24.9.12


அசோகமித்திரனின் கூட்டம்


அழகியசிங்கர்


இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மிக மோசமான மாதம்.  3ஆம் தேதி, என் திருமண நாள்.  ஆனால் அதை மகிழ்ச்சியாக நினைத்துக்கொள்ள முடியவில்லை.  கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் முடிந்துவிட்டன திருமணம் ஆகி.  ஒவ்வொரு ஆண்டும் என் மாமியார் சுப்புலட்சுமி அவர்கள் வாழ்த்தாமல் இருக்கமாட்டார்.  இந்த முறை அவர் நினைவு தப்பிப்போய் மருத்துவமனையில் மோசமான நிலையில் கிடந்தார்.  5ஆம்தேதி அவர் இறந்து விட்டார். எதிர்பாராதவிதமாய் சோடியம் குறைந்துவிட்டதால், நினைவு தப்பிப் போய்விட்டது.  சில தினங்களாக சரியாக நடக்க முடியாமல் கால் நரம்பை எதோ பிடித்து இழுக்க, நாற்காலியைப் பிடித்துக்கொண்டு தள்ளி தள்ளி நகர்ந்தார்.  ஒவ்வொரு முறை குளிக்கும்போதும், பாத்ரூம் போகும்போதும் தடுமாறினார். ஆனால் கீழே விழாமல் ஜாக்கிரதையாக இருந்தார்.  தினமும் அவர் உடல்நிலை மோசமாகிக் கொண்டே வந்தது.  ஒருநாள் அவர் சாப்பிட்டதை எல்லாம் வாந்தி எடுத்தார்.  ஒருநாள் இரவு நினைவுத் தப்பிப்போய் திவான் படுக்கையிலிருந்து கீழே விழுந்து முகம் நன்றாக வீங்கிவிட்டது. ரத்தம் கொட்டோ கொட்டென்று கொட்டியது.  ஆனால் அவர் நினைவுத் தப்பிப் போய்விட்டதால், மருத்துவமனையில் சேர்க்கும்படி ஆகிவிட்டது.  மாமியாருக்கு 89 வயது.

வீட்டில் ஒரே பரபரப்பு.  கடைசியாக என் வீட்டில் மரணம் நிகழ்ந்தது.  என் பாட்டியின் மரணம்.  1990ம் ஆண்டு.  அதன் பின் 22 ஆண்டுகள் கழித்து மாமியாரின் மரணம்.  மரணத்தினால் ஏற்பட்ட பரபரப்பு எளிதில் அடங்கவில்லை.  ஒரு புதன்கிழமை மாமியார் இறந்தார்.  இன்னொரு புதன்கிழமை என் பெரியம்மா இறந்தார்.  நடுவில் ஒரு சனிக்கிழமை என் மாமியாரின் இன்னொரு  பெண்ணின் மாமியார் இறந்துவிட்டார்.  படுத்தப்படுக்கையாக வெகு மாதங்கள் இழுத்துக்கொண்டு இருந்தவர்.  ஆனால் பெரியம்மாதான் நன்றாகச் சாப்பிட்டு தட்டை அலம்ப எழுந்தபோது தடுமாறி சாய்ந்தார்.  யாரிடமும் எதையும் சொல்லாத மரணம்.  

இதுமாதிரியான தருணத்தில்தான் நான் அசோகமித்திரனின் 82வது வயது கூட்டத்தைத் தொடங்கியிருந்தேன்.  ஒவ்வொருவரையும் பேசும்படி கூப்பிட்டுக்கொண்டிருந்தேன்.  எல்லாமே ஆமை  வேகத்தில் நடந்து கொண்டிருந்தது.  அசோகமித்திரனிடமே என்னால் பேசமுடியவில்லை.  என் நிலையில் ஒருவிதப் பதட்டம் கூடிக்கொண்டே இருந்தது.  அலுவலகமே போகவில்லை.  தூக்கம் சரியாக வராமல் அவதிப்பட்டேன்.  பேசுபவர்களுக்கெல்லாம் அழைப்பிதழை அனுப்பிவிட்டு, வந்து சேர்ந்ததா என்றுகூட கேட்கவில்லை.  ஒவ்வொருவரிடமும் ஒருமுறைதான் பேச முடிந்தது.  நான் கடைசியாக கூட்டம் நடத்தியது 2 ஆண்டுகளுக்கு முன்னால்..எல் எல் ஏ கட்டிடத்தின் சின்ன அறையில் நடந்த அக்கூட்டத்தில் எண்ணி 10 பேர்கள் வருவார்கள்.  அதன்பின் கூட்டமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாமென்று சீர்காழிக்கு ஓடிவிட்டேன்.  கூட்டம் நடத்தும்போது தேவையில்லாமல் ஒருவிதப் பரபரப்பு கூடிக்கொண்டே போகும்.  ஒருமுறை சுந்தரராமசாமியின் கூட்டம் நடக்கும்போது மழை பெய்து கொண்டிருந்தது.  ஒரு பள்ளத்தில் என் டூவீலருடன் விழுந்துவிட்டேன்.  காரில் வந்து கொண்டிருந்த சுந்தரராமசாமி என்னைப் பார்த்துவிட்படு சிபிச் செல்வனிடம் சொல்ல, டூ வீலரை பள்ளத்திலிருந்து எடுக்க சிபிச்செல்வன் உதவினார்.  அதேபோல் அசோகமித்திரன் கூட்டம் நடத்தும்போது அவருடைய உரையாடல்கள் புத்தகம் எடுக்க பரண் மீது கண்ணைச் சுழற்றிக் கொண்டிருந்தேன். அமியின் புத்தகம் தென்படவில்லை.  ஆனால் காசியபனின் அசடு புத்தகம் மட்டும் கண்ணில் பட்டது.  கீழே இறங்கும்போது உட்காருமிடத்தில் நன்றாக அடிப்பட்டுவிட்டது.  சரியாக உட்கார முடியவில்லை.  

பாரதியார் இல்லத்தில் நான் எதிர்பாராதவிதமாக அசோகமித்திரனின் பிறந்தநாள் கூட்டத்திற்கு 150 பேர்களுக்கு மேல் கூடி இருந்தார்கள்.  இதற்குமுன் இதுமாதிரி கூட்டத்தை நான் கூட்டியதே இல்லை. எல்லோரும் பேசி முடிக்கும்வரை கூட்டம் கலையாமல் இருந்தது.  அதுவும் ஒரு ஆச்சரியம்.  மேடையில் நான் உட்காரமுடியாமல் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.  யாரும் ஏன் உங்கள் முகம் இறுக்கமாக இருக்கிறது என்று கேட்கவில்லை. 
   

13.9.12


அரேபிய ராசாக்கள் 


துணையிழந்த 
நோய்மையுடனான முதியவனின் 
பார்வையாய்
வ்டிந்து சொட்டுகிறது தனிமை,

ஒருபொழுதும் 
உங்களது மழையுடன் 
ஒப்புக்கு வராதீர்கள் 

மணற்காட்டில் நிச்சயக்கப்பட்ட வெயில் 
எங்கள் பெருவானம். 

ஆறுமுகம் முருகேசன்

உறக்கத்தின் மீது.

நெடுஞ்சாலையோரத்தில்
ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறார்கள்
நடை பாதைவாசிகள்.

அவ்வுறக்கத்தின் மீது
ஓடிக்கொண்டிருக்கின்றன
எண்ணற்ற வாகனங்கள்.

 ஒரு வினாடி
வெறுப்புத்தோன்றி மறைகிறது.
விழித்தபடிவாகனம்
ஓட்டுபவர்களுக்கு
உறங்கும்நடை பாதைவாசிகளின்
உறக்கத்தின் மீது.

ரவிஉதயன்

எதையாவது சொல்லட்டுமா....76

அழகியசிங்கர் 

பொதுவாக எனக்குக் கூட்டத்தைக் கண்டால் எதுவென்று சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.  அதேபோல் மணிக்கணக்கில் வரிசையில் நிற்பது.  நெரிசலில் மாட்டிக்கொள்வது.  சின்ன வயதில் நான் பல மணி நேரங்கள் சினிமா பார்ப்பதற்கு வரிசையில் நின்றிருக்கிறேன்.  ரொம்ப குறைவான பணத்தில் நான் கூட்ட நெரிசலில் சினிமா பார்ப்பதற்காக நின்று அவதிப் பட்டிருக்கிறேன்.  

திருச்சியில் பத்மாவதி என்ற தியேட்டரில் 'நாடோடி மன்னன்' என்ற எம்.ஜி.ஆர் படத்திற்கு நின்று தவித்திருக்கிறேன்.  அதேபோல் சென்னை பிரபாவதி தியேட்டரில் 'இரு மலர்கள்' என்ற சிவாஜி படத்திற்கு தீபாவளி அன்று பல மணி நேரங்கள் நின்று டிக்கட் வாங்கிக்கொண்டு சினிமா பார்த்திருக்கிறேன்.  கிருஷ்ணவேணி தியேட்டரில் நான் வரிசையில் நின்றிருக்கும்போது, திடீரென்று கூட்டம் அலைமோதும்.  பின் நின்று கொண்டிருக்கும் எங்கள் தலைகள் மீது கால் வைக்காத குறையாக சிலர் முன்னால் போய்க் கொண்டிருப்பார்கள்.  அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

ஒரு காலகட்டத்தில் எனக்குக் கூட்டமே பிடிக்காமல் போய் விட்டது.  எங்கு கூட்டத்தைக் கண்டாலும் ஓடி விட வேண்டுமென்று தோன்றும்.  ஆனால் கூட்டம் என்னை விட்டப்பாடில்லை.  இப்போதெல்லாம் நான் சினிமா தியேட்டரில் போய்ப் பார்ப்பது என்பது அரிதான ஒன்றாகி விட்டது.  அப்படியே சினிமாவைப் போய்ப் பார்த்தாலும் முன்னதாகவே வீட்டிலேயே நெட் மூலம் டிக்கட்டை முன் பதிவு செய்துகொண்டுதான் போக முடிகிறது.  

அமெரிக்காவில் ப்ளோரிடாவிலுள்ள ஒரு ஆங்கிலப் படம் பார்க்கச் சென்றேன்.  யாருமே இல்லை.  என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் தியேட்டருக்குப் போனோம்.  எனக்கே சந்தேகமாகிவிட்டது.  எங்கள் நாலைந்துபேர்களுக்காக அந்தப் பெரிய தியேட்டரில் படத்தைப் போடுவார்களா என்று.  எங்களுக்காக அந்தத் தியேட்டரில் படம் ஓடியது.

சமீபத்தில் நான் அவதிப்பட்ட இரண்டு இடங்களைப் பற்றி சொல்லவேண்டும்.  சென்னை பாஸ்போர்ட் அலுவலகம்.  சாஸ்திரி பவனில் கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது.  நானும் மனைவியும் எங்கே நிற்பது என்று தெரியாமல் நின்றிருந்தோம்.  இதைப் பற்றி விஜாரிக்கலாமென்று நினைத்தால், அந்த இடத்திலும் பயங்கர கூட்டம்.  கிழே நிற்குமிடத்திலிருந்து முதல் மாடிக்குச் சென்றோம்.  ஏன் அங்கு போகவேண்டுமென்று தெரியாமல்தான் அங்கு சென்றோம்.  இப்படி கூட்டத்தில் அவதிப்பட்ட எனக்கு பாஸ்போர்டே வேண்டாமென்று தோன்றியது.  முதல் நாள் ஏமாற்றத்துடன் திரும்பினோம்.  பின் இரண்டாவது நாள்தான் பாஸ்போர்ட் விவகாரம் முடிந்தது.  

இன்னொரு இடம் திருப்பதி.  சமீபத்தில் ஒரு செய்தித்தாளில் நான் படித்தது.  சனி ஞாயிறுகளில் இங்கே கூட்டம் ஒரு லட்சம் பேர்களுக்கு மேல் போய் விடுமாம்.  ஒரு சனிக்கிழமைதான் குடும்பமாக சென்றோம்.  தங்குவதற்கு இடம் கிடைத்துவிட்டது.  ஆனால் தர்ம தரிசனம்.  மாட்டிக்கொண்டோம். 

கூண்டு கூண்டாகக் கட்டிவைத்திருக்கிறார்கள்.  ஒரு கூண்டிலிருந்து இன்னொரு கூண்டிற்கு கூட்டம் நகர்வதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.  8 மணி நேரமாகக் காத்திருந்தோம்.  எனக்குத் தலை சுற்றியது.  திருப்பதி சாமிமேலேயே கோபம் வந்தது.  இனிமேல் இந்தக் கோயிலுக்கே வரக்கூடாது என்றெல்லாம் நினைத்துக்கொண்டேன்.   நான்தான் அப்படி வேண்டிக்கொண்டேன் தவிர, என் வீட்டிலுள்ளவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.   அவ்வளவு நேரம் இருந்தும் பெருமாளைத் தரிசிக்குமிடத்தில் சில நிமிடங்களில் நிற்க விடாமல் துரத்தி விடுவார்கள்.  கூட்டத்திற்குப் பயந்துகொண்டு ஏன் இந்தக் கோயிலுக்குப் போகவேண்டும் என்று எல்லோரிடமும் கேட்பேன்.  பின் நானே இன்னொரு முறை போகும்படி நேரிடும்.

என் நண்பர் ஸ்டெல்லா புரூஸ் அவர் மனைவி இறந்தவுடன் பயங்கர குழப்பத்தில் இருந்தார். அவர் மனைவியின் நகைகளை திருப்பதி உண்டியில் போடவேண்டுமென்பதே அந்தக் குழப்பம்.  எனக்கு அப்பவே அதை ஏன் திருப்பதி உண்டியில் போட விரும்புகிறார் என்று தோன்றும்.  திருப்பதி வெங்கடாஜலபதிக்கு இல்லாத பணமா? ஏன் இவர் இப்படி நினைக்கிறார் என்று தோன்றியது.  அவரிடம் வேண்டாமென்று சொல்லியும் பார்த்தேன்.  நான் சொன்னதை அவர் கேட்கவில்லை.  அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கொடுத்து நகைகளை உண்டியில் போடவும் செய்து விட்டார். எனக்கு வருத்தமான வருத்தம்.  ஏன் என்றால் அதை வைத்துக்கொண்டுதான் அவர் வாழ வேண்டும்.  ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.

இதுமாதிரி கோயிலில் கூட்டம் சேர்வதன் அடிப்படை காரணம் என்ன?  யாருடைய பலவீனம் இது? என்றெல்லாம் எனக்குக் கேட்கத் தோன்றுகிறது.   தி.நகரிலுள்ள நகைக் கடைகள், துணிக்கடைகளில் சேரும் கூட்டத்தைப் பார்த்து எனக்குத் திகைப்பாகவே இருக்கும்.  சமீபத்தில் மழை லேசாகப் பெய்தது.  அலுவலகத்திற்கு பஸ்ஸ÷ல் சென்றேன்.  படாதபாடு பட்டுவிட்டேன்.  வீட்டிற்கு வழக்கம்போல் இரவு 7 மணிக்குக் கிளம்பி வரும்போது இன்னும் அவதிப் பட்டேன்.  பஸ் தி.நகர் மேம்பாலம் வழியாக வரவே தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தது.  மிகமிக மெதுவாக பஸ் வந்துகொண்டிருந்தபோது தி நகர் ரங்கநாதன் தெருவைப் பார்த்தேன்.  தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது.   

இலக்கியக் கூட்டங்களுக்கு கூட்டமே வருவது இல்லை என்பதை நான் வரவேற்கிறúன்.  பல ஆண்டுகள் நான் இலக்கியக் கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன்.  50 பேர்கள் கூட கூட்டத்திற்கு வரமாட்டார்கள்.  பெரும்பாலும் பெண் வாசகிகள் வர மாட்டார்கள்.  கூட்டத்திற்கு வருபவர்கள் 45 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள்.  கூட்டத்தில் கலந்துகொள்வதைவிட கூட்டம் நடக்கும் இடத்தைத் தாண்டி வெளியில்தான் பேசிக்கொண்டிருப்பார்கள்.  என் கூட்டம் ரூ.100 செலவில் முடிந்துவிடும்.  எனக்கும் அதுமாதிரி கூட்டம் நடத்துவது பாந்தமாக இருக்கும். 

ஒருமுறை நடிகர் கமல்ஹாசன் வைத்து ஒரு கூட்டம் நடத்தினேன்.  இதுமாதிரி பிரபலமானவர்களை வைத்து கூட்டம் நடத்தும்போது இரண்டு பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டிவரும்.  ஒன்று கூட்டம் வரவேண்டுமென்ற பிரச்சினை.  இரண்டு கூட்டம் அதிகமாகிவிட்டால் எப்படி சமாளிப்பது என்ற பிரச்சினை.  கூட்டத்தில் கலந்துகொண்ட கமல்ஹாசன், கூட்டம் யார் நடத்துகிறார்கள் என்று ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. எனக்கோ எப்படியாவது கூட்டம் முடிந்தால்போதும் என்ற திண்டாட்டம். 

மேற்கு மாம்பலத்தில் ஆர்யாகவுடர் தெரு ஒன்றிருக்கும்.  அந்தத் தெரு வழியாக பல வாகனங்கள் வந்தவண்ணம் இருக்கும்.  இப்போதெல்லாம் அந்தத் தெரு வழியாக வந்தாலே நடுக்கமாக இருக்கிறது.  கூட்டம் என்றால் அப்படி ஒரு கூட்டம்.  சரி அதைத் தவிர்த்து விட்டு கோவிந்தன் சாலை (ஸ்ரீனிவாஸô தியேட்டர் பக்கம்) வந்தாலோ அதுவும் பயங்கர கூட்டமாக இருக்கிறது.  

மயிலாடுதுறையில் இருக்கும்போது, அங்கிருந்து பந்தநல்லூருக்கு டூ வீலரில் செல்லும்போது யாராவது கண்ணில் தென்படுகிறார்களாவென்று வண்டியை ஓட்டிக் கொண்டு போவேன்.  பாதை ஓரத்தில் இருக்கும் பனைமரங்கள் இரவில் பேய்கள் மாதிரி சிரிக்கும். பயத்தில் வண்டி இன்னும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும்.

திரும்பவும் பழையபடியே வருகிறேன் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டுதான் போகும்.  கூட்டத்துடன் இருந்து, கூட்டத்தில் கலந்துகொண்டு சமாளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.  கூட்டம் வாழ்க.

(செப்டம்பர் 2012 அம்ருதா இதழில் பிரசுரமாகி உள்ளது.)

 

9.9.12

விழிப்பறவை


சன்னலை திறந்து
உன் பார்வை
இரையெடுக்க இறங்குகிற
பறவை போல்
என்னுள்இறங்குகிறது.
பதுங்கி ஓடாது
தன்னை ஒப்புக்கொடுக்கும்
இரையை
கொத்தித்தின்னாது
கீறிப்பறக்கிறது
உன் விழிப்பறவை.


ரவிஉதயன்

6.9.12

புகழ்
இப்படிச் சொல்கிறேனேயென்று
என்மீது வருத்தப்படாதீர்கள்.
வேறெப்படிச் சொல்வதென்று
எனக்குத் தெரியாதபோது.
நகரத்தில் பாருங்கள் நாளுமொரு
தனிவீட்டை இடிக்கிறார்கள்
குடியிருப்புகள் கட்டுகிறார்கள்
அதுபோல்தானிதுவும்.
தாத்தா கட்டினாரென்பதால்
வௌவால்கள் நிறைந்த வீட்டில்
வசிக்கமுடியுமா, சொல்லுங்கள்.
இடித்துப் புதிதாய் கட்டுவதுபோல்த்தானிதுவும்.
பெருமையேதுமில்லாத பேய்வீடிது
நள்ளிரவுக் கள்வர்கள் ராவணத்துறவிகள்
கபாலிகர்களின் விடுதியான வீடிது
நகரின் நடுவில் நிற்கிறது பெருங்கேடிது
இதற்குப் பதிலாய் புதிதாய்
அனைவரும் பயன்பெறுவதாய்
சுயமாய் நாமொன்று கட்டலாமென்கிறேன்
உங்களுக்குச் சம்மதமானால்
என்க்குக் கைகொடுங்கள் இந்த
பேய்வீட்டை இடியுங்கள் தரைமட்டமாக்குங்கள்.
உங்கள் புகழை ஒரு கவிதையாயெழுத
எனக்கொரு வாய்ப்புக் கொடுங்கள்.
லாவண்யா
கிளி
எரிமலை மனது
ஏரியாகிக் குளிர்ந்திருந்த்து
சுடுசொல் உதடு
சுமுகமாகப் பேசக்கற்றது
மயிரைக்கட்டி மலையைப்
பெயர்க்கும் சூதாடி மாயமானான்
அமைதி புதிதாயிருந்த்து
ஆர்ம்ஸ்ட்ராங்கின் நிலாவைப்போல
நிம்மதி ரிஷ்யச்ருங்கர் முதலில்
கண்ட பெண்ணாயறிமுகமானது
எப்படியிதெல்லாம் நிகழ்ந்த்தென்றால்

வேப்பம்பழம் தின்று சலித்து
நமக்குத் தெரியாத ஏதோவொன்று
நம்மைமீறி நிகழ்(த்து)வதுணர்ந்து
கிளியாய் உருமாறியதிலிருந்து
லாவண்யா

3.9.12

வயதான பெண்மணி


அழகியசிங்கர்


அந்த வயதான பெண்மணி
இறந்து போய்விடுவாள் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள்


நான் அப்படி இருக்க முடியாது என்று யோசித்தேன்

எல்லாவித சக்திகளையும் இழந்து
படுத்துக் கிடக்கிறாள்..
சிலநாட்கள் கண்களை பாதி மூடி
நினைவுத் தப்பிப் போய்..

உடலுக்குத் தேவையான சோடியம் குறைந்து விட்டதாம்..
பழையபடி ஆகலாம்....சொல்லமுடியாது என்கிறார்கள்
மருத்துவர்கள்...

தீவிர சிகிச்சைப் பிரிவில்
தொடர்ந்து படுத்துக் கிடக்கிறாள்
வயதான பெண்மணி...

மனம் கிடந்து அடித்துக்கொள்கிறது
அப்படி இருக்கக் கூடாது

திரும்பவும் அந்த வயதான பெண்மணி
எழுந்து வரவேண்டும்

03.09.2012