அழியா கைக்கிளை
ம.தவசி அவர்களின் கதைகளைப் படிக்கும்போது ஏற்கனவே கொண்டிருக்கிற தீர்மானங்கள் உறுதிப்படுகின்றன. ஒரு படைப்பைப் பொறுத்தவரை அது வெறும் அறிவுரையோ படைப்பாளியின் மேதமையை வெளிப்படுத்துகிற கருத்துக்களாகவோ இருக்காது என்பது அறிந்த விசயம். வியப்பு, ஏக்கம், நப்பாசை என்று இப்படியான விதங்களால் சாதாரண மனிதன் பெற்றதை போலவே படைப்பாளியிடமிருந்தும் அவை வெளிப்படும். சாதாரண மனிதனுக்கு பயம் என்பது எப்படி வெளிப்பட்டது? வெளிப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டு விட்ட பின்னர், அதை எவ்வாறு எழுத்தில் கொண்டு வர வேண்டும்? சரி, எழுத்தில் கொண்டு வருவது இருக்கட்டும் - முதலில் பேச்சில் எவ்வாறு வெளிப்படுகிறது? ஒரு புதிய முறையில் சொல்கிற விதம்....ஒரு படைப்பு இரண்டிற்கும் அதிக வேறுபாடு இல்லை.
கிட்டத்தட்ட எழுத்து வடிவில் நமக்குக் கிடைக்கப்பெற்றது இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுதான். இது இலக்கியவாதிகள் சொல்வதல்ல - ஆய்வாளர்கள். காற்றிலிருந்து மூக்கால் இழுக்கப்பட்டு வெளியானது - ஆதியிலே இருந்தது வார்த்தை - இப்படிச் சொல்லப்பட்டது எல்லாமும் இந்தக் கணக்குத்தான். கல் தோன்றி மண் தோன்றா காலத்து மொழி இலக்கியமும் அப்படித்தான். விவசாய நாகரீகம் தோன்றி பல நூற்றாண்டுகள் கழித்து வெளிப்படுத்தப்பட்டவை வேற எப்படி இருக்க முடியும்? அவற்றில் பயம் எப்படி சொல்லப்பட்டுள்ளது? எவ்வாறு உருவப்படுத்தப்பட்டிருக்கும்?
மிகவும் அற்புதமானவை இந்த விசயங்கள். அன்று தோன்றிய எண்ணம் - அதாவது இந்த பயம் - அறிவீனம் என்று யாராலும் சொல்லப்படவில்லை. எல்லா நாட்டிலும் எல்லா மொழியிலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்ட விசயம். பயம் என்பதை பேய் என்ற முதலில் காட்டிவிட்டு அதற்கு அலங்காரம் செய்ய ஆரம்பித்த போது காட்டேரி, மோகினி என்பதெல்லாம் தோன்றிவிட்டது. அதை எப்படி தடுக்க முடியும்? இது தோன்றிய ஒன்று - சிந்தித்த விளைவால் கிடைத்தது அல்ல (பேய்களில் பிரம்மரராட்சஸ் என்பருது வேதம் படித்து காலமான வைதிகன் என்பது வேறு விசயம். பேய் உலகிலும் மனு தர்மம் உண்டு போலும்.)
தவசியின் கதைகளில் இது இயல்பாக செயல்பட்டிருக்கிறது. பழங்குடி மக்களிடையே இம்மாதிரி உணர்வை இயற்கையாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். வேறு எந்த வகையிலும் இம்மாதிரி படைப்புகள் வகைப்படுத்த முடியாதவை. சிவப்பிந்தியரிடையே இதற்கு சமமான கதை அம்சங்கள், ஆப்பிரிக்க நாட்டின் எழுத்தே இல்லாது பேச்சு மட்டும் உள்ள மொழிகளிலும் உண்டு.
'மனித சரித்திரத்தில் மனிதன் தன்னை மிருகம், புயல், மழை, பூகம்பம், ஆழிப்பேரலை இவற்றிலிருந்து தன்னை காத்துக்கொள்ள போரிட்டதை விட, சகோதார மனிதரிடமிருந்து காத்துக்கொள்ள போரிட்டதுதான் அதிகம்,' என்று ஒரு தடவை நண்பர் சா. கந்தசாமி எழுதியிருந்தார்.
மிருகம் - பல்வேறு இயற்கை எதிர்ப்புகள் ஆகியவற்றை விட சக மனிதனுக்குத்தான் அதிகம் பயப்பட்டு இருக்கிறான் என்பது உண்மை. இந்த சக மனிதன் சம்பந்தப்பட்டதுதான் பேயும். இது உலகம் முழுவதிலும் - சங்க காலம், மத்திய காலம், ஷேக்ஸ்பியர் என்றெல்லாம் பாகுபாடு இல்லாது விரவி நிற்கிறது. அம்மாதிரிப்பட்ட ஒரு நிலை, அவனை அறியாமல் உருவாகி இருக்கலாம். இங்கே இந்த மண்ணில் அத அளவிற்கு அதிகமாகவே இருக்கிறது என்று சொல்லவ வேண்டும். இதன் முக்கிய காரணம் வ0வசாய நாகரீகம் உலகில் முதலில் ஏற்பட்ட பரதேசங்கிளல் இ.ந்த இடம் முதன்மையானது. ஆய்வாளர்கள் தந்த விசயம் இதுவும்.
நாய், பூனை, புலி போன்றவை பேயை கண்டு பயப்பட்டு ஓடவது பற்றி சொல்ல முடியாது. ஒருவேளை மனிதனை பார்த்து பயப்பட்டிருக்க முடியும். குரங்குகள் விசயம் வேறு. அவை சிறிதளவில் மனிதகுணம் கொண்டருக்கலாம்.
நாகரீகம் என்றால் இருக்கிற ஒன்ற நாசமடைந்து விட கூடும். விவசாயம் தோன்றினால் பஞ்சமும் தோன்றும். அந்த நாகாக கால கட்டடத்திற்கு முன்புள்ள பஞ்சம் எல்லாராலும் அனுபவிக்கப்பட்ட ஒன்றாக இருந்திருக்கும். நிலவுடைமை சம்பந்தப்பட்ட விசயம்.
கிராமத்ரதில் பஞ்சம் என்றால் நல்லதாங்காள் கதை தோன்றும். மாராப்பு இல்லாத கிழவிக்கு அதைவிட சிறந்த குறியீட கிடையாது. கிணறு - அது இன்னொன்று. கிழவிக்கு குமரியின் கதைகள்தான் முக்கியம். சவ்வுமுட்டாய் கலரில் தாவணி உடுத்திய முத்துமாயை 'என்னைப் பெத்தவளே' என்று விளித்து கதை கேட்கிறாள். பச்சை குழந்தையை கூட 'என்னப் பெத்த ராசா' என்றழைத்து கொஞ்சுவது இந்த இடத்திற்கே உரிய அழகு. தான்பெற்ற குழந்தையை 'என்னப் பொத்தாரே' என்றழைப்பது ஒருவேளை தனக்கு தாய் என்ற பட்டத்தைப் பெற்று தந்தவளே என்பதாக இருக்கும். குழந்தையை இப்படி அழைப்பது வேறு எங்காவது - மேல் நாடுகளில் - ஐரோப்பிய இலக்கியங்களில் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆய்வாளர்கள் சொல்ல வேண்டும்.
குமரிகள் பட்ட அவலம் சொல்லத் தரமன்று. மானங்காக்க அவர்கள் உயிர் தர வேண்டும். கிணற்றில் விழுவதுபோல தஞ்சையில் குறிப்பிட்ட காலத்தில் பெற்றோரால் உயிருடன் புதைக்கப்பட்ட விசயம் நீல பத்மநாபனின் தலைமுறைகள் நாவலில் வருகிறது. எங்காவது நடந்து கொண்டு இருக்கிற விசயம்தான்.
இம்மாதிரி கொடுமைகளை சித்தரிப்பது - மிகவும் சாதாரணமாக சொல்வதுபோல் இந்த பெரிய விசயத்தை கையாண்டு இருப்பது முன்பு சோமசர்மா, கறைபட்ட இலை, பூரணி போன்ற லா.ச.ரா கதைகள், சமீபத்தில் கவிஞரி சமயவேல் எழுதிய கதைகள் ஆகியவை இங்கே ஏறிப்பிடலாம்.
மாவட்ட தமிழ்தான் தமிழை இன்னும் உயிரோடு இருக்க செய்து வருகிறது - மானங்காத்து வருகிறது. அதன் மூலம் அழகு, கொடுமை இரண்டுமே தரப்படுகிறது.
கொடுமைகளை கிராமத்து கிழவி மென்று விழுங்கிக் கொண்டிருக்கிறாள். அவை தோற்றம் பெறுவது அவள் மூலம்தான். இலக்கியவாதி அல்ல அந்த கிழவி. ஆனால் அவளிடமிருந்துதான் படைப்பாக - கவிதையாக அது கிளம்புகிறது.
ம.தவசியின் கவிதைகளைப் படித்தபோது இவர்அ கதைகள் எழுதினால் எப்படி இருக்கும் என்ற நினைத்தேன். இரண்டு கதை தொகுதிகளையும் படித்தபோது முதலில் வந்த கதை தொகுதியான 'பனை விருட்சி' மேலான கற்பனை வளம் கொண்டுள்ளது என்று சொல்ல வேண்டும். அதிலும் கதையின் ஊடே கவிதைகளையும் சேர்த்திருப்பது ஒரு புதிய முயற்சி. அந்த கவிதைகளையும் சேர்த்தால் அல்லாமல கதை முற்றுபெறாது என்று அவர் நினைத்திருந்தால் அது சரியான எண்ணம்தான். கதையில் கவிதை வரலாமா என்று யாராவது கேட்டால் கதை தோன்றியபோது - கவிதை தோன்றிய போது - கடவுள் தோன்றிய போது, அவையெல்லாம் எப்படி இருந்தன என்று பதிலுக்குக் கேட்கலாம்.
மேலே குறிப்பிட்ட கதை 'அழியா கைக்கிளை' என்ற தலைப்பில் 'பனை விருட்சி' கதை தொகுதியில் வந்துள்ளது. அழியா கைக்கிளை என்று பெயர் சூட்டிய காரணம் தெரியவில்லை. கைக்கிளைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஆனால் பெயரில் என்ன இருக்கிறது - கதையில் தானே எல்லாம். தவசி அவர்கள் இப்படிப்பட்ட நடையை கொண்டிருக்கும் கதைகளை தொடர்வது அவசியம்.
(பனை விருட்சி - ம தவசி - சிறுகதைகள் - வெளியீடு : அனன்யா, 8/37 பி ஏ ஒய் நகர், குழந்தை இயேசு கோவில் அருகில்,புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர் 613 005)
Comments