Skip to main content

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும்.....2


அழகியசிங்கர்




இந்தப் புத்தகக் காட்சியை ஒட்டி எத்தனைப் புத்தகங்கள் கொண்டு வருவேனென்று கடைசி வரை தெரியவில்லை.  என் இரண்டாவது புத்தகமும் கவதைப் புத்தகம்தான்.  
நான் கடந்த ஓராண்டாகத் தேர்ந்தெடுத்த 'மனதுக்குப் பிடித்த கவிதைகள்' தான் இந்தத் தொகுப்பு.  100 கவிஞர்களின் 100 கவிதைகள் கொண்ட அற்புதமான புத்தகம்.  
இதை நானே சொல்வது சரியாக வராது.  ஆனால் உங்களில் யாராவது ஒருவர் சொன்னால் மகிழ்ச்சி அடைவேன்.  எல்லாக் கவிதைகளையும் கவிதைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்துள்ளேன். இந்தத் தொகுப்பு நூல் சிறப்பான முறையில் வெளிவந்திருக்கிறது.  நீங்கள் யாராவது இந்தத் தொகுப்பைப் படித்துவிட்டு உங்கள் கருத்தைக் கூறினால் மகிழ்ச்சி அடைவேன். இதைத் தொடர்ந்து இன்னொரு தொகுப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கொண்டு வர உள்ளேன். 
திரும்பவும் எடுத்து இந்த நூறு புத்தகங்களிலிருந்து இன்னொரு நூறு கவிதைகள் எடுத்துப் புத்தகமாகப் போடலாம்.  ஆனால் நான் வேற நூறு கவிதைகளைத் தேர்ந்தெடுக்க உள்ளேன்.
முகநூலில் வெளிவந்ததால் முகநூல் நண்பர்களுக்கு இத் தொகுதியை சமர்ப்பிக்கிறேன்.  இதிலிருந்தும் ஒரு கவிதை.
ழாக் ப்ரெவெர் கவிதையை இங்குக் குறிப்பிடுகிறேன்.

உனக்காக என் அன்பே

ழாக் ப்ரெவெர் 

தமிழில்: வெ ஸ்ரீராம் 


பறவைகள் சந்தைக்குப் போனேன்
பறவைகள் வாங்கினேன்
உனக்காக 
என் அன்பே

மலர்கள் சந்தைக்குப் போனேன்
மலர்கள் வாங்கினேன்
உனக்காக
என் அன்பே

இரும்புச் சாமான்கள் சந்தைக்குப் போனேன்
சங்கிலிகள் வாங்கினேன்
கனமான சங்கிலிகள்
உனக்காக 
என் அன்பே

பிறகு அடிமைகள் சந்தைக்குப் போனேன்
உன்னைத் தேடினேன்
ஆனால் உன்னைக் காணவில்லை
என் அன்பே.

இப் புத்தகத்தின் 120 ரூபாய்.

Comments