Skip to main content

லீலை



பூதக்கண்ணாடியை வைத்து
நாளிதழ் படித்துக் கொண்டிருந்தேன்
வர வர நாளிதழ்கள்
உத்திரகிரியை பத்திரிகை போலாகிவிட்டது
பருவத்தில் ரதி போன்று
இருந்தவர்கள் எல்லாம்
காலச்சக்கரத்தில் சிக்கி
கண்ணாடி பார்த்து அழுகிறார்கள்
மறதியும், தூக்கமும்
இல்லையென்றால்
எல்லோரும் எப்பொழுதோ
தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள்
பார்க்க சகிக்காதவற்றையெல்லாம்
மூலவர் பார்த்துக் கொண்டு
சிவனே என்று இருந்ததால்
சுடலை சுடுகாட்டுச் சாம்பலை
பூசிக் கொண்டு எங்கோ
அலைகின்றான்
உறக்கத்தை யார்
கடன் தருவார்கள்
உன்மத்தக் கூத்தனே
நெறிகெட்டவர்களை உச்சத்திலும்
அப்பாவிகளை பராரிகளாகவும்
ஏன் வைத்திருக்கிறாய்
பசிக்குச் சாம்பலையும்
மானத்தை மறைக்க கையையும்
கொடுத்ததற்கு நன்றி
சொல்ல முடியுமா
தீயில் தின்னப்படும் உடலை
போகக் கடலில் மூழ்கடித்து
முற்பிறவிகளை மறக்கடித்து
விளையாடுவது தான்
உன் திருவிளையாடலோ?






ப.மதியழகன்

Comments