Skip to main content

புத்தக விமர்சனம் -1
அந்தரங்கம் - ஆசிரியர் செல்வராஜ் ஜெகதீசன் - பக்கம் 112 - விலை ரூ.60 - வெளியீடு - அகரம், தஞ்சாவூர்


கவிஞர்கள் கல்யாண்ஜிக்கும், விக்ரமாதித்தியனுக்கும் இந்த நூலை சமர்ப்பித்துள்ளார் ஆசிரியர். கவிஞர் விக்கிரமாதித்யனின் முப்பது பக்க முன்னுரை தமிழ் புதுகவிதை வரலாற்றை கரைத்துப் புகட்டுகிறது நமக்கு.
பாரதிதாசனின் கவிதை கூறல் முழுக்க முழுக்க மரபின்பாற்பட்டதே தவிர, புதிதானதுமில்லை. மிகுந்த பெயரும் புகழும் பெற்ற அவருடைய கொடை என்ற ஒன்று யோசித்தால் வெறுமேதான் இருக்க வேண்டி வரும். புதுக்கவிதை என்பதே பார்ப்பனர்களின் கொடைதான்.


கவிதை சோறு போடாது. கவிஞர்கள் கண்டு கொள்ளப்பட மாட்டார்கள். முப்பதாண்டுக் காலமாவது ஒருவன் கவிதை எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு கவிதை ஊற்றுக்கண். அவ்வளவு காலம் தூர்ந்து போகாதிருக்க வேண்டும். இப்படியெல்லாம் இருந்தாலும் தமிழ்ச் சமூகம் அங்கீகரித்துவிடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.


விக்கிரமாதித்தனின் வரிகள் ஒவ்வொன்றும் அட்சர லட்சம் பெறும். நவீன தமிழ்கவிதையின் EZRAPOUND ஆன விக்கிரமாதித்யன் என்ற நம்பிராஜனால்தான் இந்த வரிகளை 2009-ல் எழுத முடியும். இந்த முன்னுரைக்காகவே இந்தப் புத்தகத்தை ஒவ்வொரு கவிஞனும் வாங்கிப் படிக்க வேண்டும்.


கவிதை என்பது என்ன? என்ற கேள்விக்கு வார்த்தை விளையாட்டு என்று கவிஞர் பிரமிள் பதில் அளித்ததாக விக்ரமாதித்யன் கூறுகிறார். அப்படிப்பட்ட வார்த்தை விளையாட்டுகளை செல்வராஜ் ஜெகதீசன் நிறையாவே நிகழ்த்திக் காட்டியுள்ளார்.


ஒன்றன்றி.... என்ற கவிதை


ஒன்றில்லை


ஒன்றுமில்லை


ஒன்றன்றி


ஒன்றுமே இல்லை


மற்றொரு கவிதைஇன்றென்ன


கிழித்துவிட்டோம்.


நாளை மீது


நம்பிக்கை வைக்க.இவையெல்லாம் சொற்சிலம்பம்தான். ஜெர்மனியில் Concrete Poetry என்ற ஒரு இயக்கம் 1960 களில் செயல்பட்டது. அது வார்த்தை விளையாட்டை இயக்கமாகவே நடத்திக் காட்டியது. Concrete கட்டிடங்கள் போல வார்த்தைகள் அடுக்கப்படும்.நல்ல கருத்துக்களை முன்வைக்கும் கவிதைகளை விக்கிரமாதித்யன் பாராட்டுகிறார். ஆனால் எழுத்தில் நல்ல எழுத்து மோசமான எழுத்துகள் உண்டு. நல்ல எழுத்தை கெட்ட எழுத்து கிடையாது என்பார் ஆஸ்கர் வைல்ட்.
எத்தனை நாட்கள் என்ற கவிதைசோற்றுக்கலையும் வாழ்க்கையில்


சொல்லிக்கொள்ளத்தான்


எத்தனை நாட்கள் என்று முடிகிறது.சலிப்பு அனுபவத்தின் பாற்பட்டது என்பதால் நம்மிடம் தாக்கத்தை உண்டாக்குகிறது. பிரியமான என் வேட்டைக்காரன் என்ற தலைப்பிட்ட கவிதையில் பன்னிரண்டு வரிகளில் பன்னிரண்டு பெண்கள் வருகிறார்கள். அவர்கள் அனைவரும் கல்யாணம் பண்ணிக்கொண்டு ஒன்றிரண்டு பிள்ளைகளுடன் ஒளிமயமாய் குடும்பம் நடத்துகிறார்கள். நமது நாயகியோ நாற்பதைக் கடந்து பெண்மானாக வலம் வருகிறாள். பிரியமான வேட்டைக்காரன் தன்னைக் கொண்டு செல்வான் என்ற நம்பிக்கையுடன்.


விக்கிரமாதித்யன் தன் முன்னுரையில் குறிப்பிடும் பெருந்தேவி, குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, சுகிர்தராணி முதலிய பெண்ணிய கவிஞர்கள் இந்த வரிகளை எப்படி எதிர்கொள்வார்கள்?


சாஸ்வதம் என்ற கவிதையில் கலைகள் கால விரயம் என்று கூறும் ஆசிரியர், அடுத்த கவிதையான 'கவன ஈர்ப்பு' என்ற கவிதையில்,
மற்றவர் கவனத்தை ஈர்ப்பதுதான் முக்கியம்
என்வரைக்கும் எழுதிக் கொண்டிருக்கிறேன் கவிதைகளை என்கிறார்.
சுயம் என்ற கவிதையில்,
உண்மையில் எனக்கு நான் யார்?
என்ற கேள்வியுடன் கவிதையை முடிக்கிறார். அஹம் பிரம்மாஸ்மி என்கிறது ஆதி சங்கரரின் அத்வைதம். நான் கடவுள் என்கிறார் திரைப்பட இயக்குநர் பாலா.
பக்கம் 91-ல் கவியெழுதி பிழைத்தல் கடினம் என்கிறார். இந்த கவிதைகள் படிக்க சுலபமாகத்தானிருக்கின்றன. ஆனால் வார்த்தைகளின் ஊடான மெளனம்தான் கவிதை என்ற பிரெஞ்சு கவிஞர் Paul Valery ஐ செல்வராஜ் ஜெகதீசன் அவசியம் படிக்க வேண்டும்.Comments

சோற்றுக்கலையும் வாழ்க்கையில்

சொல்லிக்கொள்ளத்தான்

எத்தனை நாட்கள்.

என்று முடிகிறது.சலிப்பு அனுபவத்தின் பாற்பட்டது என்பதால் நம்மிடம் தாக்கத்தை உண்டாக்குகிறது.

'என்று முடிகிறது' என்ற வரிகள் கவிதையோடு, இணையாத வரிகள்தானே. அப்போதுதான் அர்த்தம் வருகிறது. சந்தேகத்தைக் கேட்கிறேன்.
கவிஞர் செல்வராஜ் ஜெகதீசன் எளிமையாகவும், மிக அருமையாகவும், நிறையவும் எழுதி வருகிறார். அவரின் தொகுப்பு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
அன்புமிக்க முத்துவேல்,


'என்று முடிகிறது' என்பது திரு ஐராவதம் அவர்களின் வரிகள்.
முழு கவிதை இங்கே:

எத்தனை நாட்கள்...!
பிறந்த நாள்

பேர் வைத்த நாள்

கண்ட நாள்

கல்யாணம் கொண்ட நாள்

பிரிந்த நாள்

சேர்ந்த நாள்

சோக நாள்

சொர்க்கம் போன நாள்

நினைவு நாள்சோற்றுக்கலையும் வாழ்க்கையில்

சொல்லிக்கொள்ளத்தான்

எத்தனை நாட்கள்.


* செல்வராஜ் ஜெகதீசன்
www.selvarajjegadheesan.blogspot.com
அன்புமிக்க முத்துவேல்,

உங்கள் அன்பான பாராட்டுகளுக்கு நன்றி.

நிறைய எழுதுவதெல்லாம் நிறைவாய் சிலதாவது
நிற்குமென்றுதான்.


செல்வராஜ் ஜெகதீசன்
NBlog said…
தேநீர் கோப்பை ‌ஸ்டாண்டாக கவிதை புத்தகத்தை வைத்துள்ளார்கள் எ‌ன்ற கவிதை சமீபத்தில் ரசித்தேன்..

கவிஞர் செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள் அதிகம் உறுத்தாமல் மிக எளிமையாக இருக்கிறது. படித்தபின்பு ஏதோ ஒரு மெல்லிய சலனம் வருகிறது. அவரின் தொகுப்பை பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி. வாழ்த்துக்கள் செல்வராஜ் ஜெகதீசன்.
வாழ்த்துகளுக்கு நன்றி விநாயக முருகன்.

செல்வராஜ் ஜெகதீசன்.