Skip to main content

சந்தி

ஞ்சலி அண்மையில் இயற்கை எய்திய ஓவியர் ஆதிமூலம், சுஜாதா, ஸ்டெல்லா புரூஸ் ஆகியோருக்கு என் அஞ்சலி. வாழ்க்கையில் இழப்புக்கள் தவிர்க்க இயலாதவை, சில இழப்புக்கள், சிந்தையில் ஆழமாக, வடுவாக, காலம் மட்டுமே ஆற்றக்கூடிய இரணங்களாகக் கூடிக் களித்த நினைவுகளே ஆறுதல் தரக்கூடியதாக அமைந்து விடுகின்றன. பல இரங்கல் பேச்சுகள், இறந்தோர் மாட்சியைவிட பேசுபவரின் பெருமையை இறந்தவர் எப்படிப் பாராட்டினார் என்று பீற்றிக்கொள்வதாக, கேட்பவர், படிப்பவர் கூசும்படியாக இருக்கின்றன. ஆதலால் இங்கு இயற்கை எய்திய அருமை நண்பர்களைப் பற்றி இவர்கள் சிறந்த கனவான்களாக இருந்தார்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றையும் கூற உத்தேசமில்லை. நீங்களும் அவர்களைப் போலவே என் உணர்வுகளைப் புரிந்துகொள்வீர்கள்.

*************************

தாய் நாடு, திரு நாடு, எந்தையும் தாயும் குலவி மகிழ்ந்த நாடு, இந் நாடு. விடுதலை பெற்று 60 ஆண்டுகளுக்குமேல் ஓடிவிட்டன. குடிமக்கள் இன்னும் வறுமையிலிருந்து, நோயிலிருந்து, அறியாமையிலிருந்து, அச்சத்திலிருந்து முழுமையாக விடுதலை பெறவில்லை. நெஞ்சை நிமிர்த்தி பெருமையுறவும் ஏற்றங்களும் கண்டோம், முதல் பெருமை முற்றிலும் கர்வம் கொள்ள இன்று உலகிலேயே பெரிய மக்களாட்சி கொண்ட நாடு இந்தியா என்பதுதானே. சந்தித்த பெரிய சோதனை, 32 ஆண்டுகளுக்கு முன், June 25, 1975 இந்திரா காந்தி அம்மையார் பிரகடனம் செய்த "உள்நாட்டு நெருக்கடி நிலைமை." நள்ளிரவில் எதிர் அணியில் முன்னணியில் இருந்த தலைவர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், அடல் பிகாரி வாஜ்பாய், அத்வானி முதலியோர் சிறையில் அடைக்கப்பட்டனர், மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு, செய்தி இதழ்கள் வாய் பூட்டு இடப்பட்டு, அரசிற்கு எதிரான செய்திகள் வெளியிடக் கூடாதென்ற தடுப்பு அறிக்கை கொடுக்கப்பட்டு, குடிமக்களுக்கு நீதி முற்றிலும் மறுக்கப்பட்டது. கவிந்தது காரிருள். இவ்வாண்டு பிப்ரவரி 25-ல் காலமான நீதிபதி ராஜ் ஹன்ஸ் கன்னா (அகவை 95), மக்களின் மரியாதைக்கும், போற்றதலுக்கும் உரியவர், பொறுமை, பணிவு, கூர்ந்த மதிநுட்பம், எல்லாவற்றிற்கும் மேலாக வீரமும் கொண்டவர். 1912-ம் ஆண்டு பிறந்த அவர் 1971-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகளில் ஒருவராக பதவியேற்றார். உள்நாட்டு நெருக்கடி நிலைமை என்ற அரசின் கொடூர நடவடிக்கைக்கு எதிராக பல 'ஆள்கொணர்வு' வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும்போது, 'ஏடி. எம் ஜபல்பூர் எதிர் சிவகாந்த சுக்லா' என்ற பேர் பெற்ற வழக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஐவர் கேட்டு தீர்ப்பளித்தனர் - அந்த வழக்கின் தீர்ப்பு, அரசின் நிலையை ஆராய்ச்சிக்கும், கண்டனத்திற்கும் உட்படுத்தக் கூடிய ஒன்று. நான்கு நீதிபதிகள் அரசின் நிலையை - உள்நாட்டு நெருக்கடி நிலைமையை ஆதாரித்து எழுதினார்கள். நீதிபதி ஹன்ஸ் ராஜ் கன்னாவின் தீர்ப்பு, நியாயத்தையும், நீதியையும் வலியுறுத்தி, அரசின் நிலையைக் கேள்விக்குரியதாக்கிய எதிரான ஒன்று. அவ்வாறு அரசின் நிலையை எதிர்த்துக் கொடுத்தத் தீர்ப்பிற்காக, அவர் கொடுத்த விலை, அவருக்கு முறைப்படி கிடைக்க வேண்டிய தலைமை நீதிபதி என்ற பதவி உயர்வைப் பறித்தது. அப்பதவி, அவருக்கு இளையவரான மற்றொரு நீதிபதிக்கு அளிக்கப்பட்டது. நீதியரசர் ஹன்ஸ் ராஜ் கன்னா தன் பதவியைத் துறந்தார். அன்னாரின் வீரமும், தியாகமும் இந்திய நீதித்துறையின் மானத்தையும் கண்ணியத்தையும், நேர்மையையும் காப்பாற்றியது. நீதியரசர் ஹன்ஸ்ராஜ் கன்னாவின் உருவப்படம் சுப்ரீம் கோர்ட் இரண்டாம் வளாகத்தை அலங்கரிக்கின்றது. இன்று.(நன்றி : திரு அனில் திவான் கட்டுரை வீர நீதியின் ஒரு முகம் - ஹிந்து நாளிதழ் 07.05.2008). *******************************

புகழுக்கு மூன்று வழிகள், ஒன்று, புதிதாகச் செய்வது, இரண்டு, பெரியதாய் செய்வதாம், மூன்றாவது சிறப்பாகச் செய்வது. எழுத்திலும் இதேதான். வழிகள் நேராக இருந்தால் குறுக்கு வழிகள் இருக்காதா என்ன? அதில் ஒன்று, மாற்றி சொல்வது. உங்கள் வீட்டு பெண்மணிகளைக் கேட்டுப் பாருங்கள்: தமிழ் திரைப்பட இசையில் இது ரீமிக்ஸ் காலம். பார்த்தார் ஒரு சுஜாதா சிஷ்யக்குஞ்சு, சிறுகதைகளில் புதுமைப்பித்தனின் சிறுகதை ஒன்றை ரீ மிக்ஸ் செய்து உலவவிட்டுவிட்டார். இலக்கியத்தில் வேண்டாமே இந்த ரீ மிக்ஸ். *******************************

சென்ற இதழ் 'சந்தி'யில், தன் 'இனிய' வாசகர்களுக்காக, கொம்பன், ரெசினாகுன்றுக்குக்கூட போவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கூறியிருந்தான். கடவுளால் தலையில் தைலம் தடவப்பட்டவர், காப்பாற்றப்பட்டார். குறைந்தபட்ச தகுதியே அவருக்கு இல்லையாம். போகட்டும். கொம்பனிடம், ஆசிரியர் அழகியசிங்கர், பேசும்போதெல்லாம்,'உங்கள் வாசகர் வட்டம் விரிந்துகொண்டே வருகின்றது. சந்தியை நிறுத்தி விடாதீர்கள்,' என்று கூறி வருகின்றார். அப்படித்தானே!! "ஆம்" என்கிற கடலோசை.

(நவீன விருட்சம் 79/80 வது இதழில் வெளிவந்த கட்டுரை)

Comments