அழகியசிங்கர்
விருட்சம் 96வது இதழில் வெளிவந்த ஞானக்கூத்தன் கவிதை இது. விருட்சம் கவிதைகள் என்ற மூன்றாவது தொகுதியைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். 100 கவிஞர்களின் 100 கவிதைகள் கொண்ட தொகுதி இது. ஏற்கனவே விருட்சம் கவிதைகள் தொகுதி 1 தொகுதி 2 கொண்டு வந்துள்ளேன்.
புதிதாக கவிதை எழுத விரும்புவர்களுக்கு இத் தொகுதிகள் உபயோகமாக இருக்கும். ஒவ்வொருவர் எழுதிய கவிதையைப் படிக்க பரவசமாக இருக்கும்.
காதலும் களவும்
ஞானக்கூத்தன்
மனதில் கொஞ்சம் காதல் இருக்கணும்
இல்லை யென்றால் வாழ்க்கை வெறுத்துடும்
என்மேல் உனக்குக்
காதல் இல்லையென்றால்
காதலே இல்லையா என்ன
பக்கத்துப் பட்டியில்
நிலக்கரித் திருடன்
ஒருவன் இருந்தான்
இளைய வயதுதான்.
தண்ணீர் நிரப்பிக்கொள்ள
நிற்கும் ட்ரெயினில்
கட்டி கட்டியாய்
நிலக்கரி திருடுவான்
மூட்டைக் கட்டி
எங்கோ விற்பான்
காசு பண்ணுவான்
காதலியைப் பார்ப்பான்
நல்லவர் கெட்டவர்
எல்லோருக்கும்
காதல் உண்டு
எனக்கும் உனக்கும்
தெரிந்த அதே காதல்
Comments