Skip to main content

இருப்பு


 

ஓவியக் கண்காட்சிக் கூடத்தின் 
ஒரு சுவரில்
பிள்ளையார் விதம் விதமான
கோணங்களில் அருள் பாலித்தார்.

தன்னலமற்று உலகை இரட்சிப்பதாகப்
பசுவைக் கொண்டாடும் படங்களால்
நிரம்பியிருந்தன இன்னொரு சுவர்.

போட்டிகள் நிறைந்த உலகின்
ஆக்ரோஷங்களை வெளிப்படுத்தின
சேவல் சண்டைக் காட்சிகள்.

கொல்கத்தா வீதிக் காட்சிகளால்
சோகம் அப்பி நின்றிருந்தது
சன்னல்கள் அற்ற இடதுசுவர்

உயிரைக் குழைத்திழைத்த 
ஓவியங்களைப் பிரியும் துயர்
இலாபக் கணக்குகளால்
ஆற்றப் பட்டன

கையில் சுமந்திருந்த மோதகத்தைச்
சத்தமின்றி பிள்ளையாரின் 
காலடித்தட்டில் வைத்து விட்டு
எதிர்சுவற்றுச் சந்தைக் காட்சியில் 
சாலையில் உருண்டு கிடந்த 
தக்காளியைச் சுவைக்கச் சென்றிருந்த 
மூஞ்சுறு
சேவல்களுக்கு அஞ்சி 
உத்திரத்தின் வழியே
திரும்பிக் கொண்டிருக்கையில்
வானத்துச் சூரியன் 
மேற்கே சரிந்துவிட..,
விற்காத படங்களுடன்
வெளியேறினர் ஓவியர்.

இருண்ட காலிக் கூடத்தின் 
சுவர்களெங்கும் ஓடிஓடித்
தேடிக் கொண்டேயிருந்தது 
பிள்ளையாரை மூஞ்சுறு.
***

ராமலக்ஷ்மி

Comments

விற்காத படங்களுடன்
வெளியேறின ஓவியர்
"இருப்பு" கனக்கிறது..
நன்றி இராஜராஜேஸ்வரி.