அழகியசிங்கர்
நவீன விருட்சம் என்ற இதழைப் பார்த்தவுடன் இருவர் எனக்குக் கடிதம் எழுதாமல் இருக்கமாட்டார்கள். ஒருவர் வல்லிக்கண்ணன். இன்னொருவர் தி.க.சி. அவர்களுடைய கடிதங்களைப் பார்த்தால்தான் எனக்குத் தெரியும், விருட்சம் எல்லோருக்கும் போய் சேர்ந்திருக்குமென்று.
நவீன விருட்சத்தைப் புரட்டிக்கொண்டு வந்தபோது இக் கடிதம் கண்ணில் பட்டது. உடனே இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். காங்கிரஸ் தலைவர் மூப்பனாருடன் ந பிச்சமூர்த்தி நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட புகைப்படத்துடன்...
வல்லிக்கண்ணன் 29.09.2004
சென்னை
நீங்கள் சென்னையில் இல்லை, உத்தியோக உயர்வுடன் பந்தநல்லூர் வங்கிக் கிளைக்கு மாறுதல் பெற்றிருப்பதையும், மயிலாடுதுறையில் தங்கி தினசரி அங்கே போய் வந்து கொண்டிருப்பதையும் 64வது இதழ் மூலம் தெரிந்து கொண்டேன். உங்கள் அனுபவக் கசப்புகளை கவிதையில் பதிவு செய்திரக்கிறீர்கள். அட்டை உரையாடலில் வேறு அனுபவங்களை ரசமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
புகழ் பெற்ற üமயூரா லாட்ஜ்ý ஊத்தப்பம் பற்றியும் தெரிந்து கொண்டேன். ஒரு ஊத்தப்பம் ஆர்டர் செய்தும் முழுசாகச் சாப்பிட முடியாத அதன் தரம் பற்றியும் அறிந்தேன். üசாப்பிட விளங்காத அளவிற்குý அதன் ருசி, காரம், மணம், குணம் இருக்கும் போலும். ஒருவேளை பெரிசாக, பருமனாக, சப்பென்று இருக்குமோ என்னவோ என்று என் மனம் சந்தேகப்படுகிறது.
வாணாதிராஜபுரம் ஊரின் பசுமையான சாலை, வேலூர் பாதைகள் வயல்கள் சூழ்ந்த, ஆள்கள் நடமாட்டமில்லாத பிரதேசம், இரவுக்காட்சி எல்லாம் என்னுள், üஆகா, அருமையான காட்சிகள்ý என்ற எண்ணத்தை எழுப்பும் விதத்தில் விவரிக்கப் பட்டிருக்கின்றன. இவற்றை எல்லாம் கண்டு களித்து ரசிக்க எனக்குக் கொடுத்து வைத்திருக்கவில்லை என்று என் மனமாகப்பட்டது வருத்தப்பட்டுக் கொள்கிறது. அது ஒரு குட்டிச் சாத்தான்.
üதனிமை சிலசமயங்களில் மோசமான எண்ணங்களையும் உருவாக்கும்,ý என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். சரிதான். தனிமை என் இனிய நண்பன் என்று நான் ஒரு அருமையான கவிதை எழுதியிருக்கிறேன். சரி, எப்படியோ நாள்கள் போகின்றன.
'நவீன விருட்சம்' இதழ் சிறப்பாக இருக்கிறது. மறக்கப்பட்டுவிட்ட கட்டுரை, கதைகளின் மறுபிரசுரம் பாராட்டப்பட வேண்டியதாகும். இப்படி அருமையான விஷயங்கள் காலப் பாழில் மறதிப் புழுதியில் மக்கிப் போயுள்ளன. அவற்றை எல்லாம் திரும்பத் திரும்பப் படிப்பவர்கள் எவருமிலர். பல சமாச்சாரங்களை ஒரு தடவை படிக்கக்கூட வாசகர்கள் கிடைப்பதில்லை. ஆனாலும் எழுத்து உற்பத்தி மிக நிறைய ரொம்ப ஏராளமாகப் பென்னம்பெரும் அளவில் நடந்து கொண்டிருக்கிறது.
Comments