Skip to main content

எனக்கு பிடித்த படங்கள்


பிரபு மயிலாடுதுறை


சில ஆண்டுகளுக்கு முன்னால் தி ஹிண்டு ஃப்ரைடே ரிவியூவில் முக்கியமான தமிழ் இயக்குனர்கள் தங்களுக்குப் பிடித்த தமிழ் படங்களின் பட்டியலை அளித்திருந்தனர்.அதை ஒரு நிமித்தமாகக் கொண்டு நான் எனக்குப் பிடித்த படங்களைப் பட்டியலிட்டுப் பார்த்தேன்.அப்பட்டியலை இங்கே அளிக்கிறேன்.இவை ரசிகனின் பட்டியலே.விமரிசகனின் பட்டியல் அல்ல!
1.தில்லானா மோகனாம்பாள்
ஒவ்வொரு பங்களிப்பாளரின் ஆகச் சிறந்த திறமை முற்றிலும் வெளிப்பட்ட மிக அபூர்வமான தருணம் இத்திரைப்படம் மூலம் தமிழுக்குக் கிடைத்தது என்பது என் எண்ணம்.உலக சினிமா இவ்வாறான தருணத்தையே சினிமாவாக வரையறுத்துக் கொள்கிறது.மிக நேர்த்தியாக அமைக்கப்பட்ட திரைக்கதை, இயக்குனர் திரு.ஏ.பி.நாகராஜன் அவர்களின் சாதனை.அழகர் கோவில்,மதுரை,தஞ்சாவூர்,திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய ஊர்களும் கதாமாந்தரைப் போன்றே முக்கியத்துவம் பெற்றிருப்பது தமிழில் புதுமையானது (அநேகமாக அவை அனைத்தும் ‘செட்’களே).சிவாஜி கணேசன்,பத்மினி,நாகேஷ் மற்றும் மனோரமா ஆகியோரின் ஆகச் சிறப்பான நடிப்புத் திறனுக்கான சான்று இப்படம்.நாதஸ்வரக் கலைஞராக சிவாஜியின் உடல்மொழி அசாத்தியமான ஒன்று.
2.சந்தியா ராகம்
கிராமத்திலிருந்து வந்த முதியவர் தன் வாழ்நாளின் எஞ்சிய பகுதியை சென்னையில் வாழ முற்படுவதின் கதை.நகரில் ’தண்ணீர்’ என்ற வஸ்து அரிதாக இருக்கிறது.ஒரு வாளித் தண்ணீரில் குளிப்பதை குளியலாக எண்ண மறுக்கிறார்.தன் பேத்தியுடன் ஓயாது உரையாடுகிறார்.நடைபாதைக் கடை வடையை அவளுக்கு வாங்கித் தருகிறார்.குழந்தைக்கு உணவு ஒவ்வாமை ஏற்படுகிறது.கிழவர் மேல் எல்லோருக்கும் வருத்தம்.அவரும் வருந்தி யாரிடமும் சொல்லாமல் முதியோர் இல்லத்துக்கு செல்கிறார்.காணாமல் போன பெரியவரைத் தேடும் காட்சி சிறப்பானது.சென்னை சாலையொன்றில்-பேருந்து இயங்கும்;தள்ளுவண்டி இயங்கும்;மோட்டார் வாகனம் ஓடும்;மிதிவண்டி ஓடும்;ஒலிப்பான் கேட்கும்-சட்டகத்திற்குள் இருக்கும் அனைவரும் ஏதோ ஒரு பணியில்-பூ விற்றவாறு,பழங்களை பேரம் பேசியவாறு,அலுவலகம் சென்றவாறு,பேருந்துக்கு காத்திருந்து- ஈடுபட்டிருப்பார்கள்.அந்நகருக்கு - அம்மக்களின் மனோபாவத்துக்கு அன்னியமாகிப் போன முதியவரைத் தேடும் காட்சி சிறப்பானது.
3.வீடு
ஐ.நா சபையால் வீடு மற்றும் வாழிடம் அற்றவர்களுக்கான சர்வதேச ஆண்டாக அறிவிக்கப்பட்ட 1989ம் ஆண்டு வெளியான படம்.ஒரு நடுத்தர இந்தியக் குடும்பம் பழகியிருக்கும் தனது பாதையில் எதிர்கொள்ளும் குறுக்கீடுகளை அடையாளம் காட்டியவாறு செல்வது இப்படத்தின் பலம்.பேத்தியை நேசிப்பவனிடம் “துளசியை ஏமாற்றி விட மாட்டாயே” என கலங்குகிறார் பாகவதர்.பெண்ணை நல்ல இடத்தில் கட்டிக் கொடுப்பது ஒன்றே பெரிதாக இருக்கும் அவருக்கு காதல் ஒரு குறுக்கீடாக இருக்கிறது.அலுவலகத்தில் வீட்டுக் கடன் வழங்க மேலாளர் முறையற்று நடக்க முயல்வது அதிகாரவர்க்கத்தின் குறுக்கீடு.”கேவலம்…மொளகா கிலோ பதினாறு ரூபாய் விற்கிறது எனக் கூறும் அரசு அதிகாரி ஊழலின் குறுக்கீடு.
4.முதல் மரியாதை
முல்லையாற்றங்கரையில் அமைந்திருக்கும் கிராமம் ஒரு முக்கியமான கதாபாத்திரம்.மண வாழ்க்கையால் காயம்பட்டுப் போன பண்ணையாருக்கு இரு பிணைப்புகள் இருக்கின்றன.முதலாவது,அவர் பெறாத மகள் மீது கொள்ளும் பரிவு.இரண்டாவது தோணிக்காரியின் நேசம்.’முதல் மரியாதை’ பண்ணையாருக்கும் தோணிக்காரிக்குமான நேசமாகவே பெரும்பாலானோர் எண்ணுகின்றனர்.ஆனால் நான் அதனை பண்ணையாருக்கும் அவரது மகளுக்குமான உறவின் கதையாகவே பார்க்கிறேன்.தனது தாயின் கூற்று மூலம் தான் இதுநாள் வரை தான் தந்தையாகக் கொண்டிருந்தவர் தனது தந்தை இல்லை என அதிர்ச்சிகரமாக அறிய நேரிடும் போது கனத்த இதயத்துடன் அவரிடம் ஒரு வரத்தை யாசிக்க அனுமதி கோருகிறாள்.அவள் கேட்பதற்கு முன்னதாகவே,’’அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அதிலும் நீதான் எனக்கு மகள்.நான் தான் உன் தகப்பன்’’என்று கூறுகிறார் தந்தை.இவ்வளவு ஆழமான உணர்வெழுச்சி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவில் காணக் கிடைக்காதது என்பது என் எண்ணம்.
5.அலைபாயுதே
ஒரு பெண்ணை-பெண்ணின் உணர்வுகளை-அவளது மகிழ்ச்சிகளை-ஏக்கங்களை-துக்கங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால் எனது மனச்சாய்வு எப்போதும் அலைபாயுதேவுக்கு உண்டு.வாழ்வின் சாம்பல் படராத இளம் பெண்ணின் வாழ்க்கைச் சித்திரம்.சக்தி கார்த்திக்கிடம்,’’எனக்கு இந்த உலகத்துல பத்து பேர் முக்கியமா இருப்பாங்களா…அதுல உன் கூட பேசணும்னா அவங்க கூட இருக்க முடியாது.அவங்க கூட இருக்கணும்னா உன் கூட பேசக் கூடாதுன்னா எப்படி’’ என கேட்கும் காட்சி இளம் தமிழ்ப்பெண்கள் அகத்தின் வெளிப்பாடு.
6.தில்லுமுல்லு
ஹாஸ்யத்துக்கான படம்.இப்படத்தின் ஒவ்வொரு வசனத்திலும் ஹாஸ்யம் மிளிறுகிறது.ஒவ்வொரு காட்சியிலும் ஹாஸ்யம் இருக்கிறது.கே.பாலசந்தர்,ரஜினிகாந்த் மற்றும் தேங்காய் சீனிவாசனைப் போன்றே இப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவர் வசனகர்த்தா விசு.
‘’அதிர்ச்சியா இருக்கா?’’
‘’இல்லை சார்!ஆச்சர்யமா இருக்கு.எப்படி சார் நீங்களும் உங்க வீட்டு தோட்டக்காரனும் ஒரே மாதிரி இருக்கீங்க?’’
7.மௌனராகம்
மணிரத்னம் மௌனராகத்தில் துவக்கிய ஒன்று அலை பாயுதேவில் பூர்த்தியானது.இப்படத்தின் டைட்டில் தமிழில் இல்லாத ஒன்று.
8.நாயகன்
தமிழ் வணிகத் திரைப்பட வரலாற்றில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய படம்
9.தேவர் மகன்
தமிழ் திரைக்கதையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பையும் பெரும் பாய்ச்சலையும் நிகழ்த்திய படம்.கமர்ஷியல் சமரசங்கள்(சில பாடல்கள்) தவிர்க்கப்பட்டிருந்தால் முழுமை பெற்றிருக்கும்.
10.இருவர்
படத்தின் முதல் காட்சி:ஒரு குழந்தை தன் கண்களால் ஓடிக் கொண்டிருக்கும் ரெயில் வண்டியின் சன்னல் வழியே உலகைக் காண்கிறது.படத்தின் கடைசி காட்சி:அக்குழந்தை பால்யம் தாண்டி இளமையில் செயல்பட்டு முதுமையில் மரணிக்கிறது.அம்மரண ஊர்வலத்தை உலகமே காண்கிறது.
இவ்விரு காட்சிகளுக்கு இடைப்பட்ட சம்பவங்களே திரைக்கதை.
11.ஆடுகளம்
கடந்த பத்தாண்டுகளில் வெளியான படங்களில் மிக முக்கியமான படம்.சேவல் சண்டையை பின்புலமாக்கி மனித அகத்தின் ஒளியையும் இருளையும் துல்லியமாக சித்தரிப்பதில் இயக்குநர் பெற்ற வெற்றியே இப்படம்.
12.விஸ்வரூபம்
அமெரிக்காவையும் ஆஃப்கானிஸ்தானையும் கதைக்களமாகக் கொண்டு,துல்லியமான திரைக்கதை மற்றும் கூரிய வசனக்கள் மூலம் தீவிரவாதம் உலகலாவிய அளவில் உருவாக்கும் இடர்களைத் துணிச்சலாகப் பேசிய படம்.

Comments