Skip to main content

புத்தக விமர்சனம் 2


ஆஸ்பத்திரி - நாவல் - ஆசிரியர் : சுதேசமித்திரன் - உயிர்மை பதிப்பகம் - சென்னை 18 - பக்கம் - 136 - விலை ரூ.௮0



சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட ஆசிரியர் சுதேசமித்திரன் என்ற புனைபெயரில் எழுதி வருகிறார். நாற்பது வயதிற்குள் கவிதை, சிறுகதை, நாவல் எழுதியுள்ளார். சுதேசமித்திரன் என்ற பெயர் பழைய செய்தித்தாளையும், எழுத்தாளர் அசோகமித்திரனையும் நினைவுப் படுத்தினால் ஆசிரியர் பொறுப்பல்ல.


பக்கம் 59 - இங்கே ஒரு இடைச்செருகல் அவசியமாகிறது. இந்த நாவல் ஏழைகளையோ, அரசாங்க ஆஸ்பத்திரிகளையோ அவலங்களையோ பற்றிப் பேசுவதில்லை என்று எப்போதாவது ஏதாவதொரு மூலையிலிரூந்து சர்ச்சை கிளம்பக்கூடும்.



இந்தக் காலத்தில் மட்டுமல்ல. எந்தக் காலத்திலும் ஏழைகள் எந்த நாவல்களையும் வாசிப்பதேயில்லை. ஏனென்றால் அவர்களிடம் அவற்றை வாங்குவதற்கு பணம் இல்லை. இந்தக் காலத்தில் மட்டுமல்ல எந்தக் காலத்திலும் பணக்காரர்களும் இந்த மாதிரி எந்தக் காலத்திலும் பணக்காரர்களும் இந்த மாதிரியான நாவல்களை வாசிப்பதே இல்லை. ஏனென்றால் அதற்கு அவர்களிடம் நேரமில்லை. இதே ரீதியில் இரண்டு பக்கங்கள் வாசகனை முன்னுறுத்தி பிரவசனம் செய்கிறார் ஆசிரியர். இந்த உத்தி மிகப் பிழைய உத்தி. TRISHTRAM SHANDY எழுதிய Lawrence Sterne, பிரெஞ்சு நாவலாசிரியர் Demise Dierot இவர்கள் எல்லாம் இருநூறு ஆண்டுகள் முன்னமே கடைப்பிடித்த உத்தி.



பக்கம் 126. அன்றைக்கு ஐசியூவுக்கு முன்னால் பெரிய வாத்திமக்கூட்டமாக இருந்தது. இருபதாம் நூற்றாண்டு துவக்கத்தில் ஸீ வை குருஸ்வாமி சர்மா எழுதிய பிரேம கலாவதீயம் என்ற நாவலில்தான் ஸ்மார்த்தர்களின் உட்பிரிவுகள் கேலி செய்யப்பட்டிருக்கும். பிறகு வந்த லா.ச.ரா, தி.ஜா போன்ற பிராமண எழுத்தாளர்களின் பாஷை மட்டும் பிராமண மொழியாக இருக்குமே தவிர வாத்திம வடம் பிரிவுகள் பேசப்படவில்லை.



கதையில் வருகிற சிவன் விஷ்ணு போன்ற பெயர்கள் நகுலனின் கேசவ மாதவனை நினைவூட்டுகின்றன. ஆஸ்பத்திரி பிணி, மூப்பு, சாவு உள்ளடக்கியது என்ற போதும் அங்கும் காமக்கிளர்ச்சி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்கிறார் ஆசிரியர் (பக்கம் 57).



சுந்தர ராமசாமியைப் போல மொழியை செதுக்கி, திருகி, சாதூர்யமாக சமத்காரமாக கதையை நடத்திச் செய்கிறார் ஆசிரியர்.



அத்தியாயம் 16-ல் இடம் பெறும் கண்ணபிரான் ஒரு விசித்திரமான குணாதிசயம். பெரிய தொழிலதிபர். சபரிமலை போகிறார். மலையிலிருந்து கீழிறங்கியதும் ஆடு மாடு கோழி மீன் மதுவகைகளும் சாப்பிடுகிறார். இந்த அத்தியாயத்தின் தலைப்பு பணக்காரர்கள் சபரிமலைக்குப் போகும் பாங்கினை விளக்குக.



நாஞ்சில் நாடனால் பரிந்துரைக்கப்பட்ட இந்த நாவல் தமிழ் வாசகர்கள் படிக்க வேண்டியது.

Comments

Popular posts from this blog