தானும் அதுவாகப் பாவித்து - சிறுகதைகள் - எஸ்.ஷங்கரநாராயணன் - சொல்லாங்கடி - சென்னை 19- முதல் பதிப்பு 2012- பக்கம் 207 விலை ரூ.120
கேட்கிறபோது பத்திரிகைகளுக்கு எழுதினாலும் வெளியிடும் உத்வேகத்துடன் நான் கதைகளை உருவாக்குவதோ, பிரசுர அவசரம் காட்டுவதோ இல்லை. வாய்ப்புகள் வரும்போது அவை அச்சுவாகம் ஏறும். கதைப் புனைவு ஒரு மனநிலை. தியானம் போன்றதொரு மனநிலை அது. அகக்கண் திறக்கும் கணங்கள். உள்ளே தெரிகிற, விரிகிற காட்சிகளில் திளைக்கிறதில் உள்ள தினவு தனி அனுபவம். அதை ருசி கண்டபின் அடிக்கடி பசியும் கண்டாகிறது. உறங்கி அடியில் சில சமயம் அது பதுங்கினாலும், குபீரென்று கதவு திறந்துகொண்டு வீட்டுள் நுழையும் பள்ளிக் குழந்தைகள் போல...அப்பாவை அவை முகம் மலரச் செய்துவிடும்.
இப்படி எழுதும் ஆசிரியர் பின்வரும் வரிகளில் தன் உடல் உபாதைகளை வர்ணிக்கிறார். தைராய்டு பிரச்னை என்னை தினசரி ஒழுங்குகளில் சிரமப்படுத்துகிறது. கண்ணின் வீரியமும் அத்தனைக்குப் பாராட்டும் வசத்தில் இல்லைதான். உடல்சோர்கை வாழ்க்கைச் சார்ந்த அலுப்பாக நினைக்க வேண்டாம். நினைக்கவும் கூடாது.
வாழ்வின் சாறை, உறவுகளின் அழகை ஆளுமையை மிகுந்த உற்சாகத்துடன் புனைவு மனநிலையில் நான் ஆராதிக்கிறேன். தனிமையும், உடலர் அலுப்புமான கணங்களை நான் இவைகளில் கடந்திருக்கிறேன். வாழ்வில் யாருக்கும் தனிமை மாத்திரமே சாத்தியம். சிலர் சீக்கிரமேயோ சிலர் சற்று தாமதமாகவோ இதைப் புரிந்து கொள்வதாக ஆகிவிடுகிறது. இலக்கிய சிருஷ்டிகளின் தாத்பர்யத்தை இப்படி அனுபவித்துக் கொள்ள எஸ்.ஷங்கரநாராயணன் ஆண்டன் செகவ்வின் குதிரை வண்டிக்காரன் கதையை நமக்கு நினைவூட்டுகிறார். அவன் குதிரையுடன் பேசுவான். எந்தச் சிறுகதையுமே அடிப்படையில் தனிமனிதனின் தமனிமையைப் பேசுவதுதான்
.
இப்போது நாம் கதைகளுக்குள் கவனம் செலுத்துவோம்.
முதல் கதை கண்ணகி.
ஸ்டூல்களும் நாற்காலிகளும் என்பதே இந்தக் கதைக்குப் பொருத்தமான தலைப்பாக இருக்கலாமோ (பக்கம் 11). கதை சொல்லி வாசகனைப் பார்த்துக் கேட்கும் கேள்வி இது. கதையில் நம் கவனத்தை கலைக்கிறது இந்த வரிகள். பிறகு எபௌ டர்ன் என்ற பிரயோகம் பக்கம் 13லும். 14லும் வருகிறது. இது ஆங்கிலக் கதையா? தமிழ் கதையா? நமக்கு விளங்கவில்லை.
=உறவுப்பாலம்+ என்ற கதை. தனக்குள் நிர்ப்பந்தித்துக் கொண்ட நியதிகள் என்று பக்கம் 17ல் துலங்கும் பத்தி சுயமாக நீக்கியிருக்க வேண்டும். திருப்பதி வரிசையாய் ஜரகண்டி, ஜரகண்டி என காலம் என்னதான் எல்லாரையும் நெட்டித் தள்ளி நகர்த்திப் போனாலும் (பக்கம் 18) திரும்பவும் பக்கம் 28ல் திருப்பதி வரிசையாய் ஜரகண்டி, ஜரகண்டி என காலம் என்னதான் எல்லாரையும் நெட்டித் தள்ளி நகர்த்திப் போனாலும் என்று வருகிறது. இது ஆசிரியர் தெரிந்து கையாண்ட உத்தியா? அல்லது அவரை அறியாமல் மறு ஒலிபரப்பு பகுதியா? விளங்கவில்லை.
ஒரு பாட்டிலின் தொடமுடியாத உட் பக்கமாய் அவள் இருந்தாள் (பக்கம் 24) அருமையான சொல்லாட்சி.
'ஊர் மாப்பிள்ளை' என்ற கதை என்னை வெகுவாகக் கவர்ந்தது. இப்படி சிற்றூர்களில் திரியும் பைத்தியக்காரர்கள், பிச்சைக்காரர்கள் என்ற விளிம்பு மனிதர்களை ஆசிரியர் நன்கு படம் பிடித்துள்ளார். காதோடுதான் நான் பேசுவேன் பாட்டையே சத்தமாய் வைத்தார்கள் (பக்கம் 38) ரசிக்கத் தக்க வரிகள்.
'பெண்ணிடம் ரகசியம்' கதையில் இரா முருகனும், வண்ணதாசனும், நாஞ்சில் நாடனும் பிடிக்கும் (பக்கம் 67) என்ற வரிகள் ஆசிரியரின் ரசனையை உயர்த்திக் காட்டுகின்றன. ஆங்கில எழுத்தாளர்கள் ஷெல்டன், லுட்லும், ஆர்ச்சர் (பக்கம் 71) இந்தக் கதையில் வருகிறார்கள்.
'இடமாற்றம்' கதையில் சின்னஞ்சிறுசுகள் கல்பதிகா, பிருந்தா மாணிக்கவாசகம், மாளவிகா, அபிஷேக், கீபோர்ட் சத்யநாராயணன், கணேஷ் கார்த்திக் என்று பொலிந்து வரும் இளம் கலைஞர்கள் கச்சேரி கேட்கலாம். (பக்ம் 77). தொலைக்காட்சியில் பெண்ணே பெண்ணை பழிவாங்கும் ஏதாவது தொடர் ஓடிக்கொண்டிருக்கும். (பக்கம் 77) சரித்திரப் படங்களில் இப்படி சாக்கு மூட்டையில் போட்ட ஆளைக் கடத்திக்கொண்டு வந்து விடுவார்கள்....திறந்து பார்த்தால் 'அத்தான்.' 'அப்படிச் சொல் பெண்ணே. இந்தச் சத்தான வார்த்தையிலே செத்தான் கருணாகரன்.' (Over Writing)
மிகைக் கதையில் (பக்ம் 93)ல் வரும் விளம்பரங்களிலும், சினமாவிலும் அந்தக் கட்டத்தில் உடனே இசைக் கூச்சல் கேட்கும். அல்லது யாராவது ஹம்மிங் தருவார்கள். அல்லது சுற்றிலும் பன்னிக் குட்டிகள் போல வதவதவென்று தேவதைச் சனியன்கள் சூழ்ந்துகொண்டு ஆடிப்பாடி கும்மாளமிடுவார்கள். இயக்குநர் பாரதிராஜா இந்த வரிகளைப் படிக்க நேர்ந்தால் வருத்தப்படுவார்.
பக்கம் 94, 95, 96 காதலர்கள் இப்படி எல்லாம் பேசிக்கொள்வாரகளா? யதார்த்த உலகம் உறைக்கிறது. ஆனாலும் கனவுலகின் மாயாஜாலம் காதலர்கள் கண்களை மறைக்கும் அல்லவா? ùôல் விளையாட்டு விளையாடுகிறார் ஆசிரியர். நமக்கு ரசிக்கவே செய்கிறது.
மூக்குத்திப்புல் அருமையான கதை. லா.சா.ராவை நினைவூட்டுகிறது. ஜப்பானில் ஹைகூ வரிகளை அற்புதமாய் கையாள்கிறார் ஆசிரியர்.
ஆஸ்பத்திரி வாசல் பிள்ளையாருக்கு நேர்த்தி வேண்டுதல்கள் ஆரம்பித்திருக்கும். சந்தனக்காப்பு கொழுக்கட்டை என் உத்திரவாதங்கள். திருமாங்கல்யப்பிச்சை. இந்தத் தாலி சென்டிமென்ட் நம்மூர்ப் பெண்களை என்னமாய்ப் படுத்துகிறது (பக்கம் 126). கதையின் மொத்த ற்ர்ய்ங் உடன் ஒத்துப் போகாத வரிகள்.
இந்த ஜப்பானியக் குள்ளப் பயல்கள் நவீன யுகத்தோடு கட்டிப் புரண்டு முட்டு மோதுகிறார்கள். போட்டி என்று அமெரிக்காவரை வியாபாரத்தில் கை கலக்கிறார்கள் (பக்ம் 130). இந்த வரிகளும் கதையில் மொத்த ற்ர்ய்ங் உடன் ஒட்டவில்லை.
ஒளிந்திருப்பவனின் நிழல் (பக்கம் 137) பிரதான கதாபாத்திரம் பெயர் மாதங்கி. அடுத்தக் கதை உறைவு. (பக்கம் 146) பிரதான கதாபாத்திரம் மாதங்கி. இயக்குநர் விசு படங்களில் ஒரு பெண் கதாபாத்திரம் உமா என்ற பெயரில் வரும். இது அவருடைய இறந்து போன முதல் மனைவியின் பெயர் என்பார்கள். அதுபோல் ஆசிரியருக்கும் மாதங்கி என்ற பெயரில் என்ன ஈர்ப்போ?
அவரது கடைசி சம்பளத்தை விட அவனது முதல் சம்பளம் அதிகம் (பக்கம் 138). கம்ப்யூட்டர் துறையில் கலக்கும் ஆண்களும் பெண்களும் தங்கள் தகப்பனாரை விட அதிகம் சம்பாதிப்பதை சுட்டுக்காட்டும் வரிகள்.
இளமைப் பருவத்தின் வாழ்க்கை முட்டி மோதி நுரைத்துப் பெருகுவதைப் பார்க்கிறதே பெரியவர்களுக்குத் தெம்புதான் (பக்கம் 139). நயமான வரிகள்.
வேதவிலாஸ் விளையாட கிளையாட என்ற வரிகள் ஆசிரியரின் Offhand approach ஐ சுட்டிக்காட்டுகின்றன.
நாளடைவில் நகரத்துக் கன்னுக்குட்டிகளே ம்மி என்று ஆரம்பித்துவிடும் போலிருக்கிறது (பக்கம் 140). ஆசிரியருக்குக் கிண்டலும் வருகிறது.
கறந்த பால் போல் என்ற பிரயோகம் பேரனைப் பற்றி இரண்டு இடங்களில் வருகிறது. (பக்கம் 140 142). இதை ஆசிரியர் தவிர்த்திருக்கலாம். இதே பிரயோகம் 144ல் மூன்றாவது முறையாக. too much.
புள்ளியில்விரியும் வானம் (பக்கம் 165) கதையில் சில வரிகள். இன்றைய திரைப்படங்கள் அவனுக்குப் பிடிக்கவில்லை. இளைஞர்கள் வெறும் காதல் கேளிக்கை போன்ற அல்பமான உணர்வுக் கிளர்ச்சிகளுக்கு அவை இட்டுச் செல்கின்றன. இவை தேவை அல்ல என்பது விஷயம். இவை மாத்திரமே உலகம் என்கிற பிரம்மாண்ட போலித் தோற்றத்தை இளைஞர்களிடையே விதைப்பது நல்லது அல்ல (பக்கம் 169). இயக்குநர் சேரன், சசிகுமார் போன்றவர்களை வருத்தப்படுத்தகூடிய வரிகள். இப்படி எழுதும் ஆசிரியர் பக்கம் 17ல் பௌர்ணமி இரவில் சிலசமயம் எப் எம் கூட மெல்லிசையான அழகான பாடல்கள் ஒலிபரப்பும். பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா என அற்புதமான மனசை வீணை நரம்பெனச் சுண்டும் பாடல்க்ள ஒலி பரப்புவார்கள். இந்தக் கவிஞர்கள் வாழச் சொல்லி தருகிறார்கள் எனதிகட்டிய கணம் அது என்றும் எழுதுகிறார். வாலியும் வைரமுத்துவும், பா விஜய்யும் பாலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம்.
ஆழ்வார்களும், நாயன்மார்களும் (பக்கம் 178), அபத்தமான தலைப்பு. அவனுக்கு கோமணத்துக்குள்ள கூட ஒண்ணும் பெரிசா இல்லை. வெள்ளரிப்பிஞ்சு. வயித்தெரிச்சல் போன்ற விரசமான வரிகளைக் கொண்ட இந்தக் கதைக்கு நானாயிருந்தால் 13வது ஆர்வார் என்றோ 64வது நாயன்மார் என்றோ கிண்டலான தலைப்பு வைத்திருப்பேன்.
தாய் மடி என்ற கடைசிக் கதையில் ஜனனம் உலகத்தில் ஏதோ அர்த்தத்தைக் கொண்டு வருகிறது. அர்த்தத்தை உணர்த்திக்கொண்டு வருகிறது. மரணமோ அதை அழித்துவிடுகிறது. வாழக்கை என்பதன் அபத்தத்தை மரணம் எடுத்துக்கொண்டு விடுகிறது. அந்த அனர்த்தக் குழப்பதிலேயே பெரும்பாலோரின் வாழ்க்கை முடிந்து விடவும் செய்கிறது என்ற தத்துவ வரிகள் ஆசிரியரின் வாழ்க்கைக் கண்ணோட்டத்தை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.
யாமார்க்கும் குடியல்லேம் என்பார் அப்பர். இந்த லோயரும் அவ்வண்ணமே (பக்கம் 205). Cheap Joke.
Comments