாடகங்கள்.  இந் நாடகங்கள் நடத்திக் காட்டப் பட வேண்டியவை.  ராம் மேலும் நாடகங்கள் எழுத வேண்டும்.  வேறு விதமாக யோசிக்க வேண்டும்.

எஸ் எம் ஏ ராம் நாடகங்கள் - எஸ் எம். ஏ.ராம் - தொடர்புக்கு: எஸ் மோகன் அனந்தராமன், 7 எ மாருதி பிளாட்ஸ்இ சரோஜினி முதல் குறுக்குத் தெரு, ராஜாஜி நகர். பல்லாவரம், சென்னை 43 - விலை ரூ.150 - முதல் பதிப்பு : டிசம்பர் 2015

20.3.17

கதா மஞ்சரி கதை -3


அழகியசிங்கர்

  வீடு நிறைந்த பொருள்                                                            


ஒருவன் பதினாயிரம் வராகன் வைத்திருந்தான்.  அவன் தனக்கு இறக்குங்காலம் அடுத்திருப்பதை அறிந்தான்.  தன் இரு மக்களையும் அழைத்தான்.  ஒவ்வொருவனுக்கும் ஐந்தைந்து பணங் கொடுத்ôன்.  üüஇதனாலே வீட்டை நிறையும்படி செய்பவனுக்கு என் பொருள் முழுவதும் தருவேன்,ýý என்ளான்.  அவர்களிலே மூத்தவன் ஐந்து பணத்துக்கு மலிந்த பொருளாகிய வரகு வைக்கோலை வாங்கிவந்து வீடு நிறையக் கொட்டி பரப்பி வைத்தான்.  இளையவன் நல்ல விளக்கு வாங்கிவந்து வீடெங்கும் விளக்கமாகப் பொருள்கள் தெரிய ஏற்றி வைத்தான்.  தந்தை அவ்விரண்டையும் பார்த்தான்.  இளையவன் அறிவை வியந்து பாராட்டினான்.  அவனுக்கே தன் உடைமை முழுவதையும் ஒப்புவித்தான்.  ஆதலால், அறிவுடை ஒருவனே பெரியவன் ஆவான்.

கதா மஞ்சரி கதையை இப்போது எழுதினால் எப்படி இருக்கம்?

ஒரு பணக்காரர்.  மரணம் அடையும் தறுவாயில் அவர் இருக்கிறார்.  தன் சொத்து முழுவதும் அவருடைய இரண்டு புதல்வர்களில் யார் அறிவில் சிறந்தவர்களோ அவர்களுக்கு அளிக்க விரும்புகிறார்.  புதல்வர்கள் இருவரையும் கூப்பிட்டு அனுப்பினார்.  இருவரகளும் வந்தனர்.  'உங்கள் இருவருக்கும் ஒரு பரிட்சை வைக்கப் போகிறேன்.  அதில் யார் வெற்றிப் பெறுகிறாரோ அவருக்கு என் சொத்து முழுவதும் கொடுக்க விரும்புகிறேன்,' என்றார்.  மகன்கள் இருவரும் சிறிது நேரம் யோசித்தார்கள்.  அப்பாவுக்கு மூளை பிசகிப் போய்விட்டது என்று முடிவுக்கு வந்தார்கள்.  ஆனாலும் அப்பாவிடம் ஒன்றும் சொல்லவில்லை.  அவர்கள் அப்பா ஆளுக்கு ஒரு லட்சம் ருபாய் பணம் கொடுத்து, 'இந்த வீட்டில் உள்ள அறை முழுவதும் ஒரு லட்சம் ரூபாயக்கு எதாவது வாங்கி நிரப்ப வேண்டும்.  யார் நிரப்புகிறார்களோ அவர்கள் அறிவை மெச்சி என் சொத்து முழுவதும் தரப்படும்' என்றார். மூத்தப் பையன் யோசித்தான்.  இந்த அறை முழுவதும் நிரப்ப கவிதைப் புத்தகம்தான் லாயிக்கு என்று கவிதைப் புத்தகங்களாக வாங்கி வீடு முழுக்க நிரப்பி விட்டான்.  இளையவன் யோசித்தான்.  பெரிய குத்துவிளக்குப் போதும் என்று அவனுக்குத் தோன்றியது.  பொரிய குத்துவிளக்கை வாங்கிக்கொண்டு, எண்ணெய் இட்டு விளக்கு ஏற்றினான்.  அவர்கள் அப்பா அவர்கள் இருவரும் என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்த்தார்.  பெரிய பையன் மீது கோபமான கோபம்.  யாராவது கவிதைப் புத்தகங்களை வாங்குவார்களா என்ற கோபம்தான்.  இரண்டாவது பையனின் செய்தது அவருக்குப் பிடித்திருந்தது. 
வீட்டிற்கே விளக்கு ஏற்றிவிட்டான் என்று எண்ணினார்.  தன் சொத்து முழுவதும் இரண்டாவது பையனுக்கு எழுதிக் கொடுக்க எண்ணி அவர் கருத்தைக் கூறினார்.  முதல் பையன் அவர் பேச்சைக் கேட்டு, 'கிழவா.. உனக்கு புத்தி எதாவது பிசகிப் போச்சா...ஒழுங்கா பாதிப் பாதியாக சொத்தைப் பிரித்துக்கொடு.. இல்லாவிட்டால் கொலை விழும்,' என்று மிரட்டினான்.

இரண்டாவது பையனோ, 'சொன்னபடி முழு சொத்தையும் என் பெயருக்கு மாற்று....இல்லாவிட்டால் உன்னை கொன்றுவிடுவேன்,' என்று மிரட்டினான்.

செல்வந்தார் அவர்கள் இருவரும் பேச்சைக் கேட்டு மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.  

19.3.17

100 கவிதைப் புத்தகங்களிலிருந்து 100 கவிதைகள்....


.

அழகியசிங்கர்மனதுக்குப் பிடித்த கவிதைகள் என்ற தலைப்பில் இதுவரை 57 கவிதைகள் கொண்டு வந்துள்ளேன்.  இப்போது 58 கவிதையை கொண்டு வர உள்ளேன். இப்படி 100 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு தொகுப்பு நூல் கொண்டு வர உள்ளேன்.  கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன்.  நான் தேர்ந்தெடுக்கும் கவிதையைக் குறித்தும், முடிந்தால் கவிஞர் பற்றியும் எதாவது எழுத வேண்டுமென்று தோன்றியது.  1988ஆம் ஆண்டு விருட்சம் ஆரம்பித்த நாளிலிருந்து என்னிடம் கவிதைப் புத்தகங்கள் சேர்ந்த வண்ணம் உள்ளன. இந்தக் கவிதைப் புத்தகங்களையும் அதில் குறிப்பிடப்பட்ட கவிதைகளையும் நான் மதிக்கிறேன்.  
58வது கவிதையாக நான் நேசன் புத்தககத்திலிருந்து  எடுக்கிறேன். 'ஏரிக்கரையில் வசிப்பவன்' என்பதுதான் கவிதையின் புத்தகம்.  இத் தொகுப்பில் பல கவிதைகள் குறிப்பிடும்படி உள்ளன.  நேசன் ஒரு திறமையான கவிஞர்.  ஆரம்ப காலத்தில் நேகனும், ராணிதிலக் அவர்களும் போஸ்டல் காலனியில் உள்ள என் வீட்டிற்கு வருவார்கள்.  அவர்கள் எழுதிக்கொண்டிருந்த கவிதைகளை என்னிடம் காட்டுவார்கள்.  அவர்களை அக் கவிதைகளை வாசிக்கச் சொல்வேன்.  அவர்களும் கவிதைகளை வாசிப்பார்கள்.  உடனடியாக அக் கவிதைகளை வாங்கிக்கொண்டு விருட்சம் இதழ்களில் பிரசுரம் செய்வேன்.  அவர்களைப் பார்க்கும்போது உண்மையாக கவிதைக்காகவே வாழ்ந்தவர்கள் போல் தோன்றும்.  
இத் தொகுப்பில் பெரும்பாலான கவிதைகள் என்னை கவர்ந்தாலும், 'என்னைச் சுற்றும் ஏழு நிலவுகள்' என்ற கவிதையை நான் தொகுப்பில் சேர்க்க விரும்புகிறேன். 
ஒவ்வொரு நிலவையும் பார்க்கும்போது ஏற்படுகிற அனுபவங்களை நேசன் விவரித்துக்கொண்டு போகிறார்.  ஏழாவது நிலவு 'எனக்குப் பிடிபடாமல் நழுவிக்கொண்டிருக்கும் ஒரு சொல்,' என்று முடிக்கிறார். படிப்பவரின் ஆன்மிக உணர்வை தட்டி எழுப்பும் விதமாய் இக் கவிதை உள்ளதாக தோன்றுகிறது.   எளிமையான நேசனின் இந்தக் கவிதையை எப்போதும் வாசிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.


மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 58

 என்னைச் சுற்றும் ஏழு நிலவுகள் 


ஸ்ரீநேசன்


முதல் நிலவை எப்போதும்
எறும்புகள் மொய்த்தவண்ணம் உள்ளன
இரண்டாவது நிலவு
குழந்தைகளால் மட்டுமே ரசிக்கக்கூடியது
மூன்றாவது நிலவு போலீஸ்காரனின் துப்பாக்கிச் சூட்டுக்குக்
காத்திருக்கும் ஒரு போராளியின் இதயம்
நான்காவது நிலவு எப்போதும் என்னை அழைத்துக்
கொண்டேயிருக்கும் வறண்ட மலையின் குன்று
ஐந்தாவது நிலவு
மதுக்கோப்பையாகத் தளும்பிக்கொண்டிருக்கிறது
ஆறாவது நிலவுக்குள் சிவை உருவாகிக் கொண்டிருக்கிறாள்
ஏழாவது நிலவு
எனக்குப் பிடிபடாமல் நழுவிக்கொண்டிருக்கும் ஒரு சொல்.


நன்றி : ஏரிக்கரையில் வசிப்பவன் - கவிதைகள் - ஸ்ரீ நேசன் - மொத்தப் பக்கங்கள் : 80 - வெளியீடு : ஆழி பப்ளிஷர்ஸ், 12 முதல் பிரதான சாலை, யுனைட்டட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600 024 - தொலைபேசி : 044-23722939 - விலை : ரூ.60