அழகியசிங்கர்
மொத்தம் 16 பக்கங்கள். ஜøலை - செப்டம்பர் 1988 ஆண்டு வெளிவந்தது. மயிலாப்பூரில் உள்ள ஒரு அச்சக உரிமையாளரிடம் தயார் செய்யக் கொடுத்திருந்தேன். 500 பிரதிகள் அடித்தேன் என்று ஞாபகம். எல்லாப் பக்கங்களும் கவிதைகள். அதை அச்சடித்துவிட்டு எடுத்துக்கொண்டு வரும்போது, அச்சக உரிமையாளரைப் பார்த்தேன். அவர் கேட்ட பணத்தைக் கொடுத்தேன். ஆனால் அவர் ஏளனமாகப் பார்ப்பதுபோல் இருந்தது. அவர் அச்சக உரிமையாளர் மட்டுமல்ல, ஆனால் ஒரு இலக்கியவாதியும் கூட.
'இதில் உள்ள கவிதைகளைக குறித்து என்ன நினைக்கிறீங்க?' என்று கேட்டேன்.
அவர் சொன்னார் : ' இதெல்லாம் கவிதை இல்லை.'
அடுத்த இதழ் அங்கு அடிக்கப் போகவே இல்லை. ஏன் மையிலாப்பூர் பக்கமே தலையை வைத்துப் படுக்கவில்லை. எங்காவது பார்த்தாலும் தள்ளிப் போய் நிற்பேன். தப்பி தவறி பார்த்துவிட்டால் போதும் அவருடைய ஏளனப் பார்வை என் முன்னால் தவழ்ந்தபடி வரும்.
16 பக்கங்களில் கவிதைகள் எழுதியவர்கள் பெயர்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.
1. ரா ஸ்ரீனிவாஸன் 2. கோபி கிருஷ்ணன் 3. தேவதேவன் 4. ஆர்.ராஜகோபாலன் 5. துரியன் கோஷ் ப்ரீதி 6. சுரேசன் 7. ஆனந்த் 8. ஞானக்கூத்தன் 9. கண்ணன் எம் 10. ஜெயதேவன் 11. ஆ இளம்பரிதி 12. எஸ் வைத்தியநாதன் 13. கி சீனிவாசன் 14. நாரணோ ஜெயராமன் 15. அழகியசிங்கர்
முதல் பக்கத்தில் அலங்கரித்த ஸ்ரீனிவாஸன் கவிதையை இங்கு அளிக்கிறேன்.
ரா ஸ்ரீனிவாஸன்
சூரியனைத் தவிர
சூரியனே, நீ உதயமாகும் பொழுது
உன்னைத் தவிர
நான் வேண்டுவது
வேறு எவருமில்லை
நான் உன்னுடன் உதிக்கின்றேன்
இரவு வந்து கவிழ்கிற வரை
உன்னுடனே இருக்கின்றேன்
வீழ்கின்றபோது
நீ எழுதுகின்ற
வண்ண வண்ண ஓவியத்தை
நானும் எழுதியபடி
நீ மறைகின்றாய்
மலைகளுக்கும்
கட்டிடங்களுக்கும்
ஒவ்வொன்றிற்கும் அப்பால்
நீ எழுதிய ஓவியமும்
மெல்ல அழிகின்றது
இருள் சூழ்ந்து
பின்பு அதிகாலையினில்
நீ உதிக்கின்றாய்
உன்னுடன் நானும்
மாலைக்கான ஓர் புதிய ஓவியமெழுத.
Comments