Skip to main content

ஒரு கதை ஒரு கவிதை வாசிப்புக் கூட்டம் 4



அழகியசிங்கர்



சென்னையில் சனி ஞாயிறுகளில் இனி கூட்டம் நடத்துவது சிரமமாக இருக்கும் போல் தோன்றுகிறது.  கூட்டம் ஏற்பாடு செய்தாலும் யாரும் வர மாட்டார்கள் என்று தோன்றுகிறது.  நாம் அரசியல் கட்சி நடத்தினால் பணம் கொடுத்து கூட்டத்திற்கு வரச் சொல்லிவிடாலாம்.  நாம் சாதாரணத்திலும் சாதராணம்.
எனக்கு வழக்கம்போல் கூட்டத்திற்கு வந்திருந்து சிறப்பு செய்யும் ஆடிட்டர் கோவிந்தராஜன் திருவனந்தபுரம் போய்விட்டார்.  அதனால் அவர் வர முடியாது.  எப்போதும் குவிகம் என்ற இலக்கிய அமைப்பு உள்ளது.  கடந்த ஓராண்டாக இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வருகிறது.  விருட்சம் கூட்டம் பார்த்து ஆரம்பித்தார்கள்.  நம்மைப் போல் ஏதோ ஆர்வக் கோளாறு என்று நினைத்தேன்.  ஆனால் அப்படி இல்லை.  ஓராண்டாக 12 கூட்டங்கள் நடத்தி அசத்தி விட்டார்கள்.  12வது கூட்டத்தில் ஒரு நாடகத்தையே அரங்கேற்றி விட்டார்கள்.  
நமக்கு உறுதுணையாக அவர்கள் எப்போதும் இருப்பார்கள்.  ஆனால் நாளைக்கு அவர்கள் வேறு ஒரு இலககியக் கூட்டத்திற்குப் போய்த்தான் தீர்வார்கள்.
விஜய் மகேந்திரன், வேடியப்பன், வினாயக முருகன் போன்ற நண்பர்கள் நாளைக்கு நடக்கவிருக்கும் இலக்கிய நிகழ்ச்சிகளுக்குக் கலந்து கொள்ளப் போகிறார்கள்.  
அதனால் நான் நடத்தும் கூட்டத்திற்கு யாராவது வருவார்களா என்ற சந்தேகம் வந்து விட்டது.  ஆனால் நான் முடிவுக்கு வந்து விட்டேன்.  கூட்டம் நடத்துவது என்று.  சரியாக 5 மணிக்கு வெங்கட நாராயண ரோடில் இருக்கும் நடேசன் பூங்காவில் கூட்டம் இருக்கும. பூங்கா நுழையும் இடத்தில் உள்ள மேடையில் நான் அமர்ந்திருப்பேன்.  ஒரு தடியான புத்தகம் ஒன்றை வைத்துக்கொண்டு கதைகளை வாசிப்பேன்.  சத்தமாக இல்லை.  மௌனமாக.  கூட்டத்தின் தலைப்பை இப்படி மாற்றலாம் என்று நினைக்கிறேன்.
ஒரு கதை ஒரு கவிதை ஒரு மனிதன் வாசிப்புக் கூட்டமென்று.

Comments