Skip to main content

ஒரு நிமிடம் கவிதையைப் படியுங்கள்



அழகியசிங்கர்



நவீன விருட்சம் 98வது இதழில் வெளிவந்த கவிதை ஜான்னவியின் கவிதை.  இவர் சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு இதழில் கவிதை எழுதியிருக்கிறார்.  கணையாழியில் கவிதைகள், கதைகள் எழுதி உள்ளார். அவருடைய கவிதை விருட்சத்தில் வெளிவந்தது.  அதை இங்கே கொடுத்திருக்கிறேன்.

 ஜான்னவி

திசைகள்


நாம் அறிமுகமானோம்
சிநேகம் கொண்டோம்
சிநேகம் வளர்ந்து
ஆழ்ந்த நட்பானது

உன் மொழியை நானும்
என் மொழியை நீயும்
கற்றோம்
கொஞ்சம்
வேலையின் அழுத்தலில்
மூச்சுத் திணறியபோதும்
இனிமையாய் மாறியது
காலம்

நாம் பேசிக்கொள்ள
இன்னும் நிறைய இருந்தது
உன் மொழியிலும்
என் மொழியிலும்
மொழியற்ற மௌனத்திலும்.

காதல் வந்து
தட்டிக் கொண்டிருந்தது கதவை
நமக்கு நேரமிலாத் தருணத்தில்

உன் நாட்டில் உன்னைத்
திரும்ப அழைத்து விட்டார்கள்
என்னைச் சிறை வைக்க
என் வேலை

நாம் கற்ற நாகரீகம்
எங்கு போனது?
கதவைத் தட்டிய காதலை
வரவேற்கவில்லை நாம்.

கண்டும் காணாதது போல்
பாசாங்கு செய்து
மிகுந்த எச்சரிக்கையோடு
கடந்து சென்று விட்டோம் அதை

பிறகு பிரிந்து போனோம் நாம்
விடை பெறாமலே

Comments