Skip to main content

கொடை

கடல் பார்க்கவும்
அலைகளில் கால் நனைக்கவும்
ஆசைப்படாதவர் உண்டா
அருவியின் முகத்துவாரம்
இன்னும் அருமையாக இருக்கும்
அல்லவா
கங்கை,காவிரி,வைகை
சமுத்ரநாயகனுக்கு
எத்தனை நாயகிகள்
தேங்கிய தண்ணீரை
பார்க்கப் பிடிப்பதில்லை
குளத்தில் நீந்தும் மீனுக்கு
மார்க்கெட்டில் மவுசு அதிகம்
ஏரியில் பறவைகள் கூட்டம்,
மக்களின் தாகத்தை தீர்க்கவும்
பறவைகளுக்கு அடைக்கலம் கொடுக்கவும்
நிறைஞ்ச மனசு வேணும்
தோணி உண்டு ஓடையில் பயணிக்க
நீங்கள் துடுப்பை வலிக்க வலிக்க
உங்கள் ஜாதகத்தையே சொல்லும்
ஓடை
வானத்தின் கொடை தான்
மக்களின் தாகத்தை
தணித்துக் கொண்டிருக்கிறது.









கூர்


பாதசாரிகள் கவனத்துடனேயே
சாலையை கடக்கிறார்கள்
எந்த வாகனத்தில் சென்றாலும்
கோயிலைக் கண்டால்
கன்னத்தில் போட்டுக் கொள்ள
மறப்பதில்லை வெகுஜனங்கள்
சீரூடை அணிந்த
மாணவர்களின் மிதிவண்டி
வேகமெடுக்கிறது
பள்ளியை நோக்கி
மின்வெட்டு,பெட்ரோல் தட்டுப்பாடு
சகலத்தையும்
எப்படி பொறுத்துக் கொள்கிறார்கள்
சாமானியர்கள்
வீட்டின் பெரும்பகுதியை
ஆடம்பரப் பொருட்கள் தான்
அடைத்துக் கொண்டுள்ளது
வெள்ளைக்காரன் விட்டுச் சென்ற
ஆங்கிலம் தான்
இன்னும் நம்மை
ஆண்டு கொண்டிருக்கிறது
இதிகாச நாயகர்களை
கார்ட்டூன் பாத்திரமாக்கி
கேலி செய்கிறார்கள்
விட்டேத்தியாய்
இருக்கும் வரை தான்
வீட்டில் இருக்கலாம் போல.






ப.மதியழகன்

Comments