Skip to main content

எதையாவது சொல்லட்டுமா....76

அழகியசிங்கர் 

பொதுவாக எனக்குக் கூட்டத்தைக் கண்டால் எதுவென்று சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.  அதேபோல் மணிக்கணக்கில் வரிசையில் நிற்பது.  நெரிசலில் மாட்டிக்கொள்வது.  சின்ன வயதில் நான் பல மணி நேரங்கள் சினிமா பார்ப்பதற்கு வரிசையில் நின்றிருக்கிறேன்.  ரொம்ப குறைவான பணத்தில் நான் கூட்ட நெரிசலில் சினிமா பார்ப்பதற்காக நின்று அவதிப் பட்டிருக்கிறேன்.  

திருச்சியில் பத்மாவதி என்ற தியேட்டரில் 'நாடோடி மன்னன்' என்ற எம்.ஜி.ஆர் படத்திற்கு நின்று தவித்திருக்கிறேன்.  அதேபோல் சென்னை பிரபாவதி தியேட்டரில் 'இரு மலர்கள்' என்ற சிவாஜி படத்திற்கு தீபாவளி அன்று பல மணி நேரங்கள் நின்று டிக்கட் வாங்கிக்கொண்டு சினிமா பார்த்திருக்கிறேன்.  கிருஷ்ணவேணி தியேட்டரில் நான் வரிசையில் நின்றிருக்கும்போது, திடீரென்று கூட்டம் அலைமோதும்.  பின் நின்று கொண்டிருக்கும் எங்கள் தலைகள் மீது கால் வைக்காத குறையாக சிலர் முன்னால் போய்க் கொண்டிருப்பார்கள்.  அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

ஒரு காலகட்டத்தில் எனக்குக் கூட்டமே பிடிக்காமல் போய் விட்டது.  எங்கு கூட்டத்தைக் கண்டாலும் ஓடி விட வேண்டுமென்று தோன்றும்.  ஆனால் கூட்டம் என்னை விட்டப்பாடில்லை.  இப்போதெல்லாம் நான் சினிமா தியேட்டரில் போய்ப் பார்ப்பது என்பது அரிதான ஒன்றாகி விட்டது.  அப்படியே சினிமாவைப் போய்ப் பார்த்தாலும் முன்னதாகவே வீட்டிலேயே நெட் மூலம் டிக்கட்டை முன் பதிவு செய்துகொண்டுதான் போக முடிகிறது.  

அமெரிக்காவில் ப்ளோரிடாவிலுள்ள ஒரு ஆங்கிலப் படம் பார்க்கச் சென்றேன்.  யாருமே இல்லை.  என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் தியேட்டருக்குப் போனோம்.  எனக்கே சந்தேகமாகிவிட்டது.  எங்கள் நாலைந்துபேர்களுக்காக அந்தப் பெரிய தியேட்டரில் படத்தைப் போடுவார்களா என்று.  எங்களுக்காக அந்தத் தியேட்டரில் படம் ஓடியது.

சமீபத்தில் நான் அவதிப்பட்ட இரண்டு இடங்களைப் பற்றி சொல்லவேண்டும்.  சென்னை பாஸ்போர்ட் அலுவலகம்.  சாஸ்திரி பவனில் கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது.  நானும் மனைவியும் எங்கே நிற்பது என்று தெரியாமல் நின்றிருந்தோம்.  இதைப் பற்றி விஜாரிக்கலாமென்று நினைத்தால், அந்த இடத்திலும் பயங்கர கூட்டம்.  கிழே நிற்குமிடத்திலிருந்து முதல் மாடிக்குச் சென்றோம்.  ஏன் அங்கு போகவேண்டுமென்று தெரியாமல்தான் அங்கு சென்றோம்.  இப்படி கூட்டத்தில் அவதிப்பட்ட எனக்கு பாஸ்போர்டே வேண்டாமென்று தோன்றியது.  முதல் நாள் ஏமாற்றத்துடன் திரும்பினோம்.  பின் இரண்டாவது நாள்தான் பாஸ்போர்ட் விவகாரம் முடிந்தது.  

இன்னொரு இடம் திருப்பதி.  சமீபத்தில் ஒரு செய்தித்தாளில் நான் படித்தது.  சனி ஞாயிறுகளில் இங்கே கூட்டம் ஒரு லட்சம் பேர்களுக்கு மேல் போய் விடுமாம்.  ஒரு சனிக்கிழமைதான் குடும்பமாக சென்றோம்.  தங்குவதற்கு இடம் கிடைத்துவிட்டது.  ஆனால் தர்ம தரிசனம்.  மாட்டிக்கொண்டோம். 

கூண்டு கூண்டாகக் கட்டிவைத்திருக்கிறார்கள்.  ஒரு கூண்டிலிருந்து இன்னொரு கூண்டிற்கு கூட்டம் நகர்வதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.  8 மணி நேரமாகக் காத்திருந்தோம்.  எனக்குத் தலை சுற்றியது.  திருப்பதி சாமிமேலேயே கோபம் வந்தது.  இனிமேல் இந்தக் கோயிலுக்கே வரக்கூடாது என்றெல்லாம் நினைத்துக்கொண்டேன்.   நான்தான் அப்படி வேண்டிக்கொண்டேன் தவிர, என் வீட்டிலுள்ளவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.   அவ்வளவு நேரம் இருந்தும் பெருமாளைத் தரிசிக்குமிடத்தில் சில நிமிடங்களில் நிற்க விடாமல் துரத்தி விடுவார்கள்.  கூட்டத்திற்குப் பயந்துகொண்டு ஏன் இந்தக் கோயிலுக்குப் போகவேண்டும் என்று எல்லோரிடமும் கேட்பேன்.  பின் நானே இன்னொரு முறை போகும்படி நேரிடும்.

என் நண்பர் ஸ்டெல்லா புரூஸ் அவர் மனைவி இறந்தவுடன் பயங்கர குழப்பத்தில் இருந்தார். அவர் மனைவியின் நகைகளை திருப்பதி உண்டியில் போடவேண்டுமென்பதே அந்தக் குழப்பம்.  எனக்கு அப்பவே அதை ஏன் திருப்பதி உண்டியில் போட விரும்புகிறார் என்று தோன்றும்.  திருப்பதி வெங்கடாஜலபதிக்கு இல்லாத பணமா? ஏன் இவர் இப்படி நினைக்கிறார் என்று தோன்றியது.  அவரிடம் வேண்டாமென்று சொல்லியும் பார்த்தேன்.  நான் சொன்னதை அவர் கேட்கவில்லை.  அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கொடுத்து நகைகளை உண்டியில் போடவும் செய்து விட்டார். எனக்கு வருத்தமான வருத்தம்.  ஏன் என்றால் அதை வைத்துக்கொண்டுதான் அவர் வாழ வேண்டும்.  ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.

இதுமாதிரி கோயிலில் கூட்டம் சேர்வதன் அடிப்படை காரணம் என்ன?  யாருடைய பலவீனம் இது? என்றெல்லாம் எனக்குக் கேட்கத் தோன்றுகிறது.   தி.நகரிலுள்ள நகைக் கடைகள், துணிக்கடைகளில் சேரும் கூட்டத்தைப் பார்த்து எனக்குத் திகைப்பாகவே இருக்கும்.  சமீபத்தில் மழை லேசாகப் பெய்தது.  அலுவலகத்திற்கு பஸ்ஸ÷ல் சென்றேன்.  படாதபாடு பட்டுவிட்டேன்.  வீட்டிற்கு வழக்கம்போல் இரவு 7 மணிக்குக் கிளம்பி வரும்போது இன்னும் அவதிப் பட்டேன்.  பஸ் தி.நகர் மேம்பாலம் வழியாக வரவே தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தது.  மிகமிக மெதுவாக பஸ் வந்துகொண்டிருந்தபோது தி நகர் ரங்கநாதன் தெருவைப் பார்த்தேன்.  தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது.   

இலக்கியக் கூட்டங்களுக்கு கூட்டமே வருவது இல்லை என்பதை நான் வரவேற்கிறúன்.  பல ஆண்டுகள் நான் இலக்கியக் கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன்.  50 பேர்கள் கூட கூட்டத்திற்கு வரமாட்டார்கள்.  பெரும்பாலும் பெண் வாசகிகள் வர மாட்டார்கள்.  கூட்டத்திற்கு வருபவர்கள் 45 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள்.  கூட்டத்தில் கலந்துகொள்வதைவிட கூட்டம் நடக்கும் இடத்தைத் தாண்டி வெளியில்தான் பேசிக்கொண்டிருப்பார்கள்.  என் கூட்டம் ரூ.100 செலவில் முடிந்துவிடும்.  எனக்கும் அதுமாதிரி கூட்டம் நடத்துவது பாந்தமாக இருக்கும். 

ஒருமுறை நடிகர் கமல்ஹாசன் வைத்து ஒரு கூட்டம் நடத்தினேன்.  இதுமாதிரி பிரபலமானவர்களை வைத்து கூட்டம் நடத்தும்போது இரண்டு பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டிவரும்.  ஒன்று கூட்டம் வரவேண்டுமென்ற பிரச்சினை.  இரண்டு கூட்டம் அதிகமாகிவிட்டால் எப்படி சமாளிப்பது என்ற பிரச்சினை.  கூட்டத்தில் கலந்துகொண்ட கமல்ஹாசன், கூட்டம் யார் நடத்துகிறார்கள் என்று ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. எனக்கோ எப்படியாவது கூட்டம் முடிந்தால்போதும் என்ற திண்டாட்டம். 

மேற்கு மாம்பலத்தில் ஆர்யாகவுடர் தெரு ஒன்றிருக்கும்.  அந்தத் தெரு வழியாக பல வாகனங்கள் வந்தவண்ணம் இருக்கும்.  இப்போதெல்லாம் அந்தத் தெரு வழியாக வந்தாலே நடுக்கமாக இருக்கிறது.  கூட்டம் என்றால் அப்படி ஒரு கூட்டம்.  சரி அதைத் தவிர்த்து விட்டு கோவிந்தன் சாலை (ஸ்ரீனிவாஸô தியேட்டர் பக்கம்) வந்தாலோ அதுவும் பயங்கர கூட்டமாக இருக்கிறது.  

மயிலாடுதுறையில் இருக்கும்போது, அங்கிருந்து பந்தநல்லூருக்கு டூ வீலரில் செல்லும்போது யாராவது கண்ணில் தென்படுகிறார்களாவென்று வண்டியை ஓட்டிக் கொண்டு போவேன்.  பாதை ஓரத்தில் இருக்கும் பனைமரங்கள் இரவில் பேய்கள் மாதிரி சிரிக்கும். பயத்தில் வண்டி இன்னும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும்.

திரும்பவும் பழையபடியே வருகிறேன் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டுதான் போகும்.  கூட்டத்துடன் இருந்து, கூட்டத்தில் கலந்துகொண்டு சமாளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.  கூட்டம் வாழ்க.

(செப்டம்பர் 2012 அம்ருதா இதழில் பிரசுரமாகி உள்ளது.)

 

Comments