Skip to main content

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...26


அழகியசிங்கர் 


நான் இங்குக் குறிப்பிடும் புத்தகங்கள் விரும்பிப் படிக்க வேண்டுமென்று நினைக்கிற புத்தகங்கள். அப் புத்தகங்களை இப்போது படிக்காவிட்டாலும் கூட அவற்றைக் குறித்து எதாவது சொல்ல இயலுமா என்று பார்க்க முயற்சிக்கிறேன். இப் புத்தகங்களெல்லாம் 403ஆம் அரங்கில் விற்பனைக்கு உள்ளது. பெரும்பாலும் இப் புத்தகங்களின் ஒரு பிரதியை வாங்கிவிடுவேன். ஏற்கனவே கோணல் பக்கங்கள் என்ற தலைப்பில் சாரு நிவேதிதாவின் இரண்டு பாகங்களை வாங்கி வைத்திருக்கிறேன். இது மூன்றாவது பாகம். கிழக்கு பதிப்பகத்திலிருந்து வந்திருக்கிறது. சாருநிவேதிதாவின் எழுத்துக்களில் ஒரு வெளிப்படைத் தன்மை என்னை பிரமிக்க வைக்கிறது. இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு முன் புத்தகத்தின் அட்டையில் உள்ள வாசகங்களை இங்கு அளிக்க விரும்புகிறேன். - நீங்கள் சினிமா நடிகனை - நடிகையைப் பிரபலம் என்றும் ஒரு எழுத்தாளனைச் சாமான்யன் என்றும் மதிப்பீடு செய்கிறீர்கள். - தமிழ்நாட்டுக்கு என்று ஒரு தனிச் சிறப்பு உள்ளது. அஃதாவது இங்கேதான் சிட்னி ஷெல்டன் மாதிரி எழுதுகிற ஒருவர் தன்னை இலக்கிய உலகம் இலக்கியவாதியாக அங்கீகரிக்கவில்லையே என்று அங்கலாய்ப்பதைப் பார்க்க முடியும். - வெளிநாட்டில் உள்ள தமிழ்ச் சங்கங்களால் தமிழுக்கு இதுவரை சிறு துரும்புகூடப் பயன் இருந்ததில்லை. - நம்மூர் எழுத்தாளர்களுக்கு ஹீஸ்டரி மட்டுமே தெரியும். சபால்டர்ன் ஹிஸ்டரி தெரியாது. எனவே சமூகம் என்ன சொல்கிறதோஅதையே அட்சரம் பிசகாமல் திருப்பிச் சொல்வார்கள். மனம் திறந்து துணிச்சலாக எழுதப்பட்ட புத்தகம் இது. எந்த எழுத்தாளரும் தமிழில் இது மாதிரி எழுதத் துணிய மாட்டார்கள். வாசிக்க வேண்டிய வித்தியாசமான புத்தகம். விலை : ரூ.225. கோணல் பக்கங்கள் 1, 2 கூட விற்பனைக்கு உள்ளது. கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மதுரம் என்ற தலைப்பில் வண்ணதாசனின் சிறுகதைகளின் தொகுப்பு வந்துள்ளது. 11 கதைகள் அடங்கிய 132 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது. üவாழ்க்கை என்பது எனக்கு மனிதர்கள்தான். எனக்கு இடது, வலது, முன், பின் என்றிருந்து தஙகள் தங்கள் தோழமையாலும், சூழலாலும், விரோதத்தாலும் எனக்கு இன்று நான் அறிந்திருக்கிற கொஞ்சத்தைக் கற்றுக் கொடுத்தவர்கள் அவர்களே. என் கடைசி நிமிடம் வரை கற்றுக் கொள்கிற, விட்டுக் கொடுக்கிற எளிய திறந்த மனத்தை காப்பாற்றிச் செல்ல முடியுமெனில் அதுவே நானடைய விரும்பும் சம்பத்தாக இருக்கும்ý என்கிறார் வண்ணதாசன். வண்ணதாசன் கவிதைகளும் எழுதுபவர். கதைகளில் கவிதையின் சாயல் தெரியாது. அதேபோல் கவிதைகளில் கதையின் சாயல் தெரியாது. இந்தப் புத்தகம் விலை ரூ.130தான். ஒருவர் கட்டாயம் வாஙகி வாசிக்க வேண்டிய புத்தகம். மூன்றாவதாக நான் சொல்ல விரும்புவது. இரா முருகனின் 1975 என்ற நாவல். 392 பக்கங்கள் கொண்ட இந் நாவலின் விலை ரூ.450. (இந்த விலை சற்று அதிகமாக எனக்குப் படுகிறது). இரா முருகன் தொடர்ந்து நாவல்கள் எழுதி வருபவர். அவருடைய அரசூர் வம்சம் நாவலிலிருந்து அவருடைய நாவல்கள் எல்லாவற்றையும் வாசிக்க நினைக்கிறேன். இந்த நாவலைக் குறித்து பின் அட்டையில் வெளிப்படுத்தியிருக்கும் விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். üஇந்தப் புதினம் எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு அல்ல. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. வாழ்க்கையை ஓரளவு பிரதிபலித்து அதில் வண்ணம் கலக்க ஒரு முயற்சி. இந்தச் சிதறுண்ட கதை கூறுதல். ஒரு தளத்தில், இவை பார்வைப் பதிவுகளின் சங்கிலிப் பின்னலும் கூட.. என்கிறார் இரா முருகன். விறு விறுப்பான நடையில் எழுதிக்கொண்டே போகிறார் இரா முருகன். இரா முருகன் இதுவரை 14 புத்தகங்கள் எழுதி உள்ளார். அதில் ப்ராஜெகட் மேனேஜ்மென்ட் என்பது ஒரு புத்தகம்.


Comments