Skip to main content

கதையை எப்படி வாசிக்கலாம்?


அழகியசிங்கர்


நேற்று நடந்த கூட்டத்தில் இரா முருகன் அவருடைய நாவலான  'அச்சுதம் கேசவம்' என்ற நாவலிலிருந்து ஒரு பகுதியை எடுத்து வாசிக்க கூட்டம் 5.30 மணிக்குத் தொடங்கியது.  

கங்கையைப் பற்றி விவரிக்கும் பகுதியை எடுத்துப் படித்தார் :

'தினசரி கூடும் கூட்டம்தான்.  தினம் தினம் புதிதாக யார்யாரோ வருகிறார்கள்.  கிழக்கிலும் தெற்குத் திசைக் கோடியிலும் மேற்கிலும், பனி மூடித் தவத்தில் நிற்கும் இமயப் பெருமலைக்கு அந்தப் பக்கம் இருந்தும் இங்கே வந்து கூடுகிறவர்கள்.  ஆயிரம் ஆண்டுகளாக, அதற்கு மேலாக தினம் தினம் இந்தத் கல் படிக்கட்டுகளில் இருந்தும் நின்றும் தொழுது வணங்கியும் அழுதும் தொழுதும் கங்கைக்கு ஆராதனை நடப்பதைக் கண்ணில் நீல் மல்கப் பார்கிகறார்கள...'

ஆனால் மிகக் குறைவான நேரம்தான் படித்தார்.  கோவிந்தராஜன் பச்கைச் கிளிகள் என்ற பாவண்ணனின் கதையை எடுத்துப் படித்தார்.  கிருபானந்தம் அவர்கள் ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் என்ற சுப்ர பாரதி மணியன் கதையைப் படித்தார். நான் பேயோன் என்பவர் எழுதிய அகலிகைப் படலம் என்ற கதையை எடுத்துப் படித்தேன்.  அதன்பின் கோவிந்தராஜன் அந்திமழை என்ற பத்திரிகையில் வெளிவந்த பண்டிகை நாள் என்ற விநாயக முருகன் எழுதிய கதையைப் படித்தார்.  5 மணிக்கு ஆரம்பித்த கூட்டம் 7 மணிக்கு முடிந்தது.  எங்களால் ஒரு கவிதையும் படிக்க முடியவில்லை.  பா வெங்கடேசனின் ஆலா என்ற கவிதைத் தொகுதியிலிருந்து சில கவிதைகள் படிக்கலாம் என்று நினைத்தேன்.  முடியாமல் போனதற்கு சிறிது வருத்தம்தான்.

இதன் மூலம் சிலவற்றை அலச முடிந்தது.  கூட்டம் பார்க்கில் நடப்பதால் சுற்றிலும் கூச்சல் இருந்துகொண்டுதான் இருக்கிறது.  அதைப் பொருட்படுத்தாமல் இருக்க வேண்டும்.

மேலும் ஒரு கதையைப் படிக்கும்போது சத்தமாகப் படிக்க வேண்டும்.  ரொம்பவும் நிதானமாகவும் படிக்க வேண்டும்.  கவிதையை நாம கட்டாயம் படிகத்தான் வேண்டும்.  கதையை வேண்டுமானால் படிக்கலாம், அல்லது சொல்லலாம்.

நீண்ட கதைகளைப் படிக்கும்போது கேட்பவர்களுக்கு கவனம் முழுவதும் இருந்துகொண்டு இருக்க வேண்டும்.  கதை வாசிப்பவர்கள் எல்லோரும் கதையைக் கேட்பதுபோல் அமர்ந்துகொண்டு கதையை வாசிக்க வேண்டும். 

 பேயோன் கதையை நான் சத்தமாக வாசிக்கும்போது, பூங்காவிற்கு வந்தவர்கள் கேட்க வந்து விட்டார்கள்.  அவர்களும் ரசித்தார்கள்.  அவர்களை அடுத்த வாரம் வரச் சொல்லியிருக்கிறேன்.  வழக்கம் போல் நேற்று வாசித்ததை சோனி ரிக்கார்டில் பதிவு செய்திருக்கிறேன்.  

விநாயக முருகன் கதை எஸ் ராமகிருஷ்ணன் கதை எழுதும் பாணியில் இருப்பதாக என் நண்பர் குறிப்பிட்டார்.  எனக்கு கேட்கும்போது அது மாதிரி தோன்றவில்லை.  போயோன் கதையை முழுவதும் படிக்கும்போது அகலிகைக்கு திரும்பவும் தண்டனை கொடுத்து விட்டாரோ என்று தோன்றியது.  சுப்ர பாரதி மணியன் கதையில் மாமிச உணவு புசிப்பதை முழுக்க முழுக்க வர்ணிப்பதுபோல் இருந்தது.  என்னையும் வலுகட்டாயமாக சாப்பிட வைத்துவிடுவாரோ என்று மனதில் பட்டது.  பாவண்ணன் கிளிகளைப் பற்றிய கதை ஏற்கனவே பேப்பரில் வந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டது. நாம் படிக்கும் செய்தியை எப்படி கதையாக மாற்றுவது என்பது ஒரு கலைதான்.

இன்னும் எடுத்துக்கொண்டு வந்த கதைகளை படிக்காமல் திரும்ப வேண்டியிருந்தது.

முக்கியமாக கதை வாசிப்பர்களுக்கு கேட்பவர்கள் போராடிக்காமல் கதையை எப்படி கேட்க வைக்கலாம் என்பதில் பயிற்சி யாராவது கொடுத்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது.  மேலும் கதையைப் படிக்காமல் சொல்வது சாத்தியமா என்றும் சோகித்துப் பார்க்க வேண்டும்.  

நாங்கள் சத்தமாக கதைகளை வாசித்ததால் பூங்காவில் சுற்றிக்கொண்டிருப்பவர்களையும் எங்கள் பக்கம் இழுக்க முடிந்தது.  இதை வாசிக்கும் நீங்கள் உங்கள் கருத்துகளை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

Comments