Skip to main content

எனக்குப் பிடித்த தலையங்கம்....

அழகியசிங்கர் 



அக்டோபர் 1988 ஆம் ஆண்டிலிருந்து 28வது இதழுடன் ழ என்ற பத்திரிகை நின்று விட்டது.  1978 ஆம் ஆண்டு மே மாதம் கவிதை மாத ஏடு என்ற பெயரில் ஆத்மாநாம் ஆசிரியர் பொறுப்பில் தொடங்கப்பட்ட இதழ்.  ஒவ்வொரு மாதமும் சரியாக வந்திருந்தால் 120 இதழ்கள் வரை வந்திருக்க வேண்டும்.  தமிழில் இதுமாதிரியான இதழ் தொடர்ந்து வராமல் போனது துரதிருஷ்டம் என்று கூட சொல்லலாம்.

ழ பத்திரிகை தொடர்ச்சியாக வராமல் போன தாமதத்தால் அதையே பார்த்து இன்னும் சில பத்திரிகைகள் உருவாகமல் இல்லை.  பிரம்மராஜனின் மீட்சி, ராஜகோபாலன் அவர்களின் மையம் என்ற பத்திரிகை, என்னுடைய விருட்சம் பத்திரிகை எல்லாம் ழ பத்திரிகையைப் பார்த்துதான் உருவாகி இருக்க வேண்டும். ஸ்வரம் என்ற பத்திரிகைக் கூட ழ மாதிரி இருக்கும்.

ழ பத்திரிகையைப் போல் எளிமையான பததிரிகையை நான் இதுவரை பார்த்ததில்லை.  கடைசி இதழான 28வது இதழ் வெளிவந்தபோது அது மாத இதழா காலாண்டு இதழா என்று குறிப்பிடப்பட வில்லை.  

ழ வில் பொதுவாக கவிதைகளும், மொழிபெயர்ப்புக் கவிதைகளும், கவிதைகளைக் குறித்து கட்டுரைகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்.  மொத்தம் 16 பக்கங்களுக்குள் எல்லாம் முடிந்து விடும்.  ஒரே பேப்பரில் எல்லாம் அடித்திருக்கும்.  தனியாக அதற்கென்று அட்டையெல்லாம் அடித்திருக்காது.  ழ பத்திரிகையை அதைச் சார்ந்த நண்பர்கள் அம்மணப் பத்திரிகை என்று குறிப்பிடுவார்கள்.  

எபபோதும் ழவின் இரண்டாவது பக்கத்தில் அதனுடைய தலையங்கம் ஒரு அரைப்பக்க அளவிற்கு எழுதியிருக்கும்.  அந்த அரைப் பக்கத்தில் அதை எழுதியிருக்கும் விதம் அற்புதமாக இருக்கும்.  ஆத்மாநாமின் தற்கொலைக்குப் பிறகு நாலைந்து இதழ்கள் ழ பத்திரிகை வந்து 28வது இதழுடன் நின்றுவிட்டது. சிலசமயம் தலையங்கம் கூட இருக்காது.  ஆத்மாநாமின் ஆசிரியப் பொறுப்பில் வந்த ழ முதல் இதழில் தலையங்கம் கூட கிடையாது.  

எப்போதும் என்னுள் தோன்றும் கேள்வி. இவ்வளவு எளிமையாகக் கொண்டு வந்த ழ இதழ் ஏன் தொடர முடியாமல் போய்விட்டது என்பதுதான்.  என்னதான் அச்சடிக்கிற முறை சிரமமாக இருந்தாலும் 16 பக்கம் என்பது அந்தக் காலத்திலும் எளிதாக அடித்துவிடலாம்.  பின் ஏன் நின்று விட்டது? 

ஒரு சிறு பத்திரிகை என்றால் ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள்தான் கொண்டு வர வேண்டும் என்ற விதி இருக்கிறதா? ழ வந்தபோதே அதன் விற்பனையைக் குறித்து யாரும் பெரிதாக கவலைப்பட வில்லை.  ஏன்என்றால் அவர்களுக்கு அந்தப் பத்திரிகையை விற்கக் கூட தெரியாது.  க்ரியாவில் அந்தப் பத்திரிகையைக் கொடுத்து விட்டு, விற்றப் பணத்தைக் கூட வாங்க போக மாட்டார்கள்.  ஏன் சந்தாதாரர்களுக்கு சில நூறு பேர்களுக்கு மட்டும் இந்தப் பத்திரிகை போய்க் கொண்டிருக்கும்.

இப் பத்திரிகையை ஒருவர் எளிதாகப் படித்து விடாலம்.  அதில் வெளியான ஒவ்வொரு கவிதையும் வாசகர்கள் உற்சாகப்படுத்தத் தவறாது.  இன்று ஒரு சிறுபத்திரிகையைப் படிப்பதே என்பதே தொந்தரவான விஷயமாக இருக்கிறது. ழவைப் பொறுத்தவரை அது ஒருவரால் நடத்தப்பட்ட பத்திரிகை இல்லை. அதனால்தான் அது வரமுடியாமல் போய்விட்டதாக எனக்குத் தோன்றும். அதை ஒருவர் மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால், இன்னும் அந்தப் பத்திரிகை வந்து கொண்டிருக்கும்.  16 பக்கங்களில் இந்தப் பத்திரிகையைக் கொண்டு வருவதில் பெரிய நேரம் ஒன்றும் ஆகியிருக்காது.  எளிதாகப் படைப்புகளும் கிடைத்திருக்கும்...ஏன் வரவில்லை? 

க நா சு சொல்வார் ஒரு சிறுபத்திரிகையை கொஞ்ச இதழ்கள் கொண்டு வந்துவிட்டு உடனே நிறுத்தி விட வேண்டும் என்று.  அவரும் சில பத்திரிகைகளை அப்படி கொண்டு வந்து விட்டு நிறுத்தி விட்டிருக்கிறார்.  அவர் சொல்லும் காரணம் தொடர்ந்து செயல்பட்டால் பத்திரிகை ஜலம் மாதிரி ஆகிவிடும் என்று.  என்னால் அதை உறுதியாக சொல்ல முடியவில்லை.  பத்திரிகையின் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக மக்கி விடும் என்பதை ஏற்க முடியவில்லை.  ழவைப் பொறுத்தவரை அப்படியெல்லாம் ஒன்றும் ஆகவில்லை.  அதன் கடைசி இதழான 28ல் வெளிவந்த தலையங்கத்தை உங்களுக்கு படிக்க கொடுக்கிறேன்.  இந்தத் தலையங்கம் 1988ல் வெளிவந்தது.  
üகடந்த முப்பது ஆண்டுகளாக இலக்கியச் சிற்றேடுகளால் வெளியிடப்பட்டு வளர்க்கப் பட்ட புதுக்கவிதை இன்று வர்த்தக ஏடுகளிகலும் இடம்பெற்று விட்டது.  புதுக்கவிதை வெளிவராத ஏடுகளே இன்று தமிழில் இல்லை என்று சொல்லலாம்.

ஆனால் வர்த்தக ஏடுகளில் வெளியாகும் புதுக்கவிதை பெயரளவில்தான் அந்தப் பெருமையைப் பெறுகிறதே  தவிர உண்மையில் புதுக்விதையாக அது இல்லை.  இன்று புதுக்கவிதை எழுதும் ஏராளமான கவிஞர்களுக்குப் புதுக் கவிதையின் வரலாறும் தெரிந்திருக்கவில்லை.  அது ஏன் வந்தது என்பதும் எவரெவர் அதன் தொடக்கக்கால ஆதர்சங்களோடு எழுதுகிறார்கள் என்பதும் தெரியாது.  வர்த்தக ஏடுகளும் வழக்கம்போல அசலான புதுக்கவிதைகளையும் புதுக்கவிஞர்களையும் புறக்கணித்து விட்டு தனக்குப் பயன்படும்படியான எழுத்துகளையும் கவிஞர்களையும் வெளியிட்டு அதைத் தவிர வேற நிகழ்ச்சிகள் இல்லை என்பது போன்ற மயக்கத்தை உண்டு பண்ணி வருகின்றன.  இந்தப் பணியில் தொலைக் காட்சியும் வானொலியும் பங்கு பெற்று வருகிறது.

எண்பதுகளில் நிகழ்ந்து வரும் இந்தச் சீரழிவு, இலக்கியச் சிற்றேடுகளின் புதுக் கவிதையை நல்ல வேளையாகப் பாதித்து விட்வில்லை.  வர்த்க ஏடுகளில் மோகமுறாது தொடர்ந்து சிற்úறேடுகளில் வெளியிடுவது கடினமான காரியமாக இருந்தபோதிலும் தொடர்ந்துசிற்றேடுகளிலேயே வெளியிட்டு வரும் கவிஞர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்லக் கூடி வருகிறது.  முப்பது ஆண்டுகால இருப்பினால் புதுக் கவிதை புதிய சராசரிகளைத் தோற்றுவித்து புதிய சராசரிக் கவிதைகளும் வெளியீடுகளுக்கு வருகின்றன.  அவற்றைக்  கடந்து புதுமையானவற்றையும், ஆழமானவற்றையும் இனம் கண்டு வெளியிடுவது அவ்வளவு எளிதானதல்ல.
'ழ' எப்பொழுது வந்தாலும் தனது கருத்தில் புதுமையையும், அருமையையும் இருத்திக் கொண்டு வரும். '

இந்தத் தலையங்கம் வெளிவந்தே 28 ஆண்டுகள் ஓடி விட்டன,.இன்னும் இதில் கூறப்படுகிற விஷயங்கள் எல்லாம் உண்மைதான்.  கிட்டத்தட்ட 60 ஆண்டு கவிதைக்கான சரித்திரத்தையே ழ சொல்லி விட்டது போல் தோன்றுகிறது.
   

Comments