Skip to main content

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும்.....5



அழகியசிங்கர்




சாகித்திய அக்காதெமி என்கிற அமைப்பு மற்ற மொழிகளிலிருந்து தமிழ் மொழிக்கு பல புத்தகங்களை கொண்டு வந்திருக்கின்றன.  இப்படி சாகித்திய அக்காதெமி கொண்டு வருகிற புத்தகங்கள் எல்லாம், சாகித்திய அக்காதெமி பரிசுப் பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களைத்தான் கொண்டு வந்திருக்கிறது. அதில் கூட சிலவற்றை தேர்ந்தெடுக்காமல் விட்டிருக்கலாம்.  ஆனால் இது நல்ல முயற்சி.  நேஷனல் புக் டிரஸ்ட்டும் இதுமாதிரியான முயற்சிகளைச் செய்திருக்கிறது. திசை எட்டும் என்ற பத்திரிகை பல மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புகளைக் கொண்டு வரும் பத்திரிகை. 
தமிழைப் போல சாகித்திய அக்காதெமி பரிசுப் பெறாத சிறந்த எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள்.  அவர்களுடைய படைப்புகளை தமிழுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் செய்ய வேண்டும்.
இந்த ஆண்டு இரண்டு தெலுங்கு சிறுகதைத் தொகுப்புகளைக் கொண்டு வந்துள்ளேன்.  இரண்டு தொகுப்புகளும் வருவதற்குக் காரணமானவர் என் நண்பர் கிருபானந்தன்.  
கௌரி கிருபானந்தன் மொழி பெயர்த்த கதைகள் இவை.  பெரும்பாலான இக் கதைகளை தெலுங்குப் பத்திரிகைகளிலிருந்து கௌரி கிருபானந்தன் மொழி பெயர்த்திருக்கிறார்.  இக் கதைகளை எல்லாம் அவர் ரசித்த கதைகள்.  
கௌரி கிருபானந்தன் இத் தொகுப்புகளுக்குக் கொடுத்துள்ள முன்னுரையை இங்கு அளிக்க விரும்புகிறேன்.

‘தமிழ் வாசகர்களுடன் என்னுடைய நட்பு இருபது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. எழுபதுக்கும் மேற்பட்ட தெலுங்கு நாவல்களை தமிழில் கொண்டு சேர்த்தாலும், தெலுங்கு சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்து அவை பத்திரிகைகளில், மின்னிதழ்களின் வெளி வந்த போது ஏற்படும் திருப்தி அலாதியானது. சிறுகதை என்றாலே அதனுடைய ஆழம், களம் கதைக்கு கதை மாறுபடும். என்னை மிகவும் பாதித்த, என்னால் பயணம் செய்யக்கூடிய கதைகளை மட்டுமே என்னால் மொழிபெயர்க்க முடியும்.

சில கதைகளை படிக்கும்போது நம்மை அறியாமலேயே இதுபோல் நாமும்  செயல்பட்டிருக்கலாமே என்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. சில நாட்கள், சில மாதங்கள் சில சமயம் சில வருடங்கள் கழித்து அதே கதையினைப் படிக்கும்போது வேறு விதமான புரிதலை தருவது ஒரு விந்தையல்லவா! 

இலக்கியம் மனிதனை வழி நடத்திச் செல்லும் என்பதில் எனக்கு ஆழமான நம்பிக்கை இருக்கிறது. பிரச்னைகள் வந்தாலும் அவற்றை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் நம் தனித்தன்மை அடங்கி இருக்கிறது. வாழ்க்கையை சிறப்பாக, திருப்தி தரும் விதமாக அமைத்துக்கொள்ளும் பொறுப்பு நம் மீதுதான் இருக்கிறது. இலக்கியத்துடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டால், வழித்துணையாக்கி கொண்டால் வாழ்க்கைப் பயணம் சுவாரசியம் மிக்கதாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்.
இந்த மொழிபெயர்ப்பு கதைகளை இரண்டு தொகுப்புகளாக கொண்டு வரும் விருட்சம் அழகியசிங்கருக்கு மனமார்ந்த நன்றி.”

தெலுங்கு சிறுகதைகள் இரண்டு தொகுப்புகளின் விலை ரூ.200.  ஒவ்வொரு தொகுப்பும் ரூ.100.  







Comments