Skip to main content

ஒவ்வொரு முறையும் இரண்டு மணி நேரம் வேண்டும்


அழகியசிங்கர்

இந்த முறை ஞாயிற்றுக்கிழமை ஒரு கவிதை ஒரு கதை கூட்டத்திற்கு வந்திருந்த நண்பர்களான வேடியப்பன், விஜய் மகேநதிரன், வினாயக முருகன், சுந்திர புத்திரன், ஈழவாணி, கீதாஞ்சலி, கவிஞர் ஆரோ இன்னும் பலருக்கும் என் நன்றி.  இந்தக் கூட்டத்தில் கவிதைகளை சிலவற்றைப் படித்தோம்.  கதைகளை படிக்காமல் சொல்ல வருகிறதா என்று பார்த்தோம். அதில் ஓரளவு வெற்றிதான். வேடியப்பனை எனக்குக் கதை எழுதுபவராகத் தெரியாது.  அவர் சினிமா எடுக்க விருப்பப் படுபவராகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.  அவருடைய இரண்டு கதைகளையும் படிக்காமல் சொல்லும்போது எல்லோராலும்  நன்றாக ரசிக்க முடிந்தது.  ஈழவாணி முதலில் மஞ்சப்பு  முக்கூத்தி என்ற கவிதையைப் படித்தார்.  அவர் படித்த விதம் நன்றாக இருந்தது.  கூட்டம் கலகலக்கத் தொடங்கியது.

வினாயக முருகன் லக்க்ஷ்மி சரவணகுமாரின் வள்ளி திருமணம் கதையை சொன்னார்.  இக்கூட்டத்தின் முக்கிய விஷயம்.  சொல்பவர் கதையை நன்றாகச் சொல்ல வேண்டும்.  அதேபோல் கேட்பவர் கவனத்துடன் கேட்க வேண்டும்.  அப்போதுதான் முழுமையாக கதையையோ கவிதையையோ உள்வாங்கிக் கொள்ள முடியும்.

சுந்தரபுத்திரன் பாட்டி கதை ஒன்றை சொன்னார்.  பாவண்ணன் கதையை ஒருத்தர் சொன்னார்.  ஈழவாணி என்பவர் இலங்கையில் நடந்த கதை ஒன்றை குறிப்பிட்டார்.  அந்தக் கதையைக் கேட்பதற்கே உருக்கமாக இருந்தது.  

புதிதாக வந்திருக்கிற தமிழவனின் நடனக்காரியான 35 வயது எழுத்தாளர் என்ற புத்தகத்திலிருந்து 'உங்களுக்குப் பாரம்பரியம் இல்லையென்பது உண்மையா?' என்ற கதையையும், 'ஹர்ஷவர்த்தனர் அறிவு' என்ற கதைகளையும் படித்தோம்.  புது எழுத்து வெளியீடாக இப் புத்தகம் வெளிவந்துள்ளது. பிரமிள் எழுதிய கவிதைகள் இரண்டைப் படித்தோம்.  அவர் பிறந்த தேதி இருபதாம் தேதி ஏப்ரல் மாதம்.  ஒரு கவிதையின் பெயர்  வொட லொட.. இன்னொரு கவிதையின் பெயர் எந்துண்டி வஸ்தி?

கதை சொல்வது என்பது எப்படி ஒரு கலையோ அதைப் போல் கதையைக் கேட்பதும் ஒரு கலை.  இதற்கெல்லாம் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.  

பள்ளிக்கூடங்களில் கதை கவிதை சொல்வது மாதத்திற்கு ஒரு முறையாவது யாராவது அறிமுகப் படுத்தினால் நன்றாக இருக்கும்.  ஆனால் இதெல்லாம் சாத்தியம இல்லை.  பூனைக்கு யார் மணி கட்டுவது?  எலிதான் மணியைக் கட்ட வேண்டும். அதேபோல் கல்யாணம் போன்ற மகிழச்சிகரமான இடங்களில் கதையோ கவிதையோ வாசிக்கும் கூட்டம் நடத்தலாம்.  ஆனால் கல்யாணத்திற்கு வந்தவர்கள் ஓடிப் போகாமல் இருக்க வேண்டும்....

மூன்று கூட்டங்களில் நாங்கள் வாசித்த கவிதைகள் கதைகளை நான் பதிவு செய்திருக்கிறேன்.  அதைக் கேட்டாலே சுவாரசியமாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் இரண்டு மணி நேரம் கேட்க வேண்டும்.  முடியுமா?

நேற்று இரவு இதை type அடித்துக்கொண்டிருந்தபோது வாசலில் பயங்கர வெடி சப்தம்.  எங்கள் தெருவிற்கே அரசியல் வாதிகள் தேர்வில் நிற்கப் போவதை அறிவிக்க வந்து விட்டார்களா என்ற கிலிதான் எனக்கு ஏற்பட்டது. ஆனால் அது இல்லை.  தொடர்ந்த வெடி சப்தமும், ஒரு குழந்தையின் அலறலும் கேட்டது.  பதறிப் போய் பால்கனியிலிருந்து கீழே  பார்த்தேன். எங்கள் வீட்டு வாசலில் உள்ள டிரான்ஸ்பார்மர்தான் வெடித்துக்கொண்டு தீபாவளி புஸ்வானம் மாதிரி எரிந்து கொண்டிருந்தது.  தெருவே கூடி விட்டது. மண்ணைப் போட்டு எல்லோரும் அணைத்துக் கொண்டிருந்தார்கள். மின்சாரம் துண்டிக்கப் பட்டது.  மின் ஊழியர்கள் உடனே வந்து விட்டார்கள். டிரான்ஸ்பார்மரில் எரிந்து கருகிப்போன ஒயர்களை எல்லாம் துண்டாக வெட்டி வெளியே எறிந்தார்கள். உடனே மின்சரம் எடுக்கும்படி சரி செய்து கொண்டிருந்தார்கள்.  அந்த ராத்திரியில் அப்பாவை அறையில் விட்டுவிட்டு வந்து விட்டேன்.  அவரோ அறையில் இருட்டில் பேன் இல்லாத புழுக்கத்தில் என் பெரைச் சொல்லி பெரிசாக கத்த ஆரம்பித்து விட்டார்.  பின்னர் அவர் அறைக்குச் சென்று அவரைச் சமாதானம் செய்தேன்.

இன்று நானும் அப்பாவும்தான் வீட்டில் இருந்தோம்.  நான் கதை சொல்றேன் என்றேன்.  அதெல்லாம் வேண்டாம் என்று மறுத்தார்.  பின் நான் தொந்தரவு செய்தேன்.  வேறு வழி இல்லாமல் சரி சொல்லு என்றார்.  நான் கதை சொல்ல ஆரம்பித்தேன்...ஒரு அப்பா, ஒரு பையன், பையனின் மனைவி. அப்பாவுக்கு 93 வயது.  பையனுக்கு 62 வயது.  பையன் மனைவிக்கு 59 வயது....அப்பா ஒன்றும் சொல்லாமல் இருந்தார்....என்ன நான் சொல்ற கதை புரியுதா.... ஒன்றும் சொல்லவில்லை....நான் திரும்பவும் ஆரம்பித்தேன்..பையனுக்கு ஒரு நாள் என்னமோ ஆகிவிட்டது...அவனுக்கு அவன் யார் என்று தெரியவில்லை....எங்கே இருக்கிறோம்னு தெரியலை....அப்பா சொன்னார்...'என்னைப் படுக்க விடேன்...ஏன் இதெல்லாம் சொல்றே..'  'சரியப்பா நான் விட்டுடறேன்..ஆனா இதுவரை சொன்ன கதையைச் சொல்லேன்.' என்றேன். அப்பா கதையைத் திருப்பி சொல்லவில்லை.  அவர் படுத்து தூங்க ஆரம்பித்து விட்டார்....

Comments