Skip to main content

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும்.....7


அழகியசிங்கர்



டிசம்பர் மாதம் முழுவதும் முடியுமா முடியுமா என்றிருந்தது. என் நாவல் மாத்திரம்தான் அச்சடித்திருந்தேன்.  இதன் நடுவே விருட்சம் 107வது இதழ்.  பெரிய போராட்டமாகப் போராட வேண்டியிருந்தது.  வேணு வேட்ராயன் கவிதைப் புத்தகம் மாத்திரம் தயாராகி விட்டது.  அடுத்தது என் நாவல்.  கவிதைப் புத்தகத்திற்கு என்னுடைய எல்லாக் கவிதைகளையும் ஒன்று சேர்த்தேன்.  பிழைத் திருத்தம் செய்து கொண்டிருந்தேன்.  வேணு வேட்ராயன் உதவினார். 
இந்தத் தருணத்தில்தான் அரவிந்த் சுவாமிநாதன் போன் செய்தார்.  'சென்ற நூற்றாண்டின் சிறுகதைகள்,' என்ற புத்தகம் ஒன்று கொண்டு வர முடியுமா என்று கேட்டார்.
முடியும் என்று சொல்லிவிட்டேனே தவிர எப்படி முடியும் என்பது தெரியாது.  என் புத்தகங்கள் தயாரிப்பதிலேயே டைட்டாக இருந்தேன். 
எல்லாக் கதைகளையும் தயாரித்து எனக்கு அனுப்பி விட்டார். பின் தொகுப்பாசிரியர் என்ற இடத்தில் என் பெயரும் சேர்த்திருந்தார்.  என் பெயர் சேர்ப்பதில் நான் ஒப்புக்கொள்ளவில்லை.   இந்தப் புத்தகம் முழுவதும் அவருடைய முயற்சி. அவர் பெயர் வருவதுதான் நியாயம். அதனால் என் பெயரை நீக்கிவிட்டேன். 
10 கதைகள் கொண்ட சென்ற நூற்றாண்டின் சிறுகதைகளைத் தொகுத்துவிட்டேன்.  
இதோ அந்தத் தொகுப்புக்கான முன்னுரையை இப்படி எழுதி உள்ளார்.  

‘தமிழின் நவீனச் சிறுகதை என்று ஆய்வாளர்களால் போற்றப்படும் ‘குளத்தங்கரை அரசமரம்’ 1917ல் வெளியானது. ஆனால், அதற்கு முன்பே திருமணம் செல்வகேசவராய முதலியார், பாரதியார் போன்றோர் பல சிறுகதைகளை எழுதி விட்டனர். “சிறுகதை என்பது ஒரே அமர்வில் வாசித்து முடிப்பதாக இருக்க வேண்டும்; முதல் வரியிலேயே கதை ஆரம்பமாகிவிட வேண்டும்; ஒரு பொருள் பற்றியதாகவோ, ஒரு மனோநிலை பற்றியதாகவோ ஒருமைகொண்டதாக அமைய வேண்டும்” என்றெல்லாம் கூறப்படும் சிறுகதை இலக்கணத்திற்கேற்றவாறு வ.வே.சு.ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ கதை இருந்தாலும், அது தாகூர் எழுதிய கதையின் தழுவல் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. தனது சிறுகதைகள் குறித்து, ‘லைலி மஜனூன்’ என்ற சிறுகதையின் முன்னுரையில், பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார், வ.வே.சு.ஐயர். “உலகத்தில் சில கதைகள் நித்திய யௌவனமாயும் சர்வாந்தர்யாமியாயும் இருந்துகொண்டு கோடானுகோடி மனிதர்களுடைய மனதில் காதல், கதம், பயம், சோகம் முதலிய பேருணர்ச்சிகளை உண்டாக்கி வருகின்றன. இந்த லைலி மஜனூன் அத்தகைய கதைகளின் ஜாதியைச் சேர்ந்தது. இது அராபியாவிலும் பாரஸீகத்திலும் பலபலப்பட அலங்கரித்துச் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. இவற்றுள் மிகவும் பேர்பெற்ற கற்பனை, கலி கஉஅக-ல் இறந்து போனதாகக் கூறப்படும் நிஜாமி என்னும் மகாகவியால் பாடப்பட்டதாகும். இங்கு நாம் செய்யும் கற்பனை அவனது கற்பனையினின்று பல இடங்களில் மாறுபட்டிருக்கும். ஆனால் கதைகளுக்கு அவரவர்களுடைய சுவைக்கும் ஆற்றலுக்கும் தக்கபடி புதிய உருவங்கள் கொடுப்பது ஆசிரியருக்குத் தொன்றுதொட்டு வந்திருக்கும் உரிமையாகும். அவ்வுரிமையைக் கையாடியதைக் கண்டு அறிஞர் வெகுளமாட்டார்கள் என்பது திண்ணம். எம் கற்பனை சுவையுடன் செய்யப்பட்டிருக்கிறதா அல்லது இல்லையா என்ற பிரச்னையைக் கதாப்பிரியர்களும் ரஸிகர்களும் தான் நிர்ணயிக்க உரியவர்கள்.” இவ்வாறு பாலபாரதியின் முதல் இதழில் ஐயர் குறிப்பிட்டிருக்கிறார்.'

இப்படி எழுதிக்கொண்டே போகிறார் அரவிந்த் சுவாமிநாதன். அவர் முயற்சிக்கு என் பாராட்டுக்கள்.  
இப்போது கூட ஆச்சரியமாக இருக்கிறது இந்தப் புத்தகத்தை எப்படி முடித்தேனென்று.



Comments