அசோகமித்திரனின் கூட்டம்
அழகியசிங்கர்
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மிக மோசமான மாதம். 3ஆம் தேதி, என் திருமண நாள். ஆனால் அதை மகிழ்ச்சியாக நினைத்துக்கொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் முடிந்துவிட்டன திருமணம் ஆகி. ஒவ்வொரு ஆண்டும் என் மாமியார் சுப்புலட்சுமி அவர்கள் வாழ்த்தாமல் இருக்கமாட்டார். இந்த முறை அவர் நினைவு தப்பிப்போய் மருத்துவமனையில் மோசமான நிலையில் கிடந்தார். 5ஆம்தேதி அவர் இறந்து விட்டார். எதிர்பாராதவிதமாய் சோடியம் குறைந்துவிட்டதால், நினைவு தப்பிப் போய்விட்டது. சில தினங்களாக சரியாக நடக்க முடியாமல் கால் நரம்பை எதோ பிடித்து இழுக்க, நாற்காலியைப் பிடித்துக்கொண்டு தள்ளி தள்ளி நகர்ந்தார். ஒவ்வொரு முறை குளிக்கும்போதும், பாத்ரூம் போகும்போதும் தடுமாறினார். ஆனால் கீழே விழாமல் ஜாக்கிரதையாக இருந்தார். தினமும் அவர் உடல்நிலை மோசமாகிக் கொண்டே வந்தது. ஒருநாள் அவர் சாப்பிட்டதை எல்லாம் வாந்தி எடுத்தார். ஒருநாள் இரவு நினைவுத் தப்பிப்போய் திவான் படுக்கையிலிருந்து கீழே விழுந்து முகம் நன்றாக வீங்கிவிட்டது. ரத்தம் கொட்டோ கொட்டென்று கொட்டியது. ஆனால் அவர் நினைவுத் தப்பிப் போய்விட்டதால், மருத்துவமனையில் சேர்க்கும்படி ஆகிவிட்டது. மாமியாருக்கு 89 வயது.
வீட்டில் ஒரே பரபரப்பு. கடைசியாக என் வீட்டில் மரணம் நிகழ்ந்தது. என் பாட்டியின் மரணம். 1990ம் ஆண்டு. அதன் பின் 22 ஆண்டுகள் கழித்து மாமியாரின் மரணம். மரணத்தினால் ஏற்பட்ட பரபரப்பு எளிதில் அடங்கவில்லை. ஒரு புதன்கிழமை மாமியார் இறந்தார். இன்னொரு புதன்கிழமை என் பெரியம்மா இறந்தார். நடுவில் ஒரு சனிக்கிழமை என் மாமியாரின் இன்னொரு பெண்ணின் மாமியார் இறந்துவிட்டார். படுத்தப்படுக்கையாக வெகு மாதங்கள் இழுத்துக்கொண்டு இருந்தவர். ஆனால் பெரியம்மாதான் நன்றாகச் சாப்பிட்டு தட்டை அலம்ப எழுந்தபோது தடுமாறி சாய்ந்தார். யாரிடமும் எதையும் சொல்லாத மரணம்.
இதுமாதிரியான தருணத்தில்தான் நான் அசோகமித்திரனின் 82வது வயது கூட்டத்தைத் தொடங்கியிருந்தேன். ஒவ்வொருவரையும் பேசும்படி கூப்பிட்டுக்கொண்டிருந்தேன். எல்லாமே ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருந்தது. அசோகமித்திரனிடமே என்னால் பேசமுடியவில்லை. என் நிலையில் ஒருவிதப் பதட்டம் கூடிக்கொண்டே இருந்தது. அலுவலகமே போகவில்லை. தூக்கம் சரியாக வராமல் அவதிப்பட்டேன். பேசுபவர்களுக்கெல்லாம் அழைப்பிதழை அனுப்பிவிட்டு, வந்து சேர்ந்ததா என்றுகூட கேட்கவில்லை. ஒவ்வொருவரிடமும் ஒருமுறைதான் பேச முடிந்தது. நான் கடைசியாக கூட்டம் நடத்தியது 2 ஆண்டுகளுக்கு முன்னால்..எல் எல் ஏ கட்டிடத்தின் சின்ன அறையில் நடந்த அக்கூட்டத்தில் எண்ணி 10 பேர்கள் வருவார்கள். அதன்பின் கூட்டமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாமென்று சீர்காழிக்கு ஓடிவிட்டேன். கூட்டம் நடத்தும்போது தேவையில்லாமல் ஒருவிதப் பரபரப்பு கூடிக்கொண்டே போகும். ஒருமுறை சுந்தரராமசாமியின் கூட்டம் நடக்கும்போது மழை பெய்து கொண்டிருந்தது. ஒரு பள்ளத்தில் என் டூவீலருடன் விழுந்துவிட்டேன். காரில் வந்து கொண்டிருந்த சுந்தரராமசாமி என்னைப் பார்த்துவிட்படு சிபிச் செல்வனிடம் சொல்ல, டூ வீலரை பள்ளத்திலிருந்து எடுக்க சிபிச்செல்வன் உதவினார். அதேபோல் அசோகமித்திரன் கூட்டம் நடத்தும்போது அவருடைய உரையாடல்கள் புத்தகம் எடுக்க பரண் மீது கண்ணைச் சுழற்றிக் கொண்டிருந்தேன். அமியின் புத்தகம் தென்படவில்லை. ஆனால் காசியபனின் அசடு புத்தகம் மட்டும் கண்ணில் பட்டது. கீழே இறங்கும்போது உட்காருமிடத்தில் நன்றாக அடிப்பட்டுவிட்டது. சரியாக உட்கார முடியவில்லை.
பாரதியார் இல்லத்தில் நான் எதிர்பாராதவிதமாக அசோகமித்திரனின் பிறந்தநாள் கூட்டத்திற்கு 150 பேர்களுக்கு மேல் கூடி இருந்தார்கள். இதற்குமுன் இதுமாதிரி கூட்டத்தை நான் கூட்டியதே இல்லை. எல்லோரும் பேசி முடிக்கும்வரை கூட்டம் கலையாமல் இருந்தது. அதுவும் ஒரு ஆச்சரியம். மேடையில் நான் உட்காரமுடியாமல் உட்கார்ந்து கொண்டிருந்தேன். யாரும் ஏன் உங்கள் முகம் இறுக்கமாக இருக்கிறது என்று கேட்கவில்லை.
Comments