அழகியசிங்கர்
எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒவ்வொரு பதிப்பாளரும் கொண்டுவரும் புத்தகங்களைப் பார்க்கும்போது. இந்தப் புத்தகங்களை விற்கிறேனோ இல்லையோ நானே புத்தகங்களை வாங்கி விடுவேன் என்று தோன்றுகிறது.
முதலில் என் கடையில் என்னன்ன புத்தகங்களை விற்க முயற்சி செய்கிறேன் என்பதை ஓரளவாவது சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன். ஏனென்றால் புத்தகங்களைப் பற்றி சொல்லிவிட்டு உடனே நான் ஸ்டால் எண் 403க்கு ஓட வேண்டும்.
திரும்பவும் வீடு திரும்பும்போது அதிக நேரம் ஆகிவிடும். ஒருவிதத்தில் என் ஸ்டாலில் விற்க வைத்திருக்கிற புத்தகங்களை நானே வாங்கிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. அதனால்தான் யாவரும் பதிப்பகம் புதிதாகக் கொண்டு வந்த புத்தகங்கள் எல்லாவற்றையும் வாங்கி வைத்திருக்கிறேன். ஒன்று விற்க முயற்சி செய்வேன். அல்லது நானே வாங்குவேன். இந்த முறை புத்தகக் காட்சியில் நான் வாங்கிச் சேமித்துக்கொண்டிருக்கும் புத்தகங்களைப் பற்றி பிறகு சொல்கிறேன்.
இப்போது பா ராகவனின் யதி என்ற பிரம்மாண்டமான நாவலைப் பற்றி எதாவது சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன். 926 பக்கங்கள் கொண்ட யதி என்ற நாவலை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. பா ராகவன் எத்தனை நாட்கள் எழுதினார் என்பது இருக்கட்டும். ஒரு வாசகன் எத்தனை நாட்கள் எடுத்துக்கொள்வான் இதைப் படிக்க.
புத்தகக் காட்சியில் இரா முருகனுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய அரசூர் வம்சத்திலிருந்து தொடர்ந்து அவர் எழுதிய நாவல்களில் 200க்கும் மேற்பட்ட கதாப்பாத்திரங்களை உருவாக்கி இருப்பதாகக் கூறி உள்ளார். கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தது.
ஒரு வாசகன் எத்தனைக் கதாப்பாத்திரங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்வான் என்றும் தோன்றியது. ஆனால் யதியைப் பற்றி சி ஜே ஆனந்தகுமார் ஒரு இடத்தில் இப்படி கூறுகிறார். எப்படி குறைவான பாத்திரப்படைப்பை வைத்துக்கொண்டு இப்படி ஒரு பிரம்மாண்டமான நாவலைக் கட்டி எழுப்பினார் என்று.
அப்பாவின் புத்தகச் சேமிப்பில் கண்டு பிடித்த ஜாபால உபநிடதம்தான் எழுதத் தூண்டியதாக பா ராகவன் வெளிப்படுத்தி உள்ளார். இந் நாவலை ஒருவர் கட்டாயம் வாசிக்க வேண்டும். இந் நாவலின் அதிகப்பக்கங்கள் என்னை மிரட்டத்தான் செய்கிறது. ஆனால் அதிகப் பக்கங்கள் உள்ள ஒரு நாவலை மிரளாமல் வாசிப்பது எப்படி என்ற பயிற்சியை ஒரு வாசகன் தெரிந்துகொள்வது அவசியம் என்று தோன்றுகிறது.
நாவலின் அட்டையில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது.
‘üஇந்த நாவல், துறவிகளின் வாழ்க்கையை அதன் யதார்த்தத் தன்மையோடும் அதீத புனைவோடும் ஒருங்கே நம் கண்முன் கொண்டு வருகிறது. நம்மோடு உடன் பயணித்து, ஆனால் கண்ணில் படாமல் இருக்கும் ஒரு வாழ்க்கையைப் படிக்கும்போது நமக்குள் எழும் உணர்வுகள் அலாதியானவை. இந்தியக் கலாச்சாரத்தின் நுனி முதல் அடிவரை ஆழங்கால் பாய்ச்சிய ஒருவரால் மட்டுமே இத்தனை விரிவான ஒரு பிரதியை யோசிக்காவது முடியும். இது பா ராகவனுக்குக் கூடி இருக்கிறது.ý
புத்தகக் காட்சியில் இப் புத்தகத்தை விற்பதற்காக வைத்துக்கொண்டிருக்கிறேன் என்பதில் பெருமை படுகிறேன்.
Comments